Saturday, 13 July 2013

திசை மாறிய அல் ஜசீராவும் பாலியல் போராளிகளும்

துனிசியா, எகிப்து, லிபியா, சிரியா, சவுதி அரேபியா, பாஹ்ரேய்ன் போன்ற நாடுகளில் ஆட்சியாளர்களுக்கு எதிராக 2011இல் மக்கள் கிளர்ந்து எழுந்த போது அவற்றைத் தொடர்ச்சியாக 24 மணி நேரமும் ஒளிபரப்பி மல்லிகைப் புரட்சிக்கு பேருதவி செய்தது அல் ஜசீரா தொலைக்காட்சியாகும்.குடாநாடு அல்லது தீவு எனப் பொருள்படும் அல் ஜசீரா முன்னணி உலக ஊடகமாகும்.

பிபிசி, சி.என்.என் போன்ற மேற்கத்திய ஊடகங்கள் தமது பாராபட்ச நிலைப்பாட்டை மோசமாக்கியபோது ஒரு நம்பிக்கை தரும் ஊடகமாக 1996-ம் ஆண்டு அல் ஜசீரா ஆரம்பிக்கப்பட்டது. இது கட்டார் அரச குடும்பத்தினராலும் மேலும் பல தனியாராலும் நிதி வழங்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டு. ஆபாகானிஸ்த்தான் போர், ஈராக் போர் போன்றவற்றை பற்றி நன்கு செய்திகளை வழங்கி புகழ் பெற்றது. ஆரம்பத்தில் அரபு மொழியில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் ஆங்கிலத்திலும் ஒளிபரப்பு ஆரம்பிக்கப்பட்டது.

மேர்சி பதவியில் இருந்து அகற்றப்பட்டதில் இருந்து கட்டாரின் அல் ஜசிரா ஊடகமும் சவுதி அரேபியாவின் அல் அரபியா ஊடகமும் ஒன்றிற்கு ஒன்று முரண்பட்ட நிலையில் இருந்து எகிப்திய நிலைமைகளைப் பார்க்கின்றன. கட்டார் நாடு இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு சார்பான ஒரு நிலையை எடுக்கிறது. சவுதி அரேபியா தாராண்மை வாதிகளுக்கு ஆதரவான ஒரு நிலையை எடுக்கிறது. சவுதி மன்னர் குடும்பம் இசுலாமிய சகோதரத்து அமைப்பை விரும்பவில்லை எனத் தெரிகிறது. சிரியாவில் அரச படைகளின் தாக்குதலில் காயமடைந்தவர்களின் படத்தை அல் ஜசீரா எகிப்தில் மொஹமட் மேர்சியின் ஆதரவாளர்கள் எகிப்தியப் படையினரால் காயப்பட்டதாகக் காட்டியது அல் ஜசீரா.  இது மோர்சிக்கு எதிரானவர்களை அல் ஜசீராவிற்கு எதிராக கிளர்ந்து எழச் செய்துள்ளது.

அல் ஜசீராவின் ஊழியர்களில் 22 பேர் மேர்சி பதவியில் இருந்து விலக்கப்பட்ட பின்னர் அல் ஜசீரா பொய்யான தகவல்களை வழங்குவதாகக்ச் சொல்லி அல் ஜசீராவில் இருந்து வெளியேறியுள்ளனர். 

சவுதியின் அல் அரபியா ஊடகம் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு பாலியல் போராளிகளை எகிப்தில் களமிறக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது. தொடர்ந்து எகிப்தில் இரவு பகலாக ஆர்ப்பாட்டம் செய்துவரும் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு ஆதரவாளர்களை ஊக்கப்படுத்த அவர்களைப் பாலியல் ரீதியாக மகிழ்ச்சிப் படுத்த பெண்கள் களமிறக்கப்படவிருக்கிறார்கள் என்கிறது அல் அரபியா

 மேர்சி பதவியில் இருந்து விலக்கப்பட்டவுடன் சவுதி அரேபியாவும் குவைத்தும் யுனைட்டெட் அரப் எமிரேட்டும் எகிப்திற்கு பத்து பில்லியன் அமெரிக்க டாலர்களை உதவியாக வழங்க முன்வந்தன. இந்த நகர்வுகளை அமெரிக்காவின் கைகளை மீறி மத்திய கிழக்கில் நிகழ்வுகள் நடந்தேறுகின்றன என்று சில விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால் இவையாவும் அமெரிக்காவின் இயக்கத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. மேர்சியின் பதவி விலகக்கலில் அமெரிக்கா நடு நிலைமை வகிப்பதாகக் காட்டிக் கொண்டாலும் அது திரைக்குப் பின்னால் பல பேச்சு வார்த்தைகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றது. அமெரிக்கா நேரடியாக தலையிடுவது போல் காட்டிக் கொண்டால் அது பல இசுலாமியத் தீவிரவாதிகளை ஆத்திரப்படுத்தும். மத சார்ப்பற்ற தாராண்மை வாதிகளை பலவீனப் படுத்தும்.

கட்டாரும் அல் ஜசீராவும் மத்திய கிழக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லன. இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு அல் ஜசீரா கொடுக்கும் ஆதரவு  பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வல்லது. மத்திய கிழக்கில் கட்டார் நாட்டினதும் அல் ஜசீராவினதும் தாக்கத்தை சவுதி அரேபியா விரும்பவில்லை எனத் தெரிகிறது. சவுதி அரேபிய மன்னர் குடும்பமும் கட்டார் மன்னர் குடும்பமும் சுனி முஸ்லிம்களாக இருந்த போதும் சவுதி மன்னர் குடும்பம் தம்மை உயர்ந்த தர குடும்பத்தினராகவும், கட்டார் மன்னர் குடும்பத்தினரை தாழ்ந்த தர குடும்பதினராகவும் கருதுகின்றனர்.  இந்த இரு மன்னர் குடும்பங்களுக்கு இடையிலான போட்டி அரபு மக்களை உருப்பட விடாது.

Friday, 12 July 2013

விழாதவர் நாமாவோம்

சமர்களில் தோற்கலாம்
நிலங்களை இழக்கலாம்
அடங்க மறுக்கும்வரை - தமிழன்
தோல்வியடையாதவனே
அடங்காமல் எழுந்தால்
விண்ணில் இருந்து வீழ்ந்தாலும்
விழாதவர் நாமாவோம்

உதிர்ந்த இலைகள் உரங்களாகும்
விழுந்த விதைகள் முளைத்தெழும்
கோட்டைகள் சிதையலாம்
கருங்கற்கள் மறைவதில்லை
வீழ்சியிலே மீட்சியின் வித்துண்டு
என உணர்ந்து கொண்ட்டால்
விண்ணில் இருந்து வீழ்ந்தாலும்
விழாதவர் நாமாவோம்

வென்ற பின்னும் மார்தட்டிய பின்னும்
பெரும் தோல்வி மனப்பான்மைய
எதிரியிடம் இன்று நாம் காண்கிறோம் - இத்தனையும்
இழந்த பின்னும் தோல்வியடையா நிலையை - நாம்
உலகிற்கு உணர்த்தி நிற்ப்போமானால்
துணிவில் உயர்ந்து நிற்போமானால்
விண்ணில் இருந்து வீழ்ந்தாலும்
விழாதவர் நாமாவோம்

விழுந்தால் நிலமே எல்லை
உயர்ந்தால் எல்லையே இல்லை - தமிழன்
ஒன்றுபட்டால் உலகே அவன் காலடியில்
ஒன்றுபட்டு வீறு கொண்டெழுந்தால்
விண்ணில் இருந்து வீழ்ந்தாலும்
விழாதவர் நாமாவோம்

எழுவோம் நாமென்று எதிரியும் அறிவான்
அதனால் வைக்கின்றான் 13-ம் பொறி
இழுத்தடித்து இழுத்தடித்து
எம்மை மாட்ட வைக்கப் பார்கின்றான்
அறிவு துணைக் கொண்டு நிலைதனை உணர்ந்து
நிலமே பலம் நிலமே வாழ்வு
நிலம் பறிபட்டால் நிலையிழப்போம்
என உணர்ந்து உறுதியுடன் மீள எழுவோம்
உணர்வுடன் ஒன்றுபட்டுப் பொங்கினால்
விண்ணில் இருந்து வீழ்ந்தாலும்
விழாதவர் நாமாவோம்

எம் நினைவெல்லாம் ஈழக் கனவானால்
எம் செயலெல்லாம் அதன் வழி நின்றால்
தடைகளும் பொடிபடும்
வல்லரசுகளும் வழி விடும்
மலர்ந்திடும் நம் தேசம்

Wednesday, 10 July 2013

நகைச்சுவை: மகள் எந்தப் படுக்கையில்?


அமெரிக்காவில் இரவு 11 மணிக்கு பிள்ளைகள் எங்கே என்று பெற்றோர்கள் கவலைப்படுவார்கள்,
பிரான்சில் இரவு 11 மணிக்கு கணவன்மார் எங்கே என்று மனைவிமார் கவலைப்படுவார்கள்
பிரித்தானியாவில் இரவு 11 மணிக்கு மனைவிமார் எங்கே என்று கணவன்மார் கவலைப்படுவார்கள்.
இந்தியாவில் இரவு 11 மணிக்கு இப்போது நேரம என்ன என்று எல்லோரும் கவலைப்படுவார்கள்
இலங்கையில் இரவு 11 மணிக்கு வெள்ளை வான் வருமா என எல்லோடும் கவலைப்படுவார்கள்

மகள் எட்டு வயதாய் இருக்கும் போது மகளைக் படுக்கையில் கொண்டு போய்ப் போட்டு அம்மா கதை சொல்லுவா
மகள் பதினெட்டு வயதாய் இருக்கும் போது மகள் தன் கதையைச் சொல்ல தாய் படுக்க முடியாமல் தவிப்பாள்.
மகள் இருபத்தெட்டு வயதாய் இருக்கும் போது அவள் எந்தப் படுக்கையில் இருப்பாள் எனத் தாய் தவிப்பள்
மகள் முப்பத்தெட்டு வயதாய் இருக்கும் போது அவள் படுக்கையில் நிம்மதியாய் தூங்க பேரப் பிள்ளைகளை தாய் தூங்க வைப்பாள்.
மகள் நாற்பத்தெட்டு வயதாய் இருக்கும் போது தாயின் வாழ்வு படுக்கையில் மட்டும் போகும்.
மகள் ஐம்பதெட்டு வயதாய் இருக்கும் போது தாயின் படுக்கை எடுத்து வீசப்படும்.

ஒரு அறையில் இருவர் சண்டை போட்டுக் கொண்டு இருந்தனர்.
ஒருவர்:  நான் தான் மகாத்மா காந்தி
மற்றவர்: எவன் சொன்னான் நீ மகாத்மா காந்தி என்று?
ஒருவர்: கடவுள் சொன்னார்.
மற்ற அறையில் இருந்து ஒரு குரல்: நான் சொல்லவில்லை...நான் சொல்லவில்லை....
இது நடத்தது ஒரு மனநலக் காப்பகத்தில்.


16 வயதுப் பெண்: ஒரு அழகிய உயரமான ஆண் கிடைப்பானா என்ற ஏக்கம்.
26 வயதுப் பெண்: ஒரு அழகிய உயரமான பணக்கார ஆண் கிடைப்பனா என்ற ஏக்கம்.
36 வயதுப் பெண்: ஒரு அழகிய உயரமான படித்த பணக்கார ஆண் கிடைத்திருக்க வேண்டும் என்ற ஏக்கம்.
46 வயதுப் பெண்: தலையில் முடியுள்ள ஆணாகக் கிடைத்திருக்க வேண்டும் என்ற ஏக்கம்.
56 வயதுப் பெண்: ஒரு ஆண் கிடைத்திருக்க வேண்டும் என்ற ஏக்கம்.

விநோதமான திருமணச் சட்டங்கள்
பிரித்தானியாவில் மனைவியின் தாயைத் திருமணம் செய்ய முடியாது.
அமெரிக்காவில் அர்கான்ஸ் மாநிலத்தில் கணவன் மனைவியை மாதத்திற்கு ஒரு தடவைக்கு மேல் அடிக்க முடியாது.
ரோட் தீவுகளில்: பைத்தியங்கள் திருமணம் செய்தால் அது செல்லுபடியாகாது.
அமெரிக்க அயோவா மாநிலத்தில் மீசை வைத்த ஒரு ஆண் ஒரு பெண்ணை பொது இடத்தில் முத்தமிடுதல் குற்றம்.

பின் லாடன் விவகாரத்தில் பாக்கிஸ்த்தானின் மானம் கப்பலேறியது


அல் கெய்தா இயக்கத் தலைவர் ஒசமா பின் லாடனைக் கைப்பற்ற அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவினர் வான் பாதையூடாக பாக்கிஸ்த்தானுக்குத் தெரியாமல் உள் நுழைந்து ஒரு படை நடவடிக்கையை மூன்று மணித்தியாலங்கள் செய்து முடித்தனர் என்பதைப் பற்றி விசாரிக்க ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்த விசாரணைக்குழுவின் 336 பக்க அறிக்கை அல் ஜசீரா தொலைக்காட்சிச் சேவையிடம் கசிந்துள்ளது.

2001-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கப்படைகள் ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமித்தன. 2002-ம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் ஒசாமா பின் லாடன் பாக்கிஸ்த்தானுக்குத் தப்பிச் சென்றார். பல இடங்களில் மாறி மாறித் தங்கி இருந்த ஒசாமா 2005-ம் ஆண்டிலிருந்து அவர் இறுதியாக கொல்லப்பட்ட அபொத்தாபாத் மாளிகையில் தங்கியிருந்தார் என அவரது மனைவிகள் வழங்கிய தகவல்களில் இருந்து அறியப்பட்டது.

பின் லாடன் கொலை அமெரிக்க அதிபரால் உத்தரவிடப்பட்ட கொலைக் குற்றச் செயல் ("criminal act of murder")என்கிறது அறிக்கை. பின் லாடன் கொல்லப்பட்டதை பாக்கிஸ்த்தானியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் அவரது மகள் அமெரிக்காவில் இருந்து தொலைபேசி மூலம் தெரிவ்த்த போது முதல் தடவியாக அறிந்து கொண்டாராம்.

உலகில் மிகவும் தேடப்பட்டவரான ஆறடி ஐந்து அங்குல உயரம் கொண்ட அந்நிய நாட்டவரான பின் லாடன் ஒன்பது ஆண்டுகள் பாக்கிஸ்த்தானில் எப்படி ஒளிந்திருக்க முடிந்தது என்பதை அபோத்தாபாத் எனப் பெயரிடப்பட்டுள்ள விசாரணைக் குழு ஆராய்ந்துள்ளது. பின் லாடன் ஆறுக்கு மேற்பட்ட இடங்களில் இருந்ததாக விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது. ஒசமா பின் லாடன் இப்படி எல்லோர் கண்களிலும் மண்ணைது தூவி விட்டுத் தப்பியிருந்தமைக்கு பக்கிஸ்த்தானிய அரசு, பாக்கிஸ்தானியப் படைத்துறை, பாக்கிஸ்த்தானிய உளவுத் துறை, பாக்கிஸ்த்தானிய காவல் துறை ஆகியவற்றின் ஒன்றிணைந்த தோல்வியும் அசட்டையும் காரணம் என்கிறது அறிக்கை. பின் லாடன் தன்னை மற்றவர்கள் வெளியில் இருந்து இனம் காணாமல் இருக்க கஃவ் போய் தொப்பி அணிவார் எனவும் பாக்கிஸ்த்தான ஆறுமாத காலமாக இரகசியமாக வைத்திருக்கும்  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாக்கிஸ்தானில் வல்லமை பொருந்தியதான அதன் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ பற்றி அறிக்கை கடுமையாக விமர்சித்துள்ளது. பாக்கிஸ்த்தானின் அரச, பாதுகாப்புத்துறை, உளவுத்துறை ஆகியவற்றில் பில் லாடனுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது என்பதை மறுப்பதற்கில்லை என்கிறது அல் ஜசீராவிடம் கசிந்த இரகசிய அறிக்கை. பாக்கிஸ்த்தானில் சிலரது ஒத்துழைப்புடனேயே பின் லாடனால் தங்கியிருக்கக் கூடியதாக இருந்திருக்க வேண்டும் என்றும் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

பின் லாடன் பற்றி அதிக அக்கறையுடன் செயற்பட்ட பாக்கிஸ்தானிய அரசு, பாதுகாப்புத் துறை, உளவுத்துறை ஆகியன பின் லாடன் பாக்கிஸ்த்தானில் இருந்ததைக் கண்டு பிடிக்க முடியாமல் போனதால் குற்றத்திற்குரிய தகுதியீனமும் உதாசீனமும் வெளிப்பட்டிருப்பதாக அறிக்கை குற்றம் சாட்டுகிறது. அரச கட்டமைப்புக்களின் ஒவ்வொரு மட்டத்திலும் தகுதியின்மையும் உதாசீனமும் காணப்படுவதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 2009இல் இருந்து 2010வரை அமெரிக்க உளவுத் துறை பாக்கிஸ்த்தானிய உளவுத் துறையிடம் நான்கு தொலை பேசி இலங்கங்கள் தொடர்பான விபரங்களைக் கோரியிருந்தது என்றும் அவை எதற்கு எவர் தொடர்ப்பானது போன்றவற்றைப் பற்றி பாக்கிஸ்த்தானிய உளவுத் துறைக் அக்கறை காட்டவில்லை என்பதை அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. அதிக அளவிலான அமெரிக்க ஒப்பந்தக்காரர்களுக்கு பாக்கிஸ்த்தானிற்கு நுழைவு அனுமதி(விசா) எந்த வித ஐயமும் இல்லாமல் பாக்கிஸ்த்தானால வழங்கப்பட்டதை அறிக்கை ஆச்சரியதுடன் விபரிக்கிறது.

2002, 2003-ம் ஆண்டுகளில் பின் லாடன் பயணித்த வண்டிகளை பாக் காவற்துறையினர் உயர் வேகத்தில் சென்றமைக்காக நிறுத்திய போதும் அவரை அவர்களால் இனம் காண முடியவில்லை என அவரது மனைவி தெரிவித்திருந்தார்.


ஆறு ஆண்டுகள் பின் லாடன் வசித்த மாளிகையின் மீது அயலவர்களுக்கோ காவற்துறைக்கோ எந்த வித ஐயமும் வராமல் இருந்தது அறிக்கை தயாரித்தவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது
25இற்கு மேற்பட்டவர்கள் குடியிருந்த பின் லாடன் கடைசியாகக் குடியிருந்த மாளிகையில் எவரும் குடியிருக்கவில்லை என உள்ளூராட்சிச் சபையின் பதிவேடுகளில் குறிப்பிடப்பபட்டிருந்ததை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. மாளிகையின் மூன்றாம் மாடி விதிகளுக்கு முரணாகக் கட்டப்பட்டதை எந்த ஒரு உள்ளூராட்சி அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருந்தனர் என்கிறது அறிக்கை. இவையாவும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அபோத்தாபாத்தில் நடந்தேறியுள்ளது.

அமெரிக்கப்படையின் வந்து தனது மாளிகையில் இறங்கித் தாக்கத் தொடங்கியவுடன் ஒசாமா தனடு குடும்பத்தினரை பதட்ட்பபடாமல் அமைதியாக இருந்து கலிமா ஓதும் படி பணித்தாராம். கைக்குண்டுகளைத் தனது பெட்டியில் தேடிக்கொண்டிருந்த பின் லாடன் திரும்பிய போது சுடப்பட்டாராம்.

ஒரு புறம் இந்தியா ஒரு எதிரி நாடாக இருக்கையிலும் மறுபுறம் ஆப்கானிஸ்த்தானில் இருந்து  தீவிரவாதிகள் தாக்குதல், உள்ளூரில் பல தீவிரவாத அமைப்புக்கள் என பல முனை அச்சுறுத்தலைக் கொண்ட பாக்கிஸ்த்தானில் இன்னொரு நாட்டு விமானப்படை உள் நுழைந்து மூன்று மணித்தியாலம் தாக்குதலில் ஈடுபட்டதை அறியாமல் இருந்ததை அறிக்கை விசனத்துடன் குறிப்பிடுகிறது. பாக்கிஸ்த்தான் தனது அதிக கவனத்தை இந்தியாவின் மீது மட்டுமே செலுத்துகிறது என்கிறது அறிக்கை. 1971இல் கிழக்குப் பாக்கிஸ்த்தானை இழந்த பின்னர் பாக்கிஸ்த்தானிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம் பின் லாடனின் கொலை என்கிறது அறிக்கை.

அமெரிக்க கடற்படைகள் உள் நுழைந்து பின் லாடன் மாளிகை மீது தாக்குதல் செய்தது ஒரு போர் நடவடிக்கையே என்கிறது அறிக்கை. பாக்கிஸ்த்தானுக்குள் இருந்து கொண்டே பாக்கிஸ்த்தானுக்குத் தெரியாமல் அமெரிக்க உளவுத்துறை பின் லாடனைத் தேடிப்பிட்த்ததை ஒரு மோசமான தவறாகவும் தகுதியீனமாகவும் அறிக்கை இனம் கண்டுள்ளது.

பின்லாடன் பற்றிய முன்னைய பதிவுகள்:
1. பின் லாடனைக் கண்டுபிடித்தது எப்படி?

2. அமெரிக்காவின் போலித் தடுப்பூசி
3. ஆட்டம் காண்கிறதா அல் கெய்தா?

அமெரிக்க ஆளில்லா விமானங்கள் பாக்கிஸ்த்தானிற்கு நுழைந்து தாக்குதல் நடத்துவது தொடர்பாக அமெரிக்காவுடன் பாக்கிஸ்த்தான் ஓர் எழுதப்படாத அரசியல் உடன்படிக்கைச் செய்திருந்ததும் ஒரு அமெரிக்க உளவாளி பாக்கிஸ்த்தானியரை இலகுவாக ஒரு அமெரிக்காவிற்கான நுழைவு அனுமதி மூலமாகவோ அல்லது ஒரு இரவு உணவுக்காகவோ வாங்கி விடலாம் என சொல்லியதும் இப்போது அம்பலமாகியுள்ளது.

பாக்கிஸ்த்தானிய ஊடகங்கள் அல் ஜசீரா அம்பலப்படுத்திய அறிக்கை 1971இல் கிழக்குப் பாக்கிஸ்தான் பிரிக்கப்பட்ட பின்னர் பாக்கிஸ்த்தானியர் எதிர் கொண்ட மோசமான அவமானம் என்கின்றன.

Tuesday, 9 July 2013

கவிதை: தமிழன் கேட்டது சப்போட்டாப்பழம்

இறப்பு எல்லோர்க்கும் நிச்சயம்
வாழ்கை எல்லோர்க்கும் நிச்சயமல்ல
உடல் சுமந்து களைத்த கால்கள்
இமை சுமந்து களைத்த கண்கள்
நினைவு சுமந்து களைத்த நெஞ்சம்

வட்டம் அமைத்து வாழ்வதும் வாழ்கையல்ல
திட்டம்மிட்டு வாழ்வதும் வாழ்க்கையல்ல்
சோதிடக் கட்டத்தின்படி செல்வதும் வாழ்க்கையல்ல
ஒழுங்கத்தின் தத்துவ வட்டத்திற்குள்
 திட்டமிட்டுச் செல்வதே வாழ்க்கை.


அவசரப்படுத்தாமல் ஓடும் நேரம்
வில்லங்கப்படுத்தாத துயரங்கள்
தொல்லை கொடுக்காத சிரமங்கள்
நிம்மதியின் தலைநகரம் அது


ஒட்டுனர் யாரென்று தெரியவில்லை
போகுமிடம் எதுவென்றும் புரியவில்லை
தரிப்புக்களில் ஏறுவாரும் உண்டு
இறங்குவாரும் உண்டு
நெருங்குவார் சிலர்
நெருக்குவார் சிலர்
பாடுவார் சிலர்
பரிதவிப்பார் சிலர்

ஹைக்கூ

தமிழன் கேட்டது சப்போட்டாப்பழம்
கொடுத்தது தாழைப்பழம்
பாரத மாதா

Monday, 8 July 2013

கலங்குது எகிப்து: புது ஜனாதிபதி.......புது பிரதமர்.......

எகிப்தில் நடந்த இரண்டாவது "புரட்சியில்" தோற்கடிக்கப்பட்ட நாடாக ஐக்கிய அமெரிக்காவே கருதப்படுகிறது.  பதவியில் இருந்து விலக்கப்பட்ட எகிப்திய அதிபர் மொஹமட் மொர்சியின் ஆதரவாளர்களும் இசுலாமிய தீவிரவாதிகளும் அமெரிக்கா எகிப்தியப் படைத்துறைக்கு சார்பானது என நம்புகின்றனர். மதசார்பற்றவர்கள் அமெரிக்கா மோர்சியுடன் அண்மைக்காலமாக உறவை மேம்படுத்தி வந்தது அது மோர்சிக்கு ஆதரவானது என நினைக்கின்றனர். இசுலாமிய நாடுகளில் அமெரிக்க எதிர்ப்பு விவாதம் இலகுவாகப் பரப்பப்படலாம்

எகிப்திற்கான அமெரிக்கத் தூதுவர் ஆன் பட்டெர்சன் இப்போது உலக அரசியலிலும் அமெரிக்காவிலும் கடுமையாக விமர்சிக்கப்படும் ஒருவராக இருக்கிறார்.

எகிப்திய இரண்டாம் புரட்சி பற்றிய முன்னைய பதிவுகளை காண இங்கு சொடுக்கவும்:
1. மோர்சிக்குப் பின்னர் மோசமாகும் எகிப்து
2. நாசமாகும் எகிப்தும் மோசமான அமெரிக்க வெளியுறவுக் கொள்கையும்

சிரியாவில் மூன்று ஆண்டுகளாக நூறாயிரத்திற்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்டும் ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல் மக்கள் போராடிக் கொண்டிருக்கையில் எகிப்தியர்கள் அதே காலப்பகுதியில் இரண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திவிட்டனர். 

எகிப்தின் முக்கியத்துவம்
ஆபிரிக்காக் கண்டமும் ஆசியாக் கண்டமும் எகிப்துக்கும்(ஆபிரிக்கா) ஜோர்தானுக்கும்(ஆசியா) இடையிலான எல்லையில் முத்தமிட்டுக் கொள்கின்றன. இந்த எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையிலான தரைத் தொடர்பு மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் பிரிக்கிறது. இதனால் ஒரு கடலில் இருந்து மற்றக் கடலுக்கு கப்பல்கள் போவதற்கு முழு ஆபிர்க்காக் கண்டத்தையும் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இந்த பாதையை குறுக்குவதற்கு எகிப்தில் ஃபிரெஞ்சு நிறுவனம் ஒன்றால் 1859 ஆம் ஆண்டு சூயஸ் கால்வாய் வெட்டப்பட்டது. இந்தக் கால்வாயை ஒட்டிப் போர்களும் நடந்தன. தற்போது ஆண்டொன்றிற்கு 15,000 கப்பல்கள் இக்கால்வாயூடாகப் பயணிக்கின்றன. எகிப்தும் இஸ்ரேலும் அமெரிக்க அனுசரணையுடன் 1979இல் செய்து கொண்ட காம்ப் டேவிட் உடன்படிக்கையின் பின்னர் எகிப்து ஒரு அமெரிக்க சார்பு ஆட்சியாளர்களால் ஆளப்பட்டு வருகின்றது. அமெரிக்கா எகிப்திய படைத்துறைக்கு நிதி உதவி, பயிற்ச்சி, படைக்கலன் உதவி போன்றவற்றைத் தாராளமாக வழங்கி எகிப்தை தனது புது-காலனித்துவ நாடாக்கிவிட்டது. 

அரபு வசந்தம்
அமெரிக்காவும் இசுலாமியத் தீவிரவாதிகளிம் உலகின் பல பகுதிகளில் மோதிக் கொண்டிருக்கையில் இரு தரப்பினரும் எதிர்பாராத வகையில் துனிசியாவிலும், லிபியாவிலும், எகிப்திலும், சிரியாவிலும், சவுதி அரேபியாவிலும், பாஹ்ரெயிலும் இசுலாமிய மக்கள் மதவாதத்தையும் அமெரிக்க எதிர்ப்புவாதத்தையும் ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு தமது நாட்டு ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தனர்.  ஆனால் அமெரிக்காவின் அணுகு முறை ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசமானதாகவே இருந்தது. எகிப்தியப் படைத்துறை அமெரிக்காவின்  தொடர்புடையதாக இருந்த படியால் எகிப்தியப் படைத்துறை ஹஸ்னி முபராக்கின் கட்டளையை ஏற்க மறுத்து அரபு வசந்தப் புரட்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடாத்தவில்லை. மற்ற நாடுகளில் கிளர்ச்சிக்காரர்கள் படைத்துறையினரின் கடுமையான அடக்குமுறையைச் சந்திக்க வேண்டி இருந்தது. 

 இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு
84 ஆண்டு மத, சமூக மற்றும் அரசியல் சேவையைக் கொண்ட இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு எகிப்தில் நன்கு கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். கூட்டுறவு முறையில் பல ஆண்டுகளாக மலிவு விலைக் கடைகள் மருத்துவ சேவைகள் போன்றவற்றை எகிப்திய மக்களுக்கு  செய்து வருகிறது. 1992-ம் ஆண்டு எகிப்தில் நிகழந்த் பூமி அதிச்சியின் போது எகிப்திய அரசிலும் பார்க்க விரைந்து செயற்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆச்சரியப் படத்தக்க வகையில் சேவை செய்தது. 2011-ம் ஆண்டு இளம் பெண் அஸ்மா மஹ்புஸ்ஸினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட எகிப்திய மக்கள் எழுச்சி மதசார்ப்பற்ற கொள்கையுடையவர்களால் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் புரட்சியில் ஹஸ்னி முபாராக் பதவி அகற்றப்பட்டு தேர்தல் என்று வந்த போது நன்கு ஒழுங்கமைக்கப்படாத மதசார்பற்றவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு வெற்றி பெற்றது. அரபு வசந்தம் சிரியாவில் சுனி-சியா முசுலிம்களின் மோதலாகத் திசை திருப்பப்பட்டது. எகிப்தில் மதவாதிகளுக்கும் மதசார்பற்றவர்களுக்கும் இடையிலான மோதலாக மாற்றப்பட்டுள்ளது. மோர்சிக்கு எதிராக அவரது எதிரிகள் ஊழல் குற்றச் சாட்டு வைத்ததாக இதுவரை எந்தச் செய்தியும் வரவில்லை.

இரண்டாம் புரட்சி
ஆட்சிக்கு வந்த இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் மொஹமட் மேர்சியால் எகிப்திய மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியவில்லை. இசுலாமிய தீவிரவாதிகளை உயர் பதவிகளில் அவர் அமர்த்தினார். 1997-ம் ஆண்டு 58 உல்லாசப் பயணிகளைக் கொலை செய்த காமால் அல் இசுலாமியா இயக்கத்தின் தலைவர் அடேல் அக் ஹயாத் உல்லாசப் பயணத்துறையில் பெரிதும் தங்கியிருக்கும் லக்சர் மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டார். இதனால் அவரது ஓராண்டு பூர்த்தி நாளில் மீண்டும் மக்கள் பெருமளவில் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். மோர்சிக்கு ஆதரவானவர்களும் மோர்சிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.  எவரும் எதிர்பாராத வகையில் எகிப்தியப் படைத்துறை மோர்சியை வீட்டுக்காவலில் வைத்து அவரது ஆட்சியக் கலைத்து உச்ச நீதிமன்ற நீதிபதியைப் நாட்டின் அதிபராக நியமித்தது. 

படைத்துறையின் நகர்வு
மோர்சியை பதவியில் இருந்து விலக்கியவுடன் அவரது ஆதரவாளர்கள் தமது ஆர்ப்பாட்டங்களைத் தீவிரப்படுத்தினர். படைத்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இருபதிற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். தாம் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவில்லை எனப் படைத்துறையினர் மறுக்கின்றனர். மோர்சியின் ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டத்தில் இசுலாமிய தீவிரவாதிகளும் இணைந்து கொள்வதால் நிலைமை மோசமாகிக் கொண்டே போனது. இதனால் படைத்துறையினரின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கலாம் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் இசுலாமிய தீவிரவாதிகளுக்கோ இசுலாமிய சகோதரத்துவ அமைப்பிற்கோ பிடிக்காத நோபல் பரிசு வென்றவரும் முன்னாள் ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி முகவரகத்தின் இயக்குனருமான எல் பராடி எகிப்தின் தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.  இது மோர்சியின் ஆதரவாளர்களை மேலும் ஆத்திரப்படுத்தியது மட்டுமல்லாமல் மோர்சிக்கு எதிரானதும் மோர்சி பதவியில் இருந்து அகற்றப்பட்டதை ஆதரித்ததுமான அல் நூர் என்னும் இசுலாமிய மதவாத அமைப்பும் கடுமையாக எல் பராடியின் நியமனத்தை கடுமையாக எதிர்க்க வைத்தது. புதிய தலைமை அமைச்சராக எல் பராடி நியமிக்கப்படுவார் என்ற அமைப்பு நிலைமையை மேலும் மோசமாக்கியது. எகிப்தியப் படைத்துறையின் அடுத்த நகர்வாக தேர்தலுக்கான உயர் சபையை விரைவில் கூட்டி 2012இல் மோர்சியைத் தெரிவு செய்த தேர்தலைச் செல்லுபடியற்றதாக்குவதாக இருக்கும். இப்படிச் செய்வதால் மோர்சியைப் பதவி விலக்கியது ஒரு படைத்துறைப் புரட்சியின் மூலமானதாக இருக்காமல் ஒரு சட்டப்படியானதாகக் காட்ட படைத்துறை முயற்சிக்கும். இதனால் அமெரிக்க சார்பான ஒரு படைத்துறை மக்களாட்சித் தத்துவப்படி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசைக் கவிழ்த்தது என்று யாரும் அமெரிக்காவைக் குறை கூறுவதைத் தவிர்க்கலாம் என அமெரிக்க நம்புகிறதா? 2011இல் நடந்த புரட்சியின் போது நடுநிலை வகித்த எகிப்தியப் படைத்துறை 2013இல் பக்கச் சார்பாக நடப்பது ஏன் என்ற கேள்விக்குப் பலர் விடை தேடுகின்றனர்.

அமெரிக்கப்படை நகர்வு
எகிப்தில் ஏற்பட்ட குழப்ப நிலையைத் தொடர்ந்து அமெரிக்கப்படைகள் இத்தாலியில் குவிக்கப்பட்டு வருகின்றன. நிலைமை மோசமடையும் நிலையில் எதையும் சமாளிக்கக் கூடிய வகையில் அமெரிக்கப்படைகள் இத்தாலிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் தமது நாடு எகிப்தில் எந்த ஒரு பிரிவினரையும் சார்ந்து இல்லை எனத் தெரிவித்துள்ளது. எகிப்தில் நடந்த இரண்டாம் புரட்சியையும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பையும் எப்படி விமர்சிப்பது என்று தெரியாமல் பல மேற்கு ஐரோப்பிய நாடுகள் தவிக்கின்றன. கூட்டுச் சேரா நாடுகள் மௌனம் சாதிக்கின்றன. எகிப்தில் நடந்தது ஒரு படைத்துறைப் புரட்சி மூலம் மக்களாட்சி முறைமைப்படி தெரிவு செய்த அரசு கவிழ்க்கப்பட்டமை என்றால் அமெரிக்கா தனது எகிப்திற்கான 1.3பில்லியன் டாலர்கள் உதவியை நிறுத்த வேண்டும். எகிப்தில் நடந்தது படைத்துறைப் புரட்சியா என்பது தொடர்பாக பெரும் விவாதம் தொடங்கியுள்ளது.

கணக்குக் காட்டுகின்றனர்
2011இல் நடந்த புரட்சிக்குத் திரண்ட மக்களிலும் பார்க்க அதிக அளவிலான மக்கள் மோர்சி பதவி விலக வேண்டும் என ஜூன் மாத இறுதியில் தஹ்ரிர் சதுக்கத்தில் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் இப்போது மோர்சி பதவி விலக்கப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் ஜூன் இறுதியில் திரண்ட மக்களிலும் பார்க்க குறைவானவர்களே என்கின்றனர். அல் ஜசீரா தொலைக்காட்சி இதற்கான படங்களையும் காணொளிகளையும் வெளியிட்டது. 

முரண்பட்ட கருத்துக்கள்
எகிப்தில் மொஹமட் மோர்சியை படைத்துறையினர் தடுத்து வைத்திருக்கும் நஸ்ர நகரில் மோர்சி ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். மோர்சி தடுத்து வைத்திருக்கும் படைத்துறைத் தலைமைச் செயலகக் கட்டிடத்தை நோக்கி அவர்கள் சென்றபோது துப்பாக்கிக் குண்டுகளும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் வெடித்தன. படைத்துறையின தம்மைத் தாக்கியதாக மோர்சியின் ஆதரவாளர்கள் சொல்கின்றனர். இது எல்லா நாட்டிலும் சொல்லப்படுமமொரு பொய். பயங்கரவாதிகள் தம்மை நோக்கிச் சுட்டதாக படைத்துறையினர் சொல்கின்றனர். ஒரு கைக்குழந்தை உட்பட சிறுவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். மோர்சியின் ஆதரவாளர்கள் தமது போராட்டத்தை மக்களாட்சிக்கான போராட்டமாக பெயரிட்டுள்ளனர். மோர்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் இசுலாமிய தீவிரவாதிகள் தம்மை மக்களாட்சிக்கான போராட்டக்காரர்களாக அடையாளப்படுத்திக் கொண்டு ஊடுருவி இருக்கலாம்.இந்தக் கலவரத்தில் முப்பதிற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். தம்மைப் பயங்கரவாதிகள் தாக்க வந்தமைக்கான காணொளி ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக படைத்துறையினர் தெரிவிக்கின்றனர். காயப்படும் மோர்சியின் ஆதரவாளர்களை எடுத்துச் செல்லவதில் இருந்து அவசர நோயாளர் காவு வண்டிகள் படையினரால் தடுக்கப்படுகின்றன என குற்றச் சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. மோர்சியின் ஆதரவாளர்கள் தற்காலிக மருத்துவமனைகளை அமைப்பது இதை உறுதி செய்வதாக இருக்கிறது.

யாராலும் முடியாது.
 அதிகரித்த மக்கள் தொகை மோசமாகும் காலநிலையால் உப்பாகும் நைல்நதிக்கரைப் வேளாண்மைப் பிரதேசம், வெளிநாட்டுச் செலவாணிப் பற்றாக்குறை, இல்லாமல் போன உல்லாசப் பயணிகளின் வருகை, வேலையில்லாப்பிரச்சனை, நீர் பற்றாக்குறை, மின்வெட்டு கல்வியறிவின்மை போன்ற பல மோசமான பிரச்சனைகளைக் கொண்ட எகிப்தை இசுலாமிய மதவாதிகளை உயர் பதவிகளில் அமர்த்துவதால் தீர்க்க முடியாது என்பது மட்டுமல்ல எவராலும் ஓராண்டில் சீர் செய்து விட முடியாது.

பிந்திக் கிடைத்த செய்திகள்:
08/07/2013 - GMT - 21-00: 51பேர் கொல்லப்பட்டனர். படைத்துறையினரால் கொல்லப்பட்டதாக மோர்சியின் ஆதரவாளர்கள் காட்டிய குழந்தையின் படம் சிரியாவில் கொல்லப்பட்ட குழந்தையின் படம்.
 

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...