Friday, 16 November 2012

ஹமாஸின் தாக்குதலும் இஸ்ரேலின் உயர் தொழில் நுட்பமும்

இஸ்ரேலும் ஹமாஸ் இயக்கமும் போர் முனையிலும் டுவிட்டரிலும் கடுமையாக மோதிக் கொண்டிருக்கின்றன. ஹமாஸின் படைத்துறைப் பிரிவான Ezzedine al-Qassam Brigadeஇன் தலைவர் அஹமட் அல் ஜபாரியை இஸ்ரேலியப்படையினர் தமது பாதுகாப்புத் தூண் படைநடவடிக்கை (Operation Pillar of Defence) மூலம் நவம்பர் 14-ம் திகதி கொன்றதில் இருந்து இருதரப்பு மோதல் தீவிர மடைந்தது.

இஸ்ரேலின் உயர் தொழில் நுட்ப இரும்புக் கூரை
ஈரான் ஹமாஸ் மூலமாக ஆளில்லா விமானங்களை இஸ்ரேலிற்குள் அனுப்பு அதன் படை நிலைகளைப் படம் பிடித்தது. ஒரு ஆளில்லா விமானத்தை இஸ்ரேல் சுட்டு வீழ்த்தியிருந்தது. பாதுகாப்புத் தூண் படை நடவடிக்கையின் பின்னர் தம்மீது ஹமாஸ் இயக்கத்தினர் காசாவில் இருந்து வீசிய 275 ஏவுகணைக் குண்டுகள் இஸ்ரேலில் விழுந்து வெடித்ததாகவும் தமது இரும்புக் கூரைத் தொழில் நுட்பம் ஹமாஸின் ஏவிகணைகளில் 105இ விண்ணில் வைத்து வெடிக்கச் செய்ததாகவும் தாம் ஹமாஸ் நிலைகளின் மீது 275 ஏவுகணைகளை வீசியதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹமாஸ் வீசிய ஏவுகணைகள் ஈரானிச் தயாரிக்கப்பட்ட ஃபஜிர் ஏவுகணைகளாகும்.

என்ன இந்த இரும்புக் கூரை?

இரும்புக் கூரை என்பது ஒரு நடமாடும் ஏவுகணை எதிர்ப்பு முறைமை. இது குறுகிய தூரம் செல்லக் கூடிய ஏவுகணைகளையும் (rockets) எறிகணைகளையும் (artillery shells)  அழிக்கக் கூடியது. இஸ்ரேல் இந்த முறைமை முதலில் 2012 மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியது. முதலில் இதை இஸ்ரேல் தனித்தே உருவாக்கியது. பின்னர் இஸ்ரேலுடன் அமெரிக்காவும் இணைந்து கொண்டது. இரும்புக் கூரையின் உள்ள கதுவிகள்(Radar) விண்ணில் வரும் ஏவுகணைகளையும் எறிகணைகளையும் உணர்ந்து அதன் பாதை வேகம் போன்றவற்றைக் கணித்து அவற்றை நோக்கி தனது இடை மறிக்கும் குண்டுகளை வீசும். வீசப்பட்ட குண்டுகள் வரும் ஏவுகணைகளுடனும் எறிகணைகளுடனும் மோதி அவற்றை வெடிக்கச் செய்யும்.

முழு அளவிலான போர் மூளுமா?
இஸ்ரேலியப் படைகள் காசாப் பிராந்தியத்திற்குள் நுழைவதற்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முப்பதாயிரம் ஒதுக்கி வைக்கப்பட்ட(Reserve) படையினரும் கடமைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் அஹமட் அல் ஜபாரியை மட்டுமல்ல மேலும் பல ஹமாஸின் முக்கிய உறுப்பினர்களைக் கொன்றுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹமாஸின் தென் முனைத் தளபதி ரயிட் அல் அத்தாரும் கொல்லப்பட்டிருக்கலாம். ஹமாஸ் தனது பதிலடிகளைத் தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேலியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் எஹுட் பரக் ஹமாஸ் வீசும் ஏவுகணைகளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார். இஸ்ரேலியப் பிரதமர் பென்ஞ்சமின் நெத்தன்யாஹூ தேவை ஏற்படின் தமது படையினர் தமது நடவடிக்கைப் பிராந்தியத்தை அகலப்படுத்துவர் என்றார். இதுவரை குழந்தைகள் உடபட 19 பலஸ்த்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரானின் தந்திரமா?
அமெரிக்கத் தேர்தலுக்குப் பின்னர் இஸ்ரேல் தனித்தோ அல்லது அமெரிக்காவுடன் இணைந்தோ ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது. தன் மீதான தாக்குதலைத் திசை திருப்ப ஈரான் ஹமாஸ்-இஸ்ரேல் மோதலை உருவாக்கியதா என்ற சந்தேகமும் உருவாகியுள்ளது. ஆனால் அஹமட் அல் ஜபாரியைக் கொல்ல இஸ்ரேல் பல மாதங்களாக திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

வில்லங்கமான நிலையில் எகிப்திய ஆட்சியாளர்கள்.
காசாமீதான இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்தாலோ அல்லது இஸ்ரேல் காசாவிற்குள் நுழைந்தாலோ எகிப்திய ஆட்சியாளர்களின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்பது ஒரு முக்கியமான கேள்வி. இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் கொள்கைப்படி பாலஸ்தீனியரகளைப் பாதுகாக்கும் கடப்பாடு எகிப்தியர்களுக்கு உண்டு. அஹமட் அல் ஜபாரி கொல்லப்பட்டவுடன் ஹாமாஸின் பிரதம மந்திரி தொலைக்காட்சியில் தோன்றி எமது இந்த எதிரியைத் தடுக்கும்படி எகிப்தியச் சகோதரர்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்றார். உடனே எகிப்த்து இஸ்ரேலுக்கான தனது தூதுவரைத் திரும்ப அழைத்துக் கொண்டது. 16/11/2012 வெள்ளிக் கிழமை தொழுகைக்குப் பின்னர் எகிப்த்தின் பலபாகங்களிலும் மக்கள் ஆயிரக் கணக்கில் கூடி பாலஸ்த்தினியருக்கு தமது ஆதரவைத் தெரிவித்தனர். எகிப்திய அதிபர் மொஹமட் மோர்சி இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தால் அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டும் என்றார். எகிப்தியப் பிரதமர் போர் நிறுத்தப் பேச்சு வார்த்தைக்காக மேற் கொண்ட பாலஸ்த்தீனப் பயணத்திற்காக இஸ்ரேல் எகிப்தின் வேண்டுகோளுக்கிணங்க மூன்று மணித்தியாலப் போர் நிறுத்தத்திற்கு ஒத்துக் கொண்டது ஆனால் ஹமாஸ் தரப்பு ஏவுகணைகளை வீசியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு மறுத்துள்ளது. காசா சென்ற எகிப்தியப் பிரதமர் ஹெஷாம் கண்டில் அங்கு மருத்துவ மனையில் இறந்த 4 வயதுச் சிறுவனைப் பார்த்துக் கண்ணீர் வடித்தார். எகிப்தியப் புரட்சியில் ஹஸ்னி முபராக் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் அரபுப் பிராந்திய சமநிலையில் ஒரு பெருமாற்றம் ஏற்பட்டுள்ளது. 1979-ம் ஆண்டு செய்யப்பட்ட எகிப்து-இஸ்ரேல் உடனபாடு இப்போது ஆபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இஸ்ரேலியத் தேர்தல்
ஹமாஸ் இயக்கம் இன்னும் ஓரிரு தினங்களுக்குள் தனது ஏவுகணைத் தாக்குதல்களை நிறுத்தாவிடில் இஸ்ரேல் காசாவை ஆக்கிரமிக்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. 2013இல் வரவிருக்கும் இஸ்ரேலியத் தேர்தலில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு வெற்றி பெறுவதற்கு ஹாமாஸிற்கு எதிரான ஒரு காத்திரமான படை நடவடிக்கை பெரிதும் உதவும். அமெரிக்கத் தேர்தலில் ஒபாமாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததால் இஸ்ரேலில் செல்வாக்கை இழந்திருக்கும் சரிக்கட்டவேண்டிய நிர்ப்பந்தத்தில் நெத்தன்யாஹு இருக்கிறார்.

3 comments:

Anonymous said...

அமெரிக்கத் தேர்தலுக்குப் பின்னர் இஸ்ரேல் தனித்தோ அல்லது அமெரிக்காவுடன் இணைந்தோ இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தலாம்??????????????????????????????????????

இதில் ஏதோ பிழை இருக்குதென்று நினைக்கிறேன்.

Vel Tharma said...

பிழையைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி....ஈரான் மீது

கரிகாலன் said...

நல்லதொரு ஆய்வு .

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...