Thursday, 7 May 2015

ஐ எஸ் அமைப்பின் அமெரிக்கத் தாக்குதல்

2015-ம் ஆண்டு மே மாதம் 3-ம் திகதி ஐக்கிய அமெரிக்காவின் ரெக்ஸஸ் மாநிலத்தில் கார்லண்ட் நகரில் நபிகள் நாயகத்தைக் கேலிச் சித்திரமாக வரையும் போட்டி நடக்கும் இடத்தில் ஒரு தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. இத் தாக்குதல் தோல்வியில் முடிந்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இத்தாக்குதலைத் தாமே செய்ததாக ஐ. எஸ் என்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் என்றும் இஸ்லாமிய அரசு என்றும் அழைக்கப்படும் அபு பக்கர் அல் பக்தாதி தலைமையில் இயங்கும் அமைப்பு இரண்டு நாட்கள் கழித்து உரிமை கோரியுள்ளது. இத் தாக்குதல் ஐ.எஸ் அமைப்பின் வலிமை வளர்ச்சியை எடுத்துக் காட்டுகின்றதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் இத் தாக்குதல் அமெரிக்காவில் ஐ. எஸ் அமைப்பு வேரூன்றியுள்ளது என்பதற்கான அறிகுறியல்ல என்கின்றது அமெரிக்கா. ஆனால் அமெரிக்காவில் நடந்த ஒரு தீவிரவாதத் தாக்குதலுக்கு முதல் முறையாக ஐ எஸ் அமைப்பு உரிமைகோரியுள்ளமை கவனிக்கத் தக்கது. தமக்குத் தெரியாமல் நடந்த தாக்குதல்களுக்குக் கூட தீவிரவாத அமைப்புக்கள் உரிமை கோருதல் வழக்கம் என்கின்றது அமெரிக்கா.

கேலிச்சித்திரம் வரையும் போட்டி நடந்த இடத்திற்கு ரைபிள்களுடனும் கவசங்களுடனும் எல்டன் சிம்சன் என்பவரும் நதிர் சூஃபி என்பவரும் தாக்குதல் நடத்தச் சென்றனர். இப்படி ரைபிள் எடுத்துத்துச் சென்று தாக்குதல் செய்வது அமெரிக்காவில் ஓர் இலகுவான செயல். ஆனால் முஹம்மது நபி தொடர்பான கேலிச் சித்திரப் போட்டி ஓர் ஆத்திரமூட்டும் செயல் என்பதை உணர்ந்த அமெரிக்கக் காவற்துறை அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. SWAT எனச் சுருக்கமாக அழைகப்படும்  Special Weapons And Tactics பாதுகாப்புப் பிரிவு அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தது. இந்தப் பிரிவினர் வழமையான காவற்துறையினர் வைத்திருக்கும் படைக்கலன்களிலும் பார்க்க சிறந்த படைக்கலன்களையும் வைத்திருப்பர். அத்துடன் மறைந்திருந்து தாக்கக் கூடிய தொலைநோக்கிகளுடன் கூடிய துப்பாக்கிகளையும் வைத்திருப்பார்கள். தாக்குதலுக்குச் சென்ற எல்டன் சிம்சனும் நதிர் சூஃபியும் காவலுக்கு இருந்த ஒருவரைச் சுட்டுக் கொன்றார்கள். ஆனால் இவர்கள் இருவரையும் மற்றக் காவலாளிகள் சுட்டுக் கொன்று விட்டனர். இந்தத் தாக்குதல் பலர் சம்பந்தப்பட்ட ஒரு பெரிய திட்டமிட்ட தாக்குதல் அல்ல ஒரு தனி ஓநாய் பாணித் தாக்குதல் (Own lone wolf-style strike) என்கின்றது அமெரிக்க அரசு. இத் தாக்குதலுக்கும் ஐஎஸ் அமைப்பின் தலைமைக்கும் தொடர்பு இல்லை என அடித்துச் சொல்கின்றது அமெரிக்க அரசு.

ரெக்ஸஸ் மாநிலத்தின் கார்லண்ட் நகரில் தமது போராளிகள் இருவர் தாக்குதல் நடாத்தியதாக சிரியாவிலும் ஈராக்கிலும் பெரு நிலப்பரப்பைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஐ எஸ் அமைப்பு தமது வானொலி மூலம் தெரிவித்துள்ளது. அல்லாவின் ஆணைப்படி அவர்கள் தாக்குதல் நடாத்தியதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இது போல இறைநம்பிக்கை அற்றவர்களை எல்லா இஸ்லாமியப் போராளிகளும் கத்திகளால் குத்தியோ, வாகனங்களால் மோதியோ பள்ளங்களில் தள்ளி வீழ்த்தியோ கொல்ல வேண்டும் என்கின்றது ஐ எஸ் அமைப்பு.  இனிவரும் காலங்களில் அமெரிக்காவில் தமது போராளிகள் நடாத்தும் தாக்குதல் மேலும் மோசமாக இருக்கும் என்கின்றது ஐ எஸ் அமைப்பு.

இரு தாக்குதலாளிகள் செய்த தாக்குதலைத் தொடர்ந்து கேலிச் சித்திரப் போட்டியை ஒழுங்கு செய்த பமிலா கெல்லர் பேச்சுரிமையில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு விலக்கு கொடுக்க முடியாது என்றார். இவர் இப்படி ஒரு போட்டியை ஒழுங்கு செய்ய இடத்தைத் தேர்தெடுத்ததை அறிந்த  கார்லண்ட் நகரத்தில் வாழும் இஸ்லாமியர்கள் அதை உதாசீனம் செய்வதே சிறந்த வழி என்று எந்த வித எதிர்ப்பையும் காட்டவில்லை. போட்டியில் வெற்றி பெறுபவருக்கு 12,500டொலர் பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. டலஸ் பிரதேச  இஸ்லாமியத் தலைவர் பமிலா கெல்லர் இனக் குரோதத்தைத் தூண்டுவதற்கு இஸ்லாமியர்களுக்குத் தூண்டில் போடும் நடவடிக்கையே இந்த கேலிச் சித்திரப் போட்டி என்றார். சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட உள்ளூர் மெதடிஸ்ற் கிருத்தவத் தலைவர் பேச்சுரிமை என்ற பெயரில் பமிலா இனக்குரோதத்தை வளர்க்கின்றார் என்றார்.  52 வயதான பமிலா கெல்லர் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான குரோதத்தை வளர்க்கும் ஒரு இணையத்தை நடாத்தி வருகின்றார். இவர் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவரது தந்தைக்கு அல்லாமல் மல்கம் எக்ஸ் என்பவருக்குப் பிறந்தவர் என்றும் அவர் இளைஞராக இருந்த போது ஒரு இஸ்லாமியராக இருந்தார் என்றும், ஒரு விலைமாதுடன் தொடர்பு வைத்திருந்தவர் என்றும் பரப்புரைகள் செய்தவர்.

அமெரிக்காவின் சில மாநிலங்கள் வெளிநாட்டு நீதிமன்றங்களின் தீர்ப்புக்களை அடிப்படையாக வைத்து உள்நாட்டு நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குவதைத் தடை செய்துள்ளன. சில நீதிபதிகள் இதனால் ஷரியாச் சட்டத்தை அடிப்படையாக வைத்துத் தீர்ப்புக்கள் வழங்குவதாகக் கருதப்படுகின்றது. ரெக்ஸஸ் மாநில சட்ட் சபையும் இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படிப்பட்ட சட்டத்தை ஆதரிப்போர் இச்சட்டம் இஸ்லாமிற்கு எதிரானது அல்ல என்றும் பொதுவாக வேற்று நாடுகளின் வேற்று மதங்களை அடிப்படையாக வைத்து அமெரிக்க நீதி மன்றங்கள் தீர்ப்பு வழங்குவதைத் தடுப்பதாகும் என்கின்றனர்.

2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் பாரிஸ் நகரில் நடாத்தப் பட்ட தாக்குதலுக்கும் ரெக்ஸஸ் மாநிலத்தின் கார்லண்ட் நகரில் நடாத்தப் பட்ட தாக்குதலுக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதாகவும் கருதப்படுகின்றது. ஆனால் அமெரிக்காவில் ஐ எஸ் அமைப்பு பயிற்ச்சிகளையோ அல்லது பாசறைகளையோ வைத்திருக்க முடியாது என்கின்றது அமெரிக்க அரசு.

31 வயதான எல்டன் சிம்சன் தாக்குதலுக்கு 20 நிமிடங்களுக்கு முன்னர் தன்னை ஒரு புனிதப் போராளியாக அல்லா ஏற்றுக் கொள்வார் என தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

எல்டன் சிம்சன் என்பவரும் நதிர் சூஃபி என்பவரும்  நடாத்தியா தாக்குதலுக்கும் ஐ எஸ் அமைப்பிற்கும் நேரடித் தொடர்பு இல்லை என அமெரிக்கா அடித்துச் சொன்னாலும் இரண்டு அம்சங்களை இங்கு உறுதியாகச் சொல்லலாம்:

1. அமெரிக்காவின் பல்வேறு உளவுத் துறை அமைப்புக்களால் எல்லாத் தீவிரவாதத் தாக்குதல்களையும் முன் கூட்டியே அறிய முடியாது.
2. ஐ எஸ் அமைப்பிற்கும் ரெக்ஸஸ் தாக்குதலுக்கும் நேரடித் தொடர்பு இல்லாவிடினும் இஸ்லாமியத் தீவிரவாதம் அமெரிக்காவையும் ஊடறுக்கக் கூடியது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...