Wednesday, 27 March 2013

ஐபிஎல் கிரிக்கெட்டும் இந்திய பேரினவாதத்தின் அசிங்க முகமும்

ஐபிஎல் துடுப்பாட்டம் தொடர்பாக கடுமையான விவாதங்கள் வட இந்தியாவில் எழுந்துள்ளன. ரைம்ஸ் ஒஃப் இந்தியா பத்திரிகையில் ஜெயலலிதாவின் முடிவு பற்றிய செய்தி வெளிவிடப்பட்டு அதற்கு காரசாரமான பின்னூட்டங்கள் இடப்பட்டன. ஒரு இசுலாமியர் "இப்போது 80 மில்லியன் தமிழர்களுக்குத் தெரிந்திருக்கும் ஏன் ஜின்னா எல்லாப் பார்ப்பனர்களையும் துரத்திவிட்டு பாக்கிஸ்த்தானை தனிநாடாக பிரித்தார் என்று" எனப் பின்னூட்டமிட்டிருந்தார்.

தனது நாற்பதிலும் வெற்றி பெறும் இலட்சியத்தைக் கருத்தில் கொண்டு ஜெயலலிதா மீண்டும் ஒரு துணிச்சலான முடிவை எடுத்து இலங்கையைச் சேர்ந்த வீரர்கள், நடுவர்கள், அதிகாரிகள் மற்றும் களப்பணியாளர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று போட்டி அமைப்பாளர்கள் உறுதி அளித்தால் மட்டுமே, ஐ.பி.எல். போட்டிகளை தமிழ் நாட்டில் நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்கும் என்று இந்தியப் பிரதம மந்திரிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

NDTV யில் ஜெயலலிதாவின் அதிரடி முடிவு தொடர்பாகக் காரசாரமான விவாதம் நடைபெற்றது. அதை NDTVயின் சிறிநிவாசன் ஜெயின் நெறிப்படுத்த காங்கிரசுக் கட்சியின் மாநிலங்களவை(ராஜ்ய சபை) உறுப்பினர் அபிஷேக் சிங்வி, துடுப்பாட்ட வீரர் முத்தையா முரளீதரன், இந்து ராம், அவுட்லுக் பத்திரிகை ஆசிரியர் கிருஷ்ணா பிரசாத், நடிகை குஷ்பு, புது டில்லிக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவாசம், முன்னாள் இந்தியக் துடுப்பாட்ட வீரர் அதுல் வாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேற்படி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை, குஷ்பு மட்டும் ஜெயலலிதாவின் செயலை ஆதரிப்பவராகக் காணப்பட்டார். அவரைத் தவிர மற்ற எல்லோரும் ஜெயலலிதாவின் செயலை எதிர்ப்பவர்களாக இருந்த போதிலும் நிகழ்ச்சியை நெறிப்படுத்திய NDTV யின் சிறிநிவாசன ஜெயின் தொடக்கத்தில் இருந்து முடியும் வரையும் ஜெயலலிதாவின் செயலை கடுமையாக எதிர்ப்பவராகவே இருந்தார். அவரது எதிர்ப்பு மற்றவர்களின் எதிர்ப்பிலும் பார்க்க பல மடங்கு கடுமையாக இருந்தது. அவர் தமிழ் மாணவர்களின் கிளர்ச்சி தொடர்பாகக் கதைக்காமல் முடி மறைப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.  ஆனால் தமிழ்நாட்டில் சட்டமும் ஒழுங்கும் முழுமையாக சரிந்து விழுந்துவிட்டது (total collapse of law and order) என்பதை அவர் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.

பொய்களை அவிழ்த்து விட்ட முரளி
சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இலங்கையில் போர் முடிந்த பின்னர் மக்கள் அமைதியாக வாழ்கின்றனர் என்றார். தனக்கு ஒரு தமிழனாக ஒரு போதும் பிரச்சனை இருந்திருக்கவில்லை என்றார். அவரது தகப்பனது பிஸ்கட் தொழிற்சாலை 1977ம் ஆண்டு சிங்களக் காடையர்களால் அடித்து நொறுக்கப்பட்டு எரியூட்டப்பட்டதை முரளி மறந்து விட்டாரா? ஆரம்பக் காலத்தில் அவர் இலங்கை அணியில் இடம் பிடிக்க பட்ட சிரமத்தையும் முரளி மறந்து விட்டார். அர்ஜுண ரணதுங்க முரளியைப் பிடிக்காத ஒருவராக இருந்ததையும் பின்னர் முரளியின் அபரிமித திறமையைக் கண்டு அவரை இலங்கை அணியில் இணைத்துக் கொண்டார்.

குஷ்புவை ரவுண்டு கட்டித் தாக்கினார்கள்
பாவம் குஷ்பு. அவர் மட்டும் தனிமையாக வாதாட வேண்டிய நிலைமை. அவரது துணிவும் சிறந்த உச்சரிப்புடன் கூடிய நல்ல ஆங்கிலப் பேச்சு பாராட்டப்படவேண்டியதே. ஹதராபாத் சன்ரைஸேர்ஸ் கலாநிதி மாறனுடையது என்றும் அந்தஅணியின் தலைவர் சிங்களவரான குமார் சங்ககார என்றும் அணியின் இன்னொரு வீரர் சிங்களவர் என்றும் நிகழ்ச்சியை நெறிப்படுத்திய சிறிநிவாசன் ஜெய்ன் கேட்ட போது குஷ்பு ஒருவாறு சமாளித்து விட்டார். குஷ்புவும் வேண்டுமென்றால் ஐபிஎல் ஆட்டத்தை சென்னையில் நடாத்துவதை நிறுத்துங்கள் என்றார். இதனால் கிரிக்கெட் ரசிகர்களின் கோபத்தை ஜெயலலிதாவிற்கு எதிராகத் திருப்புவது குஷ்புவின் தந்திரமாக இருக்கலாம்.

காங்கிரசுக்காரரும் சிங்களவரும் முரண்பட்டனர்.
புது டில்லிக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவாசம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பிழையான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதென்றும் அவர்கள் பொய்யான படங்களை வைத்துக் கொண்டு போராடுகிறார்கள் என்றும் சொன்னார். விடுதலைப் புலிகளின் அட்டூழியங்களை தமிழ்நாட்டு மாணவர்கள் சிங்களப்படையினரின் அட்டூழியங்களாகக் காட்டுகிறார்கள் என்றார். அவரைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த காங்க்ரசு மாநிலங்களவை உறுப்பினர் அபிஷேக் சிங்கவி இலங்கை சும்மா படங்கள் போலியானவை என்று சொல்லிக் கொண்டு திரிவதில் பயனில்லை. படங்கள் போலியானவை என்பதை இலங்கை நிரூபிக்க வேண்டும் என்றார். அத்துடன் சுதந்திரமான விசாரணை வைத்தால் எல்லாம் வெளிவரும் என்றார். (போர்க்குற்றத்தில் காங்கிரசு ஆட்சியின் பங்கும் வெளிவரும் ஐயா.)

விளையாட்டில் அரசியல் எப்போதும் உண்டு
நிகழ்ச்சியை நெறிப்படுத்திய சிறிநிவாசன் ஜெய்ன் அரசியல்வாதிகள் கிரிக்கெட்டை கால்பந்தாடுகிறார்கள் என்பதையும் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தார். நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அத்துல் வாசன் சோவியத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்கா பங்குபற்றாமையையும் இரு ஒலிம்பிக் போட்டிகளில் சோவியத் ஒன்றியம் பங்கு பெறாமல் விட்டதையும் சுட்டிக்காட்டினார். அத்துடன் தமிழர்களுக்கு என்று பிரச்சனையை இருந்தால் இந்தியா அதனைக் கவனத்தில் எடுத்து அதை ஐக்கிய நாடுகள் சபையில் எடுத்துரைக்க வேண்டும் என்றார். அவர் கதைதது நியாயமாக இருந்தாலும் தமிழர்களின் பிரச்சனைக்குக் காரணமே இந்தியாதான் என்பதை அவர் அறியாமல் இருப்பது கவலையளிக்கிறது. சோவியத் அமெரிக்க முரண்பாடுகளை அறிந்து வைத்திருப்பவர் இந்தியா இலங்கையில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட அபபாவிகள் கொல்லப்பட்டதை அறியாமல் இருக்கிறார்.

இந்தியப் பேரினவாதத்தின் அசிங்க முகம்
கருணாநிதியின் திமுக ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேறியதில் இருந்து வட இந்தியர்களின் பேரினவாதக் கொள்கையின் அசிங்க முகம் பத்திரிகைகளில் கட்டுரை எழுதுபவர்கள், தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபற்றுபவர்கள், பின்னூட்டம் கொடுப்பவர்கள் மூலமாகத் தெரிகிறது. மாணவர் போராட்டத்திற்கு அவர்கள் செவி கொடுப்பார்கள் மாதிரித் தெரியவில்லை.  எல்லோரும் இலங்கை நட்பு நாடு என்றும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு மாநில மக்களின் உணார்சிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்றும் வாதாடுகிறார்கள். இவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படவில்லை. இவர்கள் ஏதோ இலங்கை தென் இந்தியா போல் பேசுகிறார்கள். இலங்கை தென் இந்தியா என்றால் தமிழ்நாடு தமிழர் நாடு ஆகலாம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...