Saturday, 7 December 2013

மண்டேலாவிற்குப் பின்னர் தென் ஆபிரிக்கா

இன ஒதுக்கல் ஆட்சியின் பின்னர் மிகச்சிறப்பாக தென் ஆபிரிக்காவில் மக்களாட்சிப்படி மிகவும் சிறப்பாக குளறுபடிகள் எதுவுமின்றி ஒழுங்காகத் தேர்தல் நடாத்துவதில் நெல்சன் மண்டேலாவும் ஆபிரிக்கத் தேசியக் காங்கிரசும்  வெற்றி பெற்றார்கள்.  1994-ம் ஆண்டு தென் ஆபிரிக்க அதிபராக தனது 75வது வயதில் பதவியேற்ற நெல்சன் மண்டேலா ஐந்து ஆண்டுகளின் பின்னர் அரசியலில் இருந்து தனக்கு வயது கூடிவிட்டது என்று சொல்லி ஓய்வெடுத்துக் கொண்டார். தன்னுடைய குடும்ப அங்கத்தவர்களை அவர் வாரிசு ஆக்கவில்லை. இந்த இரண்டு வகையிலும் அவர் உலகில் பல அரசியல்வாதிகளுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்தார். அவர் நினைத்திருந்தால் இறக்கும்வரை பதவியில் இருந்திருக்கலாம்.

தற்போது உலகிலேயே எழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் இடைவெளி அதிகமான நாடுகளில் தென் ஆபிரிக்காவும் ஒன்று. கறுப்பின மக்களின் சராசரி வருமானம் வெள்ளை இன மக்களின் சராசரி வருமானத்துடன் ஒப்பிடுகையில் பத்தில் ஒரு பங்காகும். வெள்ளையர் ஆட்சி செலுத்திய போது வெள்ளையர் வாழ்ந்தனர். கறுப்பினத்தவர்கள் தாழ்ந்தனர். கறுப்பினத்தவர்கள் ஆட்சி அதிகாரம் பெற்ற பின்னரும் வெள்ளையர்கள் வாழ்கின்றனர் கறுப்பினத்தவர்கள் தாழ்கின்றனர். ஒரு படைக்கலங்கள் தாங்கிய புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றாமல் மக்களாட்சி முறைப்படி ஆட்சியைக் கைப்பற்றியதால் ஏற்கனவே இருந்த பொருளாதாரக் கட்டமைப்பை மாற்ற முடியவில்லை. ஆபிரிக்காவின் வளங்களைக் கொள்ளையடித்தவர்களிடம் இருந்து சொத்துக்களை ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க முடியவில்லை. ஆபிரிக்கத் தேசியக் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிப்பதற்கு இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கம் திரும்பியது. 1998-ம் ஆண்டிற்கும் 2011-ம் ஆண்டிற்கும் இடையில் தென் ஆபிரிக்காவில் சிசுக்கள் இறக்கும் விழுக்காடு இரு மடங்காக அதிகரித்து விட்டது. தென் ஆபிரிக்காவில் வன்முறைகள் தொடர்கின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கின்றன. வேலையில்லாப்பிரச்சனை 25முதல் ஐம்பது விழுக்காடாக இருக்கின்றது. மூன்று இலட்சத்திற்கு அதிகமானவர்கள் எச் ஐ வீ  நோயால் பீடிக்கப்பட்டுள்ளார்கள். பல ஆபிரிக்க நாடுகள் உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரங்களாக மாறியுள்ள வேளையில் தென் ஆபிரிக்காவின் பொருளாதாரம் 1.9விழுக்காடு மட்டுமே வளர்கின்றது. நெல்சன் மண்டேலா அரசியலில் இருந்து ஓய்வு பெறும்போது தனக்கு அடுத்து சிரில் ரமபோசா வரவேண்டும் என எதிர்பார்த்தார். ஆனால் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் தபோ எம்பெக்கியைத் தேர்ந்தெடுத்தது. இதுவரை சமூக ஏற்றத் தாழ்வுகளால் ஒரு பெரும் மக்கள் எழுச்சி வராமல் பார்த்துக் கொண்ட தென் ஆபிரிக்க ஆட்சியாளர்கள் இன்னும் எத்தனை நாட்கள் முறையான பொருளாதார மேம்பாடின்றி தாக்குப் பிடிக்க முடியும். சில பொருளாதார நிபுணர்கள் நெல்சன மண்டேலாவிற்குப் பின்னர் தென் ஆபிரிக்காவில் பொருளாதாரம் சீர் குலையும் இனக்குழுமங்களிடை மோதல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றனர். மண்டேலாவின் இருப்பு தென் ஆபிரிக்காவில் ஒரு திடமான அரசியல் சூழ்நிலையை உருவாக்கி இருந்தது. ஒரு அரசியல் நிகழ்வு பொருளாதாரத்தில் எவ்வளவு தாக்கம் செய்யும் என்பதை அந்த நிகழ்வின் பின்னர் அந்த நாட்டின் பங்குச் சந்தையின் விலைகளின் அசைவு சுட்டிக்காட்டும். நெல்சன் மண்டேலாவின் மறைவின் பின்னர் தென் ஆபிரிக்கப் பங்குச் சந்தை விலையில் சிறிய அளவு அதிகரிப்பு ஏற்பட்டது. இது தென் ஆபிரிக்கப் பொருளாதாரம் இப்போது உள்ள நிலையில் தொடரப் போகிறது என்பதை அதாவது கறுப்பின மக்களுக்குப் பாதகமான நிலை தொடர்ப் போகிறது என்பதைக் காட்டுகிறது.

ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் அரச பதவிகளில் அமர்த்துபவர்களுக்கு தகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவர்களின் இன ஒதுக்கல் கொள்கைக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. இதனால் அமைச்சரவைப் பொறுப்புக்களிலும் அரச உயர் பதவிகளிலும் தரம் குறைந்தவர்கள் அமர்த்தப்பட்டனர். இது தென் ஆபிரிக்க அரசின் செயற்படுதிறனைப் பாதிக்கின்றது.

ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் ஒரு திறன் மிக்க ஆட்சி மூலம் கறுப்பின மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதில் இன்னும் வெற்றி காணவில்லை. இந்த நிலை தொடருமானால் ஆபிரிக்காவிலும் ஒரு அரபு வசந்த பாணியில் மக்கள் புரட்சி வெடிக்கும் ஆபத்து மண்டேலா உயிருடன் இருக்கும் போதே இருந்தது. அவரது மறைவின் பின்னர் அது இன்னும் அதிகரிக்கலாம்.
மண்டேலாவிற்குப் பின்னர் ஆபிரிக்காவின் வழிகாட்டியாகவும் அரசியல் திடத்  தன்மை பேணக் கூடியவராகவும் ஒருவர் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது சில ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் உறுப்பினர்கள் டெஸ்மண்ட் டூடூவின் பக்கம் திரும்புகிறார்கள்.

Friday, 6 December 2013

ப சிதம்பரத்தின் ஒப்பரேஸன் காதில பூ

இலங்கை மீதான இந்தியாவின் எல்லை தாண்டிய பேரினவாத நடவடிக்கைகளின் முக்கிய நிகழ்வு 1987இல் ஒப்பரேஸன் பூமாலை என்னும் பெயரில் அரங்கேறியது. பின்னர் அது இலங்கையின் எல்லை மீறிய அரச பயங்கரவாதத்துடன் கைகோத்துக் கொண்டது. தொடர்ந்து இலங்கை அரசின் இனக்கொலை உச்சமடைந்தது.

இலங்கை கொடுத்தாலும் இந்தியா விடாது
2002-ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க இடைக்கால தன்னாட்சி அதிகார சபையை தமிழர்களுக்கு கொடுக்க முன்வந்த போது அது இந்தியாவில் உள்ள அதிகாரப் பரவலாக்கத்திலும் பார்க்க அதிகமாக இருந்த படியால் இந்தியப் பேரினவாதிகள் வெகுண்டெழுந்தனர். அப்போதைய இலங்கைத் தூதுவராக இருந்த நிருபாமா ராவ் விரைந்து செயற்பட்டார். ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி கலைக்கப்பட்டது. இந்திய விரோத கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனையையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் இந்திய முயற்ச்சியால் கூட்டணிகளாக இணைக்கப்பட்டன. மஹிந்த ராஜ்பக்ச தலைமை அமைச்சராக்கப்பட்டார். பின்னர் ரணில்-பிரபா உடன்படிக்கையை மீறி தமிழர்கள் மீது மோசமான இனவழிப்புப் போர் கட்டவிழ்த்து விடப்பட்டு முள்ளிவாய்க்கால் வரை இன அழிப்புத் தொடர்ந்தது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரில் இந்தியாவின் பங்கு பற்றி தமிழ்நாட்டில் வாழ் தமிழர்களுக்கு சரியான தகவல் 2011-ம் ஆண்டு வரை முழுமையாகப் போய்ச் சேரவில்லை.  முத்துக்குமாரனின் தற்கொடை உட்படப் பலரின் தற்கொடைகள் திராவிடக் கட்சிகளின் ஊடகங்கள் உட்படப் பல ஊடகங்கள் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்ததுடன் வயிற்று வலியால் செத்தான், காதலில் தோல்வியால் செத்தாள் போன்ற போலிச் செய்திகளையும் உருவாக்கி மக்களைக் குழப்பின.  2011இல் நடந்த தமிழ்நாடு சட்ட சபைக்கான தேர்தலின் போதுதான் தமிழ் ஈழத்தில் நடந்த இனக்கொலை தொடர்பான உண்மைகள் ஓரளவிற்கு தமிழ்நாட்டு மக்களைப் போய்ச் சேர்ந்தது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டு மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டமும் மேலும் பல பரப்புரைகளைச் செய்தன. 2011-ம் ஆண்டு நடந்த சட்ட சபைத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி படு தோல்வியைச் சந்தித்தது.

2014-ம் ஆண்டு மே மாதம் அல்லது அதற்கு முன்னதாக இந்தியாவின் பாராளமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடக்க விருக்கின்றது. அதில் காங்கிரசுக் கட்சி தமிழ்நாட்டில் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற மாட்டாது என்பதை 2011இல் நடந்த சட்ட சபைத் தேர்தல் கட்டியம் கூறிவிட்டது. காங்கிரசுக் கட்சியுடன் கூட்டணி அமைக்க பல கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன. த்மிழ்நாட்டில் காங்கிரசுக் கட்சி ஒரு தீண்டத் தகாத கட்சி ஆகிவிட்டது என்றனர் சில அரசியல் விமர்சகர்கள். காங்கிரசின் தலைமைப் பீடத்தைப் பொறுத்த வரை தமிழ்நாடு தவிர்ந்த மற்ற மாநிலங்களில் காங்கிரசுக் கட்சி வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் அது காங்கிரசுக் கட்சியின் வெற்றியே. எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் தேவைப்படும் நேரத்தில் ஒரு சில அமைச்சுப் பதவிகளைக் கொடுத்து அவற்றை தம்முடன் இணைத்து ஒரு கூட்டணி அரசை அமைத்துவிடலாம். ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் காங்கிரசு அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை அவர்களின் அரசியல் இருப்பை உறுதி செய்ய அவர்கள் பாராளமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். அதிலும் ப சிதம்பரம் காங்கிரசுக் கட்சியில் ஓர் உயர் மட்டத் தலைவராகும். தற்போது சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன் மோகன் சிங் ஆகியோருக்கு அடுத்த படியான தலைவர் ப சிதம்பரம். அடுத்த இந்தியப் பொதுத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால் மட்டுமே தான் தலைமை அமைச்சர் பதவியை ஏற்பேன் என ராகுல் காந்தி உறுதிபடக் கூறிவிட்டார். இந்தப் பாராளமன்றத்துடன் மன் மோஹன் சிங் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போகின்றார். இதனால் ப சிதம்பரம் அடுத்த இந்தியத் தலைமை அமைச்சராக வரும் வாய்ப்பு இருக்கின்றது. இதற்கு அவர் தமிழ்நாட்டில் வெற்றி பெற வேண்டும். இதற்காக அவர் புதுச்சேரித் தொகுதியில் போட்டி போட முயற்ச்சி செய்தார். அதற்கு அந்தப் பிராந்திய காங்கிரசுக் கட்சியினரிடம் வரவேற்பில்லை. ஜி. கே வாசன் அணியினர் தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியில் அதிக செல்வாக்குப் பெறுவதையும் சிதம்பரம் தடுக்க வேண்டும். காங்கிரசும் திமுகவும் எதிர் அணிகளில் தேர்தலில் போட்டியிட்டால் சிதம்பரத்தின் செல்வாக்குக் குறையும். அந்த அளவிற்கு கருணாநிதி குடும்பத்துடன் சிதம்பரத்திற்கு நெருக்கம் உண்டு.

மேற்படி சூழலில்தான் சிதம்பரம் ஒரு இலங்கைப் பிரச்சனை தொடர்பாக ஒரு மாநாட்டைக் கூட்டினார். அதில் அவர் தமிழர்களின் காதில் பூச்சுற்றினார்.

பூச்சுற்று - 1: இலங்கையில் நடந்தது இனக்கொலை
. 2009-ம் ஆண்டு இலங்கையின் இறுதிப் போரின்போது மனித உரிமை மீறல்கள் நடந்ததாகக் கூறி அதைக் கண்டிக்கும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் கொண்டு வந்தபோது அதை இந்தியா இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றிய போது சிதம்பரம் இந்திய அமைச்சரவையில் இருந்தார். இந்தியப் பாராளமன்றத்தில் பொதுவுடமைவாதி ராஜா இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என ஆற்றிய உரையை சிதம்பரத்தின் காங்கிரசுக் கட்சியினர் கடுமையாக எதிர்த்து அதை அவைக்குறிப்பில் (ஹன்சார்ட்) இருந்து நீக்கினர். சிதம்பரத்திற்கு திராணியிருந்தால் இதைப் இந்தியப் பாராளமன்றத்தில் அல்லது ஏதாவது ஒரு வட இந்தியத் தொலைக்காட்சியில் இலங்கையில் நடந்தது ஓர் இனக்கொலை எனச் சொல்லட்டும். மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி இலங்கையில் நடந்த இனக் கொலைக்கு ப சிதம்பரமும் உடந்தை என்பதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாகச் சொல்கிறார். இது பற்றி தன்னுடன் விவாதத்திற்கு வரும்படி சிதம்பரத்திற்கு சவாலும் விடுத்துள்ளார். சவாலைச் சிதம்பரம் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. இலங்கையில் இலன்க்கை விவகாரத்தை கையாண்ட சிவ் சங்க்ர மேனனை சிதம்பரம் பதவி நீக்கம் செய்வாரா?

பூச்சுற்று - 2: சிதம்பரத்தின் இராசதந்திர நடவடிக்கைகளால் தான் டேவிட் கமரூன் இலங்கைக்கு எதிராக நடந்து கொண்டார்.
இதுதான் மொட்டந்தலைக்கும் உள்ளங்காலுக்கும் முடிச்சுப் போடுவது. ஆனால் சிததமபரத்தின் அமைச்சரவை சகாவான சல்மான் குர்ஷித் இலங்கையில் போரின் போது ந்டந்தவற்றிற்கு எந்த ஒரு பன்னாட்டு விசாரணையும் தேவையில்லை என்கிறார். அவர்களது கமலேஷ் ஷர்மா இலங்கையின் இராசதந்திரக் கைக்கூலி போல் செயற்படுகின்றார்.

பூச்சுற்று - 3 இந்தியத் தலைமை அமைச்சர் யாழ்ப்பாணம் போய் தமிழ்த் தலைவர்களைச் சந்திப்பார்
. உங்கள் தலைமை அமைச்சரே ஒரு தலையாட்டிப் பொம்மை என உலகத்தால் விமர்சிக்கப்படும் ஒருவர். அவர் யாழ் போவதால் எந்த ஒரு நன்மையும் ஏற்படப்போவதில்லை ஐயா.

பூச்சுற்று - 4 : தமிழர்களுக்கு உரிமை கிடைக்கும்வரை காங்கிரசு ஓயாது
. 1987இல் தமிழர்களை நீங்கள் உங்கள் படைக்கலன்களை ஒப்படையுங்கள் நாம் இனி உங்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் என்றது காங்கிரசின் ஆட்சி. அதன் பின்னர் மூன்று இலட்சத்திற்கு மேலான தமிழர்கள் கொல்லப்பட்டபோது காங்கிரசு தூங்கிக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை முன்னின்று அந்தக் கொலைகளுக்கு உதவியது. உங்கள் 13வது திருத்தம் 26 ஆண்டுகளாக நடை முறைப்படுத்தப்படவில்லை. 26 ஆண்டுகாலம் ஓய்வெடுத்தீர்களா கோமாவில் இருந்தீர்களா?

பூச்சுற்று - 5: மனித உரிமை மீறியவர்களை இலங்கை தண்டிக்க வேண்டும்.
முதலில் இலங்கைக்கு அமைதிப் படை என்ற போர்வையில் சென்று அங்கு போர்க் குற்றம் புரிந்தவர்களை நீங்கள் முதலில் தண்டியுங்கள்.

பூச்சுற்று - 6 காங்கிரசால் மட்டுமே இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற முடியும். காங்கிரசு ஆட்சியில் இருந்த போது அதன் உதவியுடன் தான் இலங்கையில் மூன்று இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்தியாவின் போரைத்தான் நாம் செய்தோம் என்றார் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச. இந்தியாவில் தென் மண்டலத்தின் உள்ள பார்ப்பன, மலையாளிக் கும்பல்களும் உங்களது கட்சியினரும் தான் தமிழர்களின் பரம் விரோதிகளாக இருந்தார்கள் இப்போது அவர்களுடன் இல்ங்கையில் முத்லீடு செய்த இந்தியப் பெரும் பணக்காரர்களும் இணைந்து கொண்டார்கள். ஆகையால் உலகெங்கும் உள்ள தமிழர்கள் இந்தியாதான் தமிழர்களின் முதலாம் எதிரி என்பதை உணர்ந்து கொண்டார்கள்.

பூச்சுற்று - 7 இறுதிப் போரை இந்தியா நிறுத்த முயன்றது. சிதம்பரம் இறுதிப் போரை இந்தியா நிறுத்த முயன்றது அதை வேறு நாடுகள் தடுத்தது விட்ட்ன என்கிறார். ஆனால் உண்மையில் நடந்தது தலைகீழானது. திருமுருகன் காந்தி இதையும் தன்னால் நிரூபிக்க முடியும் என்கிறார்.

முதல் கக்கூசு கட்டிக் கொடு
சிதம்பரத்திற்கு எதிர்ப்பு தமிழர் தரப்பில் இருந்து வந்ததிலும் பார்க்க சிங்களத்தரப்பில் இருந்து அதிகம் கிள்ம்பியுள்ளது. சிங்கள அமைச்சர் ஒருவர் சிதம்பரத்தை கடுமையாக விமர்சித்து நீ முதலில் உனது நாட்டு மக்களுக்குப் போதிய அளவு கழிப்பறைகளைக் கட்டிக் கொடு பிறகு இலங்கையைப் பற்றிப் பேசு என முகத்தில் அடித்தால் போல் சொல்லிவிட்டார். ஆனால் இந்திய வெளியுறவுத் துறை இதுபற்றி மௌனமாக இருக்கிறது. பாவம் சிதம்பரம்.

சிதம்பரத்தின் நடவடிக்கை வெறும் தேர்தல் தந்திரம் மட்டுமல்ல.
சிதம்பரம் தமிழர் பிரச்சனையைக் கையில் எடுத்தது தனியே அவரது தேர்தல் வெற்றியை மட்டும் கருத்தில் கொண்டதல்ல. தமிழர்களை தலையெடுக்க விடாமல் செய்ய அவரது எசமானர்கள் இட்ட உத்தரவின் படி சிதம்பரம் செயற்படுகின்றார். கனடா, பிரித்தானியா, மொரிஸியஸ் ஆகிய நாடுகள் இலங்கை தொடர்பாக தமது வெளிநாட்டுக் கொள்கையை மாற்றி விட்டன. அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையும் முன்பு போல் இல்லை. அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து ஒரு நாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் அதற்குப் பல நாடுகள் ஆதரவு அளிக்கும். ஒஸ்ரேலியா நியுசிலாந்து  போன்ற நாடுகளும் இதில் அடங்கும். சீனா தான் உலக அரங்கில் மனித உரிமை மீறும் நாடுகளின் காவலன் என்ற் பிம்பத்தை அழிக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டுள்ளது. தான் உலகின் முதன்மை நாடாக மாறுவதற்கு இது அவசியம் என்பதை சீனா உணர்ந்துள்ளது. ஆதாலால் இலங்கையை எல்லாக் கட்டதிலும் சீனா பாதுகாக்க மாட்டாது. இவற்றால் பன்னாட்டு அரங்கில் இலங்கைக்கு எதிரான ஒரு கருத்துப் பரவலாகிக் கொண்டு போகின்றது. பல மனித உரிமை அமைப்புக்கள் இலங்கையைத் தண்டிக்காவிட்டால் அதன் வழியை மற்ற ஆட்சியாளர்கள் பின்பற்றுவார்கள் என நினைக்கின்றன. இதனால் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் இரு விடயங்களால் கலங்கிப் போய் உள்ளனர். ஒன்று இலங்கை விவகாரம் இந்தியாவின் கையை மீறிப் போய் விடப்போகிறது. இரண்டாவது இலங்கையில் நடந்த  போர் தொடர்பாக ஒரு பன்னாட்டு விசாரணை வந்தால் அதில் இந்தியாவின் பங்களிப்பு அம்பலமாகும். விஜய் நம்பியார், சிவ் சங்கர மேனன்,  எம் கே நாராயணன் ஆகியோரின் பங்கு வெளிவரும். இதை தவிர்ப்பதற்கு சிதம்பரத்தினூடாக இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் முயல்கின்றனர். இது நம்ம ஏரியா நாம் எமது ராஜிவ்-ஜே ஆர் ஒப்பந்தத்தின் படி இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்கிறோம் அதை எங்களிடம் விட்டு விடுங்கள் என உலக நாடுகளிடம் இந்தியா சொல்லப் போகிறது. ஆனால் இந்தியாவைச் சுற்றி உள்ள எல்லா நாடுகளிலும் இந்திய வெளியுறவுக் கொள்கை பிழையாகிப்போனதை எல்லா நாடுகளும் உணர்ந்துள்ளன.  

Wednesday, 4 December 2013

ஹிஸ்புல்லா தலைவர் லெபனானில் கொல்லப்பட்டார்

ஈரானின் ஆதரவுடன் லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பின் படைத்துறைத் தலைவர்களில் ஒருவரான ஹசன் லகீஸ் கொலை செய்யப்பட்டுள்ளார். லெபனானின் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் உள்ள அவரது வீட்டின் முன் இக் கொலை நடந்துள்ளது. ஹிஸ்புல்லா இந்தக் கொலையை இஸ்ரேல் செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளது.


ஹிஸ்புல்லா அமைப்பு ஹசன் லகீஸ் எப்படிக் கொல்லப்பட்டார் என்ற விபரத்தை வெளிவிடவில்லை. லெபனானிய அரசு அவர் துப்பாக்கிதாரிகளால் சுடப்பட்டார் என்கின்றது. அவரது தலையிலும் தோளிலும் நான்கு தடவை ஒலி எழுப்பாத கைத்துப்பாக்கியால் சுடப்பட்டார்.

சிய முசுலிம் இயக்கமான ஹிஸ்புல்லா அமைப்பு சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்துடன் இணைந்து கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராகப் போராடுகின்றது. இதனால் சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் லெபனானில் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக பல தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். பெய்ரூட்டில் உள்ள ஈரானியத் தூதுவரகத்தில் இரு தற்கொடைத் தாக்குதல்களை சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் 2013 நவம்பர் மாதம் 23-ம் திகதி மேற்கொண்டிருந்தனர். அத்தாக்குதல்களில் 23 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்தத் தாக்குதல்கள் சவுதி அரேபியாவின் தூண்டுதலால் நடந்தவை என ஹசன் லகீஸ் தெரிவித்திருந்தார். ஹசன் லகீஸைக் கொல்ல இஸ்ரேல் பலதடவை முயன்றதாக ஹிஸ்புல்லா குற்றம் சாட்டுகிறது. இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் யிகல் பல்மோர் தமது நாட்டுக்கும் இந்தக் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மறுத்துள்ளார். மேலும் அவர் இது ஹிஸ்புல்லாவின் வழமையான இயல்பான குற்றச்சாட்டு என்றார்.

இஸ்ரேல் ஹிஸ்புல்லா இயக்கத்தை தனது முதலாவது எதிரியாகக் கருதுகின்றது. ஹிஸ்புல்லா இயக்கத்திற்கு படைக்கலன்கள் போய்ச் சேர்வதைத் தடுக்க சிரியாவில் ஆறுக்கு மேற்பட்ட விமானத் தாக்குதல்களை சிரியக் கிளர்ச்சி தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் நடாத்தியிருந்தது.Tuesday, 3 December 2013

உலகெங்கும் வங்கியில் இருக்கும் பணங்களைச் சூறையாடும் இரசிய வைரஸ்

உலகின் எந்தப் பகுதியிலும் இருக்கும் வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்தைச் சூறையாடக் கூடிய கணனிக் கிருமிகளை(வைரஸ்) இரசியாவில் உள்ள திருடர்கள் உருவாக்கியுள்ளனர். Neverquest Trojan என அழைக்கப்படும் இவை மிகவும் வலிமை மிக்க கணனிக் கிருமிகளாகும். வழமையான கணனிக் கிருமி எதிரிகளால்(Anti-virus) இவற்றைக் கையாள முடியாது என்றும் சொல்லப்படுகின்றது.

Neverquest Trojan ஏற்கனவே பல உலகின் பிரபல வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் உள்ள கணக்குகளில் தனது கைவரிசையைக் காட்டியுள்ளது. திருட்டு வலைத்தலங்களில் உள்ள இணைப்புக்களை யாராவது சொடுக்கினால் அவர்களின் கணனிக்குள் Neverquest Trojan நுழைந்துவிடும். கணனியில் இருந்து வங்கி கணக்குகளுக்கு நுழையும் போது (log in) கொடுக்கப்படும் பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் Neverquest Trojanபெற்றுக் கொண்டு தன்னை உருவாக்கிய திருடர்களுக்கு அனுப்பிவிடும். அவற்றைப் பாவித்து அவ் வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்தை அவர்கள் தமது கணக்குகளுக்கு மாற்றிவிடுவார்கள். இது பற்றிய முழு விபரங்களை இந்த இணைப்பில் காணலம்: Neverquest Trojan

Monday, 2 December 2013

சீனாவிற்கு எதிராக நீர்மூழ்கிகளை வேட்டையாடும் விமானங்களை அனுப்பிய அமெரிக்கா

அமெரிக்காவின் துணை அதிபர் ஜோ பிடன் கிழக்குச் சீனக் கடலில் உருவாகியுள்ள போர் அபாயத்தைத் தவிர்க்க ஜப்பானிற்கும் சீனாவிற்கும் ஒரு பயணத்தை மேற் கொள்ளவுள்ளார். 03-12-2013 செவ்வாய்க் கிழமை டோக்கியோவில் பேச்சு வார்த்தை நடாத்திவிட்டு சீனாவிற்கு செல்லவுள்ளார் ஜோ பிடன்.

கிழக்குச் சீனக் கடலில் உள்ள தீவுக்கூட்டத்திற்கு ஜப்பானும் சீனாவும் உரிமை கொண்டாடி வருகின்றன. மக்களற்ற இத்தீவுக் கூட்டங்களை ஜப்பானியர்கள் செங்காகு எனவும் சீனர்கள் டயாகு எனவும் அழைக்கின்றனர். அமெரிக்கா இரு நாடுகளுக்கும் இந்த தீவுக் கூடங்களிள் இறையாண்மை இல்லை எனவும் ஆனால் ஜப்பனிற்கு அவற்றில் நிர்வாகக் கட்டுப்பாடு இருக்கின்றது எனவும் கூறுகின்றது.  நவம்பர் 24-ம் திகதி இத்தீவுக் கூட்டத்தை உள்ளடக்கிய வான் பிராந்தியத்திற்குள் வரும் விமானங்கள் தனக்கு அறிவித்துவிட்டு வரவேண்டும் என ஒரு தலைப்பட்சமான பிரகடனம் செய்தது.

சீனாவின் வான் பாதுகாப்புப் பிரந்தியப் பிரகடனத்தை மறுக்கும் முகமாக அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் தமது விமானங்களை சீனாவிற்கு அறிவிக்காமல் அப் பிராந்தியத்திற்குள் பறக்க விட்டன. அமெரிக்க அரசு தனது நாட்டு பயணிகள் போக்குவரத்து மற்றும் வர்த்தக விமானங்கள் சீன அரசிற்கு அறிவித்து விட்டு கிழக்குச் சீனக்கடலுக்கூடான பறப்புக்களை மேற்கொள்ளும் படி அறிவுறுத்தியுள்ளது.

உலகில் இருபதுக்கு மேற்பட்ட நாடுகள் தமது வான்பரப்புக்களை பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப் படுத்தியுள்ளன. அப்படி ஒன்றைத் தான் சீன செய்துள்ளது என்பதே சீனர்களில் நிலைப்பாடு. ஆனால் மற்ற நாடுகள் தமது சொந்த வான் பரப்பைத்தான் அப்படிப் பிரகடனப் படுத்துயுள்ளன மற்றவர்களுக்குச் சொந்தமான பிராந்தியத்தையோ அல்லது பிரச்சனைக்கு உரிய பிராந்தியத்தையோ அப்படிப் பிரகடனப் படுத்தவில்லை என்கிறது ஜப்பான்.

போரை யாரும் விரும்பவில்லை
சீனா தனது எல்லைகளை அகலமாக்கும் திட்டத்தில் உறுதியாக இருந்தாலும் தற்போதைக்கு அது எந்த ஒரு நாட்டுடனும் போரை விரும்பவில்லை. தனது படை பலத்தைக் காட்டி சீனா தனது எல்லைகளை அகலமாக்க விரும்புகின்றன. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவும் மூன்றாம் இடத்தில் இருக்கும் ஜப்பானும் ஒன்றை ஒன்று இரு நூற்றாண்டுகளாக வெறுக்கும் நாடுகளாகும். இரு தடவைக்கு மேல் இரு நாடுகளும் போர் புரிந்துள்ளன. சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தாய்வான், கொரியத் தீபகற்பம் ஆகியவற்றை ஜப்பான் பிடுங்கிக் கொண்டது. பின்னர் இரண்டாம் உலகப் போரின் பின்னர். வட கொரியா, தென் கொரியா, தாய்வான் ஆகியவை தனி நாடுகளாகின. சீனாவிற்கு ஜப்பானிற்கும் இடையிலான வர்த்தகம் 2012-ம் ஆண்டில் 334 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியானதாக இருந்தது. தமது பொருளாதார வளர்ச்சிக்கு இரு நாடுகளும் இந்த வர்த்தகத்தில் பெரிந்தும் தங்கியிருக்கின்றன. சீனாவிற்கான ஏற்றுமதியில் சோனி, டொயோட்டா போன்ற ஜப்பானிய நிறுவனங்கள் பெரிந்தும் தங்கியிருக்கின்றன. சீனா தனது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்பத்தை ஜப்பானில் இருந்து மலிவாகப் பெற்றுக் கொள்ள முடியும். சீன மக்களிடை அதிகரிக்கும் ஜப்பானிற்கு எதிரான மனப்பாங்கு இரு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தகத்தைப் பாதித்துக் கொண்டிருக்கின்றது.

ஜப்பானிற்கு உதவ வேண்டிய கடப்பாட்டில் அமெரிக்கா
இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோற்கடிக்கப்பட்ட பின்னர் ஜப்பான் ஒரு தாக்குதல் படையை தன்னிடம் வைத்திருக்க முடியாது என்றும் அது ஒரு பாதுகாப்புப்படையை மட்டும் வைத்திருக்கலாம் எனவும் ஜ்ப்பானின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா உத்தரவாதம் என்றும் ஜப்பானில் அமெரிக்கப் படைகள் தளம் அமைத்துத் தங்கியிருப்பதற்கும் ஜப்பானும் அமெரிக்காவும் ஒத்துக் கொண்டன. இந்த ஒப்பந்தம் 1952இல் கைச்சாத்திடப்பட்டு பின்னர் 1960இல் திருத்தம் செய்யப்பட்டது. அதன் படி இரு நாடுகளும் ஒன்றிற்கு ஒன்று படைத்துறை ஆபத்து வரும்போது இரு நாடுகளும் ஒத்துழைக்கும் ஜப்பானிய நிர்வாகத்திற்கு உள்பட்ட பிராந்தியங்கள் ஆபத்திற்கு உள்ளாகும் போது அமெரிக்கா ஜப்பானைப் பாது காக்கும். இதனால் சென்காகு தீவைப் பாதுகாகக வேண்டிய பொறுப்பு அமெரிக்காவிர்கு உண்டு. பிரித்தானியாவும் ஜப்பானும் 2013-ம் ஆன்டு பாதுகாப்பு உபகரண ஒப்பந்த்ம் செய்துள்ளன. இன்று(02/12/2013) ஜப்பானியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரித்தானியக் கடற்படைத் தளபதியை சந்தித்து ஜப்பனின் மீது ஒருதலைப்பட்சமான தாக்குதல் நடக்கும் போது பிரிதானிய ஜப்பானைப் பாதுகாக்க களத்தில் இறங்கும் என உறுதியளிட்துள்ள அதே வேளை பிரித்தானியப் பிரதமர் சீனாவில் வர்த்தக ஒத்துழைப்பு தொடர்பாக உடன்பாட்டை எட்டியுள்ளார்.

நீர்மூழ்கிகளை வேட்டையாடும் விமானங்களை அனுப்பிய் அமெரிக்கா
நவம்பர் 24-ம் திகதி கிழக்குச் சீனக் கடலில் உருவான பதட்டத்தைத் தொடர்ந்து செய்யப்படும் முதல் படை நகர்வாக அமெரிக்கா தனது நீர்மூழ்கிகளை வேட்டையாடும் விமானங்களை ஜப்பானிற்கு அனுப்பியுள்ளது. P-8 எனப்படும் இந்த விமானங்கள் torpedoes எனப்படும் ஏவுகணைகளையும் புது ரக கதுவிகளையும்(ராடார்) கொண்டுள்ளன.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...