Friday, 18 May 2012

முள்ளிவாய்க்கால்: இறைப்பவர்கள் இருக்கும்வரை வாய்க்கால்கள் வற்றாது

நீதி அங்கு நிலை குலைந்தது
பௌத்தம் அங்கு பாடை ஏறியது
காந்தீயம் அங்கு காடைத்தனமானது
மானிடம் அங்கு மரித்துவிட்டது
கருவறைச் சிசுவும் கல்லறை கண்டது
அவலத்தின் உச்சத்தில்
பன்னூறாயிரம் அப்பாவிகள்
பரிதவித்து நின்றனர்
இறந்தவரைப் பார்த்து
வாழ்பவர் பொறாமை கொண்டனர்

முள்ளிவாய்க்கால்
சிங்களத்தின் மிருகத்தனத்தின்
வடிகாலானது

அரச பயங்கரவாதிகள் கையில்
கொத்தணிக் குண்டுகளும்
பொஸ்பரஸ் குண்டுகளும் கொடுத்த
பன்னாட்டுப் பயங்கரவாதிகள் யார்
விடையில்லை இன்றுவரை
நாட்டிற்கு நல்விருந்தாய் வாழ்ந்தவர்
சீறிவிழுந்த ஷெல்லிற்கு விருந்தாயினர்

ஐநாவின் பொய் நாவாய்
இந்தியத் துரோகி விஜய் நம்பியார்
தமிழர்தம் அவலம் பற்றி
அறிக்கை சமர்ப்பிக்க மறுத்து நின்றான்
பன்னாட்டுச் சமூகத்தின்
காக்கும் பொறுப்பு காற்றோடு போனது
முள்ளிவாய்க்காலில்
பன்னாட்டு நீதி
இரத்த ஆறாய் ஓடியது

வீழ்ந்தோமா தாழ்ந்தோமா
சரிந்தோமா சலித்தோமா
இறைப்பவன் இருக்கும்வரை
வாய்க்கால்கள் வற்றுவதில்லை

Thursday, 17 May 2012

பின் லாடன் கொலைக்கு திட்டமிட்ட மாதிரியுருவை அமெரிக்கா வெளியிட்டது

பின் லாடன் மறைந்திருந்த மாளிகையின் மாதிரியுருவை அமெரிக்கா பாதுகாப்புத் துறை அலுவலகமான பெண்டகன் வெளியிட்டுள்ளது. பின் லாடன் தங்கியிருந்த மாளிகையை செய்மதி மூலம் படம் பிடித்து அதைப் போல ஏழு அடிக்கு ஒரு அங்குலம் என்ற விகிதப்படி அமைக்கப்பட்ட மாதிரியுருவை அமெரிக்கப் படையினர் பின் லாடனைப் கொல்வதற்கான திட்டமிடுவதற்கும் அதிபர் பராக் ஒபாமாவிற்கு விளக்குவதற்கும் பாவித்தனர்.


செய்மதிப் படங்களில் இருந்து மாதிரியுருவை அமைத்த National Geospatial-Intelligence Agency(NGA) என்னும் நிறுவனத்திற்கு அது யாருடைய மாளிகை என்று தெரியாது.

பின் லாடன் தங்கியிருந்த மாளிகையில் இருந்த புதர்கள், மரங்கள், குப்பைத் தொட்டிகள் யாவும் அச்சொட்டாக பிரதி செய்யப்பட்டன.

பின்னர் பின் லாடனின் மாளிகையைப் போல் அச்சொட்டாக ஒரு மாளிகையைக் கட்டி அதில் அமெரிக்க சீல் படையினர் தாக்குதல் ஒத்திகையைப் பல தடவை மேற்கொண்டனர்.
அநியாயத்திற்கு ஆதங்கப்படும் எரிக் சொல்கெய்ம்

"என்னை சிங்களவர்கள் வெள்ளைப் புலி என்றார்கள். தமிழர்கள் பிரபாகரனை தவறாக வழிநடத்தியவர் என்றார்கள்." என்று ஆதங்கப்பட்டிருக்கிறார் இலங்கைக்கு சமாதான ஏற்ப்பாட்டாளராகக் கடமையாற்றிய நோர்வேயின் முன்னள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம். அத்துடன் அவர் நிற்கவில்லை இலங்கை தனது நாட்டில் வெளி நாட்டவரைத் தலையிடச் சொல்லிவிட்டு பின்னர் அவர் மீது வசை பாடும் ஒரு விநோதமான நாடு என்றும் சொல்கிறார் எரிக் சொல்ஹெய்ம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுரேஸ் பிரேமச்சந்திரன் உட்படச் சிலர் கலந்து கொண்ட நோர்வேயில் 15-02-2012 இலன்று நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே எரிக் ஐயா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

எப்படி இருந்தவர் இப்படி ஆனார்!
தமிழர்களின் நண்பன் என்ற வகையிலும் இலங்கையின் நண்பன் என்ற வகையிலும் தான் தமிழர்களுக்கு என்று ஒரு தனியான நாடு சரிவராது என்று எரிக் ஐயா சொல்கிறார். அது தனது எண்ணம் மட்டுமல்ல அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகள், இந்தியா ஆகியவற்றின் எண்ணம் என்கிறார் எரிக் ஐயா. இந்த ஐயா சாமாதானத் தூதுவராக வர முன்னர் தமிழர்கள் எப்படி இருந்தனர்? இன்று எப்படி இருக்கின்றனர்? இந்த ஐயா சமாதானத் தூதுவராக இருந்த போது மூன்று இலட்சம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த சமாதானத் தூதுவர் போர் முடிந்தவுடன் தனது பணியை நிறுத்திக் கொண்டார். உண்மையன சமாதானத் தூதுவராக இருந்திருந்தால் சமாதானம் ஏற்பட்டபின்னர்தான் தனது பணியை முடித்திருக்க வேண்டும்.


இணைத் தறுதலை நாடுகள்
ஐயா சொல்ஹெய்ம் அவர்களே இலங்கையில் போர் மூலம் தீர்வு காண முடியாது பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்வு காண முடியும் என்று சொல்லிக் கொண்டு நீங்களும் உங்கள் இணைத் தலைமை நாடுகளும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு பயங்கரவாத முத்திரை குத்தி இலங்கைப் படையினருக்கு பண உதவி ஆயுத உதவி வழங்கி தமிழர்களின் போராட்டத்தை நசுங்கடித்தது தவிர தமிழர்களுக்கு நீங்கள் என்ன நன்மை செய்தீர்கள்? இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு காண உருவாக்கப்பட்ட இணைத் தலைமை நாடுகள் தமிழர்களின் ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதுடன் மௌனமாகப் போனது ஏன்? போர் முடிந்த பின்னரும் முடியாமல் இன்றுவரை தமிழர்களுக்கு எதிராக நடக்கும் அட்டூழியங்களையும் அநியாயங்களையும் உங்கள் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகள், இந்தியா ஆகியவை கண்டும் காணமல் இருப்பது ஏன்?

 ஐநா நிபுணர்களின் அறிக்கைக்கு என்ன நடந்தது?

ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை இலங்கையில் போர்க் குற்றமும் மானிடத்திற்கு எதிரான குற்றமும் புரியப்பட்டமைக்கான நம்பகரமான ஆதாரங்கள் இருக்கின்றன என்று சொல்லியது. இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக்குழு அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்றது. ஐநா நிபுணர்குழு அறிக்கையை உங்கள் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகள், இந்தியா ஆகியவை புறந்தள்ளி விட்டு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை மட்டும் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டு ஆடுவது ஏன்?

வில்லன் நம்பியார்கள்
கொழும்பின் படைத்துறை ஆலோசகராக சதீஷ் நம்பியாரும் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலரின் ஆலோசகராக விஜய் நம்பியாரும் கடமையாற்றியதைச் சுட்டிக்காட்டிய நீங்கள் அவர்களின் சதிகள் பற்றிக் குறிப்பிடாதது ஏன்? விஜய் நம்பியார் போரின் இறுதி நாட்களில் இலங்கை சென்று என்ன செய்தார்? ஐநாவில் அறிக்கை சமர்பிக்க மறுத்தது ஏன்?

அதிகாரப்பரவலாக்கம் கெட்ட வார்த்தை.
ஒரு காலத்தில் இலங்கையில் இனப்பிரச்சனைக்கு இணைப்பாட்சி(சமஷ்டி) முறைமை ஒரு தீர்வாக முன்வைக்கப்பட்டது. சிங்களவர்கள் அதைத் திருப்பிப் திருப்பி தவறானது என்று பொய் சொல்லி இணைப்பாட்சியை ஒரு கெட்ட வார்தை ஆக்கிவிட்டனர். பின்னர் அதிகாரப் பரவலாகக்ம் என்பது ஒரு தீர்வாக முன்வைக்கப்பட்டது. பின்னர் அதுவும் சிங்களவர்கள் மத்தியில் ஒரு கெட்ட வார்த்தையாக்கப்பட்டது. இப்போது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் என்ற பதம் முன்வைக்க்கப்பட்டுள்ளது. நல்லிணக்க ஆணக்குழுவின் பரிந்துரைகள் ஒரு சர்வ ரோக நிவாரணி போல் உங்கள் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகள், இந்தியா ஆகியவை கூறுகின்றன. ஏற்கனவே நல்லிணக்க ஆணைக்குழு தனக்கு வழங்கப்பட்ட ஆணையை மீறிச் செயல்பட்டு விட்டது என்று இலங்கை அரசதரப்பில் தெரிவிக்கப்படுகிறது. விரைவில் நல்லிணக்கமும் ஒரு கெட்ட வார்த்தை ஆக்கப்பட்டுவிடும்.


உங்கள் நிகழ்ச்சி நிரலை நாம் அறிவோம்
இலங்கையில் போர் மூலம் தீர்வுகாண முடியாது பேச்சு வார்த்தை மூலம் தான் தீர்வுகாண முடியும் என்று கூறிக் கொண்டே இலங்கை அரசிற்கு தமிழர்களின் போராட்டத்தை நசுக்க உதவினீரகள். இப்போது இலங்கையில் அதிகரித்து வரும் சீன ஆதிக்கத்தை ஒழிக்க இலங்கைப் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமைகள் பற்றிப் பேசுகிறீரகள். சீன சார்பற்ற ஒரு அரசை கொழும்பில் நிறுவிய பின்னர் உங்கள் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகள், இந்தியா ஆகியவை தமிழர்களைக் கைகழுவி விட்டு விடும்.

Wednesday, 16 May 2012

அம்பலமாகும் இந்தியாவின் சதிகள்

இலங்கையில் இந்தியா செய்த சதிகளின் ஒரு பகுதியை இலங்கை அதிபர் மஹிந்த ராஜ்பக்சவின் செயலாளார் லலித் வீரதுங்க கோத்தபாய ராஜபக்ச எழுதிய கோத்தாவின் போர் என்னும் நூல் வெளியீட்டின் போது அம்பலப்படுத்தினார். கோத்தாவின் போர் கறை படிந்த போர் என்பதனால் பல நாடுகளின் கொழும்பிற்கான தூதுவர்கள் இந்த நூல் வெளியீட்டு விழாவைப் புறக்கணித்தனர். தமிழர்கள் போர்க்குற்றம் இழைக்கப்பட்டதாக நம்பும் போரிற்கு  பேருதவி புரிந்த இந்தியாவின் தூதுவர் இந்த விழாவில் பங்கு பற்றியிருந்தார். பாவம் அவர் முன்னிலையிலேயே இந்தியாவை ஒரு வாங்கு வாங்கி விட்டார் லலித் வீரதுங்க.

இந்தியா பயங்கரவாதத்திற்கு உதவிய நாடு
The Indian intelligence agencies had a hand in planning and executing terrorist strikes in Colombo in the mid-eighties. எண்பதுகளின் நடுப்பகுதிகளில் கொழும்பில் பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிடுவதிலும் நிறைவேற்றுவதிலும் இந்திய உளவு முகவர்களின் கைக்கள் இருந்தன என்று கோத்தாவின் போர் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதை லலித் வீரதுங்க சுட்டிக் காட்டினார். ஒரு நாட்டை இன்னொரு நாடு பயங்கரவாதத்திற்கு உதவிய நாடு என்று சொல்வது ஒன்றும் சாதாரணமானதல்ல. 1987இல் ராஜிவ் காந்திக்கு தோளில் ஒரு போடு போட்டார்கள் சிங்களவர்கள். 2012இல் இந்தியாவின் உச்சந்தலையில் ஒரு போடு போட்டார் லலித் வீரதுங்க.

பலவற்றை திருத்துக் கூறவும் செய்தார் லலித்.
2008இற்குப் பின்னர் இந்தியா இலங்கையில் தமிழர்கள் போராட்டத்தை ஒழித்துக் கட்ட எல்ல உதவிகளையும் இந்தியா இலங்கைக்கு வழங்கியது. அதுபற்றி லலித் வீரதுங்க அம்பலப் படுத்தவில்லை. எண்பதுகளின் நடுப்பகுதியில் இந்தியா செய்த சதிகள் இப்போது அம்பலப்படுத்தப்பட்டன. 2008இலும் 2009இலும் செய்த சதிகள் வெளிவர இன்னும் சில காலம் எடுக்கலாம்.

இந்தியா என்றும் தமிழர்களின் எதிரியே
விடுதலைப் புலிகளை ஆரம்பத்தில் இருந்தே ஒழித்துக் கட்ட இந்தியா திட்டமிட்டிருந்தது. ராஜிவ் கொலைக்குப் பின்னர்தான் இந்தியா தமிழர்களுக்கு எதிராக திரும்பியது என்பது உண்மைக்குப் புறம்பானது. ராஜிவ் கொலைக்கு முன்னரே தமிழர்கள் போராட்டம் வலுவடைவதைத் தடுக்க இந்தியாவே தமிழர்கள் மத்தியில் பல போராட்டக் குழுக்களை உருவாக்கியது. அத்துடன் அவர்களிடை மோதல்களையும் உருவாக்கியது. ஒரு கட்டத்தில் இந்தியா டெலோ இயக்கத்துடன் இணைந்து விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டவும் திட்டமிட்டிருந்தது. விடுதலைப்புலிகள் விழித்துக் கொண்டனர். தமிழர்கள் போராட்டம் வலுவடைவதை ஒரு நாளும் இந்தியா அனுமதித்தில்லை. பல கட்டங்களில் தமிழ் போராட்டக் குழுக்களின் படைக் கலன்களை பறிமுதல் செய்ததுமுண்டு. விடுதலைப் புலிகள் கையில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் கிடைக்காமல் இருப்பதை இந்தியா உறுதி செய்து கொண்டது.

யாழ்ப்பாணத்திலும் இந்தியாவின் சதி அம்பலமானது.
கொழும்பில் லலித் வீரதுங்க இந்தியாவின் சதிகளில் சிலவற்றை அம்பலமாக்க யாழ்ப்பாணத்திலும் இந்தியாவின் சதி அம்பலமாக்கப்பட்டுள்ளது. இலங்கை இனப்பிரச்சனைக்கு "சர்வரோக நிவாரணி" என்று இந்தியா கூறும் இலங்கை அரசியல் அமைப்பிற்கான 13வது திருத்தம் ஒரு அதிகாரமற்ற நிர்வாக அலகை மட்டுமே உருவாக்குகியது என்று யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் 13வது திருத்தத்தில் உள்ள வாசகங்களை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து விளக்கியுள்ளார். அது மட்டுமல்ல அவர் 13வது திருத்தம் வரும் ஆனால் வராது என்றும் நகைச்சுவையாகக் கூறியுள்ளார். இந்தப் பதின்முன்றாவது திருத்தத்தை இந்தியா 25 ஆண்டுகளாக நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறது. 13வது திருத்தம் அமூலாக்கப்படுவதை இந்தியா விரும்பவில்லை என்பதை யார் அம்பலமாக்குவார்களோ? இந்தியாவின் நிலைப்பாடானது வடக்கில் கிழக்கில் வாழும் தமிழர்கள் மலையகத்தில் வாழும் தமிழர்கள் போல அடக்கப்பட வேண்டும் என்று இந்தியா நினைப்பதை யார் அம்பலப்படுத்துவது?

Tuesday, 15 May 2012

அமெரிக்காவிற்குப் பணியாத ஈரானின் பொருளாதாரம் சீரழியுமா?

ஈரானியக் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் தமது செய்மதித் தொடர்புகளைத் துண்டித்துவிட்டு எண்ணெய்யுடன் கடலில் எண்ணெய் விற்பதற்கு வழியின்றி அலைகின்றன. ஐக்கிய அமெரிக்காவின் செய்மதிக் கண்காணிப்பில் இருந்து தப்புவதற்கு அவை தமது செய்மதித் தொடர்புகளைத் துண்டித்துவிட்டன. ஈரானிய எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் இப்போது காப்புறுதி இன்றி கடலில் மிதக்கின்றன. ஈரான் மீதான பொருளாதாரத் தடையால் அவற்றிற்கு காப்புறுதி எடுப்பது சிரமம்மாக இருக்கிறது. பெரும்பாலான கப்பல் காப்புறுதி நிறுவனங்கள் ஐரோப்பாவைச் சேர்ந்தவை. அவை ஈரானியக் கப்பல்களுக்கு காப்புறுதி செய்ய மறுத்துவிட்டன. ஏற்கனவே பன்னாட்டுக் கொடுப்பனவு முறைமையான SWIFT(Society for Worldwide Interbank Financial Telecommunication)இல் இருந்து ஈரான் வெளியேற்றப்பட்டுள்ளது.

ஈரான் அணுக் குண்டுகளை உற்பத்தி செய்வதற்கான முயற்ச்சி செய்யக் கூடாது என்று மேற்கு நாடுகள் ஈரான் மீது பொருளாதாரத் தடையை ஏற்படுத்தின. உலகச் சந்தையில் தனது எண்ணெயை விற்கச் சிரமப்படும் ஈரான் தனது எண்ணெய் தாங்கிக் கப்பல்களை தான் உற்பத்தி செய்யும் எண்ணெயை களஞ்சியப்படுத்துகிறது. ஜப்பான் இந்தியா போன்ற நாடுகள் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை குறைத்துக் கொண்டு வருகின்றன. பொருளாதாரத் தடையால் ஈரான் மிகக் குறுகிய காலத்துக்குள் இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாயை இழந்துள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எண்ணெய் விலை அதிகரிப்பால் ஈரான் 100பில்லியன் அமெரிக்க டாலர்களை வெளிநாட்டுச் செலவாணி இருப்பாக வைத்துள்ளது.  ஈரானிய எண்ணெய் வழங்கல் இல்லாமல் உலகச் சந்தையில் எண்ணெய் விலை குறைவது அமெரிக்காவிற்கு ஒரு வெற்றியாகக் கருதப்படுகிறது.

பயன்படுத்தும் சீனா
ஈரான் மீதான பொருளாதாரத் தடையை எதிர்க்கும் சீனா ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி  செய்து அதனை தனது நாணயமான யுவானால் செலுத்துகிறது.  இந்திய வர்த்தகரகள் ஈரானுடனான வர்த்தகத்திற்கான பணக் கொடுப்பனவில் பெரும் சிரமத்தை எதிர் கொள்கின்றனர். இந்திய வங்கிகள் ஈரானின் மீதான பொருளாதாரத் தடையை பயன்படுத்தி வர்த்தக ரீதியில் இலாபமீட்டுவது பற்றி ஆலோசிக்கின்றனர். பொருளாதாரத் தடையால் நலிவடைந்துள்ள ஈரானிய வங்கிகளிற்கு இந்திய வங்கிகள் உதவி செய்யலாம். சென்ற வாரம் இந்தியாவிற்குப் பயணம் செய்த அமெரிக்க அரசச் செயலர் ஹிலரி கிளிண்டன் ஈரான் மீதான பொருளாதாரத் தடைக்கு இந்தியா உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். ஹிலரி டில்லியில் இருக்கும் போதே இந்தியாவுடனான வர்ததகத்தை விரிவுபடுத்த ஈரானிய அதிகாரிகளும் டில்லியில் இருந்தனர்.

எச்சரித்த ஈரான் அடங்கியது
தன் மீது பொருளாதாரத் தடை கொண்டுவந்தால் ஹோமஸ் நீரிணையை மூடிவிடுவேன் என்று ஈரான் சென்ற ஆண்டின் இறுதிப் பகுதியில் இருந்தே எச்சரித்து வந்தது.  ஓமான் வளைகுடாவையும் பாராசீக வளைகுடாவையும் இணைக்கும் 35மைல்கள் அகலமுள்ள ஹோமஸ் நீரிணையை தான் மூடி விடுவேன் என்று ஈரான்  எச்சரித்திருந்தது. கடல் மூலமான உலக எரிபொருள் வழங்கலில் 40% ஈரானிற்கு அண்மையில் உள்ள் ஹொமஸ் நீரிணையூடாக நடக்கிறது. உலக மொத்த எண்ணை வழங்கலில் இது 20% ஆகும். நாளொன்றிற்கு 15 எண்ணை தாங்கிக் கப்பல்கள் இதனூடாக பயணம் செய்கின்றன. சவுதி அரேபியா, ஈராக்,குவைத், பாரெய்ன், கட்டார், துபாய், போன்ற நாடுகளில் இருந்தூ ஏற்றுமதியாகும் எரிபொருள் ஹோமஸ் நீரிணையூடாகவே நடக்கின்றது. இதை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து உலகை ஆட்டிப்படைக்கலாம் என்பது ஈரானின் கனவு கண்டிருந்தது. ஆனால் பொருளாதாரத் தடையை மேற்குலக நாடுகள் கொண்டுவந்த போது அது அடங்கிவிட்டது.


பொருளாதார நெருக்கடி
ஈரான் தனது பொருளாதாரம் தொடர்பாக வெளிவிடும் தகவல்கள் நம்பத்தகுந்தவை அல்ல எனச் சில பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஈரானில் 20% வேலையில்லாப் பிரச்சனையும் 20% விலைவாசி அதிகரிப்புக் இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். ஈரான் தனது மக்களுக்கு மின்சாரம் எரிவாயு, பாண் போன்றவற்றை மக்களுக்கு மானிய விலையில் வழங்கி வருகிறது. இதனால் அரச செலவீனங்கள் ஈரானில் அதிகமாகும்.

ஜூலை முதலாம் திகதி
ஈர்ரன் தனது அணு ஆராய்ச்சியில் பின் வாங்குவதாக இல்லை. இன்னும் ஒரு ஆண்டு அல்லது ஒன்றரை ஆண்டுக்குள் ஈரான் அணுக் குண்டு உற்பத்தி செய்யலாம். ஈரானுக்கு எதிரான முழுமையான பொருளாதாரத் தடை ஜுலை முதலாம் திகதியில் இருந்து அமூலுக்கு வருகிறது. அதன் பின்னர் ஈரான் பெரும் பொருளாதாரப் பிரச்சனைகளை எதிர் நோக்க வேண்டியிருக்கும். ஆனால் சீனாவும் இரசியாவும் ஈரான் மீதான பொருளாதாரத் தடையை கடுமையாக எதிர்க்கின்றன. ஈரான் தனது பொருளாதாரத் தேவைகளுக்கு சீனா, இரசியா, வட கொரியா, வெனிசுலேவியா போன்ற பல நாடுகளை நாடலாம். அவற்றுடன் வர்த்தகத்தை ஏற்படுத்தலாம். ஆனால் மேற்குலக நாடுகள் இந்த நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமா? அதுவும் இப்போது அவை எதிர் கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில்.

Monday, 14 May 2012

மஹிந்த வளைந்து நழுவுவாரா? நிமிர்ந்து விழுவாரா?

குரங்கிற்கு முடிவு காலம் வந்துவிட்டால் அது பாயும் கொப்பு எல்லாம் வழுக்கும் என்று ஒரு பழமொழி உண்டு. இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவிற்கும் அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுவிட்டது. அண்மைக் காலமாக பல நிகழ்வுகள் அவருக்கு சாதகமாக இல்லை. நாட்டில் உச்ச நிலையில் அவரின் இருப்பிற்கு பல சவாலகள் ஏற்படுகின்றன. அவரது உத்திகள் அவருக்கு எதிராகவே கிளம்புகின்றன.

தங்க வேட்டை
இலங்கையின் தங்கக் கையிருப்புக்களை இலங்கை மத்திய வங்கி இரகசியமாக விற்றமையை ஊடகங்கள் அம்பலப்படுத்திவிட்டன. இலங்கை அரசின் அந்நியச் செலவாணிப் பற்றாக் குறையை நிவர்த்தி செய்ய இலங்கை தன்னிடமுள்ள தங்கக் கையிருப்புக்களை விற்க வேண்டிய நிர்ப்பந்தம். இலங்கை ரூபாவின் மதிப்பை அதள பாதாளம் செல்ல விடாமல் தடுக்க இலங்கை மத்திய வங்கி தனது அந்நியச் செலவாணிக் கையிருப்பை செலவு செய்து விட்டது. தங்கக் கையிருப்பில் இருந்து 9.3தொன் தங்கம் விற்றமை மஹிந்த ராஜபக்சவிற்கு எதிரான பிரச்சாரமாக இனிவரும் காலங்களில் இடம்பெறும். அது மட்டுமல்ல பிரதம் நீதியரசரின் கணவரும் அரச வங்கியான தேசிய சேமிப்பு வங்கியின் தலைவருமான பிரதீப் காரியவாசம்  47 ரூபாக்கள் பெறுமதியான பங்குகளை முப்பது ரூபாக்களுக்கு வாங்க முயன்றமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கையை இரத்துச் செய்த மஹிந்த ராஜபக்ச  பிரதீப் காரியவாசம் மீது எந்த சட்ட நடவைக்கையும் ஏன் எடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.


புதையல் வேட்டை
அநுராதபுரத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்தவர்கள் பிடிபட்டபோது அவர்கள் இலங்கைக் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்ற செய்தி அம்பலப்படுத்தப்படுத்தப்பட்டது. இது மஹிந்த ராஜபக்சமீது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

 மோசமான பொருளாதாரம்
இலங்கைப் பொருளாதாரம் இரு இரத்தப் பிழிவுகளில் தங்கியுள்ளது. ஒன்று மலையகத் தொழிலாளர்களின் இரத்தப் பிழிவு. மற்றது மத்திய கிழக்கில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களின் முக்கியமாக பணிப்பெண்களாக தொழில் புரிபவர்களின் இரத்தப் பிழிவு. மத்திய கிழக்கிலும் ஐரோப்பாவிலும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி தேயிலை ஏற்றுமதியைப் பாதித்தது. மத்திய கிழக்கில் பணிபுரியும் இலங்கையர்கள் தொகை இப்போது வெகுவாகக் குறைந்து விட்டது. இதனால் அந்நியச் செலவாணி வருவாய் குறைந்துவிட்டது. இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை தடுக்க முடியாமல் இலங்கை அரசு தடுமாறுகிறது. இலங்கைப் பங்குச் சந்தையில் ஒரு வெளிநாட்டவர் செய்த 2011 செய்த முதலீடு இலங்கை நாணய மதிப்பிறக்கத்தாலும் பங்கு விலை வீழ்ச்சியாலும் தனது முதலீட்டுக்கு 30% மேற்பட்ட இழப்பைக் கண்டுள்ளார். விலைவாசி அதிகரிப்பு 10%இலும் அதிகரித்து விட்டது. இது பணியாளர்களை சம்பள அதிகரிப்பு வேண்டி பெரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வைக்கலாம். இனி வரும் காலங்களில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமாகலாம்.

மஹிந்த குடும்பத்திலும் சகோதரப் போர்
மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்துக்குள்ளும் சகோதர போர் உக்கிரமாக நடை பெறுகிறது. கோத்த பாய ராஜபக்சவிற்கு பசில் ராஜபக்சவைப் பிடிக்காது.  பசில் ராஜபகசவிற்கு மஹிந்தவின் மகன் நாமல் ராஜபக்சவைப் பிடிக்காது. மஹிந்தவின் மனைவிக்கு கோத்தபாய ராஜபக்சவைப் பிடிக்காது.

யாழில் புலிக் கொடி
யாழ்ப்பாணம் செல்லும் சிங்கள எதிர்க்கட்சியினருக்கு எதிராக கடந்த காலங்களில் பல ஆளும் கட்சிய்கள் பல சதிகளை வெற்றிகரமாக நிகழ்த்தியது உண்டு. ஜே ஆர் ஜயவர்த்தன அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது அவர் யாழ் சென்றார் அவரது கூட்டதில் பெரும் குழப்பம் விளைவித்து மேடையை சிதைத்து அவர் விரட்டியடிக்கப்பட்டார். ரோஹண விஜயவீர மீது கல்வீசிக் காய்பப்டுத்தப்பட்டு மயங்கி விழச்செய்யப்பட்டார். ஆனால் தற்போதைய  ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பணத்திற்கு மேதினம் கொண்டாடச் சென்றபோது அவருக்கு எதிராக ஒரு புலிக்கொடியை அவரது ஊரவலத்தில் பிடித்து அவர் புலியுடன் இணைந்து விட்டார் என்று பிரச்சாரம் செய்ய முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அம்முயற்ச்சியை ரணில் அரச படைகளின் சதி அது என்று வெற்றிகரமாக அம்பலப்படுத்தி விட்டார்.

கட்டுக்கு அடங்காத வளர்த்த கடாக்கள்
மஹிந்த ஊட்டி வளர்த்த சிங்கள பௌத்த வெறியர்கள் இப்போது போடும் ஆட்டம் கட்டுக்கு அடங்காமல் போகிறது. இசுலாமிய இந்து ஆலயங்கள் மீது அவர்கள் நடாத்தும் தாக்குதல்கள்களும் அவர்கள் விடும் அறிக்கைகளும் இதைத் தெளிவாகச் சுட்டிக்க்காட்டுகிறது. அடிதடி அமைச்சர் என விமர்சிக்கப்படும் மேர்வின் டீ சில்வா விவகாரம் மஹிந்தவிற்கு அவரது கட்சிக்குள்ளேயே பெரும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது.


படையினர் இடையிலான குழப்பம்
இலங்கை அரச படையினர் இடையிலான குழப்பங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. வடக்குக் கிழக்கில் இருந்து கணிசமான தொகை படையினரை மஹிந்த தெற்கு நோக்கி நகர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் இனி  வரும் காலங்களில் ஏற்படும். இதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று  வடக்குக் கிழக்கில் அதிக அளவில் படையினர் இருப்பதாக பன்னாட்டு சமூகம் கருதுகிறது. இரண்டாவது மஹிந்தவிற்கு எதிராக சிங்கள மக்கள் கிளர்ந்து எழுவதை அடக்க மஹிந்தவிற்கு அதிக படையினர் தெற்கில் தேவைப்படலாம். தெற்கிற்கு வரும் படையினர் தமிழர்களுக்கு எதிராக செய்த அடக்கு முறைகளை சிங்களவர்களுக்கு எதிராகச் செய்வாரக்ள். இது மஹிந்தவிற்கு எதிராக மக்களை மேலும் மோசமகக் கிளர்ந்து எழச் செய்யும்.

பொன்சேக்கா நேர வெடி குண்டு
முன்னாள் படைத் தளபதி சரத் பொன்சேக்கா இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீ எல பீரிஸ் ஐக்கிய அமெரிக்காவின் அரசச் செயலர் ஹிலரி கிளிண்டனைச் சந்திக்க முன்னர் சிறையில் இருந்து விடுதலை செய்தே ஆக வேண்டும். அல்லாவிடில் ஹிலரியைச் சந்திக்க வெறும் கையுடன் சென்றவர் ஆவார். (இதை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் போது சரத் பொன்சேக்கா விடுதலை செய்யப்பட்டிருக்கலாம்.)சரத் பொன்சேக்க்கா விடுதலை செய்யப்பட்ட பின்னர் அவர் தனது மருத்துவ சிகிச்சைக்கு என்று சொல்லி வெளிநாடு செல்வார். அதை மஹிந்த தடுத்தால் அவர் உச்ச நீதி மன்றம் வரை செல்வார். சரத் பொன்சேக்கா வெளிநாடு சென்றால் அவர் மஹிந்தவைப் பற்றிய மேலும் பல போர்க்குற்ற உண்மைகளை பகிரங்கமாக அம்பலப்படுத்துவார் அல்லது இரகசியமாக  அம்பலப்படுத்த உதவுவார்.


2016இன் பின்னர் மஹிந்த தண்டிக்கப்படுவார்.
இலங்கையிலும் பங்களாதேசத்திலும் மியன்மாரிலும் சீன ஆதிக்கத்தை ஒழித்துக்கட்ட முழுமுனைப்புடன் செயற்படுகிறது ஐக்கிய அமெரிக்கா.இப்போது அமெரிக்கா இந்தியாவை வலுக்கட்டாயமாகத் தன்பக்கம் இழுத்து மஹிந்த ஆட்சிக்கு எதிராக இணைந்து செயற்பட செய்துள்ளது. இவர்களுடன் இணங்கி இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை குறைத்தும் தமிழர்களுக்கு எதிரான போரில் உதவியமைக்காக அமெரிக்காவிற்கு உரிய பங்கிலாபத்தை வழங்கியும் மஹிந்த ராஜபக்ச வளைந்து கொடுப்பாரா? அப்படி வளைந்து கொடுக்காமல் நிமிர்ந்து நின்று முரண்டு பிடித்து சீனாவின் பக்கம் மேலும் சாய்வார் ஆனால் அவருக்கு ஐக்கிய அமெரிக்கா பெரும் நெருக்கடிகளைக் கொடுக்கும். 2014இல் சோனியா காந்தியின் காங்கிரசுக் கட்சி இந்தியப் பாராளமன்றத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டால் பிறகு வரும் இந்திய அரசை இலங்கையில்  நடந்த போர்க்குற்றத்திற்கு உனக்கும் பங்கு உண்டு உனது போரையே நான் நடத்தினேன் என்று சொல்லி மஹிந்த ராஜபகசவால் மிரட்டி தனக்கு பணிய வைக்க முடியாது. தமிழின விரோதிகளான சிவ் சங்கர மேனன் நாராயணன் போன்றோர்கள் இந்திய அரசின் செயற்பாடுகளில் செல்வாக்கு வகிக்க மாட்டார்கள். தமிழின விரோத கதர் வேட்டிகளும் மஹிந்தவிடம் தட்சணை வாங்கிக் கொண்டு செயற்படும் பூனூல்களும் காணாமல் போய்விடுவார்கள். இப்போது ஐக்கிய நாடுகள் சபையில் இருக்கும் பான் கீ மூனும் வில்லங்கம் பிடித்த வில்லன் விஜய் நம்பியாரும் 2015இன் பின்னர் இருக்க மாட்டார்கள். 2016இல் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலராக அமெரிக்க சார்புடைய ஒரு கிழக்கு ஐரோப்பியரே வரும் சாத்தியம் உண்டு. இப்போது அமெரிக்கவுடன் இசைந்து நடக்காவிடில் 2016இன் பின்னர் மஹிந்த பன்னாட்டு நீதிமன்றில் தண்டிக்கப்படலாம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...