Monday, 17 November 2014

சீன ஜப்பானிய உறவு நெருக்கமடையுமா நொருங்கிப் போகுமா?

சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் ஜப்பானிய அதிபர் சின்ஷோ அபேயும் இருபத்தொரு நாடுகளைக் கொண்ட ஆசிய பசுபிக் பொருளாதாரக் கூட்டுறவின் உச்சி மாநாட்டில் 2014 ஒக்டோபர் 10-ம் திகதி சந்தித்துக் கொண்டனர்.  பீஜிங்கில் உள்ள மக்கள் பெரு மண்டபத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. ஒன்றுடன் ஒன்று பிரச்சனைக்கு உரிய உறவு நிலையில் உள்ள இரு நாட்டுத் தலைவர்கள் சந்திக்கும் போது அவர்களின் உடல் மொழியை அரசியல் நோக்குனர்கள் நுணுக்கமாக அவதானிப்பார்கள். 2012 டிசம்பர் மாதம் பதவிக்கு வந்த சின்ஷே அபேயிர்கும் 2013 மார்ச்சில் பதவிக்கு வந்த ஷி ஜின்பிங்கிற்கும் இடையில் நடத்த சந்திப்பு வழமைக்கு அதிகமாக அவதானிக்கப்பட்ட போதிலும் இச் சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தாது எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

சிரிக்காத சீனம்
இந்திய ஜப்பானியத் தலைமை அமைச்சர்கள் சந்தித்த போது அவர்கள் கட்டித் தழுவிய விதமும் அவர்கள் முகத்தில் மலர்ந்த சிரிப்புக்களும் பலராலும் விமர்சிக்கப்பட்டன. சின்ஷே அபேயும் ஷி ஜின்பிங்கும் கைகுலுக்கும் போது  அபேயின் முகத்தில் அவரால் ஒரு புன்னைகை திணிக்கப்பட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ஷி ஜின்பிங்கின் முகத்தில் புன்னகையே இருக்க வில்லை. ஷி ஜின்பிங் கை குலுக்கியது ஓர் ஆர்வமற்ற கைகுலுக்கல் எனவும் அவர் ஓர் இனிய சூழலை அப்போது உருவாக்கவில்லை எனவும் அவதானிக்கப்பட்டுள்ளது. அபே சொன்ன வாழ்த்தை மொழி பெயர்ப்பாளர் மொழி பெயர்த்து ஷியிடம் சொன்னார் ஆனால் பதில் வாழ்த்து எதையும் ஷி சொல்லவில்லை. வழமையாக இரு நாடுகளின் ஆட்சியாளர்களிடையே நடக்கும் சந்திப்புக்கள் எடுக்கும் நேரத்திலும் பார்க்க அரைவாசி நேரத்தில் இவர்களது சந்திப்பு எடுத்துள்ளது. ஷியும் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனும் சந்தித்த போது ஷியின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. ஜப்பானியத் தலைமை அமைச்சருடன் நட்பு நிறைந்த சந்திப்பை சீன அதிபர் செய்வது சீன மக்களை ஆத்திரப்படுத்தும் என்பதை  ஷி நன்கு அறிவார்.

ஒன்றானாலும் இரண்டே
சீனாவிற்கும் ஜப்பானிற்கும் இடையில் கலாச்சார மற்றும் மத ரீதியில் பெரும் ஒற்றுமை உண்டு. ஜப்பானியக் கலாச்சாரம் சீனாவிடமிருந்து பெறப்பட்டதே என்றும் சொல்லப்படுகின்றது. ஜப்பான் உலகத்தில் இருந்து தனிமைப் பட்டு இருந்த வேளையில் சீனா உலகெங்கும் தனது பட்டுப்பாதையை நீட்டி பலநாடுகளுடன் வர்த்தக மற்றும் கலாச்சாரப் பரிவர்த்தனை செய்யத் தொடங்கிவிட்டது. ஆனால் ஜப்பானியர்கள் சீனர்கள் தமது நாட்டுக்குள் அந்நியர்களை அனுமத்துப் போதைப் பொருளுக்கு அடிமையானார்கள் எனக் கருதுகின்றனர். இரு நாடுகளும் சீனத் தத்துவ ஞானி கன்ஃபூசியஸ் அவர்களின் சிந்தனை அடிப்படையில் தம் கலாச்சாரங்களை வளர்த்துக் கொண்டாலும் சரித்திரமும் பூகோளமும் இரு நாடிகளையும் பிரித்து வைத்துள்ளது.

சீன ஜப்பானியப் பிளவில் சரித்திரத்தின் பங்கு
சீனவின் சூய் அரசவம்சத்தினதும் டாங் அரசவம்சத்தினது ஆட்சிகளின் போது சீன மரபு, கலாச்சாரம், ஆட்சி நிர்வாக முறைமை, கட்டிடக் கலை நகர கட்டுமானம் ஆகியவை ஜப்பானிற்குப் பரவியது. இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது மோதல் கொரியத் தீபகற்பத்தை ஒட்டி ஆரம்பமானது. மூன்று அரசுகள் ஒன்றிணைந்து ஆட்சி நாடாத்திய கொரியாவில் மூன்று அரசுகளும் பிளவு பட்டபோது ஓர் அரசு ஜப்பானுடனும் மற்ற இரு அரசுகள் சீனாவுடனும் உறவு கொண்டாடின. இதனால் கிபி 663-ம் ஆண்டு இரு நாடுகளும் மோதிக் கொண்டன. சீனாவிற்கும் ஜப்பானிற்கும் இடையில் நடந்த கடற்போரில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட ஜப்பானியப் கடற்கலன்கள் அழிக்கப்பட்டன. பின்னர் 1593-ம் ஆண்டில் இருந்து 1598-ம் ஆண்டு வரை ஜப்பான் கொரியத் தீபகற்பத்தைக் கைப்பற்ற முயன்று தோற்றுப் போனது. சீனர்களினதும் கொரியர்களினதும் மிகையான ஆளணிவலுவைன் முன்னால் ஜப்பானால் நின்று பிடிக்க முடியவில்லை.  ஆனால காலப் போக்கில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஜப்பான் தன் படைவலுவை அதிகரித்துக் கொண்டது. 1876-ம் ஆண்டு தற்போது தென் கொரியா, வட கொரியா எனப்படும் இரு நாடுகளைக் கொண்ட கொரியத் தீபகற்பத்தை ஜப்பான் கைப்பற்றி தன்னுடன் இணைத்துக் கொண்டது. ஜப்பானிற்கும் சீனாவிற்கும் இடையில் உள்ள ரியுகியூ தீவுகள் யாருக்கும் சொந்தம் என்பதில் இரு நாடுகளும் 1894-ம் ஆண்டு மோதிக்கொண்டன. இதில் தாய்வான் தீவு உட்படப் பல நிலப்பரப்புக்களை சீனா ஜப்பானிடம் இழந்தது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோற்கடிக்கப்படும்வரை கொரியத் தீபகற்பமும் தாய்வான் தீவும் ஜப்பானின் ஆதிக்கத்தின் கீழேயே இருந்தன. 1931-ம் ஆண்டில் இருந்து 1937-ம் ஆண்டு வரை இரு நாடுகளும் தொடர்ச்சியாகவும் அடிக்கடியும் மோதிக் கொண்டன. இதில் சீனா ஷங்காய் உடபடப் பல நகரங்களை ஜபபானிடம் பறிகொடுத்தது. இப்போர்களின் போது ஜப்பானியப் படைகள் சீனப் போர்வீரர்களையும் பெண்களையும் பல வன்கொடுமைக்கு உள்ளாக்கியதை இன்றும் சீனர்கள் மறக்கவில்லை. 2014 ஒக்டோபர் மாதம் 10-ம் திகதி ஜப்பானியத் தலைமை அமைச்சருடன் கைகுலுக்கும் போது சீன அதிபர் நட்புப் பாராட்டமைக்கு இதுவே காரணம்.

சீன ஜப்பானியப் பிளவில் பூகோளத்தின் பங்கு
சீனாவிற்கும் ஜப்பானிற்கும் இடையிலான முரண்பாட்டின் இரண்டாம் அம்சம் கிழக்குச் சீனக் கடலில் உள்ள தீவுக் கூட்டங்கள் யாருக்குச் சொந்தம் என்பதாகும். இத் தீவுகள் யாருக்கு சொந்தம் என்பதில் சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான முறுகல் நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே போகின்றது. கிழக்குச் சீனக் கடல் வான் பரப்பில் பெரும் பகுதியை சீனா தனது வான் பாதுகாப்பிற்கு உட்பட்ட வலயம் என 2013 நவம்பர் 24-ம் திகதி  அறிவித்தது. இந்த வான் பரப்பு சீனாவும் ஜப்பானும் தமது எனச் சொந்தம் கொண்டாடும் சென்காகு அல்லது டயோயு தீவுக் கூட்டங்களையும் உள்ளடக்கியது என்பதால் உலக அரங்கில் ஒரு பெரும் அதிர்வலை உருவானது.  இதற்குப் பதிலடி கொடுக்கும் முகமாக நவம்பர் 26-ம் திகதி முற்பகல் 11-00இல் இருந்து பிற்பகல் 1.22 வரை அமெரிக்கா தனது இரு பி-52 போர் விமானங்களை சீனா அறிவித்த வான் பாதுகாப்பு வலயத்திற்குள் பறக்க விட்டது. இது சீனா தனது வான் பாது காப்பு வலயம் என அறிவிக்க முன்னர் ஏற்பாடு செய்யப்பட்ட பறப்பு என்கின்றது அமெரிக்கா.  அமெரிக்க விமானங்கள் மேற்குப் பசுபிக் கடலில் உள்ள குவாம் கடற்படைத் தளத்தில் இருந்து கிழக்குச் சீனக் கடலில் தமது பறப்புக்களை மேற் கொண்டன. இப்பறப்புக்கள் பற்றி அமெரிக்கா சீனாவிற்கு எந்த முன்னறிவிப்பையும் செய்யவில்லை. சீனா அறிவித்த வலயம்  சீனத் தரையில் இருந்து 500 மைல்கள் வரை நீள்கின்றது. சீனா சென்காகு அல்லது டயோயு தீவுக் கூட்டங்களிற்கு அடிக்கடி விமானங்களை அனுப்புவதும் அவற்றின் அலைவரிசைகளை ஜப்பான் குழப்புவதும் ஒன்றின் விமானங்கள் மீது மற்ற விமானங்கள் ரடார் பூட்டுப் போடுவதும் அடிக்கடி நடந்தன. இரு நாட்டுக் கடற்படைக் கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று நேரடியாக மோதும் சூழலும் உருவாகி இருந்தது.

சீன ஜப்பானிய உறவில் பொருளாதாரம்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரத் தொடர்புகளைப் பார்த்தால் 2013-ம் ஆண்டு சீனா ஜப்பானில் 434 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முதலீட்டைச் செய்திருந்தது. ஆனால் சீனாவில் ஜப்பான் செய்யும் முதலீடு குறைந்து கொண்டு செல்லும் வேளையில் சீனா ஜப்பானில் செய்யும் முதலீடு அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. 2013-இல் ஜப்பான் சீனாவில் ஒன்பது பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மேலான முதலீட்டைச் செய்திருந்தது. சீனா ஜப்பானிற்கு ஆண்டு ஒன்றிற்கு 153 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஏற்றுமதியைச் செய்கின்றது. ஜப்பான் சீனாவிற்குச் செய்யும் ஏற்றுமதி 130 பில்லியன் டொலர்கள் பெறுமதியானதாகும். சீனா ஜப்பானிற்குச் செய்யும் ஏற்றுமதி அதிகரிக்கும் வேளையில் ஜப்பானின் ஏற்றுமதி குறைந்து கொண்டே போகின்றது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்து கொண்டு போகும் வேளையில் ஜப்பானியப் பொருளாதாரம் கடந்த இருபது ஆண்டுகளாக வளர மல் இருக்கின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகமும் நேரடி முதலீடுகளும் அமைதியான கடற்போக்கு வரத்துகளும் இரு நாட்டுப் பொருளாதாரங்களுக்கு மிகவும் அவசியமானதாக அமைகின்றது.

உருகாத உறைநிலை
மேற்படி தீவுக் கூட்டங்களில் ஏற்பட்ட முரண்பாட்டால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இரு நாட்டுத் தலைவர்களும் ஒருவருடன் ஒருவர் தொடர்புகளின்றி இருந்தனர். ஷியும் அபேயும் சந்தித்துக் கொண்டது உறைநிலையில் இருந்த இருநாட்டு உறவை "உருகச் செய்யும்" என எதிர்பார்க்கப்பட்டது. ஷி எப்படியும் ஜப்பானை அடக்குவதில் தீவிரமாக உள்ளார். சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் தந்தை ஜப்பானிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடியவர் என்றவகையிலும் தந்தையின் நண்பர்களின் பிள்ளைகளுடன் சிறுவயது முதற்கொண்டே ஜப்பானிய அக்கிரமங்களைப்பற்றி பலதடவைகள் உரையாடியவர்கள் என்றவகையிலும் ஜப்பான் மீது அதிக வெறுப்பு உள்ளவராகக் கருதப்படுகின்றார். 1979-ம் ஆண்டு பிஜிங்கின் தின்மன் சதுக்கக் கிளர்ச்சிக்குப் பின்னர் சீனா தனது கல்வித் திட்டத்தில் “அந்நிய ஆக்கிரமிப்பின் மானபங்கத்தில் நூறு ஆண்டுகள்” என்பதை புகுத்தியுள்ளது. இதனால் பல சீன இளைஞர்கள் ஜப்பான் மீது வெறுப்புக் கொண்டுள்ளனர். அண்மைக்கால ஜப்பானியத் தலைமை அமைச்சர்களில் சின்ஷே அபேயே அதிக அளவு தேசியவாதியாவார். ஷி ஜின்பிங்கும் அவ்வாறே. அபே சீன ஜப்பானியப் போரின் போது இறந்தவர்களின் நினைவிடமான யசுக்குனிக்கு அஞ்சலி செய்யச் சென்றது சீனர்களைக் கடுமையாக ஆத்திரப்படுத்தியிருந்தது. இரு தலைவர்களின் சந்திப்பின்போது நிலவிய சிநேகமற்ற சூழலுக்கு இதுவும் ஒரு காரணியாக அமைந்தது.

அமெரிக்காவே துணை.
ஆண்டு தோறும் ஏழு விழுக்காடு பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட சீனா பாதுகாப்பிற்கு 131 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்குகின்றது. அத்துடன் சீனாவின் பாதுகாப்புச் செலவீனம் 12 விழுக்காட்டிற்கு மேல் ஆண்டுக்கு அதிகரிக்கின்றது. ஆண்டொன்றிற்கு 0.8 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட ஜப்பான் பாதுகாப்புச் செலவிற்கு 46 பில்லியன் அமெரிக்க டொலர்களை மட்டும் ஒதுக்குகின்றது. அத்துடன் ஜப்பானின் பாதுகாப்புச் செலவு ஆண்டுக்கு 2.8 விழுக்காடு மட்டுமே அதிகரிக்கப்படுகின்றது. ஜப்பானிய அரசமைப்பின் படி அது ஒரு தாக்குதல் படையை வைத்திருக்க முடியாது. அதனால் ஒரு பாது காப்புப் படையை மட்டுமே வைத்திருக்க முடியும். இன்னொரு நாட்டின் மீது ஜப்பானால் படையெடுக்க முடியாது. இருந்தும் ஜப்பானியப் படைவலு உலக நாடுகளின் பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது. அதனிடம் ஒரு உழங்கு வானூர்தி தாங்கி நசகாரிக் கப்பல் உண்டு. இது ஒரு விமானம் தாங்கிக் கப்பலுக்கு ஈடானதாகும். சீனாவின் படைவலுவின் முன்னர் ஜப்பானால் தனித்து நிற்க முடியாது. அது தனது பாதுகாப்பிற்கு அமெரிக்காவுடன் அது செய்த பாதுகாப்பு ஒப்பந்தம் தான் கைகொடுக்க வேண்டும்.

வாராது காக்க வேண்டும் ஆசியப் போர்
உலகிலேயே போர் மூளும் அபாயம் கூடிய இடங்களாக தென் சீனக் காடலும் கிழக்குச் சீனக் கடலும் இருக்கின்றன. இதற்கு ஜப்பானிற்கும் சீனாவிற்கும் இடையில் பேச்சு வார்த்தை அவசியம். சீன ஜப்பானியப் போர் நடந்தால் அங்கு அமெரிக்காவும் தலையிடும் கட்டாயம் உள்ளது. ஆசிய பசுபிக் பொருளாதாரக் கூட்டுறவின் உச்சி மாநாட்டின் முன்னர் இரு தலைவர்களும் சந்திப்பார்களா என்பது ஒரு முயற்கொம்பாகவே இருந்தது. சீன அதிபர் ஷி ஜின்பிங் ஜப்பானி எதிர்ப்புப் பரப்புரைகள் மூலமும் கிழக்குச் சீனக் கடலுக்கு அடிக்கடி கடற்கலங்களையும் வான் கலன்களையும் அனுப்பி ஜப்பானைச் சீண்டுவதன் மூலமும் சீனாவில் தனது செல்வாக்ககிப் பெருக்கிக் கொள்கின்றார் என்பது ஜப்பானின் குற்றச்சாட்டு. ஜப்பானியர்கள் போரின் போது செய்ய அட்டூழியங்களைப் பற்றி சீனாவில் அதிகம் பேசுவதால் சீனர்கள் இப்போதும் பழைமையிலேயே வாழ எத்தனிக்கின்றார்கள் எனக் குற்றம் சாட்டும் ஜப்பான் அவர்கள் பழையவற்றை மறந்து புது யுகத்தில் இரு நாடுகளிற்கும் இடையிலான ஒத்துழைப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கின்றது. ஜப்பானுடன் பேச்சு வார்த்தை நடாத்துவதற்கு சீன இரு நிபந்தனைகளை விதித்திருந்ததாகக் கூறப்படுகின்றது. ஒன்று சர்ச்சைக்குரியதான ஜப்பானின் இறந்த போர்வீரர்களின் யசுக்குனி எனப்படும் நினைவிடத்திற்கு ஜப்பானியத் தலைமை அமைச்சர் பயணம் மேற்கொள்ளக் கூடாது. மற்றது கிழக்குச் சீனக் கடலில் உள்ள சென்காகு அல்லது டயோயு தீவுக் கூட்டங்கள் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையில் முரண்பாடு இருக்கின்றது என்பதை ஜப்பான் ஒத்துக் கொள்ள வேண்டும். சந்திப்பின் போது இரு நாடுகளும் தமது படை நடவடிக்கைகள் தொடர்பாக ஒரு உடனடித் தொடர்பாடலை ஏற்படுத்துவதாக ஒத்துக் கொள்ளப்பட்டுள்ளது. சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சின்ஷே அபே இரு நாடுகளிடையே அடிக்கடி உரையாடல்கள் நடக்க வேண்டும் என்றதுடன் ஒரு நாட்டுக்கு மற்ற நாட்டின் நட்பு அவசியம் என்றார். சண்டைகள் தொடங்காமல் இருக்க உரையாடல்கள் உதவட்டும்.

Sunday, 16 November 2014

சீன விமானக் கண்காட்சி - 2014

சீனாவின் J-31 போர் விமானம்
சீனா 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம்  11-ம் திகதி முதல் 16-ம் திகதி வரை தனது China Airshow எனப்படும் விமானக் கண்காட்சியை நடாத்தியது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை சீனா இந்த விமானக் கண்காட்சியை ஒழுங்கு செய்யும்.  1996-ம் ஆண்டில் இருந்து  இந்தக் கண்காட்சி நடந்து வருகின்றது. உலகின் பல பகுதிகளில் இருந்தும் போக்கு வரத்து மற்றும் போர் விமான உற்பத்தியாளர்கள் இதில் தமது உற்பத்திகளைப் பகிரங்கப்படுத்துவர். சீனாவின் Guangdong மாகாணத்தில் உள்ள Zhuhai விமானத் தளத்தில் இந்தக் கண்காட்சி நடை பெறுகின்றது. வழமைக்கு மாறாக சீனா தனது விமானப்படை வலுவை இம்முறை இந்தக் கண்காட்சியில் பகிரங்கப் படுத்தியதாகச் சொல்லப்படுகின்றது.

சீனாவின் J-31 stealth fighter
சீனா தான் உருவாக்கிவரும் stealth fighter வகையைச் சார்ந்த J-31 போர் விமானங்களை சீன விமானக் கண்காட்சியில் பகிரங்கப்படுத்தியுள்ளது. இரு இயந்திரங்களைக் கொண்ட ஒருவர் மட்டும் செலுத்தக் கூடிய J-31 ரடார்களுக்குப் புலப்படாத் திறனுடையவை. J-31 விமானங்கள் Falcon Eagle என்னும் குறியீட்டுப் பெயரினால் அழைக்கப்படுகின்றன. சீனா இந்த J-31 stealth fighter போர்விமானங்களை அமெரிக்காவின் F-35 போர் விமானங்களுக்குப் போட்டியாக உருவாக்கி வருகின்றது. இந்த உருவாக்கம் இன்னும் முற்றுப் பெறாத நிலையில் சீனா தனது ஆரம்ப உற்பத்திகளை இப்போது பகிரங்கமாகப் பறக்க விட்டுள்ளது. கிழக்குச் சீனக் கடலில் அமெரிக்காவினதும் ஜப்பானினது வான் ஆதிக்கத்திற்கு சீனாவின் J-31 stealth fighter என்னும் ஐந்தாம் தலைமுறை விமானங்கள் பெரும் சவலாக அமையும் என சீன வான் படையைச் சேர்ந்த Ni Leixiong கூறியுள்ளார். ஆனால் சீனாவின் J-31 stealth fighterவிமானங்களால் high-G maneuver எனப்படும் விமானப் பறப்பில் கடினமானதும் முக்கியமானதுமான பறப்பைச் செய்ய முடியாது என ஜேர்மனியைச் சேர்ந்த விமானத் துறை நிபுணர் தெரிவித்துள்ளார். சீனாவின் J-31 stealth fighter விமாங்களின் இயந்திரங்கள் இரசியாவில் தயாரிக்கப் படுபவை என்பது சீனாவின் பின்னடைவு நிலையை எடுத்துக் காட்டுகின்றது. அமெரிக்காவின் F-35 வாங்க முடியாத நாடுகள் தனது வ் J-31  விமானங்களை வாங்கும் என சீனா எதிர்பார்க்கின்றது. ஆனால் The Diplomat இணையத் தளம் சீனாவின் J-31 விமானங்களை ஒரு நாடும் வாங்கப் போவதில்லை என எதிர்வு கூறியுள்ளது. அமெரிக்கச் ஊட்கமான Wall Street Journal அமெரிக்காவின் F-35 விமானங்களின் தொழில் நுட்பத்தை சீனா இணையவெளியினூடாகத் திருடியே தனது J-31 விமானங்களை உருவாக்கியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

அசையக் கூடிய செய்மதி செலுத்திகள்
சீனா தனது விமானக் கண்காட்சியில் காட்சிப்படுத்திய இன்னும் ஒரு படைக்கலன் அசையக் கூடிய செய்மதி செலுத்திகள் ஆகும். இவை FT-1 solid launch vehicle for emergency satellite launches எனப்படுகின்றது இவை தெருக்களில் செல்லக் கூடிய பார் ஊர்திகளில் இருந்து செய்மதிகளை அவசரத் தேவைகளின் போது செலுத்தக் கூடியவை. இவற்றில் இருந்து மூன்னூறு கிலோ எடையிலும் குறைந்த செய்மதிகளைச் செலுத்த முடியும். இது போன்ற ஏவுகணைச் செலுத்திகளை வேறு எந்த நாடும் உருவாக்கவில்லை எனச் சொல்லலாம். இவற்றிக்கான தேவை எதுவும் ஏற்படவில்லை என்கின்றனர் படைத்துறை நிபுணர்கள். இவற்றை சீனா உருவாக்கியமை பலரையும் ஆச்சரியப் பட வைத்துள்ளது.

சீனாவின் ஆளில்லா வான்கலங்கள்
சீன விமானக் கண்காட்சியில் சீனா உருவாக்கிய ஆளில்லா உழங்கு வானூர்திகளையும் காட்சிப்படுத்தியுள்ளது.  அத்துடன் தாக்கும் படைக்கலன்களைக் கொண்டஆளின்றிப் பறக்கக் கூடியதுமான   Stealthy WJ-500என்னும் விமானங்களையும் சீனா முதல் தடவையாகக் காட்சிப் படுத்தியுள்ளது. இதன் பெயரில் இருக்கும் Stealthy என்னும் சொல்லிற்கு ஏற்ப இவை ரடார்களுக்குப் புலப்படாமல் பறக்கக் கூடியவை. 
FM-3000 எனப்படும் air defense missile system
ஏவுகணை எதிர்ப்பு  முறைமை
சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள FM-3000 எனப்படும் air defense missile system சீன விமானக் கண்காட்சியில் காட்சிப் படுத்தப்படுள்ளது.  மூன்று பகுதிகளைக் கொண்ட இந்த ஏவுகணை எதிர்ப்பு முறைமை வரும் குறுந்தூர மற்றும் நடுத்தரத் தூர ஏவுகணைகளை இனம் காணும் ரடார்கள் ஒரு பகுதியாகும். இரண்டாம் பகுதி கட்டளையும் கட்டுப்பாட்டு நிலையமாகும். மூன்றாவது வரும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் ஏவுகணைகளை வீசும். ரடார் நிலையம் வரும் ஏவுகணைகளைப் பற்றிய தகவல்களை கட்டளை கட்டுப்பாட்டகத்திற்கு வழங்க அங்கிருந்து தாக்குதல் சமிக்ஞைகள் ஏவுகணைவீச்களுக்கு வழங்கப்படும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...