Tuesday, 2 July 2013

சிரியா சவுதி அரேபியாவும் ஈரானும் மோதும் களமாக மாறுமா?

இலங்கையில் விடுதலைபுலிகளுக்கும் ஆப்கானில் தலிபான் போராளிகளுக்கும் அவசியம் தேவைப்பட்டதும் இன்று  சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு மிக அவசியமாகத் தேவைப்படுவதும் தோளில் செலுத்தக் கூடிய சூடு தேடிச் செல்லும் ஏவுகணைகள் (heat-seeking shoulder-fired missiles) ஆகும். இவை அவர்களின் கைகளுக்குக் கிடைக்காமல் இருக்க ஐக்கிய அமெரிக்காவும் மற்றும் பல நாடுகளும் எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளன.

என்ன இந்த சூடு தேடிச் செல்லும் ஏவுகணைகள்?
இவற்றை Man-portable air-defense systems (MANPADS or MPADS) என அழைப்பர். இவை நிலத்தில் இருந்து வானை நோக்கி ஏவப்பவும் ஏவுகணைகள் surface-to-air missiles (SAMs) ஆகும். 25இற்கு மேற்பட்ட நாடுகள் இவற்றை உற்பத்தி செய்கின்றன. இவற்றின் விற்பனையும் விநியோகமும் கடுமையாக கட்டுப் படுத்தப் பட்டுள்ளது. இவை பிழையானவர்களின் கைகளிற்குப் போனால் பொதுமக்கள் போக்கு வரத்துச் செய்யும் விமானங்களுக்கு ஆபத்து என்பதால் இந்தக் கட்டுப்பாடு எனச் சொல்லப்படுகிறது. இவை பொதுவாக 180 செண்டி மீட்டர் நீளமும் 18கிலோ எடையும் கொண்டவை. அகச்சிவப்பு (Infra red) தொழில் நுட்பத்துடன் கூடிய ஏவுகணைகள் ஏவப்பட்டவுடன் சூடு இருக்கும் இடத்தை தேடிச் செல்லும். விண்ணில் பறக்கும் போர் விமானங்களின் பொறிகளில் இருந்து வெளிவரும் வெப்பத்தை இவை நாடிச்சென்று தாக்கி வெடிக்கும். இதனால் விமானம் விழுத்தப்படும். இதைத் தவிர்க்க போர் விமானங்கள் பெருமளவு தீச் சுவாலையைக் கக்கிய படி பறக்கக் கூடியவையாக வடிவமைக்கப்பட்டன. இதனால் இந்த MANPADS ஏவுகணைகள் விமானத்தை நாடிச் செல்வதை தவிர்க்கலாம். ஆரம்பத்தில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை  Redeye என்றும் சோவியத்தில் தாயரிக்கப்பட்டவை SA-7 என்றும் சீனாவில் தயாரிக்கப்படவை HN-5 என்றும் அழைக்கப்பட்டன. இவை முதலாவது தலைமுறை ஏவுகணைகளாகும். மூன்றாவது தலைமுறை பாவனைக்கு வந்துவிட்டது. அமெரிக்கா இப்போது நான்காவது தலைமுறை MANPADS ஏவுகனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க MANPADS ஏவுகணைகள் இப்போது Stingers எனப் பெயரிடப்பட்டுள்ளது:
 ஏற்கனவே துருக்கி சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு இரகசியமாக சில
Stinger ரக MANPADS ஏவுகணைகளை வழங்கியிருந்ததாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.


சியா சுனி மோதல்
 சவுதி அரேபியா, காட்டார்,  போன்ற சுனி முசுலிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகள் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலன்களை தொடர்ந்து வழங்கி வருகின்றன. அந்த நாடுகளுக்கு என்ன விதமான படைக்கலன்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை ஐக்கிய அமெரிக்கா கட்டுப்படுத்தி வருகிறது. வலிமை மிக்க படைக்கலன்கள் இசுலாமியத் தீவிரவாதிகள் கைகளில் போவதையோ அவர்கள் அவற்றை இயக்கும் வல்லமை பெறுவதையோ ஐக்கிய அமெரிக்கா விரும்பவில்லை.  60 விழுக்காட்டிற்கு அதிகம் சுனி இசுலாமியர்களைக் கொண்ட சிரியாவில் சிறுபான்மையினரான அலவைற் இனக்குழுமத்தினர் பஷார் அல் அசாத் தலைமையில் ஆட்சி புரிகின்றனர். அலவைற் இனக்குழுமம் சியா முசுலிம்களின் ஒரு பிரிவினராகும். சியா முசுலிம் நாடான ஈரான் அல் அசாத் தலைமையிலான ஆட்சிக்கு படைக்கல உதவிகளையும் ஆளணி உதவிகளையும் செய்து வருகின்றது. ஈரானின் ஆதரவின் கீழ் லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லா சியா இசுலாமியப் போராளிகள் சிரியாவில் அசாத்திற்கு ஆதரவாகப் போராடுகிறார்கள்.

பேரிழப்பு
பிரித்தானியாவில் இருந்து செயற்படும் சிரிய மனித உரிமைகள் அமைப்பு சிரியப்போரில் இதுவரை 100,000இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனச் சொல்கின்றது. இதில் பெரும்பான்மையினர் களமுனையில் போராடுபவர்கள். இதில் 43,000பேர் அரசுக்காகப் போராடியவர்கள். 169 ஹிஸ்புல்லாப் போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 36,000பேர் பொதுமக்கள்,18,000பேர் அரசுக்கு எதிரான போராளிகள். உண்மையில் கொல்லப்பட்டவர்கள் இன்னும் அதிகமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

சவுதி காட்டார் முரண்பாடு
சவுதி அரேபியாவிலும் காட்டாரிலும் சுனி முசுலிம் மன்னர்கள் ஆட்சியில் இருந்தாலும் சவுதி மன்னர் குடும்பம் கட்டார் மன்னர் குடும்பம் தம்மிலும் பார்க்க தாழ்ந்த நிலையைச் சேர்ந்தவர்கள் என்று கருதுகிறது. இதனால் அந்த இருதரப்பினர்களிடையும் ஒற்றுமை இல்லை. இதுவரைகாலமும் காட்டார் நாடே சிரியக் கிளர்ச்சியாளர்களுக்கு அதிக உதவிகளைச் செய்து வந்தது. ஆனால் சிரியக் கிளர்ச்சிக்காரர்களை நேரடியாகச் சந்திக்க சவுதி ஆட்சியாளர்கள் மறுத்து வந்தனர். மே மாதம் முற்பகுதியில் சவுதி வெளிநாட்டமைச்சர் அவுத் அல் ஃபைசல் சிரியாவில் அல் அசாத்திற்கு எதிராகப் போராடிவரும் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் பிரதித் தலைவர் மஹ்மூட்ஃபரூக் டேரூக்கை (Mahmoud Farouq Tayfour) நேரடியாகச் சந்தித்தார். இச்சந்திப்பில் சிரிய இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு எகிப்திய சகோதரத்துவ அமைப்பைப் போல் அல்ல என சவுதி ஆட்சியாளர்களுக்கு உறுதி வழங்கப்பட்டது. அத்துடன் காட்டாரின் செயற்பாடுகள் குறித்து இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் அதிருப்தியும் சவுதியிடம் தெரிவிக்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவும் சிரியக் கிளர்ச்சிக்காரர்களை காட்டாரிலும் பார்க்க சவுதி அரேபியா கையாள்வதையே விரும்புகிறது. சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் பின்னடைவைச் சந்தித்த பின்னர் அமெரிக்காவின் நிலைப்பாடு சற்று மாற்றம் அடைந்தது. இதனால் மே 2013இல் இருந்து சவுதி அரேபியா சிரியக் கிளர்ச்சிக்காரர்களின் முக்கிய ஆதரவாளராக உருவெடுத்தது. இப்போது சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள்(anti-tank missiles) வழங்குவதை அமெரிக்கா ஆட்சேபிக்கவில்லை. சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு கிடைக்கும் படைக்கலன்களை அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ மேற்பார்வை செய்வதாகவும் ஐக்கிய அமெரிக்காவும் சவுதியும் இணங்கிக் கொண்டன. 


திசைமாறிய அரபு வசந்தம்
2011இல் தொடங்கிய அரபு வசந்தம் என்னும் மத்தியதர வர்க்க மக்களின் புரட்சி ஈரான்-சவுதி பிராந்திய ஆதிக்கப்போட்டியாலும் மதவாதத்தாலும் திசை திருப்பப்பட்டுவிட்டது. 2011இல் சியா முசுலிம்கள் ஆளும் சுனி முசுலிம்களுக்கு எதிராக ஈரானின் உதவியுடன் செய்த கிளர்ச்சியை சவுதி அரேபியா தனது படைகளை அனுப்பி அடக்கியது.
 
சவுதியின் வித்தியாசமான அணுகு முறை
 

 சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்தின் வீழ்ச்சி தனக்கு சாதகமான நிலையை மத்தியகிழக்கில் தோற்றுவித்து விடும் என்பதை ஈரான் நன்குணர்ந்துள்ளது. சவுதி அரேபியா சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் குர்திஷ் மக்கள் உட்பட மற்ற சிறுபான்மை இனக் குழுமங்களையும் தம்முடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என நிர்ப்பந்தித்துள்ளது. அமெரிக்க அரசத்துறைச் செயலர் ஜோன் கெரியைச் சந்தித்த சவுதி வெளிநாட்டமைச்சர் அவுத் அல் ஃபைசல் சிரியா தொடர்பாக அறிக்கை விடும் போது சிரியாவிற்கும் ஈரானிற்கும் எதிராக கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டார். சிரிய ஆட்சியாளர்கள் இனக்கொலை புரிவதாகக் குற்றம் சாட்டினார். அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு தேவையான படைக்கலன்களை வழங்க வேண்டும் என சவுதி வெளிநாட்டமைச்சர் வலியுறுத்தினார். ஈரான் தனது செல்வாக்கை மத்திய கிழக்கிலும் வட ஆபிரிக்காவிலும் பெருக்க முயல்கிறது. தனது படைக்கலன்களை புதியதாக்கிக் கொண்டிருக்கும் ஈரான் பல இசுலாமியத்

சிஐஏயின் ஒருங்கிணைப்புடன் அனுப்பும் படைக்கலன்கள்

சிஐஏயின் ஒருங்கிணைப்புடன் அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகள் சவுதி அரேபியா ஊடாகவும் ஜோர்தானுடாகவும் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலன்களை வழங்கவுள்ளன. கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிரியக் கிளர்ச்சிக்காரப் போராளிகளுக்கு தோளில் செலுத்தக் கூடிய சூடு தேடிச் செல்லும் ஏவுகணைகள் (heat-seeking shoulder-fired missiles) வழங்கப்படவிருக்கிறது. புதிதாகக் கிடைக்கப் பெறும் படைக்கலன்களுடன் உரிய பயிற்ச்சி பெற்று சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் களமுனையை தமக்கு சாதகமானதாக மாற்ற இன்னும் ஆறு மாதங்கள் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த நகர்வுகளை உணர்ந்து கொண்ட இரசியா சிரியாவில் இருந்து தனது கடற்படைத்தளத்தை திடீரென விலக்கிக் கொண்டது. இரசியாவின் இந்த முடிவு எல்லோரையும் ஆச்சரியப் படுத்தியதுடன் சிரியப் போரில் நிலைமை மாறப்போகிறது என்பதையும் எதிர்வு கூறுகிறது.
 

சவுதி அரேபியா தலைமையில் சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் வெற்றி பெறுவதை ஈரான் எப்படி எதிர் கொள்ளப் போகிறது? ஈரான் ஹிஸ்புல்லாப் போராளிகளை சிரியாவில் இருந்து விலக்கப்போவதாக ஈரானிய வெளிநாட்டமைச்சர் அறிவித்துள்ளார். சிரியாவில் ஒரு பேச்சு வார்த்தை மூலமான தீர்வு ஏற்படுத்துவதற்கு இது ஏதுவாகும் என்றார் அவர். ஜூன் மாத நடுப்பகுதியில் சிரிவாவிற்கு 4000படை வீரர்களை அனுப்புவதாகக் கூறிய ஈரான் ஜூன் மாத இறுதியில் ஏற்கனவே அங்குள்ள ஹிஸ்புல்லாவையும் விலக்குவதாகக் கூறியது சற்று ஆச்சரியம்தான. சிரியக் கிளர்ச்சிக்காரர்களுடன் இணைந்து செயற்படும் அல் கெய்தாவுடன் நெருங்கிய தொடர்புடைய இயக்கமான ஜபத் அல் நஸ்ராவின் எதிர் காலம் எப்படி இருக்கப்போகிறது?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...