Wednesday, 6 March 2013

இரா சம்பந்தன் பேசாத பொருள்கள்

இலங்கைத் தமிழர்களின் பிரச்சனையைப் பற்றிப் பேசும் போது அதில் இந்தியாவின் சதியைப் பற்றிப் பேசாமல் விடுவது முக்கைப்பற்றி மூச்சைப் பிடித்துக் கொண்டு மூன்று மணித்தியாலம் பேசுகையில் சளியைப் பற்றிப் பேசாமல் விடுவது போலாகும்.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திரு இரா சம்பந்தன் அவர்கள் 03/03/2013 இரவு இலண்டன் தமிழ்த் தொலைக் காட்சி ஒன்றிற்கு போசாப் பொருள் என்ற நிகழ்ச்சியில் பேட்டியளிக்கும் போது ஈழத் தமிழர்களுக்கு இந்தியா செய்த துரோகங்கள் எதையும் பேசாமல் விட்டார்.

முப்பது குழுக்களாக தமிழ் இளைஞர்கள் பிரிந்து நின்று படைக்கலன் ஏந்திப் போராடியதைப் பற்றிக் கேட்ட போது திரு சம்பந்தன் அவர்கள் அந்தக் குழுக்களைப்  பிரித்து வைத்தது இந்தியா என்பதைப் பேசாமல் விட்டார். இந்தியா பிரித்து வைத்தது மட்டுமல்ல டெலோ இயக்கத்துடன் இணைந்து விடுதலைப் புலிகளை அழிக்கத் திட்டமிட்டதையும் பேசாமல் விட்டார்.

பிரித்தானியக் குடியேற்ற ஆட்சியின் டொனமூர் ஆணைக்குழுவின் முன்னர் கண்டியச் சிங்களவர்கள் இலங்கையை கண்டித் தமிழர்களுக்கு என்று ஒரு பிரதேசம், கீழ்நாட்டுச் சிங்களவர்களுக்கு என்று ஒரு பிரதேசம், தமிழர்களுக்கு என்று ஒரு பிரதேசம் என்றும் பிரித்து சமஷ்டி ஆட்சி கோரிக்கையை முன்வைத்ததையும் அதற்குத் தமிழர்கள் ஆதரவு தெரிவிக்காததையும் கூறிய திரு சம்பந்தன் திருவாளர்கள் சௌமியமூர்த்து தொண்டமானையும் ஜீ ஜீ பொன்னம்பலத்தையும் சேரவிடாமல் அப்போதைய பாரதப் பிரதமர் ஜவகர்லால் நேரு பிரித்து வைத்ததைப் பேசாமல் விட்டார். அதனால் ஏற்பட்ட பிளவு மலையகத் தமிழர்களின் வாக்குரிமையைப் பிரித்ததை திரு சம்பந்தன் பேசாமல் விட்டார். தொண்டமான் நேருவிடம் முறையிட்டபோது இது உள்நாட்டுப் பிரச்சனை இதில் என்னால் தலையிட முடியாது என்று கைவிரித்து விட்டதை திரு சம்பந்தன் பேசவில்லை.

ஈழப் போராளிகளைப் பற்றிக் கேட்ட போது திரு சம்பந்தன் "அவர்களது போராட்டத்தை நாம் மதிக்க வேண்டும் . அதை எவரும் மறுக்க முடியாது. அவர்களை அரசாங்கம் பயங்கரவாதிகள் எனக் கூறலாம். ஆனால் ஆரம்பத்தில் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய  போதிய நியாயம் இருந்தது. இதை நான் பாராளமன்றத்தில் எடுத்துக் கூறியுள்ளேன். இதற்கு முன்னரும் கூறியுள்ளேன். ஆனால் அவர்களிடம் ஜனநாயகம் இருக்கவில்லை. அவர்கள் மனித உரிமைகளை மதிக்கவில்லை. " எனக் கூறிய சம்பந்தன் அவர்கள் தான் தென் ஆபிரிக்கத் தேசியக் காங்கிரசைச் சேர்ந்தவர்களைச் சந்தித்த போது தமிழர்கள் போராட்டத்தில் அரசியிலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் படைக்கலப் போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்றார். தம்மிலும் பார்க்க 12 மடங்கு பலத்தைக் கொண்டவர்களுடன் போராடும் ஓர் இயக்கம்; மிக மோசமான துரோகிகள் சூழ்ந்த ஓர் இயக்கம்; ஜனநாயகத்தைப் பற்றி தமது படைக்கலப் போராட்டத்தில் வெற்றி பெறும் மட்டும் சிந்திக்க முடியாத சூழல் இருந்தது என்பதை திரு சம்பந்தன் பேசாமல் விட்டார். ஆபிரிக்க தேசிய காங்கிரசு தமது நாட்டில் பெரும்பான்மையான மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடியது. அவர்களுக்கு அணிசேராநாடுகளினதும் இரண்டாம் அகில நாடுகளினதும் பல மேற்கு ஐரோப்பிய நாடுகளினதும் ஆதரவு இருந்தது. அவர்கள் உள்நாட்டிலும் பன்னாட்டு அரங்கிலும் தமது அரசிலை முன்வைக்க முடியும். ஆனால் தமிழர்களின் அரசியலை சிங்களவர்கள் முன் வைக்கும் போது எந்தக் கட்டத்திலும் அதை சிங்களவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை திரு சம்பந்தன் பேசவில்லை. இலங்கையைத் தாண்டி தமிழர்கள் தமது அரசியலை பன்னாட்டரங்கில் முன்வைக்கும் போது இது "நம்ம ஏரியா உள்ளே வராதே" என்ற மனப்பாங்குடன் செயற்பட்டு இது தனது பிரச்சனை தானே தீர்த்து வைப்பேன் என்ற மனப் பாங்குடன் திருமதி இந்திரா காந்தி செயற்பட்டதை திரு சம்பந்தன் பேசவில்லை. தமிழர்களின் அரசியல் 26 ஆண்டுகளாக எந்த அதிகாரமும் இல்லாத 13-ம் திருத்தத்திற்குள் முடக்கி வைக்கப்பட்டிருப்பதை திரு சம்பந்தன் பேசவில்லை.  2009-ம் ஆண்டு ஐநா மனித உரிமைக் கழகத்தில் இலங்கையைக் கண்டிக்கும் தீர்மானம் முன் வைக்கப்பட்டபோது அதை இந்தியா இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீரமானமாக மாற்றிய போது தென் ஆபிரிக்காவும் அதற்கு இந்தியாவின் நிர்ப்பந்தத்தின் பேரில் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானத்திற்கு வாக்களித்ததை திரு சம்பந்தன் பேசவில்லை. படைக்கலப் புரட்சியைப் பற்றிய விற்பன்னர்கள் புரட்ச்சிக்கும் ஜனநாயகத்திற்கும் சரிவராது எனச் சொல்லியவற்றை திரு சம்பந்தன் பேசவில்லை.  பி. கு: ஆரம்பத்தில் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நியாயம் இருந்தது என்றார் திரு சம்பந்தன். இப்போது அது இல்லாமல் போய்விட்டதா?

மறைந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் திரு அ அமிர்தலிங்கத்தைப் பற்றிக் கேட்டபோது திரு சம்பந்தன் அவர் இறந்த போது தான் கதறி அழுதேன் என்றார். அவர் தமிழர்களிற்குப் பாரிய பங்களிப்புச் செய்த பெரும் திறமைசாலி என்றார்.  அவர் இருந்திருந்தால் பல நன்மைகள் ஏற்பட்டிருக்கும் என்றார். 1965இல் தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி அரசு அமைத்த போது அதனால் தமிழர்களுக்கு ஒரு நன்மையும் ஏற்படாது என்பதை உணர முடியாத திறமைசாலி அமிர்தலிங்கம் என்பதை திரு சம்பந்தன் பேசவில்லை. 1970-ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அமிர்தலிங்கம் இம்முறை எந்த ஒரு சிங்களக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறாது. தமிழர்களின் ஆதரவுடன்தான் சிங்களக் கட்சிகள் ஆட்சி அமைக்க முடியும். அதனால் எல்லாத் தொகுதிகளிலும் தமிழரசுக் கட்சியை வெற்றி பெற வையுங்கள் என்றார். அவரது உரை சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு துண்டுப் பிரசுரமாக சிங்கள மக்கள் மத்தியில் பெரும் பரப்புரை செய்யப்பட்டது. சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான கூட்டணி இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பானமையுடன் வெற்றியீட்டியது. தமிழர்களுக்கு பாதுகாப்பாக இருந்த சோல்பரி அரசியல் யாப்பின் 29 வது பிரிவுடன் சேர்த்து தமிழர்களின் உரிமைகள் முற்றாகப் பறித்தெடுக்கப்பட்டது. தனது ஊருக்கு தண்ணீர் வசதி செய்து தரும்படி கேட்ட மக்களுக்கு உங்க மனுசிமார் பெரிய தாலிக்கொடி போட்டிருக்கிறார்கள் அதை விற்று உங்கள் ஊருக்கு தண்ணீர் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பியவர் அமிர்தலிங்கம். அடையாள அட்டைச் சட்டம் தமிழர்களுக்கு நன்மை செய்யும் என்று ஊர்காவற்துறை நவரத்தினத்துடன் வாதாடி "வென்றவர்" அமிர்தலிங்கம். பின்னர் சிங்களப் படையினர் அடையாள அட்டைகளை வைத்து தமிழர்களை இனம் கண்டு தாக்குதவற்கு அவை பேருதவி செய்தது. இதையெல்லாம் பேசாமல் விட்டார் திரு சம்பந்தன்.

திரு சம்பந்தன் நீலன் திருச்செல்வத்தின் இறப்பும் பெரும் இழப்பு என்றார். அவர் இருந்திருந்தால் பெரும் நன்மைகள் கிடைத்திருக்கும் என்றார். நீலன் திருச்செல்வமும் பேராசிரியர் ஏ ஜே விலசனும் இணைந்து தற்போது நடைமுறையில் இருக்கும் அரசமைப்பு யாப்பை ஜே ஆர் ஜயவர்த்தனவிற்காக உருவாக்க ஆலோசனை கூறியவர்கள் என்பதையோ அது இலங்கையின் மனித உரிமைகளைக் குழி தோண்டிப் புதைக்க வழி செய்தது என்பதையோ திரு சம்பந்தன் பேசவில்லை.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...