Saturday, 3 November 2012

விகடனே முன்னாள் போராளி பாலியல் தொழிலாளியாக மாறியமைக்கு யார் பொறுப்பு?

அக்ரஹாரத்தில் அடைபட்டுக் கிடக்கும் எழுத வாசிக்கத் தெரிந்த பெண்களைக் குறி வைத்து ஆரம்பிக்கப்பட்ட ஆனந்தவிகடன் சஞ்சிகை இன்று வளர்ந்து பரந்துவிட்டது பல சஞ்சிகைகள் தொலைக் காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பு என்று அதன் வியாபாரம் விரிவடைந்துவிட்டது. தமிழ்நாடு தமிழர்களுக்கே என்ற குரலை எலிவளை எலிகளுக்கே என்று கிண்டலடித்த "தேசிய"  தமிழ் விரோத சஞ்சிகை விகடன்.

விகடனின் நிலைப்பாடு நஞ்சுத்தனமான நடுநிலை2009இற்கு முன்னர் விகடன் விடுதலைப் புலிகளைப் பற்றியும் ஈழத்தைப் பற்றியும் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தியது. அதன் முடிவுகள் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. முடிவுகள் புலிகளுக்கும் ஈழத்திற்கும் பலத்த ஆதரவு இருப்பதை எடுத்துக் காட்டியது. அதன் பிறகு விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை ஒரு நடுநிலையாளனாகவும் ஈழத்திற்கு ஆதரவாளன் போலவும் தன்னைக் காட்டிக் கொள்ளூம்படி தொடர்ந்து பல கட்டுரைகளை ஆனந்தவிகடனிலும் ஜுனியர் விகடனிலும் மட்டுமல்ல அவள் விகடனிலும் வெளிவிட்டது. இதில் விடுதலிப் புலிகள் மிகப் பலமுள்ளவர்களாகப் பொய்யாகப் பல தகவல்கள் வெளியிடப் பட்டது. கட்டுரை ஏதோ ஈழ ஆதரவாகத்தான் இருக்கும். வியாபாரம்!!!ஆனால் விகடனின் “அரசவை” பின்னுட்டக் காரர்களான பாலா, தமிழ் யூகே, வெங்கி, ஹரிஹரன், பார்த்த சாரதி ஆகியோர் மூலமாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக பற்பல நஞ்சுகள் கக்கப்படும். பின்னூட்டத்தில் ராஜபக்சே தமிழ் நன்கு படித்தவர் என்று கூடப் பொய் சொல்லப் பட்டது. இவர்கள் புலிகளுக்கு எதிராக எந்த விதமான பொய்க் கருத்துக்கள் கூறப்பட்டாலும் அவை பிரசுரிக்கப் படும். நானும் எனது நண்பர்களும் இதற்கு எதிராக தெரிவித்த பல கருத்துக்கள் அங்கு பிரசுரிக்கப் படவில்லை. நாம் விகடனைப் பரிசோதிப்பதற்காக சில பார்ப்பனியர்களை தாக்கி பின்னூட்டம் எழுதுவோம். அவை பிரசுரிக்கப் படுவதில்லை. விகடனின் நிலைப்பாடு நஞ்சுத்தனமான நடுநிலை.

மெய்யும் நச்சுப் பொய்யும்
ஐந்து உண்மைகளை நீ சொல்லிவிட்டு ஆறாவது பெரும் பொய்யைச் சொன்னால் அதை பலரும் நம்ப வாய்ப்புண்டு. இந்த தந்திரத்தைத்தான் விகடன் குழும சஞ்சிகைகள் கையாள்கின்றன. ஈழ விடுதலைக்கு ஆதரவு போல் சில கட்டுரைகளை வெளியிட்டு விட்டு பின்னர் ஈழ விடுதலையில் நஞ்சை அள்ளிக் கொட்டும் கட்டுரையை விகடன் வெளிவிடும் அந்த வகையில் "நேற்று... நான் விடுதலைப் போராளி! இன்று... பாலியல் தொழிலாளி." என்ற கட்டுரையை ஆனந்தவிகடனின் நவம்பர் முதல் மாத இதழில் வெளியிட்டுள்ளது  அதில் ஒரு முன்னாள் பெண் போராளி போரின் பின்னர் சிங்களப் படையினராலும் அரசியல்வாதிகளாலும் கற்பழிக்கப்பட்டு பின்னர் விடுதலையானபின் சமூகத்தால் ஒதுக்கப்பட்டு இப்போது பாலியல் தொழில் புரிவதை வெளிப்படுத்தியுள்ளது.

இந்திய உளவுத் துறை முன்னாள் பெண் போராளிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக தனது கைக்கூலிகள் மூலமாக பரப்புரை செய்வதாக சந்தேகிக்கப்படுகிறது. இதில் விகடனும் இணைந்து கொண்டதா? 

விகடனின் கட்டுரையின் நோக்கம் வேறு
விகடன் பாதிக்கப்பட்ட பெண் போராளியின் அவலத்தை அம்பலப்படுத்தியது. ஆனால் அப் போராளிக்கும் அவரைப் போன்ற மற்றவர்களுக்கும் எப்படி விமோசனம் அளிக்க முடியும் அதற்கு தமிழ்நாடு அரசோ அல்லது இந்திய மைய அரசோ என்ன செய்ய வேண்டும் என்று விகடன் கூறவில்லை. அதற்கு ஏற்ப இந்த நிலைமைகளை விகடன் இந்திய வெளியுறவுத்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயலவில்லை. அல்லது பன்னாட்டு தொண்டர் நிறுவனங்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயலவில்லை. அல்லது தானே ஒரு தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் செய்தது போல் ஒரு நிதி திரட்டும் திட்டத்தை ஆரம்பிக்கவில்லை. அல்லது இப்படிப் பாதிக்கப்பட்டவர்களுக்கு விமோசனம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைக்க வில்லை. மாறாக கட்டுரை சொல்வது இதுதான்:
1. இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் சிங்களப் பேரினவாதிகளின் முகவர்கள் அல்லது விகடனின் தமிழில் "ஏஜெண்டுகள்".
2. தமிழர்கள் தோற்றுவிட்டார்கள் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
3. பிரபாகரன் இறந்து விட்டார்.
4, இனி ஒரு போராட்டம் வேண்டாம்.
5. இந்தியத் தலைவர்கள் ஈழத் தமிழர்களை வைத்து வியாபாரம் செய்வதை நிறுத்த வேண்டும்.
6. தமிழின உணர்வாளர்கள் ஆன்மாவை விற்கிறார்கள்.
7. ஈழத்தில் இன்னொரு போர் வேண்டும் என்று கூறும் நண்பர்களே... உங்களுக்குப் போர் எவ்வளவு வலியானது என்று தெரியுமா? போர் எவ்வளவு கொடுமையானது என்று தெரியுமா? கண் எதிரே ஷெல் பட்டு இறந்துபோன பெற்றோரின் உடல் களைக்கூடத் தகனம் செய்ய முடியாமல் உயிருக்கு அஞ்சி ஓடிய எம்மவர்களின் வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? தாய் இறந்ததைக்கூட அறியாது தாயிடம் முலைப் பால் குடித்த குழந்தையின் அவலத்தை நீங்கள் கண்டதுண்டா? கர்ப்பிணித் தாயின் வயிறு வெடித்து, தாயும் நிறைமாத சிசுவும் அருகிலேயே கணவரும் துடிதுடித்த அவலத்தை நீங்கள் கண்டது உண்டா? கண்டிருந்தால், நீங்கள் ஈழத்தில் மட்டுமல்ல, உலகின் எந்த மூலையில் போர் நடந்தாலும் ஆதரிக்க மாட்டீர்கள்!''

இந்த எட்டுக் கருத்துக்களையும் பார்க்கும் போது இவை இந்திய  மைய அரசின் இலங்கைத் தமிழர் தொடர்பான நிலைப்பாடு என்று புரிகிறது. இனி தமிழர்கள் போராடாமல் சிங்களவர்களுக்கு அடங்கிப் போகவேண்டும் என்ற இந்திய மைய அரசின் கருத்தை விகடன் நன்கு பரப்புரை செய்கிறது.

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஈழப்பிரச்சனையை கையில் எடுக்கும் போது அதனால் பெரிதும் பாதிக்கப்படுவது ஆளும் காங்கிரசுக் கட்சி. அதற்கு எதிரான பரப்புரையை விகடன் நன்கு செய்கிறது.

ஈழப்பிரச்சனைக்கு இந்தியா காரணம் என்ற உண்மையை தமிழ்நாட்டு மக்கள் யாவரும் புரிந்து கொண்டால் அது இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்கு அச்சம் என்பதால் அதற்கு எதிரான பரப்புரையை விகடன் நன்கு செய்கிறது.

இந்தியாவில் சிறுபானமை இனங்களுக்கு எதிரான அடக்குமுறை நடந்தால் அதைப் பார்த்துக் கொண்டு தமிழர்கள் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என்கிறது விகடன். உலகின் எந்த மூலையிலும் அடைக்கு முறை நடந்தால் தமிழர்கள் வாயை மூடிக் கொண்டு உணர்ச்சியற்ற பிண்டங்களாக இருக்க வேண்டும்  என்கிறது விகடன்.

வீறு கொண்ட இந்தியக் கைக்கூலிகள்
விகடனின் கட்டுரையை பார்த்து வெளிநாடுகளில் இருக்கும் பல இந்தியக் கைக்கூலிகள் வீறு கொண்டு எழுந்து விட்டனர். புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு எந்த ஆதரவும் கொடுப்பதில்லை என்ற பரப்புரையை தொடங்கி விட்டனர்.  விரைவில் வரவிருக்கும் 27/11 ஐ குழப்புவதை மையப் படுத்தி இவர்கள் பரப்புரை ஆரம்பித்துள்ளது இந்திய உளவுத்துறை நன்கு செயற்படுகிறது.

போராளிகளுக்கு உதவ முடியாத நிலை
2009இல் போர் முடிந்த பின்னர் வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் விடுதலையான போராளிகளுக்குப் பணம் அனுப்பினர். அவர்களுக்கு வெளிநாட்டுப் புலிகளிடம்  இருந்து பணம் வருகிறது என்று சொல்லி அவர்கள் கைது செய்து காணமல் போகத் தொடங்கியதுடன். பணம் அனுப்புவது நிறுத்தப்பட்டது. 

பொய்யாக உருவாக்கிய பாத்திரம்?
போரின் பின்னர் கைதாகிய படையணித் தலைவர்கள் யாவரும் "காணமல் போய்விட்டன்ர". கீழ் நிலையில் இருந்த போராளிகள் மட்டுமே விடுதலை என்ற பெயரில் வெளியில் விடப்பட்டு அவர்களது நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. சோதியா படையணியின் குறிப்பிடத்தக்க தளபதியாக இருந்தவள் என விகடனிற்குப் பேட்டி கொடுத்தவர் கூறுகிறார். ஒரு படையணிக்கு ஒருவர்தான் தளபதி.  இந்தச் சோதியா படையணியின் தளபதியான முன்னாள் போராளி இந்நாள் பாலியல் தொழிலாளி ஒரு கற்பனைப்பாத்திரமா என்ற கேள்வி எழுகிறது.

எல்லாவற்றிற்கும் இந்தியாவே பொறுப்பு
இலங்கையில் கைத்துப்பாக்கிகளுடன் போராடிக் கொண்டிருந்தவர்களைப் பிடித்து பயிற்ச்சி கொடுத்து படைக்கலன்கள் கொடுத்து சிங்கள தமிழ் மோதலைத் தீவிரப்படுத்தியது யார்?  தமிழர்கள் படைப்பலன் அடைந்தபோது ஆயுதத்தை ஒப்படையுங்கள் நாம் உமக்குப் பாது காப்புத் தருகிறோம் என்று சொல்லி ஏமாற்றியது யார்? உமா மகேஸ்வரனுக்கு வந்த ஒரு கப்பல் நிறைந்த படைக்கலன்களைப் பறித்தது யார்? தமிழர்களுக்கு எதிரான போரில் சிங்களவர்களு முழு உதவியையும் செய்தது யார்? 25 ஆண்டுகளாக 13வது திருத்தம் என்னும் கிலுகிலுப்பையை வைத்து ஏமாற்றுவது யார்? போரில் சிங்களவர்கள் வெல்ல வேண்டும் என்று தமிழ்நாட்டுக் கோவில்களில் யாகங்கள் செய்தது யார்?  இறுதிப் போரின்போது இலங்கைக்கு கள்ளத்தனமாக இருபதினாயிரம் படை வீரர்களை அனுப்பி சிங்களவர்களைப் போரில் வெல்ல வைத்தது யார்?
என்ற கேள்விகளிற்கு விடை கண்டுபிடித்தால் சோதியா படையணியின் முக்கிய தளபதியின் பாலியல் தொழிலாளியாக மாறியமைக்கு யார் காரணம் என்ற கேள்விக்குப் பதில் கிடைக்கும்.

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மட்டும் ஈழத் தமிழர்களின் பிரச்சனையை முன்வைத்துப் பிழைப்பு நடத்தவில்லை விகடன் போன்ற ஊடகங்களும்தான் பிழைப்பு நடத்துகின்றன.

1 comment:

Thozhirkalam Channel said...

உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

http://otti.makkalsanthai.com

பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...