Saturday, 2 February 2013

துருக்கி குண்டுத் தாக்குதலின் பின்னணி

மத்திய கிழக்கைப் பொறுத்தவரை ஐக்கிய அமெரிக்காவின் முக்கிய தோழமை நாடாக துருக்கி திகழ்கிறது. நேட்டோவின் உறுப்புரிமை பெற்ற இஸ்லாமிய நாடு துருக்கியாகும். மத்திய கிழக்கில் அமெரிக்காவின் கேந்திரோபாய நண்பனான எகிப்த்தின் முன்னாள் அதிபர் ஹஸ்னி முபராக் பதவியில் இருந்து விரட்டப்பட்ட பின்னரும் பாஹ்ரெயின் அமெரிக்கக் கடற்படையின் எதிர்காலம் கேள்விக்குறியான நிலையிலும் மத்திய கிழக்குப் பிராந்திய ஆதிக்கத்திற்கு அமெரிக்காவிற்கு ஒரு புதிய நண்பன் அவசியம் தேவைப்படுகிறான். அதற்கு துருக்கிதான் அமெரிக்காவின் முதல்தரத் தேர்வு.

மூன்று கணடங்கள் மத்தியில் துருக்கி
பூகோள ரீதியிலும் துருக்கி ஒரு முக்கியமான இடம் வகிக்கிறது. எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கு, பால்க்கன் பிராந்தியம், வளைகுடாப் பிராந்தியம், கோக்கஸ் பிராந்தியம் ஆகியவற்றிக்கு அண்மையில் துருக்கி அமைந்துள்ளது. மேற்குலகின் கிழக்கு வாசல் துருக்கி என விபரிக்கப்படுகிறது. அத்துடன் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் ஆபிரிக்காவிற்கும் இடையில் உள்ள அனட்டோலியன் குடாப் பிராந்தியத்தில் துருக்கி இருக்கிறது. மேற்குலகிற்கும் இசுலாமிய உலகிற்கும் ஒரு பாலமாக துருக்கி செயற்படுகிறது. கருங்கடல், மத்திய தரைக்கடல், ஈகன் கடல் (Aegean Sea) ஆகியவற்றிடை துருக்கி அமைந்துள்ளது. மத்திய கிழக்கில் இருந்தும் வளைகுடாவில் இருந்தும் ஐரோப்பிய நாடுகளிற்கான எரிபொருள் விநியோகத்திற்கு துருக்கி முக்கியத்துவம் பெறுகிறது.

அமெரிக்க - துருக்கி நட்பு பல இசுலாமியத் தீவிரவாதிகளை ஆத்திரப் படுதியுள்ளது என்பதை 01-02-2013இல் துருக்கியில் உள்ள அமெரிக்கத் தூதுவரகத்தில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் உணர்த்துகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர் தடைசெய்யப்பட்ட இயக்கமான புரட்சிகர மக்கள் விடுதலை முன்னணியில்  (Revolutionary People’s Liberation Front) உறுப்பினரான 30 வயதான Ecevit Şanli, என்பவர்.  மார்கசிய சிந்தனையைக் கொண்டோரால் 1978இல் ஆரம்பிக்கப்பட்ட புரட்சிகர மக்கள் விடுதலை முன்னணி துருக்கி நேட்டோவில் இணைந்ததை விரும்பவில்லை. 1980களில் பல தாக்குதல்களை இந்த இயக்கம் பல மேற்கத்திய இலக்குகளுக்கு எதிராகவும் துருக்கிய படைத்துறையினருக்கும் எதிராகவும் நடத்தியிருந்தது. பின்னர் உள் மோதல்களால் பிளவு பட்டு தன் செல்வாக்கை இழந்திருந்தது. ஆனாலும் அவ்வப்போது தாக்குதல்களை நடத்துவதுண்டு. 2012 செப்டம்பர் 11-ம் திகதி இஸ்த்தன்புல்லில் ஒரு காவற்துறை நிலையகத்தின் மீது ஒரு தற்கொலைத் தாக்குதல் நடந்தது. பனிப்போர்க்காலத்தில் உருவாக்கப்பட்ட புரட்சிகர மக்கள் விடுதலை முன்னணி இப்போது பலமிழந்து இருப்பதாகவும் இதன் உறுப்பினர்கள் இப்போது சில நூற்றுக் கணக்கானவர்களே என்றும் சொல்லப்படுகிறது. 2008 அல் கெய்தா உறுப்பினர்கள் என நம்பப்படுவோர் இஸ்த்தான்புல்லில் உள்ள அமெரிக்க தூதுவரகத்தின் மீது தாக்குதல் நடாத்தினர்.

சிரியத் தொடர்பு இல்லை என்கிறது.
சிரிய உள்நாட்டுப் போரில் துருக்கிய அரசு சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிரான கடும் நிலைப்பாட்டில் துருக்கிய அரசு இருக்கிறது. லிபியாவில் செய்தது போல் நேட்டோ சிரியாவில் தலையிட வேண்டும் என்று சிரிய ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். 01-02-2013இல் நடந்த குண்டுத்தாக்குதலில் சிரியாவோ சிரியப் பிரச்சனையோ சம்பந்தப்பட்டிருக்கவில்லை என துருக்கிய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் சிரியப் பிரச்சனையில் துருக்கி அமெரிக்காவுடன் நெருங்கிச் செயற்படுவது இக் குண்டுத்தாக்குதலுக்கான உந்து காரணியாக அமைந்துள்ளது என சில அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவிற்கு தலையிடி
துருக்கியில் நடந்த தாக்குதலும் அல்ஜீரியாவில் 2013 ஜனவரியில் அமெரிக்கர் உட்படப் பலர் கொல்லப்பட்டதும் 2012 செப்டம்பரில் லிபிய பென்காஜி நகரில் உள்ள அமெரிக்கத் தூதுவர் கொல்லப்பட்டதும் அமெரிக்காவிற்கு மத்திய கிழக்கில் பெரும் தலையிடு கொடுக்கக் கூடிய சூழ்நிலை உருவாகிவிட்டது என்பதை எடுத்துக் காட்டுகிறது. அமெரிக்கா உலகெங்கும் உள்ள தனது பிரதிநிதிகளின் பாதுகாப்பை மீளாய்வு செய்கிறது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...