Monday, 8 July 2013

கலங்குது எகிப்து: புது ஜனாதிபதி.......புது பிரதமர்.......

எகிப்தில் நடந்த இரண்டாவது "புரட்சியில்" தோற்கடிக்கப்பட்ட நாடாக ஐக்கிய அமெரிக்காவே கருதப்படுகிறது.  பதவியில் இருந்து விலக்கப்பட்ட எகிப்திய அதிபர் மொஹமட் மொர்சியின் ஆதரவாளர்களும் இசுலாமிய தீவிரவாதிகளும் அமெரிக்கா எகிப்தியப் படைத்துறைக்கு சார்பானது என நம்புகின்றனர். மதசார்பற்றவர்கள் அமெரிக்கா மோர்சியுடன் அண்மைக்காலமாக உறவை மேம்படுத்தி வந்தது அது மோர்சிக்கு ஆதரவானது என நினைக்கின்றனர். இசுலாமிய நாடுகளில் அமெரிக்க எதிர்ப்பு விவாதம் இலகுவாகப் பரப்பப்படலாம்

எகிப்திற்கான அமெரிக்கத் தூதுவர் ஆன் பட்டெர்சன் இப்போது உலக அரசியலிலும் அமெரிக்காவிலும் கடுமையாக விமர்சிக்கப்படும் ஒருவராக இருக்கிறார்.

எகிப்திய இரண்டாம் புரட்சி பற்றிய முன்னைய பதிவுகளை காண இங்கு சொடுக்கவும்:
1. மோர்சிக்குப் பின்னர் மோசமாகும் எகிப்து
2. நாசமாகும் எகிப்தும் மோசமான அமெரிக்க வெளியுறவுக் கொள்கையும்

சிரியாவில் மூன்று ஆண்டுகளாக நூறாயிரத்திற்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்டும் ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல் மக்கள் போராடிக் கொண்டிருக்கையில் எகிப்தியர்கள் அதே காலப்பகுதியில் இரண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திவிட்டனர். 

எகிப்தின் முக்கியத்துவம்
ஆபிரிக்காக் கண்டமும் ஆசியாக் கண்டமும் எகிப்துக்கும்(ஆபிரிக்கா) ஜோர்தானுக்கும்(ஆசியா) இடையிலான எல்லையில் முத்தமிட்டுக் கொள்கின்றன. இந்த எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையிலான தரைத் தொடர்பு மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் பிரிக்கிறது. இதனால் ஒரு கடலில் இருந்து மற்றக் கடலுக்கு கப்பல்கள் போவதற்கு முழு ஆபிர்க்காக் கண்டத்தையும் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இந்த பாதையை குறுக்குவதற்கு எகிப்தில் ஃபிரெஞ்சு நிறுவனம் ஒன்றால் 1859 ஆம் ஆண்டு சூயஸ் கால்வாய் வெட்டப்பட்டது. இந்தக் கால்வாயை ஒட்டிப் போர்களும் நடந்தன. தற்போது ஆண்டொன்றிற்கு 15,000 கப்பல்கள் இக்கால்வாயூடாகப் பயணிக்கின்றன. எகிப்தும் இஸ்ரேலும் அமெரிக்க அனுசரணையுடன் 1979இல் செய்து கொண்ட காம்ப் டேவிட் உடன்படிக்கையின் பின்னர் எகிப்து ஒரு அமெரிக்க சார்பு ஆட்சியாளர்களால் ஆளப்பட்டு வருகின்றது. அமெரிக்கா எகிப்திய படைத்துறைக்கு நிதி உதவி, பயிற்ச்சி, படைக்கலன் உதவி போன்றவற்றைத் தாராளமாக வழங்கி எகிப்தை தனது புது-காலனித்துவ நாடாக்கிவிட்டது. 

அரபு வசந்தம்
அமெரிக்காவும் இசுலாமியத் தீவிரவாதிகளிம் உலகின் பல பகுதிகளில் மோதிக் கொண்டிருக்கையில் இரு தரப்பினரும் எதிர்பாராத வகையில் துனிசியாவிலும், லிபியாவிலும், எகிப்திலும், சிரியாவிலும், சவுதி அரேபியாவிலும், பாஹ்ரெயிலும் இசுலாமிய மக்கள் மதவாதத்தையும் அமெரிக்க எதிர்ப்புவாதத்தையும் ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு தமது நாட்டு ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தனர்.  ஆனால் அமெரிக்காவின் அணுகு முறை ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசமானதாகவே இருந்தது. எகிப்தியப் படைத்துறை அமெரிக்காவின்  தொடர்புடையதாக இருந்த படியால் எகிப்தியப் படைத்துறை ஹஸ்னி முபராக்கின் கட்டளையை ஏற்க மறுத்து அரபு வசந்தப் புரட்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடாத்தவில்லை. மற்ற நாடுகளில் கிளர்ச்சிக்காரர்கள் படைத்துறையினரின் கடுமையான அடக்குமுறையைச் சந்திக்க வேண்டி இருந்தது. 

 இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு
84 ஆண்டு மத, சமூக மற்றும் அரசியல் சேவையைக் கொண்ட இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு எகிப்தில் நன்கு கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். கூட்டுறவு முறையில் பல ஆண்டுகளாக மலிவு விலைக் கடைகள் மருத்துவ சேவைகள் போன்றவற்றை எகிப்திய மக்களுக்கு  செய்து வருகிறது. 1992-ம் ஆண்டு எகிப்தில் நிகழந்த் பூமி அதிச்சியின் போது எகிப்திய அரசிலும் பார்க்க விரைந்து செயற்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆச்சரியப் படத்தக்க வகையில் சேவை செய்தது. 2011-ம் ஆண்டு இளம் பெண் அஸ்மா மஹ்புஸ்ஸினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட எகிப்திய மக்கள் எழுச்சி மதசார்ப்பற்ற கொள்கையுடையவர்களால் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் புரட்சியில் ஹஸ்னி முபாராக் பதவி அகற்றப்பட்டு தேர்தல் என்று வந்த போது நன்கு ஒழுங்கமைக்கப்படாத மதசார்பற்றவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு வெற்றி பெற்றது. அரபு வசந்தம் சிரியாவில் சுனி-சியா முசுலிம்களின் மோதலாகத் திசை திருப்பப்பட்டது. எகிப்தில் மதவாதிகளுக்கும் மதசார்பற்றவர்களுக்கும் இடையிலான மோதலாக மாற்றப்பட்டுள்ளது. மோர்சிக்கு எதிராக அவரது எதிரிகள் ஊழல் குற்றச் சாட்டு வைத்ததாக இதுவரை எந்தச் செய்தியும் வரவில்லை.

இரண்டாம் புரட்சி
ஆட்சிக்கு வந்த இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் மொஹமட் மேர்சியால் எகிப்திய மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியவில்லை. இசுலாமிய தீவிரவாதிகளை உயர் பதவிகளில் அவர் அமர்த்தினார். 1997-ம் ஆண்டு 58 உல்லாசப் பயணிகளைக் கொலை செய்த காமால் அல் இசுலாமியா இயக்கத்தின் தலைவர் அடேல் அக் ஹயாத் உல்லாசப் பயணத்துறையில் பெரிதும் தங்கியிருக்கும் லக்சர் மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டார். இதனால் அவரது ஓராண்டு பூர்த்தி நாளில் மீண்டும் மக்கள் பெருமளவில் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். மோர்சிக்கு ஆதரவானவர்களும் மோர்சிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.  எவரும் எதிர்பாராத வகையில் எகிப்தியப் படைத்துறை மோர்சியை வீட்டுக்காவலில் வைத்து அவரது ஆட்சியக் கலைத்து உச்ச நீதிமன்ற நீதிபதியைப் நாட்டின் அதிபராக நியமித்தது. 

படைத்துறையின் நகர்வு
மோர்சியை பதவியில் இருந்து விலக்கியவுடன் அவரது ஆதரவாளர்கள் தமது ஆர்ப்பாட்டங்களைத் தீவிரப்படுத்தினர். படைத்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இருபதிற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். தாம் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவில்லை எனப் படைத்துறையினர் மறுக்கின்றனர். மோர்சியின் ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டத்தில் இசுலாமிய தீவிரவாதிகளும் இணைந்து கொள்வதால் நிலைமை மோசமாகிக் கொண்டே போனது. இதனால் படைத்துறையினரின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கலாம் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் இசுலாமிய தீவிரவாதிகளுக்கோ இசுலாமிய சகோதரத்துவ அமைப்பிற்கோ பிடிக்காத நோபல் பரிசு வென்றவரும் முன்னாள் ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி முகவரகத்தின் இயக்குனருமான எல் பராடி எகிப்தின் தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.  இது மோர்சியின் ஆதரவாளர்களை மேலும் ஆத்திரப்படுத்தியது மட்டுமல்லாமல் மோர்சிக்கு எதிரானதும் மோர்சி பதவியில் இருந்து அகற்றப்பட்டதை ஆதரித்ததுமான அல் நூர் என்னும் இசுலாமிய மதவாத அமைப்பும் கடுமையாக எல் பராடியின் நியமனத்தை கடுமையாக எதிர்க்க வைத்தது. புதிய தலைமை அமைச்சராக எல் பராடி நியமிக்கப்படுவார் என்ற அமைப்பு நிலைமையை மேலும் மோசமாக்கியது. எகிப்தியப் படைத்துறையின் அடுத்த நகர்வாக தேர்தலுக்கான உயர் சபையை விரைவில் கூட்டி 2012இல் மோர்சியைத் தெரிவு செய்த தேர்தலைச் செல்லுபடியற்றதாக்குவதாக இருக்கும். இப்படிச் செய்வதால் மோர்சியைப் பதவி விலக்கியது ஒரு படைத்துறைப் புரட்சியின் மூலமானதாக இருக்காமல் ஒரு சட்டப்படியானதாகக் காட்ட படைத்துறை முயற்சிக்கும். இதனால் அமெரிக்க சார்பான ஒரு படைத்துறை மக்களாட்சித் தத்துவப்படி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசைக் கவிழ்த்தது என்று யாரும் அமெரிக்காவைக் குறை கூறுவதைத் தவிர்க்கலாம் என அமெரிக்க நம்புகிறதா? 2011இல் நடந்த புரட்சியின் போது நடுநிலை வகித்த எகிப்தியப் படைத்துறை 2013இல் பக்கச் சார்பாக நடப்பது ஏன் என்ற கேள்விக்குப் பலர் விடை தேடுகின்றனர்.

அமெரிக்கப்படை நகர்வு
எகிப்தில் ஏற்பட்ட குழப்ப நிலையைத் தொடர்ந்து அமெரிக்கப்படைகள் இத்தாலியில் குவிக்கப்பட்டு வருகின்றன. நிலைமை மோசமடையும் நிலையில் எதையும் சமாளிக்கக் கூடிய வகையில் அமெரிக்கப்படைகள் இத்தாலிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் தமது நாடு எகிப்தில் எந்த ஒரு பிரிவினரையும் சார்ந்து இல்லை எனத் தெரிவித்துள்ளது. எகிப்தில் நடந்த இரண்டாம் புரட்சியையும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பையும் எப்படி விமர்சிப்பது என்று தெரியாமல் பல மேற்கு ஐரோப்பிய நாடுகள் தவிக்கின்றன. கூட்டுச் சேரா நாடுகள் மௌனம் சாதிக்கின்றன. எகிப்தில் நடந்தது ஒரு படைத்துறைப் புரட்சி மூலம் மக்களாட்சி முறைமைப்படி தெரிவு செய்த அரசு கவிழ்க்கப்பட்டமை என்றால் அமெரிக்கா தனது எகிப்திற்கான 1.3பில்லியன் டாலர்கள் உதவியை நிறுத்த வேண்டும். எகிப்தில் நடந்தது படைத்துறைப் புரட்சியா என்பது தொடர்பாக பெரும் விவாதம் தொடங்கியுள்ளது.

கணக்குக் காட்டுகின்றனர்
2011இல் நடந்த புரட்சிக்குத் திரண்ட மக்களிலும் பார்க்க அதிக அளவிலான மக்கள் மோர்சி பதவி விலக வேண்டும் என ஜூன் மாத இறுதியில் தஹ்ரிர் சதுக்கத்தில் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் இப்போது மோர்சி பதவி விலக்கப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் ஜூன் இறுதியில் திரண்ட மக்களிலும் பார்க்க குறைவானவர்களே என்கின்றனர். அல் ஜசீரா தொலைக்காட்சி இதற்கான படங்களையும் காணொளிகளையும் வெளியிட்டது. 

முரண்பட்ட கருத்துக்கள்
எகிப்தில் மொஹமட் மோர்சியை படைத்துறையினர் தடுத்து வைத்திருக்கும் நஸ்ர நகரில் மோர்சி ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். மோர்சி தடுத்து வைத்திருக்கும் படைத்துறைத் தலைமைச் செயலகக் கட்டிடத்தை நோக்கி அவர்கள் சென்றபோது துப்பாக்கிக் குண்டுகளும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் வெடித்தன. படைத்துறையின தம்மைத் தாக்கியதாக மோர்சியின் ஆதரவாளர்கள் சொல்கின்றனர். இது எல்லா நாட்டிலும் சொல்லப்படுமமொரு பொய். பயங்கரவாதிகள் தம்மை நோக்கிச் சுட்டதாக படைத்துறையினர் சொல்கின்றனர். ஒரு கைக்குழந்தை உட்பட சிறுவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். மோர்சியின் ஆதரவாளர்கள் தமது போராட்டத்தை மக்களாட்சிக்கான போராட்டமாக பெயரிட்டுள்ளனர். மோர்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் இசுலாமிய தீவிரவாதிகள் தம்மை மக்களாட்சிக்கான போராட்டக்காரர்களாக அடையாளப்படுத்திக் கொண்டு ஊடுருவி இருக்கலாம்.இந்தக் கலவரத்தில் முப்பதிற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். தம்மைப் பயங்கரவாதிகள் தாக்க வந்தமைக்கான காணொளி ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக படைத்துறையினர் தெரிவிக்கின்றனர். காயப்படும் மோர்சியின் ஆதரவாளர்களை எடுத்துச் செல்லவதில் இருந்து அவசர நோயாளர் காவு வண்டிகள் படையினரால் தடுக்கப்படுகின்றன என குற்றச் சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. மோர்சியின் ஆதரவாளர்கள் தற்காலிக மருத்துவமனைகளை அமைப்பது இதை உறுதி செய்வதாக இருக்கிறது.

யாராலும் முடியாது.
 அதிகரித்த மக்கள் தொகை மோசமாகும் காலநிலையால் உப்பாகும் நைல்நதிக்கரைப் வேளாண்மைப் பிரதேசம், வெளிநாட்டுச் செலவாணிப் பற்றாக்குறை, இல்லாமல் போன உல்லாசப் பயணிகளின் வருகை, வேலையில்லாப்பிரச்சனை, நீர் பற்றாக்குறை, மின்வெட்டு கல்வியறிவின்மை போன்ற பல மோசமான பிரச்சனைகளைக் கொண்ட எகிப்தை இசுலாமிய மதவாதிகளை உயர் பதவிகளில் அமர்த்துவதால் தீர்க்க முடியாது என்பது மட்டுமல்ல எவராலும் ஓராண்டில் சீர் செய்து விட முடியாது.

பிந்திக் கிடைத்த செய்திகள்:
08/07/2013 - GMT - 21-00: 51பேர் கொல்லப்பட்டனர். படைத்துறையினரால் கொல்லப்பட்டதாக மோர்சியின் ஆதரவாளர்கள் காட்டிய குழந்தையின் படம் சிரியாவில் கொல்லப்பட்ட குழந்தையின் படம்.
 

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...