Saturday, 8 March 2014

வா தமிழா வா ஜெனீவா நோக்கி


நவி பிள்ளை நன்றாய் சீன் போட
டெவிட் கமரூன் ஸ்டண்ட் அடிக்க
சனல் 4 காரன் பிலிம் காட்டினான்
தணிக்கை சபையானது இந்தியா

ஜெனிவாவில் அரங்கேறுகிறது - மீண்டும்
தமிழன் முதுகில் குத்து
தமிழா இன்னும் உன் முதுகில்
குத்த வாங்க இடமுண்டா
விதி என நீ நினைத்து வீழ்திடல் முறையோ
சதியினை முறிக்க நீதியினைக் கேட்க

வா தமிழா வா ஜெனீவா நோக்கி - நீ
வா
தமிழா வா ஜெனீவா நோக்கி

 
அமெரிக்கத் தயாரிப்பாளர்களை
நம்பிட வேண்டவே வேண்டாம்
எம் போராட்டத்தின்
விநியோக உரிமை எம்முடையதே
உலகெங்கும் வாழ் தமிழர்கள்
எல்லோரும் ஒன்றாய் இணைவோம்
டி ராஜேந்தர் போலாவோம்
எம் போராட்டத்தின் கதையும் நாமே
கதாநாயகர்களும் நாமே பின்னணியும் நாமே
இசையும் நாமே இயக்கமும் நாமே
எதையும் அந்நியர் கையில்
கொடுத்திட வேண்டாம்
விதியென எண்ணி வீழ்திடல் தகுமோ
ஒன்றாகிச் சதியினை வெல்லும் நேரமித

வா தமிழா வா ஜெனீவா நோக்கி - நீ
வா
தமிழா வா ஜெனீவா நோக்கி


 ஓராண்டுக்குள் விசாரியுங்கள் 
உள்ளக விசாரணை செய்யுங்கள்
ஓராண்டுக்குள் விசாரியுங்கள்
என வஞ்சகமாக ஒவ்வொரு ஆண்டும்
தீர்மானம் போடுகிறார்கள்
பிள்ளையார் திருமணம்தான்
போர்க்குற்ற விசாரணை
என்பது
விதி அது என நினைத்து வீழ்ந்திட வேண்டாம்
ஒன்றாகிச் சதி வெல்ல வேண்டிய தருணமிது

வா தமிழா வா ஜெனீவா நோக்கி - நீ
வா
தமிழா வா ஜெனீவா நோக்கி 

 
எமது போரட்டத்தின் பில்டிங் தான் சரிந்தது
பேஸ்மென்ற் என்றும் ஸ்ரோங் என உணர்வாய்
நடந்தது எல்லாம் போன வாரம்
இது இந்த வாரம் நாம் எழவேண்டிய வாரம்
இந்தியா எம்மை உசுப்பேத்தி உசுப்பேத்தி
கட்டத்துரையாக மாறி  ரணகளமாக்கிவிட்டது
எம் போராட்ட வலிமையை
விதி அது என நினைத்து வீழ்ந்திட வேண்டாம்
ஒன்றாகிச் சதி வெல்ல வேண்டிய தருணமிது

வா தமிழா வா ஜெனீவா நோக்கி - நீ
வா
தமிழா வா ஜெனீவா நோக்கி


ஈழத்தமிழ் அரசியல் வாதிகளிடையே போட்டி
யார் அதிகம் கெடுப்பதென்று போட்டியோ போட்டி
புலம் பெயர் தமிழ் அமைப்புக்களிடையே போட்டி
எத்தனை கூறுகளாகப் பிரிவது என்று
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் போட்டி
இனக்கொலைக்கு யார் உதவுவதென்பதில்
இந்து நாடுகளுக்கும் இசுலாமியநாடுகளுக்கும் போட்டி  

ஈழக் கோவில்களை அழிப்பதற்கு யார் உதவுவது என்பதில்
இப்போட்டிகள் எல்லாம் விதி என நினைத்து வீழ்திடல் தகுமோ
தமிழா வீழ்ந்திடல் தகுமோ
கரம் கொடுத்து விடுதலை தேர் இழுக்க ஒன்றாகிச்
சதி வெல்லும் நேரமிது தமிழா சதி வெல்லும் நேரமிது
 
வா தமிழா வா ஜெனீவா நோக்கி - நீ
வா
தமிழா வா ஜெனீவா நோக்கி


ஜெனீவாவில் ஏதும் கிடைக்கப் போவதில்லை
என்பது உணமையே உண்மையே - தமிழா
உண்மையிலும் உண்மையே
ஆனாலும் இந்த உலகத்தின் 
 ஒவ்வொரு மூலையிலும்
நீதி கேட்டு எம் குரல் ஒலிக்கட்டும் - அதனால்
வா தமிழா வா ஜெனீவா நோக்கி - நீ
வா
தமிழா வா ஜெனீவா நோக்கி

Friday, 7 March 2014

அமெரிக்காவின் உளவுத்துறை சிஐஏஇற்கு உக்ரேனிலும் தோல்வி

உலகெங்கும் தன் உளவு நடவடிக்கைகளையும் சதி நடவடிக்கைகளையும் மோசமான பயங்கரவாதச் செயல்களையும் வெற்றிகரமாகச் செய்யும் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ எனப்படும் நடுவண் உளவு முகவரகம் இன்னும் ஒரு தோல்வியை உக்ரேனில் சந்தித்துள்ளது.

உக்ரேனில் ஆட்சிக் கவிழ்ப்பில் முன்னின்று செயற்பட்டது போலந்து நாடு ஆகும். உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தால் அதிக நன்மை அடையப் போவது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்புரிமை நாடான போலந்து ஆகும். ஐக்கிய அமெரிக்கா, போலந்து, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆட்சிக் கவிழ்ப்பில் ஒன்றிணைந்து செயற்பட்டன. உக்ரேனில் இரசிய சார்பு ஆட்சியாளரைப் பதவியில் இருந்து அகற்றினால் இரசியாவின் எதிர்வினை எப்படி இருக்கும் என்பது பற்றிய தகவல்கள் அவர்களுக்கு அவசியமானதும் முக்கியமானதுமாகும். அமெரிக்க உளவுத் துறை கொடுத்த தகவல்கள் பிழையாகிப் போய்விட்டன.
சிஐஏயின் தோல்விப்பட்டியலில் மிக மோசமான தோல்வி நியூயோர்க் நகரில் இருந்த இரட்டைக் கோபுரத்தில் நடந்த் 9/11 தாக்குதலைப் பற்றி அறிய முடியாமல் போனது. ஆனால் ஒரு சதிக்கோட்பாடு (conspiracy theory) சிஐஏயிற்கு இது தெரிந்திருந்தது என்றும் இன்னொரு சதிக் கோட்பாடு சிஐஏதான் அதைச் செய்தது என்றும் சொல்கின்றது. மக்களைக் குழப்புவதற்காக சிஐஏயே இந்தச் சதிக்கோட்பாடுகளைப் பரப்பியிருக்கலாம்.

பாக்கிஸ்த்தான் அணுக்குண்டு உற்பத்தி செய்யப்போவதை  சிஐஏ அறிந்திருக்கவில்லை. இது பற்றிய சதிக்கோட்பாட்டின்படி இந்தியாவின் அணுக்குண்டு உற்பத்தியை சமநிலைப்படுத்த பாக்கிஸ்த்தானை அமெரிக்கா அணுக்குண்டு உற்பத்தி செய்ய அனுமதித்தது.

ஈராக்கிடம் பேரழிவு விளைவிக்கக் கூடிய வேதியியல் படைக்கலன்கள் இல்லை என்பதை சிஐஏ அறிந்து கொள்ள முடியாமல் போனது அதன் தோவி என்கின்றனர். ஆனால் இது சதிக்கோட்பாட்டின் உச்சம். ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்காவிற்கும் பிரித்தானியாவிற்கும் நன்கு தெரியும் அப்போதைய ஈராக் ஆட்சியாளரிடம் வேதியியல் படைக்கலன்களை இல்லை என்று.

உக்ரேனில் இரசிய சார்பு ஆட்சியாளர் விக்டன் யனுக்கோவிச்சைப்  பதவியில் இருந்து நீக்கி மேற்கு நாட்டு ஆதரவாளர்களின் கையில் உக்ரேனின் ஆட்சியை ஒப்படைத்தால் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் படைநடவடிக்கையை மேற்கொள்ள மாட்டார் என அமெரிக்க உளவுத் துறை வெள்ளை மாளிகைக்கு அறிவித்திருந்தது. ஆனால் இது பிழைத்துப் போய் உலகெங்கும் ஒரு பதட்ட நிலையையும் பங்குச் சந்தைகளிலும் பெரும் பாதிப்பையும் உக்ரேன் விவகாரம் ஏற்படுத்தியது.

அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவையின் உளவுத்துறைக்கான உப குழு இப்போது சிஐஏ பிழையான தகவலைக் கொடுத்தது எப்படி என விசாரிக்கின்றது.

Tuesday, 4 March 2014

உக்ரேனின் கிறைமியா இரசியாவிற்கு சொந்தமானதே

இரசியாவின் பொருளாதாரத்திற்கு பேரிடியாக அமைந்து விட்டது உக்ரேன் விவகாரம். இரசியாவின் பங்குச் சந்தையில் இரசிய வர்த்தக நிறுவனங்களின் பங்குகள் தமது பெறுமதியில் 34 பில்லியன்  (மூவாயிரத்து நானூறு கோடி) டொலர்களை இழந்தன. இரசிய அரசு தனது நாணயமான ரூபிளின் பெறுமதி மோசமடையாமல் இருக்கு பத்து பில்லியன் வெள்நாட்டுச் செலவாணியை இழக்க வேண்டி இருந்தது.

இரசியாவின் வட்டி வீததத்தை5.5% இல் இருந்து 7% இற்கு அதிகரிக்க வேண்டி இருந்தது. பிரித்தானியக் கார்டியன் பத்திரிகை இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனை அமெரிக்காவிற்கு முந்தி இரசிய நிதிச் சந்தை கடுமையாகத் தண்டித்து விட்டது என்கின்றது. உலகெங்கிலும் உக்ரேன் விவகாரத்தால் பங்குகள் விழ்ச்சியடைந்தன. அமெரிக்க டொலரினது பெறுமதி உயர்ந்தது. தங்கத்தின் விலை அதிகரித்தது.

இரசியாவைப் பொறுத்தவரை உக்ரேனும் அதன் ஒரு பகுதி எனச் சொல்லப்படும் கிறைமியாவும் மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்தவையாகும். உக்ரேன் இரசியாவின் எதிரிகளின் கைகளுக்குப் போனால் இரசியா ஒரு வல்லரசு என்ற நிலையை இழக்க வேண்டி வரும் என்பது படைத்துறை வல்லுனர்களின் கருத்தாகும். கிறைமியா என்பது கருங்கடலில் உக்ரேனின் கிழக்கே உள்ள ஒரு குடாநாடு ஆகும். அது உக்ரேனுடன் நிலத் தொடர்புடையது. இதன் இரண்டு மில்லியன் (இருபது இலட்சம்) மக்களில் 58 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்கள் இரசியர்களே. இரசியாவின் கருங்கடல் கடற்படைப் பிரிவு கிறிமியாவிலேயே நிலை கொண்டுள்ளது. இரசியா மத்திய தரைக் கடலிலும் மத்தியக் கிழக்கிலும் ஆதிக்கம் செலுத்துவதற்கு கிறைமியாவில் உள்ள அதன் கடற்படைத்தளம் முக்கியமான ஒன்றாகும். 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் சிதறிய போது உக்ரேன் ஒரு தனி நாடாகியது. அப்போது இரசியக் கடற்படை கிறைமியாவின் செவஸ்ரப்போல் பிராந்தியத்தில் தொடர்ந்து நிலைத்திருக்க இரசியாவும் உக்ரேனும் ஒத்துக் கொண்டன. இந்த உடன் படிக்கையின் படி கிறைமியா உக்ரேனின் ஒரு பகுதி என்பதாகும். ஆனால் வரலாற்று அடிப்படையில் பார்க்கும் போது கிறைமியா இரசியாவினுடையதே.

இரசியாவின் பிராந்தியமாக இருந்த கிறைமியாவை 1954-ம் ஆண்டு அப்பொதைய இரசிய அதிபர் நிக்கித்தா குருசேவ் உக்ரேனுடன் இணைத்தார். அவர் ஒரு உக்ரேனியர் என்பதால் இப்படிச் செய்தார்.

    1783-ம் ஆண்டு இரசியா கிறைமியாவைத் தனதாக்கியது.

    1853-ம் ஆண்டு இரசியாவிடமிருந்து கிறைமியாவைப்பறிக்க ஒட்டொமன் பேரரசு, பிரான்சு, பிரித்தானிய ஆகிய நாடுகள் கிறைமியா மீது போர் தொடுத்தன. 1853-ம் ஆண்டிலிருந்து 1856-ம் ஆண்டுவரை போர் நடந்தது. இதில் இரசியா  பத்து இலட்சம் போர் வீரர்களையும் பலி கொடுத்தது. பிரித்தானியப் படையினரில் 25,000 பேரும் பிரெஞ்சுப் படையினரில் ஒரு இலட்சம் பேரும் கொல்லப்பட்டனர். ஐரோப்பிய வரலாற்றில் இது மிக அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்திய போராகும். இறுதியில் ஒட்டொமன் பேரரசுக்கு சில விட்டுக் கொடுப்புக்களை இரசியா மேற்கொண்டு கிறைமியாவைத் தனதாக்கியது.

 1917-ம் ஆண்டு இரசியப் புரட்சியின் போது கிறைமியா ஒரு தனி நாடாகச் சிலகாலம் இருந்தது. பின்னர் இரசியப் படைத்தளமானது.

    1921-ம் ஆண்டு கிறைமியா சோவியத் ஒன்றியத்தின் ஒரு குடியரசானது. 

    1942-ம் ஆண்டு உலகப் போரின் போது ஜேர்மனி கிறைமியாவைக் கைப்பற்றியது. ஜேர்மனி கிறைமியாவைக் கைப்பற்ற ஆறு மாதங்களுக்கு மேல் எடுத்தது.

    1944-ம் ஆண்டு கிறைமியாவை சோவியத் ஒன்றியம் மீளக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து ஜேர்மனியருடன் ஒத்துழைத்தார்கள் என்பதற்காக ஜேசேப் ஸ்டாலின் கிறைமியக் குடிமக்களான டாட்டார் இசுலாமியர்கள் மூன்று இலட்சம் பேரை கிறைமியாவில் இருந்து வெளியேற்றி சோவியத்தின் வேறு பிராந்தியங்களில் குடியேற்றினார். சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் பலர் திரும்பி வந்தனர். 

    1945-ம் ஆண்டு கிறைமியா சோவியத் ஒன்றியத்தின் கீழ் ஒரு குடியரசு என்ற நிலையை நீக்கி அது சோவியத்தின் ஒரு மாகாணமாக (Crimean Oblast) மாற்றப்பட்டது.  .

    1954-ம் ஆண்டு கிறைமியாவை இரசிய அதிபர் நிக்கித்தா குருசேவ் உக்ரேனுடன் இணைத்தார். உக்ரேனியரான குருசேவ் இரசியாவிற்கு தவறிழைத்தார் என்கின்றனர் இரசியர்கள் இப்போது.

    1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் போது அப்போதைய இரசிய அதிபர் பொரிஸ் யெல்ஸ்ரின் கிறைமியாவை இரசியாவின் ஒரு பகுதியாக வைத்திருப்பார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அதை உக்ரேனுடன் இருக்க வைத்து கிறைமியாவில் இரசியக் கடற்படை தொடர்ந்து இருக்க உடன்பாடு செய்து கொண்டார்.

    1997-ம் ஆண்டு 2042-ம் ஆண்டுவரை இரசிய படைத்தளம் கிறைமியாவின் செவஸ்ரப்பொல் பிராந்தியத்தில் இருக்க உக்ரேனும் இரசியாவும் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டன. 

Monday, 3 March 2014

சீனாவிற்கு எதிரான கடலடிப் போர்க்கூட்டணி

சீனா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் தமது விமானம் தாங்கிக் கப்பல்களை புதியனவாக்குதலிலும் வலிமிக்கவையாக்குவதிலும் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன.  சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல்கள் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்களுடன் ஒப்பிடுகையில் இரண்டு தலைமுறைகள் பின் தங்கி இருக்கின்றன. இந்த இடைவெளியை சீனா தனது நீர்மூழ்கிக்கப்பற்படையை வலுமிக்கதாக்கி நிரப்ப முயல்கின்றது. நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து வீசக் கூடிஅ அதிவேகமாக நீருக்கடியில் செல்லும் ஏவுகணைகளை சீனா உருவாக்கிவருகின்றது.

சீனா மிகவும் சிரமப்பட்டு உருவாக்கிய லயோனிங் எனப்படும் விமானம் தாங்கிக்கப்பல் வெறும் பயிற்ச்சிக் கப்பலாக மட்டுமே செயற்படக் கூடியது ஒரு போர் கப்பலாக அல்ல எனச் சொல்லப்படுகின்றது. தொழில்நுட்பக் கோளாறுகளும் ஒரு விமானம் தாங்கிக் கப்பலைப் பாதுகாக்கக் கூடிய திறன் மிக்க நாசகாரிக்கப்பல்கள் சீனாவிடம் இல்லை என்பதாலும் சில படைத் துறை ஆய்வாளர்கள் சீனாவின் லயோனிங் விமானம் தாங்கிக் கப்பல் போர்முனைக்கு உகந்தது அல்ல என்கின்றனர்.

சீனாவின் லியோனிங்கின் விமானம் தாங்கு மேடை 999 அடி நீளமானது. இந்தியாவின் விக்ராந்தின் மேடை 860 அடி நீளமானது. ஜப்பானின் இஜுமோ என்னும் உழங்கு வானூர்தி தாங்கிக் கப்பலின் மேடை 814 அடி நீளமானது. ஜப்பானிய அரசமைப்புச் சட்டம் ஜப்பான் ஒரு விமானம் தாங்கிக்கப்பலை வைத்திருப்பதைத் தடை செய்கின்றது. இதனால் ஜப்பானில் இஜுமோ ஓர் உழங்கு வானூர்திக் கப்பலாக பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தேவை ஏற்படும்போது ஐம்பது போர்விமானங்களை தாங்கிச் செல்லக் கூடியது. இந்தியாவின் விக்ராந்தில் 36 விமானங்கள் மட்டுமே.


சீனாவுடனும் இந்தியாவுடனும் ஒப்பிடுகையில் ஜப்பானிடம் மிகவும் திறன்மிக்க கப்பல்கட்டும் தொழிற்துறை இருக்கின்றது. ஜப்பான் தனது நாசகாரிக் கப்பல்களில் இருந்து நிலையான இறக்கைகள் கொண்ட ஆளில்லா கண்காணிப்பு விமானங்களை உள்ளடக்குவது குறித்து தீவிரமாகத் திட்டமிட்டு வருகின்றது. இவற்றால் கிழக்குச் சீனக் கடலில் சீனப் படையினரின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தலாம் என ஜப்பான் நம்புகின்றது. ஜப்பான் தனது நாசகாரிக் கப்பல்களை சிறிய விமானம் தாங்கிக் கப்பலாக மாற்றவும் திட்டமிடுகின்றது. ஏற்கனவி ஜப்பானிடம் மூன்று உழங்கு வானுர்தி தாங்கிக் கப்பல்கள் இருக்கின்றன.  RQ-4 Global Hawk என்னும் அமெரிக்காவின் ஆளில்லாப் போர் விமானங்களையும் ஜப்பான் வாங்க உத்தேசித்துள்ளது.

2014-ம் ஆண்டு சீனா தனது புதிய ரக நீர்மூழ்கிக் கப்பல்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளது. இவை ஆசியப் பிராந்தியத்தில் மட்டுமல்ல பசுபிக் பிராந்தியத்திலும் சீனாவின் தாக்கும் திறனை அதிகரிக்கவுள்ளது. சீனாவின் JL-2 நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்படும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அணுக்குண்டு ஏவுகணைகள் 14,000 கிலோமிட்டர் அதாவது 8,699 மைல்கள் வரை பாயக் கூடியவை. இவற்றால் ஐக்கிய அமெரிக்காவின் ஹவாய், அலஸ்கா போன்ற மாநிலங்கள் மீது அணுக்குண்டுத் தாக்குதல்களை செய்யும் திறனை சீனா பெறுகின்றது.

உலகிலேயே படைத்துறைச் செலவு அதிகரிப்பு ஆசிய நாடுகளில்தான் நடந்து கொண்டிருக்கின்றது. 2013-ம் ஆண்டு ஆசியப் படைத்துறைச் செலவு 2011இலும் பார்க்க 9.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதில் சீனாவின் படைத்துறைச் செலவு மற்றா ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாக இருக்கிறது.

சீனா உருவாக்கியுள்ள அதிவேகமாகச் செல்லும் ஏவுகணைகள் அமெரிக்கா பல பில்லியன்கள் செலவி உருவாக்கிய ஏவுகணை எதிர்ப்பு முறைமையை செல்லுபடியற்றதாக்கியுள்ள வேளையில் சீனா தனது புதிய தர நீர்மூழ்கிக் கப்பல்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ள. சீனாவிடம் மொத்தமாக 60 நீர்மூழ்கிக் கப்பல்கள் இருக்கின்றன. அவற்றில் ஆறு அணுவலுவில் இயங்கிக் கொண்டு கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசக் கூடியவை.

சீனாவின் முத்துமாலைத் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்ட துறைமுகங்களான அம்பாந்தோட்டை, சிட்வே, சிட்டகொங், குவாடர் ஆகிய துறை முகங்கள் ஆழ்கடல் துறைமுகங்களாக இருக்கின்றன. சீனா தனது எதிர்கால கடற்படை வலுவில் நீர் மூழ்கிக் கப்பல்களிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றது என இது சுட்டி நிற்கின்றது. சீனா தனது நீர் மூழ்கிகளில் இருந்து வீசக் கூடிய ஏவுகணைகளில் வலுவையும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்களின் வலிமைக்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் தனது நீர் மூழ்கிக் கப்பல்கள் இருக்க வேண்டும் என சீனா விரும்புகிறது. சீனா நீர் மூழ்கிக் கப்பல்களில் அதிக அக்கறை காட்டுவதன் மற்ற நொக்கம் நீர் மூழ்கிக் கப்பல் தொடர்பான தகவல்களை இரகசியமாக வைத்திருக்க முடியும் என்பதாகும்.

சீனாவின் நீர் மூழ்கிக் கப்பல் வலுவிற்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் சீனாவின் அச்சுறுத்தலுக்கு உள்ளான நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்கா 35 பில்லியன் டொலர்கள் செலவில் உருவாக்கிய P-8A Poseidon என்னும் ஏவுகணைகளை வேட்டையாடும் போர் விமானங்கள் பரீட்சித்துப் பார்த்த வேளையில் அவை வெற்றி அளிக்கவில்லை. இந்த P-8A Poseidon விமானங்கள் எட்டை இந்தியாவும் வாங்கியிருந்தது.

தாய்லாந்தின் கடற்படையினருக்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடர்பான பயிற்ச்சிகள் இப்போது வழங்கப்பட்டு வருகின்றன. விரைவில் தாய்லாந்து நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கவிருக்கின்றது.  வியட்னாம் ஏற்கனவே இரசியாவிடமிருந்து நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கிவிட்டது. பிலிப்பைன்ஸ்சும் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவது தொடர்பாக ஆலோசித்து வருகின்றது. மியன்மார் இந்தியாவிடமிருந்து நீர் மூழ்கிக்கப்பல்களைக் கண்டறியும் உணரிகளை வாங்கியுள்ளது. ஜப்பான் தனது நாட்டில் உள்ள தளங்களில்  அமெரிக்க நீர்மூழ்கி வேட்டை விமானங்களை நிறுத்த அனுமதித்துள்ளது. சீனாவிற்கு கிழக்கேயும் தென் கிழக்கேயும் உள்ள இந்தச் சிறிய நாடுகளின் நிதிவளம் பெரும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு இடமளிக்காத வேளையில் இவை தமது கடற்படைப் படகுகளின் திறனையும் எண்ணிக்கையையும் அதிகரிக்கின்றன. இந்தியாவும் இந்தோனேசியாவும் இணைந்து நீர்மூழ்கி போர் ஒத்திகையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளன. இரு நாடுகளும் மேலும் பல படைத்துறைகளில் இணைந்து செயற்படலாம். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தாய்வான் பெரிய நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் ஒத்திகையைச் செய்துள்ளது. இதில் நீர்மூழ்கிகளை அழிக்கும் முறைமை பரீட்சிக்கப்பட்டது. மியன்மார் 2015-ம் ஆண்டில் இருந்து தனக்கு என ஒரு நீர்மூழ்கிப் படையை உருவாக்கவிருக்கின்றது. மலேசியாவிடமும் சிங்கப்பூரிடமும் நீர்மூழ்கிக் கப்பல்கள் இருக்கின்றன அவை தமது நீர்மூழ்கிக் கப்பல்களின் எண்ணிக்கையையும் வலுவையும் அதிகரிக்கவிருக்கின்றன. சீனாவிற்கு சவால் விடும் வகையில் ஜப்பானிடம் பெரிய நீர்மூழ்கிப்படை இருக்கின்றது.

அமெரிக்காவின் ரொனால்ட் ரீகன் விமானம் தாங்கிக் கப்பல்
2015-ம் ஆண்டில் இருந்து அமெரிக்காவின் புதிப்பிக்கப்பட்ட ரொனால்ட் ரீகன் விமானம் தாங்கிக் கப்பல் ஜப்பானில் நிலை கொள்ளவிருக்கின்றது. தற்போது ஜப்பானில் இருக்கும் ஜோர்ஜ் வாஷிங்டன் கப்பலுக்குப் பதிலால ரொனால்ட் ரீகன் களத்தில் இறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வர்ஷா திட்டம்

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டனத்தில் இருந்து 200 கிலொ மீட்டர் தொலைவில் உள்ள துறைமுகத்தில் உயர் தொழில் நுட்ப கடற்படைத் தளம் ஒன்று சீன அச்சுறுத்தல்களுக்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டு வருகின்றது. இந்தியக் கடற்படையின் கிழக்குக் கட்டளையகத்தின் கீழ் வரும் இந்தத் தளத்தில் நிலத்துக் கடியில் இந்தியாவின் அணுக்குண்டுகள் தாங்கிய அரிகாந்த் நீர்மூழ்கிக் கப்பலை மறைத்து வைத்துக் கொள்ளக் கூடிய வசதி உண்டு. இந்தியக் கடற்படையின் கிழக்குக்கட்டளையகத்தின் கீழ் அரிஹாந்த் நீர்மூழ்கிக்கப்பல், ஜலஷ்வா என்னும் ஈருடகக் கப்பல், சக்ரா என்னும் அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் உட்பட ஐம்பது கடற்கலன்கள் இருக்கின்றன. இந்தத் துறைமுகத்தில் எதிரிப்படைகளின் தாக்குதல்களிலும் கண்காணிப்பிலும் இருந்து கடற்படைக்கலன்களை மறைத்து வைக்கக் கூடிய வசதிகள் உண்டு.

வலிமை மிக்க இந்தியக் கடற்படை
இந்தியா தனது கடற்படை வலுவை நிதானமாகவும் உறுதியாகவும் வளர்த்து வருகின்றது. மற்ற ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா மிக நீண்டதும் எதிரிகளின் அச்சுறுத்தல் மிகுந்ததுமான கடற்பரப்பைப் பாதுகாக்க வேண்டிய நிலையில் இருக்கின்றது. பாக்கிஸ்த்தான், இலங்கை, மியன்மார், சீனா, பங்களாதேசம் ஆகிய நாடுகளுடன் கடல் எல்லையைக் கொண்ட இந்தியாவிற்கு மிக வலிமையுள்ள கடற்படை அவசியம். இந்தியாவிடம் 160 கப்பல்கள் கொண்ட இரு கடற்படைப் பிரிவுகள் இருக்கின்றன. ஒரு விமானம் தாங்கிக் கப்பல், இருபது நாசகாரிக் கப்பல்கள், ஒரு அணுவலுவில் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல், 14 மற்ற நீர்மூழ்கிக் கப்பல்கள் என ஒரு பெரும் கடற்படை இந்தியாவிடம் உண்டு. அத்துடன் ஆசியாவிலேயே சிறந்த அனுபவமும் பயிற்ச்சியும் இந்தியக் கடற்படைக்கு உண்டு. பாக்கிஸ்த்தானிடம் ஐந்து நீர்மூழ்கிக் கப்பல்கள் உண்டு. இவை இந்தியாவிற்கு எதிராக மட்டுமே செயற்படும் என எதிர்பார்க்கலாம். இவற்றைச் சமாளிக்க வேண்டிய நிலையும் இந்தியாவிற்கு உண்டு.

ஜப்பானைச் சுற்றியுள்ள நாடுகள் தமது படைத்துறை வலுவை சீனாவிடமிருந்து தம்மைப் பாதுகாக்கும் நோக்குடனேயே வளர்த்து வருகின்றன. இந்த நாடுகள் யாவும் ஒன்றிணைந்து செயற்பட்டால் சீனாவின் சவாலை சமாளிக்க முடியும். ஆசிய ஆட்சியாளர்களுக்கு படைத்துறைப் போட்டி அவசியமாக இருக்கலாம். ஆனால் ஆசிய மக்களுக்குத் தேவைப்படுவது அமைதியும் அபிவிருத்தியுமே.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...