Thursday, 12 June 2014

ஈராக்கில் அமெரிக்காவின் முகத்தில் கரி பூசப்படுகின்றது.

மத சார்பற்ற அரசு, நாட்டில் நல்ல சட்டமும் ஒழுங்கும், சீரான நீர் விநியோகம், மலிவு விலையில் மின் விநியோகம் இப்படி சதாம் ஹுசேய்னின் கீழ் இருந்த ஈராக்கில் பேரழிவு விளைவிக்கும் வேதியியல் படைக் கலன்கள் இருக்கிறது எனச் சொன்னது அமெரிக்கா. பின்னர் நேட்டோப்படைகளுடன் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்து அங்கு பேரழிவை விளைவித்தது. இப்போது ஈராக் பெரும் உள்நாட்டுப் போரில் அகப்பட்டுள்ளது. மத்திய கிழக்கிலேயே கிறிஸ்த்தவர் ஒருவரை அமைச்சராகக் கொண்ட ஆட்சி சதாம் ஹுசேயினுடையதாக இருந்தது.

அமெரிக்காவும் பிரித்தானியாவும் பல பில்லியன்கள் செலவழித்து பயிற்ச்சி கொடுத்த ஈராக்கிய அரச படையினர் ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளைக் கண்டதும் தமது சீருடைகளைக் களைந்து குடிமக்கள் ஆடைகளை அணிந்து கொண்டு தமது படைக்கலன்களையும் கைவிட்டு புகை பிடித்த எலிகளைப் போல் தலை தெறிக்க ஓடுகின்றனர்.    ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மோசலை 1300 போராளிகள் ஒரு சில மணித்தியாலங்களுக்குள் கைப்பற்றினர். அத்துடன் அவர்கள் திக்கிரி நகரையும் கைப்பற்றியுள்ளனர். அவர்கள் மாகாண அரசக் கட்டிடம், காவற்துறைத் தலைமைச் செயலகம், பன்னாட்டு விமான நிலையம், இரு தொலைக்காட்சி நிலையங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றியதுடன் சிறைகளை உடைத்து அங்கிருந்த தமது போராளிகளையும் விடுவித்தனர். மேலும் அவர்கள் மோசுல் நகரில் இருந்த துருக்கியின் துணைத் தூதுவரகத்தைக் கைப்பற்றி அங்கிருந்து மூன்று பிள்ளைகள் உட்பட 80 பேரைப் பணயக் கைதிகளாக்கினர். ஐந்து இலட்சம் பேர் ஒரு நாளில் இடப்பெயர்வுக்கு உள்ளாகினார்கள். பிஜி நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தையும் மின் உற்பத்தி நிலையத்தையும் அவர்கள் தம் வசமாக்கினார்கள். 

 ஐ.எஸ்.ஐ.எஸ் இன் கட்டுப்பாட்டில் இப்போது சிரியாவின் அலெப்பே நகரின் வடக்கில் இருந்து பாக்தாத்தின் கிழக்கே உள்ள ஃபல்லுஜா நகரம் வரை ஒரு பெரும் நிலப்பரப்பு இருக்கின்றது.

ஐ.எஸ்.ஐ.எஸ் அபூபக்கல் அல் பக்தாடி தலைமையில் இயங்கும் ஒரு சுனி முசுலிம் அமைப்பாகும். Islamic State of Iraq and Syria    என்பதன் சுருக்கமே ஐ.எஸ்.ஐ.எஸ் ஆகும். அமெரிக்கா ஈராக்கில் இருந்து வெளியேறும் போது ஒரு தொகைப் படையினரை அங்கு வைத்திருக்க விரும்பியது. அப்படைகள் செய்யும் குற்றங்களை அமெரிக்கச் சட்டப்படி விசாரிப்பதா அல்லது ஈராக்கிய சட்டப்படி விசாரிப்பதா என்ற இழுபறி ஈராக்கிய அரசுக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையில் இருந்ததால் அமெரிக்கப் படைகள் ஈராக்கில் இருந்து முற்றாக வெளியேறின. இந்த அமைப்பை  Islamic State of Iraq and the Levant என்றும் அழைப்பர். மற்ற இசுலாமியப் போராளி அமைப்புக்கள் சிரியாவில் அல் அசாத்தின் ஆட்சியைக் கவிழ்க்கப் போராடிக் கொண்டிருக்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ்  அமைப்பு தனக்கு என ஒரு நாட்டை உருவாக்க முயன்று கொண்டிருக்கின்றது.     அல் கெய்தாவின் விருப்பமும் அதுவே. ஐ.எஸ்.ஐ.எஸ் அல் கெய்தாவின் ஒரு இணை இயக்கமாக இருந்தது. பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ் சிரியாவில் செய்த சகோதரக் கொலைகளால் அல் கெய்தா அதிருப்தி அடைந்து தனக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கும் தொடர்பு இப்போது இல்லை என 2014-ம் ஆண்டு ஜனவரியில் அறிவித்தது.  துருக்கி ஐ.எஸ்.ஐ.எஸ் கைப்பற்றி வைத்துள்ள தனது நாட்டுக் குடிமக்களுக்கு ஏதாவது பாதகம் நடந்தால் ஐ.எஸ்.ஐ.எஸ்  மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என மிரட்டுகிறது. நேட்டோவின் ஓர் உறுப்பு நாடான துருக்கி நேட்டோவின் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.  அமெரிக்காவின் உதவியை ஈராக் கோரியுள்ளது. அமெரிக்கா மீண்டும் படைத்துறை ரீதியாகத் தலையிடாமல் ஈராக்கை ஐ.எஸ்.ஐ.எஸ் இடமிருந்து காப்பாற்ற முடியாது. 

ஈராக்கை ஆட்சி செய்யும் சியா முசுலிமான நௌரி மலிக்கி சுனி முசுலிம்களின் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மீது கூட வன் முறையைக் கட்டவிழ்த்து விடுவார். தேசிய எண்ணெய் வளத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை சுனி முசுலிம்களுடன் பகிர்ந்து கொள்வதில்லைபல முக்கிய சுனி முசுலிம் அரசியல் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் ஒரு ஊழல் நிறைந்த ஆட்சியை நடத்துகிறார். இதானால் சுனி முசுலிம்களுக்கு ஈராக்கிய ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்ட கடும் அதிருப்தியை ஐ.எஸ்.ஐ.எஸ் சரியாகப் பயன்படுத்தி வெற்றி பெற்று வருகின்றது. ஈராக்கியப் படையினரின் பதவி உயர்வுகள் சரியான முறையில் த்குதி அடிப்படையில் மேற்கொள்ளாமல் அரசியல் அடிப்படையில் மேற் கொண்ட படியால் அரச படையினரிடையே பெரும் குழப்பம் நிலவுகின்றது. அவர்களின் மனோ நிலை பாதிக்கப்பட்டுள்ளது.  ஈராக்கிய ஆட்சியாளர்களுக்கு சியா முசுலிம் நாடான ஈரானின் ஆதரவு உண்டு. ஆனால் ஈரானிற்கு இப்போது பொருளாதாரத் தடையில் இருந்து சற்று ஆறுதல் பெற துருக்கியின் நட்பு பெரிதும் தேவைப்படுகின்றது. இதனால் ஈரானின் நிலை ஒரு இருதலைக் கொள்ளி எறும்பு போன்றதாகும். 
நேட்டோப் படைகள் மீண்டும் ஈராக்கில் கால் பதிக்க மாட்டா. இதனால் ஈராக்கில் நிலைமை சிரியாவிலும் மோசமாகலாம். 


No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...