Thursday, 27 December 2012

அரபு வசந்தத்தில் அமெரிக்கா - தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை.

வறுமை, அரசுகளின் ஊழல், தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியம், காவற்துறையினரின் முறைகேடுகள்,  தனிமனித சுதந்திரமின்மை ஆகியவை அரபு வசந்தம் எனப்படும் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சிகளுக்குக் காரணமாக அமைந்தன. அமெரிக்க அரசும் இசுலாமியத் தீவிரவாதிகளும் வேறு முனையில் அரபு மக்களின் உண்மையான பிரச்சனையை அறியாமல் மோதிக்கொண்டிருந்தன. அமெரிக்க உளவுத் துறையோ இசுலாமியத் தீவிரவாதத் தலைமைகளோ அரபு வசந்தத்தை எதிர்பார்க்கவில்லை.

உலகில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளும் மாற்றங்களும் தனது பெருவிரலில் இருக்க வேண்டும் என்ற இறுமாப்பான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ நிறுவனத்திற்கு அரபு வசந்தம் அதிலும் முக்கியமாக எகிப்தியப் புரட்சி பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.

ஆட்சியாளர்களுக்கு எதிராக மனம் கொதித்துக் கொண்டிருந்த அரபு மக்களுக்கு துனிசியாவில் காவற்துறையைச் சேர்ந்த பெண் ஒருத்தியால் காறி உமிழப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட மொஹமட் பௌஜிஜி தனக்குத் தானே தீ மூட்டித் தற்கொலை செய்தமை பெரும் கிளர்ச்சி செய்யத் தூண்டியது. துனிசிய தனித்தன்னாட்சியாளர் பென் அலி பதிவியில் இருந்து விரட்டப்பட்டார்.

 மனித உரிமைப் பிரச்சனை கடாஃபிக்கு வேறு ராஜபக்சேக்களுக்கு வேறு
 கடாஃபிக்கு எதிரான லிபிய மக்களின் கிளர்ச்சியின் போது  லிபிய மக்களின் அவலத்தைக் கண்ட ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைக்கழகத்தின் ஆணையாளர் நவி பிள்ளை எனப்படும் நவநீதம் பிள்ளை அவர்கள் சிரியாவில் மக்களுக்கு எதிராக நடக்கும் அட்டூழியங்களுக்கான சாட்சியங்கள் கிடைத்திருப்பதால் பன்னாட்டு நீதிமன்றத்திற்கு இது எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அந்த அம்மையாரின் திருவாசகம் இப்படி இருந்தது:

  • "I believe the evidence points the commission of crimes against humanity." She quoted several human rights violations that provide rationale for referral of Syria’s case to International Criminal Court, like arbitrary detention, attacks on hospitals, extreme use of artillery and killings of suspected government informants.
சிரியாவில் ஒரு நாளில் மட்டும் இருபத்தி ஐந்தாயிரம் பேர் கொல்லப்படவில்லை. மொத்தமாக மூன்று இலட்சம் பேர் கொல்லப்படவில்லை. எந்த ஒரு ஐநா விசாரணைக்குழுவும் சிரியாவில் போர்க்குற்றமும் மானிடத்திற்கு எதிரான குற்றமும் நடந்ததமைக்கான போதிய ஆதாரங்கள் இருப்பதாகச் சொல்லவில்லை. சிரியப் படையினர் பெண்களை மானபங்கப்படுத்தி மார்புகளை கத்திகளால் குதறிக் கொல்லவில்லை. சிரியாவில் காயப்பட்டவர்கள் உயிரோடு புதைக்கப்படவில்லை.  சிரியாவில் சரணடையுங்கள் மறு வாழ்வு தருகிறோம் என்று சொல்லிவிட்டு சரணடைய வந்தவர்களைச் சுட்டுத் தள்ளவில்லை. ஆனாலும் சிரிய ஆட்சியாளர்களை பன்னாட்டு குற்றவியல் நீதி மன்றத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்கிறார் நவி பிள்ளை அம்மையார். அவரின் இத் துணிச்சலான கூற்றுக்குப் பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொண்டு இலங்கையில் இவ்வளவு அட்டூளியங்கள் நடந்தும் அவற்றிற்கான காத்திரமான சாட்சியங்கள் இருப்பதாக ஐநா நிபுணர் குழு அறிக்கை தெரிவித்திருந்தும், டப்ளின் தீர்ப்பாயம் இலங்கையில் போர்க்குற்றம் நடந்தது விசாரணை தேவை எனத் தெரிவித்திருந்த போதும், பல காணொளிப் பதிவுகள் வெளி வந்த போதும் இலங்கை ஆட்சியாளர்கள் பன்னாட்டுக் குற்றவியல் நீதி மன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று நவி பிள்ளை அம்மையாரோ வேறு எந்த ஐக்கிய நாடுகள் உயர் அதிகாரிகளோ தெரிவிக்க வில்லை. கொலையாளிகளையும் கொல்லப்பட்டவர்களையும் நல்லிணக்கம் செய்யும் படி தீர்மானம் நிறைவேற்றாமல் ஏன் பன்னட்டுக் குற்றவியல் நீதி மன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படவேண்டும்? பன்னாட்டு நீதி என்பது தண்ணீருக்கு வேறு மசகு எண்ணெய்க்கு வேறு.

பன்னாட்டு நீதி கடாஃபிக்கு வேறு ராஜபக்சேக்களுக்கு வேறு
லிபியவில் போர்க் குற்றம் புரிந்தமைக்காக மும்மர் கடாஃபியையும் அவரது மகன் சயிஃப் அல் இஸ்லாம் கடாஃபியையும் கைது செய்யும் பிடியாணையை பன்னாட்டு நீதி மன்று(International Criminal Court) 27-06-2011இலன்று பிறப்பித்தது. பன்னாட்டு நீதிமன்ற நீதியாளர் Sanji Mmasenono Monageng அவர்கள் கடாஃபியைக் கைது செய்வதற்குப் போதிய ஆதாரங்கள் உள்ளது என்றார். லிபியாவும் இலங்கையைப் போலவே ரோம் உடன்படிக்கையில் கையொப்பமிடவில்லை. இருந்தும் கடாஃபி மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 4000 அப்பாவிகளைக் கொன்றவர் எனக் கருதப்படும் கடாஃபிமீது ஆறு மாதங்களுக்குள் குற்றம் சுமத்தப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. 70,000இற்கு மேற்பட்ட அப்பாவிகளைக் கொன்றவர், மருத்துவ மனைகள் மீது குண்டு வீசியவர், பல இலட்சம் மக்களுக்கு உணவு மருத்துவ வசதி கிடைக்காமல் தடுத்தவர் எனக் கருதப்படும் மஹிந்த ராஜபக்ச தலை நிமிர்ந்து நிற்கிறார். மூன்று ஆண்டுகளாகியும் அவர் மீது நடவடிக்கைகளை பன்னாட்டு சமூகம் ஏன் எடுக்கவில்லை?

பாஹ்ரெய்னைப் பாருங்கள் தமிழர்களே.
அரபு வசந்தத்தை ஒட்டி 17-02-2011இல் பாஹ்ரெய்னில் மக்கள் புரட்சி ஆரம்பித்தது.  அங்கும் மக்களுக்கு எதிரான அடக்கு முறையை இரும்புக்கரங்கள் கொண்டு மன்னர் ஹமாட் கட்டவிழ்த்து விட்டார். அங்கு படைத்துறைச் சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது கடும் தாக்குதல் நடாத்தப்பட்டது. அரபு நாட்டில் அமெரிக்காவின் நட்பு நாடான சவுதி அரேபியாவின் படைகள் பஹ்ரெய்னுக்கு அனுப்பப்பட்டு கிளர்ச்சிக்காரர்கள் அடக்கப்படுகின்றனர். பஹ்ரெய்னில் நடக்கும் மனித உரிமை மீறல்களைப் பற்றி ஐக்கிய அமெரிக்காவோ மேற்கு ஐரோப்பிய நாடுகளோ கவலைப்படுவதில்லை. இதற்கான காரணம் பாஹ்ரெய்னில் அமெரிக்கக் கடற்படைத் தளம் இருக்கிறது. அது அமெரிக்காவின் மத்திய கிழக்கின் ஆதிக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அமெரிக்காவையும்  மேற்கு ஐரோப்பிய நாடுகளையும் பொறுத்தவரை மனித உரிமைப் பிரச்சனை என்பது ஒரு துருப்புச் சீட்டு. அதை அவை தமக்குத் தேவையான இடங்களில் மட்டுமே பயன் படுத்தும். இலங்கை அரசிற்கு எதிராக ஐநா மனித உரிமைக்கழகத்தில் கொண்டுவரப்பட்ட மற்றும் கொண்டு வரப்படவிருக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச் சாட்டுகள் யாவற்றிக்கும் இரு நோக்கங்கள் மட்டுமே! ஒன்றில் இலங்கையின் ஆட்சியாளர்கள் தமது சீனாவிற்குச் சாதகமான நிலைப்பாட்டை மேற்கு நாடுகளுக்குச் சாதகமாக மாற்ற வேண்டும் அல்லது அங்கு ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்படும். இதில் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது அவர்கள் நிகழ்ச்சி நிரலில் இல்லை.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...