Monday, 2 February 2015

ஒபாமாவின் இந்தியப் பயணமும் இரு முக்கோணக்காதல்களும்

தற்போது உலக நாடுகளுக்கிடையிலான உறவுகள் பல முக்கோணங்களைக் கொண்டதாக இருக்கின்றது. பல முக்கோணங்களில் முக்கிய புள்ளியாக ஐக்கிய அமெரிக்கா திகழ்கின்றது. இரசியா, சினா, அமெரிக்க உளவுகள் ஒரு முக்கிய முக்கோணமாக இருந்தது போய் இப்போது அமெரிக்கா, சீனா, இந்தியா இடையிலான முக்கோண உறவு முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த முக்கோணத்தை ஒட்டி அமெரிக்க, சீன, பாக்கிஸ்த்தானிய உறவு இன்னொரு முக்கோணமாக அமைகின்றது. ஜப்பானியட் தலைமை அமைச்சர் அமெரிக்காவுடனும் இந்தியாவுடனும் இணைந்து சீனாவிற்கு ஆப்பு வைக்கும் ஒரு முக்கோண் உறவை வளர்க்க விரும்புகின்றார். எல்லா முக்கோணங்களிலும் ஒன்றை ஒன்று நம்பாமைதான் பொதுவானதாக இருக்கின்றது.

இந்தியாவிற்கு ஜப்பானியத் தலைமை அமைச்சர் சினே அபே, சீன அதிபர் ஜீ சின்பிங் ஆகியோர் மேற்கொண்ட பயணங்களைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் இந்தியா சென்றார். மற்ற இருவர்களின் பயணத்துடன் ஒப்பிடுகையில் ஒபாமாவின் பயணம் அதிக முக்கியத்துவம் பெற்றதாகும். இந்தியாவின் குடியரசு தின விழாவில் ஒபாமாவும் பங்கேற்றது மிக முக்கியமானது என உலகெங்கும் உள்ள ஊடகங்கள் தெரிவித்தன.  ஒபாமாவின் இந்தியப் பயணம் இரு நாட்டுகளிடையான உறவில் ஒரு திருப்பு முனை என்றனர் அரசியல் விமர்சகர்கள்.

கவர்ச்சிகரமான இந்தியா சிவப்பு நாடா கழற்றுகின்றது
உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை,மூன்றாவது பெரிய பொருளாதாரம், உலகிலேயே வேகமாக வளரப் போகும் பொருளாதாரம், உலகிலேயே அதிக அளவு மத்திய தர வர்க்கம், உலகிலேயே அதிக அளவு படைக்கலன் கொள்வனவு, 2020-ம் ஆண்டு  உலகிலேயே மிக இளமையான சராசரி மக்கள் தொகைக்கட்டமைப்பு ஆகியன உலக அரங்கில் இந்தியாவின் கவர்ச்சிகரமான அம்சங்களாகும்.  இந்தியாவின் இந்த அம்சங்கள் பல நாடுகளை இந்தியாவுடன் நல்லுறவை வளர்த்து இந்தியாவுடனான வர்த்தகங்களை விருத்தி செய்ய விரும்புகின்றன. போதாக் குறைக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சிவப்பு நாடா இல்லை சிவப்புக் கம்பளம் உண்டு என்று வரவேற்புப்பா பாடிவருகின்றார்.

அமெரிக்க இந்திய முறுகல் ஒரு தொடர்கதை.
ஐக்கிய அமெரிக்காவும் இந்தியாவும் ஐக்கிய இராச்சியத்துடன் போராடித் தமது சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்ட நாடுகள். இப்படிப்பட்ட ஒற்றுமையுடன் உருவான இந்த இரு நாடுகளுக்கும் இடையில் ஒரு சீரான உறவு இருததில்லை. பாக்கிஸ்த்தானை இரசியா அல்லது இரண்டும் இணைந்து ஆக்கிரமிக்கலாம் என்ற அச்சம் அமெரிக்காவை ஆட்டிப்படைத்தது. இதனால் 1954-ம் ஆண்டு பாக்கிஸ்த்தானிற்கு பெரும் படைக்கலன்களை ஐக்கிய அமெரிக்கா உதவியாக வழங்கியது. இவை கஷ்மீரில் இந்தியாவிற்கு எதிராகப் அப் படைக்கலன்கள் பாவிக்கப்படமாட்டாது என்ற உத்தரவாதத்துடன் வழங்குவதாக அமெரிக்கா சொன்னது. ஆனால் அதை அப்போதைய இந்தியத் தலைமை அமைச்சர் ஜவகர்லால் நேரு ஏற்றுக் கொள்ளவில்லை. இது இந்திய அமெரிக்க உறவில் முறுகலை உருவாக்கியது. பின்னர் சோவியத் ஒன்றியமும் அமெரிக்காவும் தமது அணிகளில் இந்தியாவை இணைக்க பெரு முயற்ச்சி எடுத்தன. ஆனால் நேரு இந்தோனேசியா, எகிப்து ஆகிய நாடுகளுடன் இணைந்து கூட்டுச் சேரா நாடுகள் அமைப்பை 1961-இல் உருவாகினார். இந்த அமைப்பு சோவியத் ஒன்றியத்துடன் நட்புறவை வளர்த்தமை அமெரிக்க இந்திய உறவைப் பாதித்தது. அமெரிக்க இந்திய உறவு சீனாவும் அமெரிக்காவும் ஒன்றை ஒன்று பாதுகாத்துக் கொள்ளும் உடனபடிக்கையை ரிச்சட் நிக்சன் அதிபராக இருந்த போது மோசமடைந்தது. இத உடன்படிக்கைக்குப் பதிலடியாக இந்தியாவும் சோவியத் ஒன்றியமும் பாதுகாப்பு உடன்படிக்கையைச் செய்து கொண்டன. அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் உறவு மிக மோசமான நிலையை அடைந்தது பங்களாதேசப் போரின் போதே. அப்போது இந்தியா பங்களாதேசத்தைப் பிரிப்பதைத் தடுக்க சீனப் படைகளை இந்திய எல்லையை நோக்கி நகர்த்தும் படி சீனாவை அமெரிக்கா வலியுறுத்தியது. அப்போது அமைதியான எழுச்சியை தனது கொள்கையாகக் கொண்ட சீனா இந்திரா காந்தியின் உறுதிப்பாட்டை உணர்ந்து கொண்டு அமெரிகாவின் வேண்டுதலை நிராகரித்து விட்டது. பின்னர் அமெரிக்க இந்திய உறவு மன்மோஹன் சிங் - சோனியா காந்தியின் ஆட்சியில் சீரமைக்கப்பட்டது.


இந்திய சீன உறவும் பஞ்சாகிப் போன பஞ்சசீலக் கொள்கையும்

இந்தியத் தலைமை அமைச்சர் ஜவகர்லால் நேருவினது பொருளாதாரக் கொள்கையில் இந்திய முதலாளிகளை மேற்கு நாட்டு முதலாளிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்பது ஒரு முன்னணி அம்சமாகும். இதை மனதில் கொண்ட நேரு அமெரிக்காவிற்கு 1949-இல் மேற் கொண்ட பயணம் இருதரப்பினருக்கும் திருப்திகரமாக இருக்கவில்லை. சீனப் பொதுவுடமைப் புரட்சியை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்ற அமெரிக்காவின் வேண்டு கோளை நேரு ஏற்றுக் கொள்ளவில்லை. செஞ்சீனாவை அங்கீகரித்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. செஞ்சீனாவிற்கு ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமை வழங்க வேண்டும் என்பதையும் நேரு வலியுறுத்தினார். 2014-ம் ஆண்டு இலண்டனில் நடந்த நேரு நினவுப் பேருரையில் எஸ் மேனன் அவர்கள் நேரு சீனாவை உலக ஒழுங்கில் இணைப்பதன் மூலம் அதனிடம் இருந்து பொறுப்பான நடத்தையைப் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம் என நேரு கருதியிருந்தார் என்றார். நேருவின் சீனா தொடர்பான கொள்கை இந்தியாவிலும் உலக அரங்கிலும் கண்டனங்களுக்கு உள்ளானது. இருந்து நேரு சீனாவுடனும் பர்மாவுடனும் பஞ்ச சீலக் கொள்கை அடிப்படையில் உறவை வளர்க்க விரும்பினார். 1954-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பஞ்ச சீலக் கொள்கை:
1. ஒரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறைமையையும் மற்ற நாடுகள் மதித்தல்.
2. ஒரு நாட்டை மற்ற நாடுகள் ஆக்கிரமிக்காதிருத்தல்
3. ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் மற்றைய நாடுகள் தலையிடாதிருத்தல்.
4. சமத்துவமும் இருதரப்பிற்கும் நன்மையளிக்கக் கூடிய ஒத்துழைப்பும்.
5. அமைதியாக ஒத்திருத்தல்.
ஆனால் 1962ம் ஆண்டு சீனா இந்தியா மீது படையெடுத்தது.


புதிய இந்திய அமெரிக்க உறவு – காசேதான் கடவுளடா!
2016-  ம் ஆண்டு உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா அமையும் எனப் பன்னாட்டு நாணய நிதியம் எதிர்வு கூறியுள்ளது.  இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நடக்கும் நூறு பில்லியன் டொலர்கள் பெறுமதியான வர்த்தகத்தை ஐநூறு பில்லியன் டொலர்களாக உயர்த்த மோடியும் ஒபாமாவும் ஒத்துக் கொண்டுள்ளனர். ஒபாமா இந்தியாவிற்கு நான்கு பில்லியன் டொலர்கள் கடன் வழங்க உறுதியளித்தார்.   ஒபாமாவைப் பொறுத்தவரை உலகிலேயே மூன்றாவது பெரிய அளவில் சூழல்  அசுத்தம்  செய்யும் இந்தியாவை சூழல் பாதுகாப்பு தொடர்பாக உடன்பட வைத்தமை பெரு வெற்றியாகும். இந்தியாவிற்கு அதிக படைக்கலன் விற்கும் நாடாக இருந்த இரசியாவை இரண்டாம் இடத்திற்கு அமெரிக்கா தள்ளி விட்டது. தற்போது அமெரிக்கா இந்தியாவிற்கு இரண்டு பில்லியன் டொலர்களுக்கு  படைக்கலன்களை ஏற்றுமதி செய்கின்றது. இப்போது இரு நாடுகளும் தமது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் பத்து ஆண்டுகள் நீடித்துள்ளன. 2006-ம் ஆண்டு இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் இந்தியத் தலைமை அமைச்சர் சிங்குடன் இணைந்து இரு நாடுகளும் கேந்திரோபாய பங்காண்மையை வளர்ப்பதாகக் கூட்டறிக்கை வெளியிட்டனர். தொடர்ந்து அமெரிக்கப் பாரளமன்றத்தின் மக்களவையில் இந்தியாவுடன் அணுவலு ஒத்துழைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்க இந்திய அணுவலு ஒத்துழைப்பில் அமெரிக்கா இந்தியாவிற்கும் வழங்கும் யூரேனியத்தை இந்தியா அணுக்குண்டு உற்பத்திக்குப் பாவிக்காமல் இருக்க அமெரிக்கா இந்தியாவில் அதன் பாவனையை கண்காணிக்கும் உரிமை அமெரிக்காவிற்கு வழங்கப்பட வேண்டும் என்பது அமெரிக்காவின் நிலைப்பாடாக இருந்தது. இது இந்தியாவின் உள்விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடு என இந்தியாவில் எதிர்ப்புக் கிளம்பி இது இந்தியப் பாராளமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய இடது சாரிக் கட்சிகள் வலியுறுத்தின. 2007-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அமெரிக்க இந்திய அணுவலு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இது தொடர்பான அறிக்கையை மன்மோகன் சிங் இந்தியப் பாராளமன்றத்தில் வாசித்த போது இடதுசாரிக் கட்சிகள் தேன்நிலவு முடிந்து விட்டது இப்போது திருமண அறிவிப்பா எனக் கேள்வி எழுப்பின. போபால் நச்சு வாயுக் கசிவு போல் மீண்டும் நடக்காமல் இருக்க உத்தரவாதம் இந்தியாவின் பலதரப்பினரிடமிருந்தும் எழுந்தது. இதற்கு மாற்றீடாக பராக் ஒபாமாவும் மோடியும் 122மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஒரு காப்பீட்டுத் திட்டம் ஒன்றை உருவாக்க ஒத்துக் கொண்டனர். அத்துடன் யூரேனியத்தை கண்காணிக்கும் விவகாரத்திலும் அமெரிக்கா விட்டுக் கொடுத்தது.

வெளியேற்றப்பட்ட இந்திய வெளியுறவுத் துறைச் செயலர்
அமெரிக்க இந்திய உறவில் ஒரு நீண்டகாலப் பிரச்சனையாக பாக்கிஸ்த்தான் இருக்கின்றது என்றால் குறுங்காலப் பிரச்சனையாக உக்ரேன் விவகாரமும் அமெரிக்காவில் பணியாற்றிய தேவ்யானி விவகாரமும் அமைந்தன. உக்ரேன் விவகாரத்தில் இந்தியா எந்த ஒரு மாற்றத்தையும் வெளிப்படுத்தவில்லை. அமெரிக்க அரசனை நம்பி இரசியப் புருசனை அவசரப்பட்டு இந்தியா கைவிடத் தயாரில்லையா என்ற கேள்வி இன்னும் உயிருடன் இருக்கின்றது.  இது இந்திய, இரசிய, அமெரிக்க முக்கோணத்தின் கோணல் நிலை. ஆனால் தேவ்யானி விவகாரத்தை கையாண்டு அமெரிக்காவின் அதிருப்தியைச் சம்பாதித்த இந்திய வெள்யுறவுத் துறைச் செயலர் ஒபாமாவின் இந்தியப் பயணம் முடிந்த கையோடு பதவியில் இருந்து விரட்டப்பட்டார். அவரது இடத்திற்கு நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தையும் ஒபமாவின் இந்தியப் பயணத்தையும் ஒழுங்கு செய்தவரும் அமெரிக்காவிற்கான இந்தியத் தூதுவராக இருந்தவருமான எஸ் ஜெய்சங்கர் வெளியுறவுத் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். முக்கோணத்தின் மற்ற முனை சும்மா இருக்கவில்லை. புதிய வெளியுறவுத் துறைச் செயலரை அழத்து முதலில் சந்திப்பு நடாத்திய நாடு சீனாவாகும். இச் சந்திப்பைத் தொடர்ந்து இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் சுஸ்மா சுவராஜ் சீனாவிற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கின்றார்.

பாக்கிஸ்த்தானுடன் அமெரிக்காவும் சீனாவும் வைக்கும் உறவு
ஒபாமா புதி டில்லியில் இருக்கும் போது பாக்கிஸ்த்தானியப் படைத்தளபதி ரஹீல் ஷரிஃப் சீனாவிற்குப் பயணம் செய்தார். இந்திய அமெரிக்க உறவிற்குப் போட்டியாக சீன பாக்கிஸ்த்தானிய உறவு வளருமா என்பதும் ஒரு நியாயமான கேள்வியே! இந்தியாவின் பொருளாதாரம் 1.25பில்லியன் டொலர் பெறுமதியானது. பாக்கிஸ்த்தானின் பொருளாதாரம் 190மில்லியன் டொலர்கள் மட்டுமே. பாக்கிஸ்த்தானின் ஆட்சியாளர்கள் இந்தியா ஆட்சியாளர்களிலும் மோசமானவர்கள்.  இந்தியாவிலும் மிக மோசமான ஊழல் பாக்கிஸ்த்தானில் தலைவிரித்தாடுகின்றது. இரு நாடுகளிடமும் அணுக் குண்டுகள் இருக்கின்றன என்பதைத் தவிர வேறு எத வகையிலும் இந்தியாவிற்கு கிட்டவும் பாக்கிஸ்த்தானால் நிற்க முடியாது.  ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்காவுடன் பல வகையிலும் கடந்த பல ஆண்டுகளாக இரகசியமாகவும் பகிரங்கமாகவும் ஒத்துழைத்த பாக்கிஸ்த்தானுடன் அமெரிக்கா செய்ய முடியாத அணுவலு உற்பத்தி உடன்பட்டை அமெரிக்கா இந்தியாவுடன் செய்வது பாக்கிஸ்த்தானியர்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தியாவை ஆப்கானிஸ்த்தானுக்குள் அமெரிக்கா இழுப்பதைப் பாக்கிஸ்த்தான் விரும்பவில்லை. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது பதவிக்காலத்தில் இரண்டு தடவைகள் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டமை பாக்கிஸ்த்தானில் பல தரப்பினரையும் எரிச்சல் பட வைத்துள்ளது. இதற்கு முன்னர் டுவைற் ஐஸ்ன்ஹோவர், லிண்டன் ஜோன்சன், ரிச்சர்ட் நிக்சன் பில் கிளின்டன் ஜோர்ஜ் டப்ளியூ புஷ் ஆகிய அமெரிக்க அதிபர்கள் பாக்கிஸ்த்தானிற்குப் பயணம் மேற்கொண்டார்கள். பாக்கிஸ்த்தானில் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஆட்சியில் இருக்கும் போது எந்த ஓர் அமெரிக்க அதிபரும் பாக்கிஸ்த்தானிற்குப் பயணம் செய்யவில்லை. சர்வாதிகார இராணுவ அதிகாரிகள் பாக்கிஸ்த்தானை ஆட்சி செய்யும் போது மட்டும் அமெரிக்க அதிபர்கள் பாக்கிஸ்த்தானிற்குப் பயணம் மேற்கொண்டனர். பாக்கிஸ்த்தானில் மக்களாட்சியில் அக்கறை கொள்வதிலும் பார்க்க பாக்கிஸ்த்தானை பொதுவுடமைவாதத்தின் விரிவாக்கத்திற்கு எதிராகப் பயன்படுத்துவதில் அமெரிக்கா அதிக அக்கறை காட்டியது. பனிப்போர் முடிந்த பின்னர் ஆப்கானிஸ்த்தானில் உருவான இசுலாமியத் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பாக்கிஸ்த்தானை அமெரிக்காவிற்கு அதிகம் தேவைப்பட்டது. இந்தியாவுடன் சீனா தனது வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்ள விரும்புகின்றது. அது சீனாவிற்கு அவசியமான ஒன்றும் கூட. அதே வேளை பாக்கிஸ்த்தானும் இந்தியாவும் தமக்கிடையிலான வர்த்தகத்தைப் பெருக்குவதில் அதிக முனைப்புக் காட்டுகின்றன.

ஆறுதல் அடைந்த சீனா
2015ம் ஆண்டின் சீனாவிற்கான முதல் அடியாக இலங்கையில் சீனாவிற்கு உகந்த ஆட்சியாளர் பதவியில் இருந்து விரட்டப்பட்டார். இரண்டாவது அடியாக இந்திய அமெரிக்க உறவு பராக் ஒபாமாவின் பயணத்தால் விழுமா என்ற எதிர்பார்ப்பு சீனாவில் இருந்தது. அமெரிக்காவிற்கும் இடையில் படைத்துறையில் ஒத்துழைப்பு மேம்படுத்தப்பட்டாலும் காத்திரமான படைத்துறைக் கூட்டமைப்பு உருவாகியதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்பதால் சீனா ஆறுதல் அடைந்ததாக சீன ஊடகங்களில் வெளிவந்த கருத்துரைகள் தெரிவிக்கின்றன.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...