Wednesday, 5 December 2012

இந்தியாவில் வலிவடையும் பிராந்தியத் அரசியல் கட்சிகள் தமிழர்களுக்கு பயனளிக்குமா?

இந்தியாவின் அடுத்த தலைமை அமைச்சர் யார் என்ற கேள்விக்கு அரசியல் கட்சிகளுக்குள்ளேயே பல குத்து வெட்டுக்கள் உண்டு. சோனியா காந்தி தனது காங்கிரசுக் கட்சியில் ராகுல் காந்திக்குத் தடையாக இருந்த பிரணாப் முஹர்ஜீயை ராஸ்ரபதி பவனுக்கு அனுப்பி விட்டார். மன் மோகன் சிங்கிற்கு ஓய்வு பெறும் வயது வந்து விட்டது. இந்தியாவின் அடுத்த பிரதமராவது காங்கிரசைப் பொறுத்தவரை ராகுலின் பிறப்புரிமை.  ஆனால் பல மூத்த காங்கிரசுத் தலைவர்களுக்கு உள்ளுக்குள் ராகுல் காந்தியின் திறமையில் பெரும் ஐயம் உண்டு. எந்த ஒரு அமைச்சுப் பதவியிலும் இருக்காதவரும் ஒரு ஊடகத்திற்கு ஒழுங்காக பேட்டி கொடுக்கத் தெரியாதவருமான ராகுல் காந்தி அடுத்த இந்தியப் பிரதமராவது இந்தியாவின் தலைவிதியா? 2014-ம் ஆண்டு அல்லது அதற்கு முன்னர் இந்தியப் பொதுத் தேர்தல் நடக்கலாம்.

தம்பி வேண்டாம் அக்காவைக் கொண்டுவா
ராகுல் காந்திக்கு காங்கிரசு ஆட்சியில் அமைச்சுப் பதவி கொடுத்தால் அவரது திறமையின்மை அம்பலமாகிவிடும் என்பதற்காக அவருக்கு அமைச்சுப் பதவி கொடுக்கப்படவில்லை. அவர் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தால் அவரது அறிவீனம் அம்பலமாகிவிடும் என்று அவர் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க அனுமதிக்கப்படவில்லை.  சிலர் திரைமறைவில் ராகுலை ஓரம் கட்டிவிட்டு சோனியா காந்தியின் மகள் பிரியங்காவை முன்னணிக்குக் கொண்டுவரும் ஆலோசனையையும் முன் வைத்தனர். ஆனால் ஆட்சியை நடத்தப் போவது சில பணமுதலைகளும் நேரு - காந்தி குடும்ப ஆலோசகர்களும்தான்.

மோடியும் காவிகளும்
முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியில் அடுத்த தலைமை அமைச்சர் பதவிக்கு யாரை முன்னிறுத்துவது என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.  குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிதான் அடுத்த தலமை அமைச்சர் வேட்பாளர் என்கிறார் சுஸ்மா சுவராஜ். வேறு சிலர் சுஸ்மா சுவராஜ்தான் என்கின்றனர். சுஸ்மா சுவராஜிற்குப் பதிலளிக்கும் முகமாக அதே கட்சியைச் சேர்ந்த வெங்கையா நாயுடு தமது கட்சி இன்னும் வேட்பாளர் யாரென்று முடிவெடுக்கவில்லை என்கிறார். உள்ளுக்குள் பதவி ஆசையை வைத்துக் கொண்டு மோடியை ஆதரிப்பது போல் வெளியில் காட்டிக் கொள்கிறார் எல் கே அத்வானி. இன்னொரு தலைவர் நிதின் கட்காரிக்கு மோடிமேல் பெரும் பொறாமை. இந்துத் தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸிற்கு மோடியைப் பிடிக்காது. சஞ்சய் ஜோஷி பகிரங்கமாக மோடியை எதிர்க்கிறார்.

மூன்றாம் அணி
இந்தியாவில் காங்கிசையும் பாரதிய ஜனதாக் கட்சியையும் புறம் தள்ளிவிட்டு முற்போக்கு சக்திகளை ஒன்றிணைத்து ஒரு மூன்றாம் அணி உருவாக்கும் முயற்ச்சி பெரும் வெற்றி அளிக்கவில்லை. ஆனால் தேசியக் கட்சிகள் ஊழலிலும் நிர்வாகச் சீர்கேட்டிலும் ஈடுபடுவதாலும் பெரும் பண முதலைகளின் பின்னால் போவதாலும் மூன்றாம் அணி உருவாவது தவிர்க்க முடியாத ஒன்று என்று தூய்மையான முற்போக்காளர்கள் இன்றும் நம்புகின்றனர். ஆனால் மூன்றாம் அணி இயற்கை இறப்பை எய்தி விட்டது என்கின்றனர் சிலர்.

இந்திய அரசியல் கூட்டணியைத் தீர்மானிக்கும் கோப்புக்கள்
இந்திய அரசியலில் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணியையும் கூட்டணி "தர்மத்தையும்" இந்திய மத்திய புலனாய்வுத் துறையினரின் கைகளில் இருக்கும் கட்சித் தலைவர்களின் ஊழல் தொடர்பான தகவல்களே தீர்மானிக்கின்றன.  05/12/2012இலன்று நடந்த அந்நிய முதலீடு தொடர்பான தீர்மானம் இந்தியப் பாராளமன்றத்தில் விவாதிக்கப்பட்டபோது ஒரு பாராளமன்ற உறுப்பினர் சிபிஐ எனப்படும் இந்திய மத்திய புலனாய்வுத் துறையை காங்கிரச் பியூரோ ஒஃப் இன்வெஸ்ரிக்கேசன் என்றார். மாயாவதி காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்காமல் இருந்தமைக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரசுடன் இணைந்து வாக்களித்தமைக்கும் அவர்களுக்கு எதிராக நிலுவையில் இருக்கும் வழக்குகளே காரணம்.

முக்கிய கட்சிகள் மாநிலக் கட்சிகளிடம் தோல்வியடையும்
2014இல் நடக்க இருக்கும் இந்தியப் பொதுத் தேர்தலில் காங்கிரசுக் கட்சியும் பாரதிய ஜனதாக் கட்சியும் தம்வசம் தற்போது இருக்கும் பல தொகுதிகளை மாநிலக் கட்சிகளிடம் இழக்கும் எனப் பல அரசியல் நோக்குனர்கள் எதிர்வு கூறுகின்றனர். தற்போதைய உலகப் பொருளாதாரப் பிரச்சனையில் ஆளூம் கட்சி தேர்தலில் பெரும் சவாலைச் சந்திக்க வேண்டியிருக்கும். காங்கிரசுக் கட்சியின் உலகச் சாதனை படைத்த ஊழல்கள் அதன் செல்வாக்கைப் பெருமளவு பாதிக்கும். பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களிலும் ஊழல்கள் நடக்கின்றன. காங்கிரசு ஆட்சியின் ஊழல்களை அம்பலப்படுத்தும்அனா கசாரே போன்றவர்கள் காங்கிரசின் வெற்றி வாய்ப்பில் பாதிப்பு ஏற்படுத்துவார்கள். கடந்த சில ஆண்டுகளாக பல மாநிலங்களில் பிராந்திய அரசியல் தலைவர்களின் செல்வாக்குகள் தேசியத் தலைவர்களை மிஞ்சி வளர்ந்து வருகின்றன. உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியும், சமாஜவாதக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவும், மேற்கு வங்கத்தில் திரினாமுல் காங்கிரசுக் கட்சித் தலைவி மம்தா பனர்ஜீயும், பீகாரில் நிதீஷ் குமாரும், ஒரிசாவில் நவீன் பட்நாயக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுள்ளனர். தமிழ்நாடு 1967இலேயே தேசியத் தலைமையில் நம்பிக்கையை இழந்து விட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேசிக கட்சிகள் மாநிலக் கட்சிகளிடம் கையேந்த வேண்டிய நிலைமைதான் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

ஊழலுக்கு எதிரானவர்கள்
காங்கிரசு ஆட்சியின் ஊழல்களை அம்பலப்படுத்தும்அனா கசாரே போன்றவர்கள் காங்கிரசின் வெற்றி வாய்ப்பில் பாதிப்பு ஏற்படுத்துவார்கள்.  அரவிந்த் கேஜ்ரிவால் என்பவர் சோனியா காந்தியின் மகள் பிரியாங்காவின் கணவரின் ஊழல்களை அம்பலப்படுத்தினார். அவர் நரேந்திர மோடியின் ஊழல்களையும் அம்பலப்படுத்துகிறார். இவர்கள் பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களில் நடக்கும் ஊழல்களையும் அம்பலப்படுத்துகிறார்கள். இவை 2014 தேர்தலில் இரு பெரும் கட்சிகளின் வெற்றி வாய்ப்பைப்பாதிக்கும். அத்துடன் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு காங்கிரசுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும். 2014இல் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் அன்னா காசாரே அரவிந்த் கேஜ்ரிவால் போன்றோர்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

பிராந்தியத் தலைவர்களின் தலைமை அமைச்சர் கனவு

பிராந்தியத் தலைவரான சமாஜவாதக் கட்சியைச் சேர்ந்த முலாயம் சிங் யாதவ் பகிரங்கமாகவே தான் அடுத்த இந்தியத் தலைமை அமைச்சர் என்று சொல்லிவிட்டார். மம்தா பனர்ஜீ, ஜெயலலிதா, மாயாவதி ஆகியோர் தலைமை அமைச்சராகும் கனவுடனேயே இருக்கிறார்கள். நரேந்திர மோடியும் ஒரு பிராந்தியத் தலைவரே அவர் ஜெயலலிதா, மயாவதி, நவீன் பட்நாயக் ஆகியோருடன் நல்ல உறவை வளர்த்து வருகிறார்.இரு பெரும் கட்சிகள் மீது மக்கள் இழ்ந்து வரும் நம்பிக்கை இவர்களிற்கு நல்ல வாய்ப்புக்களைத் தருகிறது. இவர்களில் மாயாவதியைத் தவிர மற்றவர்களின் செல்வாக்கு நல்ல நிலையில் உள்ளது

ஜெயலலிதாவும் 40 எம்பிக்களும்
தமிழ்நாட்டிலும் பாண்டிச்சேரியிலும் உள்ள 40 தொகுதிகளிலும் தானது கட்சி வெற்றி பெற்று தான் ஒரு கூட்டணி அரசில் இந்தியாவின் தலைமை அமைச்சராகும் திட்டத்துடன் ஜெயலலிதா இருக்கிறார். அவருக்கு சோதிடர்கள் நீ இந்தியாவின் பிரதமராக வருவாய் என்று வேறு சொல்லி விட்டார்கள்.ஜெயலலிதாவிற்கு மின்சாரமும் சம்சார வாழ்க்கையும் அவரது புகழிற்கு பெரும் சவாலாக இருக்கிறது. ஒரு கூட்டணி அரசில் சுழற்ச்சி முறையிலாவது பிரதமராக வரும் வாய்ப்பை ஜெயலலிதா நம்பி இருக்கிறார்.

தமிழர்களுக்குச் சாதகமாக அமையுமா?
2014இல் நடக்க விருக்கும் இந்தியப் பொதுத் தேர்தலின் பின்னர் இந்தியாவில் ஒரு கூட்டணி ஆட்சி அமையும் அதில் தமிழ்நாட்டுக் கட்சிகள் பெரும் செல்வாக்கை வகிக்கும் என்று சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் நம்புகின்றனர். சில தமிழின உணர்வாளர்கள் இதைச் சாதகமாக வைத்து ஈழத் தமிழர்களினது பிரச்சனைக்கு சாதகமான நிலையை இந்தியா எடுக்கலாம் என்று நம்புகின்றனர். மத்தியில் ஜெயலலிதா செல்வாக்குள்ள நிலை ஏற்பட்டால் அவர் தனது தமிழின விரோதக் கொளகை கொண்ட பார்ப்பன ஆலோசகர்களின் விருப்பத்திற்கு மாறாக செயற்படுவாரா? தமிழின உணர்வாளர்களை தேர்தல் பரப்புரைக்குப் பாவித்து விட்டு பின்னர் ஓரம் கட்டிவிடும் சாத்தியம் உண்டு. கருணாநிதி இனி ஈழத்தில் ஒரு தமிழன் தலையில் சிங்களவன் குட்டினாலும் அதைக் கண்டித்து அறிக்கை விடுவார். கடந்த சட்ட சபைத் தேர்தலில் ஈழப் பிரச்சனையை அடிப்படையாக வைத்து கருணாநிதி மோசமாகத் தோற்கடிக்கப்பட்டார். மலையாளிகளைக் கொண்ட கன்னியா குமரி மாவட்டத்தில் மட்டுமே ஒரு சில தொகுதிகளில் வென்றது. கருணாநிதி 2014வரை ஈழத் தமிழர்களின் பிரச்சனையில் தனக்கு மட்டுமே அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்வார். பல நாடகங்களையும் அரங்கேற்றுவார். முக்கிய நாடகமாக காங்கிரசுக் கட்சியுடனான உறவைத் தேர்தலுக்கு முன்னர் துண்டித்து விஜயகாந்துடனோ அல்லது வேறு யாருடனோ கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம்.  தேர்தலில் வென்ற பின்னர் மீண்டும் காங்கிரசுடன் இணையும் சாத்தியம் உண்டு. அல்லது மோடியுடனும் தேவை ஏற்படின் இணைவர். அப்போது தமிழர்களின் பிரச்சனையைக் கைகழுவி விடுவர்.  இந்த வகையில் தமிழர்களுக்கு எதுவும் நடக்கப் போவது இல்லை

ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது.
தமிழ்நாட்டில் ஒரு கட்சி பெரு வெற்றி பெற்று அது இந்திய மைய கூட்டணி அரசில் செல்வாக்கு வகிக்கக் கூடிய ஒரு அங்கமாகி அதில் வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை, உள்துறை அமைச்சுக்களைத் தனதாக்கி டெல்லியின் தென்மண்டலத்தில் ஈழத் தமிழர்களுக்கு சாதகமான நிலையை உருவாக்குமா என்ற கேள்வி அத்தைக்கு மீசை முளைத்து சித்தப்பாவாக மாறுவாரா என்ற கேள்விக்கு ஒப்பானது. தற்போது பெரிய நாடுகள் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதன் வெளியுறவுக் கொள்கை, நிதிக் கொள்கை, பாதுகாப்புக் கொள்கை போன்றவற்றில் பெரும் மாற்றம் செய்வதில்லை என்ற நிலைப்பட்டிலேயே இருக்கின்றன. நாடுகளிடையே பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு போன்றவை ஒரு நீண்டகால அடிப்படையையும் நோக்கம் கொண்டதாக இருப்பது நாடுகளின் வளர்ச்சிக்கு சாதகமாக அமையும் என்பதாலேயே இந்த நிலைப்பாடு.  திருமாவளவன், பாமரன், தமிழருவி மணியன் போன்றோர் ஈழத் தமிழர்களைப் பார்த்து "உங்களுக்கு இந்தியா கொடுமைகள் இழைத்தது உண்மை; அதற்காக இந்தியாவை வெறுக்காதீர்கள்; பகைக்காதீர்கள்; இந்தியாவைக் குறை சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள்; ஒரு நாள் உங்களுக்கு இந்தியா நன்மை செய்யும்" என்று சொல்வது இவர்கள் இந்திய உளவுத் துறையின் கொ.ப.செ ஆக மாறி விட்டார்களா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...