Tuesday, 12 November 2013

எகிப்து அமெரிக்காவைக் கைவிட்டு இரசியாவின் கையைப் பிடிக்கிறது!

1978-ம் ஆண்டுவரை சோவியத் ஒன்றியத்தின் செய்மதி நாடாக இருந்த எகிப்து காம்ப் டேவிட் ஒப்பந்தத்தின் பின்னர் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக மாறியது. 1978இல் இருந்து எகிப்தியப் படைத்துறைக்கு அமெரிக்கா ஆண்டு தோறும் இரண்டு பில்லியன் டொலர்களை நிதி உதவியாக வழங்கி வந்தது.

2011இல் எகிப்தில் நடந்த அரபு வசந்ததில் படைத்துறையினரின் ஆட்சி கலைக்க்ப்பட்டது.  இதைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் மொஹமட் மேர்சி ஆட்சிக்கு வந்தார். அவரது ஆட்சியும் சிறப்பாக அமையாததாலும் அவர் படைத்துறையினரை ஓரம் கட்ட முயன்றதாலும் எகிப்தில் மீண்டும் படைத்துறையினர் ஆட்சிக்கு வந்தனர். இது மக்களாட்சி முறைமைக்கு எதிரானது என்றபடியால் அமெரிக்கா எகிப்தியப் படைத்துறையினருக்கு வழங்கி வந்த நிதி உதவியான இரண்டு பில்லியன்களில் 1.5 பில்லியனகள் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து எகிப்தின் படைத்துறை ஆட்சியினருக்கு அமெரிக்காமீது அதிருப்தி ஏற்பட்டது. 2013 ஒக்டோபர் 16-ம் திகதி எகிப்திய வெளிநாட்டமைச்சர் பத்ர் அப்துல் அர்ரி அமெரிக்காவிற்கும் எகிப்திற்கும் இடையிலான உறவு மோசமடைந்து விட்டது என்றார். 2013 நவம்பர் மாத முற்பகுதியில் எகிப்திற்கு அமெரிக்க அரசுத் துறைச் செயலர் ஜோன் கெரி பயணம் செய்தார்.  அப்பயணம் இரு நாடுகளிற்கும் இடையிலான உறவைச் சீர் செய்ய வில்லை.

எகிப்திற்கு அமெரிக்கா செய்து வந்த நிதி உதவியை நிறுத்தியதை இஸ்ரேலும் விரும்பவில்லை. அமெரிக்கா பெரும் கேந்திரோபாயத் தவறைச் செய்வதாக ஒபாமா நிர்வாகத்திடம் இஸ்ரேல் எடுத்துச் சொல்லியது. எகிப்து அமெரிக்காவில் தங்கியிருப்பது குறைந்தால் அது எகிப்தும் இஸ்ரேலும் செய்த காம்ப் டேவிட் சமாதான உடன்படிக்கையை ஆபத்திற்கு உள்ளாக்கும் என இஸ்ரேல் அஞ்சுகிறது. அமெரிக்கா வழங்கும் நிதியுதவியில் பெரும்பகுதியை எகிப்து அமெரிக்காவில் இருந்து படைக்கலங்களை இறக்குமதி செய்யவே பயன்படுத்தி வந்தது. எகிப்தின் கல்வித்துறை, மருத்துவத்துறை, பயங்கரவாத ஒழிப்பு, படைகலன்களுக்கான உதிரிப்பாகங்கள், எல்லைப் பாதுகாப்பு போன்றவற்றிற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவி செய்யும் என அமெரிக்கா சொல்கிறது.

சவுதி அரேபியாவின் ஏற்பாடு
இஸ்ரேலிய அச்சத்தை நியாயப்படுத்தும் வகையில் இரசிய கடற்படையின் சீர்வேக ஏவுகண தாங்கிக் கப்பலான வாரியக் எகிப்தின் அலெக்சாண்டிரியா துறைமுகத்தை 11-11-2013-ம் திகதி சென்றடைந்தது. அந்தக் கப்பல் எல்லாவித கடற்படை மரியாதையுடனும் வரவேற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரசிய வெளிநாட்டமைச்சர் செர்கெவ் லாவ்ரோவும் பாதுகாப்பு அமைச்சர் சேர்கி சொய்குவும் (Foreign Minister Sergey Lavrov and Defense Minister Sergey Shoigu) 13-11-2013-ம் திகதி எகிப்திற்குப் பயணம் செய்கின்றனர். எகிப்து நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான படைக்கலங்களை இரசியாவில் இருந்து இறக்குமதி செய்ய முயல்கிறது. எகிப்தின் அஸ்வான் அணைக்கட்டை மேம்படுத்தவும் மின் பிறப்பாக்கிகளை நிறுவவும் இரசியா உதவி செய்யும் பதிலாக எகிப்த்தின் மத்தியதரைக் கடல் துறைமுகம் ஒன்றை இரசியா பயன்படுத்த எகிப்து அனுமதி வழங்க வேண்டும். இந்த ஏற்பாடுகள் யாவற்றையும் செய்தது சவுதி அரேபியாவின் உளவுத் துறையின் இயக்குனரான இளவரசர் பந்தர் பின் சுல்தான் என்பதுதான் ஆத்திரமளிக்கும் விவகாரமாகும். இளவரசர் பந்தர் பின் சுல்தான் 2013 ஜூலை மாதம் இரசியாவிற்குப் பயணம் செய்த போது விளாடிமீர் புட்டீனுடன் இந்த உடன்பாடு எட்டப்பட்டதாம்.

ஐக்கிய அமெரிக்காவைப் பொறுத்தவரை இனி வரும் காலங்களில் எரிபொருள் உற்பத்தியில் தன்னிறைவு கண்டுவிடும்.  அதற்கு மத்திய கிழக்கின் முக்கியத்துவம் குறைந்து விட்டது. எகிப்து அமெரிக்காவைக் கைவிட்டு இரசியாவின் கையைப் பிடிக்கிறதா அல்லது அமெரிக்கா, சவுதி அரேபியா, இரசியா ஆகியவை இணைந்து சீனாவை மத்தியகிழக்கில் ஓரம் கட்ட சதி செய்கின்றனவா?No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...