Saturday, 25 January 2014

சிரிய "சமாதான" பேச்சு வார்த்தையும் பான் கீ மூனின் சறுக்கலும்

ஜெனிவா - 2 பேச்சு வார்த்தை என அழைக்கப்படும்  சிரியாவில் மோதிக்கொள்ளும் தரப்பினர்களுக்கு இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சு வார்த்தை ஜனவரி 22-ம் திகதியில் இருந்து சுவிஸ் நகர் மொன்ரெக்ஸில் நடந்து கொண்டிருக்கின்றது. அமெரிக்க அரசின் வெளியுறவுத் துறைக்குப் பொறுப்பான அரசுத் துறைச் செயலர் ஜோன் கெரியும் இரசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்கி லவ்ரோவும் 2013 மே மாதம் சந்தித்து சிரியாவில் போர் புரியும் தரப்புக்களை பேச்சு வார்தைக்கு கொண்டுவருவது என ஒத்துக் கொண்டனர்.

2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  21-ம் திகதி சிரியாவில் மேற்கொள்ளபப்ட்ட வேதியியல் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவினதும் இரசியாவினதும் வெளியுறவுத் துறையினர் சிரியாவில் சமாதானப் பேச்சு வார்த்தையில் அதிக கவனம் செலுத்த ஒத்துக் கொண்டனர். சிரியா தொடர்பான ஜெனிவா - 1 பேச்சு வார்த்தை 2012-ம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் நடந்தது அதில் சில அடிப்படை விதிகள் ஒத்துக் கொள்ளப்பட்டன: அவற்றில் முக்கியமானவை:
  • சிரியாவில் எல்லோரும் ஒத்துக்கொள்ளக்கூடிய வகையிலான அணுகுமுறை ஒன்றை உருவாக்கல்
  • அந்த அணுகுமுறையைச் செயற்படுத்த தேவையான நடவடிக்கைகளை ஒரு கால அட்டவணை அடிப்படையில் எடுத்தல்.
  • எல்லோருக்கும் பாதுகாப்பு, அமைதி, திடமான நிலை உருவாகக் கூடிய வகையில் அணுமுறையை செயற்படுத்தல்.
  • இனியும் இரத்தக் களரி வன்முறை இன்றி விரைந்து செயற்படல்

எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள்:
  • அரசு தரப்பினரையும் எதிர்த் தரப்பினரையும் கொண்ட முழு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு இடைக்கால அரசை எல்லோர் சம்மதத்துடன் உருவாக்குதல்.
  • எல்லாத்தரப்பினரையும் கொண்ட அர்த்தமுள்ள ஒரு தேசியப் பேச்சு வார்த்தையை ஏற்பாடு செய்தல்
  • அரசமைப்பு யாப்பையும் சட்ட முறைமையையும் மீள் பரிசீலனை செய்தல்
  • சுதந்திரமானதும் நீதியானதுமான பல கட்சிகள் பங்கு பற்றும் தேர்தலை நடாத்துதல்
  • எல்லா மாற்றங்களிலும் பெண்களையும் ஈடுபடுத்துதல்

இந்த அடிப்படையில் இரண்டாம் கட்டப் பேச்சு வார்த்தைக்கு வரும்படி சிரியாவில் போர் புரியும் தரப்பினரை அமெரிக்காவும் இரசியாவும் வற்புறுத்தி அழைத்தன இதற்கான பின்புலப் பணிகளை சிரியாவிற்கான ஐக்கிய நாடுகளின் சிறப்புத் தூதுவர் லக்தர் பிராஹ்மி மேற்கொண்டிருந்தார். சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் பேச்சு வார்த்தைக்கு முன்னர் சிரிய அதிபர் பஷார் அல் அசாத் பதவி விலக வேண்டும் என்றும் இடைக்கால அரசில் அவர் இடம்பெறக் கூடாது என்றும் நிபந்தனை விதித்திருந்தனர். ஆனால் இறுதியில் அவர்கள் மீது நிர்ப்பந்தம் பிரயோகிக்கப்பட்டு பேச்சு வார்த்தைக்கு வரச் செய்யப்பட்டனர். பேச்சுவார்த்தை 22-ம் திகதி ஆரம்பமாக முன்னர் சிரிய வெளிநாட்டமைச்சர் எந்த வித அதிகாரங்களையும் சிரிய அரசு விட்டுக் கொடுக்காது என்று சொன்னதும் பேச்சு வார்த்தையின் ஆரம்பத்தில் அவர் எதிர்த்தரப்பினர்களை பயங்கரவாதிகள் என அழைத்ததும் நிலமையைச் சிக்கலாக்கியது. முதல் நாள் ஜனவரி 22-ம் திகதி புதன் கிழமை அவர்க ஒரே மண்டபத்தில் கூடிப் பேசினர். ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிப் பேசினார்கள். பின்னர் ஒரே இடத்தில் அமர்ந்து பேசுவதில்லை எனக் கூறினார்கள்.

பேச்சு வார்தையில் ஐக்கிய நாடுகள் சபை, அரபு லீக் நாடுகள், சீனா,  அமெரிக்கா, இரசியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், துருக்கி, ஈராக், குவைத், கட்டார், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் வெள்நாட்டமைச்சர்களும் கலந்து கொண்டனர். சிரிய ஆட்சியாளர் பஷார் அல் அசாத்திற்கு பெரும் ஆதரவு வழங்கிவரும் ஈரானைப் பேச்சு வார்த்தைக்கு வரும்படி ஐநா பொதுச் செயலர் பான் கீ மூன் அழைத்திருந்தார். இதற்கு ஐக்கிய அமெரிக்காவும், ஐக்கிய இராச்சியமும் சிரியக் கிளர்ச்சிக்காரர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவிக்க பான் கீ மூன் ஈரானுக்கு தான் விடுத்த அழைப்பை மறுநாளே இரத்துச் செய்தார். இதற்கு இரசியா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. பான் கீ மூனிற்கும் ஒரு அவமானமாக இருந்தது. ஈரான் ஜெனிவா -2 பேச்சு வார்த்தைக்கான அடிப்படை விதிகளாக ஜெனிவா - 1 பேச்சு வார்த்தையில்  ஒத்துக் கொள்ளப் பட்டவற்றை ஏற்றுக் கொள்ள மறுத்ததால் அது பேச்சு வார்தையில் ஈடுபடக் கூடாது என அமெரிக்கா தெரிவித்தது.  ஜெனிவா - 2 பேச்சு வார்த்தையில் தானும் ஈடுபட வேண்டும் என ஈரான் நீண்ட காலமாக முயன்று கொண்டிருந்தது. ஈரான் தன்னை ஒரு பிராந்திய வலு மிக்க நாடாக காட்ட இது ஒரு வாய்ப்பு எனவும் தான் பங்கு பற்றினால் அது சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு ஒரு ஆதரவாக அமையும் என்றும் இந்த இராசதந்திர வலு ஈரான் வல்லரசு நாடுகளுடன் நடாத்தும் அணுக் குண்டு உற்பத்தி தொடர்பான பேச்சு வார்த்தைக்கு சாதகமாக இருக்கும் எனவும் ஈரான் கருதி இருந்தது. ஈரானியப் படைகள் அதிபர் அசாத்திற்கு பெரும் உதவிகள் செய்வதாலும் ஈரானின் வற்புறுத்தலில் லெபனானிய ஹிஸ்புல்லா அமைப்பினர் அசாத்தின் படைகளுடன் இணைந்து போர் புரிவதாலும் ஈரானும் சிரியப் பிரச்சனையில் முக்கியத்துவம் பெறுகின்றது.

முதல் நாள் ஜனவரி 22-ம் திகதி புதன் கிழமை அவர்க ஒரே மண்டபத்தில் கூடிப் பேசினர். ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிப் பேசினார்கள். பின்னர் ஒரே இடத்தில் அமர்ந்து பேசுவதில்லை எனக் கூறினார்கள். இதனால் இரு தரப்பினருடனும் மற்றப் பாங்காளர்கள் தனித் தனியே பேச்சு வார்த்தை நடாத்தினர். பின்னர் ஜனவரி 25-ம் திகதி சனிக்கிழமை ஒன்றாக அமர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட ஒத்துக்கொண்டனர். பேச்சு வார்த்தையின் ஆரம்பத்தில் சிரிய வெளிநாட்டமைச்சரின் உரையின் நேரத்தை பான் கீ மூன் கட்டுப்படுத்த முயன்ற போது பான் கீ மூனும் சிரிய வெளிநாட்டமைச்சரும் கடுமையாக முரண்பட்டுக் கொண்டனர். சிரிய வெளிநாட்டமைச்சர் வலித் அல் மௌலம் சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் தமது ஆன்மாக்களை ஏலம் போட்டு விற்பனை செய்கின்றனர் என்றார்.

ஜெனிவா - 1 பேச்சு வார்த்தையின் பொது ஒரு இடைக்கால அரசு அமைப்பது பற்றிப் ஒத்துக் கொள்ளப்பட்டது. ஜெனிவா - 2இன் சிரிய வெளிநாட்டமைச்சர்

முதல் நாள் பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து பத்திரிகையாளர் மாநாட்டில் அமெரிக்க அரசுத் துறைச் செயலர் ஜோன் கெரி இவ்வளவு அழிவிற்கும் காரணமானவர் தொடர்ந்து பதவியில் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். அத்துடன் ஜோன் கெரி பஷார் அசாத் அதிபர் பதவியில் தொடர்ந்தால் சிரியா பிளவுபடுவதைத் தடுக்க முடியாது என்றார்.  சிரிய அதிபர் பஷார் அல் அசாத் பதவியில் இருந்து விலக்கப்படுவதை ஒரு போதும் ஒத்துக் கொள்ளப்போவதில்லை. அத்துடன் இரசியாவும் அசாத் அதிபர் பதவியில் இருந்து விலக்கப்படுவதற்கு சம்மதிக்கப் போவதில்லை.
இதனால் சிரியா பிளவு படுவதைத் தடுக்க முடியாது. சிரியா பிளவு படுவதை அமெரிக்கா விரும்புவது போல் தெரிகின்றது. அப்படி சிரியா பிளவு படும் வேளையில் இசுலாமியத் தீவிரவாதக் குழுக்கள் ஒன்றுடன் ஒன்று போர் புரிந்து தம்மில் பலரைக் கொல்லலாம். ஏற்கனவே அல் கெய்தா ஆதரவு போராளிகள் தமக்குள் மோதிக் கொண்டதால் ஆயிரம் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.


 ஜனவரி 25-ம் திகதி சனிக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையின் போது மனிதாபிமான உதவிகளைப் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக ஒரு பாதுகாப்பான பாதை உருவாக்குவது பற்றிப் பேசப்பட்டது. அலெப்பே மாகாணத்தில் ஹொம்ஸ் நகரில் ஒரு பாதுகாப்பான வழங்கற்பாதை உருவாக்க சிரிய அரசு ஒத்துக் கொண்டது. அப்படி ஒரு பாதை உருவாக்குவதற்கு ஹொம்ஸ் மீதான முற்றுகையை சிரிய அரச படைகள் நிறுத்து வேண்டும் எனக் கிளர்ச்சிக்காரர்கள் தரப்பில் கூறப்பட்டது. சில மேற்கத்தைய ஊடகங்கள் பாதுகாப்பான வழங்கற்பாதை தொடர்பாக நம்பிக்கை வெளியிட்டுள்ள போதும் அரபு நாட்டு ஊடகங்கள் ஹொம்ஸ் நகரில் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட பல கிளர்ச்சிக்காரக் குழுக்கள் செயற்படுவதால் ஒரு உடன்பாடு எட்டுவது சிரமம் எனத் தெரிவித்துள்ளன.

கிளர்ச்சிக்காரர்கள் சிரிய அரசு கைது செய்து வைத்திருக்கும் பெண்களையும் சிறுவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 

சிரியாவில் முப்பதினாயிரத்துக்கு மேலான அல் கெய்தா ஆதரவு போராளிகள் இருப்பதாக இஸ்ரேல் அஞ்சுகிறது. இதுவரை காலமும் சிரியாவின் பேரழிவு விளைவிக்கக் கூடிய படைக்கலன்கள் இசுலாமியத் தீவிரவாதிகளின் கைகளுக்குப் போகாமல் பார்த்துக் கொண்டிருந்த இஸ்ரேல் இப்போது அல் கெய்தா சிரியாவைக் கைப்பற்றும் அபாயம் இருப்பதாகக் கருதுகிறது. இது தனக்கும் பெரும் அச்சுறுத்தல் எனக் கருதும் இஸ்ரேல் சிரியா அல் கெய்தாவின் கைகளுக்கு மாறாமல் இருக்க நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கிறது. இதற்காக அல் கெய்தாவிற்கு எதிரான குழுக்களுடன் இணைந்து சிரியாவின் சில பகுதிகளை தான் ஆக்கிரமிக்கும் திட்டமும் இஸ்ரேலிடம் இருக்கிறது. தான் சிரியாவில் ஆக்கிரமிக்கும் பிரதேசம் தனக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாக அமையும் என இஸ்ரேல் நம்புகிறது.  அத்துடன் சிரியாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் மீது விமானத் தாக்குதல் நடத்துவது தொடர்பாகவும் இஸ்ரேல் ஆலோசித்து வருகிறது.

சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் தமது உளவாளி ஒருவரை அரச காவற்துறையில் இணைத்து அவர் மூலமாக சிரியப் படைகளின் மோசமாக போர்க்குற்றம் மற்றும் மாநிடத்திற்கு எதிரான குற்றங்களை அம்பலப் படுத்தி உள்ளனர். அமெரிக்காவின் சிரிய அதிபர் அசாத்தை பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்ற திட்டத்திற்கு இது பெரிதளவில் வலுக் கொடுக்கும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...