Saturday, 22 December 2012

கவிதை: ஆனால் உலகம் அழிந்து கொண்டிருக்கிறது

நேற்று உலகம் அழியவில்லை
நீயும் இறக்கவில்லை
நானும் இறக்கவில்லை
ஆனால் உலகம் அழிந்து கொண்டிருக்கிறது
நீயும் இறந்து கொண்டிருக்கிறாய்
நானும் இறந்து கொண்டிருக்கின்றேன்
எனக்கென்ன கவலை

உலகெங்கும் ஏற்ற இறங்கங்கள்
வளத்தில் வாய்ப்பில்
உழைப்பில் ஊதியத்தில்
பெரும் வேறுபாடுகள்
ஓடும் நீரை அதன் எண்ணப்படி
ஓடவிட்டால் ஒரு மட்டத்தில் முடியும்
அணைகளும் தடைகளும்
பல மட்டங்களை உருவாக்கும்
மூலதனங்கள் கட்டுப்பாடின்றி
உலகெங்கும் செல்ல வேண்டுமாம்
மூலப் பொருள்கள் கட்டுப்பாடின்றி
உலகெங்கும் செல்ல வேண்டுமாம்
உற்பத்திப் பொருள்களும் அப்படியே
உழைப்பாளிகளின் அசைவுகளுக்கு மட்டும்
கட்டுப்பாடு வேண்டுமாம்
வந்தேறு குடிகளை நாடுகடத்தும்
கொள்கையுள்ள கட்சியே
ஆட்சிக்குத் தெரிவு செய்யப்படும்
வேறுபாடுகளால் வேற்றுமைகளால்
உலகம் அழிந்து கொண்டிருக்கிறது
நீயும் இறந்து கொண்டிருக்கிறாய்
நானும் இறந்து கொண்டிருக்கின்றேன்
எனக்கென்ன கவலை


ஆட்சியில் பயங்கரவாதிகள்
விடுபட முயல்பவர் விரோதிகள்
கொல்லப்பட வேண்டியவர்கள்
நீதியும் நீதி கேட்டுத் தவிக்கிறது
கொலையாளிகள் தீர்ப்புக் கூறுகின்றனர்
கொள்ளையடித்தவர் கோவில் கட்டுகின்றனர்
பிள்ளை பிடித்தவர் போற்றப்படுகின்றனர்
உலகம் சீரழிந்து கொண்டிருக்கிறது
நீயும் இறந்து கொண்டிருக்கிறாய்
நானும் இறந்து கொண்டிருக்கின்றேன்
எனக்கென்ன கவலை

எல்லாருக்கும் போர்க்கலன்கள் வேண்டும்
ஒருவரை ஒருவர் வேரோடு அறுக்க வேண்டும்
அடங்காப்பசியுடன் அதிகார் வெறியர்கள்
அவன் நிலம் இவனுக்கு வேண்டும்
இவன் கடல் அவனுக்கு வேண்டும்
அவன் எல்லை இவனை நோக்கி நகர வேண்டுமாம்
இவன் அதிகாரம் அவனின் மேல் வேண்டுமாம்
ஆதிக்கப் போடியில் உலகம் அழிகிறது
நீயும் இறந்து கொண்டிருக்கிறாய்
நானும் இறந்து கொண்டிருக்கின்றேன்
எனக்கென்ன கவலை

Friday, 21 December 2012

உலகம் அழியப் போகிறதென்று தலைவர்கள் விட்ட அறிக்கைகள்

 பராக் ஒபாமா: உலகம் அழிய முன்னர் அமெரிக்கா அரச நிதிப் படுகுழியில் (Fiscal Cliff)விழுந்து அழிந்து விடும்.

மஹிந்த ரஜபக்ச: நான் உயிருடன் இருக்கும் வரை நான் தான் இலங்கைக் குடியரசுச் தலைவர். இந்த உலகம் இருக்கும் வரை நான் தான் இலங்கைக் குடியரசுத் தலைவர்.

இரா சம்பந்தன்: உலக அழிவைப்பற்றி என்ன சொல்வது என்பது பற்றி இந்திய வெளிவிகாரத் துறைப் பணிமனையில் கிளார்க்கிடமிருந்து எந்த உத்தரவும் எனக்கு வரவில்லை.

ஜெயலலிதா: அளவுக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் நான் தண்டிக்கப்படுவது கடவுளுக்குப் பொறுக்கவில்லை

கருணாநிதி: சகோதர யுத்தத்தால் விடுதலைப்புலிகள் அழிந்தார்கள். அதே சகோதர யுத்தத்தால் உலகமும் அழியப் போகிறது. சகோதர யுத்தத்தால் வரவிருக்கும் பிரச்சனை பற்றி ஸ்டாலினும் அழகிரியும் கனிமொழியும் புரிந்து கொள்ள வேண்டும்.

சோனியா காந்தி: இந்திய மக்கள் கொடுத்து வைத்தவர்கள். ராகுல் பிரதமராகமுன்னர் உலகம் அழிகிறது.

நரேந்திர மோடி: இந்தியாவை நான் அழிக்க முன்னர் உலகம் அழிகிறது.

சோ: லோகத்தில் பிராமணன் கஷ்டப்படுகிறான். பிராமணப் பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாக இருக்கிறார்கள். விபரீத புத்தி விநாச காலே என்று பகவான் சொன்னார். பிராமணன் மேலவனாக இல்லாததால் உலகம் அழிகிறது. மாயன் என்பது கிருஷ்ண பரமாத்மாதான். பாரததில் மாயவனாக வந்தவர் மத்திய அமெரிக்காவில் மாயன் குலத்தை உருவாக்கினார்.

இந்து ராம்: ஈழம் உருவாக முன்னர் உலகம் அழிவது பெரும் நிம்மதியாக இருக்கிறது.

விஜயகாந்த்: மேற்குலகை ஆர்னல்ட் ஸுவர்ஸ்நேகரும் கிழக்குலகை நானும் அழியாமல் பாதுகாப்போம்.

பிரித்தானியப் பிரதமர் டேவி கமரூன்: ஐரோப்பிய ஒன்றியம் ஒரு தனிநாடாக உருவெடுக்க முன்னர் உலகம் உலகம் அழிய வேண்டும்.

ஜேர்மன் அதிபர் அஞ்சலா மார்க்கின்: ஐரோப்பா முழுவதையும் ஜேர்மனியர்கள் ஆளமுன்னர் உலகம் அழியாது.

Thursday, 20 December 2012

கொலை எதிர்காலம்

சிந்தையில் சிலோன் நண்டுக்கறியையும்
சிவத்த அரிசிமாப் பிட்டையும் வைத்துக் கொண்டு
சிவசிவா என்பதுபோல்
கேபி எனும் கட்சி தாவி
ஓட்டைவாய பக்சராஜனின் காலடியில் இருந்து
விட்டெறிந்த பணத்தில் சிலர் கூடி
சுரம் இல்லாமல் கரம் தட்டி
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்றனர்
இல்லாத நாட்டின் செல்லாத அரசின்
இல்லாத நாற்காலியில்
எனிந்தப் பொல்லாத ஆசை

போரில் இறந்தவன் பெயரைப் பொய்யாகச் சொல்லி
ஊரில் இருந்து வந்த போராளி நானென்றவனுக்கு
ஒன்றாக எழுந்து நின்று நன்றாகக் கைதட்டி
மரியாதை செய்யும் மானம் கெட்ட கும்பல்
நாடாளும் சபையென நாடுதான் ஏற்குமோ
ஔவ்வையவள் அன்று சொன்ன வாக்குப்படி
வேதாளம் சேரும் வெள்ளெருக்குப் பூக்கும்
பாதாள மூலியும் தடையின்றிப் படரும்
பாம்பும் வாடகையின்றிக் குடியிருக்கும் உம்மனைகளில்
செல்லாத ஆட்சியின் இல்லாத கதிரைக்கு
பொல்லாத ஆசைப்பட்டால்
கல்லாத கயவனும் கைகொட்டிச் சிரிப்பான்

பளபளக்க சிவப்பிலும் மஞ்சளிலும்
சீருடை எனச்சொல்லி பேருடை அணிந்து நின்றாலும்
பாராளும் மன்றம் எனப் பல கதை சொன்னாலும்
நம் மனம் ஆளும் மாவீரர் புகழை
நீர் உரைத்தல் முறையோ முறையோ
சிங்களத்தின் சில்லறைக் கைக்கூலிக் கும்பல்கள்
நாட்டை மீட்க வந்தவர் நாமென்று 

நாக்கூசாமல் சொல்லுதல் தகுமோ தகுமோ
அமைச்சரவையென்றும் மூதவை என்றும்
முறைகள் பல சொன்னாலும்
படையுமில்லைக் கூழுமில்லை
குடியுமில்லை மதியுடை அமைச்சுமில்லை
நல்லோர் நட்புமில்லை ஆங்கொரு அரணுமில்லை
வள்ளுவனின் வரைவிலக்கணத்துக்குள்
நில்லாத அரசின் இல்லாத நாற்காலியில்
ஏனிந்தப் பொல்லாத ஆசை

முயற்கொம்பில் நீர் ஏறி ஆகாயக் கோட்டை
கட்ட வேண்டாம் காட்டவும் வேண்டாம்
சங்கரென்றும் மில்லரென்றும் மாலதியென்றும்
பாரிஸ் நகரத்து பரிதியென்றும்
பல்லாயிரம் மாவீரர் காட்டிய வழி நமக்குண்டு
அவர் வழியில் நாடொன்று நாம் காண்போம்
அதற்கென ஒரு இளவேனிற் காலம் வரும்
இன்று நாம் இருப்பது இனக் கொலை எதிர்காலம்

Wednesday, 19 December 2012

இரசியாவின் போர்க்கப்பல்கள் சிரியா செல்கின்றன.

சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் அரச படைகளுக்கும் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களுக்கும் எதிரான போரில் கிளர்ச்சிக்காரர்களின் கைகள் ஓங்கி வரும் நிலையில் இரசியாவின் போர்க்கப்பல்கள் சிரியா நோக்கிச் செல்வதாகச் செய்திகள் வந்துள்ளன. மும்மர் கடாஃபியின் வீழ்ச்சிக்குப் பின்னர் மத்திய கிழக்கில் இரசியாவின் முக்கிய நட்பு நாடாக சிரியா கருதப்படுகிறது.

சிரியாவின் பல இடங்களில் பல இரசியர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் உள்ளூரில் திருமணமும் செய்துள்ளனர். இவர்களை மீட்பதற்கு இரசியா தான் தனது கடற்படைக் கப்பல்கள் ஐந்தை அனுப்புவதாக சொல்கிறது. ஒரு நாசகாரக் கப்பல், ஒரு இழுவைப்படகுகள், இரு தரையிறங்கும் கப்பல்கள் ஆகியவையை இரசியா சிரியாவிற்கு அனுப்பியுள்ளது.  17/12/2012இலன்று இரண்டு இரசியர்களை சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் கடத்திச் சென்றதாகச் செய்தி வந்ததது. ஹொம்ஸ் ரார்டஸ் ஆகிய நகரங்களுக்கிடையில் பயணித்துக் கொண்டிருந்த இரசியர்கள் கடத்திச் செல்லப்பட்டு பணம் கேட்டு மிரட்டப்படுகின்றனர்.

சிரியாவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை இரசியா தனது இரத்து அதிகாரத்தைப் பாவித்து தள்ளுபடி செய்தது அல் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களை ஆத்திரப்படுத்தியுள்ளது. இவ்வளவு காலமும் இரசியா சிரியாவில் இருக்கும் குடிமக்களை காப்பாற்றும் நடவடிக்கை எடுக்காதது பலருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. இரசியா தனது மக்களைக் காப்பாற்றும் நடவடிக்கைகள் எடுத்திருந்தால் அது அல் அசாத்தின் ஆட்சியில் நம்பிக்கை இழந்ததாகக் கருதப்படும் என்று இரசியா நினைத்திருக்க வேண்டும்.

போரில் இரசியா ஈடுபடுமா?
சிரிய உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்கா தனது நட்பு நாடுகளான இஸ்ரேலிலும் ஜோர்தானிலும் துருக்கியிலும் தனது சிறு படைப்பிரிவுகளை நிறுத்தியுள்ளது. இவை சிரிய ஆட்சியாளர்கள் இரசாயன படைக்கலங்களைப் பாவிப்பதை தடுப்பதற்கு என்று அமெரிக்கா சொன்னது. இரசியா அனுப்பும் கப்பல்கள் ஜனவரி முற்பகுதியில் சிரியா சென்றடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்கு வரத்து விமானங்கள் இப்போது சிரியா செல்வதில்லை. இரசிய இதற்கு விதிவிலக்கு. இரசிய போக்கு வரத்து விமானங்கள் இரு சிரிய விமானத் தளங்களிற்கு சென்று வருகின்றன. விமானம் மூலம் தனது குடிமக்களை வெளியேற்றாமல் இரசியா ஏன கப்பல்களை அனுப்புகிறது? இவை அல் அசாத்திற்குத் தேவையான படைக்கலன்களைக் கொண்டு செல்கின்றனவா? அல்லது போரில் தோல்வியடைந்தால் அசாத்தையும் அவரது குடும்பத்தினரையும் காப்பாற்றிக் கொண்டு செல்லும் முயற்ச்சியா? எல்லாவற்றிலும் மோசமான சந்தேகம் இரசியப் படைகள் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக போர் புரிவார்களா? ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம் இரசிய அனுப்பும் ஐந்து கப்பல்கள் ஒரு போருக்கு போதுமானவை அல்ல. போரில் பங்கு கொள்வதாயின் விமானம் தாங்கிக் கப்பல்கள் நீர் மூழ்கிக் கப்பல்கள் தேவைப்படும். இரசியா ஏற்கனவே மத்திய தரைக் கடலில் நிற்கும் போர்க்கப்பல்களுக்கு மாற்றீடாக ஐந்து கப்பல்களை அனுப்புகிறது என்று சொல்கிறது.

இரசியாவின் நிலைப்பாட்டில் மாற்றமா?
மத்திய கிழக்கில் இரசியாவின் தந்திரோபாயச் செல்வாக்கு அரபு வசந்தத்தின் பின்னர் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஏற்கனவே எகிப்து, சவுதி அரேபியா, காட்டர், ஜோர்தான் ஆகிய நாடுகளுடன் இரசியா மோசமான உறவுகளைக் கொண்டுள்ளது.

Tuesday, 18 December 2012

மாயன் கலண்டர். இரகுநாதையர் பஞ்சாங்கம், உலக அழிவு

யாழ்ப்பாணத்தில் உள்ள கொக்குவிலில் இருந்து ஒரு வாக்கிய பஞ்சாங்கம் ஆண்டு தோறும் வெளிவருகிறது. பழைய யாழ்ப்பாண மன்னர்களின் ஆஸ்த்தான சோதிடர்களின் பரம்பரையினர் அதை வெளிவிடுகின்றனர். தற்போது உள்ள ரகுநாதையரின் தகப்பனின் சகோதரரான ரகுநாதையர் உயிருடன் இருக்கும் போது அறுபது ஆண்டுகளுக்கு உரிய பஞ்சாங்கத்தை கணித்து வைத்துவிட்டார்.

இந்துக்களின் 60 ஆண்டுச் சுற்று
ரகுநாதையர் குடும்பத்தினர் என்னை இப்படி எழுதுவதற்கு மன்னிக்க வேண்டும். இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் அவர்களது குடும்பம் வாழவேண்டும் என்பது எனது விருப்பம். இந்திய அமைதிப்படையின் குண்டு வீச்சிலோ அல்லது இலங்கைப்படையின் எறிகணையிலோ ரகுநாதையர் குடும்பம் முற்றாக அழிந்து விட்டது என்று வைத்துக்கொள்வோம். அவர்களின் வீட்டு இடிபாடுகளிற்கிடையில் தேடிப்பார்த்தால் ரகுநாதையர் பஞ்சாங்கம் 2057உடன் முடிவடைகிறது அதனால் 2057-ம் ஆண்டு உலகம் அழிந்து விடப்போகிறது என்று சொல்லலாமா? இந்துக்களின் சோதிடத்தில் ஒரு அறுபது ஆண்டுகள் கொண்ட ஒரு சுற்று உள்ளது. அது பிரபவ(இதன் தமிழ்ப் பெயர் நற்றோன்றல்) ஆண்டில் தொடங்கி அட்சய(வளங்கலன்) ஆண்டில் முடிவடையும். வியாழக் கிரகம் சூரியனைச்யை சுற்றிவர 12 ஆண்டுகள் எடுக்கும் சனிக் கிரகம் சூரியனைச் சுற்றி வர 30 ஆண்டுகள் எடுக்கும் இந்த இரண்டுக்குமான பொ.ம.சி(L.C.M) 60. இன்று சனியும் வியாழனும் எந்த நிலையில் இருக்கிறதோ அதி நிலைக்குத் திரும்ப வர 60 ஆண்டுகள் எடுக்கும். காம இச்சையால் அவதிப்பட்ட நாரதரைப் பெண்ணாக்கி அவரது இச்சையைத் தீர்த்தாராம் திருமால். அதனால் அவர்கள் இருவருக்கும் 60 பிள்ளைகள் பிறந்ததாம் அப்பிள்ளைகள் தான் ஒவ்வொரு ஆண்டும் ஆகுமாம்.

மாயன்களின்5,126 ஆண்டுகாலச் சுற்று
இந்து சோதிடத்தில் அறுபது ஆண்டுச் சுற்றுப் போல் மாயன்களின் கலண்டரில் 5126ஆண்டூச் சுற்று உள்ளது. தொடரும் அந்தச் சுற்று ஒன்று 2012 டிசம்பர் 21-ம் திகதி முடிவடைகிறது. அதில் அடுத்த சுற்று ஆரம்பிக்கும். நேரம் என்பது இந்து மதத்தின் படி வட்டமானது. மாயன்களுக்கும் அப்படியே. மாயன்களின் கல்வேட்டில் எந்த இடத்திலும் 21-12-2012 உடன் உலகம் அழிகிறது என்று சொல்லவில்லை. அன்று ஒரு சுற்று முடிந்து மற்ற சுற்றுத் தொடங்குகிறது. மாயன்களின் திறமை அவர்கள் கட்டிய பிரமிட்டில் வெளிப்படுகிறது. பிரமிட் நான்கு பக்கங்களைக் கொண்டது. ஒவ்வொன்றிலும் 91 படிகள் உள்ளன. மொத்தம் 364 படிகள். உச்சியில் உள்ள ஒரு படி நான்கு பங்கங்களுக்கும் பொதுவாக அமைந்து மொத்தம் 365 படிகளைக் கொண்டுள்ளது அந்த பிரமிட். புத்திசாலித்தனமான கணிப்பீடுதான். அது மட்டுமல்ல மார்ச் மாதம் 21ம் திகதியளவிலும்  செப்டம்பர் மாதம் 21-ம் திகதியளவிலும் வரும் இரவும் பகலும் சமமான நாள்களில் மாயன்களின் பிரமிட்டின் நிழல் அவர்களது தெய்வங்களில் ஒன்றான இறகுடைய பாம்பு போல் தோற்றமளிக்கும். இப்படி ஒரு கட்டமைப்பைச் செய்வதற்கு ஆழ்ந்த வானவியல் அறிவும் ஆழ்ந்த கணித அறிவும் தேவை. மாயன் கலண்டரில் வல்லுனரும் மாயன்களின் நேரக்கணிப்பைப்பற்றி நன்கு அறிந்தவருமான லியோஜோ பர்ரெனொ என்னும் பேராசிரியர் 2012-12-21 ஒரு சுற்று முடிந்து அடுத்த சுற்றின் ஆரம்பம் மட்டுமே அன்று ஒரு சுற்றைத் தவிர வேறு எந்த ஒன்றும் முடியவில்லை என்றார். அது ஒரு புத்தாண்டு போல் கொண்டாடப்பட வேண்டியது என்றார் பேராசிரியர் லியோஜோ பர்ரெனொ.  சுவென் குரொனெமெயர் என்னும் ஜேர்மானிய வல்லுனர் ஒருவர் 2012-12-21 கலண்டரின் முடிவு மட்டுமே உலகத்தின் முடிவல்ல என்றார். மாயன் கல்வெட்டுக்களை பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்யும் பேராசிரியர் லியோஜோ பர்ரெனொ அவற்றில் எதிர்காலத்தைக் குறிக்கும் சொற்கள் இல்லை என்றார். வார்த்தைகள் யாவும் நிகழ்காலத்திலேயே இருக்கிறதாம். ரொபின் கட்றைட் என்னும் மாயன்களின் வரலாறு பற்றி ஆய்வு செய்த சரித்திரப் பேராசிரியரும் 2012இல் உலகம் அழியாது என்கிறார். 2012 நவம்பரில் மெக்சிக்கோவில் நடந்த மாயன் கலண்டர் நிபுணர்களின் மாநாட்டில் 22012இல் உலகம் அழியாது என பல நிபுணர்கள் கூறினர். சில நிபுணார்கள் மனித இனம் ஒரு புதுப்பாதையில் இயங்கும் என்றனர்.
மாயன்களின் விமானம், ஹெலிக்கொப்டர்

மாயன்களின் நாகரீகம் கி.மு 2600இல் தொடங்கியதாம் அப்போதே அவர்கள் விமானம் ஹெலிக்கொப்டர் போன்ற வடிவங்களை வைத்திருந்தனராம்.

மாயன்களின் கல்வெட்டில் காணப்படும் தற்போதைய விண்வெளிப்பயணிகள் போன்ற உடையணிந்த மனிதன். விண்ணில் இருக்கும் பல நடசத்திரக் கூட்டங்களை அண்மையில் தான் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். ஆனால் மாயன்களில் கல்வெட்டுக்களிலும் சுவரோவியங்களிலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பல நட்சத்திரக் கூட்டங்கள் காணப்படுகிறது. கலிலியோவிற்கு முன்னரே அவர்கள் தொலை நோக்குக் கருவிகளை உருவாக்கி விட்டனர். உன்னத அறிவைக் கொண்டிருந்த மாயன்கள் கி.பி 1517-ம் ஆண்டுஸ்பானிய ஆக்கிரமிப்பால் பேரழிவைச் சந்தித்தனர். அவர்களில் 90%வர்கள் அழிக்கப்பட்டனர். ஸ்பானியர்களின் கிருத்தவ மத போதகர் மாயன்களுடன் நண்பர் போல நடித்து அவர்களில் புத்தகங்கள் பலவற்றை அழித்து விட்டார். புத்தகங்கள் மிருகங்களின் தோலில் செய்யப்பட்டவை. ஒரு இனக்கொலையில் முக்கிய பகுதி அவர்களில் புத்தகங்களை அழிப்பது என்பதை யாழ் நூலக எரிப்பில் கண்டோம். மாயன்களில் எஞ்சிய நூல்கள் நாலு அதையும் ஸ்பானியர், ஜேர்மனியர், பிரெஞ்சுக்காரர், மெக்சிக்கர் கொள்ளை அடித்து வைத்திருக்கின்றனர். மாயன்களும் சேர சோழ பாண்டியர் போல் தங்களுக்குள் அடிக்கடி மோதியதால் எதிரிகள் அவர்களை இலகுவாக வென்றனர்.உலகம் அழியும் என்று எதிர்வு கூறுவது இது முதற்தடவையல்ல. கிறிஸ்துவிற்குப் பின்னர் 100-ம் ஆண்டு உலகம் அழியும் என்று சொல்லப்பட்டதாம். பின்னர் கி.பி 1000இல் உலகம் அழியும் எனப்பட்டது. பின்னர் கி.பி 2000இல் அழியும் என்று சொல்லப்பட்டது. ரோமர்களோ கி.மு 634இல் உலகம் அழியும் என்று நம்பியிருந்தனர். மார்ட்டின் லூதர் என்பவர் 1600உடன் உலகம் அழியும் என்றார். பாப்பாண்டவர் சில்வெஸ்டர்-2 கிபி 1000 ஆண்டு ஜனவரி முதலாம் திகதி உலகம் அழியும் என்றார். இப்படி இரு நூறுக்கு மேற்பட்ட தடவை உலகம் அழியும் எனக் கூறப்பட்டது. எல்லாமே பொய்த்துப் போனது. 2012 இல் மே 27ம் திகதியும் 2012 ஜூன் 30-ம் திகதியும் உலகம் அழியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அமெரிக்காவைக் கண்டறிந்த கிறிஸ்டபர் கொலம்பஸ் 1658-ம் ஆண்டு உலகம் அழியுமென்றார். பிரபல விஞ்ஞானி ஐசாக் நியூட்டன் 2000-ம் ஆண்டு உலகம் அழியுமென்றார். பிரபல சோதிடன் நோஸ்ரோடொமஸ் 1999-ம் ஆண்டு உலகம் அழியுமென்றார்.

உலகம் ஒரு நாளில் அழியாது
உலகம் ஒரு சிறிய பொருள் அல்ல. அதை அழிக்கச் சில நாட்களாவது எடுக்கும். இந்து மதத்தின்படி பிரளம் என்பது ஒரு கிருதயுகம் வரை தொடர்ந்து நடக்கும். அதாவது பிரளயம் நடந்து முடிய 1,728,000 ஆண்டுகள் எடுக்கும்.
இன்னும் இன்னும் மூன்று நாட்களில் உலகம் அழிவதாயின் 2012-12-21இற்கு பல நாட்களின் முன்னரே அனர்த்தங்கள் தொடங்கியிருக்கும். சிலர் உலகம் முழுவதும் பனியாக மாறி உயிரினங்கள் அழியும் என்கின்றனர். அப்படி வெப்ப மாற்றம் நடக்க பல ஆயிரம் ஆண்டுகள் எடுக்கும். அது அண்மையில் இல்லை. சூரியனில் நடக்கும் புயல்கள் பூமியில் சிறு தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தும். பூமியை அழிக்க மாட்டாது

உலகம் எப்போது அழியும்?
இந்து மதத்தின்படி பூமியில் ஒரு ஆண்டு என்பது தேவர்களின் உலகத்தில் ஒரு நாள். தைமாதப் பிறப்பன்று தேவர்களுக்கு நாள் தொடங்கும். ஆடி மாதப் பிறப்பன்று அவர்களின் பகல் முடிந்து இருட்டு உண்டாகும். இப்படி வேறு வேறு உலங்கங்களில் நேரக்கணக்கு வேறுபடும். சூரன் ஆயிரத்து எட்டு அண்டகளை(உலகம்)யும் 108 யுகங்கள் ஆண்டான் என்கிறது கந்த புராணம்.  மீண்டும் ரகுநாதையர் பஞ்சாங்கத்திற்கு போவோம். அவர்களின் பஞ்சாங்கப்படி ஒரு மனுவந்தரத்தின் முடிவில் பிரளயம் நடக்கும். ஒரு மனுவந்தரம் என்பது 71 சதுர் யுகங்களைக் கொண்டது. அதாவது ஒவ்வொரு 306,720,000 ஆண்டுகளுக்கு ஒரு தடவை பிரபஞ்சம் அழியும். நாம் இப்போது 28வது சதுர் யுகத்தில் இருக்கிறோம். உலகம் அழிய இன்னும் 43 சதுர் யுகங்கள் இருக்கின்றன. அதாவது இன்னும் 185,760,000 ஆண்டுகள் இருக்கின்றன.
 பிரம்மாவிற்கு ஒரு பகல் பொழுது முடிந்து அவர் நித்திரைக்குப் போகும் போது பிரளயம் ஏற்பட்டு பிரபஞ்சம் அழியும் என்கிறது அவர்களது பஞ்சாங்கம். பிரம்மாவின் உலகத்தில் ஒரு நாள் என்பது தேவர்களில் உலகத்து நாளின் அளவுடன் பார்க்கையில் மிக மிக நீண்டது. பிரம்ம உலகத்தில் ஒரு பகற்பொழுது 1000 சதுர் யுகங்களைக் கொண்டது. அதாவது 4,320,000,000. இதன் முடிவில் இரவு தொடங்க பிரம்மா நித்திரை செய்ய பிரபஞ்சம் அழியும். இப்போது இருக்கும் பிரம்மாவிற்கு 50 வயதுதானம். அவர் 100 வயது வரை வாழ்வாராம். அவருக்கு இப்போது உள்ள முறைப்படி அவரது மனைவி கன்னா பின்னா என்று கண்டதையும் சமைத்துச் சாப்பிட வைத்தால் அவருக்கு ஏதாவது இருதய வியாதி வந்தால் காக்கும் கடவுள் மருத்துவராக மாறி by pass surgery செய்து  பிரம்மாவைக் காப்பாற்றுவார் என நம்புவோமாக. திருமால் இதற்கு முன்பும் பல தடவை இப்படிச் செய்துள்ளார். இந்து மதத்தை நீங்கள் நம்பினால் 2012-12-21ஐ நம்பத் தேவையில்லை. கிருத்துவ மற்றும் இசுலாமிய மதங்களும் 2012-12-21இலன்று உலகம் அழியாது என்று சொல்கின்றனர்.

பால் வெளி(milky way)
எமது சூரியன் போல் பல பில்லியன் சூரியன்கள் வேறு வேறு அளவில் ஒன்றாகச் சுற்றிக் கொண்டிருக்கின்றன அவற்றில் ஒரு கூட்டத்தை பால் வெளி என்பர். பல மதங்கள் இப்பால் வெளியை ஆகாய கங்கை என்கின்றன. 21-12-2012இலன்று இந்தப்பால் வெளியின் மத்தியுடன் ஒரு நேர் கோட்டில் பூமி வருகிறது என்கின்றனர் சிலர். அதனால் உலகம் அழியும் என்கின்றனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 21ம் திகதி அல்லது அதற்கு ஒரிரு நாட்கள் பின்னர் குறைந்த பகற்பொழுது நிகழும் போது பூமி பால் வெளி மத்தியுடன் வருவது வழக்கம் என்கின்றனர் நாசா விஞ்ஞானிகள்.

உலகம் எப்படி அழியும்
பூமியை நோக்கி வரும் ஆகாயக் கற்களில் பலவற்றை வியாழன் கிரகம் தடுத்து விடும். எங்கள் உலகம் அழியாமல் பாதுகாப்பது வியாழன் என பல வானவியலாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் அவ்வப்போது வியாழனையும் மீறி சில ஆகாயக் கற்கள் பூமியைத் தாக்கியது உண்டு. அப்போது பெரிய அழிவு ஏற்படும் ஆனால் உலகம் அழியாது. நிபுரு என்னும் பெரிய ஆகாயக் கல் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது அது உலகத்தை அழிக்கப் போகிறது என்று சொன்னார்கள். அது பூமிக்கு அண்மையில் வருவதாயில் 2012-12-21இற்கு பல நாட்களின் முன்பே கண்களால் பார்க்கக் கூடியதாக இருந்திருக்கும் என்றனர் நாசா விஞ்ஞானிகள். விஞ்ஞானிகளின் கருத்துப்படி எரிந்து கொண்டிருக்கும் சூரியன் எரிந்து முடிய அது ஒரு பெரிய சிவப்புக் கோளமாக மாறி அதன் அளவு பன் மடங்காக அதிகரித்து அது எமது பூமியையும் விழுங்கும் அளவிற்கு விரிவடையும். அது நடக்க இன்னும் ஐந்து  பில்லியன் ஆண்டுகள் செல்லும். சூரியன் ஒரு கருங்குழி(Black hole) ஆக மாறாது என்பதைக் கண்டறிந்தவர் சந்திரசேகர் என்னும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி. இவர் சி வி ராமனின் மருமகன். சந்திரசேகரும் நோபல் பரிசு பெற்றவர். சூரியனிலும் பார்க்க 3 மடங்கு பெரிய நட்சத்திரங்கள் மட்டுமே எரிந்து முடிய கருங்குழிகள் உருவாகும் என்று கண்டறிந்தார் சந்திரசேகரன். பிரபஞ்சத்தில் பல கருங்குழிகள் இருக்கின்றன. பல கருங்குழிகள் உருவாகின்றன. அவை பூமியை உறிஞ்சும் அளவிற்கு அண்மையில் இல்லை. இப்போது விரிவடைந்து கொண்டிருக்கும் பிரபஞ்சம் தனது விரிவடையும் வலு தனது ஈர்ப்பு வலுவிலும் குறைவடையும் போது ஒடுங்கத் தொடங்கும். எல்லாம் ஒடுங்கி ஒரு சிறு புள்ளியாகும். அது பிரபஞ்ச அழிவாகும். இதை big crunch என்பர். பிரளயத்தின் முடிவில் பிரபஞ்சத்தை திருமால் ஒரு சிறு பெண் குழந்தையாக மாறி பிரபஞ்சத்தை தனது கற்பத்தில் வைத்துக் கொண்டு ஒரு ஆலிலையில் மிதந்து கொண்டிருப்பாராம். அதனால் அவருக்கு நாராயணன் என்னும் பெயர் வந்ததாம். இந்த big crunch எனப்படும் பெரு ஒடுக்கம் நடக்க இன்னும் பல மில்லியன் ஆண்டுகள் இருக்கின்றன. உலகம் அழிய பல மில்லியன் மாயன் கலண்டர்களின் சுற்று இன்னும் இருக்கிறது.

Sunday, 16 December 2012

உங்கள் நாளை இனிய நாளாக்கச் சில ஆலோசனைகள்

படுக்கையில் போய்ப்படுத்தவுடன் இன்றைய நாள் வீணாகிவிட்டதே என்றோ அல்லது செய்ய வேண்டியவற்றைச் செய்யவில்லையே என்றோ கவலைப்படுகிறீர்களா. இதிலிருந்து விடுபட நீங்கள் நாளாந்தம் செய்ய வேண்டியவை:

1. உங்கள் நடவடிக்கைகளை உங்களிற்கு ஏற்ப மட்டுப் படுத்துங்கள்.
அளவிற்கு அதிகமாக ஆசைப்படக்கூடாது. ஓய்வு முக்கியம். காலையில் எழுந்தவுடன் இன்று செய்ய வேண்டியவற்றை நிரைப்படுத்துங்கள். அவற்றில் முக்கியமானவை எது தேவையில்லாதது எது ஒத்தி வைக்கக்கூடியது எது என்று வகைப்படுத்துங்கள்.

2. உடற்பயிற்ச்சி, தியானம், யோகா.
உடற்பயிற்ச்சி தியானம், யோகாசனம் போன்றவை உணவைப் போலவே முக்கியமானவை. இவற்றிற்கு நேரம் ஒதுக்குங்கள். ஒன்றையாவது கட்டாயமாகச் செய்யுங்கள்.

3. செல்லப் பிராணிகள் பிள்ளைகள்
செல்லப்பிராணிகள் அல்லது பிள்ளைகளுடன் விளையாடுவதற்கு நேரம் ஒதுக்குங்கள்.

4.  தீயாரைக் காண்பதுவும் தீதே
உங்களின் மனதில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திக் கொள்பவர்களுடன் பழகுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். சிலர் மற்றவர்களைக் கலாய்ப்பதற்கென்றே அலைகிறார்கள்.உங்களை உற்சாகப்படுத்துபவர்கள், ஊக்கப்படுத்துபவர்கள், உங்கள் நலனில் அக்கறை உள்ளவர்களுடன் பழகுங்கள்.

5. படைத்தல் சிறந்தது.
பத்திரிகைகளிலோ அல்லது இணையங்களிலோ வருபவற்றிற்கு பின்னூட்டம் எழுதுங்கள். அல்லது உங்களிற்கென்று ஒரு  வலயத்தையோ அல்லது ஒரு வலைப்பூவையோ உருவாக்குதலும் நன்று. உங்கள் மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்ப்பது நல்லது. நவீன வாழ்க்கை முறைமை பலரைத் தனிமைப்படுத்தியுள்ளது. உங்களிடம் இருக்கும் படைப்பாற்றலை வளருங்கள். பாடுதல், வரைதல் போன்றவை பயன்தரும்.

6. நன்மை செய்யுங்கள்
சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் எவருக்காவது உதவுங்கள், நன்மை செய்யுங்கள், நல்லாசி கூறுங்கள். 

7. சிரியுங்கள்
நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். தொலைக்காட்சியில் நகைச்சுவைக் காட்சிகளைப் பாருங்கள், எழுத்து ஊடகங்களில் வரும் நகைச்சுவைத் துணுக்குகளை வாசியுங்கள்.

8. என்றும் புதிது தேவை
புதியவர்களைச் சந்தியுங்கள், புதியவற்றை அறிந்து கொள்ளுங்கள், புதிய இடங்களுக்குச் செல்லுங்கள்.

9. மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடாதீர்கள்.
பலரது கவலைகளுக்கு மற்றவர்களுடன் தங்களை ஒப்பிடுவதே முக்கிய காரணமாக இருக்கிறது.

10. எல்லாரையும் திருப்திப் படுத்த முயல வேண்டாம்.
எல்லோரையும் திருப்திப்படுத்த முயன்றால் அது தோல்வியிலேயே முடியும். சிலரது அதிருப்தியைச் சம்பாதிக்காமல் வாழ்க்கை நடத்த முடியாது.மஹிந்தவிற்கு தலையிடியாகிய இலங்கை சட்டவாளர் சங்கத்தின் அதிரடி முடிவு

15-12-2012இலன்று கூடிய இலங்கைச் சட்டவாளர் சபையினர் (Bar Association) இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவிற்கு பெரும் தலையிடி கொடுக்கக் கூடிய அதிரடி முடிவை எடுத்துள்ளனர்.

இலங்கையின் தலைமை நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிராக மஹிந்த அரசு எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கையின் சட்டத்துறையினரும் நீதித் துறையினரும் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர். ஷிரானி பண்டாரநாயக்கவை இலங்கையின் தலைமை நீதியரசராக 2011இல் நியமித்தவர் இலங்கைக் குடியரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ச. தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக ஷிரானியின் கணவரான பிரதீப் காரியவாசத்தை தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக நியமித்தவர் மஹிந்த ராஜபக்ச. மோசடிக்காக பிரதீப் காரியவாசத்தை பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ச நீக்கினார். இப்போது ஷிரானியைப் பதவியி இருந்து நீக்க மஹிந்த தீவிர முயற்ச்சி செய்கிறார்.

மஹிந்தப் பிரயத்தனம்
இலங்கையின் நீதித் துறைக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான மோதல் மன்னாரில் ஆரம்பித்தது. மன்னார் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் மன்னார் நீதிபதியை அச்சுறுத்தியமை தொடர்பாக கோத்தபாய ராஜ்பக்சவிற்கு நெருக்கமானவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீனிற்கு மன்னார் நீதிபதி அழைப்பாணை விடுத்தார். இது நீதித் துறைக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான மோதலை ஆரம்பித்து வைத்தது. இலங்கை நீதிச் சேவையின் செயலாளர் இனம் தெரியாதோரால் தாக்கப்பட்டார். உயர் நீதிமன்றத்திற்கு மஹிந்தவின் செயலாளருக்கு மிகவும் வேண்டியவர் ஒருவரை நியமிக்கும்படி மஹிந்த செய்த பரிந்துரையம் பிரதம் நீதியரசர்  ஏற்றுக் கொள்ளவில்லை.  இது மஹிந்த-ஷிரானி மோதலை மேலும் வளர்த்தது.  திவி நெகும சட்டம் நீதித் துறைக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான மோதலை மேலும் மோசமாக்கியது. திவி நெகும என்பது மாகாணசபையின் அதிகாரங்களை பறித்து மஹிந்தவின் இன்னொரு உடன் பிறப்பான பசின் ராஜபக்சவின் கீழுள்ள பொருளாதாரத் துறை அமைச்சுக்கு கொடுக்கும் சட்டம். இச் சட்ட மூலத்தின் 27 வாசகங்களில் 16 இலங்கை அரசியல் அமைப்பிற்கு முரணானது என்று இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சில வாசகங்கள் பாராளமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் ஒரு வாசகத்தை நிறைவேற்றுவதற்கு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தப் படவேண்டும் என்றும் உயர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இது ஆட்சியாளர்களை ஆத்திரத்திற்குள்ளாக்கியது. விளைவு பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்காவைப் பதவி விலக்கும் பிரேரணை பாராளமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நாட்டின் சகல துறைகளையும் தமது பெருவிரல்களின் கீழ் வைத்திருக்கும் ராஜபக்சேக்களுக்கு நீதித் துறைமட்டும் தமது சொல்கேளாமல் இருப்பதைப் பெருட்படுத்த முடியவில்லை. பாராளமன்றில் மூன்றில் இரண்டுக்கு மேற்பட்ட பெரும்பானமையும் உச்ச அதிகாரங்களைக் கொண்ட குடியரசுத் தலைவர் பதவியும் மஹிந்த ராஜபக்சவை உலகிலேயே மிக அதிகாரம் கொண்ட ஒரு ஆட்சித் தலைவராக மாற்றி விட்டது.

பாராளமன்றத் தெரிவுக்குழு
ஷிரானி பண்டாரநாயக்காவைப் பதிவியில் இருந்து விலக்கும் பிரேரணை 116 பாராளமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு பாராளமன்ற அவைத் தலைவரிடம் சமர்ப்பித்தனர். பாராளமன்றத் தலைவர் ஷிரானிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அடங்கிய ஒரு தெரிவுக் குழுவை அமைத்தார். ஷிரானியை  விசாரணைக்கு அழைத்தனர் பாரளமன்றத் தெரிவுக் குழுவினர். விசாரணையின் போது ஆளும் கட்சிப் பாராளமன்ற உறுப்பினர் தகாத வார்த்தைகளால் அவரைத் திட்டித் தீர்த்தனர். பாரளமன்றத் தெரிவிக்குழுவில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியேறினர். தெரிவுக் குழுவின் உள்ள ஆளும் கட்சியின் பாராளமன்ற உறுப்பினர்கள் 1000பக்கங்களடங்கிய குற்றப் பத்திரிகையக் ஷிரானியிடம் கொடுத்து மறுநாள் அதற்கு பதில் தரும்படி கூறினார்கள். ஷிரானி பாராளமன்றக் குழு பக்கச் சார்பானது அதைக் கலைத்து விட்டு வேறு ஒரு குழுவை அமைக்கும்படி பாராளமன்றத் தலைவரிடம் கூறிவிட்டு தெரிவுக் குழுவிற்கு தான் சமூகமளிக்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டார். பாராளமன்றத் தெரிவுக் குழு ஷிரானியைக் குற்றவாளி எனக் குறிப்பிடும் அறிக்கையை பாராளமன்றத் தலைவரிடம் சமர்ப்பித்தது. ஒரு திருடன் என்று குற்றம் சாட்டப்பட்டவனுக்கு கொடுக்கப்படும் கால அவகாசம் கூட ஷிரானிக்கு வழங்கப்படவில்லை.

தலைமை நீதியரசர் பதவி நீக்கப்பட்டால் புதிய தலைமை நீதியரசர் பதவியை எவரும் எடுக்கக் கூடாது என்றும் மீறி யாராவது பதவி ஏற்றால் அவரை இலங்கைச் சட்டவாளர்கள் புறக்கணிப்பார்கள் என்றும் 15-12-2012இலன்று கூடிய இலங்கைச் சட்டவாளர் சபையினர் (Bar Association) முடிவெடுத்தனர். இந்த முடிவு சரியாக நடைமுறைப்படுத்தப் படுமானால் இலங்கையின் சட்டத்துறையிலும் நீதித் துறையிலும் பெரும் நெருக்கடி ஏற்படும். இலங்கை அரசமைப்பு யாப்பு சிக்கல் நிறைந்தது சட்டவாக்கும் அதிகாரம் பாராளமன்ற்த்திடமும், சட்டத்திற்கு வியாக்கியானம் கொடுக்கும் அதிகாரம் நீதித் துறையிடம் மட்டுமே இருக்கிறது. இலங்கைப் பாராளமன்றம் காகம் கறுப்பு என்பது போல் ஒரு சட்ட வாசகத்தை நிறைவேற்றினால். அச்சட்டத்தின் படி காகம் பச்சை என்று நீதி மன்றம் தீர்ப்புக் கூறினால் அதில் தலையிடும் உரிமை பாராளமன்றத்திற்கு இல்லை. இதை பிரபல சட்டத்தரணி எஸ் நடேசன் Saturday Review வழக்கில் தெளிவாகக் கூறியிருந்தார்.

ராஜபக்சேக்கள் பின்வாங்குகிறார்களா?
ஷிரானிக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் கடும் எதிர்ப்புக்கள் எழுந்ததைத் தொடர்ந்து மஹிந்த ராஜபக்ச ஷிரானிக்கு எதிரான விசாரணை பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்றார்.  பின்னர் பாராளமன்றத் தெரிவுக் குழுவின் அறிக்கையைப் பற்றி ஆராய இன்னொரு தன்னிச்சையான குழு அமைக்கப்படும் என்றார். இது பான் கீ மூன் இலங்கைப் போரின் போது இழைக்கப் பட்டதாக கருதப்படும் குற்றங்களை விசாரிக்க குழு மாறி குழுவாக நியமிப்பது போல் உள்ளது. மேலும் இலங்கை அரசு ஷிரானிக்காக பாராளமன்றத் தெரிவுக்குழு செய்தது நீதி விசாரணை அல்ல அது ஒரு ஒழுக்காற்று நடவடிக்கை மட்டுமே என்று தெரிவித்தது. இன்னொரு குழு அமைத்ததும் நடந்தது நீதி விசாரணை அல்ல என்பதும் ராஜபக்சேக்கள் ஷிரானிக்கு எதிரான அவர்களது நடவடிக்கைகளிற்கு  எழுந்த எதிர்ப்பினால் ஆடிப்போயுள்ளார்கள் என்றே தெரிகிறது. ராஜபக்சே ஆட்சிக்கு ஆதரவாக பல ஊடகங்களில் பிரச்சாரம் செய்தவரான ராஜீவ விஜேசிங்க தலைமை நீதியரசருக்கு எதிரான குற்றவியல் முன்மொழிவில் கையொப்பமிடவில்லை. கையொப்பமிடாத மஹிந்த கட்சியின் ஒரே ஒரு பாராளமன்ற உறுப்பினர்  ராஜீவ விஜேசிங்கவாகும். தன்னிடம் முன்மொழிவை வாசிக்காமல் கையொப்பமிடும்படி கேட்டார்கள் அதனால் அவர் கையொப்பமிடவில்லை என ராஜீவ லக்பீம பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இது கையொப்பமிட்ட மற்ற 116 உறுப்பினர்களைக் கேலி செய்வதாகவும் மஹிந்தவை மானபங்கப் படுத்துவதாகவும் இருக்கிறது. அது மட்டுமல்ல தலைமை நீதியரசருக்கு எதிரான முன்மொழிவு குடியரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்குத் தெரியாமல் நடந்தது என்கிறார். இது மஹிந்த ஆட்சியில் ஒன்றுக்கு மேற்பட்ட அதிகார மையங்கள் இருக்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அல்லது மஹிந்த தன் மேல் களங்கம் வராமல் இருக்க ராஜித மூலமாக நாடகமாடுகிறரா?

 ஷிரானி உத்தமரல்லர்.
ஷிரானியின் வங்கிக் கணக்கொன்றில் குறிப்பிட்ட ஒரு மாத்தத்திற்கு மட்டும் மூன்று கோடிக்கு மேல் பணமாற்றங்கள் செய்யப் பட்டுள்ளது. இந்த வங்கிக் கணக்கு பற்றிய விபரத்தை ஷிரானி வருமான வரி இலாகாவிற்கு மறைத்து விட்டார் என்பது பெரிய குற்றச்சாடுக்களில் ஒன்று. ஷிரானியின் வங்கிக் கணக்கில் ஒரு ஆண்டுக்கு 25 கோடி ரூபாக்கள் வரவிடப்பட்டிருப்பதாக ஒரு ஊடகம் வெளிவிட்ட செய்திக்கு அவரது வழக்கறிஞர்கள் ஆட்சேபம் தெரிவித்திருந்தனர். ஷிரானி பல கோடிகளுக்கு இலங்கை அரச திறைசேரி முறிகளையும் வாங்கியிருந்தார்.ஷிரானி அதிக எண்ணிக்கையான வங்கிக் கணக்குகளை வைத்திருந்தார் அவற்றிற்கிடையில் நடக்கும் பண மாற்றீடுகள் வருமானவரித் துறையைக் குழப்புவதாக இருக்கின்றன என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்தை மறைத்த ஷிரானி விவகாரம்
ஷிரானி விவகாரம் பெருமளவில் ஊடகங்களில் அடிபட்டுக்கொண்டிருக்கும் போது மஹிந்த அரசு தனது மோசமான பாதிட்டை சத்தம் சச்சரவின்றி பாராளமன்றத்தில் நிறைவேற்றி விட்டது. பலருக்கு இரா சம்பந்தன் வரவு செலவுத் திட்டத்தின் போது விடுதலைப் புலிகளைப்பற்றி ஒரு மோசமான உரையாற்றிய செய்தி வெளிவந்த போதுதான் பலருக்கு வரவு செலவுத் திட்டம் இலங்கைப் பாரளமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...