Saturday, 8 December 2012

ஆப்பு வைக்கப் போய் ஆப்பிழுத்த குரங்கான ராஜபக்ச

அன்றைய பல்லிளிப்பு இன்றைய பல்லுடைப்பு
இலங்கையின் அரசமைப்பு யாப்பு மிக வித்தியாசமானது. அது ஜே ஆர் ஜயவர்த்தனவிற்காகத் தயாரிக்கப்பட்டது. அரசியலமைப்புயாப்பு 1978வரை வெஸ்ட்மினிஸ்டர் பாணியில் இருந்து வந்தது. ஜே ஆரை அங்கிள் என்று அழைக்குமளவிற்கு நெருக்கமான நீலன் திருச்செல்வம், தந்தை செல்வாவின் மருமகன் பேராசிரிய ஏ ஜே வில்சன் ஆகியோரின் ஆலோசனையுடன் 1978இல் தற்போதைய அரசியலமைப்புயாப்பு உருவாக்கப்பட்டது.


1978இல் இலங்கையில் இருந்த கட்சிகளின் வாக்கு வங்கி அடிப்படையில் ஒரு போதும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வர முடியாத வகையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைப்படி பாராளமன்றத்திற்கு  உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் முறைமை 1978இல் உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டது. 1978இல் இருந்து 1994 வரை சிறிலங்கா சுதந்திரக கட்சி ஆட்சிக்கு வர முடியாத நிலை இருந்தது. பின்னர் சந்திரிக்கா குமாரணதுங்க பண்டாரநாயக்கா தலைமையில் 1994 சிறிலங்கா சுதந்திரக் கட்சி பெரு வெற்றியீட்டியது. பின்னர் ஜே ஆரின் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் வெற்றி பெற முடியாமல் தவிக்கிறது. தனது அரசமைப்பு யாப்பைப்பற்றி கருத்துத் தெரிவித்த ஜே ஆர் ஜயவர்த்தன
என்னால் இலங்கையில் ஒரு பெண்ணை ஆணாகவே அல்லது ஆணைப் பெண்ணாகவோ மாற்றுவதைத் தவிர மற்ற எதையும் செய்ய முடியும் என்றார்.

1978இல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புயாப்பு தலைமை நீதியரசர், சட்டமா அதிபர், தேர்தல் ஆணையாளர், இலஞ்சத்துறை ஆணையாளர், காவற்துறை மாஅதிபர், கணக்காய்வாளர் நாயகம், பாராளமன்ற ஆணையாளர் (ombudsman) போன்ற மிக முக்கியமான பதவிகளை குடியரசுத் தலைவர் நியமிப்பர். இதனால் குடியரசுத் தலைவர் தனக்கு வேண்டியவர்களை இப்பதவிகளுக்கு நியமித்து நாட்டின் மொத்த நிர்வாகத் துறையையும் தனக்கும் தனது கட்சிக்கும் சாதகமாக நடக்கச் செய்ய முடியும். இதனால் பல பன்னாட்டு அமைப்புக்கள் இலங்கை அரசமைப்பு யாப்புத் தொடர்பாக தமது அதிருப்தியைத் தெரிவித்ததுடன் இவை பல பன்னாட்டு உடன்படிக்கைக்களை மீறுவதாக உள்ளது என்று தெரிவித்தனர்.

பலதரப்பு ஆட்சேபனைகளைக் கருத்தில் கொண்டு இலங்கை அரசியல் அமைப்பில் 17வது திருத்தம் 2001-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு இலங்கைப் பாராளமன்றத்தால் நிறைவேற்றப் பட்டது. 17வது திருத்தத்தின் படி இலங்கையில் அரசமைப்புச் பேரவை ஒன்று நிறுவப்படவேண்டும். அரசமைப்புச் பேரவையானது:

  1. பாராளமன்ற சபாநாயகர்.
  2. பிரதம மந்திரி,
  3. எதிர்க்கட்சித்தலைவர்.
  4. குடியரசுத் தலைவரால் நியமிக்கப் படும் ஒருவர்.
  5. பிரதமர் எதிர்ககட்சித் தலைவர் ஆகியோரின் பரிந்துரைப்படி குடியரசுத் தலைவரால் நியமிக்கப் படும் ஐவர்.
  6. பாராளமன்றத்தால் நியமிக்கப்படும் ஒருவர். ஆகியோரை உள்ளடக்கியது.
அத்துடன் இலங்கையில், மனித உரிமை ஆணையகம் உட்படப் பல ஆணையகங்களும் உருவாக்க வேண்டும்:
1. அரசியலமைப்புப் பேரவை
2. பொதுச் சேவை ஆணைக் குழு
3. தேர்தல் ஆணைக் குழு
4. நீதிச் சேவை ஆணைக் குழு
5. தேசிய பொலிஸ் ஆணைக் குழு.

இந்தப் 17வது திருத்தம் இலங்கைக் குடியரசுத் தலைவரின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தாவிடிலும் இலங்கையில் நீதியான ஒரு நிர்வாகத்தை மனித உரிமைகளுக்கான ஒரு மதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் நீதியான நிர்வாகத்துடனோ அல்லது மனித உரிமைகளுக்கான மதிப்புடனோ இலங்கையை ஆளமுடியாது என்று கருதிய இலங்கை ஆட்சியாளர்கள் அதை அமூல் படுத்தவில்லை. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகைகளை நிறுத்தும் போது 17வது திருத்தம் நிறைவேற்றப்படாமையும் ஒரு காரணமாகக் காட்டப்பட்டது. அதிகார வெறி பிடித்த மஹிந்த ராஜபக்ச தனக்கு 17வது திருத்தம் ஒரு இடையூறாக இருப்பதை உணர்ந்து அதை இரத்துச் செய்யும் 18வது திருத்தத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றினார். இதனால் உலகத்திலேயா உச்ச அதிகாரம் கொண்ட ஒரு அரச பதவியாக இலங்கைக் குடியரசுத் தலைவர் பதவி கருதப்படுகிறது.

மன்னாரில் உருவான மோதல்                                                                      இலங்கையின் எல்லா அரச அதிகாரிகளும் குடியரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் பெருவிரலின் கீழ் இருக்கின்றனர்.  இதற்கான பிரச்சனை மன்னார் நீதிமன்றில் ஆரம்பமானது. கோத்தபாய ராஜபக்சவின் மிக நெருங்கிய நண்பரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் ஜுன் மாதம் 17 ம்,18 ஆம் திகதிகளில் அமைச்சர் மன்னார் நீதவானுக்கு தொலைபேசியில் தீர்ப்பொன்று குறித்து அச்சுறுத்தல் விடுத்ததாக மன்னார் மஜிஸ்திரேட் நீதவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் மன்னார் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார். இதனையடுத்து அமைச்சரை கைது செய்யுமாறு கோரி நாடு தழுவிய முறையில் நீதிமன்ற பகிஷ்கரிப்பை சட்டத்தரணிகள் சங்கம் மேற்கொண்டிருந்தது.இதிலிருந்து நீதித் துறைக்கும் ராஜபக்சகளுக்கும் இடையிலான மோதல் ஆரம்பித்தது. பின்னர் ஒக்டோபர் 7-ம் திகதி நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுளா திலகரத்னமீது இனம் தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து மறுநாள் தாக்குதல் சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் நீதிமன்றக் கட்டிடத் தொகுதியில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டதுடன், நீதிமன்றக் கட்டிடத்தைச் சுற்றி கறுப்பு துணி கட்டப்பட்டிருந்தன. அத்துடன் நீதிச்சேவை மரணித்து விட்டதனை பிரதிபலிக்கும் வகையில் சவப்பெட்டியினையும், மலர் வளையத்தினையும் சுமந்து சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் ஊர்வலமாக எடுத்துச் சென்னறனர். பின்னர் நீதிமன்றக் கட்டித் தொகுதி வீதியில் அதற்கு எரியூட்டி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

மகாணசபைகளின் நிதி அதிகாரங்களை தம்பிக்குத் தாரைவார்த்தல்    தற்போது இலங்கை அரசின் மொத்த செலவீனங்களில் 70% ராஜபக்ச உடன்பிறப்புக்களின் கைகளில் இருக்கின்றன. இது போதாது என்று மாகாண சபைகளின் நிதி அதிகாரங்களை பசில் ராஜபக்சவின் அமைச்சின் கீழ் கொண்டுவரும் திவிநெகும சட்டமூலம் பாராளமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இச்சட்டத்திருத்தத்திற்கு எல்லா மாகாணசபைகளினதும் சம்மதம் தேவை என இலங்கை உச்ச நீதிமன்றின் தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயக்கா தீர்பளித்தமை ராஜபக்ச உடன்பிறப்புக்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. விளைவு ஷிரானி பண்டாரநாயக்கவைப் பதவில் இருந்து அகற்றும் 14 குற்றச் சாட்டுக்களைக்கொண்ட குற்றவியல் பிரேரணை 117 பாராளமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் பாராளமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஷிரானிக்கு எதிரான 14 குற்றச் சாட்டுக்களை விசாரிக்க 11 பாராளமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தெரிவுக் குழு பாராளமன்ற அவைத் தலைவர் சமல் ராஜபக்சவால் அமைக்கப்பட்டது. இப் பதினொரு பேரில் 7 பேர் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள்.

நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பு


ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நடவடிக்கை ஒரு அரசியல் பழிவாங்கலாகவே இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் பரவலாகக் கருதப்படுகிறது. இலங்கை நீதித் துறையைச் சேர்ந்தவர்களும் சட்டத் துறையைச் சேர்ந்தவர்களும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். மனித உரிமை அமைப்புக்கள் அமெரிக்க அரசு போன்றவையும் தமது அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். ஆசிய மனித உரிமைக்கழகம் தலைமை நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்காவிற்கு எதிரான பதவி நீக்கல் விசாரணை உரிய முறையில் மேற்கொள்ளபப்டவில்லை என்கிறது.

பிரச்சனைகளுக்கு மத்தியில் மஹிந்த

முறையான ஒரு நீதி விசாரணையின் அடிப்படையில் ஷிரானியப் பதவியில் இருந்து நீக்குதல் ராஜபசக்ளுக்கு ஒரு பிரச்சனையாக இருக்காது. ஆனால் தலைமை நீதியரசர் ஷிரானை பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றச் சாட்டுகளை விசாரிக்கும் பாராளமன்றத் தெரிவுக் குழுவினர்  சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொண்டனர். விசாரணைக்கு வந்த ஷிரானியம் பைத்தியக்காரி என்றனர். ஒரு சாதாரண அரசு ஊழியருக்கு எதிராக ஒழுக்காறு நடவடிக்கை எடுக்கப்படும் போது கொடுக்கப்படும் கால அவகாசம் கூட அவருக்குக் கொடுக்கவில்லை. மிக நீண்ட குற்றச்சாட்டுகளடங்கிய பத்திரத்தைக் கொடுத்து இவற்றிற்கு மறுநாள் விளக்கமடிக்கும்படி பணித்தனர். இதனால் தன்னை விசாரிப்பவர்கள் ஒரு தலைப்பட்சமாக நடப்பதாகக் கூறி ஷிரானி பாராளமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணையில் இருந்து வெளியேறிவிட்டார். அத்துடன் ஒரு பக்கச் சார்பற்ற பாரளமன்றத் தெரிவுக்குழுவை அமைக்கும் படி பாராளமன்றின் அவைத் தலைவரிடம் (சபாநாயகர்)வேண்டுதல் விடுத்தார். பாவம் ஷிரானி பாரளமன்ற அவைத்தலைவரே மஹிந்த ராஜ்பக்சவின் அண்ணன். எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளமன்ற உறுப்பினர்கள் தலைமை நீதியரசருக்கு எதிரான விசாரணைக்குழுவில் இருந்து வெளியேறிவிட்டனர். இதைத் தொடர்ந்து ஆளும் கட்சிப் பாராளமன்ற உறுப்பினர்கள் தமது அறிக்கையைப் பாராளமன்ற அவைத் தலைவரிடம் சமர்ப்பித்துள்ளனர்.

ராஜபக்சேக்களின் நண்பர்களுக்கும் அதிருப்தி


இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவை அடிக்கடி புகழ்ந்து எழுதும் பிரபல சீனப் பத்திரிகையே Chief justice impeachment in Sri Lanka gathers growing criticism என்னும் தலைப்பில் செய்தியை வெளியிட்டுள்ளது.  இலங்கைப்பாராளமனற உறுப்பினர்கள் தலைமை நீதியரசர் பதவியையே மோசமாக அவமதிக்கும் செயலைச் செய்தனர் என்ற செய்தியை சீனப்பத்திரிகை வெளியிட்டுள்ளது. இச்செய்தியை அப்பத்திரிகையின் ஆசிரியரே எழுதியுள்ளார். அத்துடன் அமெரிக்க அரசு இலங்கை தலைமை நீதியரசருக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பாக தனது இரண்டாவது அதிருப்தி அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. உலகெங்கும் உள்ள பல ஊடகங்கள் (சென்னையில் இருந்து வெளிவரும் இந்துப் பத்திரிகையைத் தவிர) இலங்கையின் நீதித்துறையின் தன்னிச்சையான செயற்பாடு அச்சுறுத்தப்படுகிறது என எழுதியுள்ளன.

இலங்கையில் பிரபல சட்டவாளரான எஸ் எல் குணசேகரா ஷிரானி உரிய முறையில் விசாரிக்கப்படாமல் பதவி நீக்கம் செய்யப்பட்டால் அனைத்து சட்டத்துறையை சேர்ந்தவர்களும் நீதித் துறையைச் சேர்ந்தவர்களும் தலமை நீதியரசர் பதவியை  புறக்கணிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார். அத்துடன் யாராவது தலைமை நீதியரசர் பதவியை ஏற்றால் அவருடன் வேலை செய்வதை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார். இது போன்ற நடவடிக்கை பாக்கிஸ்த்தானில் மேற்கொள்ளபப்ட்டது. பணத்தாலும் வெள்ளைவான் மூலமும் அனைவரும் மிரட்டப்படும் சூழலில் இப்படி ஒன்றை நடைமுறைப்படுத்துவது சிரமம் என்றாலும். ராஜபக்சேக்கள் இலங்கையில் நீதித் துறையிலும் சட்டத்துறையிலும் பெரும் குழப்பத்தையும் பிளவுகளையும் ஏற்படுத்தப் போகிறார்கள். இது உள் நாட்டிலும் வெளிநாடுகளும் (இந்தியாவைத் தவிர) பெரும் தலைக் குனிவை ஏற்படுத்தும். இலங்கைச் சட்டவாளரகள் சபை (The Bar Association of Sri Lanka) எஸ் எல் குணசேகராவின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டுள்ளது. ஷிரானிக்குப் பிறகு தலைமை நீதியரசர் பதவிக்கு யாராவது வந்தால் அவரைத் தாம் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளமை ராஜபக்ச உடன் பிறப்புக்களுக்கு ஒரு ஆப்பாக அமையப் போகிறது.

ஏற்கனவே பன்னாட்டு மட்டத்தில் பல பிரச்சனைகளை எதிர் கொள்ளும் ராஜபக்சேக்களுக்கு தலைமை நீதியரசர் விவகாரம் மேலும் பிரச்சனைகளைக் கொடுக்கப் போகிறது.

பிந்திக் கிடைத்த செய்தி:
பாரளமன்றத் தெரிவுக்குழுவின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் தலைமை நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க மூன்று குற்றங்களைப் புரிந்ததாகத் தீர்மானித்துள்ளது:
1. Trillium property சம்பந்தமான குற்றச்சாட்டு
2. தனது வங்கிக் கணக்குகள் சிலவற்றை தனது சொத்து தொடர்பாக மறைத்தமை
3. தனது கணவனுக்கு எதிரான இலஞ்ச மற்றும் ஊழல் தொடர்பான வழக்குகளின் பக்கச் சார்பாக நடந்து கொண்டமை.

இலங்கைச் சட்டவாளர்கள் சபை(The Bar Association of Sri Lanka) டிசம்பர் 14-ம் திகதி தனது உறுப்பினர்களின் பொதுக் கூட்டத்தைக் கூட்டி புதிதாக வரும் தலைமை நீதியரசரைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இது நீதித் துறையிலும் சட்டத் துறையிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். மஹிந்த ஆப்பு வைக்க வில்லை ஆப்பு இழுத்துள்ளார்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...