Friday, 3 May 2013

குவாண்டனாமோ: முடப்படுமா அமெரிக்க சித்திரவதைக் கூடம்?


இலங்கையின்  "நான்காம் மாடி"யிலும் பார்க்க பல மடங்கு கொடூரமான சித்திரவதைக் கூடம் ஐக்கிய அமெரிக்க அரசு கியூபாவின் குவாண்டனாமோவில் வைத்திருக்கும் சிறைக்கூடம். இது அமெரிக்க மனித உரிமைச் சட்டங்களுக்கு அப்பால் வைத்து சித்திரவதை செய்ய ஜோர் புஷ் ஆட்சி செய்த சதி.

உலகிலேயே அதிகமாகச் செலவழித்துப் பராமரிக்கப்படும் குவாண்டனாமோ சிறையில் செய்த நீர்ப்பலகைச் (water boarding) சித்திரவதை மூலமாகவே பின் லாடனின் மிக இரகசியமான தகவற் தொடர்பாளர் பற்றிய சிறு துப்பு அமெரிக்க அரசுக்குக் கிடைத்தது. அதை வைத்து இரண்டு ஆண்டுகளின் பின்னர் பின் லாடன் இருப்பிடம் அறியப்பட்டது.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பதவியேற்ற இரண்டாம் நாள் சொல்லியது:  "Guantanamo is not necessary to keep America safe. It is expensive. It is inefficient.... It needs to be closed.". அமெரிக்காவைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு குவாண்டனாமோ தேவையற்றது. இது செலவுமிக்கது. இது திறனற்றது. இது மூடப்பட வேண்டியது. ஒபாமா ஒரு ஆண்டுக்குள் இதை மூடுவதாகச் சொல்லி நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன.

குவாண்டனாமோ சிறைச்சாலைக் கைதிகள் வேறு வேறு நாடுகளில் இருந்து அந்த நாட்டு நீதித் துறைக்குத் தெரியாமல் கடத்தி வரப்பட்டவர்கள். மத்திய கிழக்கில் அமெரிக்க உளவுத் துறையால் அமெரிக்காவிற்கு எதிரான தீவிரவாதச் செயலில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு ஜோர்டான் போன்ற நட்பு நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து விமானமூலம் குவாண்டனோமிற்கு கடத்தப்பட்டார்கள். தற்போது அங்கு இருக்கும் நூறு கைதிகள் இறக்கும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டம் நடாத்துகிறார்கள். இது கடந்த மூன்று மாதங்களாக நடைபெறுகிறாது. அவர்களில் 21 பேர் கதிரைகளில் கட்டி வைக்கப்பட்டு மூக்கினூடாகத் திணிக்கப்பட்ட குழாய்கள் மூலம் திரவ உணவு ஊட்டப்படுகிறார்கள். இக்கதிரைகளில் உணவு சமிபாடு அடைவதற்காக இரண்டு மணித்தியாலங்கள் கட்டி வைக்கப்பட்டிருப்பர். இவை மனித உரிமைகளை மீறும் செயல் என மனித உரிமை ஆர்வலர்கள் கண்டிக்கின்றனர்.

குவாண்டானாமோ சிறைகளை தான் மூடுவதற்கு அமெரிக்கப் பாராளமன்றத்தின் இரு சபைகளில் ஒன்றான மக்களவை  (காங்கிரசு) தடையாக இருப்பதாக பராக் ஒபாமா குற்றம் சாட்டுகிறார். பராக் ஒபாமா மக்களாட்சி கட்சியைச் சேர்ந்தவர். அமெரிக்க மக்களவை குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. 2011இலும் 2012இலும் அமெரிக்க மக்களவை குவாண்டமானோ சிறையை மூடுவதற்கு எதிராக பல சட்டங்களை இயற்றியது. விடுவிக்கப்படும் கைதிகள் செல்லும் நாட்டில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடமாட்டார்கள் என அந்த நாட்டு அரசின் உறுதிமொழி வாங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை மக்களவை உருவாக்கியது. ஏற்கனவே குவாண்டனாமோவில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் தீவிரவாதிகளாக மாறியுள்ளனர் என்கிறது அமெரிக்க மக்களவை. அமெரிக்க உளவுத் தகவல்களின் படி ஏற்கனவே விடுவித்த 600 பேரில் 12 விழுக்காட்டினர் மீண்டும் தீவிரவாதிகளாக மாறியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 11 விழுக்காட்டினர் தீவிரவாதிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் இந்த விழுக்காடு அமெரிக்காவில் குற்றச் செயலில் ஈடுபடுவோரின் விழுக்காடான 60இலும் பார்க்கக் குறைவானது என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

யேமன் நாடு குவாண்டமானோ சிறையில் இருக்கும் கைதிகளை தம்மிடம் ஒப்படைத்தால் தான் அவர்களை புனர்வாழ்வு முகாமில் வைத்து பாராமரிப்பதாக அமெரிக்காவிற்கு உறுதி வழங்கியுள்ளது. ஆனால் சிலர் கைதிகள் காலவரையின்றி சிறைவைக்கப்பட வேண்டியவர்கள் என அமெரிக்க அரசு கருதுகிறது. அவர்களை ஓரு நீதிமன்றில் நிறுத்தி தண்டனை கொடுக்க போதிய ஆதாரம் இல்லை. ஆனால் அவர்கள் வெளியில் விடப்பட்டால் அமெரிக்காவிற்கு எதிரான மோசமான தீவிரவாத நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடுவாரகள் என அமெரிக்க அரசு அஞ்சுகிறது.

சிறைக்கைதிகளை உணவு உண்ண நிர்ப்பந்திப்பது அவர்களை மனிதாபிமான முறையில் நடாத்துவதாகும் என உலக மருத்துவர்கள் சபை ஏற்கனவே தீர்மானித்துள்ளது. சுயமாகச் சிந்திக்கும் தகமையுள்ள ஒரு சிறைக்கைதிக்கு உணவை மறுக்கும் உரிமை இருக்கிறது. குவாண்டமானோக் கைதிகளுக்கான சட்டவாளர் ஒருவர் கைதிகளின் மூக்கினூடாக தேவையற்ற அளவு பெரிய குழாய்கள் (BigMac உள்ளுக்குள் தள்ளியிருப்பாங்களோ?அவர்களின் விருப்பத்திற்கு மாறாக திணிக்கப்பட்டுள்ளது என்கிறார். சில சிறைக் கைதிகள் தங்கள் நெஞ்சிலும் வயிற்றிலும் என்றுமே அனுபவித்திராத வலியை உணர்வதாகத் தெரிவித்துள்ளனர்.

பராக் ஒபாமா குவாண்டமானோச் சிறைசாலையை மூடப் போவதாக மீண்டும் அறிவித்துள்ளார். அது முழுமையாகச் சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறி. நவநீதம் பிள்ளை உட்படப் பல ஐநாவின் மனித உரிமைகள் தொடர்பான உயர் அதிகாரிகள் இந்தச் சிறைச்சாலையை மூடும் படி வேண்டுகோள் விடுத்துள்ளனர். அமெரிக்காவிற்கு எதிரான போராளிகளைக் கைது செய்து கொண்டுவந்து குவாண்டமானோவில் அடைப்பதை ஒபாமா நிறுத்தி விட்டார். நல்ல எண்ணத்துடன் அல்ல. அது மனித உரிமைப்பிரச்சனையை கொண்டு வரும் என்பதால் ஆளில்லா விமானங்களை அனுப்பி அகப்பட்டவர்களை எல்லாம் போட்டுத் தள்ளுகிறார். இதுவரை 4700பேர் போட்டுத் தள்ளப்பட்டு விட்டனர்.

மனித உரிமைகளைப் பொறுத்த வரை அமெரிக்கா உலகிற்கு சொல்வது இதுதான்:
  • நாம் சொல்பவற்றைச் செய்யுங்கள். நாம் செய்வதைப்பற்றி கருத்துத் தெரிவிக்காதீர்கள்
இரசிய ஊடகம் ஒன்றில் குவாண்டமானோ சித்திரவதை பற்றிய செய்திக்குப் பின்னூட்டமிட்ட பெயர் குறிப்பிடாத ஒருவர். இன்று அமெரிக்கா எப்படி நடத்துகிறது என்பது நாளை நாம் அமெரிக்காவை எப்படி நடத்துவோம் என்பதைத் தீர்மானிக்கும் என்றார்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...