Friday, 7 February 2014

கவிதை: மறக்கப்படுவது வாழ்கையையே கெடுக்கும்


 தேவைப்படும் அளவு கிடைக்காதது
தேவை தீர்கக் கொடுக்க முடியாதது
காதல்

கண்வழி நடந்து
காலொடிந்தது
இதயவழி நடந்து
இணைந்தது.

எல்லோரும் பிழையாகிப் போயினர்
பலர் பொய்யாகியும் போயினர்
எதுவும் தெரியாதது போல் இருக்கும் சிலர்
எதுவுமே தெரியாமல் இருக்கும் பலர்
விலை கொடுத்தோர் பலர்
விலையாகிப் போனோர் பலர்
நிகழ்காலத்தைத் தேடினோம்
எதிர் காலத்தைத் தொலைத்தோம்
எல்லாம் இழந்தோம்
மறக்க முடியாத சரித்திரம்
தாங்க முடியாத நிகழ்காலம்
தீர்மானிக்க முடியாத எதிர்காலம்
தமிழர் வாழ்வு
வலுவைத் தருவது வெற்றிகளல்ல
போராட்டங்களே வலுவாகும்


எலும்பாலான கூடு
உள்ளே சிறகடிக்கும் பறவை
இதயம்

அருகிருந்தால்  கண்ணால் பார்ப்பது
தொலைவில் இருந்தால் கண் மூடிப்பார்ப்பது
அன்பு

மீண்டும் வரமுடியாதது
நினைத்தால் இனிக்கும்
பாடசாலை நாட்கள்

எதிரியாய் இருக்கும் தகமை
மிக இலகுவானது
நண்பனாய் இருக்கும் தகமை
மிகச் சிரமமானது

இலகுவான வாழ்கையை
கடினமாய்ப் போனது
ஆசைகள்

உண்ண உணவு
உடுக்க உடை
இருக்க இடம்
அன்பு காட்டச் சிலர்
இனிய குடும்பம்


காதலிப்பது துணிவைத் தரும்
காதலிக்கப்படுவது வலுவைத் தரும்
மறக்கப்படுவது வாழ்கையையே கெடுக்கும்

தூக்க ஆள் தேடும் குழந்தைகள்
விளையாட் ஆள் தேடும் பிள்ளைகள்
காதலிக்க ஆள் தேடுக் இளசுகள்
கதைக்க ஆள் தேடும் முதியவர்வர்கள்

தாயிடம் மறைக்க முடியாதது
பசியும் காதலும்

Monday, 3 February 2014

உக்ரேயினிலும் "வெள்ளை வான்"

83இலட்சம் இரசியர்கள் உக்ரேயினில் வாழ்கிறார்கள்
ஜேர்மனியில் நடந்த மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க அரசுத் துறைச் செயலர் ஜோன் கெரி உக்ரேயினைப் பற்றித் தெரிவித்த கருத்து உக்ரேயின் பிரச்சனையை மேலும் உக்கிரமடையப் போகிறது என்பதற்கு கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் இணைந்து உக்ரேயின் மக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும், செழிப்பாகவும் வாழும் முயற்ச்சிக்கு உதவி செய்யும் என்றார் ஜோன் கெரி. ஜோன் கெரி இப்படிச் சொன்னதுடன் நிற்கவில்லை ஜேர்மனியில் உக்ரேயின் எதிர்க் கட்சியைச் சேர்ந்த மூவரைச் சந்திக்கவும் செய்தார். உக்ரேயின் மக்களின் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு அமெரிக்கா உதவி செய்யும் எனவும் ஜோன் கெரி உறுதி அளித்தார்.

எந்தக் கூட்டுடன் கூடுவது
உக்ரேயின் நாடும் ஐரோப்பிய ஒன்றியமும் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாகப் பேச்சு வார்த்தை நடாத்தி வந்தன. இரு தரப்பும் Ukraine-EU Association Agreement என்னும் உக்ரேய்ன் - ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் கைச்சாத்திட முயன்றன. இதை விரும்பாத இரசியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரேயின் இணைவதை உக்ரேயின் அதிபர் மீது அழுத்தம் கொடுத்துத் தடுத்தது. உக்ரேயின் நாடு தனது எரிவாயுத் தேவைக்கு இரசியாவிலேயே பெரிதும் தங்கியுள்ளது. இரசியா உக்ரேயினுக்கு பத்து மில்லியன் டொலர்கள் நிதி உதவியும் குறைந்த விலையில் எரிவாயு வழங்குவதாயும் உறுதி வழங்கியது. அத்துடன் இரசியா உக்ரேயினைத் தனது யூரோஆசிய பொருதார சமூகத்தில் இணையும் முடிவை எடுக்க வைத்தது. இதற்கு உக்ரேயினில் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. உக்ரேயினில் மக்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தனர்.  2013-ம் ஆண்டு நவம்பர் தொடங்கிய ஆர்ப்பாட்டம் இன்று வரை தொடர்கின்றது.

ஆத்திரமடையும் இரசியா
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளும் நட்பு நாடுகளும் ஒன்றன் பின் ஒன்றாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது இரசியாவைக் கடும் ஆத்திரமடைய வைத்துள்ளது. இரசியா இதை ஒரு ஜேர்மனிய ஆக்கிரமிப்பாகவே கருதுகிறது. போல்ரிக் நாடுகளான எஸ்தேனியா, லத்வியா, லித்துவேனியா ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தமை இரசியாவை ஆத்திரப்படுத்தியது. 01/07/2013இல் இருந்து குரோசியாவும் 28வது நாடாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது.

 தூபமிடுவது யார்?
ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேயின் கிளர்ச்சிக்கு தூபமிடுவதாக இரசியா குற்றம் சாட்டுகிறது. உக்ரேயின் மக்கள் சுதந்திரமாகச் செயற்படாமல் இரசியா தடுப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சாட்டுகிறது. ஜோன் கெரி அமெரிக்கா உக்ரேயின் எதிர்க்கட்சிக்கு ஆதரவு தெரிவித்தமை உக்ரேயினின் ஒரு இரசியாவிற்கும் மேற்கு ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளுக்கும் இடையிலான மோதல் களமாக உக்ரேயினை மாற்றியுள்ளது. உக்ரேயின் அதிபர் விக்டர் யனுக்கோவிச் தேர்தலில் ஊழல் செய்து ஆட்சிக்கு வந்து ஊழலுடன் ஆட்சி செய்து கொண்டிருப்பவர் என்பது மேற்கு நாடுகளின் கருத்தாக இருக்கிறது. தேர்தலின் போது விக்டர் யனுக்கோவிச் வெற்றி பெற இரசியா முன்னூறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் உக்ரேய்னில் செலவு செய்ததாக குற்றம் சுமத்தப்படுகின்றது. அத்துடன் பல இரசியர்கள் உக்ரேயின் சென்று தேர்தலின் போது செயற்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றது. இரசியா இதே கைங்கரியங்களை அஜர்பைஜான், பெலரஸ் ஆகிய நாடுகளிலும் செய்ததாகவும் கருதப்படுகின்றது. இந்த நாடுகளிலும் இரசியாவின் ஒரு பகுதியான செஸ்னியக் குடியரசிலும் இரசியாவிற்கு சார்பான வேட்பாளர்கள் வெற்றி பெறச்செய்ய வாக்குப் பெட்டிகளுக்குள் கள்ள வாக்குகள் திணிக்கப்பட்டதாக பரவலான குற்றச்சாட்டு நிலவுகின்றது.

இரசியாவிற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த உக்ரேயின்.        இரசியாவைப் பொறுத்தவரை உக்ரேயின் அதன் பாதுகாப்பிற்கு முக்கியமான ஒரு நாடாகும். உக்ரேயின் நாடு இரசியாவுடன் இல்லாவிடில்  இரசியா தனது வல்லரசு நிலையை தக்க வைத்துக் கொள்ள முடியாது என்பது படைத்துறை ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது. இரசியா ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனை செய்யும் எரிவாயுவில் 90 விழுக்காடு உக்ரேய்னூடாகச் செல்லும் குழாய்களூடாக விநியோகிக்கப்படுகின்றது. இரசியாவின் கருங்கடல் கடற்படைப் பிரிவு உக்ரேய்னிடமிருந்து குத்தகைக்கு இரசியா எடுத்த செவெஸ்டப்போல் துறைமுகத்திலேயே இருக்கிறது. உக்ரேய்ன் இரசியப் பிடியில் இருந்து விலகி நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணைந்தால் இரசியாவிற்கு ஆண்டு ஒன்றிற்கு பத்து பில்லியன் அதாவது நூறு கோடி அமெரிக்க டொலர்கள் வருமான இழப்பீடு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தமது நாட்டின் ஒரு பகுதி உக்ரேயின்.
இரசிய மக்களிடையே உக்ரேய்ன் தொடர்பாக இரசியா கடும் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்ற கருத்து வலுவடைந்து வருகின்றது. அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் இரசியர்கள் உக்ரேய்னைத் தமது நாட்டின் ஒரு பகுதி என்ற மனப்பாங்குடன் இருக்கின்றனர். உக்ரேய்ன் மக்கள் செய்யும் எழுச்சி வெற்றி பெற்றால் அது இரசியாவிலும் மக்களாட்சி முறைமையை வேண்டி நிற்கும் பெரும் தொகையான மக்களுக்கு ஓர் உந்து வலுவாக அமையலாம் என்பதை இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் நன்கு அறிவார். இதனால் இரசியா கடுமையான நிலைப்பாட்டை எடுக்கும் என நிச்சயம் நம்பலாம்.
கவண் கொண்டு பெட்ரோல் குண்டு வீசும் ஆர்ப்பாட்டக்காரர்

திருப்தியடையாத ஆர்ப்பாட்டக்காரர்கள்
உக்ரேய்னின் தலைமை அமைச்சரும் அமைச்சரவையும் பதவி விலகி ஆர்ப்பாட்டத்திற்கு எதிரான சட்டம் அரசால் திரும்பப் பெறப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் திருப்தியடையவில்லை. உக்ரேய்ன் அதிபரும் பதவி விலகி புதிதாகத் தேர்தல் நடாத்த வேண்டும் அரசமைப்பு மாற்றப் படவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். உக்ரேய்னில் அவசர காலச் சட்டம் கொண்டுவரப்பட்டு படைத்துறையினர் களத்தில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்பவர்களை விரைவில் அடக்க விரைவில் முயலலாம். ஜனவரி 31-ம் திகதி உக்ரேய்னின் படைத்துறையினர் நாட்டில் அமைதி உடனடியாக நிலை நாட்டப்பட வேண்டும் என்றனர். சுகயீன விடுப்பில் சென்ற உக்ரேயின் அதிபர் 03/02/2014இல் இருந்து மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார்.

உக்ரேயினிலும் "வெள்ளை வான்"
உக்ரேயினிலும் குடிமக்கள் போல் உடையணிந்த பாதுகாப்புத் துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கடத்திச் சென்று சித்திரவதை செய்வது, காணாமற் போகச் செய்வது பரவலாக நடக்கின்றது. இந்தக் கடத்தற்காரர்களை plain-clothed kidnappers என மக்கள் அழைக்கின்றனர்.

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும்  உக்ரேயின் எதிர் கட்சியினருகு உதவி செய்தால் உக்ரேய்னில் இப்போது நடந்து கொண்டிருக்கும் எழுச்சி பெரும் உள்நாட்டுப் போராக வெடிக்கலாம்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...