Saturday, 22 June 2013

நகைச்சுவை: மனைவியைக் கொல்லச் சொன்ன மருத்துவர்.

அடிப்பதால் கல் நல்ல சிலையாகும்
உருக்குவதால் தங்கம் நல்ல நகையாகும்
அழுத்தப்பட்டதால் கரி வைரமாகும்
அடக்கப்படுவதால் ஆண் நல்ல கணவனாகிறான்.


மருத்துவரிடம் போனியே என்ன ஆச்சு?
அவர் என் மனைவியைக் கொல்லச் சொல்கிறார்.
உண்மையாகவா?
முதலில் உன் மன அழுத்தத்தை ஒழிச்சுக் கட்டு என்கிறார்.


Magician: “I will now cut this mans wife in half & Show Magic”
Audience : “What kind of magic is this; turning One problem into Two


தேர்வு முடிந்த பின் மாணவனும்
நோயாளி இறந்தபின் மருத்துவனும்
சொல்லும் பொய்
என்னால் முடிந்தவரை முயற்ச்சித்தேன்

இசக்குப் பிசக்கான வலைத்தளப் பெயர்கள்:


ஆண்களிடம் பிடிக்காதது
பெண்களிடம் பிடித்தது
மேற்சட்டையில் முதல் இரண்டு பட்டன்களும்
கழன்றபடி இருப்பது

Friday, 21 June 2013

கிரிக்கெட்டில் சிங்களத்தைத் தோற்கடித்த தமிழீழம்

2011இல் இந்திய மண்ணில் இந்தியாவிற்கு எதிராக ஐம்பது ஓவர்களில் 274 ஓட்டங்களைக் குவித்த இலங்கைத் துடுப்பாட்ட அணி 2013இல் இலண்டன் ஓவலில் 253 ஓட்டங்களைக் குவித்து காலிறுதிப் போட்டியில் ஒஸ்ரேலியாவை மண்கவ்வ வைத்தது. ஓவலில் ஈட்டிய வெற்றி மமதையில் மைதானத்தை விட்டு வெளியில் வந்த சிங்களக் காடையர்கள் அங்கு அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த தமிழர்களை எதிர்பாரவிதமாகத் தாக்கினர். அது அவர்கள் தமக்குத் தாமே வெட்டிய குழியாக அமைந்தது.

ஒவலில் ஜூன் 17 ஒஸ்ரேலியாவைத் தோற்கடித்த இலங்கைத் துடுப்பாட்ட அணி அடுத்து வேல்ஸின் கார்டிஃப் நகர Sophia Gardens மைதானத்தில் தனது இனக்கொலைப் பங்காளியான இந்தியாவை அரை இறுதிப் போட்டியில் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. 

பெண் பிள்ளையைக் கூடப் பின்னால் இருந்து தாக்கிய சிங்களக் கோழைகள்

இடறப்பட்ட புலிகள்
தமிழ்ப்பிள்ளைகளைத் தாக்கியது பிரித்தானியா வாழ் தமிழர்களை ஆத்திரமடைய வைத்தது. இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் பெரும் ஆர்ப்பாட்டத்திற்கு  ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பல நூறு மைல்கள் தாண்டி தமிழர்கள் இலண்டனிலிருந்தும் மற்றும் பல நகரங்களில் இருந்தும் தமிழர்கள் வேல்ஸின் கார்டிஃப் நகர மைதானத்தை நோக்கி விரைந்தனர். இலண்டனில் இருக்கும் எட்டப்பத் தமிழர்களும் சிங்கள் உள்வாளிகளும் விரைந்து செயற்பட்டனர். இலங்கை வெளியுறவுத் துறைக்கு ஆபத்து பற்றி அறிவுறுத்தல்கள் பறந்தன. இலண்டனில் உள்ள இலங்கைத் தூதுவர் தமது அணிக்கும் இரசிகர்களுக்கும் அதிகரித்த பாதுகாப்பு வேண்டினார். ஸ்கொட்லண்ட்யார்ட்டும் கார்டிஃபில் பாதுகாப்பை அதிகரித்தது. ஆனாலும் இலங்கை வீரர்கள் வந்த வண்டியை தமிழர்கள் சூழ்ந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்து சில நிமிடங்கள் தடுத்து வைத்திருந்தனர். காவற்துறையினர் பேச்சு வார்த்தை நடாத்தி நிலமையைச் சமாளித்தனர்.
மைதானத்திற்குள்ளும் அதிக புலிக்கொடிகள்

பல சிங்கள் இரசிகர்கள் Sophia Gardens மைதானத்திற்கான தமது  பயணத்தையும் இரத்துச் செய்தனர். மைதானத்திற்கு உள்ளும் புலிக்கொடிகள் பறந்த வண்ணமே இருந்தன. அச்சமடைந்த சிங்கள இரசிகர்கள் சிங்கள வீரர்கள் மைதானத்திற்குள் இறங்கும்  போது கைதட்டவும் தயங்கினர்.
Sophia Gardens மைதானத்தைச் சுற்றிலும் புலிக்கொடிகள் பல பறந்தன. சிங்கக் கொடிகளிலும் பார்க்க அசோகச் சக்கரக் கொடிகளிலும் பார்க்க புலிக்கொடிகளே அதிகமாகவும் உயரமாகவும் பறந்தன. புலிக் கொடியைத் தாங்கிக் கொண்டிருந்த பலர் தமது கால்களின் கீழ் சிங்கக் கொடியைப் போட்டு மிதி மிதி என்று மிதித்துக் கொண்டிருந்தனர்.

மும்முனைப் போட்டி
தமிழர்களின் ஆர்ப்பாட்டமும் ஆராவாரமும் சிங்களத் துடுப்பாட்ட வீரர்களின் கவனத்தைப் பெரிதும் சிதறடித்தது. சில இந்திய இரசிகர்களும் தமிழர்களுடன் இணைந்து சிங்கள வீரர்களுக்கு எதிராகக் கூச்சலிட்டனர். அது சிங்கள வீரர்களின் கவனத்தை மேலும் சிதறடித்தது. இலங்கைவீரர்கள் அவர்களின் வரலாற்றில் இல்லாத அளவு மோசமான சூழலில் ஆடவேண்டிய நிலை!!! 2011இல் இந்தியாவிலேயே இந்தியாவிற்கு எதிராக 274 ஓட்டங்கள் குவித்த இலங்கை அணியினரால், இலாண்டன் ஓவலில் ஒஸ்ரேலியாவிற்கு எதிராக 253 ஓட்டங்கள் குவித்த இலங்கை அணியினரால் Sophia Gardensஇல் 181 ஒட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மூன்றாவது ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து ஆறு ஓட்டங்களை மட்டுமே இலங்கை பெற்றது இலங்கையின் ஒரு மோசமான தொடக்க ஆட்டமாக அமைந்தது. 26வது ஓவர்வரை இலங்கையில் சராசரி ஓட்டம் ஓவர் ஒன்றிற்கு மூன்றிற்கு குறைவாகவே இருந்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் இருந்த இலங்கை அணியினரால் பின்னால் வந்த சுழல் பந்து வீச்சாளர்களையும் சமாளிக்க முடியாமல் போனது. விக்கெட் காப்பாளராக இருந்த தோனியும் பந்து வீசி ஒரு விக்கெட்டை இலகுவாகக் கைப்பற்றினார். இலங்கை வீரர்களின் நோக்கம் 45வது ஓவரில் 50 ஓவர் வரை தாக்குப் பிடிப்பதாக மட்டுமே இருந்தது.  பொதுவாக 50 ஓவர் போட்டியில் பல சிக்சர்களை விளாசும் இலங்கைத் துடுப்பாட்ட வீரர்களால் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது. இலங்கை அணியினர் துடுப்பாட்டம் செய்யும் போது கடைசி ஓவரில் சரியான தருணம் பார்த்து முதல் மைதான ஆக்கிரமிப்பு இரு தமிழ் இளைஞர்களால் செய்யப்பட்டது. கையில் 40,000 பொதுநலவாய நாட்டு மக்களை இராஜபக்ச கொன்றார் என்ற வாசகம் பதித்த பெரிய அட்டை அவர் கையில் இருந்தது. மைதானம் துடுப்பாட்டத்திற்கு சாதகமானதாக இல்லை பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமே சாதகமானதாக இருந்தது என இலங்கை இரசிகர்கள் கருதினார்கள். ஆனால் இந்திய அணி துடுப்பாடத் தொடங்கிய போது முதலாவது விக்கெட்டை 77 ஓட்டங்கள் வரை இழக்காமல் இருந்தமை அந்த விவாதத்தைப் பொய்யாக்கியது.
போட்டி தொடங்கமுன் சிங்களவர்கள் சொன்னது.

சிறிதாகிய சிங்கமும் இரண்டாம் ஆக்கிரமிப்பும்
இந்திய அணியினர் துடுப்பாட்டக்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கவால் ஒரு விக்கட்டைக் கூட வீழ்த்த முடியவில்லை. பாவம் 8 ஓவர்களில் 54 ஓட்டங்களைக் கொடுத்து அவரது வாழ்விலேயே ஒரு மோசமான களமாக Sophia Gardens அமைந்தது அவருக்கு. பொதுவாக Sophia Gardens மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உகந்த மைதானமாகக் கருதப்படுகிறது. இந்திய அணியினர் துடுப்பாடும் போது மைதானத்தில் திரும்பத் திரும்ப அத்து மீறு உள் நுழைபவர்கள் ஆயிரம் பவுண்ட்ஸ் அபராதம் செலுத்த வேண்டும் என் விடுக்கப்பட்ட எச்சரிக்கைளையும் பொருட்படுத்தாமல் ஆறு தமிழ் இளைஞர்கள் புலிக்கொடிகளை உயர்த்திப் பிடித்தபடி ஆறு வேறு வேறு முனைகளில் இருந்து மைத்தானத்தை ஆக்கிரமித்தனர். பாவம் குசால் பெரேரா அவரது முகத்திற்கு நேரே முன்னே புலிக்கொடியை உயர்த்திப் பிடித்த படி ஒரு தமிழ் இளைஞர். குசால் பெரேரா தனது இரு கைகளையும் உயர்த்திப் பிடித்தபடி புத்தம் சரணம் கச்சாமி என்பது போல் நின்றார். இந்தியா இலகுவாக 8 விக்கெட்களால் வெற்றி பெற்றது.

மடிக்கப்பட்ட சிங்கக் கொடியும் மீண்டும் இலங்கையைக் காப்பாற்றிய இந்தியாவும்
சிங்களவனுக்கு பிரச்சனை என்றால் கைகொடுப்பது இந்தியாவின் தலையாய கடமை அன்றோ. போட்டி முடிந்தவுடன் சிங்கள இரசிகர்கள் தமது கருநீலச் சட்டையுடன் வெளியில் செல்ல அஞ்சி நின்றனர். பலர் தமது சட்டையைக் கழற்றி உள்ளிருந்த பெனியனுடன் வெளியேறினர். ஒருவர் கூடச் சிங்கக் கொடி பிடித்தபடி காணப்படவில்லை. இந்திய இரசிகர்களிடமிருந்து அவர்களின் தேசியக் கொடியை வாங்கி அதனால் தமது நீலச் சட்டையை மறைத்தபடி சில சிங்கள இரசிகர்கள் வெளியேறினர். காவற் துறையினர் பின்கதவால் பல சிங்கள இரசிகர்களை வெளியேற்றினர். மீண்டும் சிங்கக் கொடியை மிதித்தபடி தமிழர்கள் புலிக்கொடியைத் தூக்கிப் பிடித்தபடி நின்றனர்.

நன்றி கெட்ட இலங்கையும் மானம் கெட்ட இந்தியாவும்
சிங்கள இரசிகர்கள் இந்தியக் கொடிக்குள் மறைந்து தப்பியதையும் மறந்து சிங்களக் கிரிக்கெட் விமர்சகர்கள் இந்தியா திட்டமிட்டு தமிழர்களைத் தூண்டிவிட்டு தமது வீரர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய வைத்தனர் என்கின்றனர்.

Thursday, 20 June 2013

விஞ்ஞான ஆய்வு: செதில் குத்தி காவடி எடுப்பவர்கள் நல்லவர்கள்


தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து மொரிஸியசில் காவடி எடுக்கும்  86 பேர், ஸ்பெயின் மற்றும் கிரேக்கத்தில் தீமிதிப்பவர்கள், தென் அமெரிக்காவில் தம்மைக் காயப்படுத்தும் கத்தோலிக்கர்கள் ஆகியவர்களிடை ஆய்வுகளை மேற்கொண்டனர்.

மேற்படி ஆய்வு Psychological Science இன் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மொரிஸியசில் நிகழ்த்திய ஆய்வில் முடிவுகளை இப்படிச் சொல்கின்றனர் அவர்கள்:
  • The study of 86 males in Mauritius found both observers and performers of the Kavadi were more charitable than those who only participated in the collective prayers.
கூட்டுப்பிரார்த்தனை செய்பவர்களிலும் பார்க்க காவடி எடுப்பவர்களும் அதைப் பார்ப்பவர்களும் அதிக அறவாளர்களாகக் காணப்படுகின்றனர்.

சமயச் சடங்குகளின் போது தம்மைத் துன்புறுத்திக் கொள்பவர்களிடை ஏற்படும் பச்சாதாப விழிப்புணர்ச்சி(Empathetic arousal) அவர்களை நல்லவர்களாக்குகிறதாம். அவர்கள் சமூகத்துடன் இறுகப் பிணைப்படைந்தவர்களாகிறார்கள்.

“Another psychological pathway in which such extreme rituals may influence prosocial behaviour is described by various attribution theories,” he added. “For example, it is well established that paying a high price to enter a group makes people value their membership more, which might cause participants in such rituals to bond with the community and behave in more prosocial ways.”

Though eurocentric Westerners might view religious festivals that involve self-harm as primitive or barbaric, such extreme rituals are by no means limited to the Eastern world.

“There are many high-ordeal rituals in Western societies, both religious and secular,” Xygalatas told PsyPost. “For example, fire-walking rituals are performed in Greece by the communities of the Anastenaria (I’ve written a book called The Burning Saints on these rituals), as well as in Spain. Fire-walking rituals are also performed in the U.S. and elsewhere by New Age groups or are organized by companies (for a steep fee) as self-empowerment or corporate team-building techniques.”

இந்த இணைப்பில் இது தொடர்பான பதிவைக் காணலாம்: psypost

Tuesday, 18 June 2013

எரியும் இந்திய அரசியலும் சரியும் ரூபாவும்

அட்சயத் திதிக்கு தங்கம் வாங்கினால் செல்வம் சேரும் என இந்துக்கள் நம்புகிறார்கள். ஆனால் இந்தியாவின் மத்திய வைப்பகமான பொதுஇருப்பு வைப்பகத்தைப் (Reserve Bank) பொறுத்தவரை இது பிழைத்து விட்டது. அட்சய திதிக்கு இந்தியர்கள் நிறைய தங்கத்தை இறக்குமதி செய்தனர். இதைத் தொடர்ந்து இந்திய ரூபாவின் மதிப்பு சரியத் தொடங்கியது. போதாக் குறைக்கு இந்திய மத்திய வங்கி நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கப்படும் என்று ஒரு சைகைப்பட அறிக்கையையும் விட்டது. இதனால் இந்திய ரூபாவின் மதிப்பு மேலும் சரியத் தொடங்கியது. அது மட்டுமா அமெரிக்காவின் வேலை வாய்ப்புத் தொடர்பான புள்ளிவிபரங்கள் அமெரிக்க பொருளாதாரம் சீரடையும் என்பதைச்  சுட்டிக்காட்டியது. இதைத் தொடர்ந்து அமெரிக்க நாணயமான டொலரின் மதிப்பு உயர்த் தொடங்கியது. இதனால் இந்திய ரூபாய்க்கு அடிக்கு மேல் அடி.

தெய்வம் ஒன்று நினைக்க நிதிச் சந்தை வேறு நினைத்தது

2014இல் அல்லது அதற்கு முன்னர் வரவிருக்கும் இந்திய பாராளமன்றத் தேர்தலுக்கு முன்னர் நாட்டின் பொருளாதாரத்தை சற்று மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்திய மத்திய வங்கி நாட்டில் நாணயப் புழக்கத்தை அதிகரிக்க எண்ணியிருந்தது. அவர்களின் திட்டத்தில் மண்விழுந்து விட்டது. மாறாக இப்போது பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த இந்திய வட்டி வீதம் அதிகரிக்கப்படும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. சரியும் இந்திய ரூபாவின் மதிப்பை சமாளிக்க இந்திய அரசு எஃகு ஆணையத்தில் (Steel Authority)  தனக்கிருந்து பங்குகளை 15 பில்லியன்களுக்கு விற்றும் பயனளிக்கவில்லை. இந்த விற்பனையால் தனது நிதிக்கையிருப்பை அதிகரிக்கலாம் அது ரூபாவின் மதிப்பை உயர்த்தும் என் இந்திய மைய வங்கியான ரிசேர்வ் வங்கி கணக்கிட்டிருந்தது. ஆனால் அது சரிவரவில்லை. இந்திய ரூபாவின் மதிப்பு சரிந்தவுடன் வெள்நாடுகளில் வாழும் இந்தியர்கள் தம்மிடம் இருந்த பணைக்கையிருப்பை ரூபாக்களாக மாற்றி அதிக ரூபாக்களைப் பெறும் நோக்குடன் தமது பணங்களை இந்தியாவிற்கு அனுப்பினர். இந்திய ரூபா தொடர்ந்தும் சரிவடைந்ததால் அந்த நடவடிக்கைகளும் குறைந்து விட்டன. ஆசிய நாணயங்களில் இந்த ஆண்டு அதிக மதிப்பிறக்கம் அடைந்த நாணயமாக இந்திய ரூபா இருக்கிறது. இந்தியாவின் 650,000 கிராமங்களில் 36,000 கிராமங்கள் மட்டுமே வைப்பகங்கள் உள்ள கிராமங்களாகும். இந்தியாவின் நிதிச்சந்தை மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறது. கிராம மக்கள் தமது சேமிப்புக்களை தங்கத்தில் முதலிடுகிறார்கள். சிறந்த நிதிச் சந்தை இருந்தால் மட்டுமே சேமிப்பு உற்பத்தித் துறைக்கு திருப்பப்பட்டு பொருளாதாரம் மேம்படும். இந்தியாவின் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி கடந்த ஆண்டில் 90 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்தியா ஆண்டுக்கு 8.39 பில்லியன் டாலர்களுக்கு தங்கத்தையும் வெள்ளியையும் இறக்குமதி செய்கிறது.

அதிகரிக்கும் விலைகள்
சரியும் ரூபாவின் மதிப்பும் அதிகரிக்கு அமெரிக்க டாலரின் மதிப்பும் இந்திய இறக்குமதிப் பொருள்களின் விலைகளை அதிகரிகச் செய்தன. முக்கியமாக எரிபொருள்களின் விலை அதிகரித்தது. எரிபொருள் விலை அதிகரிக்கும் போது போக்குவரத்துக் கட்டணம், உள்ளூர் பொருள்களுக்கான உற்பத்திச் செலவு, விநியோகச் செலவு போன்றவை உயர்ந்து பொருள்களின் விலைகள் பரவலாக அதிகரிக்கும். இது ஆளும் காங்கிரசுக் கட்சியின் செல்வாக்குக்கு உகந்ததல்ல. ஒரு மாதத்திற்கு முன்னர் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி உத்தரவு கொடுத்த இந்திய இறக்குமதியாளார்கள் ரூபாவின் மதிப்பிறக்கத்தால் உத்தரவின் படி வந்து இந்திய துறைமுகங்களில் வந்திறங்கிய பொருட்களை வாங்குவதை தவிர்க்கிறார்கள்.

ஊழலால் உழலும் இந்தியப் பொருளாதாரம்.
சீனா உடபட முன்னணி நாடுகள் எல்லாம் வயது முதிர்ந்தவர்கள் தொகை அதிகரிப்பால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கையில் இந்தியா மட்டும் மக்கள் தொகையைப் பொறுத்தவரை அதிக அளவிலான இளைஞர்களைக் கொண்டுள்ளது. அத்துடன் பொருளாதார அபிவிருத்திக்கு உகந்த அதிக நடுத்தர வர்க்க மக்களையும் கொண்டுள்ளது. இந்தியாவின் நடுத்தர மக்கள் மக்கள் தொகை ஒஸ்ரேலியாவின் மொத்த மக்கள் தொகையிலும் அதிகமானதாகும். அத்துடன் திறன் மிக்க தொழிலாளர்களையும் இந்தியா கொண்டுள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் சாதகமாக இத்தனை இருந்தும் ஊழல் மிக்க அரசும் அரச ஊழியர்களும் இந்தியப் பொருளாதாரத்தை முன்னேறவிடாமல் செய்கின்றனர்.

செல்வாக்கிழந்த தேசியத் தலைமை
இந்தியாவின் சிறந்த தேசியத்  தலைவர் என்று சொல்லும் படியாக ஒருவரும் இப்போது இல்லை. அரசியலில் மாநிலக் கட்சிகள் அதிக செல்வாக்குப் பெற்று வருகின்றன. தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலை ஆளும் காங்கிரசுக் கட்சிக்கு அடுத்த தேர்தலில் தோல்வியடையச் செய்யும். பல கட்சிகள் கொண்ட கூட்டணி அரசு அமையும் போது அரசியல் திடநிலை கிடைக்குமா? அல்லது மோடியால் விடியுமா?

பாய நினைக்கும் பசி
இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தத் தேவையான தலைமை ராகுல் காந்தியா நரேந்திர மோடியா என்பது இப்போது இந்தியர்கள் முன் உள்ள கேள்வி. எந்த ஒரு பொறுப்பான பதவியையும் இதுவரை வகிக்காத கற்றுக் குட்டி ராகுல் காந்தி தலைமை அமைச்சர் பதவியை விரும்பவில்லை. அவரை நிர்பந்தித்த போது அவர் தமது கட்சி அறுதிப் பெரும்பானமையுடன் வெற்றி பெற்றால் மட்டுமே தான் தலைமை அமைச்சர் பதவியை ஏற்பேன் என்றார் ராகுல். அறுதிப் பெரும் பான்மை கிடைக்காவிடில் தொடர்ந்து மன்மோகன் சிங் தலைமை அமைச்சர் பதவியில் இருப்பதை நிதிச் சந்தையைத் திருப்திப்படுத்த மாட்டாது. சரித்திர சாதனை படைத்த ஊழல்கள் அவரது ஆட்சியில் நடைபெற்றன. மாற்றீடாக ப. சிதம்பரம் அவர்கள் தலைமை அமைச்சராக பொறுப்பு ஏற்பதற்கு அவர் சிவகங்கைத் தொகுதியில் வெற்றி பெற வேண்டும். சென்ற தேர்தலில் கருணாநிதி மாநில முதலமைச்சராக இருந்தார்.  வாக்கு எண்ணிக்கையின் போது பின் தங்கி இருந்த ப சிதம்பரம்  பின்னர் திடீரென வெற்றி பெற்றார். அப்படி இந்தத் தடவை நடக்க வாய்ப்பு இல்லை. இதனால் சிதம்பரம் அண்ணாச்சி புதுச்சேர்த் தொகுதிக்கும் பாயும் எண்ணத்துடன் இருக்கிறார். இன்னும் ஒரு சிறந்த நிர்வாகியான பிரணாப் முஹர்ஜி ராகுலை கட்சியில் முன்னுக்குக் கொண்டு வருவதற்காக ஓரம் கட்டப்பட்டு ராஸ்ட்ரபதி பவனுக்கு அனுப்பப்பட்டு விட்டார்.

மோடியுடன் மோதி விளையாடும் அத்வானித் தாத்தா.
குஜராத் மாநிலத்தை இந்தியாவின் முதல்தர மாநிலமாக்கியவர் நரேந்திர மோடி என அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். அவர் மூன்று தடவை தொடர்ந்து வெற்றி பெற்று குஜராத் முதலமைச்சராக இருக்கிறார். பிரித்தானியா வாழ் குஜராத்திய மக்களை அவதானிப்பவர்களுக்கு குஜராத்தை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவது  இலகுவானது என்று தெரியும். அத்துடன் அண்மைக்காலங்களாக வெளிநாடு வாழும் குஜராத்தியர் அதிகமாக இந்தியாவில் முதலீடு செய்கிறார்கள். ஆனால் பெரிய அளவு ஊழலற்ற ஒரு ஆட்சியை நரேந்திர மோடி குஜராத்திற்கு வழங்கி இருக்கிறார். ஆனால் பின் தங்கிய மக்களின் கல்வி, பெண்களின் கல்வி போன்றவற்றில் குஜராத் மாநிலம் கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பின் தங்கியுள்ளது. இந்துத்துவா கொள்கை பின் தங்கிய மக்களையும் பெண்களையும் புறம் தள்ளுகிறதா? மோடி தொடர்ந்து வெற்றி பெற்றதும் மதவாதக் கும்பலான ஆர்.எஸ்.எஸிற்கு மோடியை ரெம்பப் பிடித்து விட்டது. பொட்டுக்காரி சுஸ்மிதா சுவராஜும் மோடியை ஆதரிக்கத் தொடங்கிவிட்டார். அத்துடன் கருத்துக் கணிப்புக்கள் மோடி பாரதிய ஜனதாக் கட்சியின் தலைமை அமைச்சர் வேட்பாளாரக்கி தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் எனச் சுட்டிக் காட்டியது. இதனால் கோவாவில் கூடிய பாரதிய ஜனதாக் கட்சியினர் மோடியை முன்னிலைப்படுத்தினர். இது பழம் பெரும் தலைவரான எல் கே அத்வானிக்குப் பிடிக்கவில்லை கோவாக் கூட்டத்தைப் புறக்கணித்தார். தனக்கு ஆறுமாதமாவது இந்தியத் தலைமை அமைச்சராக இருக்க வேண்டும் என அடம்  பிடித்தாராம் அத்வானி. மோடியை முன்னிலைப்படுத்தினால் தலித் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்குகளை இழக்க வேண்டும் என்பதால் நிதிஸ் குமாரும் சரத் பவாரும் தமது ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பா.ஜ.க.  உடனான உறவை முறித்துக் கொண்டனர். இவர்களுக்கு காங்கிரசுக் கட்சி தூண்டில் போடுகிறது. 18/06/2013 செவ்வாய்க் கிழமை அத்வானியைச் சந்தித்து "ஆசி" பெற்றார் மோடி. ஆனால் அத்வானி ஆர்.எஸ்.எஸ் தவிர்ந்த மற்ற மதவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து மோடியின் காலை வாரும் திட்டத்துடன் இருக்கிறாராம். காங்கிரசின் ஊழலால் அதிருப்தி அடைந்த மக்கள் மோடி-அத்வானி மோதல் மீண்டும் காங்கிரசை பதவிக்குக் கொண்டுவருமா என்று தவிக்கின்றனர். மோடி அத்வானி மோதல் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலைமையை ஏற்படுத்தலாம்.

கனவு பெரிது! கனவு காண்போர் பலர்!!

பா.ஜ.க உள் மோதலால் உந்துப்பட பல பிராந்தியக் கட்சிகள் இந்தியாவில் செல்வாக்குப் பெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் ஜெயலலிதா, மேற்கு வங்கத்தில் மம்தா பனர்ஜீ, உத்தரப் பிரதேசத்தில் முலாயம்சிங் யாதவ், பிகார் சரத் யாதவ், பிகார் நிதிஷ்குமார் போன்ற பலர் இந்தியாவின் அடுத்த தலைமை அமைச்சராகும் நப்பாசையுடன் இருக்கிறார்கள். பொதுவுடமைவாதிகள் மூன்றாம் அணி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதில் மம்தா பனர்ஜீயை இணைக்கத் தயாரில்லை.  ஜெயலலிதா மூன்றாம் அணி வெற்றி பெற்று தான் தலைமை அமைச்சராகும் வாய்ப்பு இருந்தால் மட்டுமே மூன்றாம் அணியில் இணைவார். மூன்றாம் அணியிலும் பார்க்க அவர் பா.ஜ.கவுடன் தேர்தலின் பின்னர் கூட்டணி அமைக்கவே திட்டமிட்டுள்ளார்.  2014இல் அல்லது அதற்கு முன்னர் நடக்கும் தேர்தலில் பிராந்தியக் கட்சிகள் கணிசமாக வெற்றி பெற்றால் மைய அரசில் ஒரு நிலையற்ற ஆட்சி ஏற்படலாம். அது இந்திய பொருளாதாரத்திற்கோ அல்லது ரூபாவின் மதிப்பிற்கோ உகந்ததல்ல.

உலகப் பெரிய கணனிகளின்(supercomputer) தரவரிசையில் சீனா முதலாமிடம்

உலகிலேயே மிக விரைவான பெரிய கணனியை(supercomputer) சீனா உருவாக்கியுள்ளது. Tianhe-2 என்னும் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பெரிய கணனி இதுவரை அதிக விரைவான கணனியாக இருந்த அமெரிக்காவின் கணனியின் வேகத்திலும் பார்க்க இரண்டு மடங்கு விரைவாகச் செயற்படக்கூடியது.

சீனாவின் அதிவேக கணனியின் Tianhe-2 என்னும் பெயர் பால்பாதை (Milky way) என்னும் பொருள் கொண்டது. 

உலக கணனிகளின் தரவரிசைப் பட்டியல்:


சீனாவின் National University of Defence Technology ஆல் உருவாக்கப்பட்ட Tianhe-2  33,860 டிரில்லியன்கள் கணிப்பீடுகளை ஒரு செக்கண்டில் செய்யக் கூடியது.
அமெரிக்காவின் உயர் வேகக் கணனி 17000டிரில்லியன்கள் கணிப்பீடுகளை ஒரு செக்கண்டின் செய்ய வல்லது. 54,ட்ரில்லியன்/செக்கண்ட் வேகத்தில் செயற்படும் கணனிகளைச் உருவாக்கும் சாத்தியம் இருக்கிறது எனச் சொல்லப்படுகிற்து.

சீனாவின் Tianhe-2  கணனி 2015இல் இருந்து செயற்படத் தொடங்கும். இது சீனாவின் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைக்குப் பயன்படுத்தப்பட விருக்கிறது.
இதில் Intel பாவிக்கப்படுகிறது. இதில் பாவிக்கப்படும் பெரும்பாலான மென்பொருள்கள் சீனாவிலேயே உருவாக்கபப்ட்டுள்ளன.


Monday, 17 June 2013

ஈரானியத் தேர்தலும் மத்திய கிழக்கு அரசியலும்

சிரியாவின் தொடரும் உள் நாட்டுப் போர், பொங்கும் துருக்கி, குண்டுகள் வெடிக்கும் ஈராக் ஆகியவற்றின் மத்தியில் அணு உலையில் கொதிக்கும் ஈரானில் தேர்தல் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. தேர்தல் முடிவுகள் ஈரானைப் பற்றிய அறிஞர்களை ஆச்சரியப் படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மிரட்டலின் கீழ் ஈரான்
ஈரான் அணுக்குண்டு உற்பத்தியில் தீவிரமாக இருப்பதால் அது அமெரிக்காவினது போர் மிரட்டல், இணையவெளித் தாக்குதல், ஆளில்லா விமானங்களால் வேவு பார்த்தல், பொருளாதாரத் தடை ஆகியவற்றிற்கு உள்ளாகி இருக்கிறது. அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேலும் ஈரானிற்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது. ஈரானின் இரு அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பினார். 

சபைகள் நிறைந்த ஈரான்.
ஈரானியத் தேர்தல் சற்று வித்தியாசமானது. அதன் அதிகாரக் கட்டமைப்பும் சற்று வித்தியாசமானது. ஈரானின் அதிகாரமிக்கவராக அதன் உச்சத் தலைவரான தற்போது கொமெய்னி அயத்துல்லா அலி கமெய்னி இருக்கிறார். உச்சத்தலைவரை அறிஞர் சபை(Assembly of Experts) தேர்ந்தெடுக்கும். அவரின் கீழ் படைத்துறை அணு ஆராய்ச்சித் துறை உட்பட பல முக்கிய துறைகள் இருக்கின்றன. ஈரானிய அதிபரின் கீழ் இருக்கும் துறைகளில் முக்கியமானது நிதித் துறை. ஈரானில் மக்களால் தெரிவு செய்யப்படும் பாராளமன்றமும் இருக்கிறது. அறிஞர் சபை(Assembly of Experts) எட்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் 88 உறுப்பினர்களைக் கொண்டது. உச்சத்தலைவரை இச்சபையால் பதவி நீக்கமும் செய்ய முடியும். செனட் சபை போல் செயற்படும் பாதுகாவலர் சபையும் (Guardian Council)இருக்கிறது. இதன்12 உறுப்பினர்களில் 6 பேர் உச்சத் தலைவராலும் மீதி 6 பேர் பாராளமன்றத்தாலும் தெரிவு செய்யப்படுவர். ஈரானில் அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள்  முதலில் தேர்தல் சபையினதும் பின்னர் பாதுகாவலர் சபையினதும் (Guardian Council) அங்கீகாரம் பெறவேண்டும். பெண்கள் போட்டியிடுதல் மறுக்கப்படுகிறது.  இம்முறை தேர்தலில் போட்டியிட 30 பெண்கள் உட்பட 689 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 8 பேர் தெரிவு செய்யப்பட்டு போட்டியிட அனுமதிக்கப்பட்டனர். அயத்துல்லா அலி கமைனிக்கு உகந்தவர்கள் மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனச் சொல்லப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட எட்டு வேட்பாளர்களில் இருவர் போட்டியில் இருந்து விலகிக் கொண்டனர்.

பிழையாகிப் போன எதிர்பார்ப்பு
தீவிரப் போக்குடையவரும் மேற்கு நாடுகளுக்கு எந்த வித விட்டுக் கொடுப்புக்களையும் செய்யக் கூடாது என்ற கருத்துடையவரும் உச்சத் தலைவருக்கு மிகவும் வேண்டப்பட்டவருமான சயீத் ஜலிலீதான் வெற்றி பெறுவார் என்றும் மிதவாதப் போக்கும் சீர்திருத்தக் கொள்கையும் உடையவரான ஹசன் ரொஹானி (Hassan Rohani) என்ற வேட்பாளரை வெற்றி பெற ஈரானிய மதவாதிகள் அனுமதிக்க மாட்டார்கள் என பல அமெரிக்கா ஆய்வாளர்கள் எதிர்வு கூறி இருந்தனர். இவற்றுக்கெல்லாம் மாறாக பன்னாட்டு இராசதந்திரத்தில் அனுபவம் கொண்டவரான ஹசன் ரொஹானி (Hassan Rohani)  அமோகமாக வெற்றி பெற்றுள்ளார். ஹசன் ரொஹானிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் எதிராகப் பல வன்முறைகள் தேர்தல் பிரச்சாரத்தின் போது கட்டவிழ்த்து விடப்பட்டன.

உச்ச முடியாத் உச்சத் தலைமை
ஈரானில் உச்சத்தலைமையை ஆதரிக்கும் தீவிரப்போக்குடைய பழமைவாதிகள், உச்சத் தலைமையுடன் உடன்பட்டுச் செயற்படும் சீர்திருத்தவாதிகள், உச்சத் தலைமையை மறுக்கும் தாராண்மைவாதிகள் என மூன்று பெரும் பிரிவினர் இருக்கின்றனர். இதில் தாராண்மைவாதிகள் தேர்தலில் போட்டியிடவில்லை. போட்டியிட்டவர்களில் சீர்திருத்தவாதியான ஹசன் ரொஹானி வெற்றி பெற்றுள்ளார். ஹசன் ரொஹானி ஒரு சீர்திருத்தவாதி எனச் சொல்லப்பட்ட போதிலும் அவரது பெரும்பான்மையான அரசியல் வாழ்வு பழமைவாதிகளுடனேயே இருந்தது. படைத்துறை ஆலோசகராக, பன்னாட்டு இராசதந்திரியாக, அணுவலுப் பேரப்பேச்சாளராக, இப்படிப் பலதரப்பட்ட துறைகளில் ஹசன் ரொஹானி செயற்பட்ட போதெல்லாம் உச்சத்தலைமைக்கு கீழ்ப்படிந்தவராகவே செயற்பட்டார். இவர் பலர் எதிர்பார்ப்பது போன்ற ஒரு "சிறந்த சீர்திருத்தவாதி" அல்ல எனச் சிலர் வாதிடுகின்றனர். ஈரானில் ஏற்பட்டது ஆட்சி மாற்றமல்ல ஆனால் ஒரு அணுகு முறை மாற்றத்திற்கு வாய்ப்பு இருக்கிறது எனக் கருதப்படுகிறது.

பொருளாதாரப் பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுத்த தேர்தல்
அதிக இளம் வயதினரைக் கொண்ட ஈரானில்17 விழுக்காட்டினர் வேலையின்றி இருக்கின்றனர். பணவிக்கம் 22 விழுக்காடு. 40 விழுக்காடு மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.  ஹசன் ரொஹானியின் வெற்றி  ஈரானிய மக்கள் அணுக்குண்டு தயாரிக்கும் தலைவரிலும் பார்க்க தமது தனிமனித சுதந்திரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் பன்னாட்டு உறவையும் மேம்படுத்தக் கூடிய ஒரு தலைவரை விரும்புகின்றனர் என்பதை எடுத்துக் கட்டுகிறது. 64 வயதான ஹசன் ரொஹானி 2003ஆம் ஆண்டிலிருந்து 2005 வரை ஈரானின் அணு வலுத்துறை பேரப்பேச்சுவார்த்தையாளராக இருந்தவர். ஸ்கொட்லாந்துப் பல்கலைக் கழகமொன்றில் கலாநிதிப் பட்டம் பெற்ற ரொஹானி ஈரானின் உச்ச பாதுகாப்புச் சபைச் செயலராகவும் இருந்தவர். தற்போதைய உச்சத் தலைவர் கொமெய்னியுடன் நல்ல உறவைப் பேணுபவர். ஹசன் ரொஹானியால் பொருளாதாரச் சீர்திருத்தத்தைக் கொண்டுவர முடியும் ஆனால் பொருளாதாரத் தடைக்குக் காரணமான அணுக் குண்டு உற்பத்தியை நோக்கிய ஈரானின் முன்னேற்றத்தை தடுக்க முடியுமா என்பதுதான் இப்போதைய பெரிய கேள்வி. அணு உற்பத்தித் துறை உச்சத் தலைவர் கொமெய்னியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

ஈரானிய மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்கப்படுமா?
ஈரானிய மக்கள் சமூகவிடுதலையையும் பொருளாதார மேம்பாட்டையும் விரும்புகின்றனர் என்பதைத் தேர்தல் முடிவு சுட்டி நிற்கிறது. இதை ஈரானிய உச்சத் தலைமை ஏற்றுக் கொண்டு ஈரானில் மாற்றங்களை ஏற்படுத்த ஹசன் ரொஹானிக்கு அனுமதி கொடுக்குமா? அல்லது வெளிநாட்டு வலுக்கள் ஈரானிலும் அரபு வசந்தம் என்னும் பெயரில் பெரும் கிளர்ச்சி ஒன்றிற்கு தூபம் போட சந்தர்ப்பம் வழங்கப்படுமா?

ஈரானின் பிராந்திய ஆதிக்கம்

ஈரான்  லெபனானிலும் ஆப்கானிஸ்த்தானிலும்  இயங்கும் போராளிக் குழுக்களுக்கும் ஜப்பானில் இயங்கும் செம்படை, அமெரிக்காவில் இயங்கும் இரகசியப்படை, குர்திஷ் போராளிக் குழுக்கள், சூடானில் இயங்கும் இசுலாமியப் போராளிக்குழுக்கள் போன்ற பல போராளிக் குழுக்களுக்கு ஆதரவு வழங்குகிறது. சியா முசுலிம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட ஈரான் சவுதி கட்டார் போன்ற சுனி முசுலிம்களை அதிகமாகக் கொண்ட நாடுகளுடன் நல்ல உறவில் இல்லை. சுனி முசுலிம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்டாலும் சியா முசுலிம்களின் ஒரு பிரிவு இனக்குழுமமான அலவைற்றினரின் ஆட்சியின் கீழ் சிரியா இருக்கிறது. தனது ஒரே ஒரு நட்பு நாடான சிரியாவின் அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சிக்கு ஈரான் பேருதவி செய்து வருகிறது. ஈரான் தனது படையினர் 4000 பேரை சிரியாவிற்கு அனுப்பும் என அறிவித்ததும் பஷார் அல் அசாத்தின் படைகள் அலேப்பே நகரைச் சிரியக் கிளர்ச்சிக்காரர்களிடமிருந்து மீளக் கைப்பற்றுவதை அனுமதிக்க முடியாது என துருக்கி அறிவித்ததும் கட்டார் நாட்டின் நிதி உதவியில் தங்கியிருக்கும் எகிப்த்து சிரியாவுடன் தனது உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்ததும் சிரியாவில் ஒரு விமானப்பறப்பு தடைசெய்யப்பட்ட பிராந்தியத்தை உருவாக்குதை அமெரிக்கா கருதுவதும் மத்திய கிழக்கில் பெரும் படை மோதலை உருவாக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Sunday, 16 June 2013

என்றும் நீ என்னுடனே

என் மூலம் நீ
என் முதல்வன் நீ
என் முழுதும் நீ
என் மூச்சும் நீ

தேகம் தந்தவன்
தேவைகள் தீர்த்தவன்
நிழல் தந்தவன்
நிழலாய்த் தொடர்ந்தவன்

பாசம் பொழிந்தவன்
பாதைகள் வகுத்தவன்
பார்வையில் வளர்த்தவன்
பாதமாய்ச் சுமந்தவன்

நின்றும் பரிவு
நினைவிலும் பரிவு
நீங்கியும் பரிவு
நிலையான பரிவு
நீ என்றும் என்னுடனே

 அன்று நான் பிறக்கும் போது எனது இணுவில் மருத்துவ மனை வாசலில் நின்று கொண்டு நல்லூர்க் கந்தனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். இன்று என் பிள்ளை பிறக்கும் போது நானும் மருத்துவர்களோடு மருத்துவன் போல் ஆடை அணிந்து நின்று மயங்கி விழுந்தேன்.

அன்று எனக்கு ஆங்கிலம் கற்பிக்க தந்தை மிகவும் சிரமப்பட்டார். இன்று என் பிள்ளைகளுக்கு தமிழ் கற்பிக்க நான் சிரமப்படுகிறேன்.

அன்று தந்தை தந்த வீட்டிலும் கல்வியிலும் நான் திருப்தியடைந்தேன்.
இன்று என் பிள்ளைகளுக்கு வீடு, நீச்சல் குளம், வேறு வேறு நாடுகளுக்கு விடுமுறை ஆளுக்கு ஒரு கார் எல்லாம் கொடுத்தும் திருப்தியில்லை.

அன்று உள்ளுக்கு லேபல் போட்ட தைத்த ஆடைகள் எனக்கு வாங்கி கொடுத்தால் பெரும் மகிழ்ச்சி. இன்று வெளியில் லேபல் போட்ட ஆடைகளுக்கு மிகை விலை கொடுத்து நான் வாங்கிக் கொடுக்க வேண்டும் என் பிள்ளைகளுக்கு

அன்று ஞாயிற்றுக் கிழமைகளில் நான் எழும்பாவிடில் அப்பா வந்து திட்டி எழுப்புவார். இன்று ஞாயிற்றுக் கிழமைகளில் என்னை வந்த் என் பிள்ளை உலுப்பி எழுப்பும் டியூஷனுக்கு போக நேரமாயிட்டுது என்று

அன்று நல்லூர் கோவில் வீதியில் கீ கொடுத்தால் ஓடும் கார் வாங்கினால் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. இன்று இன்று பிறந்த நாளுக்கு என் பிள்ளைக்கு கல்குலேட்டர் வாங்கிக் கொடுத்தால் எக்ஸ் பாக்ஸ் ஏன் வாங்கவில்லை எனப் பெரும் சண்டை.

அன்று என் தந்தை என் அறைக்குள் வந்தால் எழுந்து நின்று என்னப்பா என்பேன். என்று என் பிள்ளையில் அறைக்குள் போனால் ஏன் கதவில் தட்டிப் போட்டு வரவில்லை எனச் சண்டை.


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...