Thursday, 27 June 2013

சீனாமீதான உலகத்தின் அச்சம் குறைகிறது.

உலகத்தில் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனா விரைவில் அமெரிக்காவிடமிருந்து முதலாவது நிலையைக் கைப்பற்றிவிடும் என்றும் இனி வரும் காலங்களில் சீனா உலகப்பந்தில் ஆதிக்கம் செலுத்தப் போகிறது என்றும் பல எதிர்வுகள் கூறப்பட்டன. சீனாவும் தென் சீனக்கடல், கிழக்குச் சீனக்கடல், இந்தியாவின் அருணாசலப் பிரதேசம், கஷ்மீர் பிரதேசம் போன்றவை தன்னுடையது என்று அழுத்திக் கூறிவந்தது.

சீனா தனது படைத் துறைச் செலவையும் விண்வெளி ஆய்வுச் செலவையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தச் செலவீன அதிகரிப்பு சீன விரிவாக்கற் கொள்கையை உறுதி செய்வதாகக் கருதப்பட்டது. கனிம வளம் மிக்க ஆபிரிக்க நாடுகளையும் எரி பொருள் வளமிக்க மத்திய கிழக்கு நாடுகளையும் சீனா தன்பக்கம் இழுக்க முயற்ச்சிக்கிறது.

அச்சப்பட்ட ஒஸ்ரேலியர்கள்
சீன விரிவாக்கத்தையிட்டு அதிக அச்சப்பட்ட மக்களாக ஒஸ்ரேலியர்கள் காணப்பட்டனர்.ஆனால் தற்போது சீனா தொடர்பான அச்சம் ஒஸ்ரேலியர்கள் மத்தியில் குறைந்து வருவதாக அங்கு செய்யப்பட்ட கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. பிபிசியின் உலகச் சேவை பல நாடுகளில் எடுத்த கருத்துக் கணிப்புக்களின் படியும் சீனா தொடர்பான அச்சம் மக்களிடையே குறைந்து வருகின்றது. உலக ஆதிக்கம் செலுத்தக் கூடிய 25 நாடுகளின் பட்டியலில் சென்ற ஆண்டு 5வதாக இருந்த சீனா இந்த ஆண்டு 9வதாக இறங்கிவிட்டது. சீனா உலகத்தில் ஆதிக்கம் செலுத்தும் என்பதில் சீனர்கள் குறைந்த நம்பிக்கை உடையவர்களாகக்  காணப்படுகின்றனர். பெரும்பான்மையான சீனர்கள் தமது நாடு உலகத்தில் ஆதிக்கம் செலுத்தும் என நம்பவில்லை.

சீனாவிற்கு எதிராகத் திரளும் நாடுகளும் தனித்த சீனாவும்.
ஒஸ்ரேலியா, ஜப்பான், வியட்னாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் சீனாவிற்கு எதிராக அமெரிக்காவுடன் இணைவதில் அக்கறை காட்டுகின்றன. ஒஸ்ரேலிய மக்களிடை அமெரிக்காவுடனான நட்பை வளர்க்க வேண்டும் என்ற விருப்பம் அதிகரித்து வருகிறது. ஜப்பானிய மக்களிடை சீனாவிற்கு கிழக்குச் சீனக் கடலில் எந்த வித விட்டுக் கொடுப்பையும் மேற்கொள்ளாமல் சீனாவை அடக்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்து வருகிறது. ஜப்பானியர்கள் தமது அரசியல் யாப்பைத் திருத்தி தாம் ஒரு படைத்துறை வல்லரசாக உருவாக வேண்டும் என்கிற விருப்பம் அதிகரித்து வருகிறது. ஜப்பானும் அமெரிக்காவுடன் இணைந்து சீனாவை அடக்க வேண்டும் என நம்புகிறது. ஜப்பானின் தற்போதைய ஆட்சியாளர்கள் இந்தியாவுடன் தமது நட்பை வளர்த்து சீனாவை அடக்க வேண்டும் எனக் கருதுகின்றனர். சீனாவை உலகின் மிகவும் தனித்த வல்லரசு என பன்னாட்டு அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். மற்ற வல்லரசு நாடுகளுக்கு பல நட்பு நாடுகள் உண்டு. அமெரிக்கா, பிரித்தானிய, பிரான்ஸ் ஆகிய மூன்று வல்லரசு நாடுகளும் தமக்கிடையே ஒரு நட்பையும் பல ஒத்துழைப்புக்களையும் பேணி வருகின்றன. சீனாவின் ஒரே நட்பு நாடான வட கொரியாவும் சீனாவை சந்தேகக் கண்கொண்டுதான் பார்க்கிறது.

சீனப் பொருளாதார வளர்ச்சிப் பூச்சாண்டி
சீனாவின் பொருளாதாரம் உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரம் என்பதை பல அரசியல் மற்றும் பொருளியல் விமர்சகர்கள் சந்தேகத்துடனேயே அணுகுகின்றனர். சினாவின் புள்ளிவிபரங்களில் அவர்களுக்கு நம்பிக்கையில்லை. சீனா தனது பொருளாதார உற்பத்தியில் தேவையற்றவனவற்றையும் இணைக்கிறது. இந்தத் தேவையற்ற துறைகளை விட்டுவிட்டுப் பார்த்தால் சீனப் பொருளாதார வளர்ச்சி மிகச் சிறியதே என்கின்றனர் அவர்கள்.

சீன உள்ளக முரண்பாடு
சீன மக்களிடையே எடுத்த கருத்துக் கணிப்பின் படி சின அரச கட்டமைபில் 25%இனர் மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆனால் 36%மான சீனர்கள் சீனா அரசும் பொருளாதாரமும் அமெரிக்காவைப் போல் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். சீனக் கலாச்சாரம், அன்பு, இயற்கைக்குத் தலைவணங்கல், குடுப்ப பாசம், இல்லாதவர்களுக்கு உதவுதல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் சீன அரச செயற்பாடுகள் இவற்றிற்கு முரணானாந்தாகவே இருக்கிறது. இந்த உள்ளக முரண்பாட்டை சீன ஆட்சியாளர்கள் முதலில் சரிப்படுத்த வேண்டும் அதன் பின்னரே சீன விரிவாக்கமோ அல்லது உலக ஆதிக்கமோ சாத்தியமாகும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...