Monday, 27 July 2015

20 தொகுதிகளில் வெற்றி கேட்கும் சம்பந்தர் ஐயா உங்க judgement ரெம்பத் தப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் 2015 ஓகஸ்ட் மாதம் 17-ம் திகதி நடக்கவிருக்கும் இலங்கைப் பாராளமன்றத் தேர்தலில் தம்மை 20 தொகுதிகளில் வெல்ல வைத்து தமக்கு பேரம் பேசும் வலுவை வழங்கும் படி தமிழ் மக்களை வேண்டியுள்ளனர்.  அது எப்படி இந்த 20 தொகுதிக் கணக்குப் போட்டார்கள் என்று தெரியவில்லை. 20 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டால், ஏனைய இனத்தவர்களும், ஆட்சியாளர்களும் உலகமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அடேங்கப்பா எங்களுக்குத் தீர்வு பெறுவதற்கு எத்தனை தரப்பினர் ஏற்றுக் கொள்ள வேண்டும்?

குடியரசு தேர்தலில் பேசாத பேரம்
இலங்கையில் நடக்கவிருக்கும் பாராளமன்றத் தேர்தலின் முடிவுகள் முழு உலகிற்கும் முக்கியமானது என அமெரிக்க உளவுத்துறையின் முன்னாள் பொறுப்பாளர் அட்மிரல் டெனிஸ் சி பிளேயர் தெரிவித்ததைப் பார்க்கும் போது 2015 ஜனவரியில் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் தேவையான ஆட்சி மாற்றத்தை தமிழர்களின் வாக்கு இலகுவாகச் செய்து கொடுத்துள்ளது என்பது தெளிவாகின்றது. அந்த வாக்கு வலுவை வைத்துக் கொண்டு சீனா அரசுறவாளர்களைச் (இராசதந்திரிகள்) சந்தித்துப் பேச்சு வார்த்தை நடாத்தி பின்னர் அமெரிக்க மற்றும் இந்திய அரசுறவாளர்களையும் சிங்களத் தலைவர்களையும் சந்தித்துக் கதைத்து பேரம் பேசத் தெரியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனி யாருடன் எப்படிப் பேரம் பேசப் போகின்றது?

சம்பந்தனின் பகிடி
“நாம் அதிகபட்சமாக 20 நாடாளுமன்ற உறுப்பினர்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெறுவதன் ஊடாக இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இன்றியமையாத பேரம்பேசும் சக்தியைப் பெற முடியும். இதனை, நாம் 2016ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்து கொண்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பயணத்தை நிறைவு செய்யத் தயாராகவுள்ளோம்." இது இரசவரோதயம் சம்பந்தர் அவர்கள் திருமலை சேருவாவெலத் தொகுதியில் தனது கட்சியின் பரப்புரைக் கூட்டத்தில் தெரிவித்த கருத்தாகும். இந்தக் கருத்துடன் திரு இராசவரோதயம் சம்பந்தர் தனது திருவாசகத்தை நிறைவு செய்ய வில்லை. மேலும் ஒரு நகைச்சுவையையும் அவர் உதிர்த்துள்ளார்:

  • "மைத்திரிபால சிரிசேன இனவாதத்துடன் எந்த சந்தர்ப்பத்திலும் நடந்து கொள்ளவில்லை. (மைத்திரிபால சிரிசேன) மகாத்மா காந்தி, ஆபிரகாம் லிங்கன், மாட்டின் லூதர்கிங், நெல்சன் மண்டேலா ஆகிய பெரியோர்கள் வழியில் செல்லவுள்ளார்."
பேரம் பேசும் வரலாறு
அண்மைக் கால சரித்திரத்தைப் பார்த்தோமானால் தமிழ் அரசியல்வாதிகளின் முதல் பேரம் பேசும் பணி இலண்டனில் சோல்பரிப் பிரபுவுடன் ஆரம்பித்தது. திரு ஜி ஜி பொன்னம்பலம் இலங்கைக்கான அரசமைப்பு யாப்பை எழுதிக் கொண்டிருந்த சோல்பரிப் பிரபுவை இலண்டனில் சந்தித்து அவர் எழுதும் யாப்பில் இலங்கைப் பாராளமன்றத்தில் சிங்களவர்களுக்கு ஐம்பது விழுக்காடு பிரதிநிதித்துவமும் ஏனைய சிறுபான்மை இனங்களுக்கு ஐம்பது  விழுக்காடு பிரதிநிதித்துவமும் வேண்டும் என்று வலியுறுத்தி வேண்டிக் கொண்டார்.சோல்பரிப் பிரபு ஜி ஜி பொன்னம்பலத்தின் ஆங்கிலப் புலமையையும் நாவன்மையையும் பாராட்டி விட்டு அவரின் கோரிக்கையை நிராகரித்து விட்டார்.

1960இல் செய்த பேரம்
1960-ம் ஆண்டு நடந்த தேர்தலில் டட்லி சேனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியும் சி பி டி சில்வா தலைமையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் முக்கிய கட்சிகளாகப் போட்டியிட்டன. மொத்த 151(ஆறு நியமன உறுப்பினருடன் 157) தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி 50 தொகுதிகளிலும் சிறி லங்கா சுதந்திரக் கட்சி 46 தொகுதிகளிலும் தந்தை செல்வாவின் தலைமையில் தமிழரசுக் கட்சி 15 தொகுதிகளிலும் லங்கா சமசாஜக் கட்சி 10 தொகுதிகளிலும்  மக்கள் ஒற்றுமை முன்னணி 10 தொகுதிகளிலும்  வெற்றி பெற்றன. இதனால் தமிழரசுக் கட்சியின் ஆதரவு அரசு ஒன்றை அமைப்பதற்கு  அவசியம் தேவைப்பட்டது. தேர்தல் முடிந்து தந்தை செல்வநாயகமும் மற்றத் தமிழ்ப் பாராளமன்ற உறுப்பினர்களும் இரத்மலான விமான நிலையத்தில் இறங்கிய போது அவரை "வரவேற்க" ஐக்கிய தேசியக் கட்சியினரும் சுதந்திரக் கட்சியினரும் மட்டுமல்ல சௌமிய மூர்த்தி தொண்டமானின் பிரதிநிதியாக திரு ராமானுஜம் என்ற முன்னாள் பாராளமன்ற உறுப்பினரும் காத்திருந்தார். அவரை யார் பக்கம் இழுப்பது என்ற போட்டி அப்போது இருந்தது. அப்போது சிங்களக் கட்சிகளுடன் பேரம் பேசுவதற்கு தமது நான்கு கோரிக்கைகளை தமிழரசுக் கட்சியினர் முன்வைத்தனர்:
1. பண்டா செல்வா ஒப்பந்தத்தில் ஒத்துக் கொண்ட படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான பிராந்திய அரசை உருவாக்குதல்.
2. அரச மொழியாக சிங்களத்துக்கு ஈடாக தமிழையும் இணைத்தல்
3. பறிக்கப்பட்ட மலையக மக்களின் வாக்குரிமையை மீளளித்தல்.
4. மலையக மக்களுக்கு நான்கு பாராளமன்ற நியமன உறுப்பின பதவி வழங்கல்.

இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி மறுத்து விட்டது.  தந்தை செல்வா தனது இரண்டாவது மற்றும் நான்காவது கோரிக்கைகள் தொடர்பில் சிலவிட்டுக் கொடுப்புக்களைச்  செய்யத் தயாராக இருந்தார். டட்லி முதலாவது கோரிக்கைக்கு மறுத்து தமிழரசுக் கட்சிக்கு அமைச்சுப்பதவி கொடுக்க முன் வந்தார். இதனால் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையத் தந்தை செல்வா மறுத்து விட்டார். சிறிலங்கா சுதந்திரக் கட்சி பிராந்திய சபை கொடுக்க மறுத்து யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, திருமலை ஆகிய மாவட்டங்களுக்கான தனித்தனி மாவட்ட சபைகளை உருவாக்கி அவற்றிற்கு பண்டா செல்வா ஒப்பந்தத்தில் உள்ள அதிகாரப் பரவலாக்கம் செய்ய முன் வந்தது. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் ஒலிவர் குணத்திலகா அழைத்தார். ஆனால் அரியணை உரையின் பின்னர் நடந்த வாக்கெடுப்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக வாக்ளித்து அந்த ஆட்சியை ஒரு சில நாட்களில் தமிழரசுக் கட்சியினர் கவிழ்த்தனர். பின்னர் ஆளுநர் ஒலிவர் குணத்திலகா சுதந்திரக் கட்சியின் தலைவர் சி பி டி சில்வாவை ஆட்சியமைக்க தனது மா்ளிகைக்கு அழைத்தார். அங்கு தந்தை செல்வாவும் சில்வாவுடன் சென்றார். அப்போது குணத்திலகா ஒரு குண்டைத் தூக்கி தந்தை செல்வாவின் முன் போட்டார். அது "நீ நிபந்தனையற்ற ஆதரவை சி பி டி சில்வாவிற்கு வழங்குகின்றாயா?" என்ற கேள்வியாகும். இந்தக் கேள்வி தந்தை செல்வாவிற்கும் சுததிரக் கட்சிக்கும் ஏற்பட்ட உடன்பாட்டை அறிந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளரான குணத்திலகாவின் திட்டமிட்ட சதியாகும். நிபந்தனை அற்ற ஆதரவு அல்ல எனத் தந்தை செல்வா நேர்மையாகப் பதிலளிக்க நாட்டின் உறுதி நிலையைக் கருத்தில் கொண்டு தான் பாராளமன்றத்தைக் கலைத்து புதுத் தேர்தலுக்கு உத்தரவிடுவதாக ஆளுநர் ஒலிவர் குணத்திலகா தெரிவித்தார். தொடர்ந்து வந்த தேர்தலில் சிறிலங்கா சுததிரக் கட்சியும் தமிழரசுக் கட்சியும் கூட்டணி அமைக்காமல் இணைந்து போட்டியிட்டன. ஏற்கனவே சி பி டி சில்வாவுடன் ஒத்துக் கொண்டவை யாவும் தேர்தலில் வெற்றி பெற்ரு ஆட்சி அமைத்தால் நிறைவேற்றப்படும் என அப்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற சிறிமாவோ பண்டாரநாயக்கா தந்தை செல்வாவிற்கு உறுதி வழங்கினார். ஆனால் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற சிறிமா தந்தை செல்வாவின் எந்த ஒரு கோரிக்கையையும் நிறைவேற்ற வில்லை.

1965-ம் ஆண்டு நடந்த பேரம்

1965-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் அறுதிப் பெரும் பான்மை பெறவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி-66, சுதந்திரக் கட்சி -41. தமிழரசுக் கட்சி 14, சமசமாஜக் கட்சி-10, தமிழ் காங்கிரசுக் கட்சி -3 எனத் தேர்தல் முடிவுகள் அமைந்தன. டட்லி சேனநாயக்கா தமிழரசுக் கட்சியுடனும், தமிழ் காங்கிரசுக் கட்சியுடனும் இணைந்து ஒரு கூட்டணி அரசை அமைத்தார். வடக்குக் கிழக்கில் தமிழ் அரச மொழியாக்குவதாகவும் மாவட்ட சபை அமைப்பதாகவும் ஒத்துக் கொள்ளப் பட்டதுடன் மூதவை உறுப்பினர் மு திருச்செல்வத்திற்கு உள்ளூராட்சி அமைச்சுப் பதவியும் வழங்கப்பட்டது. ஆனால் பின்னர் மாவட்ட சபை உருவாக்காமல் தந்தை செல்வா ஏமாற்றப்பட்டார்.

1970இல் கண்ட பேரம் பேசல் கனவு
1970-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தமிழரசுக் கட்சிகளின் மேடையில் அ அமிர்தலிங்கத்தின் முக்கிய பரப்புரையாக இருந்தவாசகம் "இந்த முறைத் தேர்தலில் எந்த ஒரு சிங்களக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற மாட்டாது. எம்மை எல்லாத் தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்யுங்கள். நாம் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்போம்." ஆனால் சிறிமா தலைமையிலான சுதந்திரக் கட்சி தனது தேர்தல் பரப்புரையாக அமிர்தலிங்கத்தின் உரையைப் பாவித்தது. தமிழரசுக் கட்சியின் ஆதரவுடனா நாம் ஆட்சி அமைப்பது? எம்மைப் பெரு வெற்றி ஈட்டச் செய்யுங்கள் என்ற பரப்புரை செய்யப்பட்டதுடன் அமிர்தலிங்கத்தின் உரை துண்டுப் பிரசுரமாக சிங்களத்தில் அச்சடிக்கப்பட்டு நாடு முழுவதும் சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டது. தேர்தலில் சிறிமா என்றுமே இல்லாத அளவு பெரு வெற்றி பெற்று தமிழர்களுக்கு  இருந்த உரிமைகளையும் பறித்தார். அன்று அமிர்தலிங்கம் சொன்னதைப் போலத்தான் இன்று சம்பந்தர் ஐயா சொல்கின்றார்.

காலம் மாறிவிட்டது சம்பந்தர் ஐயா
அறுபதுகளில் இருந்தது போல் அல்ல இன்று சிங்களத்து அரசியல் நிலைமை அறுதிப் பெரும்பானமை இல்லாத கட்சி இரத்மலான விமான நிலையத்திற்குப் போகத் தேவையில்லை. சில அமைச்சுப் பதவிகளையும் பிற பதவிகளையும் விட்டெறிந்தால் கூட்டமாக பாராளமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவார்கள். ஆனால் சம்பந்தர் ஐயாவைச் சேர்த்துக் கூட்டணி அமைத்தால் அரசியலமைப்பை மாற்றி கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு எல்லாம் செய்து கொண்டிருக்க வேண்டும் தமிழர்களுக்கு உரிமை கொடுப்பதற்கு. தமிழர்களின் ஆதரவுடன் மட்டும்தான் ஆட்சி அமைக்க வேண்டும் என ஒரு நிலைமை ஏற்பட்டால் பௌத்த தீவிரவாதிகளும் மகாசங்கத்தினரும் களத்தில் இறங்கி சிங்கள அரசியல்வாதிகளை ஒற்றுமைப்படுத்துவார்கள்.

சம்பந்தர் ஐயா உங்கள் ஜட்ஜ்மென்ற் எப்போதும் தப்பு.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...