Friday, 23 May 2014

சீனாவிலும் இசுலாமியத் தீவிரவாதம்

2014-ம் ஆண்டு மே மாதம் சீனாவில் தீவிரவாதிகள் இரு பார ஊர்திகளை வேகமாகச் செலுத்திக் கொண்டு கைக்குண்டுகளை வீசிக்கொண்டு போய் பொதுமக்கள் நிரம்பிய மரக்கறிச் சந்தையில் மோதி 31 பேரைக் கொன்றனர். இது நடந்தது சீனாவின் உறும்கி நகரிலாகும்.

2009-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் திகதி சீனாவின் மேற்குப் பகுதிப் பிராந்தியமான சின்ஜியாங் இன் தலை நகரான உறும்கியில் வெள்ளிக்கிழமையில் பள்ளிவாசல்கள் திறக்கப்படக்கூடாது மக்கள் தமது தொழுகைகளை வீட்டுக்குள் இருந்தே மேற்கொள்ள வேண்டும் என சீன அரசு உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவையும் மீறி இரு பள்ளிவாசல்கள் திறந்து மக்கள் தொழுகையில் ஈடுபட்டனர். உறும்கி நகரில் இதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் நடந்த கலவரத்தில் 156 பேர் கொல்லப்பட்டமைக்கு பள்ளிவாசல்களில் செய்யப்படும் பரப்புரையும் வழங்கப்படும் பயிற்ச்சிகளுமே காரணம் என சீன அரசு ஐயப்பட்டே இந்த உத்தரவைப் பிறபித்தது.

தீபெத்தில் ஒரு இடத்தில் கலவரம் நடந்தால் அந்த இடத்தை வெளித்தொடர்புகளில் இருந்து துண்டித்து ஊடகங்கவியலாளர்கள் உள் நுழைவதைத் தடைசெய்து சீனக் காவற்துறை கடும் நடவடிக்கைகளை எடுக்கும். ஆனால் சின் ஜியாங் பிராந்தியத்தில் சீனாவின் அணுகுமுறை முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என்றபடியால் மேற்குலக நாடுகளின் ஊடகங்களின் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும் என சீன அரசு கருதியிருந்திருக்கலாம். அத்துடன் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் ஹன் சீனர்கள் என்பதால் உண்மை வெளிவந்தால் உய்குர் இனத்தவர்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை நியாயப்படுத்துதல் இலகுவாக இருக்கும் எனவும்  சீன அரசு நினைத்திருக்கலாம். அத்துடன் ஜின் ஜியாங் பிராந்தியத்தில் நடப்பவை இரு இனங்களுக்கு இடையிலான மோதல்கள் மட்டுமே. பிரிவினைவாதம் அல்ல என்றும் சீனா வெளியுலகிற்கு காட்ட  முயன்றது. இது நடந்தது 2009-ம் ஆண்டு.

சீனாவின் சின் ஜியாங் பிராந்தியத்தில் உய்குர் என்னும் இசுலாமிய இனக் குழுமத்தினர் வசிக்கின்றனர். இவர்களின் பூர்வீகம் துருக்கி எனப்படுகின்றது. இவர்கள் இப்பிராந்தியத்தின் மக்கள் தொகையில் 45 விழுக்காட்டினராகும். ஹன் சீனர்கள் எனப்படும் இனக்குழுமத்தினர் 40 விழுக்காட்டினர் இருக்கின்றார்கள். இவர்களிடையே அடிக்கடி மோதல்கள் நடக்கும். சீனாவில் உள்ள உய்குர் இனக்குழுமத்தினரின் மொத்த மக்கள் தொகை சுமார் ஒரு கோடியாகும். இவர்களில் பெரும்பாலோனவர்கள் சின் ஜியாங் பிராந்தியத்தில் வசிக்கின்றார்கள். சீன தேசம் எங்கும் இவர்களில் பலர் உணவகங்கள் நடத்துகின்றனர். இவர்களின் கெபாப் சீனாவில் பிரபலம். உய்குர் இனத்தின் வரலாறு கிறிஸ்த்துவுக்குப் பின்னர் ஆறாம் நூற்றாண்டில் ஆரம்பமாகின்றது. சீனாவின் வட மேற்கும் பிராந்தியத்திலும் மங்கோலியாவின் தெற்குப் பிராந்தியத்திலும் இவர்கள் ஆட்சி செய்து வந்தனர். இப்பிராந்தியம் கோபி பாலைவனம் என அழைக்கப்படும். தற்போது அது சின் ஜியாங் பிராந்தியம் என அழைக்கப்படுகின்றது. உய்குர் இனத்தின் அரசு சீனர்களின் யிங் அரசகுலத்தினரால் 13-ம் நூற்றாண்டு தோற்கடிக்கப்பட்டது. பின்னர் உய்குர் மக்கள் வாழும் பிராந்தியம் சீனாவின் அரசுக்குக் கப்பம் செலுத்தும் ஒரு பிராந்தியமாக இருந்தது. பின்னர் 1884-ம் ஆண்டு சீனாவின் ஒரு மாகாணமாக அது ஆக்கப்பட்டது. 1928-ம் ஆண்டு சின் ஜியாங்க் மாகாணத்தின் சீன ஆளுனர் கொல்லப்பட்டார். பின்னர் அங்கு பிரிவினைக் கோரிக்கை வலுத்து 1933-ம் ஆண்டு நவம்பர் மாதம் துருக்கிஸ்த்தான் என்னும் தனிநாடு பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால் அது மூன்று மாதங்கள் மட்டுமே நீடித்தது. பிரிவினைவாத மோதல்கல் 1949-ம் ஆண்டு வரை நீடித்தது. பின்னர் மா சே துங்கின் செம்படையிடம் உய்குர் இனத்தவர் சரணடைந்தனர். 1955-ம் ஆண்டு சீனப் பொதுவுடமை ஆட்சியாளர்கள் சின் ஜியாங் மாகாணத்தை சீன அரசின்கீழ் ஒரு தன்னாட்சியுள்ள பிராந்தியம் ஆக்கினர். ஆனாலும் உய்குர் இனத்தனவர்களிடையே ஒரு இசுலாமியக் குடியரசு என்பது ஒரு தணியாத தாகமாகவே இருந்தது. 1967-ம் ஆண்டு கிழக்கு துருக்கிஸ்த்தான் புரட்சிக் கட்சி உருவாக்கபப்ட்டது. அதன் பின்னர் 2009-ம் ஆண்டு வரை அடிக்கடி வன்முறைகள் நடந்தன.

2009-ம் ஆண்டின் பின்னர் அமைதியாக இருந்த சின் ஜியாங் பிராந்தியம் 2013-ம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து தீவிரவாதத் தாக்குதளால் அமைதி இழந்துள்ளது. முதலாவது தாக்குதல் உறும்கி நகரத் தொடரூந்து நிலையத்தில் ஏப்ரல் மாதம் 30-ம் திகதி நடந்தது. இதில் கத்திகளும் கைக்குண்டுகளும் பாவிக்கப்பட்டு முன்று பேர் கொல்லப்பட்டனர் 79 பேர் காயமடைந்தனர். பிரச்சனை மீண்டும் தொடங்கியமைக்கான  காரணங்கள்:

1. சின் ஜீயாங்க் பிராந்தியத்தில் சீன அரசு திட்டமிட்டு சீனர்களை குடியேற்றி வருகின்றது.
2 உய்குர் மொழியை சீனா திட்டமிட்டு அழிக்கின்றது. பல உய்குர் மொழி ஆசிரியர்களை சீனா வேண்டுமென்றே பதவி நீக்கம் செய்துள்ளது.
3. உய்குர் இனப் பெண்கள் முக்காடு அணிவதையும் ஆண்கள் தாடி வளர்ப்பதையும் சீனா தடைசெய்துள்ளது
4. தற்போதைய சீன அதிபர் சீ ஜின்பிங் உய்குர் இன மக்களின் மீதான இரும்புப் பிடியை இறுக்கியுள்ளார். அங்குள்ள தீவிரவாதிகள் எலிகளைப் போல் அடித்துக் கொல்லப்படவேண்டும் என சீனர்கள் நினைக்கிறார்கள்.

Wednesday, 21 May 2014

மோடியும் மாநிலங்களவையும்(ராஜ்ய சபா)

பச்சை அம்புகள் தேர்ந்து எடுக்கப்படுவதைக் குறிக்கும்..
இந்திய மக்கள் இந்தியப் பெரு முதலாளிகளின் நலன்களை யார் பாதுகாப்பது என்பது பற்றி தேர்தல் மூலம் முடிவெடுக்கும் அதிகாரம் உடையவர்கள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களாட்சி முறைமையிலான தேர்தல் என்னும் பெயரில் இந்திய மக்கள் புது டில்லியில் உள்ள மக்களவைக்கும் 28 மாநிலங்களில் உள்ள் சட்ட சபைகளுக்கும்  உறுப்பினர்களைத் தேர்ந்து எடுப்பார்கள்.தேர்தல் முடிவுகளை கட்சிகள் செய்யும் பரப்புரைகள் முடிவு செய்யும். பரப்புரையின் வலுவும் திறனும் கட்சிகளுக்கு இந்தியப் பெரு முதலாளிகளிடமிருந்து கிடைக்கும் பணத்தால் நிர்ணயிக்கப்படும்.

இந்திய ஆட்சி  அதன் குடியரசுத் தலைவரிடமும், அதன் பாராளமன்றத்தின் இரு அவைகளான லோக் சபா எனப்படும் மக்களவையிடமும், ராஜ்ய சபா எனப்படும் மாநிலங்களவையிடமும் இருக்கின்றது. மக்களவையின் 543 உறுப்பினர்களை மக்கள் நேரடியான வாக்களிப்பின் மூலம் தேர்ந்து எடுப்பார்கள். தற்போது மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சியும் அதனுடன் கூட்டுச் சேர்ந்த கட்சிகளுமாக 335 உறுப்பினர்களை மக்கள் தேர்ந்து எடுத்துள்ளனர். பரப்புரைக்கு முப்பதினாயிரம் கோடி ரூபாக்கள் செலவிட்டதாகச் சொல்லப்படுகின்றது.

250 உறுப்பினர்களைக் கொண்டது மாநிலங்களவை. இதில் 238 உறுப்பினர்களை மாநில சட்ட சபை உறுப்பினர்கள் தேர்ந்து எடுப்பார்கள். மிகுதி 12 பேரையும் இந்தியக் குடியரசுத் தலைவர் நியமிப்பார். இதற்கு  இலக்கியம், கலை, விளையாட்டு போன்ற துறைகளில் இருந்து ஆட்களைத் தேர்ந்து எடுப்பது வழமை. கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரையும் மாநிலங்களவை உறுப்பினராக நியமித்துள்ளார்கள்.

இந்தியக் குடியரசுத் தலைவரை மாநிலங்களின் சட்ட சபை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்து எடுப்பார்கள்.

இந்தியாவில் பொதுவாக ஒரு சட்டம் நிறைவேற்றப் பட வேண்டுமாயின் பொதுவாக அது மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டு அதில் இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கையொப்பம் இடவேண்டும்.  புதிதாக  இந்தியத் தலைமை அமைச்சரான நரேந்திர மோடிக்கு இப்போது உள்ள பிரச்சனை இது தான். முதலாவது இந்தியக் குடியரசுத் தலைவர் காங்கிரசுக் கட்சியில் இருந்து வந்தவர். இரண்டாவது தற்போது 245 உறுப்பினர்களைக் (5 பேர் மணடியைப் போட்டுவிட்டனராம் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கலாம்) கொண்ட மாநிலங்களவையில் முக்கிய கட்சிகளின் உறுப்பினர்களின் விபரம் வருமாறு:

காங்கிரசுக் கட்சி                        --------------------------------- 68
பாரதிய ஜனதாக் கட்சி          ---------------------------------   42
ஜெயலலிதாவின் அதிமுக ---------------------------------  10
மம்தா பனர்ஜீயின் திரிணாமுல் காங்கிரசு---------------12
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ----------                  14
முலாயம் சிங்கின் சமாஜவாதக் கட்சி-------------- ----   9
 ஒரிசா நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா---------------- 6
தெலுங்கு தேசம் -------------------------------------------------6
பொதுவுடமைக் கட்சி (CPI) -----------------------------------2  
பொதுவுடமைக் கட்சி (மக்ஸியம்) (CPI(M)----------------9
மிகுதி பல்வேறுபட்ட மாநிலக் கட்சிகளின் உறுப்பினர்களாகும்.

இதுவரைகாலமும் காங்கிரசுக் கட்சி பாஜகாவின் ஆதரவுடனும் சில சட்டங்களை நிறைவேற்றியது. உதாரணமாக தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்கும் சட்டம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட வேண்டியது என்ற படியால் பாஜகவின் ஆதரவுடன் அச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. போதிய ஆதரவு இல்லாததால் பல சட்ட மூலங்கள் இப்போதும் நிலுவையில் உள்ளன.     காங்கிரசிற்கும் அதன் கூட்டணிகளுக்கும் மொத்தமாக 102 உறுப்பினர்கள் மாநிலங்களவையில் உண்டு.

எல்லாச் சட்டங்களுக்கும் மாநிலங்களவையின் ஒப்புதல் தேவையில்லை. வரவு செலவுத் திட்டம உட்பட்ட நிதி தொடர்பான சட்டங்களை மக்களவை நிறைவேற்றி விட்டு மாநிலங்களவைக்கு அவற்றை அனுப்பும். மாநிலங்களவை அவற்றை நிராகரிக்க முடியாது. அதில் மாற்றம் செய்யும் படி வேண்டுதல் விடுக்கலாம். அந்த மாற்றங்களின்றி மக்களவை அவற்றை நிறைவேற்றலாம்.

தற்போது உள்ள மாநிலங்களவையின் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்களின் பதவிக்காலம்  2016-ம் ஆண்டு முடிவடையும். அதன் பின்னர் அவர்களின் இடங்களுக்கு புதிதாக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அப்போதும் பெரிதான மாற்றங்கள் பாஜகவினருக்கு சாதகமாக ஏற்படாது. பாராளமன்றத் தேர்தலுடன் நடந்த ஆறு சட்டசபைகளுக்கான தேர்தலிலும் பாஜக பெரிய வெற்றி பெறவில்லை.  இதனால் மோடி பல சிறிய கட்சிகளுக்கு அமைச்சுப் பதவிகள் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

கூட்டுக் கூட்டம்
மாநிலங்களவையில் நரேந்திர மோடி ஒரு சட்ட மூலத்தை நிறைவேற்ற முடியாது என உணர்ந்தால் அவர் இரு சபைகள் கூட்டுக் கூட்டத்தில் அதை நிறைவேற்றலாம். கூட்டுக் கூட்டம் கூட்டும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உண்டு. அது மோடியின் முதல் பிரச்சனை.   அரசமைப்பு சட்டத்தின் மீது திருத்தம் கொண்டுவரும் சட்ட மூலங்களுக்கு கூட்டுக் கூட்டம் கூட்ட முடியாது. கூட்டுக் கூட்டம் கூட்டினால் அங்கு 543 மக்களவை உறுப்பினர்களும் 245 மாநிலங்களவை உறுப்பினர்களும் கூடி இருப்பார்கள். மொத்தம் 798. அதில் மோடியின் கூட்டணி கட்சியின் மக்களவை உறுப்பினர் 345 மாநிலங்களவை உறுப்பினர்கள் 42ம் சேர்ந்து மொத்தம் 386 உறுப்பினர்கள். இதற்கு செல்வி ஜெயலலிதாவின் கட்சி பெரிதும் பயன்படும்.  மக்களவையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டிய நிலை ஏற்படும் போதும் செல்வி ஜெயலலிதாவின் ஆதரவு மோடிக்குத் தேவை. மொத்தத்தில் அம்மா காட்டில் மழைதான். அந்த சொத்துக் குவிப்பு வழக்கு!!!!!

Tuesday, 20 May 2014

சீனப் படைத்துறை அதிகாரிகள் மீது அமெரிக்கா இணையவெளித் திருட்டுக் குற்றச்சாட்டு

உலக வரலாறறில் முதற்றடவையாக ஒரு நாடு இன்னொரு நாட்டுப் படைத்துறை அதிகாரிகள்மீது இணையவெளித் திருட்டுக் குற்றச்ச்சாட்டுச் செய்துள்ளது.

ஐக்கிய அமெரிக்க அரசின் சட்டமா அதிபர் எரிக் ஹோல்டர் ஐந்து சீனப் படைத் துறை அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார். Wang Dong, Sun Kailiang, Wen Xinyu, Huang Zhenyu, Gu Chunhui ஆகியோர் மீது குற்றம் சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் செயற்படும் படைத்துறைப் பிரிவு ஒன்றைச் சேர்ந்த இந்த அதிகாரிகள் அமெரிக்காவின் அணு ஆராய்ச்சி, உருக்குத் தொழில்நுட்பம், சூரியவலுத் தொழில்நுட்பம் போன்றவை தொடர்பான இரகசியங்களை சீன அதிகாரிகள் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களின் அணியானது பிரிவு 61398 என அழைக்கப்படுகிறது.

Westinghouse Electric, Alcoa, Allegheny Technologies, U.S. Steel, the United Steelworkers union, and SolarWorld ஆகிய நிறுவங்களின் கணனிகளள இணைய வெளியூடாக ஊடுருவி இரகசியங்களை 2006-ம் ஆண்டில் இருநநது  சீனர்கள் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கணனியில் ஊழல் செய்யச் சதி செய்தது, வர்த்தக நலனுக்காக அனுமதியின்றிக் கணனிக்குள் நுழைந்தது, கணனகளின் மாற்றீட்டுக் குறியீடுகளையும் கட்டளைகளையும் சிதைத்தது, அத்துமீறிய அடையாளத் திருட்டு, வர்த்தக இரகசியங்களைத் திருடியமை போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டுள்ளன. குற்றம் சுமத்தைப்பட்டவர்களுக்கு 15 ஆண்டுச் சிறைத்தண்டனை வழங்கப்படலாம். அதற்கு அமெரிக்க அரசு சீன அரசிடம் இவர்களைக் கைது செய்து அனுப்பும்படி வேண்டுகோள் விடுக்க வேண்டும். அதை சீன அரசு ஏற்றுக்கொண்டு இவர்களைக் கைது செய்து அமெரிக்காவிற்கு அனுப்ப வேண்டும். இவர்கள் அமெரிக்க நிறுவனங்கள், வர்த்தகக் கூட்டமைப்புக்கள், தொழிலாளர் ஒன்றியங்கள் ஆகியவற்றின் காணனிகளை ஊடுருவித் தகவல்களைத் திருடி அவற்றைச் சீன அரச உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளன.

அமெரிக்கா வேண்டுமென்றே திரிக்கப்பட்ட குற்றச்சாட்டை வைப்பதாக சீனா பதிலுக்குக் குற்றம் சாட்டுகிறது.  உலகிலேயே இணையவெளி ஊடுருவிகளால் அதிகப் பாதிக்கப்படும் நாடு சீனா என்கின்றது சீனா. ஆனால் அமெரிக்க சட்ட மாஅதிபர் தமது நாடு வர்த்தக ரீதியான உளவு வேலைகளில் ஈடுபடுவதுமில்லை அதை ஊக்குவிப்பதுமில்லை என்றார்.  சீனாவில் இருந்து செய்யப்படும் இணைய வெளி உளவு வேலைகள் சீன நிறுவனங்களுக்கு உலகச் சந்தையில் சாதமான நிலையை உருவாக்கும் நோக்குடன் செய்யபப்டுவதாகவும் அவற்றால் அமெரிக்க உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிக இழப்பீடு ஏற்படுவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது.

ஆனால் எட்வேர்ட் ஸ்நோடன் வெளிக் கொண்டுவந்த இரகசியங்கள் அமெரிக்காவை உலகிலேயே மோசமான இணையவெளி உளவாளியாகக் காட்டிவிட்டது.     இதை நீங்கள் வாசிக்கும் போது அல்லது அதைத் தொடர்ந்து சீனாவும் ஒரு குற்றப்பத்திரிகையை வெளிவிடலாம.

சென்ற ஆண்டு அமெரிக்காவின் Fire Eye என்னும் நிறுவனத்தின்  Mandiant   பிரிவு சீனாவின் இணையவெளி ஊடுருவிகள் எனக் குற்றம் சாட்டப்படும் அணி 61398 பற்றி ஒரு அறிக்கை சமர்ப்பித்திருந்தது.

வர்த்தக நிறுவனங்களின் இரகசியங்களளத் திருடுவதால் ஆண்டு ஒன்றிற்கு அமெரிக்காவில் முன்னூறு பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்படுகீன்றன.


Sunday, 18 May 2014

எரிபொருள் அரசியலின் கருப்பொருளும் அமெரிக்காவின் கரிப்பொருளும்

கடந்த நூறு ஆண்டுகளாக எரிபொருள் பிரச்சனை பெரும் பிரச்சனையாகத் தொடர்கின்றது. மசகு எண்ணெய்க்கான மாற்று வழிக்கான தேடலும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. எண்ணெய் இன்றி வயல்கள் உழ முடியாது. விளைபொருட்களை எடுத்துச் செல்ல முடியாது. தொழிற்சாலகளில் பொறிகள் இயங்காது. மக்கள் போக்குவரத்துச் செய்ய முடியாது. இது எங்கும் தேவைப்படுவது. தட்டுப்பாடானது. மாற்றீடு பெருமளவில் இல்லாதது. உலகம் உடல் என்றால் எரிபொருள் குருதி போன்றது. அதன் தங்கு தடையற்ற ஓட்டம் உலகத்திற்கு அவசியம்.

எரிபொருள் பாதுகாப்புக் கையிருப்பு
அமெரிக்காவில் மட்டும் நாளொன்றிற்கு இரண்டு கோடி பீப்பாய் எண்ணெய்கள் பாவிக்கப்படுகின்றன. உலகில் எண்ணெயின் இருப்பு, உற்பத்தி, விநியோகம் ஆகியவை முக்கியமானதாகும். ஐக்கிய அமெரிக்கா, ஒஸ்ரேலியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுடன் மேலும் 24 ஐரோப்பிய நாடுகள் இணைந்து உலக எரிபொருள் திட்டம் ஒன்றை உருவாக்கி 90 நாட்களுக்குத் தேவையான எரிபொரளை எப்போதும் ஒரு பாதுகாப்புக் கையிருப்பாக வைத்திருக்க ஒத்துக் கொன்டன. மற்ற ஆசிய நாடுகள் இதில் இணையவில்லை. சீனா தனக்கென ஒரு கையிருப்பை ஏற்படுத்திக் கொன்டது. வேகமாக வளரும் இந்தியா இதில் கவனம் செலுத்தவில்லை.

எரிபொருள் இல்லாமல் வல்லரசுகள் இல்லை. பன்னாட்டு வாணிபமும் இல்லை.1900ம் ஆண்டு உலக எரிபொருள் தேவையின் 55விழுக்காட்டை நிலக்கரி உற்பத்தி திருப்தி செய்தது. எண்ணெயும் எரிவாயுவும் அப்போது 3 விழுக்காடு பாவனைதான். நூறு ஆண்டுகள் கழித்து உலக எரிபொருள் பாவனையில் நிலக்கரி 25விழுக்காடு, இயற்கை வாயு 23 விழுக்காடு, எண்ணெய் நாற்பது விழுக்காடு. 2000ம் ஆன்டு நாளொன்றுக்கு ஏழரைக்கோடி பீப்பாய்களாக இருந்த உலக எண்ணெய்க் கொள்வனவு 2030ம் ஆண்டு இருமடங்காகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எரிபொருள் உற்பத்திக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து.
தற்போது உலகெங்கும் உள்ள அரசியல் பிரச்சனைகளால் நாளொன்றிற்கு முப்பத்தைந்து இலட்சம் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டின் நடுப்பகுதியில் லிபியாவின் எண்ணெய் உற்பத்தியில் எண்பது விழுக்காடு பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானிற்கு எதிரான பொருளாதாரத் தடையால் ஈரானின் பெரும்பகுதி எண்ணெய் சந்தைக்குப் போவதில்லை. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி நாளொன்றிகு 15 இலட்சம் பீப்பாய்களால் குறைந்துள்ளது. நைஜீரியாவில் உள்ள அரசியல் பிரச்சனைகளாலும் அங்கு நடக்கும் திருட்டுக்களாலும் நாளொன்றிற்கு மூன்று இலட்சம் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிக அளவு எண்ணெய் இருப்பைக் கொண்ட வெனிசுவேலாவில் எண்ணெய் உற்பத்தியில் சரியான முதலீடு இன்றி சரியாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. உலகிலேயே அதிக அளவு எரிவாயுவையும் எண்ணெயையும் உற்பத்தி செய்யும் இரசியாவிற்கு எதிராக ஈரானில் மீது விதிக்கப்பட்டது போன்ற மிக இறுக்கமான பொருளாதாரத் தடையை ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் விதிக்கும் அபாயம் உண்டு.

எண்ணெய் விநியோகம்: கவலைப்படும் சீனாவும் கருத்தில் கொள்ளாத இந்தியாவும்!
உலகின் எரிபொருள் விநியோகம் தடையின்றி நடப்பதற்கு பலநாடுகளும் தமது பாதுகாப்புச் செலவில் பெரும்பகுதியை ஒதுக்கியுள்ளன. உலகிலேயே அதிக அளவு கடற்படைக்கப்பல்கள் நடமாடும் பகுதியாக மத்திய தரைக்கடல் இருக்கின்றது ஐரோப்பிய ஒன்றியமும் ஐக்கிய அமெரிக்காவும் தமக்கான எரிபொருள் விநியோகம் தடையின்றி நடப்பதை உறுதி செய்துள்ளன. உலகிலேயே எரிபொருள் விநியோகத் தடையால் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளாக ஆசிய நாடுகள் இருக்கின்றன. எரிபொருள் பாவனையைப் பொறுத்த வரை சீனா உலகிலேயே இரண்டாவது பெரிய நாடாகும். சீனாவின் இருப்பிற்கு தடையற்ற எரி பொருள் வழங்கல் முக்கிய மாகும். சீனா தனக்கான எரிபொருள் வழங்கு பாதையை பல மாற்றீடு வழிகள் மூலம் பூர்த்தி செய்ய முயற்சிக்கிறது. மலாக்கா நீரிணை, ஹோமஸ் நீரிணை, செங்கடல் ஆகிய கடற்பிராந்தியங்களில் வைத்து சீனாவிற்கான எரிபொருள் விநியோகங்கள் தடை செய்யப் படலாம். இதற்கு மாற்றீடாக சீனா மியன்மார்(பர்மா) ஊடாக ஒரு தரைவழி எரிபொருள் விநியோகம் செய்யும் வழியைத் திறக்க முயல்கிறது. அடுத்த மாற்றீடாக பாக்கிஸ்த்தானின் குவாடர் துறைமுகத்தில் இருந்து பாக்கிஸ்த்தானூடாக ஒரு தரைவழி எரிபொருள் விநியோகத்தை உருவாக்கியுள்ளது. இந்த பாக்கிஸ்தானூடான விநியோகத்தில் இன்னும் ஒரு மாற்றீடாக ஆப்கானிஸ்தானூடான இன்னும் ஓர் எரிபொருள் விநியோகப் பாதையை சீனா உருவாக்க விரும்புகிறது. ஆப்கானிஸ்த்தானின் அமு தர்யா பள்ளத்தாக்கில் எரிபொருள் ஆய்வுப் பணியையும் சீனாவின் China National Petroleum Corp நிறுவனம் செய்கிறது.  சீனா பொருளாதார ரீதியில் ஆப்கானைச் சுரண்டுவதை அமெரிக்கா விரும்புகிறது. சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தால் அது அமெரிக்காவிற்கும் நன்மையாகும். சீனா அமெரிக்காவின் மூன்றாவது பெரிய சந்தையாகும். இதனால் சீனப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தால் அமெரிக்காவின் உற்பத்தித் துறை, விவசாயத் துறை, சேவைத் துறை ஆகியவற்றின் சீனாவிற்கான ஏற்றுமதி அதிகரிக்கும். ஆசியாவிற்கான எரிபொருள் விநியோகத்தில் 40 விழுக்காடு ஹோமஸ் நீரிணையூடாக நடைபெறுகின்றது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அமெரிக்கா தனது ஐந்தாவது கடற்படைப் பிரிவை அங்கு நிலைகொள்ளச் செய்வதுடன் பல நாடுகளுடன் இணைந்து அங்கு அடிக்கடி படை ஒத்திகையும் செய்யும். தனக்கான எரிபொருள் தொடர் விநியோகத்தை உறுதி செய்ய இந்தியா எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

எண்ணெய் விலையைச்சரிக்கும் அமெரிக்காவின் கரிப்பொருள்
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து உலக எரிபொருள் விலையில் சீனாவினதும் இந்தியாவினதும் கொள்வனவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. 2008ம் ஆண்டு உருவான உலகப் பொருளாதார நெருக்கடிக்கு இதுவும் ஒரு காரணியாக அமைந்தது. ஈரான், இரசியா, நைஜீரியா, வெனிசுவேலா, ஆகிய நாடுகளில் பிரச்சனை ஏற்பட்ட போதும் அண்மைக்காலங்களாக எரிபொருள் விலை வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக உறுதியாக இருந்த எண்ணெய் விலை 2014ம் ஆண்டு ஏப்ரம் மாதம் ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 110 டொலர்களாக இருந்து  மே மாதம் 6ம் திகதி 107 டொலர்களாகக் குறைந்தது. இது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. இதன் பின்னணிச் சூத்திரதாரியாக அமெரிக்கா இருக்கின்றது. 2011ம் ஆண்டு அரபு வசந்தம் ஆரம்பித்ததில் இருந்து அமெரிக்கா தன்னிடம் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஷேல் என்னும் திண்ம எரிவாயு உற்பத்தியையும் ஏற்றுமதியையும் சடுதியாக அதிகரித்தது.  அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள ஷேல் என்னும் கரிப்பொருள் இப்போது உலகச் சந்தையில் எரி பொருள் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக எரிபொருள் விலையை அமெரிக்கா உலகச் சந்தையில் உறுதியாக வைத்திருந்தது. சீனாவினதும் இந்தியாவினதும் அதிகரித்த எரிபொருள் கொள்வனவால் உலகில் எரிபொருள் விலை அதிகரித்த போது இரசியாவே பெரிதும் பயனடைந்தது. தன் ஏற்றுமதி வருமானத்தை வைத்து உலக அரங்கில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்கும் வலிமையை இரசியா பெற்றது. அது உக்ரேனில் வாலாட்டத் தொடங்கியவுடன் அமெரிக்கா தனது காய்களை நகர்தத் தொடங்கியது. ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 120 டொலர்களுக்கு மேல் இருப்பது இரசியாவிற்குப் பெரிதும் வாய்ப்பாகும். இதை விழுத்த அமெரிக்காவும் கனடாவும் தமது திண்ம எரிவாயு உற்பத்தியை அதிகரித்தன. உக்ரேனில் நிலைமை உக்கிரமடைந்தால் உலகச் சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் ஏறும் அபாயம் உண்டு. பின்னர் எண்ணெய் விலை 70 டொலர்கள்வரை குறையலாம். இது இரசியாவின் முதுகெலும்பிற்கே ஆபத்தாக அமையலாம்.

என்ன இந்த ஷேல் எரிவாயு?
ஷேல் எரிவாயு என்பது ஷேல் எனப்படும்  களிமண் பாறைகளிடையே காணப்படும் (பெரும்பாலும் மீதேன்) வாயுவாகும். மற்ற வாயுக்கள் துளைக்கக் கூடிய பாறைகளுக்குள் இருந்து எடுக்கப்படும் வாயுவாகும். ஷேல் வாயு துளைக்கக் கடினமான பாறைகளுக்கிடையில் இருக்கும். நீர் மூலம் துளையிடல் (hydraulic fracturing) என்னும் முறைமையைப் பயன்படுத்தி பாறைகளைத் துளைத்து ஷேல் வாயு அகழ்ந்து எடுக்கப்படும். 

ஷேல் வாயு அரசியல்
இரசியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு உக்ரேனூடாக செய்யப்படும் எரிவாயு விநியோகத்தைக் குழப்பி ஐரோப்பாவிற்கு அமெரிக்காவில் இருந்து ஷேல் வாயுவை ஐரோப்பாவிற்கு விநியோகிக்க அமெரிக்க ஷேல் வாயு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் முயல்கின்றன. இதனால் உருவானதுதான் உக்ரேன் பிரச்சனை என்கின்றது இரசிய ஊடகம் ஒன்று. அமெரிக்கத் துணைக் குடியரசுத் தலைவரின் மகன் ஹண்டர் பிடன் உக்ரேனின் தனியார் எரிவாயு நிறுவனமான பரிஸ்மா ஹோல்டிங் இன்   இயக்குனர் சபைக்கு அண்மையில் நியமிக்கப்பட்டதை ஆதாரமாக அந்த இரசிய ஊடகம் குறிப்பிடுகின்றது. அத்துடன் துணை அதிபர் ஹண்டர் பிடனுக்கும் அமெரிக்க அரசத் துறைச் செயலர் ஜோன் கெரியின் பெறா மகனுக்கும் உள்ள தொழில் முறைத் தொடர்புகளை அம்பலப்படுத்தியுள்ளது பிரித்தானிய கார்டியன் பத்திரிகை. இரசியாவிற்கும் உக்ரேனிற்கும் இடையிலான பிரச்சனையால் உக்ரேனில் எரிபொருள் விலை கடும் அதிகரிப்பைக் கண்டது. இதனால் உள் நாட்டில் எரிபொருள் வாயு உற்பத்தி செய்யும்  பரிஸ்மா ஹோல்டிங் நிறுவனம் பெரும் இலாபம் ஈட்டுகின்றது.

மூச்சாகி நின்றோர்க்கு வீச்சாகி நிற்போம்

இரத்த ஆறு கடந்து  
கண்ணீர்க் கடல் நீந்தி
தீயாகத் தீயில் கருகி
துரோகச் சூறவளியில் சுழன்று
இளமை துறந்து
உறவு இழந்து
குடும்ப இனிமை இழந்து
பள்ளி பிரிந்து
நட்பு மறந்து
விடுதலை வேள்வியில்
மூச்சாகி நின்றோர்க்கு
வீச்சாகி நிற்போம்
தொடர்வோம் அவர் பணி

கத்தும் கடல் அலையாடி
வேகப் படகுகள் பல ஓட்டி
சுற்றும் பகை விரட்டி
தாயக் கடல் தமிழன் ஆள
விடுதலை வேள்வியில்
மூச்சாகி நின்றோர்க்கு
வீச்சாகி நிற்போம்
தொடர்வோம் அவர் பணி

குண்டு மழையிடை முன்னோடி
செங்குருதிப் புனலாடி
பிஞ்சுக் கால்களுடன்
கட்டாந்தரை நடந்து
தாயக மண் காக்க
விடுதலை வேள்வியில்
மூச்சாகி நின்றோர்க்கு
வீச்சாகி நிற்போம்
தொடர்வோம் அவர் பணி

துணையென வந்து
கால்வாரிய 
துரோகிகள் மத்தியிலே
காக்கவென வந்து 
கழுத்தறுத்த இந்தியாவிற்கு
எதிராகக் களமாடி
இனமானம் காக்க
விடுதலை வேள்வியில்
மூச்சாகி நின்றோர்க்கு
வீச்சாகி நிற்போம்
தொடர்வோம் அவர் பணி

சாட்சியமில்லா வதைகள்
சரணடையவந்தோர் கொலைகள்
போரில் தப்பியோர் உயிருடன் புதையல்
இத்தனை கொடுமைகள் மத்தியில்
பிஞ்சுத்தோள் கொடுது
தாயக விடுதலைக்காக
மூச்சாகி நின்றோர்க்கு
வீச்சாகி நிற்போம்
தொடர்வோம் அவர் பணி

பல கோடி செலவழித்து
பல்லாயிரம் சாகடித்து
பாலர்களைச் சிதறடித்து
பாவியர் செய்த போரில்
உணவின்றி உறக்கமின்றி
உரிய மருந்தின்றி
தேசிய உணர்வோடு களமாடி
மூச்சாகி நின்றோர்க்கு
வீச்சாகி நிற்போம்
தொடர்வோம் அவர் பணி

பூகம்பத்துள் பூவென
சூறாவளிக்குள் சுடரென
புயலிடைப் பறவையேன
துயரங்கள் பல சுமந்து
தம் தாகம் என்றும்
தமிழீழத் தாயகம் என முழங்கி
மூச்சாகி நின்றோர்க்கு
வீச்சாகி நிற்போம்
தொடர்வோம் அவர் பணி


யாரோ எவனோ தன் 
ஒரு தாலி அறுத்தமைக்கு
ஒரு இலட்சம் தாலி பறித்தெடுத்த
சேலையணிந்த இத்தாலி முசோலினியின்
சதியை எதிர்த்து எமக்காக
மூச்சாகி நின்றோர்க்கு
வீச்சாகி நிற்போம்
தொடர்வோம் அவர் பணி

சைட்டிஸ்ஸுக்கும் வழியில்லாதவன்
விஸ்கிக்கு ஆசைப்பட்டதுபோல்
இறந்தவர்க்கு அழக்கூட உரிமையில்லா
தேசியக் கூட்டமைப்பு
குடியரசு வேட்பாளர் 
விக்கி ஐயா என்கின்றது
இந்த மாயவாதிகளை நம்பாமல்
மூச்சாகி நின்றோர்க்கு
வீச்சாகி நிற்போம்
தொடர்வோம் அவர் பணி

கைப்பேசிக்காரர்கள் கைகளில் ஊடகங்கள் இப்போ
பூடகமாகப் பொய்யுரைக்கும் ஊடகங்களை நம்பாமல்
தாயகம் தேசியம் தன்னாட்சி
என்னும் மும்மணிக்காய் 
மூச்சாகி நின்ற கணமணிகளுக்கு
வீச்சாகி நிற்போம்
தொடர்வோம் அவர் பணி

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...