Thursday, 9 May 2013

சிரியாவில் அமெரிக்காவிற்கு பெரும் தலையிடி

ஐம்பது ஆண்டுகளாக அவசரகாலச் சட்டைத்தின் பிடியில் இருக்கும் சிரிய நாட்டின் அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சியை ஆரம்பித்த பல குழுக்கள் 2011இன் இறுதிப்பகுதியில் சிரிய தேசிய சபை என்னும் பெயரில் ஒன்றிணைந்தன. இந்தக் குடை அமைப்பை லிபியா அங்கீகரிந்த்தது. 2012 நவம்பரில் சிரியப் புரட்சிக்கும் எதிர்ப்புப் படைகளுக்குமான கூட்டமைப்பு (National Coalition for Syrian Revolutionary and Opposition Forces) என்னும் இன்னுமொரு குடை அமைப்பு உருவாக்கப்பட்டது.

கட்டார் நாட்டில் உருவாக்கப்பட்ட சிரியப் புரட்சிக்கும் எதிர்ப்புப் படைகளுக்குமான கூட்டமைப்பை (National Coalition for Syrian Revolutionary and Opposition Forces) வளைகுடா கூட்டுறவுச் சபை என்னும் வளைகுடாவைச் சேர்ந்த நாடுகளின் கூட்டமைப்பும் அரபுநாடுகள் சபையும் அங்கீகரித்தன.

சிரியத் தேசிய சபை, சுதந்திர சிரியப்படை. ஜபத் அல் நஷ்ரா, இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு, மதசார்பற்ற மக்களாட்சிக்கான அமைப்பு, டமஸ்கஸ் பிரகடன அமைப்பு, சிரிய மக்களாட்சிக் கட்சி, சிரியப் புரட்சிக்கான உச்ச சபை, சிரிய உள்ளூர் ஒருங்கிணைப்புக் குழு,  மக்களாட்சி மாற்றத்திற்கான தேசிய ஒருங்கிணைப்புக் குழு, தேசிய மக்களாட்சி அணி, சிரியப்புரட்சிக்கான தேசிய ஆணையகம், சிரிய விடுதலைப்படை, சிரிய இசுலாமிய முன்னணி, சிரியத் தேசிய விடுதலை முன்னணி, விடுதலைக்கும் மாற்றத்துக்குமான முன்னணி...........இப்படி இனும் பல படைக்கலன் ஏந்திய குழுக்களும், மத அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிராகச் செயற்படுகின்றன. இவற்றில் சுதந்திர சிரியப்படை ஓர் ஐக்கிய அமெரிக்காவை சார்ந்த அமைப்பாகவும் ஜபத் அல் நஷ்ரா ஓர் அல் கெய்தாவைச் சார்ந்த அமைப்பாகவும் இருக்கின்றன. இதுவே சிரிய விடுதலைக்கு பெரும் முட்டுக்கட்டையாகவும் இருக்கின்றன.

அமெரிக்காவின் தலையிடாக் கொள்கை - Pentagon’s hands-off approach
ஐக்கிய அமெரிக்கா அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலன் வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டுடனும் சிரியாவில் நேரடியாக தலையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டுடனும் இதுவரை இருந்தது. இதை அமெரிக்கப் பாதுகாப்புத் துறை பெண்டகனின் தலையிடா அணுகுமுறை (Pentagon’s hands-off approach) என்பர். அமெரிக்கவின் இந்த தலையிடாக் கொள்கை அதன் நட்பு நாடுகளான துருக்கி, சவுதி அரேபியா, கட்டார், ஜோர்தான் ஆகிய நாடுகளை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளன.

பேராபத்தும் பேரழிவும்
சிரியப் போரில் இதுவரை எழுபதினாயிரத்திற்கு மேற்பட்டோர் இறந்து விட்டனர். பல இலட்சக் கணக்கானோர் இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ளனர். சிரிய உள்நாட்டுப் போர் இன்னும் தீவிரமடையும் நிலையில் சிரியா யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை என்றும் ஒன்றிற்கு ஒன்று முரண்பட்ட கட்டுப்பாடில்லாத பல குழுக்கள் சிரியாவில் சிரியாவை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன என்றும் ஒரு நிலை உருவாகும் போதும்; சிரியாவில் இருக்கும் தனது கடற்படைத் தளத்தை இரசியா எப்படிக் காப்பாற்றப் போகிறது என்ற கேள்வி எழும் போதும்; இஸ்ரேல் ஹிஸ்புல்லா போராளிக் குழுக்களிடம் பேரழிவு விளைவிக்கக் கூடிய படைக்க்லன்கள் போகாம தடுக்க முயலும் போதும்; ஈரான் தனது கடைசி நட்பு ஆட்சியாளர் கவிழாமல் பாதுகாக்க முற்படும் போதும்; வலுமிக்க அரச படையின் பேரழிவு விளைவிக்கக் கூடிய படைக்கலன்களை யார் எப்படிப் பாவிக்கப் போகிறார்கள் என்ற ஆபத்தான நிலை உருவாகும் போதும் மத்திய கிழக்கில் பெரும் நெருக்கடி உருவாகும். சிரியாவிற்கு அண்மையாக உள்ள பல நாடுகள் இதனால் பாதிக்கப்பட்டு உலக எரிபொருள் விநியோகமும் தடைப்படலாம்.

என்ன செய்வது?
அமெரிக்கப்பாதுகாப்புத் துறைச் செயலர் ஹஜலிடம் சிரிய நிலைமை பற்றிக் குறிப்பிட்ட ஓர் அமெரிக்க இராசதந்திரி "Everybody's scared. And nobody knows what the hell we are going to do there.". சிரியாவில் என்ன நடக்கப் போகிறது என்பது பற்றி எல்லோரும் அஞ்சுகிறார்கள். ஆனால் ஒருவருக்கும் என்னத்தைச் செய்து தொலைப்பது என்று தெரியாமல் இருக்கிறார்கள். சிரிய நிலைமை பற்றி எழுதிய அமெரிக்காவின் நிதித் துறை ஊடகமான த் வால் ஸ்-ரீட் ஜேர்ணல் Pentagon Plans for the Worst in Syria  பெனடகன் மோசமான சிரிய நிலைக்குத் தயாராகிறது எனத் தனது செய்திக்கு தலைப்பிட்டுள்ளது.

 ஜோர்தானில் மேலும் அமெரிக்கப்படையினர்.
சிரியக் கிளர்ச்சி ஜோர்தானில் பிரச்சனைகளை கிளறாமல் இருக்க அங்கு ஒரு தடைப் பிரதேசத்தை உருவாக்க அமெரிக்கா முயல்கிறது. விரைவில் அமெரிக்கப் படையினர் ஜோர்தானில் தரையிறங்கலாம். ஏற்கனவே ஜோர்தானில் அமெரிக்கப்படையின் வேதியியல் படைக்கலன் நிபுணர்கள் நிலை கொண்டுள்ளனர். எகிப்து சிரியப் பிராந்தியத் திடத்தன்மையை பாதுகாக்க மட்டுப்படுத்தப்பட்ட அளவிலும் நிபந்தனைக்கு உட்பட்டும் அமெரிக்காவுடன் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

இருதலைக் கொள்ளி எறும்பாக அமெரிக்கா
சிரிய உள்நாட்டுப் போரைப் பொறுத்தவரை அமெரிக்காவிற்கு இரு பெரும் ஒன்றிற்கு ஒன்று முரண்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றன. சிரிய ஆட்சியாளரின் வீழ்ச்சி பிராந்திய சமநிலையையும் திடநிலையையும் பெரிதும் பாதிக்கும் என்பதால் அங்கு படைரீதியாகத் தலையிட்டு முடிவை தனக்கு சாதகமாக்க வேண்டும் அல்லது தனக்கு ஆதரவான குழுக்களுக்கு படைக்கலன்கள் வழங்கி தனக்கு சாதகமான நிலையை உருவாக்க வேண்டும். அமெரிக்கா படைத்துறை ரீதியாக எந்த ஒரு நாட்டிலும் தலையிடுவதை அமெரிக்க மக்கள் விரும்பவில்லை. அதன் பொருளாதார நிலையும் அதற்கு உகந்ததாக இல்லை. அமெரிகா தனக்குச் சாதகமான கிளர்ச்சிக் குழுக்களுக்கு படைக்கலன்கள் வழங்கினால் அது அல் கெய்தாவின் கைகளிற்குப் போய்ச் சேரும் என அஞ்சுகிறது. இதை உறுதி செய்யும் முகமாக அமெரிக்க அதரவு கிளர்ச்சிக் குழுவான சுதந்திர சிரியப்படையில் இருந்து பல போராளிகள் அல் கெய்தா ஆதரவுப் போராளிக் குழுவான ஜபத் அல் நஷ்ராவிற்கு மாறியுள்ளனர். இது அமெரிக்காவிற்குப் பெரும் தலையிடி கொடுக்கும் செய்தியானது. இன்னும் ஒரு சங்கடமான நிலைமை அமெரிக்காவில் ஜோர்தானில் ஏற்பட்டுள்ளது. ஜோர்தானை சிரியக் கிளர்ச்சி பாதிக்காமல் இருக்க அங்கு அமெரிக்கப்படைகள் நிலை கொள்வது அவசியம். ஆனால் அதிக அளவில் அமெரிக்க்பப்டைகள் ஜோர்தானில் நிலை கொண்டால் அது அங்கு இசுலாமியத் தீவிரவாதம் தலை தூக்க வழிவகுக்கும். எமது மண்ணில் இசுலாமிய விரோத அமெரிக்கப்படைகளா என்று ஜோர்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராக இசுலாமிய தீவிர வாதம் எழும்பலாம் என அமெரிக்கா அஞ்சுகிறது.

பணமும் பலமும் மிக்க ஜபத் அல் நஷ்ரா
அல் கெய்தா ஆதரவு இயக்கமான ஜபத் அல் நஷ்ராவிடம் நிறையப் பணமும் சிறந்த படைக்கலங்களும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அத்துடன் அதன் போராளிகள் இசுலாமிய மதப் பற்றால் உந்தப்பட்டு மிகச் சிறப்பாக போர் புரிகின்றனர். பல துணிச்சல் மிக்க தாக்குதல்களையும் தற்கொடைத் தாக்குதல்களையும் அவர்கள் செய்து வருகின்றனர். இவர்களின் தாக்குதல் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சியில் பல திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...