Monday, 25 November 2013

ஈரானுடனான உடன்பாடும் மத்திய கிழக்குக் கேந்திரோபாயமும்

ஈரானுடனான அணுக்குண்டுப் பேச்சு வார்த்தை முறியாமல் தொடர்கின்றது. இரண்டாவது சுற்றுப் பேச்சு வார்த்தையில் ஒரு இடைக்கால உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த உடன்பாடு மத்திய கிழக்கில் நாடுகளிற்கும் இடையிலான உறவுகளையும் கேந்திரோபாயச் சமநிலையையும் பாதிக்குமா என்ற கேள்வி எழும்பியுள்ளது.
அமெரிக்கா ஈரானுடன் பேச்சுவார்த்தையில் P5+1 எனப்படும் குழுவாக ஈடுபடுகின்றது. இதில் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளான(P5) ஐக்கிய அமெரிக்கா, இரசியா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகியவற்றுடன் ஜேர்மனியும் இணைந்து P5+1 என்னும் குழு அமைக்கப்பட்டு ஜெனிவாவின் ஈரானின் யூரேனியம் பதப்படுத்தல் தொடர்பாகப் பேச்சு வார்த்தை இரண்டு சுற்றுக்கள் நடந்தன. முதல் சுற்று நவம்பர் 7-ம் திகதி நடந்தது அதில் முக்கிய உடன்பாடுகள் எட்டப்படவில்லை. நவம்பர் 20-ம் திகதி முதல் 24-ம் திகதி வரை நடந்த பேச்சு வார்த்தையில் சில உடன்பாடுகள் எட்டப்பட்டன. அதன்படி ஈரான் 20% இற்கு யூரேனியம் பதப்படுத்துவதை நிறுத்திக் ஒத்துக் கொண்டுள்ளது. 20% பதப்படுத்திய யூரேனியத்தில் இருந்து இலகுவாக அணுக்குண்டை உற்பத்தி செய்ய முடியும். ஜெனீவாவில் நவம்பர் 24-ம் திகதி காலை ஏற்பட்ட உடன்பாடுகளின் படி:
1. ஈரான் 5% மட்டும் யூரேனியத்தைப் பதப்படுத்தலாம்.
2. ஈரான் தனது அணு ஆய்வு தொடர்பான எல்லா நிலையங்களிலும் ஐக்கிய நாடுகள் சபையின் அணு நிபுணர்கள் குழு தினசரி ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும்.
3.
Arak இல் உள்ள புளூட்டொனியம் உற்பத்தி செய்யக் கூடியதாகக் கருதப்படும் கனநீர் பதப்படுத்துவதை ஈரான் உடன் நிறுத்த வேண்டும்.
4. ஈரான் மீது அடுத்த ஆறு மாதங்களுக்கு புதிய பொருளாதாரத் தடைகள் எதுவும் செய்யப்படமாட்டாது.
5. முடக்கி வைக்கப்பட்டிருந்த ஈரானின் ஏழு பில்லியன் (எழு நூறு கோடி) அமெரிக்க டொலர்கள் ஈரானுக்கு வழங்கப்படும். 
6. ஈரான் தன்னிடம் உள்ள பதப்படுத்தப்பட்ட யூரேனியக் கையிருப்பை மேலும் பதப்படுத்த முடியாதபடி மாற்ற வேண்டும்.

ஈரானுடனான உடன்பாட்டை எதிர்க்கும் முக்கிய இரு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியா உடன் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.  அண்மைக்காலங்களாக சவுதி அரேபியா எகிப்துடன் இணைந்து இரசியாவுடன் ஒரு நெருங்கிய உறவை ஏற்படுத்தும் தன் நகர்வுகளை ஆரம்பித்து விட்டது. ஆனால் மற்ற நாடான் இஸ்ரேல் ஜெனிவாவில் P5+1 நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட இடைக்கால உடன்பாடு தொடர்பாக தனது கடும் ஆத்திரத்தை வெளிவிட்டுள்ளது. இந்த உடன்பாடு உலகத்தின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி உள்ளது என்றும் ஒரு மிகப்பெரிய சரித்திரத் தவறு என்றும் இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ தெரிவித்துள்ளார். ஆனால் அமெரிக்க வெளியுறவிற்குப் பொறுப்பான அரசுச் செயலர் ஜோன் கெரி இந்த உடன்பாடு உலகத்தையும் இஸ்ரேலையும் பாதுகாக்கும் எனத் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ஈரானிடம் இருக்கும் எல்லாப் பதப்படுத்தப்பட்ட யூரேனிய இருப்புக்களையும் அழிக்க வேண்டும் ஈரான் எந்த ஒரு யூரேனியப் பதப்படுத்தலையும் செய்யக்கூடாது என்று கருதுகின்றது. ஆனால் ஈரான் தனக்கும் யூரேனியப் பதப்படுத்தும் உரிமை மற்ற நாடுகளுக்கு உள்ளது போல் உள்ளது, தான் ஒரு கீழ்த்தர நாடு அல்ல என்கின்றது. இஸ்ரேல் ஏற்கனவே அணுக்குண்டைத் தயாரித்து விட்டது என்று பலர் நம்புகின்றனர். இதை இஸ்ரேல் மறுக்கவும் இல்லை உறுதி செய்யவுமில்லை. ஈரான் அணுக்குண்டு உற்பத்தி செய்யக் கூடிய நிலையை அடைந்தால் தான் ஒரு தலைப்பட்சமாக ஈரான் மீது தாக்குதல் நடத்துவேன் என இஸ்ரேல் ஏற்கனவே எச்சரித்து விட்டது. ஜெனிவாவில் ஈரானியத் தரப்பினர் சிரித்த முகத்துடன் அமெரிக்கத் தரப்பினருடன் கட்டித் தழுவிக் கொண்டாடுவதைப் பார்த்து இஸ்ரேலியர் விசனம் அடைந்துள்ளனர். அத்துடன் அமெரிக்கத் தரப்பினரும் ஈரானியத் தரப்பினரும் கடந்த பல மாதங்களாக இரகசியப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்த்ததும் இஸ்ரேலியரகளை ஆத்திரப்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைப் பொறுத்தவரை அவர் ஈரானுடன் ஒரு போரை விரும்பவில்லை. ஈரானை அணுக்குண்டு தயாரிப்பதில் இருந்து தடுக்க 1. இஸ்ரேல் ஈரானிய அணு ஆய்வு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும். 2.
அமெரிக்கா ஈரானிய அணு ஆய்வு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும். 3 அல்லது இரு நாடுகளும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டும். ஒபாமா இதில் எதையும் விரும்பவில்லை.  இது அமெரிக்காவின் மிக நெருக்கமாக மிக நீண்டகால நட்பு நாடுகளாக இருக்கும் இஸ்ரேலையும் சவுதி அரேபியாவையும் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. ஈரானுடனான பேச்சு வார்ததையை விரும்பாதவர்கள் இந்தப் பேச்சு வார்த்தையை கரடியுடன் நடனமாடுவதற்கு ஒப்பிடுகின்றனர். நடனம் இடையில் முறிந்தால் என்ன நடக்கும் என்று தெரியாது என்பதையிட்டு அவர்கள் அஞ்சுகின்றனர். ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பிரச்சனை இன்னும் பல ஆண்டுகளுக்குத் தொடரும் என அவர்கள் எச்சரிக்கின்றனர். ஈரானுடனான பிரச்சனை வெறும் யூரேனியம் பதப்படுத்தல் பிரச்சனை மட்டுமல்ல. ஈரானின் ஆதரவுடன் செயற்படும் தீவிரவாதக் குழுக்கள் உலக அமைதிக்குப் பெரும் அச்சுறுத்தல்கள் எனவும் அவர்கள் எச்சரிக்கின்றார்கள். பொருளாதாரத் தடையில் இருந்து தற்காலிக விடுதலை பெற்ற ஈரான் ஆறு மாதங்களில் தனது பொருளாதாரத்தை மேம்படுத்தி விட்டால் பின்னர் பேச்சு வார்த்தையில் ஈரான் அதிக வலுவுடன் ஈடுபடலாம் என அவர்கள் கருதுகிறார்கள்.

ஐரோப்பாவின் அதிகரித்த ஈடுபாடு

ஈரானுடனான பேச்சு வார்த்தையின் போது பிரான்ஸ் மற்ற நாடுகளும் பார்க்க கடுமையான நிலைப்பாட்டை எடுத்தது. அமெரிக்கா ஈரானுடனான வர்த்தகத்தைக் கருத்தில் கொண்டு சில விட்டுக் கொடுப்புகளைச் செய்யத் தயாராக இருந்த போதும் பிரான்ஸ் எந்த வித விட்டுக் கொடுப்புக்களையும் செய்யாமல் இருந்தது. பல அமெரிக்க ஊடகங்கள் ஜெனிவாப் பேச்சு வார்த்தை குழம்பினால் அதற்கு பிரான்ஸே காரணம் எனக் குற்றம் சாட்டின. பிரித்தானிய இராசதந்திரியும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறை ஆணையாளருமான கதரின் அஸ்டன் திரைமறைவில் மிகத் திறமாகச் செயற்பட்டு உடன்பாடு ஏற்படுவதில் கடுமையாக உழைத்தார் என்ற பாராட்டைப் பெற்றுள்ளார். இவர் அமைதியாகவும் சாந்தமாகவும் செயற்பட்டு காரியத்தை சாதித்துள்ளார். இறுதி முடிவு எடுக்கும் கூட்டத்தில் ஈரானிய வெளிநாட்டமைச்சருடன் ஜோன் கெரியும் கதரின் அஸ்டனும் மட்டுமே ஈடுபட்டனர்.

சவுதி அரேபியாவின் அணுக்குண்டு இறக்குமதி
லிபியா, துனிசியா, அல்ஜீரியா, எகிப்து ஆகிய நாடுகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சவுதி அரேபியாவின் முக்கிய எரிபொருள் வளப் பிரதேசங்களைத் தான் கைப்பற்ற வேண்டும் என்ற கனவு ஈரானிய மதவாத ஆட்சியாளர்களுக்கு உண்டு என சவுதி அரேபியா கருதுகிறது. ஈரானின் இந்தக் கனவை அது அணுக்குண்டு மூலம் சாதிக்க நினைக்கிறது என்று சவுதி அஞ்சுகிறது. இதனால் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்தது போல் ஈரானையும் ஆக்கிரமிக்க வேண்டும் என சவுதி விரும்புகிறது. அமெரிக்கா-துருக்கி-ஈரான் என்ற முக்கூட்டு நட்பு உருவானால் சவுதி அரேபியா தனது மாற்றுத் திட்டமாக பாக்கிஸ்த்தானிடம் இருந்து அணுக்குண்டை இறக்குமதி செய்யும் எண்ணத்துடன் இருக்கிறது.

ஈரான், வட கொரியா ஆகிய நாடுகள் தமது அணுக்குண்டு உற்பத்தி செய்யும் மூல தொழில்நுட்ப அறிவை பாக்கிஸ்த்தானிடம் இருந்தே பெற்றன. பாக்கிஸ்த்தான் அணுக்குண்டு உற்பத்தி செய்யாமல் தடுத்திருந்தால்????

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...