Friday, 27 September 2013

வட மாகாணசபையில் தொடரப்போகும் இழுபறிகளும் வெளிவரப் போகும் உண்மைகளும்.

இலங்கையின் மாகாண சபைகள் இலங்கை அரசமைப்பின் 13வது திருத்தச் சட்டம், மாகாணசபைச் சட்டம் ஆகிய இரு சட்டங்களுக்கு அமைய உருவாக்கப்பட்டது. 13வது திருத்தத்திற்கு திருத்தம் கொண்டுவர இலங்கைப் பாராளமன்றில் மூன்றி இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. மாகாண சபைச் சட்டத்தை சாதாரண பெரும்பான்மையினரின் ஆதரவுடன் மாற்றி அமைக்கலாம்.

அதிகாரமில்லா அதிகாரப் பரவலாக்கம்.
இலங்கையின் மாகாண சபையின் அதிகாரங்கள் பற்றி அன்று நடேசன் சத்தியேந்திராவும் இன்று குமாரவடிவேல் குருபரனும் போதிய அளவு சொல்லிவிட்டார்கள். இது பற்றிக் காண கீழுள்ள இணைப்பில் சொடுக்கவும்:
1. சந்தியேந்திரா
2. குருபரன்
இந்த இணைப்பில் இருப்பவை சட்டம் பற்றியவை என்றாலும் அவற்றை ஒவ்வொரு தமிழ் மகனும் திருப்பி திருப்பி வாசித்தும் திருப்பித் திருப்பிக் கேட்டும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இனி வரும் நாட்களில் அது பெரிதும் உதவியாக இருக்கும்.

ஒரு சட்டத்தில் மூன்று அம்சங்கள் இருக்கின்றன: 1. சட்டவாக்கம், 2. சட்ட அமூலாக்கம், 3. சட்ட வியாக்கியானம்.
இலங்கையில் சட்டவாக்க அதிகாரம் இலங்கைப் பாராளமன்றத்திடமும், சட்ட அமூலாக்கம் குடியரசுத் தலைவரிடமும், சட்ட வியாக்கியானம் நீதித் துறையிடமும் இருக்கின்றன.

மாகாணசபைச் சட்டவாக்கம் எப்படி நடந்தது?
1977இல் ஜே. ஆர் ஜயவர்த்தன தலைமையில் வந்த ஐக்கிய தேசியக் கட்சி சிங்கப்பூர் போல இலங்கையை சிறந்த நாடாக முன்னேற்றுகிறேன் பேர்வழி என்று தீவிர அமெரிக்க ஆதரவாளராக உருவெடுத்தார். திருகோணமலைத் துறைமுகத்தையும் சிலாபத்தையும் அமெரிக்காவிற்குத் தாரைவார்க்கத் தயாரானார்.  இதனால் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி கடும் ஆத்திரம் அடைந்தார். அவர் தமிழர்களின் இலங்கை அரசுக்கு எதிரான  படைக்கலப் போராட்டத்தை தீவிரப்படுத்தி இலங்கை அரசின் மீது கடும் அழுத்தத்தைப் பிரயோகித்தார். எண்பதுகளில் இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடுவதாக இருபதிற்கு மேற்பட்ட இயக்கங்கள் செய்ற்பட்டன. அவற்றில் சில தமிழ்த்திரைப் படங்களின் பெயரால் அழைக்கப்பட்டதுண்டு. விடுதலை புலிகள் இயக்கத்தை அலைகள் ஓய்வதில்லை என்ற பெயரால் அழைப்பார்கள். ஒயாமல் இலங்கை இராணுவத்தின்மீது தாக்குதல் நடாத்துவதால் இப்பெயர். புளொட் இயக்கத்தை விடியும் வரை காத்திரு என்று அழைப்பர். இலங்கை இராணுவத்தின் மீது வெறுமனே அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தாக்குதல் நடாத்தாமல் தக்க தருணம் வரும்போது தாக்கவேண்டும் என்று கூறுயதால் இந்தப் பெயர். ரெலொ இயக்கத்தை தூறல் நின்று போச்சு என்று அழைப்பர். சில தாக்குதல்களை இலங்கை இராணுவத்தின் மீது நடாத்திவிட்டு பின்னர் எதுவும் செய்யாததால் இப்பெயர். இவைதவிர தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம், ஈரோஸ், தமிழீழ விடுதலைப் படை போன்றவை இராணுவத்தின் மீது தாக்குதல்கள் நடாத்துவதுண்டு. ஈரோஸ் இலங்கையின் பொருளாதரத்தின் மீது பாதிப்பு ஏற்படுத்துவதில் அதிக அக்கறை காட்டியது. ஆக மொத்தத்தில் இவைஎல்லாம் இலங்கை அரசிற்குப் பாரிய தலையிடியாகவே இருந்தன. இந்த இயக்கங்களால் இலங்கையின் எப்பாகத்திலும் தாக்குதல் நடாத்தமுடியும். விடுதலைப் புலிகள் விக்டர் தலைமையில் அநுராதபுரத்தில் நாடாத்திய தாக்குதல் முழு இலங்கையையும் படு அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இப்படியான ஒரு சூழ்நிலையில்தான் 13வது அரசியல் திருத்த சட்டமும் மாகாணசபைச் சட்டமும் இலங்கைப் பாராளமன்றில் நிறை வேற்றப் பட்டது. இதற்குச் சிங்களமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த போது இலங்கை அரசு உழங்கு வானூர்தியில் இருந்து சிங்களவர்கள் மீது தாக்குதல் நடாத்தியது. ஆளும் கட்சி பாராளமன்ற உறுப்பினர்களின் திகதி இடப்படாத பதவி விலகல் கடிதம் அப்போது அதிபர் ஜே ஆர் ஜெயவர்தனேயின் கையில் இருந்தது. சிங்கள மக்களின் விருப்பத்திற்கு மாறாகவே இந்த இரு சட்டங்களும் இயற்றப்பட்டன. இந்த இரு சட்டங்களையும் தமிழர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழர்களை இந்தியா கடுமையாக மிரட்டி சம்மதிக்க வைத்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கொல்லப் போவதாகவும் இந்தியா மிரட்டியது.

சட்ட அமூலாக்கம்
13வது திருத்தத்தையும் மாகாண சபைச் சட்டத்தையும் 26 ஆண்டுகள் நிறைவேற்றாமல் இழுத்தடித்தது. மாகாண சபை என்பது ஒரு மாடு என்றால் அதன் மூக்கணாங்கயிறாக மாகாண ஆளுனரும் அந்த மூக்கணாங் கயிற்றைப் பிடிப்பவராக இலங்கைக் குடியரசுத் தலைவர் இருப்பார். மாடு எவ்வளவு தூரம் மேயலாம் என்பதையும் எதை மேயலாம் என்பதையும் குடியரசுத் தலைவர் தீர்மானிப்பார். தேவை ஏற்படின் மாட்டை கட்டியும் போடலாம். அது மட்டுமல்ல தேவை ஏற்படின் மாட்டை இறைச்சிக்கு விற்று விடவும் முடியும். அதாவது 13வது திருத்தம், மாகாண சபைச் சட்டத்தையும் இலங்கை பாராளமன்றம் இரத்துச் செய்யலாம். 

சட்ட வியாக்கியானம்
உச்ச நீதிமன்ற நீதியரசர் சரத் என் சில்வா 13வது திருத்தத்தின் படி வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இணைத்தது பிழையானது என்ற வியாக்கியானத்தை வழங்கினார். இது தமிழர்களின் தாயகக் கோட்பாட்டிற்கு விழுந்த முதலாவது அடி. 2013-09-26-ம் திகதியான தியாகி திலீபனின் நினைவு நாளில் மகாண சபைக்கு அரச காணிகளுக்கான அதிகாரம் இல்லை என்ற வியாக்கியானத்தை இலங்கை உச்ச நீதி மன்ற நீதியரசர் வழங்கினார். இலங்கை அரசமைப்பின் 18வது திருத்தத்தின் பின்னர் நீதித் துறை இலங்கை குடியரசுத் தலைவரின் அதிகார வரம்புக்குள் வந்து விட்டது எனப்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 18வது திருத்தத்தின் படி:

  •     The President can seek re-election any number of times;
  •     The ten-member Constitutional Council has been replaced with a five-member Parliamentary Council;
  •     Independent commissions are brought under the authority of the President; and,
  •     It enables the President to attend Parliament once in three months and entitles him to all the privileges, immunities and powers of a Member of Parliament other than the entitlement to vote. In short, it is all about arming the President with absolute power.
இழுபறியில் உண்மைகள் வெளிவரும்
இப்போது வட மாகாண சபைக்கு என்று ஒரு பணிமனை கூடக் கிடையாது. அது இனி எங்கே கூடப் போகிறது? அது நிறை வேற்றப் போகும் நடவடிக்கைகளை சிங்கள ஆட்சியாளர்கள் எப்படி அனுமதிக்கப் போகிறார்கள் என்பதைப் பற்றி இனி நாங்கள் பார்க்கலாம். இனி நிறைய முரண்பாடுகள் இழுபறிகள் முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையில் வரப் போகிறது.  அதில் யாருக்கு வெற்றி கிடைக்கப்ப் போகிறது என்பதை நாம் பார்க்கலாம். இந்த முரண்பாடுகள் தொடர்பாக நீதித் துறையிடம் முதலமைச்சர் செல்லும் போது நீதித் துறை எப்படியான வியாக்கியானங்களைச் செய்யும் என்பதையும் இனி நாம் பார்க்கலாம். சத்தியேந்திராவும் குருபரனும் சொன்னவற்றின் உண்மைத் தன்மையை இனி நாம் நடை முறையில் காண நிறைய சந்தர்ப்பங்கள் வரும்.

Thursday, 26 September 2013

பிளவுபட்ட சிரியப் போராளிகளும் அதன் விளைவுகளும்

அல் கெய்தா அமைப்புடன் தொடர்புடைய ஜபத் அல் நஸ்ரா முன்னணியின் தலைமையில் 11 போராளிக் குழுக்கள் ஒன்றாக இணைந்துள்ளன. இவை சிரியா இசுலாமியச் சட்டமான ஷரியாச் சட்டப்படி ஆளப்பட வேண்டும் என்ற பொதுக் கொள்கையில் இணைந்துள்ளன. இந்த இணைவு சிரிய போராளிக் குழுக்களை இரு பெரும் பிரிவுகளாகப் பிளவு பட வைத்துள்ளது.

1. தௌஹீட் படை என்னும் சுதந்திர சிரியப் படையின் அலெப்போ படையணி, 2. லிவா அல் இஸ்லாம் எனப்படும் டமஸ்கசில் செயற்படும் பெரும் படையணி,
3. அஹார் அல் ஷம் எனப்படும் தேசம் முழுவதும் செயற்படும் மதவாதப் போராளிக் குழு
இவை ஒன்றாக இணைந்த 11 குழுக்களில் முக்கியமானவை.

2012 டிசம்பரில் வேறுபட்ட பல போராளிக்குழுக்களைச் சேர்ந்த 500பிரதிநிதிகள் துருக்கியில் ஒன்று கூடி 30 பேர் கொண்ட ஓர் உச்ச படைத்துறைச் சபையினை (Supreme Military Council) உருவாக்கினர். அதற்கு பொறுப்பாக ஒரு Chief of Staffஐயும் தெரிவு செய்தனர். இந்த கூட்டத்திற்கு இரு இசுலாமிய தீவிரவாத அமைப்புக்கள் அழைக்கப்படவில்லை. இந்தக் கூட்டத்தினதும் ஒருங்கிணைப்பினதும் நோக்கம் மேற்கு நாடுகளில் இருந்து சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவியைப் பெறுவதே. ஆனால் அவர்களுக்கு தேவையான உதவியோ அல்லது ஓர் ஐக்கிய நாடுகள் சபைத் தீர்மானமோ இதுவரை தமக்குக் கிடைக்கவில்லை என பலதடவைகள் சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.தமக்குப் போதிய உதவிகள் மேற்கு நாடுகளில் இருந்து கிடைக்காமையினால் ஏமாற்றமடைந்த போராளிக் குழுக்கள் பல ஜபத் அல் நஸ்ரா தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளன. இது அமெரிக்காவிற்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. எஞ்சியுள்ள குழுக்கள் போதிய தாக்கும் திறன் கொண்ட அமைப்புக்கள் அல்ல.

சிரிய உச்சப் படைத்துறைச் சபையின் தலைவரான ஜெனரல் சலிம் இத்திரிஸ் பிரான்ஸில் மேற் கொண்டிருந்த பயணத்தை இடை நிறுத்தி சிரியாவிற்கு அவசரமாகத் திரும்புகிறார். இவர் ஜபத் அல் நஸ்ரா தலைமையில் இணைந்த சில குழுக்களை முக்கியமாக தௌஹீட் படையினரை தமது முடிவை மறு பரிசீலனை செய்யும்படி கோருவார்.

இந்த ஆண்டு நடுப்பகுதியில் எடுக்கப்பட்ட கணக்கின்படி முக்கிய சிரியக் கிளர்ச்சிக் குழுக்களின் உறுப்பினர்கள் விபரம்:

Syria Free Syrian Army:                   50,000 முதல் 80,000 வரை
Ahfad al-Rasul Brigade:                   10,000 முதல் 15,000 வரை
Syrian Islamic Liberation Front:    37,000
Syrian Islamic Front:                         13,000
Al-Nusra Front:                                     6,000

இவர்கள் 178,000 பேரைக் கொண்ட சிரிய அரச படையினருக்கு எதிராக போராடுகிறார்கள்.

மேற்கு நாடுகள் சிரியக் கிளர்ச்சிக்காரர்களை ஒன்றுபடுத்தி ஓர் இடைக்கால அரசை அமைக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் அதை மறுதலிக்கும் முகமாகவே ஜபத் அல் நஸ்ரா அமைப்பு ஒரு மதவாத கூட்டணியை அமைத்துள்ளது. அமெரிக்க இரட்டைக் கோபுரத்தாக்குதலுக்குப் பின்னர் அரசு அல்லாத எந்த ஒரு அமைப்பும் படைக்கலன்களைக் கொண்டிருக்கக் கூடாது என்றும் அவற்றிற்கு படைக்கலன்கள் வழங்கக் கூடாது என்றும் அமெரிக்கா சொல்லி வந்தது. இந்தக் கொள்கையாலும் இசுலாமியத் தீவிரவாத அமைப்புக்களின் கைகளில் தனது படைக்கலன்கள் போகக் கூடாது என்ற நோக்கத்தாலும் அமெரிக்கா சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலன்கள் வழங்குவதைத் தடுத்து வந்தது. இந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகள் தாம் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலன்கள் வழங்கப் போவதாக அறிவித்திருந்த போதிலும் அவர்களுக்கு எந்த விதமான படைக்கலன்களையும் வழங்காமலேயே இருந்து வந்தன. ஆகஸ்ட் 21-ம் திகதி நடந்த வேதியியல் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் சில படைகலன்கள் இரகசியமாக சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கப்பட்டன.
Jarba said the "National Free Army" would be under the supervision of the FSA chief of staff General Salim Idriss and under the umbrella of the SNC.
சிரியக் கிளர்ச்சிக்காரர்களுள் சிரிய சுதந்திரப்படை அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாகும். அதன் தலைமையில் இயங்கும் தேசிய விடுதலைப் படை ஒரு சிறந்த போராளிக்குழு அல்ல.தாக்கும் திறன் கொண்ட பல போராளிக் குழுக்கள் ஒன்றாக இணைந்து அல் கெய்தாவுடன் தொடர்புடைய ஜபத் அல் நஸ்ராவின் தலைமையில் இணைந்தமை அமெரிக்காவிற்கு பல சங்கடங்களை ஏற்படுத்தியுள்ளது.  இப்போது அமெரிக்க சார்புக் குழுக்கள் சிறிய படையணிகளாகக் குறைந்து விட்டன. இது அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைக்கு கிடைந்த பெரும் தோல்வியாகும். 

Wednesday, 25 September 2013

கென்யா கடைத் தொகுதித் தாக்குதலின் பின்னணி


கென்யத் தலைநகர் நைரோபியில் உள்ள Westgate Mall என்னும் ஆடம்பர மூன்று மாடிக் கடைத் தொகுதிக்குள் செப்டம்பர் 21ம் திகதி ஒரு திவிரவாதக் குழு ஒன்று நுழைந்தது. அது அங்கு நின்றவர்களை கண்டபடி சுட்டுக் கொன்றும் பலரைக் காயப்படுத்தியும் பலரைப் பணயக்கைதிகளாகப் பிடித்தும் வைத்தது. தமது தாக்குதலை ஆரம்பத்தில் இருந்தே டுவிட்டர் மூலம் வெளி உலகிற்கு தெரியப் படுத்திக் கொண்டே இருந்தது.

டுவிட்டரில் வெளிவந்த தகவல்களின்படி சோமாலியாவைச் சேர்ந்த இசுலாமிய தீவிரவாத அமைப்பான அல்-ஷபாப்பைச் சேர்ந்த 15பேர் Westgate Mall கடைத் தொகுதிக்குள் தாக்குதல் நடாத்தியதாக அறிந்து  கொள்ளக்கூடியதாக இருந்தது. பலத்த எதிர்ப்புக்களால் அவர்களது கணக்கை டுவிட்டர் மூட மூடஅவர்கள் வேறு பெயர்களில் கணக்குக்களைத் தொடங்கி தகவல் பரிமாற்றம் செய்து கொண்டிருந்தனர்.


Westgate Mall கடைத் தொகுதிக்குள் நுழைந்த அல்-ஷபாப் அமைப்பினர் அங்குள்ளவர்களிடம் நபிகள் நாயகத்தின் தாயாரின் பெயரைக் கூறும் படி வற்புறுத்தினர். சரியாக ஆயிஷா என்று சொன்னவர்கள் இசுலாயர்கள் எனக் கருதப்பட்டு வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

கென்யாவின் படையினர் அல்-ஷபாப் போராளிகளுடன் நான்கு நாட்காள் போராடி நிலைமையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 62பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தொடரும் சுத்தீகரிப்பு வேலையில் மேலும் இறந்த உடல்கள் அகப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அல்-ஷபாப் அமைப்பைச் சேர்ந்த பிரித்தானிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கென்யா தெரிவித்தது. ஆனால் அல்-ஷபாப் அமைப்பினர் தம்மிடம் போதிய ஆண் போராளிகள் இருக்கிறார்கள் நாம் எமது சகோதரிகளைப் போரில் ஈடுபடுத்தத் தேவையில்லை என டுவிட்டரில் தெரிவித்தனர்.

யார் இந்த அல்-ஷபாப் அமைப்பினர்?
ஹரகட் அல்-ஷபாப் அல்-முஜாகிதீன் (Harakat al-Shabaab al-Mujahideen) என்னும் பெயருடைய அமைப்பை சுருக்கமாக அல்-ஷபாப் என அழைப்பர். அல்-ஷபாப் என்றால் இளையோர் எனப் பொருள்படும். மத ரீதியாக அல்-ஷபாப் அமைப்பு சவுதி அரேயாவின் வஹாப் வகை இசுலாமை தமது இறை நம்பிக்கையாகக் கொண்டவர்கள். இதை அல் கெய்தா அமைப்பின் சோமாலியக் கிளை எனவும் சொல்லப்படுகிறது. 2006-ம் ஆண்டில் இருந்து சோமாலியாவின் பெரும்பகுதியை அல்-ஷஹாப்  தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது. 2011-ம் ஆண்டு கென்யா நாட்டுப் படைகளின் தலைமையில் ஐக்கிய அமெரிக்காவின் நிதி உதவியுடன் ஆபிரிக்க ஒன்றியப் படைகள் சோமாலியாவிற்கு நுழைந்தன. அப்போது சோமாலியாவின் பெரும் பகுதியை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த அல்-ஷஹாப் அமைப்பினரை பல இடங்களில் இருந்து கென்யப் படைகள் விரட்டினர். அல்-ஷஹாப்பின் கட்டுப்பாட்டில் இருந்த துறைமுகங்கள் கென்யப் படையினரால் கைப்பற்றப்பட்டன. முக்கியமாக கிஸ்மயோ துறைமுகத்தை இழந்தமையால் அல்-ஷஹாப் அமைப்பின் வருமானம் பாதிக்கப்பட்டது. இப்போதும் பல கிராமப் பகுதிகள் அல்-ஷஹாப்  அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அங்கு இசுலாமியச் சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. கென்யப் படையினர் சோமாலியாவிற்கு நுழைந்ததில் இருந்து அல்-ஷஹாப் அமைப்பினர் தாம் கென்யத் தலைநகர் நைரோபியில் இருக்கும் வானாளாவிய கட்டடங்களைத் தாக்குவோம் என எச்சரித்துக் கொண்டே இருந்தனர். சோமாலியாவின் முக்கிய நகரங்களில் இருந்து விரட்டப்பட்ட அல்-ஷஹாப்  வலுவிழந்து விட்டது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நைரோபியில் இருக்கும் Westgate Mall கடைத் தொகுதியில் அல்-ஷஹாப் அமைப்பினர் தாக்குதலை நடாத்தினர்.

எதியோப்பியாவின் சிலுவைப் போர்
கென்யப் படையினருடன் கிருத்தவர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட எதியோப்பிய படையினரும் அல்-ஷஹாப்பிற்கு எதிராகப் போராடுவது இசுலாமியத் தீவிரவாத அமைப்புக்களை பெரிதும் ஆத்திரப்படுத்தியிருந்தது. எதியோப்பியப் படையினரின் தாக்குதலை ஒரு சிலுவைப் போர் என அவர்கள் விமர்சிக்கின்றனர்.

அமெரிக்காவின் அச்சம்
நைரோபிய நகரின் Westgate Mall ஆடம்பரக் கடைத் தொகுதியில் நடந்த தாக்குதல் அமெரிக்காவை இருவகையில் அச்சமடைய வைத்துள்ளது. ஒன்று ஆப்கானிஸ்தானிலும் யேமனிலும் இருந்து இசுலாமியத் தீவிரவாதீகள் தப்பி ஓடி சோமாலிய அல்-ஷஹாப் அமைப்பில் இணைகிறார்களா என்ற அச்சம். இரண்டாவது அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வாழும் சோமாலியர்கள் சோமாலியா சென்று அல்-ஷஹாப் அமைப்பின் இணைகிறார்கள் என்ற அச்சம். ஆரம்ப நிலைத் தகவல்களின் படி ஒர் பிரித்தானியா வாழ் சோமாலியப் பெண் ஒரு சுவீடன் வாழ் சோமாலியர் இரு அமெரிக்க வாழ் சோமாலியர்கள் நைரோபிய நகர் Westgate Mall ஆடம்பரக் கடைத் தொகுதியில் நடந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கின்றனர்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...