Monday, 15 July 2013

இணையவெளி(cyber space) உளவும் தகவல் திருட்டும்

எட்வேர்ட் ஸ்னோடன் இரசியாவின் கவர்ச்சி மிக்க பெண் உளவாளி அன்னா சப்மனின் காதலி என்றும் அவர் பத்து பில்லியன் டாலர்களுக்கு அமெரிக்க படைத்துறை இரகசியங்களை இரசியாவிற்கு விற்றார் என்றும் சொல்கிறது Internet Chronicle. அமெரிக்க வல்லாதிக்கமென்னும் கோலியாத்திற்கு எதிரான சிறுவன் டேவிட் என ஸ்னோடனைக் காண்பிக்கின்றது இன்னொரு ஊடகம்.

உலக அரங்கில் ஒன்றிற்கு ஒன்று குழிபறிக்கும் தன்மை நாடுகளிடையே அதிகரித்துக் கொண்டே போகின்றது. ஒரு நாட்டு மற்ற நாட்டுக்குள் சென்று உளவு பார்ப்பது தொன்று தொட்டே இருந்து வருகிறது. இதை ஐந்தாம் படை என்பர். வள்ளுவரும் இதை:        
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.
இதன் பொருள்: பகைவர், நண்பர், பொதுவானவர் என எல்லாரிடத்திலும் நிகழ்வான எல்லாவற்றையும், எப்போதும் ஒற்றால் விரைந்து அறிந்து கொள்ள வேண்டியது அரசின் வேலை.

பணம் கொடுத்து உளவுபார்த்தல், அழகிய பெண்களை வைத்து உளவு பார்த்தல், அழகிய ஆண்களை வைத்து உளவு பார்த்தல் இப்படி மாறி வந்த உளவு பார்க்கும் முறை. தகவல் தொழில் நுட்பப் புரட்சியுடன் புதிய வடிவம் பெற்று விட்டது.

ஆளும் கட்சிகள் நாட்டில் தமது செல்வாக்கு எப்படி என்பதை அரச உளவுத் துறையை வைத்துக் கணிப்பிடுகிறது. தேர்தலின் போதும் ஆளும் கட்சி அரச உளவுத் துறையை தனது தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளும். இவை சில நாடுகளில் நடக்கின்றன.

உளவு பார்த்தல் என்பது நாடுகளுக்கு மட்டும் உரியதல்ல. தனியார் நிறுவனங்களும் தமது போட்டி நிறுவனங்களை உளவு பார்க்கின்றன. தனிப்பட்டவர்களும் ஒருவரை ஒருவர் உளவு பார்த்துக் கொள்கின்றனர். மனைவியை கணவன் உளவு பார்ப்பதும் மனைவியைக் கணவன் உளவு பார்ப்பதும் உண்டு.

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் உளவு பார்த்தலுடன் தகவல் திருட்டும் இணைந்து கொண்டது.

பெரு நகரங்களில் தெருவின் இறங்கினால் எம்மை இரசியக் காணொளிப் பதிவுகள் கண்காணிக்கின்றன. வண்டிகளை ஓட்டிச் செல்லும் போது வண்டிகளின் வேகங்கள் பதிவு செய்யப்படுகின்றன. பல நாடுகள் தமது குடிமக்களின் எல்லா தொலைபேசி அழைப்புகளையும் பதிவு செய்து கொள்கின்றன. நாட்டில் ஏதாவது குற்றச் செயல்கள் நடந்தால் அதை வைத்து குற்றவாளிகளை உளவுத் துறை கண்டுபிடிக்கிறது.

எட்வேர்ட் ஸ்னோடன் அமெரிக்க மக்கள் அனைவரையும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகவரகம் உளவு பார்க்கிறது என்பதை முதலில் அம்பலப்படுத்தினார். இப்படிப்பட்ட உளவு பார்த்தலால் நாட்டில் நடைபெற இருந்த பல பயங்கரவாதத் தாக்குதல்களைத் தாம் முறியடித்ததாக அமெரிக்க அரசு சொன்னது. பின்னர் எட்வேர்ட் ஸ்னோடன் அமெரிக்க எல்லா நாடுகளையும் உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டினார்.  இதை ஒட்டி உண்மையில் ஆத்திரம் அடைந்தவை தென் அமெரிக்க நாடுகள் மட்டுமே. தென் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பான மெர்குசூரின் (Mercosur) கூட்டத்தில் ஒரு நாள் முழுக்க அமெரிக்க உளவு பற்றி விவாதிக்கப்பட்டது. மற்ற நாடுகள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி தெரிவித்தது. இந்தியாஆச்சரியம் தெரிவித்தது. சீனா ஆட்சேபித்தது. தென் அமெரிக்க நாடுகளான எக்குவேடர். அமெரிக்காவிற்கு அச்சப்படாமல் நிக்கரகுவா, வெனிசுவேலா போன்ற நாடுகள் எட்வேர்ட் ஸ்னோடனுக்கு புகலிடம் தர முன்வந்துள்ளன. அமெரிக்க உறவில் பாதிப்பு ஏற்படும் என அஞ்சி இரசியாவே ஸ்னோடனுக்கு புகலிடம் கொடுக்கத் தயங்கிக் கொண்டிருக்கிறது.

எட்வேர்ட் ஸ்னோடன் தனது நான்கு மடிக்கணனிகளில் உள்ள அமெரிக்கப் படைத்துறை இரகசியங்களை இரசியாவிற்கு விற்றார் என்ற குற்றச் சாட்டு இப்போது முன் வைக்கப்பட்டுள்ளது. கடற்படுக்கையில் அணுப்படைக்கலன்கள் கொண்ட தளத்தை அமெரிக்கா அமைக்கவிருக்கும் திட்டமும் அதன் இரகசியங்களும், UFO எனப்படும் பறக்கும் தட்டுகள் பற்றிய இரகசியங்களும் அந்த நாலு மடிக்கணனிகளில் இருக்கின்றன எனப்படுகிறது.

சட்டங்களுக்கு முரணான தகவல் திருட்டு
பின் லாடன் 2001இல் அமெரிக்க இரட்டைக் கோபுரத்தை தாக்கியதற்கு பல ஆண்டுகளுக்கு  முன்னரே சதாம் ஹுசேன் இரட்டைக் கோபுரத்தைத் தாக்க முற்பட்டார் என்கிறார் ஸ்னோடன். விக்கிலீக் அமெரிக்காவிற்கு ஏற்படுத்திய பாதிப்பிலும் பார்க்க மோசமான பாதிப்பை ஸ்னோடனால் ஏற்படுத்த முடியும். விக்கிலீக்ஸ் அமெரிக்க அரசதந்திரிகளிடையான தகவற்பரிமாற்றத்தை மட்டுமே வெளியிட முடிந்தது. இரசிய விமான நிலையத்தில் இருந்து கொண்டு மனித உரிமையாளர்களுடன் உரையாடிய ஸ்னோடன் தான் நீதி மன்ற தேடுதல் ஆணையின்றி உலகின் எப்பகுதியிலும் புகுந்து தேடித் தகவல்களைத் திரட்டக் கூடியவாராக இருந்தார் என்றார்.தான் செய்தது அமெரிக்க அரசமைப்பு யாப்பின் 4வது 5வது திருத்தங்களுக்கு முரணானது என்றும், வியன்னா உடனபடிக்கைக்கு முரணானது என்றும், உலக மனித உரிமைப் பிரகடனத்திற்கு முரணானது என்றும் ஸ்னோடன் தெரிவித்தார். இரசிய உளவாளி அன்னா சப்மன் தான் ஸ்னோடனைத் திருமணம் செய்ய விரும்புவதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இணைய வெளித் தகவல் திருட்டுக்களுக்கு அஞ்சிய இரசியா தனது முக்கிய அரச பணிமனைகளில் மீண்டும் பழைய தட்டச்சுப் பொறிகளை பயன்படுத்தத் தொடங்கி விட்டது.

சீனாவில் அமெரிக்காவின் கைவரிசை
சீனாவில் அரச ஊழியர்கள், பொதுவுடமைக் கட்சிச் செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் எனப் பெரும்பாலானோர் தமது த்கவற் பரிமாற்றத்திற்கு SMS எனப்படும் குறுந்தகவல்களிலேயே பெரிதும் தங்கியுள்ளனர். 2012-ம் ஆண்டு சீனாவில் 90 கோடி குறுந்தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன. சீனக் கைப்பேசி நிறுவனங்களின் கணனிகளை அமெரிக்கா ஊடுருவி எல்லா குறுந்தகவல் பரிமாற்றங்களையும் திருடிவிட்டதாக ஸ்னோடன குற்றம் சாட்டுகிறார்.

இணையவெளிப் போர் பற்றி அறிய இங்கு சொடுக்கவும்: அமெரிக்காவின் இணையவெளிப் போர்

அமெரிக்காவில் சீனாவின் கைவரிசை
அமெரிக்க தொழில்நுட்பங்களை சீனா இணைய வெளியில் ஊடுருவித் திருடுவதால் அமெரிக்காவிற்கு ஆண்டு தோறும் 300 பில்லியன் டாலர்கள் இழப்பீடும் இரண்டு மில்லியன் வேலைகள் இழக்கப்படுவதாகவும் அமெரிக்கப் பாராளமன்ற உறுப்பினர்கல் குற்றம் சாட்டுகிறார்கள். அமெரிக்கப் படைத்துறை இரகசியங்களையும் சீனா திருடி வருகிறது.

உலகில் முன்னணி நாடுகள் யாவும் இணையவெளியூடாக தகவல் திருட்டிலும், உளவு பார்த்தலிலும், தக்குதல்களிலும் ஈடுபட்டுள்ளன. இணையவெளிப்படைப்பிரிவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா இதில் அதிக அளவு ஈடுபட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவின் உலகக் காவற்துறை நிலை தகர்கப்பட்டால் சீனா கூட முறையான உலக வர்த்தகத்தில் ஈடுபட முடியாத நிலை ஏற்படும் என்பதை சீனாவும் அறியும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...