Saturday, 25 January 2014

சிரிய "சமாதான" பேச்சு வார்த்தையும் பான் கீ மூனின் சறுக்கலும்

ஜெனிவா - 2 பேச்சு வார்த்தை என அழைக்கப்படும்  சிரியாவில் மோதிக்கொள்ளும் தரப்பினர்களுக்கு இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சு வார்த்தை ஜனவரி 22-ம் திகதியில் இருந்து சுவிஸ் நகர் மொன்ரெக்ஸில் நடந்து கொண்டிருக்கின்றது. அமெரிக்க அரசின் வெளியுறவுத் துறைக்குப் பொறுப்பான அரசுத் துறைச் செயலர் ஜோன் கெரியும் இரசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்கி லவ்ரோவும் 2013 மே மாதம் சந்தித்து சிரியாவில் போர் புரியும் தரப்புக்களை பேச்சு வார்தைக்கு கொண்டுவருவது என ஒத்துக் கொண்டனர்.

2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  21-ம் திகதி சிரியாவில் மேற்கொள்ளபப்ட்ட வேதியியல் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவினதும் இரசியாவினதும் வெளியுறவுத் துறையினர் சிரியாவில் சமாதானப் பேச்சு வார்த்தையில் அதிக கவனம் செலுத்த ஒத்துக் கொண்டனர். சிரியா தொடர்பான ஜெனிவா - 1 பேச்சு வார்த்தை 2012-ம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் நடந்தது அதில் சில அடிப்படை விதிகள் ஒத்துக் கொள்ளப்பட்டன: அவற்றில் முக்கியமானவை:
  • சிரியாவில் எல்லோரும் ஒத்துக்கொள்ளக்கூடிய வகையிலான அணுகுமுறை ஒன்றை உருவாக்கல்
  • அந்த அணுகுமுறையைச் செயற்படுத்த தேவையான நடவடிக்கைகளை ஒரு கால அட்டவணை அடிப்படையில் எடுத்தல்.
  • எல்லோருக்கும் பாதுகாப்பு, அமைதி, திடமான நிலை உருவாகக் கூடிய வகையில் அணுமுறையை செயற்படுத்தல்.
  • இனியும் இரத்தக் களரி வன்முறை இன்றி விரைந்து செயற்படல்

எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள்:
  • அரசு தரப்பினரையும் எதிர்த் தரப்பினரையும் கொண்ட முழு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு இடைக்கால அரசை எல்லோர் சம்மதத்துடன் உருவாக்குதல்.
  • எல்லாத்தரப்பினரையும் கொண்ட அர்த்தமுள்ள ஒரு தேசியப் பேச்சு வார்த்தையை ஏற்பாடு செய்தல்
  • அரசமைப்பு யாப்பையும் சட்ட முறைமையையும் மீள் பரிசீலனை செய்தல்
  • சுதந்திரமானதும் நீதியானதுமான பல கட்சிகள் பங்கு பற்றும் தேர்தலை நடாத்துதல்
  • எல்லா மாற்றங்களிலும் பெண்களையும் ஈடுபடுத்துதல்

இந்த அடிப்படையில் இரண்டாம் கட்டப் பேச்சு வார்த்தைக்கு வரும்படி சிரியாவில் போர் புரியும் தரப்பினரை அமெரிக்காவும் இரசியாவும் வற்புறுத்தி அழைத்தன இதற்கான பின்புலப் பணிகளை சிரியாவிற்கான ஐக்கிய நாடுகளின் சிறப்புத் தூதுவர் லக்தர் பிராஹ்மி மேற்கொண்டிருந்தார். சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் பேச்சு வார்த்தைக்கு முன்னர் சிரிய அதிபர் பஷார் அல் அசாத் பதவி விலக வேண்டும் என்றும் இடைக்கால அரசில் அவர் இடம்பெறக் கூடாது என்றும் நிபந்தனை விதித்திருந்தனர். ஆனால் இறுதியில் அவர்கள் மீது நிர்ப்பந்தம் பிரயோகிக்கப்பட்டு பேச்சு வார்த்தைக்கு வரச் செய்யப்பட்டனர். பேச்சுவார்த்தை 22-ம் திகதி ஆரம்பமாக முன்னர் சிரிய வெளிநாட்டமைச்சர் எந்த வித அதிகாரங்களையும் சிரிய அரசு விட்டுக் கொடுக்காது என்று சொன்னதும் பேச்சு வார்த்தையின் ஆரம்பத்தில் அவர் எதிர்த்தரப்பினர்களை பயங்கரவாதிகள் என அழைத்ததும் நிலமையைச் சிக்கலாக்கியது. முதல் நாள் ஜனவரி 22-ம் திகதி புதன் கிழமை அவர்க ஒரே மண்டபத்தில் கூடிப் பேசினர். ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிப் பேசினார்கள். பின்னர் ஒரே இடத்தில் அமர்ந்து பேசுவதில்லை எனக் கூறினார்கள்.

பேச்சு வார்தையில் ஐக்கிய நாடுகள் சபை, அரபு லீக் நாடுகள், சீனா,  அமெரிக்கா, இரசியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், துருக்கி, ஈராக், குவைத், கட்டார், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் வெள்நாட்டமைச்சர்களும் கலந்து கொண்டனர். சிரிய ஆட்சியாளர் பஷார் அல் அசாத்திற்கு பெரும் ஆதரவு வழங்கிவரும் ஈரானைப் பேச்சு வார்த்தைக்கு வரும்படி ஐநா பொதுச் செயலர் பான் கீ மூன் அழைத்திருந்தார். இதற்கு ஐக்கிய அமெரிக்காவும், ஐக்கிய இராச்சியமும் சிரியக் கிளர்ச்சிக்காரர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவிக்க பான் கீ மூன் ஈரானுக்கு தான் விடுத்த அழைப்பை மறுநாளே இரத்துச் செய்தார். இதற்கு இரசியா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. பான் கீ மூனிற்கும் ஒரு அவமானமாக இருந்தது. ஈரான் ஜெனிவா -2 பேச்சு வார்த்தைக்கான அடிப்படை விதிகளாக ஜெனிவா - 1 பேச்சு வார்த்தையில்  ஒத்துக் கொள்ளப் பட்டவற்றை ஏற்றுக் கொள்ள மறுத்ததால் அது பேச்சு வார்தையில் ஈடுபடக் கூடாது என அமெரிக்கா தெரிவித்தது.  ஜெனிவா - 2 பேச்சு வார்த்தையில் தானும் ஈடுபட வேண்டும் என ஈரான் நீண்ட காலமாக முயன்று கொண்டிருந்தது. ஈரான் தன்னை ஒரு பிராந்திய வலு மிக்க நாடாக காட்ட இது ஒரு வாய்ப்பு எனவும் தான் பங்கு பற்றினால் அது சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு ஒரு ஆதரவாக அமையும் என்றும் இந்த இராசதந்திர வலு ஈரான் வல்லரசு நாடுகளுடன் நடாத்தும் அணுக் குண்டு உற்பத்தி தொடர்பான பேச்சு வார்த்தைக்கு சாதகமாக இருக்கும் எனவும் ஈரான் கருதி இருந்தது. ஈரானியப் படைகள் அதிபர் அசாத்திற்கு பெரும் உதவிகள் செய்வதாலும் ஈரானின் வற்புறுத்தலில் லெபனானிய ஹிஸ்புல்லா அமைப்பினர் அசாத்தின் படைகளுடன் இணைந்து போர் புரிவதாலும் ஈரானும் சிரியப் பிரச்சனையில் முக்கியத்துவம் பெறுகின்றது.

முதல் நாள் ஜனவரி 22-ம் திகதி புதன் கிழமை அவர்க ஒரே மண்டபத்தில் கூடிப் பேசினர். ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிப் பேசினார்கள். பின்னர் ஒரே இடத்தில் அமர்ந்து பேசுவதில்லை எனக் கூறினார்கள். இதனால் இரு தரப்பினருடனும் மற்றப் பாங்காளர்கள் தனித் தனியே பேச்சு வார்த்தை நடாத்தினர். பின்னர் ஜனவரி 25-ம் திகதி சனிக்கிழமை ஒன்றாக அமர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட ஒத்துக்கொண்டனர். பேச்சு வார்த்தையின் ஆரம்பத்தில் சிரிய வெளிநாட்டமைச்சரின் உரையின் நேரத்தை பான் கீ மூன் கட்டுப்படுத்த முயன்ற போது பான் கீ மூனும் சிரிய வெளிநாட்டமைச்சரும் கடுமையாக முரண்பட்டுக் கொண்டனர். சிரிய வெளிநாட்டமைச்சர் வலித் அல் மௌலம் சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் தமது ஆன்மாக்களை ஏலம் போட்டு விற்பனை செய்கின்றனர் என்றார்.

ஜெனிவா - 1 பேச்சு வார்த்தையின் பொது ஒரு இடைக்கால அரசு அமைப்பது பற்றிப் ஒத்துக் கொள்ளப்பட்டது. ஜெனிவா - 2இன் சிரிய வெளிநாட்டமைச்சர்

முதல் நாள் பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து பத்திரிகையாளர் மாநாட்டில் அமெரிக்க அரசுத் துறைச் செயலர் ஜோன் கெரி இவ்வளவு அழிவிற்கும் காரணமானவர் தொடர்ந்து பதவியில் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். அத்துடன் ஜோன் கெரி பஷார் அசாத் அதிபர் பதவியில் தொடர்ந்தால் சிரியா பிளவுபடுவதைத் தடுக்க முடியாது என்றார்.  சிரிய அதிபர் பஷார் அல் அசாத் பதவியில் இருந்து விலக்கப்படுவதை ஒரு போதும் ஒத்துக் கொள்ளப்போவதில்லை. அத்துடன் இரசியாவும் அசாத் அதிபர் பதவியில் இருந்து விலக்கப்படுவதற்கு சம்மதிக்கப் போவதில்லை.
இதனால் சிரியா பிளவு படுவதைத் தடுக்க முடியாது. சிரியா பிளவு படுவதை அமெரிக்கா விரும்புவது போல் தெரிகின்றது. அப்படி சிரியா பிளவு படும் வேளையில் இசுலாமியத் தீவிரவாதக் குழுக்கள் ஒன்றுடன் ஒன்று போர் புரிந்து தம்மில் பலரைக் கொல்லலாம். ஏற்கனவே அல் கெய்தா ஆதரவு போராளிகள் தமக்குள் மோதிக் கொண்டதால் ஆயிரம் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.


 ஜனவரி 25-ம் திகதி சனிக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையின் போது மனிதாபிமான உதவிகளைப் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக ஒரு பாதுகாப்பான பாதை உருவாக்குவது பற்றிப் பேசப்பட்டது. அலெப்பே மாகாணத்தில் ஹொம்ஸ் நகரில் ஒரு பாதுகாப்பான வழங்கற்பாதை உருவாக்க சிரிய அரசு ஒத்துக் கொண்டது. அப்படி ஒரு பாதை உருவாக்குவதற்கு ஹொம்ஸ் மீதான முற்றுகையை சிரிய அரச படைகள் நிறுத்து வேண்டும் எனக் கிளர்ச்சிக்காரர்கள் தரப்பில் கூறப்பட்டது. சில மேற்கத்தைய ஊடகங்கள் பாதுகாப்பான வழங்கற்பாதை தொடர்பாக நம்பிக்கை வெளியிட்டுள்ள போதும் அரபு நாட்டு ஊடகங்கள் ஹொம்ஸ் நகரில் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட பல கிளர்ச்சிக்காரக் குழுக்கள் செயற்படுவதால் ஒரு உடன்பாடு எட்டுவது சிரமம் எனத் தெரிவித்துள்ளன.

கிளர்ச்சிக்காரர்கள் சிரிய அரசு கைது செய்து வைத்திருக்கும் பெண்களையும் சிறுவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 

சிரியாவில் முப்பதினாயிரத்துக்கு மேலான அல் கெய்தா ஆதரவு போராளிகள் இருப்பதாக இஸ்ரேல் அஞ்சுகிறது. இதுவரை காலமும் சிரியாவின் பேரழிவு விளைவிக்கக் கூடிய படைக்கலன்கள் இசுலாமியத் தீவிரவாதிகளின் கைகளுக்குப் போகாமல் பார்த்துக் கொண்டிருந்த இஸ்ரேல் இப்போது அல் கெய்தா சிரியாவைக் கைப்பற்றும் அபாயம் இருப்பதாகக் கருதுகிறது. இது தனக்கும் பெரும் அச்சுறுத்தல் எனக் கருதும் இஸ்ரேல் சிரியா அல் கெய்தாவின் கைகளுக்கு மாறாமல் இருக்க நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கிறது. இதற்காக அல் கெய்தாவிற்கு எதிரான குழுக்களுடன் இணைந்து சிரியாவின் சில பகுதிகளை தான் ஆக்கிரமிக்கும் திட்டமும் இஸ்ரேலிடம் இருக்கிறது. தான் சிரியாவில் ஆக்கிரமிக்கும் பிரதேசம் தனக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாக அமையும் என இஸ்ரேல் நம்புகிறது.  அத்துடன் சிரியாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் மீது விமானத் தாக்குதல் நடத்துவது தொடர்பாகவும் இஸ்ரேல் ஆலோசித்து வருகிறது.

சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் தமது உளவாளி ஒருவரை அரச காவற்துறையில் இணைத்து அவர் மூலமாக சிரியப் படைகளின் மோசமாக போர்க்குற்றம் மற்றும் மாநிடத்திற்கு எதிரான குற்றங்களை அம்பலப் படுத்தி உள்ளனர். அமெரிக்காவின் சிரிய அதிபர் அசாத்தை பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்ற திட்டத்திற்கு இது பெரிதளவில் வலுக் கொடுக்கும்.

Friday, 24 January 2014

சீனா கட்டும் உலகின் மிகப்பெரிய வேவுக் கப்பல்


தற்போது உலகின் மிகப்பெரிய வேவு பார்க்கும் கப்பல் ஜப்பானுடைய 1992-ம் ஆண்டு கட்டப்பட்ட ஷிக்கிஷ்மா (Shikishima) என்னும் 7175 தொன் எடையுடைய கப்பலாகும். அத்துடன் 2012-ம் ஆண்டு இதே போன்ற இன்னும் ஒரு கப்பலை அக்கிட்சுஷிமா (Akitsushima) என்னும் பெயரில் கட்டியது. ஜப்பானுடன் கடுமையாக கிழக்குச் சீனக் கடலில் முரண்பட்டுக் கொண்டிருக்கும் சீனா உலகிலேயே மிகப்பெரிய வேவு பார்க்கும் கப்பலைக் கட்டத் தொடங்கியுள்ளது. சீனாவின் கப்பல் 10,000 தொன் எடையுள்ளது.

வேவுக் கப்பல் Haijian-50
சீனா தனது வேவுபார்க்கும் கப்பலுக்கு Haijian-50 எனப் பெயரிட்டுள்ளது. Haijian என்றால் சீன மொழியில் கடற்கண்காணிப்பு எனப் பொருள்படும். Haijian-50 வேவுக் கப்பலில் எந்த வகையான படைக்கலன்கள் பொருத்தப்படும் என்பது பற்றி எந்த விபரமும் சீன அரசால வெளிவிடப்படவில்லை. அண்மைக் காலங்களாக சீனா தனது கடற்படையை மிகவும் வலுமிக்கதாக  மேம்படுத்தி வருகிறது. ஏற்கனவே சீனா தனது லியோலிங் எனப்படும் விமானம் தாங்கிக் கப்பலை உருவாக்கியுள்ளது. சீனாவின் விமானம் தாங்கிக் கப்பலைப் பற்றிப் பார்க்க இங்கு சொடுக்கவும்: லியோனிங்.

Corvette என்பது ரோந்துக் கப்பல் 
சீனா தொழிற்சாலையில் பிஸ்கட் தயாரிப்பது போல corvette எனப்படும் சிறிய ரக கப்பல்களை அதிகம் தயாரித்து வருகின்றது. Corvette என்பது ரோந்துக் கப்பல் வகையைச் சார்ந்தவை. இவற்றை சீனா ஆழமற்ற கடல்களான தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் பாவிக்கத் திட்டமிட்டிருக்கின்றது. சீனாவின் கப்பல்கள் Type 056 என்னும் கப்பல்வகையைச் சார்ந்தவை. இவற்றில் தற்பாதுகாப்பு படைக்கலன்களும் கப்பல்களையும்  நீர் மூழ்கிகளையும் தாக்கியழிக்கக் கூடிய 76மில்லி மீட்டர் துப்பாக்கி ஒன்றும் 30 மில்லி மீட்டர் துப்பாக்கிகள் இரண்டும் பொருத்தப்பட்டிருக்கின்றன.  சீனாவின் இந்த ரோந்துக் கப்பல்கள் அமெரிக்காவின் Phalanx CIWS ரோந்துக் கப்பல்களை ஒத்தவையாகக் கருதப்படுகின்றன. அத்துடன் சீனாவின் பறக்கும் சிறுத்தைகள் எனப்படும் ஏவுகணைகளும் 134 மைல்கள் ஒலியிலும் இரு மடங்கு வேகத்தில் பாயக் கூடிய கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளும் இந்த ரோந்துக் கப்பல்களில் உள்ளன. மேலும் torpedo வகையைச் சேர்ந்த நீர்மூழ்கி எதிர்ப்பு  ஏவுகணைகளும் உள்ளன. ஒரு உழங்கு வானூர்தியையும் இந்த ரோந்துக் கப்பல் தாங்கிச் செல்லும். இந்த வகை ரோந்துக் கப்பல்கள் இருபதை சீனா இப்போது உருவாக்கிக் கொண்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

சீனாவின் நாசகாரிக் கப்பல்கள்
சீனா Type 052D வகையைச் சார்ந்த நாசகாரிக்கப்பல்களையும் உருவாக்கி வருகின்றது. இவற்றின் முக்கிய பணி மற்றக் கடற்படைக்கலன்களை விமானத்தாக்குதலில் இருந்து பாதுகாப்பதாகும். இதன் முன்புறமும் பின்புறமும் 32 ஏவுகணைகள் கொண்ட ஏவுகணை வீசிகள் இரண்டு உள்ளன. சீனாவின் HQ-9 வ்கையைச் சேர்ந்த செம்பதாகைகள் என்னும் ஏவுகணை எதிப்பு முறைமை இவற்றில் உண்டு. அத்துடன் ஒரு உழங்கு வானூர்தி்யையும் சீனாவின் Type 052D வகையைச் சார்ந்த நாசகாரிக்கப்பல் தாங்கிச் செல்லக் கூடியது.

Type 071 amphibious landing dock
சீனாவின் Type 071 amphibious landing dock எனப்படும் நீரிலும் நிலத்திலும் பயணிக்கும் கப்பல் 400முதல் 800 பேரைக் கொண்ட ஒரு படையணியையும் 18 கவச வண்டிகளையும் உழங்கு வானூர்த்களையும் தாஙகிச் செல்லக் கூடியவை. அத்துடன் இந்தக் கப்பலில் பல ஈரூடக வண்டிகளும் இருக்கின்றன. இந்தவகைக் கப்பல்கள் பலவற்றை சீனா உருவாக்கி வருகின்றது.

Dongdiao வேவு-கண்காணிப்புக் கப்பல்கள்
சீனாவின் Dongdiao வேவு மற்றும் கண்காணிப்புக் கப்பல்கள் தற்போது இரண்டு இருக்கின்றன. அத்துடன் மேலும் பலவற்றை உருவாக்கி வருகின்றது. இவற்றை  உளவுக் கப்பல்கள் என்றும் கூறுவர்.

தனது படைக்கலன்களை திட்டமிட்டுப் பெருக்கி வரும் சீனா இந்த ஆண்டு தென் சீனக் கடலில் தனது வலுவை உலக அரங்கில் நிச்சயம்  அரங்கேற்றும்.

Thursday, 23 January 2014

துப்பரவாக்கு முன்னர் உடைந்து போன அரவிந்த் கேஜ்ரிவாலின் துடைப்பம்

2013இறுதிப் பகுதியில் நடந்த டில்லி சட்ட சபைத் தேர்தலில் மொத்தம் எழுபது தொகுதிகளில் 28 தொகுதிகளில் வெற்றி பெற்ற அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆளும் காங்கிரசுக் கட்சியை மூன்றாவது இடத்திற்கு தள்ளியதுடன் பாரதிய ஜனதாக் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் செய்தது. தமது கட்சியை பொது மகன் கட்சி என்பதற்காக ஆம் ஆத்மி எனப் பெயரிட்டு தாம் நாட்டைச் சுத்தப்படுத்துவதற்காக வந்தவர்கள் என்பதற்காக தமது கட்சியின் சின்னத்திற்கு துடைப்பத்தைத் தேர்ந்தெடுத்தனர்.

இனியும் பொதுமகன் அல்ல
தன்னைப் பொது மகன் எனச் சொல்லிக் கொண்டு வந்த அரவிந்த் கெஜ்ரிவால் அறுதிப் பெரும்பான்மை இல்லாத போதும் காங்கிரசுக் கட்சியின் வெளியில் இருந்து வழங்கும் ஆதரவுடன் டில்லி சட்ட சபையின் முதலமைச்சராகப் பதவி ஏற்றார். அதனால் அவர் தனக்குத் தானே சூட்டிக் கொண்ட பொது மகன் என்னும் பட்டத்தை இழந்து ஒரு பிரபலம் ஆனார்.  அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வராக பொறுப்பேற்றதும் 700 லீட்டர் தண்ணீரை இலவசமாக வழங்கினார். மக்களுக்கு மின்சாரம் வழங்கும் நிறுவனங்களின் கணக்குகளும் அவை மக்களிடம் அறவிடும் கட்டணமும் கடுமையான கணக்காய்விற்கு உட்படுத்த உத்தரவிட்டார்.  டெல்லி வாசிகளின் குறைகளை நேரடி யாகக் கேட்டு, அவற்றுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கை எடுப்பதற்காக ஜனதா தர்பார் எனப்படும் மக்கள் அரசவை நடத்தப்படும் என்றார்.  ஆனால் மக்கள் தமது குறைகளைச் சொல்ல மிகப் பெருமளவில் திரண்டு வந்து தடைகளையும் மீறி அரவிந்தைச் சந்திக்க முயன்றதால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் இந்தத் திட்டத்தை அரவிந்த் கைவிட்டு மக்கள் தமது குறைகளை இணையவெளியூடாக தனக்குத் தெரிவிக்கலாம் என்றார். ஆனால் எல்லாப் பொதுமக்களுக்கும் அந்த வசதி இருக்கிறதா என்ற கேள்வி பொதுமக்களிடம் இருந்து வந்தது.

அந்நிய முதலீடு இரத்து
டில்லியில் அந்நிய முதலீடுகளுக்கு முன்னைய மாநில காங்கிரசு அரசு அனுமதி வழங்கியிருந்தது. அரவிந்த் கேஜ்ரிவால் ஆட்சிக்கு வந்ததும் இதை இரத்துச் செய்தார். இதனால் டில்லியில் கடைத் தொகுதிகளை அமைத்திருந்த வால்மார்ட், ரெஸ்க்கோ போன்றவை அவற்றை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதனால் பலர் வேலை இழக்க நேரிட்டது. அரவிந்த் கேஜ்ரிவாலின் கட்சிக்குள்ளும் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. ராஜஸ்த்தான் மாநிலத்தில் காங்கிரசிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றிய பாரதிஜ ஜனதாக் கட்சி இந்த விவகாரத்தில் அவசரப்படவில்லை. இது பற்றி மீள்பரிசீலனை செய்வதாக அறிவித்தது.

மலையாளத் தாதிகள் கறுப்பிகள்
அடுத்த அடி அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அவரது கட்சியின் நகைச்சுவைப் பரப்புரை செய்யும் குமார் விஸ்வா என்பவரால் விழுந்தது. விஸ்வா தனது மேடை நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் கேரளத்து மலையாள கறுப்புத் தோல் தாதிகளைப் பார்க்கும் எந்த ஆணும் அவர்களை "சிஸ்டர்" என்றுதான் அழைப்பான் எனக் கிண்டலடித்தார். இது ஒரு இனவாதக் கருத்து என்ற கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது. பொதுவாக வட இந்தியர்கள் தென் இந்தியர்களை குறைந்த சாதியினர் என்று ஒரு நினைப்புடன் இருப்பார்கள். இத்தனைக்கும் குமார் விஸ்வா ஒரு சாதாரண ஆளல்ல அவர் ஒரு பேராசிரியர். அவர் இந்த நகைச்சுவையைக் கூறியது ஒன்றும் சாதாரண இடமுமல்ல. கவிஞர்களின் தேசிய மாநாடு ஒன்றில் அவர் இந்த நிறவெறி நகைச்சுவையைக் கூறினார். இதில் கவனிக்கக் கூடிய இன்னும் ஒரு அம்சம் குமார் விஸ்வா இந்த நிறவெறி நகைச்சுவையச் சொன்னது 2008-ம் ஆண்டு. காங்கிரசுக் கட்சியினர் இதைத் தேடி எடுத்து யூரியூப்பில் போட்டு மீண்டும் தீ மூட்டினார்கள். கேரளாவின் ஆம் ஆத்மி கட்சியினரின் பணிமனை அடித்து நொருக்கப்பட்டது. குமார் விஸ்வா பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார்.

விக்கி ஐயாவைப்போல் காவலில்லா அரவிந்த்
இந்தியாவில் பொதுவாக மாநில அரசுகளின் கீழ் மாநிலக் காவற்துறை இருக்கும். ஆனால் விக்கிய ஐயாவின் வடமாகாண சபை போல் டில்லி மாநில அரசின் கீழ் டில்லிக்கான காவற்துறை இல்லை. டில்லிக்கான காவற்துறை மைய அரசான காங்கிரசு அரசின் உள்துறை அமைச்சின் கீழ் இருக்கின்றது. டில்லியில் ஒரு வீட்டில் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த பெண்கள் விபச்சாரமும் போதைப் பொருள் வியாபாரமும் செய்வதாக அரவிந்த் கேஜ்ரிவாலின் அமைச்சரவையின் சட்டத் துறை அமைச்சர் சோம்நாத் பார்தி குற்றம் சாட்டி அவர்களை கைது செய்யுமாறு வேண்டினார். நீதிமன்ற ஆணையில்லாமல் அவர்களைக் கைது செய்ய முடியாது என காவற்துறையினர் மறுத்து விட்டனர். ஆத்திரமடைந்த சட்ட அமைச்சர் சோம்நாத் பார்த்தி தனது ஆதரவாளர்கள் புடை சூழ அந்த வீட்டுக்குள் புகுந்து இரு இரு உகண்டா நாட்டுப் பெண்களையும் இரு நைஜீரிய நாட்டுப் பெண்களையும் பிடித்து நடுத்தெருவில் வைத்து அவர்களின் சிறுநீர் மாதிரிகளை வற்புறுத்திப் பெற்றுக் கொண்டனர். அந்தப் பெண்கள் தமது கைப்பேசிகளை எடுத்து காவற்துறையுடன் தொடர்பு கொள்ள முயன்றபொது ஆம் ஆத்மி கட்சியினர் அவர்களின் கைப்பேசிகளைப் பறித்து நிலத்தில் வீசி எறிந்து எம் நாட்டுக் காவற்துறையினரிடம் எம்மைப்பற்றி குற்றம் சாட்டுவீர்களா கறுப்பிகளே என கூறினர். இது காங்கிரசு அரசையும் வெளியுறவுத் துறை அமைச்சையும் கடும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கியது. இந்திய உள்துறை அமைச்சர் மனிஷ் திவாரி இந்தியாவும் ஆபிரிக்க நாடுகளும் பல ஆண்டுகளாகப் பேணிவந்த நிறவெறிக்கு எதிரான ஒற்றுமையான போராட்டத்தை ஆம் ஆத்மி கட்சியினர் கெடுத்துவிட்டனர் எனச் சாடினார். உகண்டா நாட்டுப் பெண் ஒருவர் சோம்நாத் பார்த்திக்கு எதிராக காவற்துறையில் புகாரும் கொடுத்துள்ளார். காங்கிரசுக் கட்சியினர் அரவிந்த் கேஜ்ரிவாலில் சட்ட அமைச்சர் சோம்நாத் திவாரி பதவி விலக வேண்டும் என கூச்சலிட்டனர். ஆபிரிக்கப் பெண்கள் டில்லியில் நிர்வாண நடனம் ஆடும் நிலையங்கள் பாலியல் தொழில் நிலையங்கள் நடத்துவதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். டில்லியில் ஒரு இளம் பெண் தீ மூட்டிக் கொல்லப்பட்டமை டென்மார்க் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டமை ஆகியவை ஆட்சி மாறினாலும் டில்லியில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மாறாது என சுட்டிக் காட்டியது. பல பெண்ணுரிமை அமைப்புக்கள் சட்ட அமைச்சர் சோம்நாத் பார்த்தி பதவி விலகவேண்டும் என வலியுறுத்துகின்றனர். அது நடக்காவிட்டால் டில்லி சட்ட சபையின் அரவிந்தின் அரசுக்கு காங்கிரசுக் கட்சியினர் வெளியில் இருந்து வழங்கும் ஆதரவை நிறுத்தலாம். எந்நேரமும் ஆட்சி கவிழும் அபாயம் உண்டு.

காங்கிரசுக்குள் குழப்பம்
தனது சட்டத்துறை அமைச்சரின் அடாவடித்தனத்தை கண்டிக்காத அரவிந்த் கேஜ்ரிவால் டில்லி மாநில அரசிடம் காவற்துறை இல்லாததால்தான் இத்தனை பிரச்சனை எனக் கூறி தனது மாநில அரசின் கீழ் காவற்துறை கொண்டு வரப்பட வேண்டும் என தனது ஆதரவாளர்களைத் திரட்டி தெருவில் இருந்து போராட்டம் ஆரம்பித்தார். இந்தப் போராட்டத்திற்கு அரவிந்த் எதிர்பார்த்த அளவு ஆதரவாளர்கள் திரளவில்லை. ஆனாலும் டில்லியில் தெருக்கள் மூடப்பட்டு பெரும் போக்கு வரத்து நெருக்கடிஏற்பட்டது. ஜனவரி 26-ம் திகதி இந்தியக் குடியரசு தினம் என்பதாலும் அதற்கு ஜப்பானியத் தலைமை அமைச்சர் தலைமை விருந்தினராக கலந்து கொள்வதாலும் டில்லியில் பெரும் பாதுகாப்பு ஏற்பட்டுகள் செய்ய வேண்டி இருந்தது. அரவிந்த் தெருவில் இருந்து போராட்டம் செய்வதால் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு பின்னடைவு ஏற்பட்டது. பின்னர் மைய அரசின் உட்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேயும் அரவிந்த் கேஜ்ரிவாலும் பேச்சு வார்த்தை நடாத்தி சட்ட அமைச்சர் சோம்நாத் பார்த்தியின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்காத மூன்று காவற்துறையினரையும் சம்பளத்துடன் கூடிய விடுமுறையில் அனுப்புவதாக ஒத்துக் கொள்ளப்பட்டது. இந்த உடன்பாடு காங்கிரசின் தலைமைக்குத் தெரியாமல் செய்யப்பட்டதால் சோனியாவும் அவரது பேபி ராகுலும் கடும் ஆத்திரம் அடைந்தனர். காங்கிரசின் உச்ச சபை கூடி உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேயைக் கண்டித்தது. பாரதிய ஜனதாக் கட்சியினர் அரவிந்தின் போராட்டம் தோல்வியில் முடிவடைந்ததாக கேலி செய்தனர்.

ஊழல் ஒழிப்பு எங்கே
ஊழலை ஒழித்து அரசியலைச் சுத்தப்படுத்துவேன் என்ற கூக்குரலுடன் அரசியலுக்கு வந்த அரவிந்த் கேஜ்ரிவால் ஊழல் ஒழிப்பைத் தவிர வேறுபல செய்கின்றார். நீண்ட கால அரசியல் அனுபவம் பெற்ற காங்கிரசுக் கட்சியினர் எதிர்க் கட்சிக்குக் கிடைக்கவிருக்கும் வாக்குகளைப் பிரித்தெடுப்பதில் பலே கில்லாடிகள். அதற்குரிய பணமும் அவர்களிடம் இருக்கிறது.  காங்கிரசுக் கட்சியினர் முலாயம் சிங் யாதவ்வின் சமாஜவாதக் கட்சியையும் மாயாவதியின் பகுஜன் சமாஜவாதக் கட்சியையும் எதிர்க்கட்சிகளின் வாக்குகளைப் பிரிக்கப்பயன்படுத்தினர். 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் விஜயகாந்தைத் தனித்துப் போட்டியிட வைத்தது எதிர்க்கட்சிகளின் வாக்கை காங்கிரசுக் கட்சியினர் பிரித்தாகக் குற்றம் சாட்டப்பட்டது. கடன் தொல்லையில் இருந்த்து விடுபட அது விஜயகாந்திற்கும் வசதியாக இருந்த்தாகவும் சொல்லப்பட்டது. காங்கிரசுக் கட்சி அரவிந்த் கேஜ்ரிவாலையும் எதிர்க்கட்சிகளின் வாக்கைப் பிரிக்கப் பயன்படுத்துவதாக ஐயம் எழுகின்றது. அரவிந்த் கேஜ்ரிவால் தலைப்புச் செய்திகளில் அடிக்கடி வந்து பாரதிய ஜனதாக் கட்சியின் தலைம அமைச்சர் வேட்பாளர் நரேந்திர மோடியை ஓரம் கட்டுகிறார்.

Sunday, 19 January 2014

தாய்லாந்தில் தொடரும் ஆர்ப்பாட்டமும் அண்ணன் காட்டிய வழியும்

சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்தது அரபு வசந்தம். மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியாளர்களுக்கு எதிராக பணக்காரர்கள் கிளர்ந்து எழுந்து போராடுவது தாயலாந்தில். தாய்லாந்தில் நடப்பது பல நூறு ஆண்டுகளாக உலகெங்கும் நடக்கும் உள்ளவர்களுக்கும் இலாதவர்களுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டமே.

 தாய்லாந்தில் பியூ தாய் கட்சி ஆட்சியில் இருக்கும் போது மக்களுக்கான சமூக நலன் திட்டங்களை செயற்படுத்தும். மக்களுக்கான இலகு மருத்துவ வசதி விவசாயிகளுக்கான உதவி போன்றவற்றை சரிவரச் செய்யும். இதற்கான அரச செலவைச் சமாளிக்க சூதாட்டம், மதுபான விற்பனை போன்றவற்றிற்கான வரியை அதிகரிக்கப்படும். இதனால் மக்களின் ஆதரவு பியூ தாய்க் கட்சிக்கு எப்போதும் உண்டு. தேர்தல் என்று வரும்போது பியூ தாய் கட்சி வெற்றி பெறும். உடனே எதிர்க்கட்சியான மக்களாட்சிக் கட்சி தேர்தலில் குழறுபடி என்று பெரும் ஆர்ப்பாட்டங்கள் செய்யும். இது தாய்லாந்தில் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் தம்மை மக்களாட்சிக்கான கூட்டமைப்பு என அழைத்துக் கொள்கின்றனர். இவர்கள் மஞ்சள் சட்டை போட்டுக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வதால் இவர்களை மஞ்சள் சட்டைக்காரர்கள் என அழைக்கப்படுகின்றனர். எதிர்க் கட்சியினர் ஆட்சிக்கு வந்தால் பியூ தாய் கட்சினர் செஞ்சட்டைக்காரர்கள் என்னும் பெயரில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவார்கள். மக்கள் வலுக் கட்சிய் என்னும் பெயரில் தொடக்கப்பட்ட கட்சி தடை செய்யப்பட்டதால் இருதடவை பெயர்களை மாற்றிக் கொண்டது. தாய்லாந்தில் இரு பிரிவினர் உள்ளனர். ஒன்று நடுத்தர வர்கத்தினரையும் ஏழைகளையும் கருத்தில் கொண்ட கட்சியினர். இக்கட்சியினரே மக்கள் வலுக் கட்சி, பியூ தாய் கட்சி, தாய் ரக் தாய் கட்சி என்னும் பெயர்களில் செயற்படுகின்றனர்.  மற்றது அரச குடும்பம், படைத்துறை, பணக்காரர்களின் ஆதரவைக் கொண்ட மக்களாட்சிக் கட்சி.

தாய்லாந்தில் தேர்தல் மூலம் மக்கள் அரசைத் தெரிவு செய்வதும் பின்னர் அந்த அரசை படைத்துறையினர் கவிழ்ப்பதும் நடப்பதுண்டு. மஞ்சள் சட்டைக்காரர்கள் சிவப்புச் சட்டைக்காரர்கள் என இரு பிரிவாக மக்கள் பிரிந்து ஆர்ப்பாட்டங்கள் செய்வார்கள். இப்போடு ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் முதலாளித்துவவாத மஞ்சள் சட்டைக்காரர்கள்.

கற்றறிந்த மேல் தட்டு வர்க்கத்தினரின் வாக்குகளுக்கு கல்லாத கிராமப்புற மக்களின் வாக்குகளிலும் பார்க்க ஆட்சியாளர்கள் அதிக மதிப்புக் கொடுக்க வேண்டும் என்பது மஞ்சள் சட்டைக்காரர்களின் தத்துவமாக இருக்கிறது. எமக்கு வாக்களிக்காத மேல் தட்டு வர்க்கத்தினரைப்பற்றி நாம் கவலைப்படப்போவதில்லை என்பது சிவப்புச் சட்டைகாரர்களின் அரசியல் கொள்கையாக இருக்கிறது.

2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த படைத்துறையினரின் ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து தக்சின் ஷினவத்ராவின் மக்கள் வலுக் கட்சி தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் துபாயில் இருந்த படியே தாய் ரக் தாய் கட்சியை (Thai Rak Thai party) தேர்தலில் நிறுத்தி வெற்றி பெறச் செய்து சமக் சுந்தர்வெஜ் தலைமை அமைச்சராக்கப்பட்டார். மஞ்சள் சட்டைக்காரர்கள் சமக் சுந்தர்வெஜ் தக்சின் ஷினவதாராவின் கைப் பொமை என எதிர்ப்புக் காட்டினார்கள். சமக் சுந்தர்வெஜ் தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு பணம் பெற்றார் என்ற குற்றச்சாட்டில் பதவியில் இருந்து விலக்கப்பட்டார். பின்னர் வெளிநாட்டில் இருக்கும் தக்சின் ஷினவத்ராவின் மைத்துனர் சோமாச்சி வொங்சவத் (Somchai Wongsawat) தலைமை அமைச்சரானார். இவரும் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். பின்னர் எதிர்க்கட்சியினர் 2010இல் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். இவர்களின் ஆட்சியில் அதிருப்தி அடைந்த தக்சின் ஷினவதாராவின் கட்சியினர் செஞ்சட்டைக்காரர்கள் என்னும் பெயரில் பெரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இவர்களுக்கு எதிராக கடுமையான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த தேர்தலில் தக்சின் ஷினவத்ராவின் அழகிய இளம் தங்கை யிங்லக் தலைமை அமைச்சராக வெற்றி பெற்றார். 2012-ம் ஆண்டு முன்னாள் ஆட்சியாளர்களுக்கு எதிராக செஞ்சட்டை ஆர்ப்பாட்டக்காரர்களைக் கொலை செய்த குற்றம் சுமத்தப்ப்பட்டது. 2013-ம் ஆண்டு தங்கை யிங்லக் தனது அண்ணன் உடபடப் பல முன்னாள் ஆட்சியாளர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க முயற்சி செய்தபோது மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின. தங்கை யிங்லக் தனது பொது மன்னிப்பு வழங்கும் திட்டத்தையும் கைவிட்டார். ஆனாலும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன. 2013-ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் மஞ்சள் சட்டைக்காரர்கள் ஒரு இலட்சம் மக்களைத் தெருவில் இறக்கியுள்ளனர். 2013 நவமர் மாதம் அவர்கள் தலைமை அமைச்சரின் பணிமனையையும் காவற்துறைத் தலைமைப் பணிமனையையும் ஆக்கிரமிக்கப் போவதாக அறிவித்தனர். வன்முறையை அவர்கள் மீது கட்டவிழ்த்து விடாமல் அவர்கள் அவ்விரு பணிமனைகளையும் கைப்பற்ற அனுமதிக்கப்பட்டனர்.

பாங்கொக்கை மூடும் போராட்டம்
ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து தங்கை யிங்லக் பாராளமன்றத்தைக் கலைத்து 2014 பெப்ரவரி மாதம் தேர்தல் நடக்கும் என அறிவித்தார். தேர்தலில் தாம் வெற்றியடையப் போவதில்லை என உணர்ந்த மஞ்சள் சட்டைக்காரர்கள் தாம் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக அறை கூவல் விடுத்ததுடன் தேர்தல் நடக்க விடப்போவதில்லை எனவும் அறிவித்தனர். தேர்தல் வேட்பாளர்கள் தேர்தல் பணிமனை சென்று வேட்பு மனு பதிவு செய்யவிடாமல் மஞ்சள் சட்டைக்காரர்கள் தடுத்தனர். மஞ்சள் சட்டைக்காரர்கள் தமது ஆர்ப்பாட்டத்திற்கு Bangkok shutdown எனப் பெயரிட்டுள்ளனர். இந்த ஆண்டு (2014) ஜனவரி 12-ம் திகதியில் இருந்து அவர்கள் தமது ஆர்ப்பாட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். தலைநகர் பாங்கொக்கை மஞ்சள் சட்டைக்காரர்கள் ஆக்கிரமித்து பல பணிமனைகளுக்கான மின்சார விநியோகத்தைத் தடை செய்தனர். தங்கை யிங்லக்கின் தலைமையிலான இடைக்கால அரசை நீக்கி நிபுணர்களைக் கொண்ட ஒரு இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என மஞ்சள் சட்டைக்காரர்களின் தலைவர் சுதேப் அறிவித்துள்ளார். தாமது ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கை யிங்லக்கைக் கைப்பற்றி இடைக்கால அரசுத் தலைவர் பதவியில் இருந்து விலக்குவோம் என சுதேப் தௌக்சுபன் கூறியுள்ளார். சுதேப் தௌக்சுபனின் இந்த மாதிரியான வன்முறைப் பேச்சுக்களுக்காக அவர்மீது கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்போவதில்லை என உறுதியாக இருக்கிறார் யிங்லக்.

மக்களாட்சி முறைமைப்படி தேர்தல் நடத்த விடாமல் தொடர் ஆர்ப்பாட்டங்களைச் செய்து தாய்லாந்தில் பணக்காரர்களுக்கு சார்பான ஒரு படைத்துறை ஆட்சியை அமைப்பதை மஞ்சள் சட்டைக்காரர்கள் விரும்புகிறார்களா என்ற ஐயம் இப்போது எழுந்துள்ளது.  மஞ்சள் சட்டைக்காரர்கள் வெளிநாட்டில் இருக்கும் அண்ணனினதும் தாய்லாந்தில் இருக்கும் தங்கையினதும் கட்சியினர் மக்களுக்கான சமூக நலன் திட்டங்களை அறிவித்து அவர்களால் தேர்தலில் பெரும் வாக்கு வேட்டையாட முடியும் என கருதுகின்றனர். ஆனால் ஆர்ப்பாட்டங்களால் தாய்லாந்தின் பொருளாதார வளர்ச்சி 2013-ம் ஆண்டு பாதியாகக்  குறைந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது முதலீட்டில் நான்கு பில்லியன்களை தாய்லாந்தில் இருந்து திரும்பப் பெற்றுவிட்டனர்.

தாய்லாந்தின் நகரவாசிகளும் நடுத்தர வர்க்கத்தினரும் மஞ்சள் சட்டைக்காரர்களின் தொடர் ஆர்ப்பாட்டங்களால் தமது அன்றாட வாழ்வு பெரிதும் பாதிக்கப்படுவதால் மிகவும் சலிப்படைந்து வருகிறார்கள். இதனால் மஞ்சள் சட்டைக்காரர்களுக்கான ஆதரவு குறைந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. 

மக்களாட்சிப்படி எல்லா நாடுகளிலும் தேர்தல் நடைபெற்று ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனப் பரப்புரை செய்யும் ஐக்கிய அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் தாய்லாந்தில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களையும் மஞ்சள் சட்டைக்காரர்கள் சட்ட விரோதமாக அரச பணிகளை நடக்க விடாமல் தடுப்பதையும் பற்றி இதுவரை பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இலண்டனில் இருந்து செயற்படும் Amnesty International எனப்படும் பன்னாட்டு மன்னிப்பு சபை ஆர்ப்பாட்டக்காரர்களின் மனித உரிமைகள் பேணப்பட வேண்டும் என்கிறது. அமெரிக்காவின் மனித உரிமை கண்காணிப்பகம் 2010-ம் ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது கொல்லப்பட்ட 98 செஞ்சட்டை ஆர்ப்பாட்டக்காரர்களை யிங்லாக் தண்டிக்கவில்லை எனக் குற்றம் சாட்டுகிறது. பெரும்பாலான மேற்கத்தைய ஊடகங்கள் அண்ணனையும் தங்கையையும் ஊழல் மிக்க ஆட்சியாளர்களாகவே சித்தரிக்கின்றன.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...