Friday, 17 January 2014

ஜப்பானின் நட்புக்கரமும் பற்றத் தயங்கும் இந்தியாவும்.

இந்தியாவும் ஜப்பானும் தமது நாடுகளின் வெளிநாட்டமைச்சர்களும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களும் தேவை ஏற்படும்போது கூடிப் பேசுவதை இருவருடன் இருவர் பேச்சு வார்த்தை எனப் பெயரிட்டுள்ளனர். ஜனவரி ஆறாம் திகதி இரு நாடுகளுக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தையில் கடல்சார் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்தியாவின் குடியரசுத் தினத்திற்கு ஜப்பானியத் தலைமை அமைச்சர் சின்சோ அபே தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.

ஜப்பானியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் இற்சுனொரி ஒனோடேராவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஏ கே அந்தோனியும் புது டில்லியில் சந்தித்து உரையாடிய போது இருவருடன் இருவர் என்ற ரீதியில் பேசுவதாக முடிவெடுக்கப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது ஜப்பானிடம் இருந்து இந்தியா சின்மாய்வா யூஎஸ் -2  என்னும் ஈருடக விமானங்களை வாங்கவும் ஒத்துக் கொள்ளப்பட்டது. சின்மாய்வா யூஎஸ் -2 விமானங்கள் கடல் மேற்பரப்பில் படகு போல் மிதக்கவும் கூடியவை.இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்த பின்னர் ஜப்பான் எந்த ஒரு நாட்டிற்கும் படைக்கலன்கள் விற்பதில்லை என்ற முடிவில் இருந்து மாறி இந்தியாவிற்கு இந்த ஈரூடக விமானங்களை விற்க முன்வந்துள்ளது. ஜப்பானின் இந்த மாற்றம் சீன விரிவாக்கத்திற்கு எதிராக ஜப்பானும் இந்தியாவும் நெருங்கி ஒத்துழைக்கவிருக்கின்றன என்பதற்குக் கட்டியம் கூறுகின்றது. 1998இல் இந்தியா மேற்கொண்ட அணுக்குண்டுப் பரிசோதனையைத் தொடர்ந்து ஜப்பான் இந்தியாமீது சில பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது.

ஜப்பானியத் தலைமை அமைச்சர் சின்சோ அபே 2007-ம் ஆண்டு எழுதிய அழகிய நாட்டை நோக்கி: ஜப்பானிற்கான எனது பார்வை (Towards a Beautiful Country: My Vision For Japan)  என்னும் நூலில் இந்திய ஜப்பானிய உறவின் முக்கியத்துவத்தை எதிர்வு கூறி இருந்தார். இதுவரை ஜப்பானை ஆண்டவர்களில் சின்சே அபேயே இந்தியாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த ஒருவராவார். 2013-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சின்சோ அபே தனது மக்காளாட்சிப் பாதுகாப்பு வைரம் (Democratic Security Diamond) என்னும் முன் மொழிவில் அமெரிக்கா, இந்தியா, இந்தோனேசியா, வியட்னாம், ஒஸ்ரேலியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், புரூனே ஆகிய நாடுகள் பாதுகாப்புத் துறையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவுடன் இணைந்து படைக்கல உற்பத்தியில் ஈடுபடவும் ஜப்பான் விரும்புகிறது. இரு நாடுகளின் தொழில்நுட்பத்தையும் இந்தியாவின் குறைந்த ஊதியத் தொழிலாளர்களையும் வைத்து மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த செலவில் இரு நாடுகளாலும் படைக்கல உற்பத்தி செய்ய முடியும். இது இரு நாடுகளின் படைக்கலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன் உலகின் பல நாடுகளுக்கு படைக்கலன்களை விற்பனை செய்யவும் முடியும்.


ஜப்பான் நாடானது இந்துமாக்கடல் மற்றும்  பசுபிக்கடல் நாடுகளையும்  அமெரிக்காவையும் இணைத்து ஒரு பெரும் கூட்டணியை சீனாவிற்கு எதிராக அமைக்க விரும்புகின்றது. இதற்கு இந்தியா சற்றுத் தயக்கம் காட்டி வருகின்றது. இந்தியா சீனாவைப் பகைக்க விரும்பவில்லை. இதற்கு இரு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று இந்திய சீன வர்த்தகம். இரண்டாவது ஐக்கிய நாடுகள் சபையில் சீனாவின் ஆதரவுடன் இந்தியா ஒரு வல்லரசாக விருப்பம் கொண்டுள்ளது. பல இந்தியப் பெரு முதலாளிகள் இந்திய சீன வர்த்தகத்தால் பெரும் இலாபம் ஈட்டுகிறார்கள்.

இந்திய சீன வர்த்தகத்தைப் பற்றி வாசிக்க இந்த இணைப்பில் சொடுக்கவும்:
சீன வேலைப்பசிக்கு இரையாகும் இந்தியப் பொருளாதாரம்.

Tuesday, 14 January 2014

ஈராக்கிலும் சிரியாவிலும் அல் கெய்தா மோதல்

2003-ம் ஆண்டு ஈராக்கை ஆக்கிரமித்த ஐக்கிய அமெரிக்கப்படைகள் 2011-ம் ஆண்டு அங்கிருந்து நாலாயிரத்திற்கு மேற்பட்ட உயிரிழப்புக்களுடனும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட காயப்பட்ட படையினருடனும் வெளியேறின. 2011-ம் ஆண்டின் பின்னரும் ஒரு தொகுதி படையினரை அமெரிக்கா ஈராக்கில் வைத்திருக்க விரும்பியது. ஆனால் அது நடக்கவில்லை. அமெரிக்கா தான் ஈராக்கில் தோல்வியடைந்ததாக அறிவிக்கவில்லை. ஆனால் 2013-ம் ஆண்டில் ஈராக்கில் அல் கெய்தாவின் ஆதிக்கம் அதிகரித்தமை ஈராக்கில் அமெரிக்காவின் படையெடுப்பு தோல்வியில் முடிவடைந்ததாகக் சுட்ட்டிக் காட்டுகின்றது.

ஈராக்கில் அமெரிக்காவிற்கு ஆதரவாகச் செயற்பட்டவர்கள் 6000இற்கு மேற்பட்டவர்களை அல் கொய்தா 2013-ம் ஆண்டு கொன்று குவித்தது.
ஈராக்கில் சுமார் அறுபது விழுக்காடு சியா முசுலிம்களும் சுமார் முப்பத்தைந்து விழுக்காடு சுனி முசுலிம்களும் வாழ்கின்றனர்.
ஈராக்கின் சுனி முசுலிம்கள் வாழும் பகுதிகளை ஐ.எஸ்.ஐ.எஸ் எனப்படும் அல் கெய்தா ஆதரவு இயக்கமான Islamic State of Iraq and al-Sham தன் வசமாக்கிக் கொண்டு வருகின்றது. ஈராக்கின் அன்பர் மாகாணத்தில் பல பிரதேசங்களை தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்கிறது. அபு பக்கர் அல் பக்தாடி தலைமையில் இயங்கும் ஐ.எஸ்.ஐ. எஸ் இயக்கம் சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியவுடன் அங்கு ஜபத் அல் நஸ்ரா என்ற அமைப்பை உருவாக்கியது. தீவிரமாகப் போராடிய ஜபத் அல் நஸ்ரா சிரியாவில் பல வெற்றிகளை ஈட்டியது. ஆனால் நளடைவில் ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கும் ஜபத் அல் நஸ்ராவிற்கும் இடையில் பிளவு ஏற்பட்டுவிட்டது. அபு முகம்மது அல் ஜல்வானியின் தலைமையில் ஜபத் நஸ்றா தனிய இயங்கத் தொடங்கியது.  ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு லெபனானிலும் தனது களமுனையைத் திறந்துள்ளது. அங்கு சிய முசுலிம்களின் அமைப்பான ஹிஸ்புல்லாவிற்கு எதிராகப் பல தாக்குதல்களை நடாத்தியது.

யேமனில் செயற்படும் அல் கெய்தா   அரபுக் குடாநாட்டிற்கான அல் கெய்தா என்னும் பெயரிலும் சுருக்கமாக AQAP எனவும் அழைக்கப்படுகின்றது. இசுலாமிய மக்ரெப்பிற்கான அல் கெய்தாAL Qaeda in the Islamic Maghreb (AQIM) என சுருக்கமாக அழைக்கப்படுகின்றது.

டிசம்பர் 31-ம் திகதி ஐ.எஸ்.ஐ அமைப்பினர் அஹ்ரர் அல் ஷாம் அமைப்பின் தளபதியும் மருத்துவருமான ஒருவரின் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உடலை கையளித்தனர். இதைத் தொடர்ந்து ஈராக்கிலும் சிரியாவிலும் செய்ற்படும் எல்லாப் போராளிக் குழுக்கழும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமப்பினருக்கு எதிராகப் போர் தொடுத்துள்ளனர். ஈராக்கில் பல சியா இசுலாமியர்களுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ் கண்மூடித்தனமான தாக்குதல்களை அடிக்கடி மேற்கொள்ளும். இதை அல் கெய்தாவின் பின் லாடனுக்கு பின்னரான தலைவர் ஐமன் ஜவஹாரி கடுமையாகக் கண்டித்தார்.

ஈராக்கிலும் சிரியாவிலும் அல் கெய்தா ஆதரவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ்இற்கு என்று ஒரு பிரதேசம் இருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. அதை ஒழித்துக் கட்ட ஈராக்கிய அரசிற்கு அமெரிக்கா சிறிய ஆளில்லாப் போர் விமானங்கள் உட்படப் பல படைக்கலன்களை வழங்கியுள்ளது. மாலியில் அல் கெய்தா பெரும் நிலப்பரப்பைக் கைப்பற்றிய போது பிரெஞ்சுப் படைகள் அங்கு ஆக்கிரமித்து அல் கெய்தாவிடமிருந்து பெரும் நிலப்பரப்பை மீட்டன.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்த வெளிநாட்டுப் போராளிகள் தமது கட்டுப்பாட்டில் இருந்த சிரியப் பிரதெசங்களில் மதச் சட்டங்களைக் கடுமையாக அமூல்படுத்தினார்கள். இப்போது எல்லா இயக்கங்களும் கூடி ஐ.எஸ்.ஐ.எஸ்இற்கு எதிராகத் தாக்குதல் நடாத்துவதால் தமது கட்டுப்பாட்டில் இருந்த பல பிரதேசங்களைக் கைவிட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் தப்பி ஓடுகின்றது. ஆனாலும் ஈராக்கில் ஃபலூஜா நகரை ஐ.எஸ்.ஐ.எஸ் ஜனவரி 4-ம் திகதி கைப்பற்றியது. கடந்த இரண்டு வாரங்களாக ஈராக்கிய அரச படைகளுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருக்கும் இடையில் அன்பர் மாகாணத்தில் கடும் சண்டை நடக்கின்றது.

துருக்கித் தலைநகர் இஸ்தான்புல்லில் இருந்து செயற்படும் இடைக்கால சிரிய அரசான சிரியத் தேசிய சபை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருக்கும் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கும் எதிராகப் போராடக் கூடிய சுதந்திரத் தேசிய சபை என்னும் ஒரு கூட்ட்டமைப்பை உருவாக்க முயற்ச்சி செய்கின்றது. மதவாத இசுலாமியப் போராளிகளின் கூட்டமைப்பான இசுலாமிய முன்னணியையும் தம்முடன் இணைக்க இடைக்கால அரசு எனப்படும் சிரியத் தேசிய சபை முயற்ச்சி செய்கின்றது. இது வெற்றி அளித்தால் ஜனவரி இறுதியில் ஜெனிவாவில் நடக்கும் பேச்சு வார்த்தையில் அசாத்திற்கு எதிரான போராளிகள் ஒன்றாக இணைந்து பங்கு பற்றுவார்கள். இவர்களுக்கு துருக்கியினதும் சவுதி அரேபியாவினதும் ஆதரவு உண்டு. இந்த இணைப்பு முயற்ச்சி மதவாதப் போராளிக் குழுக்களை மிதவாதக் குழுக்களுடன் ஒன்றிணைக்கும். அத்துடன் மதவாதப் போராளிகளுக்குள் பிளவையும் ஏற்படுத்தலாம்.

Monday, 13 January 2014

எகிப்திற்கான புதிய அரசியல் யாப்பு.

கடந்த நான்கு ஆண்டுகளில் எகிப்திய மக்கள் மூன்று புதிய அரசியலமைப்பைக் கண்டுள்ளனர். அமைதியை வேண்டி நிற்கு எகிப்திய மக்கள் தொடர் ஆர்ப்பாட்டங்களாலும் அதற்கு எதிரான அடக்கு முறைகளாலும் வெறுப்படைந்துள்ளனர்.

2011-ம் ஆண்டு எகிப்தில் நடந்த மக்கள் புரட்சியின் பின்னர் நடந்த தேர்தலில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் மொஹமட் மேர்சி வெற்றி பெற்றார். அவர் எகிப்தியப் படைத்துறையினரை ஓரம் கட்டி தனது பிடியின் கீழ் நாட்டைக் கொண்டுவர முயன்ற வேளை அவருக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்தனர். பின்னர் படையினர் மொஹமட் மேர்சியின் ஆட்சியைக் கலைத்து அவரை வீட்டுக்காவலில் வைத்ததுடன் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்தனர். தற்போது படைத்துறை ஆட்சியாளர்கள் எகிப்திற்கு என ஒரு புதிய அரசமைப்பை உருவாக்கி அதன் மீது மக்களின் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை ஜனவரி மாதம் 14-ம் 15-ம் திகதிகளில் நடாத்துகின்றனர். இதில் ஐந்து கோடிக்க்கு மேற்பட்ட எகிப்திய வாக்காளர்கள் வாக்களிக்கவிருக்கின்றனர். எகிப்திய படைத்துறைத் தளபதி அப்துல் ஃபட்டா அல் சிசி இந்தக் கருத்துக் கணிப்பு தனக்குச் சாதகமாக அமைந்தால் தொடர்ந்து நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிபர் தேர்தலைத் தொடர்ந்து பாராளமன்றத் தேர்தலும் நடைபெறும். மொஹமட் மேர்சி எகிப்தின் அதிபராக இருக்கும் போது இசுலாமிய மத நெறிப்படி நடக்கும் அப்துல் ஃபட்டா அல் சிசியை படைத்துறைத் தளபதியாக்கினார். அல் சிசியின் மனைவியும் இசுலாமைய முறைப்படி முகத்தை மூடி ஆடை அணிபவர். ஆனால் தன்னை நியமித்த மேர்சியை அல் சிசி பதவியில் இருந்து அகற்றினார். இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு புதிய அரசியலமைப்பிற்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை புறக்கணிக்கும்படி அறைகூவல் விடுத்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக எகிப்தின் படைத்துறை ஆட்சியாளர்கள் தமக்கு எதிரானவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சில செல்வாக்கு மிக்க இசுலாமிய மதத் தலைவர்களும் பல்கலைக் கழகங்களும் எகிப்தியப் படைத்துறையினரின் புதிய அரசியலமைப்பை ஆதரிக்கின்றனர். புனிதப் போராளிக் குழுவான நூர் இயக்கமும் புதிய அரசியலமைப்பை ஆதரிக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக எகிப்தில் மாறி மாறிப் புரட்சிகள் நடந்தமையாலும் தொடர் ஆர்ப்பாட்டங்களாலும் பல எகிப்திய மக்கள் சலிப்படைந்துள்ளனர்.  ஒரு அமைதியான எகிப்தை அவர்கள் வேண்டி நிற்கின்றனர். ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட தடைசெய்யப்பட்ட இசுலாமைய சகோதரத்துவ அமைப்பின் முன்னணி உறுப்பினர்கள் ஆயிரம் பேரில் பெரும்பான்மையானோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் அல்லது தலைமறைவாக வெளிநாடுகளுக்குச் சென்று விட்டனர். இசுலாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு சார்ப்பான சில மாணவர்கள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...