Tuesday, 9 April 2013

சர்ச்சையைக் கிளப்பிய மார்கரெட் தட்சரின் இறப்புத் தொடர்பான விமர்சனங்கள்

முன்னாள் பிரித்தானியப் பிரதமர் மார்கரெட் தட்சர் பதவியில் இருக்கும் போது சர்சையைக் கிளப்பிக் கொண்டே இருந்தார். அதே போல் இறந்த பின்னரும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். தட்சர் இறந்தவுடன் சூனியக்காரி போய்த் தொலைந்தாள் என்ற முகவேட்டு வாசகம், மாணவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம், பலர் தெருவில் இறங்கி குத்தாட்டம் என்பவை ஒரு புறமும் மறுபுறம் பல தலைவர்கள் புகழஞ்சலி என சர்ச்சை கிளம்பியுள்ளது.

நகம் இழந்த கிழப்புலி என விமர்சிக்கப்பட்ட உலகப் பெருவல்லரசான பிரித்தானியாவின் தலையை உலக அரங்கில் மீண்டும் நிமிர வைத்தவர் தட்சர் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். ஆர்ஜெண்டீனாவுடன் போரில் வெற்றி, அரச கடன்கள் பெருமளவு மீளளீப்பு, அமெரிக்காவுடன் சிறப்பு உறவு என அசத்தியவர் தட்சர் எனப் புகழ்கின்றனர் சிலர். அரசுக்கு சொந்தமான வியாபாரங்களைத் தனியார் மயமாக்குதல் மூலம் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வரலாம் என்பதை நிரூபித்தவராக தட்சர்  கருதப்படுகிறார். இந்தப் பொருளாதார முன்மாதிரியைப் பல நாடுகள் பின் பற்றின. அரசு வறியவர்களுக்குச் செய்யும் சமூகநலன் திட்ட உதவிகளைக் குறைத்தமையும் உள்ளூராட்சி வரிகளை வீடுகளின் மதிப்பு ஏற்ப இல்லாமல் செய்தார். தனிநபர்களுக்கு அவர்களின் வருமானத்தைக் கருத்தில் கொள்ளாது எல்லோருக்கும் ஒரே மாதிரியான உள்ளூராட்சி வரிகளை விதித்தது அவரின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.

நாட்டின் ஒரு பகுதியை அழித்த இருதயமற்றவர் என பல இடதுசாரிகள் அவரை விமர்சிக்கின்றனர். தட்சர் இறந்துவிட்டார் என்ற செய்திக்கு முகவேட்டில் மணித்தியாலம் ஒன்றிற்கு 2500 விருப்பங்கள் தெரிவிக்கப்பட்டன. பிபிசியின் செய்தி வாசிப்பாளர் தட்சரின் இறப்புச் செய்தியை வாசிக்கும் போது கறுப்புக் கழுத்துப் பட்டி அணியவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளார். பிரித்தானியப் பாராளமான்ற உறுப்பினர் ஜோர்ஜ் கலவே  “Tramp the dirt down”  என தனது டுவிட்டரில் மார்கரெட் தட்சரின் இறப்பை விமர்சித்தது கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. நெல்சன் மண்டேலாவை மார்கரெட் தட்சர் பயங்கரவாதி என அழைத்ததைப் பலர் நினைவு கூர்ந்தனர். ஆபிரிக்க தேசியக் காங்கிரசு ஒருநாளும் ஆட்சிக்கு வராது எனச் சூழுரைத்த தட்சர் தென் ஆபிரிக்காவிற்கு எதிராக பொருளாதாரத் தடை கொண்டு வர மறுத்தார். அவர் மேல் உலகம் செல்லும் போது அங்குள்ள ஆபிரிக்க தேசியக் காங்கிரசு உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்கின்றனர் சிலர். வட அயர்லாந்து விடுதலைப் போராளிகளும் தட்சரைக் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

மார்கரெட் தட்சர் இறந்த செய்தி கேட்டு பிரித்தானியாவின் பல நகரங்களில் தெருவில் இறங்கி மக்கள் குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர். இலண்டனின் முன்னாள் நகரபிதா கென் லெவிங்ஸ்டன் அவர்கள் தட்சரின் அரசியல் அடிப்படியில்பிழையானது என்றார். தட்சரின் இறப்புச் செய்தி நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களுக்கு மிகச் சிறந்த செய்தி என்றார் அவர்களது தொழிற்சங்கத் தலைவர். டிங் டொங் சூனியக்காரி செத்துத் தொலைந்தாள் என்று பாடி மகிழ்கின்றனர் சிலர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு வலைத்தளம் மார்கரெட் தட்சர் இறந்துவிட்டாரா என்ற கேள்வியைப் பதிவு செய்து வைத்திருந்தது. இன்று வரை இருக்கும் அந்தக் கேள்விக்கான பதில் ஆம் எனப்பதிவிடப்பட்டது. இந்த வலைப்பதிவை முகவேட்டில் பகிர அதற்கு ஒரு மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து ஐநூறு பேர் படி விருப்பம் தெரிவித்தனர். லிவர்ப்பூல் நகரசபை உறுப்பினர் தட்சர் இறந்ததைப்பற்றி ஒன்றுமில்லை அவர் பிறந்திருக்கக் கூடாது என நினைக்கும் பல இலட்சம் மக்களின் கவலையை தானும் பகிர்ந்து கொள்கின்றேன் என்றார்.No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...