Tuesday, 18 December 2012

மாயன் கலண்டர். இரகுநாதையர் பஞ்சாங்கம், உலக அழிவு

யாழ்ப்பாணத்தில் உள்ள கொக்குவிலில் இருந்து ஒரு வாக்கிய பஞ்சாங்கம் ஆண்டு தோறும் வெளிவருகிறது. பழைய யாழ்ப்பாண மன்னர்களின் ஆஸ்த்தான சோதிடர்களின் பரம்பரையினர் அதை வெளிவிடுகின்றனர். தற்போது உள்ள ரகுநாதையரின் தகப்பனின் சகோதரரான ரகுநாதையர் உயிருடன் இருக்கும் போது அறுபது ஆண்டுகளுக்கு உரிய பஞ்சாங்கத்தை கணித்து வைத்துவிட்டார்.

இந்துக்களின் 60 ஆண்டுச் சுற்று
ரகுநாதையர் குடும்பத்தினர் என்னை இப்படி எழுதுவதற்கு மன்னிக்க வேண்டும். இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் அவர்களது குடும்பம் வாழவேண்டும் என்பது எனது விருப்பம். இந்திய அமைதிப்படையின் குண்டு வீச்சிலோ அல்லது இலங்கைப்படையின் எறிகணையிலோ ரகுநாதையர் குடும்பம் முற்றாக அழிந்து விட்டது என்று வைத்துக்கொள்வோம். அவர்களின் வீட்டு இடிபாடுகளிற்கிடையில் தேடிப்பார்த்தால் ரகுநாதையர் பஞ்சாங்கம் 2057உடன் முடிவடைகிறது அதனால் 2057-ம் ஆண்டு உலகம் அழிந்து விடப்போகிறது என்று சொல்லலாமா? இந்துக்களின் சோதிடத்தில் ஒரு அறுபது ஆண்டுகள் கொண்ட ஒரு சுற்று உள்ளது. அது பிரபவ(இதன் தமிழ்ப் பெயர் நற்றோன்றல்) ஆண்டில் தொடங்கி அட்சய(வளங்கலன்) ஆண்டில் முடிவடையும். வியாழக் கிரகம் சூரியனைச்யை சுற்றிவர 12 ஆண்டுகள் எடுக்கும் சனிக் கிரகம் சூரியனைச் சுற்றி வர 30 ஆண்டுகள் எடுக்கும் இந்த இரண்டுக்குமான பொ.ம.சி(L.C.M) 60. இன்று சனியும் வியாழனும் எந்த நிலையில் இருக்கிறதோ அதி நிலைக்குத் திரும்ப வர 60 ஆண்டுகள் எடுக்கும். காம இச்சையால் அவதிப்பட்ட நாரதரைப் பெண்ணாக்கி அவரது இச்சையைத் தீர்த்தாராம் திருமால். அதனால் அவர்கள் இருவருக்கும் 60 பிள்ளைகள் பிறந்ததாம் அப்பிள்ளைகள் தான் ஒவ்வொரு ஆண்டும் ஆகுமாம்.

மாயன்களின்5,126 ஆண்டுகாலச் சுற்று
இந்து சோதிடத்தில் அறுபது ஆண்டுச் சுற்றுப் போல் மாயன்களின் கலண்டரில் 5126ஆண்டூச் சுற்று உள்ளது. தொடரும் அந்தச் சுற்று ஒன்று 2012 டிசம்பர் 21-ம் திகதி முடிவடைகிறது. அதில் அடுத்த சுற்று ஆரம்பிக்கும். நேரம் என்பது இந்து மதத்தின் படி வட்டமானது. மாயன்களுக்கும் அப்படியே. மாயன்களின் கல்வேட்டில் எந்த இடத்திலும் 21-12-2012 உடன் உலகம் அழிகிறது என்று சொல்லவில்லை. அன்று ஒரு சுற்று முடிந்து மற்ற சுற்றுத் தொடங்குகிறது. மாயன்களின் திறமை அவர்கள் கட்டிய பிரமிட்டில் வெளிப்படுகிறது. பிரமிட் நான்கு பக்கங்களைக் கொண்டது. ஒவ்வொன்றிலும் 91 படிகள் உள்ளன. மொத்தம் 364 படிகள். உச்சியில் உள்ள ஒரு படி நான்கு பங்கங்களுக்கும் பொதுவாக அமைந்து மொத்தம் 365 படிகளைக் கொண்டுள்ளது அந்த பிரமிட். புத்திசாலித்தனமான கணிப்பீடுதான். அது மட்டுமல்ல மார்ச் மாதம் 21ம் திகதியளவிலும்  செப்டம்பர் மாதம் 21-ம் திகதியளவிலும் வரும் இரவும் பகலும் சமமான நாள்களில் மாயன்களின் பிரமிட்டின் நிழல் அவர்களது தெய்வங்களில் ஒன்றான இறகுடைய பாம்பு போல் தோற்றமளிக்கும். இப்படி ஒரு கட்டமைப்பைச் செய்வதற்கு ஆழ்ந்த வானவியல் அறிவும் ஆழ்ந்த கணித அறிவும் தேவை. மாயன் கலண்டரில் வல்லுனரும் மாயன்களின் நேரக்கணிப்பைப்பற்றி நன்கு அறிந்தவருமான லியோஜோ பர்ரெனொ என்னும் பேராசிரியர் 2012-12-21 ஒரு சுற்று முடிந்து அடுத்த சுற்றின் ஆரம்பம் மட்டுமே அன்று ஒரு சுற்றைத் தவிர வேறு எந்த ஒன்றும் முடியவில்லை என்றார். அது ஒரு புத்தாண்டு போல் கொண்டாடப்பட வேண்டியது என்றார் பேராசிரியர் லியோஜோ பர்ரெனொ.  சுவென் குரொனெமெயர் என்னும் ஜேர்மானிய வல்லுனர் ஒருவர் 2012-12-21 கலண்டரின் முடிவு மட்டுமே உலகத்தின் முடிவல்ல என்றார். மாயன் கல்வெட்டுக்களை பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்யும் பேராசிரியர் லியோஜோ பர்ரெனொ அவற்றில் எதிர்காலத்தைக் குறிக்கும் சொற்கள் இல்லை என்றார். வார்த்தைகள் யாவும் நிகழ்காலத்திலேயே இருக்கிறதாம். ரொபின் கட்றைட் என்னும் மாயன்களின் வரலாறு பற்றி ஆய்வு செய்த சரித்திரப் பேராசிரியரும் 2012இல் உலகம் அழியாது என்கிறார். 2012 நவம்பரில் மெக்சிக்கோவில் நடந்த மாயன் கலண்டர் நிபுணர்களின் மாநாட்டில் 22012இல் உலகம் அழியாது என பல நிபுணர்கள் கூறினர். சில நிபுணார்கள் மனித இனம் ஒரு புதுப்பாதையில் இயங்கும் என்றனர்.
மாயன்களின் விமானம், ஹெலிக்கொப்டர்

மாயன்களின் நாகரீகம் கி.மு 2600இல் தொடங்கியதாம் அப்போதே அவர்கள் விமானம் ஹெலிக்கொப்டர் போன்ற வடிவங்களை வைத்திருந்தனராம்.

மாயன்களின் கல்வெட்டில் காணப்படும் தற்போதைய விண்வெளிப்பயணிகள் போன்ற உடையணிந்த மனிதன். விண்ணில் இருக்கும் பல நடசத்திரக் கூட்டங்களை அண்மையில் தான் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். ஆனால் மாயன்களில் கல்வெட்டுக்களிலும் சுவரோவியங்களிலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பல நட்சத்திரக் கூட்டங்கள் காணப்படுகிறது. கலிலியோவிற்கு முன்னரே அவர்கள் தொலை நோக்குக் கருவிகளை உருவாக்கி விட்டனர். உன்னத அறிவைக் கொண்டிருந்த மாயன்கள் கி.பி 1517-ம் ஆண்டுஸ்பானிய ஆக்கிரமிப்பால் பேரழிவைச் சந்தித்தனர். அவர்களில் 90%வர்கள் அழிக்கப்பட்டனர். ஸ்பானியர்களின் கிருத்தவ மத போதகர் மாயன்களுடன் நண்பர் போல நடித்து அவர்களில் புத்தகங்கள் பலவற்றை அழித்து விட்டார். புத்தகங்கள் மிருகங்களின் தோலில் செய்யப்பட்டவை. ஒரு இனக்கொலையில் முக்கிய பகுதி அவர்களில் புத்தகங்களை அழிப்பது என்பதை யாழ் நூலக எரிப்பில் கண்டோம். மாயன்களில் எஞ்சிய நூல்கள் நாலு அதையும் ஸ்பானியர், ஜேர்மனியர், பிரெஞ்சுக்காரர், மெக்சிக்கர் கொள்ளை அடித்து வைத்திருக்கின்றனர். மாயன்களும் சேர சோழ பாண்டியர் போல் தங்களுக்குள் அடிக்கடி மோதியதால் எதிரிகள் அவர்களை இலகுவாக வென்றனர்.உலகம் அழியும் என்று எதிர்வு கூறுவது இது முதற்தடவையல்ல. கிறிஸ்துவிற்குப் பின்னர் 100-ம் ஆண்டு உலகம் அழியும் என்று சொல்லப்பட்டதாம். பின்னர் கி.பி 1000இல் உலகம் அழியும் எனப்பட்டது. பின்னர் கி.பி 2000இல் அழியும் என்று சொல்லப்பட்டது. ரோமர்களோ கி.மு 634இல் உலகம் அழியும் என்று நம்பியிருந்தனர். மார்ட்டின் லூதர் என்பவர் 1600உடன் உலகம் அழியும் என்றார். பாப்பாண்டவர் சில்வெஸ்டர்-2 கிபி 1000 ஆண்டு ஜனவரி முதலாம் திகதி உலகம் அழியும் என்றார். இப்படி இரு நூறுக்கு மேற்பட்ட தடவை உலகம் அழியும் எனக் கூறப்பட்டது. எல்லாமே பொய்த்துப் போனது. 2012 இல் மே 27ம் திகதியும் 2012 ஜூன் 30-ம் திகதியும் உலகம் அழியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அமெரிக்காவைக் கண்டறிந்த கிறிஸ்டபர் கொலம்பஸ் 1658-ம் ஆண்டு உலகம் அழியுமென்றார். பிரபல விஞ்ஞானி ஐசாக் நியூட்டன் 2000-ம் ஆண்டு உலகம் அழியுமென்றார். பிரபல சோதிடன் நோஸ்ரோடொமஸ் 1999-ம் ஆண்டு உலகம் அழியுமென்றார்.

உலகம் ஒரு நாளில் அழியாது
உலகம் ஒரு சிறிய பொருள் அல்ல. அதை அழிக்கச் சில நாட்களாவது எடுக்கும். இந்து மதத்தின்படி பிரளம் என்பது ஒரு கிருதயுகம் வரை தொடர்ந்து நடக்கும். அதாவது பிரளயம் நடந்து முடிய 1,728,000 ஆண்டுகள் எடுக்கும்.
இன்னும் இன்னும் மூன்று நாட்களில் உலகம் அழிவதாயின் 2012-12-21இற்கு பல நாட்களின் முன்னரே அனர்த்தங்கள் தொடங்கியிருக்கும். சிலர் உலகம் முழுவதும் பனியாக மாறி உயிரினங்கள் அழியும் என்கின்றனர். அப்படி வெப்ப மாற்றம் நடக்க பல ஆயிரம் ஆண்டுகள் எடுக்கும். அது அண்மையில் இல்லை. சூரியனில் நடக்கும் புயல்கள் பூமியில் சிறு தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தும். பூமியை அழிக்க மாட்டாது

உலகம் எப்போது அழியும்?
இந்து மதத்தின்படி பூமியில் ஒரு ஆண்டு என்பது தேவர்களின் உலகத்தில் ஒரு நாள். தைமாதப் பிறப்பன்று தேவர்களுக்கு நாள் தொடங்கும். ஆடி மாதப் பிறப்பன்று அவர்களின் பகல் முடிந்து இருட்டு உண்டாகும். இப்படி வேறு வேறு உலங்கங்களில் நேரக்கணக்கு வேறுபடும். சூரன் ஆயிரத்து எட்டு அண்டகளை(உலகம்)யும் 108 யுகங்கள் ஆண்டான் என்கிறது கந்த புராணம்.  மீண்டும் ரகுநாதையர் பஞ்சாங்கத்திற்கு போவோம். அவர்களின் பஞ்சாங்கப்படி ஒரு மனுவந்தரத்தின் முடிவில் பிரளயம் நடக்கும். ஒரு மனுவந்தரம் என்பது 71 சதுர் யுகங்களைக் கொண்டது. அதாவது ஒவ்வொரு 306,720,000 ஆண்டுகளுக்கு ஒரு தடவை பிரபஞ்சம் அழியும். நாம் இப்போது 28வது சதுர் யுகத்தில் இருக்கிறோம். உலகம் அழிய இன்னும் 43 சதுர் யுகங்கள் இருக்கின்றன. அதாவது இன்னும் 185,760,000 ஆண்டுகள் இருக்கின்றன.
 பிரம்மாவிற்கு ஒரு பகல் பொழுது முடிந்து அவர் நித்திரைக்குப் போகும் போது பிரளயம் ஏற்பட்டு பிரபஞ்சம் அழியும் என்கிறது அவர்களது பஞ்சாங்கம். பிரம்மாவின் உலகத்தில் ஒரு நாள் என்பது தேவர்களில் உலகத்து நாளின் அளவுடன் பார்க்கையில் மிக மிக நீண்டது. பிரம்ம உலகத்தில் ஒரு பகற்பொழுது 1000 சதுர் யுகங்களைக் கொண்டது. அதாவது 4,320,000,000. இதன் முடிவில் இரவு தொடங்க பிரம்மா நித்திரை செய்ய பிரபஞ்சம் அழியும். இப்போது இருக்கும் பிரம்மாவிற்கு 50 வயதுதானம். அவர் 100 வயது வரை வாழ்வாராம். அவருக்கு இப்போது உள்ள முறைப்படி அவரது மனைவி கன்னா பின்னா என்று கண்டதையும் சமைத்துச் சாப்பிட வைத்தால் அவருக்கு ஏதாவது இருதய வியாதி வந்தால் காக்கும் கடவுள் மருத்துவராக மாறி by pass surgery செய்து  பிரம்மாவைக் காப்பாற்றுவார் என நம்புவோமாக. திருமால் இதற்கு முன்பும் பல தடவை இப்படிச் செய்துள்ளார். இந்து மதத்தை நீங்கள் நம்பினால் 2012-12-21ஐ நம்பத் தேவையில்லை. கிருத்துவ மற்றும் இசுலாமிய மதங்களும் 2012-12-21இலன்று உலகம் அழியாது என்று சொல்கின்றனர்.

பால் வெளி(milky way)
எமது சூரியன் போல் பல பில்லியன் சூரியன்கள் வேறு வேறு அளவில் ஒன்றாகச் சுற்றிக் கொண்டிருக்கின்றன அவற்றில் ஒரு கூட்டத்தை பால் வெளி என்பர். பல மதங்கள் இப்பால் வெளியை ஆகாய கங்கை என்கின்றன. 21-12-2012இலன்று இந்தப்பால் வெளியின் மத்தியுடன் ஒரு நேர் கோட்டில் பூமி வருகிறது என்கின்றனர் சிலர். அதனால் உலகம் அழியும் என்கின்றனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 21ம் திகதி அல்லது அதற்கு ஒரிரு நாட்கள் பின்னர் குறைந்த பகற்பொழுது நிகழும் போது பூமி பால் வெளி மத்தியுடன் வருவது வழக்கம் என்கின்றனர் நாசா விஞ்ஞானிகள்.

உலகம் எப்படி அழியும்
பூமியை நோக்கி வரும் ஆகாயக் கற்களில் பலவற்றை வியாழன் கிரகம் தடுத்து விடும். எங்கள் உலகம் அழியாமல் பாதுகாப்பது வியாழன் என பல வானவியலாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் அவ்வப்போது வியாழனையும் மீறி சில ஆகாயக் கற்கள் பூமியைத் தாக்கியது உண்டு. அப்போது பெரிய அழிவு ஏற்படும் ஆனால் உலகம் அழியாது. நிபுரு என்னும் பெரிய ஆகாயக் கல் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது அது உலகத்தை அழிக்கப் போகிறது என்று சொன்னார்கள். அது பூமிக்கு அண்மையில் வருவதாயில் 2012-12-21இற்கு பல நாட்களின் முன்பே கண்களால் பார்க்கக் கூடியதாக இருந்திருக்கும் என்றனர் நாசா விஞ்ஞானிகள். விஞ்ஞானிகளின் கருத்துப்படி எரிந்து கொண்டிருக்கும் சூரியன் எரிந்து முடிய அது ஒரு பெரிய சிவப்புக் கோளமாக மாறி அதன் அளவு பன் மடங்காக அதிகரித்து அது எமது பூமியையும் விழுங்கும் அளவிற்கு விரிவடையும். அது நடக்க இன்னும் ஐந்து  பில்லியன் ஆண்டுகள் செல்லும். சூரியன் ஒரு கருங்குழி(Black hole) ஆக மாறாது என்பதைக் கண்டறிந்தவர் சந்திரசேகர் என்னும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி. இவர் சி வி ராமனின் மருமகன். சந்திரசேகரும் நோபல் பரிசு பெற்றவர். சூரியனிலும் பார்க்க 3 மடங்கு பெரிய நட்சத்திரங்கள் மட்டுமே எரிந்து முடிய கருங்குழிகள் உருவாகும் என்று கண்டறிந்தார் சந்திரசேகரன். பிரபஞ்சத்தில் பல கருங்குழிகள் இருக்கின்றன. பல கருங்குழிகள் உருவாகின்றன. அவை பூமியை உறிஞ்சும் அளவிற்கு அண்மையில் இல்லை. இப்போது விரிவடைந்து கொண்டிருக்கும் பிரபஞ்சம் தனது விரிவடையும் வலு தனது ஈர்ப்பு வலுவிலும் குறைவடையும் போது ஒடுங்கத் தொடங்கும். எல்லாம் ஒடுங்கி ஒரு சிறு புள்ளியாகும். அது பிரபஞ்ச அழிவாகும். இதை big crunch என்பர். பிரளயத்தின் முடிவில் பிரபஞ்சத்தை திருமால் ஒரு சிறு பெண் குழந்தையாக மாறி பிரபஞ்சத்தை தனது கற்பத்தில் வைத்துக் கொண்டு ஒரு ஆலிலையில் மிதந்து கொண்டிருப்பாராம். அதனால் அவருக்கு நாராயணன் என்னும் பெயர் வந்ததாம். இந்த big crunch எனப்படும் பெரு ஒடுக்கம் நடக்க இன்னும் பல மில்லியன் ஆண்டுகள் இருக்கின்றன. உலகம் அழிய பல மில்லியன் மாயன் கலண்டர்களின் சுற்று இன்னும் இருக்கிறது.

5 comments:

Easy (EZ) Editorial Calendar said...

உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Arjun said...

உண்மை
நல்ல பதிவு
அதிக விடயங்கள் சுருக்கமாக

Anonymous said...

It is simple answer

AKSHAYAN said...

Mika sirappana pathivu. thanks

Amuthan Vethanayagam said...

மிகவும் அழகாகத் தொகுத்து வழங்கியமைக்கு நன்றி.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...