Friday, 14 June 2013

மீண்டும் தொடங்கும் விடுதலைப் போர்

படை பலத்தின் வன்முறையால் அடக்கப்பட்ட
உரிமைபோரை உருவாக்கக் கருவான பிரச்சனை
ஐந்தாண்டுகளுக்குள் தீர்க்கப்படாவிட்டால்
மீண்டும் புது மிடுக்குடன் உரிமைப் போருக்கு
துடித்தெழுவர் அடக்கப்பட்டோர்
இது உலக சரித்திரம் உணர்ந்தோர் சொல்வது

மானத்தை சுவீகரிக்க மண்ணை அபகரிக்க
இளையோர் பரிதவிக்க இனமே அடக்கப்பட
எல்லாம் முடக்கப்பட எவரிங்கு பொறுப்பார்
யாரிங்கு அடங்கிடுவார். 

மீண்டும் தொடங்கும்
மிடுக்குடன் விடுதலைப் போர்

முடியாத தொல்லையில்
வறுமையின் கொல்லையில்
பொறுமையில் எல்லையில்
யாரிங்கு தொடருவார்
தொடங்குவார் மீண்டும் 

மிடுக்குடன் விடுதலைப் போர்

வழிபாட்டிடங்கள் அழிபட
கலாச்சாரங்கள் கறைபட
வாழ்வாதரங்கள் பறிபட
யாரிங்கு தாங்கிடுவார்
தொடங்குவார் மீண்டும் 

மிடுக்குடன் விடுதலைப்போர்

நீரில் படகோட்டத் தடை

நிலத்தில் உழவும் தடை
வளமெல்லாம் கொள்ளை
நாளும் தொடர் வஞ்சனை
யாரிதைப் பொறுப்பார்
தொடங்குவார் மீண்டும் 

மிடுக்குடன் விடுதலைப்போர்

தளைகள் அறுபட கயவர் ஓடிட
நிலங்கள் விடுபட பகைமை பொடிபட
இரவது விடிந்திட கதிரது உதித்திட

இறுதி இலக்கடைய ஈழம் மலர்ந்திட
தொடங்குவார் மீண்டும் 

மிடுக்குடன் விடுதலைப்போர்

Thursday, 13 June 2013

விஞ்ஞானி: ஓம் என்று சொல்லி தியானம் செய்தால் தேர்வில் சித்தியடையலாம்.


ஓம் என்று சொல்லி தியானம் செய்தால் மாணவர்களின் மூளையில் ஏற்படும் விளைவுகள் பற்றி University of Connecticut இன் அமெரிக்கப் பேரசிரியர் ரொபேர்ட் கொல்பேர்ட் 235 மாணவர்களை வைத்து ஆய்வு செய்துள்ளார்.

பேரசிரியர் ரொபேர்ட் கொல்பேர்ட் செய்த ஆய்வின் படி ஒரு நாளைக்கு இருதடவை இருபது நிமிடங்கள் ஆழ் நிலைத் தியானம் செய்த மாணவர்கள் தியானம் செய்யாத மாணவர்களிலும் பார்க்க 25 விழுக்காடு அதிக திறமையாக தேர்வுகளில் சித்தியடைந்துள்ளனர். கண்களை மூடிக் கொண்டு குறித்த ஒரு ஒலியை உச்சரித்துக் கொண்டு ஆழ்நிலைத் தியானம் செய்த மாணவர்கள் சிறப்பாகச் செயற்பட்டுள்ளனர்.

இந்த ஆழ்நிலைத் தியானம் மாரடைப்பை தவிர்க்கும், குருதி மூளைக்கு செல்வது தடைப்படும் போது ஏற்படும் strokeஐத் தவிர்க்கும், மன அழுத்தத்தை தவிர்க்கும் என்றும் ஆய்வின் போது கண்டறியப் பட்டுள்ளது.

தமிழர்கள் தியானத்தின் சிறப்பு பற்றி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உணர்ந்து கொண்டனர். பீட்டில்ஸ் இசைக்குழுவினர் முதல் முதலாக தியானத்தின் சிறப்பை உலகறியச் செய்தனர். பனிப்புலம் என்னும் இணையத்தளம் தியானத்தின் நன்மைகளை இப்படிப் பட்டியலிட்டுள்ளது:

உடல் உள்ளம் தூய்மை அடைகிறது.

உடல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

உடம்பில் இருக்கும் நோய்கள் குறைகிறது.

அன்பு, சாந்தம், ஆனந்தம், இன்பம் சுரக்கிறது.

சக்தி விரயமாவது தடுக்கப்படுவதுடன் உடலுக்கு புதிய சக்தியும் உற்பத்தியாகிறது.

மனம் இறுக்கத்திலிருந்து தளர்கிறது.

உடல் முழுதும் பூரண ஓய்வு கிடைக்கிறது.

குறைவான பிராண வாயுவே செலவாகிறது.

உள் உறுப்புகளில் உயிரணுகளுக்கு குறைவான வேலை கிடைக்கிறது.

குறைவான சுவாச இயக்கம் கிடைக்கிறது.

இதய துடிப்புக்கு குறைவான இயக்கம் கிடைக்கிறது.

மனிதனின் சிந்தனை சக்தியை தூண்டிவிடுகிறது.

தூக்கத்தினால் கிடைப்பதை விட உடலுக்கு அதிகமான ஓய்வு கிடைக்கிறது.

ஞாபக சக்தி, புத்தி கூர்மை அதிகரிக்கிறது.

மன உலைச்சல் மன அழித்தம் நீங்குகிறது.

அலைபாயும் மனம் அடங்கி அமைதியடைகிறது.

சிந்தனை ஆற்றலும், ஞாபக சக்தியும் கூடுகிறது.

நோய் இன்றி பெரு வாழ்வில் பல்வேறு பலன் கிடைக்கிறது.

மூச்சு விடும் விகிதம் குறைகிறது. ஆதலால் ஆயுள் நீடிக்கிறது.

இரத்த அழுத்தம், இதய நோய்கள், காசநோய்கள், தூக்கமில்லாத வியாதி, தோல் நோய்கள், நீரிவு நோய்களும் குணமடைகிறது.

Wednesday, 12 June 2013

மைக்கேல் ஜக்சனின் படுக்கை அறைப்படங்கள்


லொஸ் எஞ்சல்ஸ் காவற்துறையினர் காலம் சென்ற பிரபல பொப் பாடகர் மைக்கேல் ஜக்சனின் படுக்கை அறைப் படங்களை வெளியிட்டுள்ளனர். அவரின் தாயார் கத்தரின் ஜக்சன் AEG Live என்னும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிற்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார். AEG Live தனது மகனின் மருத்துவர் தொடர்பாக சரியான விசாரணை மேற்கொள்ளவில்லை எனக் குற்றம் சாட்டி அவர் இந்த வழக்கைத் தொடுத்துள்ளார்.


மேற்படி வழக்குக்காக பாடகர் மைக்கேல் ஜக்சனின் இறுதிக்கால படுக்கை அறையின் படங்களை லொஸ் எஞ்சல்ஸ் காவற்துறையினர் வெளியிட்டுள்ளனர்.பாடகர் மைக்கேல் ஜக்சன் தனது இறுதிக் காலத்தில் மருந்துகளிலேயே பெரிதும் தங்கி இருந்தார். அவரது உடல் ஆரோக்கியம் முழுக்க முழுக்க மருந்துகளில் தங்கியிருந்தது. அத்துடன் அவரத் உடலை அழகாகக் காட்டவும் நிறைய மருந்துகளை உண்டிருக்கிறார்.


அவரது அறையைப் பார்க்கும் போது அவர் தனது இறப்பையிட்டு அதிக பயம் கொண்டிருந்தார் எனப்புலனாகிறது என்கின்றனர். அவரது அறையில் ஆபத்தான வேளையில் பாவிக்க வேண்டிய சுவாச உதவி முகமூடியும் காணப்பட்டது. தரையில் பல பாவிக்கபப்ட்ட மருந்துப் புட்டிகள் இருந்தன்.
மைக்கேல் ஜக்சனின் அறையில் ஒரு சிறிய சார்லி சப்லினின் படமும் பல இனம்தெரியாத குழந்தைகளின் படங்களும் காணப்பட்டன.


Tuesday, 11 June 2013

அணு உலையில் கொதிக்கும் ஈரானிய அதிபர் தேர்தல்

ஈரானிய அதிபர் தேர்தல் 14-ம் திகதி ஜூன் மாதம் நடைபெறவிருக்கிறது.  ஈரானின் அரசியல் நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பை ஈரானியத் தலைவருக்கு உரியது.  உச்சத் தலைவருக்கு அதிபரிலும் பார்க்க  அதிக அதிகாரம் இருக்கிறது. அதிபர் மக்களாலும் உச்சத் தலைவர் அறிஞர் சபையாலும்(Assembly of Experts) தேர்ந்தெடுக்கப்படுவர்.  ஈரானிய அரசியலமைப்பு இசுலாமிய மதக் கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் மக்களாட்சித் தத்துவங்களை உள்ளடக்கியும் உருவாக்க்பபட்டது. தற்போதைய உச்சத் தலைவராக அயத்துல்லா அலி கமைனி இருக்கிறார்.

ஈரானில் அதிபர் தேர்தலில் யார் போட்டியிடுபவர்கள்  முதலில் தேர்தல் சபையினதும் பின்னர் பாதுகாவலர் சபையின் (Guardian Council) அங்கீகாரம் பெறவேண்டும். பெண்கள் போட்டியிடுதல் தடை செய்யப் பட்டுள்ளது.  இம்முறை தேர்தலில் போட்டியிட 30 பெண்கள் உட்பட 689 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 8 பேர் தெரிவு செய்யப்பட்டு போட்டியிட அனுமதிக்கப்பட்டனர். அயத்துல்லா அலி கமைனிக்கு உகந்தவர்கள் மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனச் சொல்லப்படுகிறது. பாதுகாப்பு போன்ற முக்கியமான அமைச்சர்களை உச்சத் தலைவரே நியமிப்பார். 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்ட Mir Hossein Mousavi, Mehdi Karroubi ஆகிய இரு சீர்திருத்தவாதிகள் அத் தேர்தலில் செல்லுபடித்தன்மை பற்றிச் சவால் விட்டதால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இம்முறை போட்டியிடவில்லை.

வேட்பாளர்கள்
1. மொஹமட் கராஜி (Mohammad Gharazi) முன்னாள் எண்ணெய் வள அமைச்சரான இவர் பணவிக்கத்திற்கு எதிரான வேட்பாளராக தம்மை அறிமுகப்படுத்தியுள்ளார். இவர் ஒரு தாராண்மைவாதி எனக் கருதப்படுகிறார்.

2. மொஹமட் ரிஜா அரிஃப் (Mohammad Reza Aref) இவர் ஒரு மிதவாத வேட்பாளர் ஆவார். ஈரானி பொருளாதாரம் எண்ணெய் ஏற்றுமதியில் தங்கி இருப்பதைக் குறைக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர்.

3. மொஹ்சென் ரிஜை (Mohsen Rezai) ஒரு பொருளியல் கலாநிதிப் பட்டம் பெற்ற இவர் ஈரானியப் பொருளாதாரம் தவறாக நிர்வகிப்பதாகக் கருதுகிறார். பணவீக்கத்தையும் வேலையில்லாப் பிரச்சனையையும் கட்டுப்படுத்துவதே இவரது நோக்கம் என்கிறார்.

4. அலி அக்பர் வெலயதி (Ali Akbar Velayati): உச்சத் தலைவர் கமைனியின் பன்னாட்டுத் துறை தலமை ஆலோசகரான இவரை மிகை-பழமைவாத மதபோதகர்கள் சபை பலமாக ஆதரிக்கிறது. ஈரானின் பன்னாட்டு உறவை தாம் மேம்படுத்துவேன் என்கிறார் இவர்.

5. ஹசன் ரொஹானி (Hassan Rohani) இவர் முன்னாள் அணுவலுத் துறைப் பேரப்பேச்சாளராக இருந்தவர். அதிபர் பதவி வேட்பாளர்களிடையான தொலைக்காட்சி விவாதத்தின் போது ஈரானின் அணுவலு தொடர்பான இரகசியங்களை வெளிச் சொன்னார் எனக் குற்றம் சாட்டப்படுகிறார். இதற்காக இவர் போட்டியிடுவது தடை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது,

6. மொஹம்மட்  பக்கீர் கலிபாஃப் (Mohammad Baqer Qalibaf); இவர் இரண்டாவது முன்னணி வேட்பாளராகக் கருதப்படுபவர். தற்போது தெஹ்ரான் நகர பிதாவான இவர் முன்னாள் விமானப் படைத் தளபதியாவார். 1999இலும் 2003இலும் நடந்த மாணவர் எழுச்சிகளையும் 2009-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கிளர்ச்சி செய்தவர்களையும் வன்முறையால் அடக்கியவர் என்று மனித உரிமை அமைப்புக்கள் இவரைக் குற்றம் சாட்டுகின்றன.  நலிவடைந்த ஈரானியப் பொருளாதாரத்தை இரண்டு ஆண்டுகளிச் சரிபடுத்துவேன் என முழங்குகிறார் இவர்.

7.  சயீத் ஜலீலி (Saeed Jalili) பெண்கள் இருக்க வேண்டிய இடம் வீடு என்ற கொள்கை உடைய இவர் தற்போதைய அணுவலுத் துறைப் பேரப்பேச்சாளராகும்.  தீவிரவாதப் போக்குடைய இவர் அயத்துல்லாக் கமைனிக்கு வேண்டப்பட்ட ஒருவராகும். இதனால் இவர் முன்னணி வேட்பாளராகக் கருதப்படுகிறார்.

ஒரு வேடபாளரான முன்னாள் பராளமன்ற அவைத்தலைவரான கலாம் அலி ஹதாத் அடெல் (Gholam-Ali Haddad-Adel) போட்டியில் இருந்து 10-03-2013இலன்று விலகியுள்ளார்.

ஈரானின் அணுவலு உற்பத்தி ஓர் அணுக்குண்டுத் தயாரிப்புக்கு வழிவகுக்கும் என மேற்கு ஐரோப்பிய நாடுகளும், வட அமெரிக்க நாடுகளும் இஸ்ரேலும் கருதுகின்றன. இதனால் ஈரானின் மீது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையூடாகவும், இந்த நாடுகள் தனித்தும் பொருளாதரத் தடையை விதித்து அதை மேலும் மேலும் இறுக்கி வருகின்றன. இதனால் ஈரானிய ரியாலின் பெறுமதி பெரும் சரிவுக்கு உள்ளானது. ஈரானுடனான எந்த ஒரு நிதிக்கொடுப்பனவும் செய்ய முடியாமல் பன்னாட்டு வங்கிக் கொடுப்பனவு முறைமையை அமெரிக்கா சாதுரியமாக தடுத்து விட்டது. சீனாவும் இந்தியாவும் ஈரானுடன் பண்டமாற்று முறையில் வர்த்தகம் செய்கின்றன. பொருளாதாரத் தடையால் ஈரானில் விலைவாசி அதிகரிப்பு, பணவீக்கம், வேலையில்லாப் பிரச்சனை ஆகியன பெரும் பிரச்சனைகளாக இருக்கின்றன. இதனால் தேர்தல் பிரச்சாரம் அணுவலு பற்றியதாகவும் அதனால் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சனையை ஒட்டியதாகவும் இருக்கின்றது.

தீவிரப் போக்குடைய முன்னணி வேட்பாளரான சயீத் ஜலீலி மேற்கு நாடுகளுக்கு எந்த வித விட்டுக் கொடுப்புக்களையும் செய்யக் கூடாது என்ற கருத்துடையவர். மேற்கு நாடுகளுடன் எந்த வித சமரசமும் செய்யக் கூடாது என்ற கருத்துடையவர் இவர். “No compromise, no submission, only Jalili!”என்கின்றனர் இவரது ஆதரவாளர்கள். ஏழு வேட்பாளர்களும் ஈரானின் அணுவலு மேம்பாட்டை ஆதரிக்கின்றனர். அதை எப்படி மேற்கு நாடுகளுடன் கையாள்வது என்பது தொடர்பாகவும் பெண் உரிமை தொடர்பாகவும் பொருளாதாரக் கொள்கை தொடர்பாகவும் வேட்பாளர்கள் வேறு படுகின்றனர். ஈரானிய அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அதன் அணுக்குண்டு உற்பத்தி செய்யும் கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காது என்கின்றனர் இஸ்ரேலியர்

Monday, 10 June 2013

சரியும் இந்திய ரூபாவின் மதிப்பு காங்கிரசை விரட்டுமா?

இந்திய ரூபாவின் மதிப்பு தொடர்ந்து ஒரு வாரமாக சரிந்து வருகிறது. இன்று(10-06-20130 இந்திய ரூபாவின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக என்றுமில்லாத தாழ் நிலையாக 1$=Rs57.5450ஆகக் குறைந்துள்ளது. இதனால் இந்தியக் கடன் முறிகளின்(Bonds) விலையும் குறைந்துள்ளது.

சரியும் இந்திய ரூபாவின் மதிப்பை சமாளிக்க இந்திய அரசு Steel Authority இல் தனக்கிருந்து பங்குகளை 15 பில்லியன்களுக்கு விற்றும் பயனளிக்கவில்லை. இந்த விற்பனையால் தனது நிதிக்கையிருப்பை அதிகரிக்கலாம் அது ரூபாவின் மதிப்பை உயர்த்தும் என் இந்திய மைய வங்கியான ரிசேர்வ் வங்கி கணக்கிட்டிருந்தது. ஆனால் அது சரிவரவில்லை. முன்னதாக இந்திய வட்டி வீதம் குறைக்கப்படலாம் என்பது போல் ரிசேர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டிருந்தது. வட்டி வீதத்தைக் குறைத்து நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்து பொருளாதாரத்தை மேம்படுத்தலாம் என இந்திய அரசு எண்ணியது. ஆனால் வட்டி வீதக் குறைப்பு நாணய வர்த்தகர்களை அதிருப்திக்குள்ளாக்கியது. அமெரிக்காவில் வேலைக்கு புதிதாக ஆட்சேர்பது அதிகரித்ததாக புள்ளிவிபரங்கள் வெளிவந்தமை அதன் பொருளாதாரம் தேறும் நிலையை அடைந்து விட்டதாக பொருளாதார நிபுணர்கள் க்ருதினர். இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பு உலக நிதிச் சந்தையில் உயர்ந்தது. இந்திய ரிசேர்வ் வங்கியின் வட்டி வீதக் குறைப்புத் திட்டம் பிழையான தருணத்தில் மேற்கொள்ளப்பட்டது. நிலைமை தலைகீழாக மாறி வட்டி வீதத்தை உயர்த்த வேண்டிய அல்லது குறைக்காமல் இருக்க வேண்டிய நிலைக்கு இந்திய ரிசேர்வ் வங்கி தள்ளப்பட்டுள்ளது.

விலைகள் அதிகரிக்க்ப் போகிறது
சரியும் ரூபாவின் மதிப்பும் அதிகரிக்கு அமெரிக்க டாலரின் மதிப்பும் இந்திய இறக்குமதிப் பொருள்களின் விலைகளை அதிகரிக்கப் போகிறது. முக்கியமாக எரிபொருள்களின் விலை அதிகரிக்கும். எரிபொருள் விலை அதிகரிக்கும் போது போக்குவரத்துக் கட்டணம், உள்ளூர் பொருள்களுக்கான உற்பத்திச் செலவு, விநியோகச் செலவு போன்றவை உயர்ந்து பொருள்களின் விலைகள் பரவலாக அதிகரிக்கும். இது ஆளும் காங்கிரசுக் கட்சியின் செல்வாக்குக்கு உகந்ததல்ல.

பல முனைப் பிரச்சனைகள்
இந்திய அரச நிதிப்பற்றாக்குறையும் வெளிநாட்டுச் செலவாணிப் பற்றாக் குறையும் அதிகமாக இருக்கிறது. பொருளாதாரம் வேகமாக வளரவில்லை. வளர்ச்சி வீதம் குறைகிறது. ஆனால் விலைவாசி அதிகரிப்பு கட்டுக்கடங்காமல் இருக்கிறது. 

எந்திரவியல் பிரச்சனைகள்
இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி Economy Watchஇல் Indian Economy: Engineering
Weakness Serious Problem என்னும் தலைப்பில் இப்படி எழுதப்பட்டிருந்தது:
  • Despite this nation’s rise as a technology titan with some of the world’s best engineering minds, India’s full economic potential is stifled by potholed roadways, collapsing bridges, rickety railroads
அரச நிர்மாணத் துறையில் ஊழல்கள் நிறைந்திருப்பதால் பல கட்டுமானங்கள் பலவீனமாக இருக்கின்றன. போக்கு வரத்து, நீர் விநியோகம், மின் விநியோகம் போன்றவற்றின் திறமையின்மையும் ஊழல்களும் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததாக இல்லை.

ஊழல் நிறைந்த ஆட்சி
சீனா உடபட முன்னணி நாடுகள் எல்லாம் வயது முதிர்ந்தவர்க்ள் தொகை அதிகரிப்பால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கையில் இந்தியா மட்டும் மக்கள் தொடையைப் பொறுத்தவரை அதிக அளவிலான இளைஞர்களைக் கொண்டுள்ளது அத்துடன் பொருளாதார அபிவிருத்திக்கு உகந்த அதிக நடுத்தர வர்க்க மக்களையும் கொண்டுள்ளது. இந்தியாவின் நடுத்தர மக்கள் மக்கள் தொகை ஒஸ்ரேலியாவின் மொத்த மக்கள் தொகையிலும் அதிகமானதாகும். அத்துடன் திறன் மிக்க தொழிலாளர்களையும் இந்தியா கொண்டுள்ளது. இத்தனை இருந்தும் ஊழல் மிக்க அரசும் அரச ஊழியர்களும் இந்தியப் பொருளாதாரத்தை முன்னேறவிடாமல் செய்கின்றனர்.

செல்வாக்கிழந்த தேசியத் தலைமை
இந்தியாவின் சிறந்த தேசியத்  தலைவர் என்று சொல்லும் படியாக ஒருவரும் இப்போது இல்லை. அரசியலில் மாநிலக் கட்சிகள் அதிக செல்வாக்குப் பெற்று வருகின்றன. தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலை ஆளும் காங்கிரசுக் கட்சிக்கு அடுத்த தேர்தலில் தோல்வியடையச் செய்யும். பல கட்சிகள் கொண்ட கூட்டணி அரசு அமையும் போது அரசியல் திடநிலை கிடைக்குமா?

Sunday, 9 June 2013

புதிய இணையவெளிப் போர்த் திட்டத்திற்கு உத்தரவிட்டார் ஒபாமா

Presidential Policy Directive 20 என்னும் தனது கொள்கை கட்டளை இலக்கம் 20 இன் படி அமெரிக்க அதிபர் ஒபாமா இணையவெளிப்போருக்கான புதிய முறைகளை வகுக்கும் படி அமெரிக்கப் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டதாக செய்திகள் கசிந்துள்ளன. இணையவெளி பாதிப்பு நடவடிக்கைத் தாக்குதல் Offensive Cyber Effects Operations (OCEO) என்னும் பெயரிட்ட திட்டம் ஒன்று வகுக்குபடி கட்டளையிடப்பட்டுள்ளது என்கிறது கார்டியன் பத்திரிகை.

இணையவெளித் திருட்டு தாக்குதல்களுக்கு எதிரான பன்னாட்டுச் சட்டங்களை இயற்றுவதும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவின் படைத்துறை மற்றும் தொழிற்துறை இரகசியங்களையும் தொழில்நுட்பங்களையும் சீனா இணையவெளியூடாகத் திருடி வருகிறது எனத் தொடர் குற்றச் சாட்டுக்கள் வெளிவரும் நிலையில் ஒபாமா இந்த 18 பக்கங்கள் கொண்ட உத்தரவை வழங்கியுள்ளார்.

அமெரிக்க இணையவெளியில் நடக்கும் ஊடுருவல்களில்(hacking) பெரும்பாலானவை சீனாவில் இருந்தே மேற்கொள்ளப்படுகின்றன என அமெரிக்காவில் இருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதை மறுக்கும் சீனா தானது நாட்டிலும் இணையவெளி ஊடுருவல்கள் பல மேற்கொள்ளப்படுகின்றன என்கிறது.அமெரிக்காவில் சீனப் பிரதமரைச் சந்திக்க முன்னர் பராக் ஒபாமா இணையவெளி ஊடுருவல்களைப்பற்றி அவருடனான பேச்சு வார்த்தையின் போது முன்வைக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அமெரிக்கப் பாதுகாப்புத்துறை தொலைபேசி நிறுவனங்கள், சமூக இணையத் தளங்கள் போன்றவற்றின் மூலம் பாரிய தகவல் திருட்டுக்களைச் செய்வது பற்றிய செய்திகள் வெளிவந்த படியால் அது ஓரங்கட்டப்பட்டுவிட்டது. பொருளாதாரரீதியான இணையவெளித் திருட்டுக்களைப்பற்றி மட்டுமே சீன-அமெரிக்கப் பேச்சு வார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டது.

அண்மைக்காலங்களாக உலகெங்கும் பல நாடுகள் தமது இணையவெளிப் போரணிகளை அமைத்து வருகின்றன. ஈரான், வட கொரியா போன்ற நாடுகள் இணையவெளிப் போர் வலிமையை பெரிதும் அதிகரித்துள்ளன. அமெரிக்க நிதிநிறுவனங்களில் ஈரான் இணையவெளித்தாக்குதல்களை மேற்கொண்டதாக நம்பப்படுகிறது. ஈரான் இவற்றிற்கு ஈடுகொடுத்துச் சமாளிக்கும் திறனை அமெரிக்கா வளர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க தெரிவிக்கிறது.  சவுதி அரேபியாவின் இணையத் தளங்களிலும் ஈரான் தாக்குதல்கள் நடாத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா தனது மத்திய கிழக்கு நட்பு நாடுகளுடன் இணைந்து இணைய வெளிப் போர்முனைய உருவாக்கவிருக்கிறது. சீனாவும் இரசியாவும் உலக வர்த்தகத்திலும் உறவுகளிலும் பெரிதும் தங்கியிருப்பதால் அவை அமெரிக்காவுடன் இணையவெளிப்போர் தொடர்ப்பாக இணக்கப்பாடுகளைக் காணலாம். ஆனால் ஈரான், வட கொரியா போன்ற நாடுகளுடன் உடன்பாடுகள் இணக்கப்பாடுகள் போன்றவற்றை காண்பது அமெரிக்காவிற்கு சிரமமாக இருக்கிறது. ஈரான் போன்ற நாடுகள் இந்தியா, பாக்கிஸ்த்தான், பங்களாதேசம் போன்ற நாடுகளில் இருந்து கணனி நிபுணர்களை பணிக்கமர்த்தி இணைய வெளியில் பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்த முடியும். ஈரானிய அணு உலைகள் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து பல இணையவெளித் தாக்குதல்களை மேற்கொண்டன். இது தொடர்பான பதிவை இந்த இணைப்பில் காணலாம்: ஈரான் மீது இணையவெளித் தாக்குதல்.

உலகத்திலேயே அமெரிக்காதான் இணையவெளிப் போர் முறைமையின் முன்னோடியும் முதன்மையானதும் எனப்பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.
அமெரிக்காவின் புதிய முனைப்பு பற்றி இங்கு காணலாம்: அமெரிக்காவின் புதிய இணையவெளிப் போர் வியூகம்

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி போர் முனைகளை வேறு களத்தில் உருவாக்க்யுள்ளது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...