Monday, 18 February 2013

புதுமையடையும் படைக்கலன்களும் எல்லை தாண்டிய பயங்கரவாதமும்.

பாக்கிஸ்த்தானின் வஜ்ரிஸ்த்தான் பிராந்தியத்தின் வட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தலிபான் போராளிகள் மூவர் இருக்கின்றனர். தொலைக்காட்சியில் மல்லிகா ஷெரவாத் ஒரு இந்திப் பாடலுக்கு நடனமாடிக்கொண்டிருக்கிறார். அதை இரசித்தபடி அவர்கள் தங்கள் தாக்குதல் திட்டமொன்றை வகுத்துக் கொண்டிருக்கின்றனர். குறித்த வீட்டில் தலிபான் போராளிகள் இருக்கிறார்கள் என்ற தகவல் அமெரிக்க உளவுத் துறைக்குக் கிடைக்கிறது. குறித்த வீட்டின் புவியியல் நிலையைத் துல்லியமாகக் கணித்து ஆப்கானிஸ்த்தானில் உள்ள ஒரு சிஐஏயின் ஆளில்லாவிமானத் தளத்திற்கு தகவல் அனுப்பப்படுகிறது. அங்கிருந்து சிறுவர்களின் பட்டம் அளவுள்ள சிறு ஆளில்லா விமானங்கள் வட வஜ்ரிஸ்த்தானில் உள்ள குறித்த வீட்டை நோக்கிப் புறப்படுகின்றன.

குறித்த வீட்டை அடைந்த விமானங்கள் மேலிருந்தபடியே அங்கிருந்து வரும் வெப்பத்தை அளவிட்டு வீட்டில் மூன்றுபேர் இருக்கின்றனர் என்ற தகவலையும் அவர்களின் இருப்பிடங்களையும் அறிந்து கொள்கிறது. உடன் ஒரு விமானம் அந்த வீட்டு சாளரம்(ஜன்னல்) கதவை உடைக்கிறது. இன்னொரு சிறு விமானம் உள் நுழைந்து அங்கிருப்பவர்களில் ஒருவரின் மடியில் இறங்கி வெடிக்கிறது. மூவரும் இறக்கின்றனர்.

ஆப்கானிஸ்த்தானின் எல்லையுடன் அமைந்துள்ள ஒரு பாக்கிஸ்த்தானிய கிராமத்தில் அல் கெய்தாவினர் பெருமளவில் கூடி இருப்பதாக அமெரிக்க உளவுத் துறைக்குச் செய்தி கிடைக்கிறது. ஆப்கானிஸ்த்தானின் மறைவான இடமொன்றில் இருக்கும் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானத் தளத்தில் இருந்து ஒரு ஆளில்லா விமானம் புறப்பட்டுச் சென்று அக் கூட்டத்தினர் மீது ஏவுகணைக் குண்டுகளை வீசுகிறது. பலர் கொல்லப்படுகின்றனர். அந்த இடத்தில் இரு இனக் குழுமங்களிடையே கனிம வளங்கள் தோண்டுதலுக்கான உரிமை தொடர்பாக ஏற்பட்ட பிணக்கைத் தீர்க்க கிராமத்துப் பெரியவர்கள் கூட்டிய கூட்டம் அது. அதில் அல் கெய்தா உறுப்பினர்கள் எவரும் இல்லை. அமெரிக்க ஆளில்லா விமானத்தில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் அப்பாவிப் பொதுமக்கள் என அமெரிக்கா அறிந்து கொள்கிறது.

தற்போதைய ஆப்கானிஸ்த்தான் போர்க்கள நிலைமை இப்படித்தான் இருக்கிறது. இதெல்லாம் விஸ்வரூபத்தில் காட்ட முடியாது. நாடுகளுக்கு இடையிலான இறைமை தொடர்பாக Westphalian international legal order என்னும் ஒழுங்கு இருக்கிறது. அதன்படி:

1. எல்லா நாடுகளும் தமது உள்நாட்டு விவகாரங்களை தாமே பார்த்துக் கொள்ளும் உரிமையுடையன.
2. ஒவ்வொரு நாடும் சட்ட ரீதியாக சமமானவை
3. ஒரு நாட்டுக்குள் மற்ற நாட்டுப்படைகள் புகுந்து தாக்குதல் நடத்த முடியாது.

அமெரிக்க ஆளில்லா விமானங்களின் தாக்குதல்கள் அப்பட்டமான ஒரு எல்லை தாண்டிய பயங்கரவாதமே.  அமெரிக்காவுடன் பாக்கிஸ்த்தான் அரசு, படைத்துறை, உளவுத்துறை ஆகியன இரட்டை வேடம் போடுகின்றன. ஒரு புறம் அமெரிக்காவை தமது நாட்டுக்குள் புக அனுமதிக்கின்றன மறுபுறம் அதை எதிர்ப்பது போல் பாசாங்கு செய்கின்றன. பின் லாடன் கொலை தவிர அமெரிக்கா பாக்கிஸ்த்தானூக்குள் புகுந்து நடத்தும் தாக்குதல்கள் எல்லாம் பாக்கிஸ்த்தானின் அனுமதியுடனே நடக்கின்றன. மேற்கூறியவை போன்ற அமெரிக்க ஆளில்லா விமானங்களின் தாக்குதல்கள் யேமன், சூடான், சோமாலியா, எதிரித்தியா ஆகிய நாடுகளில் நடந்து கொண்டே இருக்கின்றன. பாக்கிஸ்த்தானைப் போலல்லாமல் இந்த நாடுகளில் அரசுகளின் எதிர்ப்புக்கு மத்தியிலேயே நடக்கின்ற எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதல்களே.

பராக் ஒபாமாவிற்குப் பிடித்த தாக்குதல்கள்
பராக் ஒபாமா பதவிக்கு வந்ததில் இருந்தே அவர் ஆளில்லா விமானத் தாக்குதல்களில் அதிக விருப்பமும் அக்கறையும் காட்டி வருகிறார். அமெரிக்கப் படையினருக்கு கணனி விளையாட்டுப் போன்ற ஆளில்லா விமானத் தாக்குதல்களால் ஆப்கானிஸ்தானிலும் யேமனிலும் பல அல் கெய்தா மற்றும் தலிபான் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஆளில்லாப் விமானத் தாக்குதல்களிற்கு தனக்கு பொறுப்பும் கூறும் வகையற்ற ஒரு தான் தோன்றித்தனமான அதிகாரம் இருக்கிறது என்றும் இருக்க வேண்டும் என்றும் பராக் ஒபாமா கருதுகிறார். சில அமெரிக்கப் பாராளமன்ற உறுப்பினர்கள் இத் தக்குதல்கள் தொடர்பாக விசாரிக்க இரகசிய நீதி மன்றங்கள் தேவை எனக்கருதுகின்றனர்.

ஆபிரிக்காவில் மேலும் தளங்கள்
வட ஆபிரிக்காவில் அண்மைக் காலங்களாக அல் கெய்தா இயக்கத்தினர் தமது நடவடிக்கையை விரிவு படுத்தியமையைத் தொடர்ந்து அமெரிக்கா அங்கு பல புதிய ஆளில்லாப் போர் விமானத் தளங்களை அமைத்து வருகிறது. மாலியில் அல் கெய்தா தனது கைவரிசையைக் காட்டியமையைத் தொடர்ந்து நிகர் நாட்டில் அமெரிக்கா தனது ஆளில்லாப் போர் விமானத்தளத்தை அமைக்க நிகர் நாடு ஒத்துக் கொண்டுள்ளது. மாலிக்கு நடந்தது தங்களுக்கும் நடக்கக் கூடாது என நிகர் நாட்டு அமெரிக்க சார்பு ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள். நிகர் நாட்டில் தளம் அமைக்கும் திட்டம் வெள்ளை மாளிகையின் உத்தரவிற்கு காத்திருக்கிறது. 

அமெரிக்கக் குடி மக்களைக் கொல்லலாமா?
அமெரிக்கக் குடியுரிமையுடைய இசுலாமியர்கள் அல் கெய்தாவில் இணைந்து ஆப்கானிலும் யேமனிலும் செயற்பட்டு வருகின்றனர். இவர்களையும் தேடிக் கொன்றுள்ளன அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள். 2011இல் யேமனில் கொல்லப்பட்ட அன்வர் அவ்லாக்கி என்னும் அல் கெய்தாவின் முக்கிய தலைவரும், அல் கெய்தாவின் பிரச்சாரப் பீராங்கியான சமீர் கான் ஆகிய இருவரும் குறிப்பிடத்தக்க அமெரிக்கக் குடிமகனக்ளாகும். இது அமெரிக்க நீதிமன்றில் விசாரிக்கப் படவேண்டிய ஒன்று என்று சில சட்ட அறிஞர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் நோபல் பரிசு பெற்ற தென் ஆபிரிக்க மனித நேயச் செயற்பாட்டாளர் டெஸ்மண்ட் டுடு அவர்கள் "அமெரிக்க மக்கள் தமது உயிர்களிலும் பார்க்க மற்ற நாட்டு உயிர்கள் பெறுமதி குறைந்தது என்று எண்ணுகிறார்களா?; நாங்கள் உங்களைப் போல் மனிதரகள் இல்லாமல் அடிமைகளா?" என்று கேள்விகள் எழுப்பியுள்ளார். அனைவரும் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு குற்றவாளிகளாகக் காணப்பட்ட பின்னரே தண்டிக்கும் உரிமை அமெரிக்காவிற்கு இருக்கிறது என்பது அவரின் விவாதம்.

சட்டங்களுக்கு அப்பாற்பட்டது
அமெரிக்க உளவுத் துறையின் ஆளில்லாப் போர் விமானங்களின் நடவடிக்கைகள் அமெரிக்காவினதோ அல்லது வேறு எந்த ஒரு நாட்டினதோ நீதித் துறையின் நியாயாதிக்கத்திற்கு உள்பட்டதல்ல என்று கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை இது தொடர்பாக விசாரிப்பதாகச் சொன்னது. சில மனித உரிமை அமைப்புக்கள் சாட்டுக்கு தமது அதிருப்தியை வெளிப்படுத்தின.

வட வாஜிரிஸ்த்தான்
அமெரிக்காவின் விமானத் தாக்குதல்களால் வட வாஜிரிஸ்த்தான் பிராந்தியத்தில் ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பாக தனக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் படி பாக்கிஸ்த்தானியப் பிரதம நீதியரசர் தோஸ்த் முகமட் கான் பாக் அரசிடம் உத்தரவிட்டார். பாக் பிரதி சட்டமா அதிபர் சமர்ப்பித்த அறிக்கையின் படி:
  • 2008-ம் ஆண்டு 8 தாக்குதல்களில் 52 பேரும், 
  • 2009-ம் ஆண்டு 9 தாக்குதல்களில்  82 பேரும், 
  • 2010-ம் ஆண்டு 73 தாக்குதல்களில் 424பேரும், 
  • 2011-ம் ஆண்டு 38 தாக்குதல்களில் 241 பேரும், 
  • 2012-ம் ஆண்டு 19 தாக்குதல்களில் 95பேரும் கொல்லப்பட்டனர். மொத்தத்தில் 24 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த அறிக்கை சரியானதல்ல என பாக்கிஸ்த்தானிய உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இது பாக்கிஸ்த்தானிய அரசின் இரட்டை வேடத்தை எடுத்துக் காட்டுகிறது. பாக்கிஸ்த்தானில் மட்டும் ஆளில்லாப் போர் விமானத் தாக்குதலால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2500இல் இருந்து 3500 வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. வாஜிரிஸ்த்தான் மக்கள் அடிக்கடி பாக் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்க விமானத் தாக்குதல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதுண்டு. கொல்லப் படுபவர்களில் 18 முதல் 23 % ஆனவர்கள் பொது மக்களே என்கிறது சி.என்.என் செய்தி நிறுவனம். எல்லாம் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்னும் போர்வையிலேயே அரங்கேற்றப்படுகின்றன. பாக்கிஸ்த்தான் ஆடும் இரட்டை வேட நாடகத்திற்குப் பரிசாக ஐக்கிய அமெரிக்காவிடமிருந்து பல பில்லியன் டொலர்களை நிதி உதவியாகப் பெறுகிறது.

08-02-2013 பிற்பகல் மூன்று மணியளவில் தனது எல்லைக்குட்பட்ட கடற்பிராந்தியத்திற்குள் இரு ரசிய Su-27 விமானங்கள் அத்து மீறிப் பிரவேசித்ததாக ஜப்பான் அறிவித்தது. இவ்வாறே சீன விமானங்கள் அடிக்கடி ஜப்பானியப் பிராந்தியத்துக்குள் நுழைவதுண்டு.

12-02-2013 அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது இந்த ஆண்டுக்கான அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவையினதும் மூதவையினதும் உறுப்பினர்களுக்கான உரையாற்றத் தயாராக இருக்கும் வேளையில் இரசிய விமானப் படையின் Tu-95 “Bear” bombers வெனிசுலேவியாவின் எல்லை ஓரமாக இருந்த அமெரிக்க எல்லைப் பகுதியில் ஊடுருவின.  அவற்றை அறிந்து கொண்ட அமெரிக்கப் பாதுகாப்புப் பிரிவினர் தமது விமானங்களை அனுப்பி அவற்றை விரட்டினர். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் பன்னாட்டரங்கில் தனது முக்கியத்துவம் குறைந்து விடவில்லை என்பதைக் காட்டுவதற்காக இரசியா அடிக்கடி அமெரிக்க மற்றும் பிரித்தானிய வான் பரப்புக்களுக்குள் தனது விமானங்களை அனுப்புவதுண்டு.  இதற்கென தனது விமானங்களின் தொழில் நுட்பத்தைப் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறது இரசியா.

சீனப் படையினர் இந்திய எல்லைகளுக்குள் நுழைந்து தமது முகாம்களையே அமைப்பதுண்டு. பல நூறு சதுர மைல்களை சீனப் படைகள் அருணாச்சலப் பிரதேசத்தில் ஆக்கிரமித்து விட்டன.

எல்லை தாண்டிய இணைய வெளிப்போர்
 பல நாடுகள் கணனி நிபுணர்களைத் தம் படைப்பிரிவில் இணைத்து ஒரு இணையவெளிப் படைப்பிரிவுகளை உருவாக்கியுள்ளன. இவை மற்ற நாட்டுக் கணனி வலையமைப்புக்குள் நுழைந்து தகவல்கள் திருடுவது, அங்கு கணனிகளை செயற்படாமல் செய்வது, அந்த நாடுகளின் மக்களிற்கான வழங்கற் கட்டமைப்புகளை செயற்படாமல் செய்வது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளன. இது ஒரு புதிய வகையான எல்லை தாண்டிய பயங்கரவாதம். அமெரிக்கா தனது மரபு வழிப்படையினருக்கு வழங்குவது போல் தனது ஆளில்லாப் போர் விமானப் படையினருக்கும் இணைய வெளிப் படையினருக்கும் பதக்கம் வழங்கும் முறையை முதலில் அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் பராக ஒபாமா அமெரிக்காவின் படைத்துறை, நிதி நிறுவனங்கள், பயணிகள் போக்குவரத்து விமானங்களிற்கும் விமான நிலையங்களுக்கும் இடையிலான தகவற் தொடர்புகள், மற்றும் பொதுமக்களுக்கான வழங்கல்கள் போன்றவற்றை அன்னியர்களின் இணையவெளிப் படையினர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகும் அச்சுறுத்தல்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் ஐம்பதுக்கு மேற்பட்ட நாடுகளில் உளவு பார்ப்பதில் ஈடுபட்டுள்ளன. 61398 எனப்படும் சினப்படையின் இரகசியப் பிரிவு ஒன்று உலகெங்குமுள்ள 141 நிறுவனங்களின் பெருமளவு தகவல்களைத் திருடியுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதற்கின அமைக்கப்பட்ட சிறப்பு வேவுப் பிரிவு இதைக் கண்டுபிடித்துள்ளது. படைத்துறை, தொழிற்துறை, தொழில்நுட்பத்துறை உடபடப் பலதரப்பட்ட பெறுமதி மிக்க தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மறுத்த சீனா தனது நாட்டில் இருந்துதான் பெருமளவு தகவற் திருட்டு நடப்பதாகத் தெரிவிக்கிறது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...