Tuesday, 17 December 2013

யஸ்வந்த் சின்ஹா: ஈழம் தொலைவில் இல்லையா அல்லது தேர்தல் தொலைவில் இல்லையா?

தமிழ் ஈழம் தொலைவில் இல்லை என இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் யஸ்வந்த் சின்ஹா தனது பாரதிய ஜனதாக் கட்சியின்  சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் புதனன்று தெரிவித்துள்ளார். இப்படி ஒரு செய்தி 14/12/2013இல் இருந்து அடிபடுகின்றது. இதைப் பார்த்தவுடன் ஈழ விடிவிற்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்.

மேற்படி செய்தி டிசம்பர் 14-ம் திகதி ஒரு ஆங்கில இணையத் தளத்தில் வெளிவந்திருந்தது. இதைத் தொடர்ந்து பல இணையத் தளங்களில் அது வந்தது. பின்னர் அதன் தமிழாக்கம் ஒரு தமிழ் இணையத் தளங்களில் வந்தது. வழமை போல பல இணையத் தளங்கள் அதை பிரதி பண்ணி விட்டன. வாழ்க கொப்பி அண்ட் பேஸ்ட். பல சமூக வலைத்தளங்களில் இந்தச் செய்து பகிரப்பட்டது. பல தமிழர்கள் இந்தச் செய்தியைப் பார்த்து தமிழீழப் போராட்டத்திற்கு இது ஒரு பெரு வெற்றி என்றும் கூறினார்கள்.

இந்தச் செய்தியின் மூலத்தைத் தேடிப் போவது நதி மூலத்தைத் தேடிப்போவது போல இருந்தது. ஒரு இணையத்தளம் செய்தி மூலம் டெக்கான் ஹேரால்ட் எனச் செய்தியின் அடியில் போட்டிருந்தது. பொதுவாக பல இணையத் தளங்கள் இப்படிச் செய்வதில்லை. ஏதோ தாமே நேரில் நின்று பார்த்து அறிக்கை கொடுப்பது போல எழுதுவார்கள்.

ஜஸ்வந்த் சிங் புதன்கிழமை இப்படித் தெரிவித்திருந்தார் என்று இணையத் தளங்கள் செய்தி போட்டிருந்தன. அச்சு ஊடகங்கள் செய்தி வெளியிடும் போது செய்தித் தலைப்பின் கீழ் திகதியையும் செய்தி கிடைத்த இடத்தையும் முதல் போடுவார்கள். செய்திக்குள் நேற்று சொன்னார் என்று இருந்தால் நீங்கள் வாசிக்கும் திகதிக்கு முதல் நாள் என்று நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. செய்தித் தலைப்பின் கீழ் உள்ள திகதிக்கு முதல் நாள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இது அச்சு ஊடகங்களில் ஒரு அடிப்படை விதி. ஜஸ்வந்த் சிங் சொன்ன செய்தியை மொழி பெயர்த்து வெளிவிட்ட ஊடகங்கள் செய்தி மூலத்தின் திகதியை வெளிவிடவில்லை. சில இணையத் தளங்கள் ஜஸ்வந்த் சிங் என்றும் குறிப்பிட்டிருந்தன. சில ஜஸ்வந்த் சின்ஹா என்றன.

டெக்கான் ஹெரால்டில் தேடிப்போனால் யஸ்வந்த் சின்ஹா சென்னையில் ஒரு திருமண மண்டபத்தில் 2013 ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாம் திகதி புதன்கிழமை நடந்த கூட்டத்தில் இப்படிப் பேசியிருந்தார் யஸ்வந்த் சின்ஹா. அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசில் டிசம்பர் 1998இல் இருந்து ஜூன் 2002 வரை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் ஜஸ்வந்த் சிங்.  இவரைத் தொடர்ந்து 2002-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து 2004-ம் ஆண்டு மே மாதம் வரை  அடல் பிஹாரி வாஜ்பாயின் அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் யஸ்வந்த் சின்ஹா. தமிழ் ஈழம் தொலைவில் இல்லை எனக் கூறியவர் இரண்டாமவரான யஸ்வந்த் சின்ஹா.

பல பழைய தமிழ்ப்பாடல்களை மீள்கலவை(ரீமிக்ஸ்) என்று சொல்லி திரும்பவும் தமிழ்த் திரைப்படங்களில் இப்போது வெளிவிடுகின்றார்கள். அரசியலிலும் பழைய செய்திகளை மீள்பதிவு செய்து விடுகின்றார்களா? ஏப்ரில் மாதம் யஸ்வந்த் சின்ஹா ஆற்றிய உரை மீண்டும் இப்போது வெளிவிடுவது ஏன்? அதுவும் ஏதோ நேற்றுக் கூறிய மாதிரி செய்திகள் விடுவது ஏன்?

யஸ்வந்த் சின்ஹா இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போதுதான் விடுதலைப் புலிகளிடம் ரணில் விக்கிரமசிங்க இடைக்காலத் தன்னாட்சி சபையை வழங்கப் போகிறார் என்று கொழும்பிற்கு அப்போது இந்தியத் தூதுவராக இருந்த நிருபாமா ராவ் துரிதமாகச் செயற்பட்டு ரணிலின் அமைச்சரவையைக் கலைத்தார். சந்திரிகாவையும் ஜேவிபியையும் இணைத்து கூட்டணி அமைக்கப்பட்டது. இதற்கு முன்னின்று உழைத்தவர் நிருபாமா என்று சொல்லப்பட்டது. 2004இல் ஒரு இடைக்கால தன்னாட்சி அதிகார சபையையே தமிழர்களுக்கு கொடுக்கக் கூடாது என வரிந்து கட்டிக் கொண்டு நின்றவர்கள் இப்போது தமிழீழம் பற்றிக் கதைத்ததை மீண்டும் செய்திப்படுத்துவது ஏன்?

தேர்தல்தான் வெகு தொலைவில் இல்லை
இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தல் வெகு தொலைவில் இல்லை என்பதால்தான் இப்படிப் பட்ட செய்திகள் மீளப் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. இது ஒரு முன்னோட்டம் மட்டுமே. இன்னும் பல இணைய வெளித் தாக்குதல்கள் தமிழர்களைத் திசை திருப்பும் நோக்கத்துடன் நடத்தப்படலாம். இந்தியாவின் அடுத்த பொதுத் தேர்தலில் பாரத ஜனதாக் கட்சியினரின் தலைமை அமைச்சர் வேட்பாளரான நரேந்திர மோடி தனக்கு ஆதரவான பிரச்சாரத்திற்கு என ஓர் இணைய வெளிப் படையை உருவாக்கியுள்ளார். இருபதிற்கும் முப்பதிற்கும் இடைப்பட்ட வயதைக் கொண்ட தகவற் தொழில் நுட்ப்பம் படித்த இளைஞர்கள் பல்லாயிரக் கணக்கானவர்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளனர். இணையவெளி இந்துக்கள் அதாவது சைபர் ஹிண்டூஸ் என்றழைக்கப்படும் இவர்கள் சமூக வலைத்தளங்களான டுவிட்டர் பேஸ்புக் மூலம் திரட்டப்படுகின்றனர். இவர்கள் மாதம் ஒரு முறை ஒன்று கூடி அடுத்த தேர்தலில் செய்ய வேண்டியவை இந்துத்துவக் கொள்கையை எப்படி நிலை நிறுத்துதல், இந்தியாவின் தற்போதைய நிலைமை, இந்தியாவின் எதிர்காலம், போன்றவற்றைப்பற்றி கலந்து உரையாடுகின்றார்கள். உள்ளூரிலும் இவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள்.

இணைய வெளி இந்துக்கள் பாரதிய ஜனதாக் கட்சி சார்பாகச் செய்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் குஜராத்தில் மோடியின் ஆட்சியைப் பற்றி மிகைப்படுத்தப் பட்ட தகவல்களைப்பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.  மோடியின் பொதுமக்கள் தொடர்புக் கட்டமைப்பு என்றும் உறங்குவதில்லை அது தேர்தல் நெருங்க நெருங்க மிகவும் அதிகமாகச் செயற்படுகின்றது என்பதை காங்கிரசுக் கட்சியினரும் உணர்ந்துள்ளனர். இமயமலையை ஒட்டிய உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி இருந்த பதினையாயிரம் குஜராத்திரியர்களை மோடி போய் மீட்டுக் கொண்டு வந்தார் என்ற பொய்ச் செய்தி கூட திட்டமிடப்பட்டுப் பரவ விடப்பட்டது. ஆனால் இந்தியத் தேர்தலில் பொய்யான செய்திகள் பெரும் தாக்கத்தை விளைவிக்கும் என்பதை 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கருணாநிதியின் உண்ணாவிரத நாடகத்தின் மூலம் நாம் நன்கு அறிந்து கொண்டோம்.  பாரதிய ஜனதாக் கட்சியினரும் தமிழர்களை நோக்கி பல உணர்ச்சி மிக்க பொய்ச் செய்திகளை பரப்பலாம்.

2013 ஏப்ரல் மாதம் சென்னையில் உரையாற்றிய யஸ்வந்த் சின்ஹா தனிய ஈழத்துடன் மட்டும் நின்று விடவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காங்கிரசுக் கட்சியின் மேலும் இரு பலவீன மையங்களான கச்சதிவையும் மீனவர் பிரச்சனையையும் பற்றியும் கருத்துத் தெரிவித்திருந்தார். கச்சதீவை இந்தியா மீடக வேணும் என்றார். "கச்­ச­தீவை நாம் மீளப்­பெற்றால் எமது மீன­வர்கள் பாதிக்­கப்­பட மாட்­டார்கள். இதன்­மூலம் இந்­தியக் கடற்­ப­ரப்பை நாங்கள் கட்­டுப்­ப­டுத்த முடியும்".

இப்படிப்பட்ட வாசகங்களை இவர்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் கூறுவார்கள். ஆனால் இந்துத்துவாக் கொள்கைப்படி சிங்களமும் தமிழும் சமஸ்கிருதத்தில் இருந்து பிறந்த மொழிகள். இரண்டையும் நாம் எம் பிள்ளைகள் போல் பார்க்க வேண்டும். தமிழர்கள் இராவணனின் வழித் தோன்றல்கள். சிங்களவர் இராமருக்கு உதவிய வானரங்களின் வழித் தோன்றல்கள்.

சென்னைக்கு 2013 ஏப்ரலில் பயணம் மேற்கொண்ட யஸ்வந்த் சின்ஹா தனி ஈழத்துடன் நிற்கவில்லை. இலங்கை தொடர்பாக பாரதிய ஜனதாக் கட்சி தனது கொள்கையை மாற்றும் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால் கட்சியின் உயர் பீடம் கூடி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஈழம் தொலைவில் இல்லை என்று சொல்வதில் இருந்து தெரிவது தேர்தல் தொலைவில் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. நெடு மாறன் ஐயா போல் ஒருவர் இந்தியாவின் உள்த்துறை அமைச்சராகவும் வைக்கோ ஐயா போன்ற ஒருவர் இந்திய வெளிநாட்டுத் துறை அமைச்சராகவும் தோழர் சீமான் அல்லது தோழர் திருமுருகன் காந்தி போன்ற ஒருவர் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் வந்து மூன்று ஆண்டுகளின் பின்னர் தான் தமிழர்களுக்கு சார்ப்பாக் இந்தியா செயற்படும். அதுவரை இந்திய அள்ளி வைப்புக்கள் தொடரும். 2014இல் பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்து அதில் சுப்பிர மணிய சுவாமி என்னும் தமிழின விரோதி வெளிநாட்டமைச்சில் ஏதாவது பதவி பெற்றால் ஈழத்தில் தமிழர்களை இந்தியா முற்றாக அழித்துவிடும்.
http://www.deccanchronicle.com/130404/news-politics/article/tamil-eelam-not-far-away-yashwant-sinha

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...