Monday, 28 April 2014

ஆட்டம் காணும் இரசியப் பொருளாதாரமும் அசையாத புட்டீனும்

உலக நிலப்பரப்பின்  ஐந்தில் ஒரு பகுதியை மீண்டும்  தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர  இரசியா முயல்கின்றது.    முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை மீண்டும் இரசிய ஆதிக்க வலயத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என்பது இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனின் திட்டமாக இருக்கின்றது.     1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம்விழ்ச்சியடைந்த பின்னர்   மீண்டும் சோவியத் ஒன்றிய நாடுகளை ஏதாவது ஒருவகையில்   தன்னுடன் இணைக்க இரசியா    பலவழிகளில் முயன்று கொண்டிருக்கின்றது.   1991-ம் ஆண்டிலேயே சிஐஎஸ் எனப்படும் சுதந்திர அரசுகளின் பொதுநலவாயம் என்னும் பெயரில் முதல் இணைப்பு நடந்தது.   இந்தக் கூட்டமைப்பு முதலில் இரசியா, உக்ரேன், பெலரஸ் ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து உருவாக்கின. இரு வாரங்கள் கழித்து ஆர்மேனியா, அஜர்பைஜான், கிர்கிஜ்ஸ்த்தான், மொல்டோவா, தேக்மெனிஸ்த்தான், தயிகிசஸ்தான், உஸ்பெகிஸ்த்தான் ஆகிய எட்டு நாடுகள் இணைந்தன. இரண்டு ஆண்டுகள் கழித்து ஜோர்ஜியா இணைந்தது. இரசியா தனது ஆதிக்க நிலப்பரப்பை விரிவாக்குவதை அதன் எதிரிகள் விரும்பவில்லை. இதனால் ஜோர்ஜியாவிலும் உக்ரேனிலும் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டன. அவை இரசியாவிற்கு எதிராகத் திரும்பின. இரசியாவிற்கு மேற்காக உள்ள நாடுகளை நேட்டோவும் ஐரோப்பிய ஒன்றியமும் தம்முடன் ஒன்றன் பின்னர் ஒன்றாக இணைக்க இரசியாவிற்கு கிழக்காக உள்ள முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளுடன் சீனா தனது வர்த்தகத்தை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றது. இதை கடந்த பத்து ஆண்டுகளாகப் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்த விளடிமீர் புட்டீன்
  • தனது செல்வாக்கை இரசிய மக்கள் மத்தியில் உயர்த்தினார்.
  •  தனது உள்நாட்டு எதிரகளையும் விமர்சகர்களையும் கடுமையாகத் தண்டித்தார்.
  • இரசியப் பொருளாதாரத்தை சீர் செய்து மேம்படுத்தி எரிபொருள் ஏற்றுமதி மூலம் இரசியாவின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பை அதிகரித்தார்.
  • இரசியப் படைகளுக்கு சிறந்த பயிற்ச்சி கொடுத்தார்
  • இரசியாவைன் படைக்கலங்களை நவீன மயப் படுத்தினார்..
  • இவற்றின் மத்தியில் பில் கேட்ஸ் போன்ற உலகப் பணக்காரர்கள் எல்லாம் முந்தி இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் உலகின் முதலாம் பணக்காரர் ஆனார்.
  • அவரது சொத்து மதிப்பு 75 பில்லியன் அதாவது 750 கோடி அமெரிக்க டொலர்கள் எனப்படுகின்றது.
தன்னையும் தனது நாட்டையும் பலமாக்கிய புட்டீன் ஜோர்ஜியாவிற்குப் பாடம் புகட்டி அதைப் போரில் அடக்கி அதன் பிராந்தியம் ஒன்றை இரசியாவின் ஆதிக்கதிற்குள் கொண்டு வந்தார். உக்ரேனின் கிறைமியாவை இரசியாவுடன் இணைத்தார். இதனால் வட அமெரிக்க நாடுகளும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் இரசியாவிற்கு எதிராகப் பொருளாதார நடவடிக்கைக்களை மேற் கொண்டன.

இதனால் இரசியப் பொருளாதாரம் பாதிப்படைந்து கொண்டிருக்கின்றது    2014-ம் ஆண்டு இரண்டரை விழுக்காடு வளரும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த இரசியப் பொருளாதாரம் உக்ரேன் விவகாரத்தால் ஒரு விழுக்கடு மட்டும் வளரும் என இரசியாவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. ஆனால் உலக வங்கி     இரசியப் பொருளாதாரம் இரண்டு விழுக்காடு  வரை சுருக்கமடையலாம் என எதிர்வு கூறியுள்ளது.

நிதியுண்டு பயமில்லை
2014-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இரசியாவில் இருந்து 51 பில்லியன் அதாவது 510 கோடி அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முதலீடுகள் வெளியேறிவிட்டன.   சில கணிப்பீடுகள் 71 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முதலீடுகள்   இரசியாவில் இருந்து வெளியேறிவிட்டதாகச் சொல்கின்றன.   ஏற்கனவே இரசிய பொருளாதாரத்தின் வலுக் குறைந்தபடியால் 2013-ம் ஆண்டு 62 பில்லியன் டொலர் முதலீடு இரசியாவில் இருந்து வெளியேறியது. முழு ஆண்டுக்குமான 62 பில்லியன் வெளியேற்றத்துடன் ஒப்பிடுகையில் 2014 ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்கான முதலீடு வெளியேற்றம் மிக அதிகமானதாகும். இதுவரை உக்ரேனுக்கு இரசியா கழிவு விலையில் எரிவாயுவை வழங்கி வந்தது.   இப்போது இரசியா உக்ரேனிற்கு வழங்கும் எரிவாயுவின் விலை 80விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் உக்ரேன் தனது எரிவாயுவை வேறு இடங்களில் இருந்து வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.  இதுவும்  இரசியாவின் வருமானத்தைப் பாதிக்கும். இரசியா தனது குறுங்கால நிதிப் பிரச்சனையை    அதன் கையிருப்பில் உள்ள வெளிநாட்டுச் செல்வாணிக் கையிருப்பு 400 பில்லியன் அதாவது 4,000 கோடி அமெரிக்க டொலர்களை வைத்துச் சமாளிக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இரசியாவின் வட்டி விழுக்காடு 5.5இல் இருந்து 7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
2013-ம் ஆண்டு இருந்த நிலையுடன் ஒப்பிடுகையில்   இரசியப் பங்குச் சந்தை 11விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது.   மற்ற வளர்முக நாடுகளின் பங்குச் சந்தை 3விழுக்காடு மட்டுமே வீழ்ச்சியடைந்திருந்தது.  2014 பெப்ரவரி மாதம் 6.2விழுக்காடாக இருந்த இரசியப் பணவிக்கம் மார்ச் மாதம் 7 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்கின்றது இரசியப் பொருளாதார அமைச்சு.

கடங்காரா???
கடன்படு திறன் மதிபீடு முகவர் அமைப்பான standard & Poor , ரஷ்யாவின் கடன்படு திறன் மதிப்பினைக் குறைத்துள்ளது.    இது இரசியாவின் நாணய மதிப்பிலும் இரசியாவில் வெளியார் முதலீட்டிலும்   பெரும் பாதிப்பை மேலும் ஏற்படுத்தும்.

சரியாத செல்வாக்கு சரியான செல்வாக்கு
ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும்   இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை மேலும் அதிகரிக்கலாம்.    இதனால் இரசியப் பொருளாதாரம் மேலும் பாதிப்படையும் எனக் கருதப்படுகின்றது. இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடை விளடிமீர் புட்டீனை பணியச் செய்யும் என மேற்கு நாடுகள் எண்ணுகின்றன.   ஆனால் இரசியாவில் விளடிமீர் புட்டீனின் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே போகின்றது.
இதனால் ஏற்கனவே உக்ரேனின் கருங்கடல் குடாநாடான கிறைமியாவைத் தனதாக்கிக் கொண்ட உக்ரேன் இனி உக்ரேனின் கிழக்குப் பிராந்திய நகரங்களை ஒன்றன் பின் ஒன்றாக தனதாக்கிக் கொள்ளலாம் என நம்பப்படுகின்றது. உக்ரேனின் கிழக்குப் பிராந்தியங்களில் கிறைமியாவைப் போலவே இரசியர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள். அங்கு உக்ரேன் அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்துபவர்கள் இரசியாவின் படைத்துறைப் பயிற்ச்சியை நன்கு பெற்றவர்கள் என்கின்றார் நேட்டோப் படைத் துறைக் கூட்டமைப்பின் உச்சத் தளபதி பிலிப் பிறீட்லவ்.

ஏற்கனவே  உக்ரேன் மீது போர் தொடுக்கும் அதிகாரத்தை   இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் இரசியப் பாராளமன்றத்திடம் இருந்து பெற்றுவிட்டார்.    உக்ரேனிய எல்லையில் பெருமளவு இரசியப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. 2014 மே மாதம் உக்ரேனில் தேர்தல் நடந்து அங்கு ஒரு உறுதியான அரசு அமையவிடாமல் தேர்தலை குழப்பும் நோக்கம் விளடிமீர் புட்டீனிற்கு உள்ளது என மேற்கு நாட்டுப் படைத்துறை ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.   நேட்டோவினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் கிழக்கு நோக்கிய விரிவாக்கம் இரசியாவின் எல்லை வரை சென்று இரசியாவின் இருப்புக்கு அச்சுறுத்தலாகியது. பின்னர் 2008-ம் ஆண்டு ஜோர்ஜியாவுடன் இரசியா புரிந்த தென் ஒஸ்ஸெற்றியப் போருடன் நேட்டோவின் விரிவாக்கம் ஒரு முடிவிற்கு வந்தது.

பெரிய மீனும் சிறிய மீனும்
ஒரு பெரிய நாடு  ஒரு சிறிய நாட்டைத்  தன்னுடன் இணைக்க முயல்வதும் அதை பார்த்துக் கொண்டு மற்ற சில நாடுகள் எதிர்ப்பதும்,  சில நாடுகள் தாம் உண்டு தம் நாடு உண்டு என இருக்க முயல்வதும்   சில நாடுகள் நடுநிலை வகிப்பது போல் காட்டிக் கொள்வதும் சில நாடுகள் தம் பொருளாதாரத்தில் அக்கறை கொண்டிருப்பதும் முதலாம் உலகப் போர் ஆரம்பிக்கும் போது இருந்த நிலை என அண்டுரு ஸ்ரவேர்ஸ் என்னும் ஆய்வாளர் கருத்துத் தெரிவித்துள்ளார். 1914-ம் ஆண்டு உருவான உலகப் போரை அப்போது வலுவாக இருந்த பிரித்தானியாவால் தடுத்திருக்க முடியும் என்பது போல் இப்போது வலுவாக இருக்கும் ஜேர்மனியால் இன்னும் ஒரு ஐரோப்பியப் போரைத் தடுக்க முடியும்.   ஜேர்மனி தனது எரிபொருள்த் தேவையின் பெரும்பகுதியை இரசியாவில் இருந்தே பெற்றுக் கொள்கின்றது. இரசியாவுடனான மோதல்   ஜேர்மனியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.   அதேவேளை 2008-ம் ஆண்டின் பின்னர் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவில் இருந்து சிறிது சிறிதாக மீண்டு கொண்டிருக்கும் ஜேர்மனிக்கு   இப்போது ஒரு போர் பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவை ஏறபடுத்தும்.   ஜேர்மனியும் யூரோ வலய நாடுகளும்   உறுதியாக நின்றால்    இரசியாவை பொருளாதார ரீதியிலும் படைத்துறை ரீதியிலும் பணிய வைக்க முடியும்   என சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.    2014-ம் ஆண்டு ஆப்கானிஸ்த்தானில் இருந்து தனது படைகளை விலக்கிக் கொண்ட பின்னர்   அமெரிக்கா சிவனே என உட்கார முடியாமல் ஐரோப்பாவில் ஒரு வல்லரசுடன் ஒரு போர் முனையைத் திறக்க முடியுமா எனபதும் பெரும் கேள்வி. ஜேர்மனியுடன் பெரும் பொருளாதார ஒத்துழைப்பைச் செய்யும் பிரித்தானியா ஜேர்மனியின் விருப்பப்படி நடக்கவே விரும்புகின்றது.
உக்ரேன் மீண்டும் தனது படையை தன் கிழக்குப் பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளது. அதற்கு என்ன நடந்தது என்பதை இந்தக் கட்டுரையை வாசிக்கும் போதுதான் தெரியும்.

உக்ரேன் விவகாரமும் ஜெனிவா போனது
உக்ரேன் பிராந்தியத்தில் பதட்டத்தைத் தணிக்கும் நோக்குடன் இரசியா, உக்ரேன், ஐக்கிய அமெரிக்கா, ஐரோபிய ஒன்றியம் ஆகியவை ஜெனிவானில் கூடின. அங்கு இரசியா கிறைமியா புதிய இரசியாவின் ஒரு பகுதி என்றது.    உக்ரேனியப் பிரச்சனை அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும் இடையிலான பிரச்சனை அல்ல    அது உக்ரேனியர்களின் பிரச்சனை.    உக்ரேனில் வாழும் மக்கள் தமது தலைவிதியைத் தாமே நிர்ணயிக்க அனுமதிக்க வேண்டும் என்றது இரசியா.     பெரிய வெள்ளியில் இருந்து உயிர்த்த ஞாயிறுவரை ஒரு மோதல் தவிர்ப்பு கிழக்கு உக்ரேனில் செய்யப் போவதாக அறிவித்தனர்.   ஆனால் அது கடைப்பிடிக்கப்படவில்லை.வேட்டியை மடிச்சுக் கட்டிய புட்டீன்
கிறைமியா இணைப்பைத் தொடர்ந்து   கருங்கடலுக்குள் சென்ற ஐக்கிய அமெரிக்காவின் கடற்படைக் வழிகாட்டல் ஏவுகணை தாங்கி நாசகாரிக் கப்பலான யூ.எஸ்.எஸ் டொனால்ட் குக்கிற்கு மிக அண்மையாக இரசியாவின் இரு எஸ்யூ-24 போர் விமானங்கள் 90 நிமிடங்களில் 12தடவைகள் மாறி மாறிப் பறந்து சென்றன. எஸ்யூ-24 போர் விமானங்களுடன் தொடர்புகளை மேற்கொள்ள பலதடைவகள் முயன்ற போதும் பதில் கிடைக்கவில்லை.   இது இரசியா தனது பிராந்திய ஆதிக்கத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை   எடுத்துக் காட்டுகின்றது. அத்துடன் பத்து இலட்சம் உயிரிழப்புக்களுக்கு மத்தியில் கடந்த இருநூறூ நூற்றாண்டுகளாக கிறைமியயவில் தான் வைத்திருக்கும் கடற்படைத் தளத்தை இரசியா என்ன விலை கொடுத்தும் பாது காக்கும் என உலகிற்கு உணர்த்துகின்றது. கிழக்கு உக்ரேனில் அரசுக்கு எதிராக நடந்த கிளர்ச்சியை அடக்கப் போன உக்ரேனியப் படையினர் கட்சி மாறி கிளர்ச்சிக்காரர்களுடன் இணைந்ததாகச் சொல்லப்படுகின்றது. அதே வேளை அங்கு ஏற்கனவே பல இரசியப் படையினர் இரகசியமாக ஊடுருவி விட்டதாகச் சொல்லப்படுகின்றது.

ஒரு நாட்டின் தயக்கம் இன்னொரு நாட்டின் வாய்ப்பு.
ஐக்கிய அமெரிக்கா, ஜேர்மனி, பிரித்தானியா மற்றும் பல மேற்கு ஐரோப்பிய நாடுகளின் தயக்கம் விளடிமீர் புட்டீனுக்கு பெரும் வாய்ப்பாக இருக்கின்றது. அத்துடன் பல பொருளாதார நெருக்கடிகள்    இனிவரும் காலங்களில் இரசியாவிற்கு வந்தாலும் இரசிய மக்கள் பெருமளவில் புட்டீனின் பின் நிற்கின்றன. ஐரோப்பிய நாடுகள் தமது எரிபொருள் தேவையை வேறு நாடுகளில் இருந்து பெற முயன்றால் இரசியா தனது எரிபொருளை சீனாவிற்கும் இந்தியாவிற்கும் விற்கலாம். இதனால் புட்டீன்  தனது மேற்கு நோக்கிய இரசிய விரிவாக்கத்தை தொடரலாம். இதற்கு இரசியாவின் மிக முக்கியத்துவம் வாய்ந்த கேந்திரோபாயச் சொத்தாக மற்ற நாடுகளில் வாழும் இரசியர்கள் இருக்கின்றனர்.   இவர்களுடன் இரசியா நெருங்கிய உறவைப் பேணுகின்றது.   கிறைமியாவை ஒரு துப்பாக்கி வேட்டுக் கூட வெடிக்காமல் ஒரு துளி இரத்தம் சிந்தாமல் இரசியா தனதக்கியமைக்குக் காரணம் கிறைமியாவில் இரசியர்கள் பெரும்பான்மையாக வாழ்வதே.

மோல்டோவா
பதின் மூன்று இலட்சம் மக்களைக் கொண்ட ஐரோப்பாவில் வறிய நாடான மோல்டோவா நாட்டில் ஐந்தாயிரம் படையினர் உள்ளனர்.   இரசியா மோல்டோவாவை ஆக்கிரமித்தால்    அந்த ஐயாயிரம் படையினரில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள்    இரசியாவுடன் இணைந்து விடுவார்கள்.     ஏற்கனவே மோல்டோவாவின் ஒரு பிராந்தியமான திராண்ட்னீஸ்டர்(Transdniester) பிரிவினை கோரியுள்ளது. அங்கு இரசியர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள். 

இரசிய குடியேற்ற ஆட்சியும் நேட்டோவும்
எஸ்தோனியா நாட்டின் மக்கள் தொகையில் காற்பங்கினர் இரசியர்கள். இது இரசியாவிற்கு வாய்ப்பான ஒரு நிலையாகும். இதே போல் லத்வியா நாட்டின் மூன்றில் ஒரு பங்கினர் இரசியர்களாகும். இது இரசியாவிற்கு ஒரு வாய்ப்பான நிலையாகும். ஆனால் இவ்விரண்டு நாடுகளும் நேட்டோ படைத் துறைக்கூட்டமைப்பில் உறுப்புரிமை பெற்ற நாடுகளாகும்.   நேட்டோ நாடு ஒன்றின் மீது வேறு நாடு படை எடுத்தால்   மற்ற எல்லா நாடுகளும் அது தம் நாட்டின் மீது படை எடுத்தது போல் பாவித்து   அந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டும். அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இவை இரண்டும் உறுப்புரிமை பெற்றுள்ளன. தனியாட்சியாளர்(சர்வாதிகாரி) அலெக்ஸானடர் லுக்கஷென்காவினால் ஆட்சி செய்யப்படும் பெலரஸ் நாடு இரசியாவுடன் நல்ல உறவுகளை பேணுகின்றது. இரசியாவுடன் பெலரஸை இணைக்கும் முயற்ச்சிகள் பல தடவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. கஜகஸ்த்தான் நாடும் இரசியாவுடன் நெருங்கிய நட்பைப் பேணுகின்றது. கஜகஸ்த்தானின் வட பிராந்தியங்களில் இரசியர்கள் பெரும்பான்மையாக  வாழுகின்றனர்.ஆரம்பம் முதலே உக்ரேன் விவகாரத்தில் அதிக அக்கறை காட்டி வரும் நாடு போலாந்து. உக்ரேனில் இருந்த இரசிய சார்பு ஆட்சியாளர் விக்டன் யனுக்கோவிச் அவர்களை பதவியில் இருந்து அகற்றி அங்கு மேற்குலகிற்கு சார்பான ஒரு ஆட்சியை அமைப்பதில் போலாந்து அதிக அக்கறை காட்டியது. ஐக்கிய அமெரிக்காவின் துணை அதிபர் ஜோ பிடன் உக்ரேன் சென்று நிலைமைகள் தொடர்பாக உக்ரேன் ஆட்சியாளர்களுடன் கலந்துரையாட போலாந்தின் பாதுகாப்பு அமைச்சர் தோமஸ் சீமோனியக் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் சக் கஜெலைச் சந்தித்து உரையாடினார். பின்னர் அமெரிக்கப் படையினர் போலாந்து சென்று பாதுகாப்பு நடவடிக்கைக்களில் ஈடுபடுவதாக இரு தரப்பினரும் பெண்டகனில் ஒடததுக் கொண்டனர். ஆனால் போலாந்தில் தங்கியிருக்கும் அமெரிக்கப் படையினர் உக்ரேனில் எந்த வித படை நடவடிக்கககளும் மேற்கொள்ள மாட்டார்கள் எனச் சொல்லப்படுகின்றது.


பணயக் கைதிகள்
உக்ரேனின் தென் கிழக்கு பிராந்தியமான டொனெட்ஸ்க்கில் (Donetsk) உக்ரேன் அரசுக்கு எதிரான இரசியக் கிளர்ச்சிக்காரர்கள் ஐரோப்பாவில் பாதுகாப்புக் ஒத்துழைப்புக்குமான அமைப்பின் (Organization for Security and Cooperation in Europe ) கண்காளிப்பாளர்களாகப் பணிபுரியச் சென்ற ஜேர்மனியர்களைப் பணயக் கைதிகளாக்கி உக்ரேனிய அரசு கைது செய்த தமது ஆட்களை விடுவிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமநிலையும் சமரசமும்
1991-ம் ஆண்டு நிகழ்ந்த சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் தன் பொருளாதாரத்தையும் படை வலுவையும் மேம்படுத்திய இரசியா கிழக்கு ஐரோப்பாவில் தன் ஆதிக்க பரப்பை விரிவாக்க முயல்கின்றது. ஐரோப்பாவில் 1991-ம் ஆண்டு குழம்பிய சமநிலை இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் சமநிலையை அடைந்தது. உக்ரேனை தம்முடைய ஆதிக்க வலயத்திற்குள் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை என்ற போர்வையில் மேற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இழுத்தபோது இந்தச் சமநிலைக்கு ஆபத்து உண்டானது. பின்னர் 2014-ம் ஆண்டின் ஆரம்பத்தில் உக்ரேன் விவகாரத்துடன் குழம்பிவிட்டது. சிலியில் அலண்டேயின் ஆட்சியைக் கவிழ்க்கச் செய்த சதி வேறு லிபியாவில் மும்மர் கடாஃபியின் ஆட்சியைக் கவிழ்த்து அவரைக் கொல்ல செய்த சதி வேறு. உக்ரேனில் அரபு வசந்தப் பாணியில் மக்களைத் தெருவில் இறக்கி ஆட்சி மாற்றம் செய்யப் பட்டது. அங்கு குழம்பிய சமநிலை ஒரு பொருளாதாரப் போரின் மூலமும் படை நகர்த்தல்கள் மூலமும் மீள் சமநிலப்படுத்தப்படும். ஆனால் நீண்ட காலம் எடுக்கும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...