Tuesday, 15 April 2014

லிபியாவின் அரபு இலையுதிர்காலம்

அரபு வசந்தம் என்னும் பெயரில் நேட்டோப்படைகள் குண்டு மாரி பொழிய கேணல் மும்மர் கடாஃபின் ஆட்சி லிபியாவில் கவிழ்க்கப்பட்டு நீதிக்குப் புறம்பான வகையில் கடாஃபியும் கொல்லப்பட்டார். உலகிலேயே சிறந்த சமூக நலக் கொடுப்பனவுகளுடன் கடாஃபி ஆட்சி செய்த லிபியா இப்போது பிளவு படும் நிலையை அடைந்துள்ளது. பல இனக் குழுமங்கள் பல படைக்கலன் ஏந்திய குழுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன. பலவீனமான லிபிய மைய அரசுக்கு எதிராக எண்ணெய் வளம் மிக்க பிராந்தியங்களின் மக்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.

லிபிய வரலாற்றில் முதன் முறையாக மக்களாட்சி முறைமைப் படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை அமைச்சர் அலி ஜெய்டன் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். ஊழல் தொடர்பான விசாரணைக்கு அஞ்சி அவர் நாட்டை விட்டு ஓடிவிட்டார். மொத்தத்தில் லிபியாவில் அரபு வசந்த்ம் அரபு இலை உதிர்காலமாக மாறிவிட்டது. லிபிய அரமைப்புச் சபைக்கான தேர்தலில் ஐந்தில் ஒரு பகுதிக்கு மேலான உறுப்பினர்களை தெரிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தலின் போது நடந்த வன்முறைகள் இதற்குக் காரணமாகும்.

பலப்பல இனக் குழுமங்கள் கொண்ட லிபியா.
லிபியா ஆறரை மில்லியன் மக்களைக் கொண்டது. இதில் ஒன்றரை மில்லியன் பேர் வெளிநாட்டில் இருந்து வந்து குடியேறியவர்கள். லிபியாவில் 140 இனக் குழுமங்கள் இருக்கின்றன. இந்த இனக் குழுமங்களின் அடையாளங்கள் லிபிய மக்களின் கலாச்சார அடையாளத்தின் முக்கிய அம்சமாகும். இனக்குழுமங்களின் பெயர்களையே தமது குடும்பப் பெயர்களாக லிபிய மக்கள் கொண்டுள்ளனர். மேற்கு லிபியாவில் ஒரு மில்லியன் பேரைக் கொண்ட வார்ஃபல்லா என்ற இனக்குழுமம் முக்கியமானது இந்த இனக் குழுமத்தில் 52 உட்பிரிவுகள் இருக்கின்றன. மத்திய லிபியாவில் கடாஃபி என்ற இனக் குழுமம் முக்கியமானது. மும்மர் கடாஃபி இந்த இனக் குழுமத்தைச் சேர்ந்தவர். இந்த இனக் குழுமத்தின் கையில் லிபியா இருந்தது என்று சொல்லலாம். அல் மாஹார்கா என்ற இன்னொரு இனக் குழுமம் மத்திய லிபியாவில் உள்ளது இது கடாஃபி இனக் குழுமத்துக்கு நெருக்கமானது. கிழக்கு லிபியாவில் ஜுவையா, பானி சலீம், மெஸ்ரத்தா, அல் வாஹீர் ஆகிய இனக் குழுமங்கள் முக்கியமானவை.  கடாஃபியின் மனைவி வார்ஃப்ல்லா என்னும் இனக்குழுமத்தைச் சேர்ந்தவர். இதுதான் லிபியவின் மிகப்பெரிய இனக்குழுமம். இதற்கு 54 உட்பிரிவுகள் இருக்கின்றன.

காடாஃபியின் தேச ஒருமைப்பாடு
கடாஃபியின் ஆட்சியின் கீழ் இவ்வினக் குழுமங்களிடை மோதல்கள் இடம்பெறவில்லை. ஆனால் இந்த இனக் குழுமங்களுக்கிடையிலான குரோதத்தை கடாஃபி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். கடாபிக்கு எதிரான போர் ஆறு மாதங்கள் எடுத்தமைக்கு அவருக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களிடை ஒற்றுமையின்மையே காரணமாக இருந்தது. அவர்கள் தங்களுக்குள் அடிக்கடி மோதவும் செய்தனர். கடாஃபியிடம் இருந்து கைப்பற்றப் பட்ட இடங்களி இருந்த சில இனக் குழுமங்கள் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களால் தாக்கப்பட்ட, கொளையிடப்பட்ட, பெண்கள் வன்முறைக்குள்ளான, சம்பவங்கள் நிறைய நடந்தன.

மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியில் பல தலைவர்கள் இருந்தனர். அவர்களில் மதவாதிகள், அரபுத் தேசியவாதிகள், மதசார்பற்றவர்கள், சமத்துவ வாதிகள், மேற்குலக ஆதரவாளர்கள் எனப் பல தரப்பட்டவர்கள் இருந்தார்கள். ஆனால் எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய தலைவர் என்று ஒருவர் கூட இல்லை. ஓரளவுக்குப் பலராலும் அறிய்பபட்டவர் மும்மர் கடாஃபிக்கு நீதி அமைச்சராக இருந்த முஸ்தபா அப்துல் ஜலீல். ஆனால் இவரைப் பலர் கடாஃபியின் முன்னாள் அமைச்சர் என்ற வகையில் பலத்த சந்தேகத்துடனேயே பார்த்தனர்.

கடாஃபிக்கும் பின்னர் ஆட்சிப் போட்டி. 
கடாஃபிக்குப் பின்னரான ஆட்சிப் போட்டியில் மேற்கு நாடுகளுக்கு ஆதரவானவர்களும் இசுலாமிய மதவாதிகளும் கடுமையாக முரண்பட்டனர். ஈரான் மதவாதிகளிற்கு உதவியது. ஈரானின் நீண்டகாலக் கனவில் முக்கியமானது லிபியா, எகிப்து ஆகிய நாடுகளை தனது ஆதிக்கத்தில் கீழ் கொண்டுவருவதே. சவுதி அரேபியாவின் சில பிரதேசங்களை ஈரான் கைப்பற்றி தனது பொருளாதார வலிமையையும் மேம்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளது.   .ஈரான் ஹிஸ்புல்லா மற்றும் ஹாமாஸ் போன்ற இசுலாமிய விடுதலைப் போராளி அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிவருகிறது. அவர்களுக்கான நிதி மற்றும் படைக்கலன்கள் உதவிகளை வழங்கி வருகிறது. இவை இரண்டும் சியா முசுலிம்களின் அமைப்பாகும். ஆனால் அல் கெய்தா ஒரு சுனி முசுலிம்களின் அமைப்பாகும். அல் கெய்தாவிற்கும் ஈரானுக்கும் பகைமை எனக் கருதப்படுகிறது. ஆனால் அல் கெய்தாவிற்குத் தேவையான நிதி கட்டாரிலிருந்தும் குவைத்தில் இருந்தும் ஈரானுடாகவே வருகிறது. இதற்காக அல் கெய்தா ஈரானில் எந்த வித தீவிரவாத நடவடிக்கைகளும் எடுப்பதில்லை என்ற உடன்பாடு இருக்கிறது. ஈரானுக்கும் அல் கெய்தாவிற்கும் பொதுவான எதிரி அமெரிக்கா. இரண்டும் இணைந்து செயற்படுவதற்கான ஆதாரங்கள் தற்போது சிறிது சிறிதாக வெளிவருகிறது, ஈரான் இப்போது எகிப்தில் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டது. மொஹமட் மேர்சியின் ஆதரவாளர்களுக்கு ஈரான் உதவுவதாக நம்பப்படுகிறது. அத்துடன் அல் கெய்தாவும் எகிப்தில் ஊடுருவி உள்ளது. லிபியாவிலும் இதே நிலைமைதான். ஈரானும் அல் கெய்தாவும் அங்கு தங்கள் கைவரிசைகளைக் காட்டி வருகின்றன. சிரியாவில் அல் கெய்தாவும் ஈரானும் எதிர் எதிர் அணிகளில் நின்று மோதுவது உண்மைதான். ஈரான் லிபியா, எகிப்து, எதியோப்பிய ஆகிய மூன்று நாடுகளும் தனது கட்டுப்பாட்டின்கீழ் இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டுச் செயற்படுகிறது. ஈரானில் பயிற்ச்சி பெற்ற அல் கெய்தாவினரே எகிப்தில் ஊடுருவி இருப்பதாக எகிப்தியக் காவற்துறை கண்டறிந்துள்ளது. 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நையீரியாவில் ஈரானில் தாயாரான படைக்கலன்களை அல் கெய்தாவினர் கடத்திச் செல்வது கண்டு பிடிக்கப்பட்டது. யேமனிலும் ஈரானில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைச் செலுத்திகளை அல் கெய்தா பாவிப்பது கண்டறியபப்ட்டது. இவை யாவும் ஈரானிற்கும் அல் கெய்தாவிற்கும் இடையில் இருக்கும் ஒத்துழைப்பை உறுதி செய்கின்றன.

பிராந்திய முரண்பாடு
லிபியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள சைரெனைக்கா (Cyrenaica) லிபியாவில் இருந்து தன்னாட்சி பெற முயல்கின்றது. லிபியாவின் உயர்தர எண்ணெய் வளத்தில் எண்பது விழுக்காடு சைரெனைக்காவில் இருந்து கிடைக்கின்றது. லிபிய மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்கினர் தலைநகர் திரிப்போலியிலும் ஃபெசான் மாகாணத்திலும் வசிக்கின்றனர். சைரெனைக்கா தனிநாடாகப் பிரிந்தால் அங்கிருக்கும் உலகிலேயே ஐந்தாவது பெரிய எண்ணெய் வளம் அதை உலகில் உள்ள மிகவு செலந்த நாடுகளில் ஒன்றாக ஆக்கிவிடுவதுடன் எஞ்சிய லிபியாவை உலகிலேயே வறிய நாடாக மாற்றிவும். சைரெனைக்கா தனக்கு என ஒரு மைய வங்கியையும் உருவாக்கி உலக நாடுகள் தம்மை அங்கீகரிக்கும் படி பரப்புரை செய்ய ஒரு கனடிய நிறுவனத்தின் சேவையையும் பெற்றுள்ளது. சைரெனைக்கா எண்ணையை ஏற்றுமதி செய்வதைத் தடுக்க லிபிய அரகு சைரெனைக்காவின் மீது ஒரு கடல் முற்றுகையைச் செய்துள்ளது.


கடாஃபியின் மகன்கள்
கடாஃபியின் ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் கைது செய்யப்பட்ட அவரது 40 வயதான கால்பந்தாட்ட வீரர் சாதி கடாஃபி மற்றும் சயிஃப் கடாபி மீதான வழக்கு விசாரணையின் போது அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தாமை பலரையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சாதி கடாஃபி உட்பட 39 மும்மர் கடாஃபியின் ஆட்சியில் முக்கிய பதவியில் இருந்தவரக்ள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 23 பேர் மட்டுமே நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். மும்மர் கடாஃபியின் மகன்களையும் உதவியாளர்களையும் எப்படி புதிய அரசு நீதி விசாரணைக்கு உட்படுத்தப் போகிறார்கள் என்பது புதிய அரசு எப்படி மக்களாட்சி முறைமையை மதித்து நடக்கும் என்பதற்கான அளவுகோலாகக் கருதப்படுகின்றது. இவர்கள் மீதான விசாரணை பகிரங்கமாக நடக்கும் என அறிவித்திருந்தது ஆனால் அப்படிச் செய்ய முடியவில்லை.

லிபியாவின் பொதுத் தேசிய சபை

லிபியா பிளவுபடாமல் தடுக்கவும் லிபியாவில் அமைதியை நிலைநாட்டவும் லிபியாவின் பொதுத் தேசிய சபை பெரும் முயற்ச்சி எடுக்கின்றது.  அது இடைக்காலத் தலைமை அமைச்சரால அப்துல்லா அலி தின்னியை நியமித்துள்ளது அவரது பதவிக்காலம் இரு வாரங்களுக்கு ஒரு தடவை நீடிக்கப்படுகின்றது. லிபியா பிளவு படாமல் தடுக்கக் கூடியதாகவும் படைக்கலன்கள் ஏந்திய குழுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொலைகள் செய்வதைத் தடுக்கக் கூடியாதாகவும் ஒரு அமைச்சரவையை அவர் உருவாக்கவேண்டும் எனப் பணிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரால் அப்படி ஒரு அமைச்சரவையை உருவாக்க முடியவில்லை. ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட இனக்குழுமங்களையும் படைக்கலன் எந்திய குழுக்களையும் திருப்திப்படுத்தக் கூடிய வகையில் அவரால் ஓர் அமைச்சரவையை உருவாக்க முடியாததால் அவரால் அப்பதவியில் தொடர முடியவில்லை. தான் இடைக்காலத் தலைமை அமைச்சர் பதவியில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார். இரண்டாவது மருமகன் வந்தால்தான் மூத்த மருமகனின் அருமை தெரியும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...