Monday, 13 May 2013

பக்கிஸ்த்தான் வயசுக்கு வந்துவிட்டதா? இந்தியாவில் காதல் கொள்ளுமா?

உலகிலேயே மோசமான தீவிரவாதம், அடங்காத மதவாதம், பிரிவினைவாதம், இனவாதம், படைத்துறை ஆதிக்கம், நலிவடைந்த பொருளாதாரம், அமெரிக்க ஆளில்லா விமானங்களின் அத்துமீறல்கள் ஆகிய பிரச்சனைக்குள் அகப்பட்டுள்ள பாக்கிஸ்த்தானில் முதல் தடவையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு அதன் படைத்துறையினரால் கவிழ்க்கப்படாமல் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து இரத்தக் களரிக்கு மத்தியில் தேர்தலை நடாத்தி வேறு ஓர் ஆட்சியாளரைத் தெரிந்து எடுத்துள்ளது.

அதிபர் அசிஃப் அல் சர்தாரி - Mr. Ten Percent
2008-ம் ஆண்டு நடந்த தேர்தல் மூலம் பதவிக்கு வந்த பாக்கிஸ்தான் அதிபர் அசிஃப் அல் சர்தாரி பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் சுல்பிகார் அலி பூட்டோவின் மகளும் முன்னாள் பிரதம மந்திரியுமான பெனாஸீர் பூட்டோவைத் திருமணம் செய்ததன் மூலம் அரசியலில் பிரபலமானவர். 1996இல் ஊழலுக்காக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டவர். 1990இல் பாராளமன்றத்திற்கும் 1997இல் மூதவைக்கும் தெரிவு செய்யப்பட்டவர். 2008இல் அமெரிக்க துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் பெண் வேட்பாளர் சேரா பெயினுடன் கிசுகிசுக்கப்பட்டவர் அசிஃப் அல் சர்தாரி. முன்னாள் பாக்கிஸ்தானிய அதிபர் பெர்வஸ் முசரஃப்பை பதவியில் இருந்து விரட்டியவர் அசிஃப் அல் சர்தாரி. முன்னள் அதிபர் முசரஃப் அதிபர்  சல்தாரியை ‘Asif Zardari is a criminal and a fraud. He’ll do anything to save himself. He’s not a patriot and he’s got no love for Pakistan. He’s a third-rater’ என்று விமர்சித்தார். 2003இல் சுவிஸ் நீதிமன்றில் நிதி மோசடிக்காக ஆறு மாதச் சிறைத்தண்டனையும் $50,000 அபராதமும் விதிக்கப்பட்டவர் அசிஃப் அல் சர்தாரி. இதில் இருந்து அசிஃப் அல் சர்தாரியை முசரப்பே விடுவித்தார். சர்தாரியை அவரது ஊழலுக்காக Mr. Ten Percent என்று அழைப்பர். சர்தாரிக்கு எதிராக நகைச்சுவைகள் கிண்டல்களைப் பகிரங்கப் படுத்தினால் 14 மாதச் சிறைத்தண்டனைக்குள்ளாகலாம். சர்தாரிக்கு பணம் கொடுக்க வேண்டிய ஒருவரிடம் பணத்தை வசூலிப்பதற்கக அவரது அடியாட்கள் அவரது காலில் ரிமோட் கொன்ரூலில் வெடிக்கக் கூடிய குண்டைப் பொருத்தி விட்டு அவரை அவரது வங்கிக்குச் சென்று பணம் எடுத்துத் தராவிடில் அதை வெடிக்க வைப்போம் என மிரட்டிப் பணத்தைப் பெற்றனர்.

விழுந்து எழும்பிய இம்ரான் கான்
முன்னாள் துடுப்பாட்ட வீரர் இம்ரான் கான் தேர்தல் பிரச்சாரத்தின் போது மேடையிலலிருந்து விழுந்து தலையில் பலமாக அடிபட்டார். இதனால் அவருக்கு அனுதாப ஆதரவு கூடியது. தலிபான்களுக்கு உகந்தவரானரும் அமெரிக்க ஆளில்லா விமானத்தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டிப்பவருமான இம்ரான் கான் அதிக இளைஞர்களைக் கவர்ந்தார். ஆனால் கடந்த தேர்தலில் ஓர் இடத்தில் கூட வெற்றி பெறாத இவரது கட்சி இம்முறை கணிசமான வெற்றி பெற்று பூட்டோ குடும்பத்தினரின் பாக்கிஸ்த்தான் மக்கள் கட்சியை மூன்றாம் இடத்திற்கு தள்ளி விட்டது.

தேர்தலில் வெற்றி பெற்ற ஷரிஃப் நவாஸ்
ஏற்கனவே இரண்டு தடவை பாக்கிஸ்த்தானின் தலைமை அமைச்சராகத் தேர்ந்தெடுக்க்கப்பட்டு படைத்துறையினரால் பதவில் இருந்து அகற்றப்பட்ட ஷரிஃப் நவாஸ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். அவரது வலதுசாரிக் கட்சியான பாக்கிஸ்த்தான் முசுலிம் லீக் - நவாஸ்{Pakistan Muslim League-Nawaz (PML-N)} தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. தேர்தலிலின் போது ஷரிஃப் நவாஸ் தலிபானகளுக்கு எதிராகவோ அமெரிக்க ஆளில்லா விமானங்களின் அத்து மீறல்கள் தொடர்பாகவோ கடுமையான தொனியில் கருத்துத் தெரிவிக்கவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம்
கூட்டாட்சி அரசியல் அமைப்பின் க்கீழ் ஆளப்படும் பாக்கிஸ்த்தானில் நான்கு மாநிலங்கள் இருக்கின்றன. மேலும் ஒரு பிரதேசம் மைய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. பஞ்சாப் மாநிலம் பாக்கிஸ்த்தானின் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கு மேல் கொண்டுள்ளது. இந்த மாநிலம் ஷரிஃப் நவாஸின் கட்சியின் ஆட்சியின் கீழ் அவரது உடன் பிறப்பை முதலமைச்சராகக்  கொண்டு ஆளப்படுகிறது. அங்கு பல முதலீடுகள் செய்யப்பட்டதுடன் தீவிரவாதத் தாக்குதல்களும் குறைவடைந்துள்ளது நவாஸின் வெற்றிக்கு வழிவகுத்தது. ஆனால் நவாஸ் பாக்கிஸ்த்தனியத் தீவிரவாத இயக்கமான தலிபான்களுடன் இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டமையால் இது சாத்தியமானது எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் மொத்த 18 கோடி மக்கள் தொகையில் ஒன்றரைக் கோடி தீவிரவாதிகளைக் கொண்ட நாட்டில் இதைத் தவிர வேறு வழி இருக்கிறதா? தலிபானின் கொள்கைப்படி மேற்கத்தைய பாணி மக்களாட்சி இசுலாமிய மார்க்கத்திற்கு விரோதமானது. தேர்தலின் போது பல வேட்பாளர்கள் தலிபான் இயக்கத்தினரால் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. தேர்தலின் போது பல குண்டு வெடிப்புக்கள், கொலைகள், ஆட்கடத்தல்கள் நடைபெற்றன.

இந்தியாவிற்கு நட்புக்கரம் நீட்டுவாரா நவாஸ்?

இந்தியாவிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையில் அண்மைக்காலங்களாக பெரும் எல்லை முறுகல்கள் நடந்து வருகின்றன. எல்லாவற்றிலும் பெரும் முறுகலாக இருப்பது 2008இல் பாக்கிஸ்த்தானில் இருந்து சென்ற லக்ஸர் இ தொய்பா அமைப்பினர்களாகக் கருதப்படுவோர் மும்பை நகரில் நடாத்திய தாக்குதலே. நவாஸ் தான் ஆட்சிக்கு வந்தால் மும்பைத் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடாத்துவேன் என்றும் பக்கிஸ்த்தானிய மண்ணில் இருந்து இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத இயக்கங்கள் செயற்பட அனுமதிக்க மாட்டேன் என்றும் தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்திருந்தார். நவாஸ் இந்தியாவுடனும் ஆப்கானிஸ்த்தானுடனும், அமெரிக்காவுடனும் நட்புறவை விரும்புவதாகத் தெரித்துள்ளார். 1999-ம் ஆண்டு இந்தியாவிற்கும் பாக்கிஸ்த்தனிற்கும் இடையில் நடந்த கார்கில் போரைத் தொடர்ந்து அப்போது தலைமை அமைச்சராக இருந்த நவாஸை அப்போதைய தளபதி பர்வேஸ் முஷாரஃப் பதவியில் இருந்து தூக்கி எறிந்தார். பாக்கிஸ்த்தானியப் படையினர் எல்லை தாண்டி கார்கிலில் நிலைகொண்ட செய்தி அப்போதைய இந்திய தலைமை அமைச்சர் அடல் பிஹாரி வாஜ்பாய் தொலைபேசியில் சொல்லித்தான் தெரியும் எனப்படுகிறது. இதைத் தொடர்ந்து எழுந்த நாவஸிற்கும் முசஃப் முறுகலில் நவாஸைத் தூக்கி எறிந்தார். படைத்துறையினருடன் நல்ல உறவைக் கொண்டிராத நவாஸால் பாக்கிஸ்த்தானின் வெளியுறவுக் கொள்கையில் அதிக செல்வாக்குத் செலுத்தும் படைத்துறையினரின் சம்மதத்தை பெற்று இந்தியாவிற்கு நட்புக்கரம் நீட்ட முடியுமா? ஆனால் நவாஸின் வெற்றிக்கு உதவி வழங்கிய பாக்கிஸ்த்தான் முதலாளிகள் இந்தியாவுடனான நட்புறவை மேம்படுத்துவதன் மூலம் தமது இலாபத்தைப் பெருக்கலாம் என உறுதியாக நம்புகின்றனர். இந்தியாவில் பல பத்திரிகைகளும் பெரு வர்த்தகர்களும் நவாஸின் வெற்றியையிட்டு மகிழ்ச்சியடைந்துள்ளன. இந்திய அரசு நவாஸை இந்தியா வரும்படி விடுத்த அழைப்பை பாராதிய ஜனதாக் கட்சி அவசரப்பட்டு செய்யத வேலை என விமர்ச்சித்துள்ளது. நவாஸ் தனது பதவியேற்பு வைபவத்திற்கு இந்தியத் தலைமை அமைச்சரை தனது பதைவியேற்பு வைபவத்திற்கு அழைத்துள்ளார்.

அமெரிக்காவும் நவாஸும்
பின் லாடனுன் தனது நட்பைப் பெருமையாகச் சொல்லும் ஷரிஃப் நவாஸுடன் அமெரிக்காவின் உறவு எப்படி அமையப் போகிறது? 2014இல் ஆப்கானிஸ்த்தனில் இருந்து வெளியேறவிருக்கும் அமெரிக்காவிற்கு தலிபானுடன் இரகசிய ஒப்பந்தம் செய்யும் நவாஸின் ஆட்சியை எப்படிக் கையாளப் போகிறார்கள்? தீவிரவாதத்தைத் தேர்தலின் போது கடுமையாகக் கண்டித்த நவாஸ் எந்த ஒரு தீவிரவாத இயக்கத்தையும் பெயர் சொல்லிக் கண்டிக்கவில்லை. தலிபானுடன் பேச்சு வார்த்தை நடத்துவேன் எனச் சொல்லும் நவாஸும் தலிபானை ஒழித்துக் கட்டத் துடிக்கும் அமெரிக்காவும் எப்படி ஒன்றாகச் செயற்படப் போகிறார்கள்? இவை நவாஸின் வெற்றிக்குப் பின்னால் எழுந்துள்ள கேள்விகள். Sipah-e-Sahaba Pakistan என்னும் தடைசெய்யப்பட்ட இயக்கத்துடன் நவாஸின் கட்சிக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. பதினெட்டுக் கோடி மக்கள் தொகையில் பத்துக் கோடியினர் 25 வயதிற்கு உட்பட்டவர்கள். இது அமெரிக்க முதலாளிகளுக்கு ஒரு நல்ல சந்தை வாய்ப்பாகும். பிரிக்ஸ்(BRICS) நாடுகளுக்கு வெளியில் இது ஒரு பெரிய சந்தை வாய்ப்பாகும். வளர்ந்து வரும் சீன ஆதிக்கத்தை சமப்படுத்த அமெரிக்காவிற்கு பாக்கிஸ்த்தானுடனான உறவு மிக முக்கியமாகும். தனியார் மயமாக்குதல் போன்றவற்றில் நம்பிக்கையுள்ள உருக்குத் தொழிற்சாலை முதலாளி நவாஸ் அமெரிக்க முதலாளிகளுக்கு உகந்தவராக இருக்கலாம்.

நவாஸின் பெரும் சவாலாக பொருளாதாரம்.

மிக மோசமான மின்சாரத் தட்டுப்பாடு, பணவீக்கம், அந்நியச் செலவாணித் தட்டுப்பாடு, ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாக்கிஸ்த்தானியப் பொருளாதாரத்திற்கு நவாஸ் புத்துயிர் அளிப்பார் என முதலீட்டாளர்கள் நம்புகிறார்கள். நவாஸின் வெற்றியைத் தொடர்ந்து பாக்கிஸ்த்தனியப் பங்குச் சந்தைச் சுட்டெண் அதிகரிப்பு அடைந்துள்ளது. நவாஸின் கொள்கைகளான தாராளமயமாக்கலும் தனியார் மயமாக்கலும் முதலீட்டாளர்களுக்கு உகந்தவை.

மிகப் பெரும் சவாலாக படைத்துறை

நவாஸ் எதிர் நோக்கும் சவால்கல் எல்லாவற்றிலும் மோசமான சவால் பாக்கிஸ்த்தானின் படைத்துறையைச் சமாளிப்பதே. பாக்கிஸ்த்தனின் வெளியுறவுக் கொள்கையிலும் பாதுகாப்புக் கொள்கையிலும் படைத்துறையினர் பெரும் செல்வாக்குச் செலுத்தி வருகின்றனர். பாக்கிஸ்த்தான் சுதந்திரம் அடைந்த பின்னரான காலத்தில் அரைப்பகுதி அங்கு படைத்துறையினரின் ஆட்சியே நிலவியது.

தேறுமா பாக்கிஸ்த்தான்
இந்தத் தேர்தல் பாக்கிஸ்த்தானைப் பொறுத்தவரை ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது. அது பாக்கிஸ்த்தானை எந்த வழியில் இட்டுச் செல்லும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். விரைவில் நவாஸ் வாஷிங்டன் செல்லலாம் அல்லது அமெரிக்க அரச செயலர் ஜோன் கெரி பாக்கிஸ்த்தான செல்லலாம் அல்லது இரண்டும் நடக்கலாம். இது நிச்சமாக நடக்கும். அதன் பின்னர் பாக்கிஸ்த்தானிற்கான நிதி உதவியை அமெரிக்கா அதிகரிக்காலம். ஆனால் பாக்கிஸ்த்தான் தேறுவதாயின் தலிபான்கள் அடக்கப்பட வேண்டும் அல்லது கொள்கை மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும். சஷ்டியப்பப் பூர்த்தி செய்த பாக்கிஸ்த்தான் இன்னும் வயசுக்கு வரவில்லை. வெறும் அணுக்குண்டு மட்டும் ஒரு நாட்டின் பலத்தை தீர்மானிக்காது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...