Monday, 6 August 2012

சிரியப் போர் விரிவடையுமா? ஆட்சி சரிவடையுமா?

 பிந்திக் கிடைத்த செய்தி:
சிரியப் பிரதமர் ரியாக் ஹிஜாப்பும் மூன்று மந்திரிகளும் கிளர்ச்சிக்கரர்களின் உதவியுடன் தப்பி ஜோர்தானுக்கு ஓடிவிட்டார்கள். சிரிய அரசு இனக்கொலை புரிகிறது என்கிறார் பிரதமர் ரியாக் ஹிஜாப். தப்பி ஓட முனைந்த இன்னும் ஒரு அமைச்சர் கைது செய்யப்பட்டர். மேலும் ஒருபிரிகேடியர் ஜெனரல் தப்பி ஓடி கிளர்ச்சிக்காரர்களுடன் இணைந்தார்.


சிரியக் கிளர்ச்சியின் மூலம்
அரபு நாடுகளில் 2011இன் ஆரம்பப்பகுதிகளில் மல்லிகைப் புரட்சி அடக்கு முறை ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுந்த போது அது சிரியாவையும் விட்டு வைக்கவில்லை. 2011 மார்ச் 15-ம் திகதியை சிரிய மக்கள் முகவேட்டின் மூலமாக (Facebook) தன்மான நாளாகப் பிரகடனப்படுத்தி தலைநகர் டமஸ்கஸில் சிரிய ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். சிரியாவின் தென்பிராந்திய நகரான டராவில் நூறுக்கு மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சி லதாக்கியா போன்ற மற்ற பிரதான நகரங்களுக்கும் பரவ மார்ச் 29-ம் திகதி அதிபர் பஸார் அல் அசாத் பதவியில் இருக்க அவரது மந்திரிகள் பதவிவிலகினர். மறுநாள் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பஸார் அல் அசாத் கிளர்ச்சி ஒரு இசுலாமியச் சதி என்று குற்றம்சாட்டினார். பின்னர் முன்னாள் விவசாய அமைச்சர் அதேல் சஃபாரை புதிய ஆட்சியை அமைக்கும்படி பணித்தார். புதிய அரசு கிளர்ச்சிக்காரர்களை திருப்திப்படுத்தவில்லை. கிளர்ச்சி மேலும் வலுப்பெறுகிறது. மாணவர்கள் உட்படப் பலர் கிளர்ச்சியில் இணைந்து கொள்கின்றனர். கிளர்ச்சி பரவுவதையும் தீவிரமடைவதையும் உணர்ந்த பஸார் அல் அசாத் 1963இல் இருந்து நடைமுறையில் இருந்த அவசரகாலச் சட்டத்தை ஏப்ரல் 19-ம் திகதி இரத்துச் செய்தார். கிளர்ச்சிகள் தொடர்ந்ததால் பலர் மேலும் கொல்லப்படுகின்றனர். ஏப்ரல் 29-திகதி அமெரிக்காவும் மே-15ம் திகதி ஐரோப்பிய ஒன்றியமும் சிரியாமீது பொருளாதாரத் தடையை கொண்டு வந்தன. கிளர்ச்சிகள் மேலும் தீவிரமடைய ஜூனில் பல அரச படையினர் கொல்லப்படுகின்றனர். 2011 ஜுலையில் ஹமா நகரில் பெரிய பேரணி நடந்தது அதில் அமெரிக்கத் தூதுவரும் பிரெஞ்சுத் தூதுவரும் ஆர்ப்பாட்டக்காரர்களைச் சந்தித்தனர். மேற்குலக சார்பு அரசுகளைக் கொண்ட சவுதி அரேபியாவும் குவைத்தும் தமது தூதுவர்களை சிரியாவில் இருந்து திருப்பி அழைக்கின்றன. சிரிய அரசு எதிர்ப்பாளர்களை பேச்சுக்கு அழைத்தது பல எதிர்க்கட்சியினர் பேச்சு வார்த்தையைப் புறக்கணித்தனர். ஹமா நகரில் படையினர் வீடுவீடாகச் சென்று மக்களைக் கைது செய்தும் தாக்கியும் அட்டகாசம் செய்தனர். அதில் 300இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பல சிரியர்கள் துருக்கியில் தஞ்சம் புகுந்தனர். துருக்கிய அரசு சிரிய மக்களின் எழுச்சி தொடர்பாக பேச்சு வார்த்தை நடாத்த ஒரு சிறப்புத் தூதுவரை சிரியாவிற்கு அனுப்பியது. ஆகஸ்ட் 17-ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் சிரிய அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமது கரிசனையை வெளியிட்டார். மறுநாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிரிய அதிபர் பஸார் அல் அசாத் பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கையை விடுத்து அமெரிக்காவில் உள்ள சிரியச் சொத்துக்களை முடக்கினார். ஆகஸ்ட் 22-ம் திகதி பஸார் அல் அசாத் சிரியாவில் 2012 பெப்ரவரியில் பாராளமன்றத் தேர்தல் நடக்கும் என்றும் அதில் பாத் கட்சியினர் பங்கு பெற முடியாது என்றும் அறிவிக்கிறார். சில அரசியல் சீர் திருத்தங்கள் செய்யப்படும் என்றும் உறுதியளித்தார். அரபு லீக்கின் தலைவர் நபீர் எலரபி சிரியத் தலைநகர் டமாஸ்கஸ் சென்று பஸார் அல் அசாத்துடன் பேச்சு வார்த்தை நடாத்தினார். 2011 செப்டம்பர் 15-ம் திகதி சிரிய எதிர்ப்பாளர்கள் துருக்கிய நகர் இஸ்த்தான்புல்லில் கூடி தமது சிரியத் தேசிய சபை சிரியாவில் மாற்று ஆட்சியை அமைக்கும் என அறிக்கை விட்டனர்.  மேற்குலக பொருளாதாரத் தடையால் ஏற்பட்ட வெளிநாட்டு நாட்டு நாணய நெருக்கடியைத் தவிர்க்க சிரிய அரசு பல பொருட்களின் இறக்குமதி மீது கட்டுப்பாடு விதித்தது. எதிர்க் கட்சிகளின் சிரியத் தேசிய சபை சிரிய மக்களைப் பாதுகாக்கும் படி உலக நாடுகளுக்கு அழைப்பு விடுக்கின்றன. 2011 ஒக்டோபர் 4-ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் சிரியாவிற்கு எதிராக கொண்டு வந்த கண்டனத் தீர்மானத்தை சீனாவும் இரசியாவும் இரத்துச் செய்கின்றன.  2011 ஒக்டோபர் 14-ம் திகதி சிரியாவில் 3000இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. 2011 ஒக்டோபர் 24-ம் திகதி அமெரிக்க தனது தூதுவரை சிரியாவில் இருந்து திருப்பி அழைத்தது. அரபு லீக்கிற்கு சிரிய அதிபர் பஸார் அல் அசாத் வழங்கிய உறுதி மொழிகள் பல இன்னும் அவரால் நிறைவேற்றப் படவில்லை.

சிரியக்கிளர்ச்சியின் மூலம்
சிரியாவில் ஆட்சியாளர் மாற்றமும் ஆட்சி முறைமை மாற்றமும் வரவேண்டும் என்று மேற்கு நாடுகள் விரும்புகின்றன. 2008இற்குப் பின்னர் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியைச் சாட்டாக வைத்து தங்களுக்குப் பிடிக்காத ஆட்சியாளர்களை பதவிகளில் இருந்து அகற்றுவதில் மேற்கு நாடுகள் அதிக கரிசனை காட்டி வருகின்றன. துனிசியாவில் பென் அலி லிபியாவில் மும்மர் கடாஃபி ஆகியோர் வெற்றிகரமாக பதவியில் விலக்கப்பட்டனர். ஆனால் மேற்குல சார்பு ஆட்சியாளர்கள் பாஹ்ரெயினிலும் சவுதி அரேபியாவிலும் தமக்கு எதிரான கிளர்ச்சிகளை வெற்றிகரமாக அடக்கிவிட்டனர்.

சிரியக் கிளர்ச்சியாளர்களிடை பற்பல கூறுகள்
சிரிய விடுதலைப் படை, சுதந்திர சிரியப்படை, சிரியத் தேசிய சபை, தேசிய ஒருங்கிணைப்புக் குழு, சிரியத் தேசப் பற்றாளர் குழு எனப் பல குழுக்களாக சிரியக் கிளர்ச்சியாளர்கள் பிரிந்து நிற்கின்றனர். எந்த ஒரு விடுதலை அமைப்பிலும் முதல் ஏற்படுவது பிளவா? அவர்களுக்கு உதவுபவர்கள் போதிய உதவியைக் கொடுக்காமல் மட்டுப்படுத்த உதவியைக் கொடுத்து மோதல்களை தீவிரபடுத்துவதில் நீண்டகால இழுத்தடிப்பிலும் அதிக அக்கறை காட்டுகின்றனர். விடுதலை இயக்கங்களிடை ஏற்படும் பிளவுகள் தனியே வெளியில் இருந்து மட்டும் உருவாக்கப்படுவதில்லை.  உள்ளிருந்தும் உருவாகும். அம்மான், பாரிஸ். பிரஸல்ஸ் ஆகிய நகரங்களில் பிளவடைந்த சிரியக் கிளர்ச்சிக்காரர்களிடை ஒற்றுமையை ஏற்படுத்த பல முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சிரியத் தேசிய சபை ஒரு கதிரைக் கனவான்களின் கும்பல்; அது களத்தில் இறங்கிப் போராடுவதில்லை என்று மற்றவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இதனால் இவர்களிடம் இருந்து சிலர் பிளவு பட்டு சிரிய தேசப்பற்றாளர் குழுவை ஆரம்பித்தனர். சிரியத் தேசிய சபையினர் ஒரு படைத்துறைச் சபையை அமைத்து அது ஒரு படைத்துறை அமைச்சாக செயற்படும் என்றனர். சுதந்திர சிரியப் படையினர் இது தம்முடன் கலந்து ஆலோசிக்காமல் செய்யப்பட்டது என்று முரண்படுகின்றனர். சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் செயற்படுக் குழுவினரிடை மட்டும்Martyr Hisham Brigade; the Ibn Malik Martyrs Brigade; the Maarratt al-Numan Martyrs Brigade; the Salhauddin Brigade, the Fallujah Brigade என்னும் ஒன்றுடன் ஒன்றுமையில்லாத குழுக்கள் இருக்கின்றன. வெளிநாடுகளில் வாழும் சிரிய மருத்துவர்கள் தாம் ஒரு அமைப்பை உருவாக்கி சிரியக் கிளர்ச்சியாளர்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்து வருகின்றனர். அமெரிக்க, சவுதி அரேபிய, துருக்கி உளவுத் துறையினர் இப்பிரிவுகளை ஒன்றாக்குவதற்கு பெரும் முயற்ச்சி செய்கின்றனர்.

அமெரிக்க ஆதரவு சுதந்திர சிரியப் படை!
சுதந்திர சிரியப் படையினர் சிரிய ஆதரவுக் குழு ஒன்றை அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அமைத்து அங்கு தமக்கு ஆதரவாக அமெரிக்கா நேரடியாகச் செயற்படவேண்டும் என்று வேண்டி வருகின்றனர். அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ அண்மைக்காலங்களாக சுதந்திர சிரியப் படையினருடன் தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். சிரிய அரச படையில் இருந்து தப்பி ஓடும் வீரர்களில் பலர் இந்த சுதந்திர சிரியப் படையினருடன் இணைந்து வருகின்றனர். இந்த சுதந்திர சிரியப் படையினருடன் அமெரிக்க அரச அதிகாரிகள் அதிக கவனத்துடனும் சந்தேகத்துடனுமே தொடர்புகளை வைத்திருக்கின்றனர். இவர்கள் மத்தியில் அல் கெய்தா போன்ற இசுலாமியத் தீவிரவாத அமைப்புக்களின் ஊடுருவிகள் இருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதனால் சிரியக் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிகா மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளையே நேரடியாக வழங்குகிறது. அமெரிக்காவின் நட்பு நாடுகளான சவுதி அரேபியா, துருக்கி, கட்டார் ஆகிய நாடுகள் சிரியக் கிளர்ச்சியாளரகளுக்கு படைக்கலன் மற்றும் பயிற்ச்சி உதவிகளை வழங்கி வருகின்றன.

தோல்வியில் முடிந்த சமாதான முயற்ச்சி
சிரியக் கிளர்ச்சியைத் தீர்ப்பதற்காக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையும் அரபு லீக் நாடுகளும் இணைந்து முன்னாள் ஐநா பொதுச் செயலர் கோஃபி அனன் அவர்களை ஐநா பாது காப்புச் சபையின் தீர்மானம் 2043இன் மூலம் சமாதானத் தூதுவராக நியமித்தன. கோஃபி அனன் தனது முதல் நடவடிக்கையாக ஒரு ஆறு அம்சத் திட்டத்தை முன்வைத்தார். அதன் அம்சங்கள்:

  1. சிரிய மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் சிரிய மக்களால் முன்னெடுக்கப்படும் அரசியல் தீர்வுக்கான நடவடிக்கை எடுத்தல்
  2. மோதல்களை நிறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் படைக்கலன்கள் ஏந்தாத 300கண்காணிப்பாளர்களைச் சிரியாவிற்குள் அனுமதித்து மோதல் நிறுத்தத்தை உறுதி செய்தல்.
  3. மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பன்னாட்டுத் தொண்டர் நிறுவனங்களை சேவை செய்ய அனுமதித்தல். மோதல் நடக்கும் இடங்களில் நாளொன்றிற்கு இரு மணித்தியாலங்கள் தொண்டர் நிறுவனங்களை சேவை செய்ய அனுமதித்தல்.
  4. காரணமின்றி கைது செய்து தடுத்து வைத்திருப்பவர்களை உடன் விடுதலை செய்தல்.
  5. நாடு முழுவதும் ஊடகவியலாளர்களை தடையின்றி பயணங்கள் செல்ல அனுமதித்தல்
  6. சட்ட பூர்வமான அமைதியான ஆர்ப்பாடங்களை அனுமதித்தல்.
கோஃபி அனன் ஜூலை 10-ம் திகதி ஈரானிய உயர்மட்டத்தினருடன் சிரியப் பிரச்சனை தொடர்ப்பாகக் கலந்துரையாடினார்.  2014 இல் சிரியாவில் நடக்கவிருப்பதாகக் கூறப்படும் தேர்தல் சிரியப் பிரச்சனைக்குத் தீர்வாக அமையும் என்று ஈரானிய ஆட்சியாளர்கள் அழுத்தமாகத் தெரிவித்தார்கள். அத்தேர்தல் மூலம் சிரிய மக்கள் தங்கள் ஆட்சியாளர்களை மக்களாட்சி முறைப்படி தெரிவு செய்யலாம் என்று ஈரான் கருதுகிறது. சிரியப் பிரச்சனையில் ஈரானையும் ஒரு பங்காளியாக இணைத்து கோஃபி அனன் ஈரானுடன் பேச்சு வார்த்தை நிகழ்த்தியதை ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கடுமையாக எதிர்த்தன.  சிரிய அரசுக்கு கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்கு ஈரான் உதவி செய்வதால் சிரியப் பிரச்சனைக்கு ஈரானும் பங்களிப்புச் செய்கிறது என்பது மேற்கு நாடுகளின் கருத்து. கோஃபி அனன் அரபு நாட்டு மக்களினதும் ஊடகங்களினதும் கருத்துக்குப் பயப்படுகிறார் என்று சில அரசதந்திரிகள் குற்றம் சாட்டுகிறார்கள். கோஃபி அனன் ஆபிரிக்க ஊடகங்களைத் தவிர்க்கிறார் மேற்குலக ஊடகங்களுக்கு மட்டுமே பேட்டிகள் கருத்துக்கள் தெரிவிக்கிறார் என்று ஆபிரிக்க ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன. கோஃபி அனன் சமர்ப்பித்த ஆறு அமசத் திட்டம் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு மிகவும் தேவையான கால அவகாசத்தை வழங்கி அவரைப் பாதுகாக்க உதவும் என்கின்றனர் அமெரிக்க அரசதந்திரிகள். நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை கோஃபி அனன் சமர்ப்பித்த ஆறு அம்சத் திட்டத்தின் ஒவ்வொரு அம்சமும் ஒவ்வொரு பொறியாகும் என்கிறது. மேலும் அது தெரிவிக்கையில் கோஃபி அனனின் திட்டம் சுதந்திர சிரியப் படையினருக்கு படைக்கலன்கள் போய்ச் சேர்வதைத் தடுக்கும் என்கிறது. அதனால் சிரியக் கிளர்ச்சியாளர்கள் பெரும் பின்னடைவைச் சந்திப்பினர் என்கிறது. இஸ்ரேலிய ஊடகம் ஒன்று பதினேழாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் அதனால் கோஃபி அனன் படுதோல்வியைச் சந்தித்தார் என்கிறது. ரைம்ஸ் ஒஃப் இந்தியா கோஃபி அனன் தனது சிரிய சமாதான முயற்ச்சி தோல்வியடைந்தது என்கிறார் என்கிறது. சிரியாவில் தனது முயற்ச்சி தோல்வியடைந்ததால் கோஃபி அனன் தனது சமாதானத் தூதுவர் பதவியில் இருந்து விலகினார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் கண்டனத் தீர்மானம்

கோஃபி அனனின் சமாதான முயற்ச்சிகள் தோல்வியில் முடிவடைந்ததால் உள்ளூர மகிழ்வடைந்த வட அமெரிக்க மேற்கு ஐரோப்பிய நாடுகள் சவுதி அரேபியா போன்ற நாடுகளின் உதவியுடன் ஐநா பொதுச் சபையில் சிரியா தொடர்பாக ஐநா பாதுகாப்புச் சபை போதிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதைக் கண்டிக்கும் தீர்மானமானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றின. இத்தீர்மானம் பாதுகாப்புச் சபையில் தமது வீட்டோ எனப்படும் இரத்து அதிகாரத்தால் சிரியா தொடர்பான மூன்று தீர்மானங்களை நிறைவேற்றப்படாமல் தடுத்த சீனாவையும் இரசியாவையும் கண்டிப்பதாகவே கருதப்படுகிறது. சிரியாவில் பஷார் அல் அசத்தின் ஆட்சி கவிழ்ந்தால் அது ஈரானின் ஆட்சியில் இருப்பவர்களுக்கும் ஆபத்தாக அமையும் அரபு நாடுகளின் படைப்பலச் சமநிலை மேற்கு நாடுகளுக்குப் பெரும் சாதகமான நிலையை உருவாக்கும் என்று சீனாவும் இரசியாவும் அஞ்சுகின்றன.  ஐநா பொதுச் சபைத் தீர்மானத்தை அடுத்து இரசியா சிரியாவிற்கு மூன்று கடற்படைக் கலன்களை அனுப்பியதாகச் செய்திகள் வெளிவந்தன ஆனால் இச்செய்தியை இரசியா மறுத்துள்ளது.

சிரியக் கிளர்ச்சி துருக்கிக்குப் பரவுமா?

சிரியாவில் பெரும்பான்மையான இனக்குழுமம் சுனி முஸ்லிம்கள். ஆனால் அங்கு ஆட்சியைக் கையில் வைத்திருப்பவர்களும் அதிகமான அரச படையில் இருப்பவர்களும் அலவைற் முஸ்லிம்கள் என்ற இனக் குழுமம். அலவைற் இனக்குழுமம் மொத்த மக்கள் தொகையில்20% மட்டுமே.  கிளர்ச்சிக்காரர்களில் பெரும்பானமையானவர்கள் சுனி முஸ்லிம்கள். சிரியாவில் நடப்பது ஒரு சுனி-அலவைற் இனக்குழுமங்களுக்கு இடையிலான மோதல்களாகவே கருதப்படுகிறது, துருக்கியில் பெரும்பான்மை இனத்தவர் சுனி முஸ்லிம்கள். அண்மைக் காலங்களாக அவர்கள் தமது நாட்டை சுனி முஸ்லிம் இனக்குழுமங்கள் மயப்படுத்தி வருகின்றனர். ஆனால் துருக்கியில் இருபது மில்லியன் அலவைற் முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். சிரிய உள்நாட்டுப் போரினால் சிரியாவில் இருந்து துருக்கிக்குத் தப்பி ஓடிய சுனி முஸ்லிம்கள் அங்குள்ள அலவைற் இனத்தவர்கள் மேல் தமது ஆத்திரத்தைக் காட்டுகிறார்கள். இது சிரிய உள்நாட்டுப் போர் துருக்கிக்கும் பரவுமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. சில ஆய்வாளர்கள் சிரிய அதிபர் பஷார் அல் அசாத் தனக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியை சாதுரியமாக சுனி-அலவைற் இனக்குழும மோதலாக மாற்றிவிட்டார் என்கின்றனர். அசாத்தை பதவியில் இருந்து அகற்றுவதில் சிரியக் கிளர்ச்சியாளர்களும் மேற்குலக நாடுகளும் அமெரிக்காவும் இருக்க் அதற்கு ஆதரவாக சவுதி அரேபியா போன்ற நாடுகள் இருக்க அசாத்தை பதவியில் இருந்து அகற்ற விடுவதில்லை என்ற உறுதியில் இரசியாவும் சீனாவும் ஈரானின் துணையுடன் இருக்க சிரியாவில் இரத்தக்களரி மோசமடைவது நிச்சயம். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தேர்தல் பிரச்சாரத்தில் இருக்க சிரியா தொடர்பான தீர்க்கமான முடிவையோ அல்லது பிரச்சனைக்கு உரிய படை நடவடிக்கைகள் எதையும் இப்போது அமெரிக்கவிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது, மோதலைத் துருக்கிக்கும் பரவவிட்டு பஷார் அல் அசாத்தை தொலைக்கும் தந்திரத்தை அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் கையாளலாம்.

அசாத்தின் சரிவுக்குத் தயாராகும் அமெரிக்கா

சில படைத்துறை ஆய்வாளர்கள் பஷார் அல் அசாத்தின் அரசு விரைவில் கவிழ்ந்து விடும் என்று கருதுகின்றனர். சிரியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்த பின்னர் அடுத்த ஆட்சி எப்படி அமைய வேண்டும் என்று அமெரிக்கா திட்டமிடத் தொடங்கிவிட்டது. ஈராக்கில் சதாம் ஹுசேய்ன் தலைமையினால சிறுபான்மை சுனி முஸ்லிம்களின் தனியதிகார ஆட்சியை அமெரிக்கா கலைத்து சிறுபான்மை சியாட் முஸ்லிம்களின் மக்களாட்சி அரசை அமைத்தது. அங்குள்ள பலமிக்க ஒரு படத்துறைக் கட்டமைப்பை நிர்மூலம் செய்த போது பொதுமக்களுக்கும் பலத்த இழப்பு ஏற்பட்டு அங்கு அமெரிக்காவிற்கு எதிராக ஒரு தீவிரவாதம் உருவானது. அத்துடன் குர்திய இன மக்களுக்கு ஒரு பாதி-தன்னாட்சியை வழங்கியது. ஈராக்கில் நேரடியாகப் படையை அனுப்பி அதன் படைத்துறையை நிர்மூலம் செய்ததால் ஏற்பட்ட விளைகளில் இருந்து பெற்றபட்டறிவை வைத்துக் கொண்டு நேரடியாக தனது படையினரை லிபியாவிற்கு அனுப்பாமல் remote control மூலம் மும்மர் கடாஃபியின் ஆட்சியைக் கவிழ்தது. இரண்டு இடத்திலும் பெற்ற பட்டறிவை ஆப்கானிஸ்தானில் பெற்றுக் கொண்டிருக்கும் பட்டறிவுடன் இணைத்து அமெரிக்கா சிரியாவில் பாவிக்க நினைக்கிறது. அதேவேளை தன்னை சிரியக் கிளர்ச்சியுடன் சம்பந்தமில்லாதது போல் பாசாங்கும் செய்கிறது. சிரிய மக்கள் தாங்களாகவே தமக்கு என்ன தேவை என்பதை தீர்மானிக்க வேண்டும் என்று வேதம் ஓதுகிறது. சிலர் அமெரிக்க நிர்வாகம் சிரியக் கிளர்ச்சியாளர்களுக்கு செய்யும் உதவி போதாது குறைசொல்கின்றனர். அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகன் சிரியா தொடர்பாக நெருக்கடி நடவடிக்கைக் குழு ஒன்றை அமைத்துள்ளது. 

போரலைகள் மோதும் அலெப்போ
சிரியாவின் இரண்டாவது பெரிய நகரும் வர்த்தக முக்கியத்துவம் மிக்கதுமான அலேப்போவில் இப்போது சிரிய அரச படைகளுக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் பெரும்  மோதல் நடக்கிறது.  கரந்தடி படையினருக்கு எதிரான போர்ப்பயிற்ச்சியோ அனுபவமோ இல்லாத சிரியப் படையினர் அலேப்போ நகரின் பாதியைக் கைப்பற்றிய சிரியக் கிளர்ச்சியாளர்களிடமிருந்து மீட்டெடுப்பதில் பெரும் சிரமத்தை எதிர் கொள்கின்றனர். கடுமையான எறிகணைத் தாக்குதல்களோ விமானக் குண்டு வீச்சோ அங்கு செய்தால் அதில் ஆளும் இனக் குழுமமான அலவைற் முஸ்லிம்களும் பாதிப்புக்கு உள்ளாகலாம். ஆனால் அலேப்போ நகர் வீழ்ச்சியடைந்தால் தலைநகர் டமஸ்கஸ் நகரின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகிவிடும். அலேப்போ நகரைக் கைப்பற்றியவர்கள் சுதந்திர சிரியப்படையினரே. இவர்கள் அமெரிக்காவின் ஆதரவு உடையவர்கள் அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலர் லியோன் பார்னெற்றா அலேப்போ நகரின் வீழ்ச்சி அசாத் ஆட்சிக்கு அடிக்கப்பட்ட கடைசி ஆணி என்கிறார்.  டமஸ்கஸ் நகரில் கிளர்ச்சிக் காரர்கள் ஊடுருவி சிரிய அரசு ஆதரவுத் தொலைக்காட்சி நிலையத்தின் மீது நடாத்திய தாக்குதல் அரச படையினர் கரந்தடித்தாக்குதல்களுக்கு எதிராகச் சரையகச் செயற்படவில்லை என்பதையே காட்டுகிறது. சிரிய அலவைற் இனக்குழுமத்திர்னரைப் பொறுத்தவரை அவர்கள் இப்போது கிளர்ச்சிக்காரர்களைக் கொல்ல வேண்டும் அல்லது அவர்கள் கொல்லப்படுவார்கள். இதனால் அரச படையினர் மூர்க்கத் தனமாகப் போர் புரிகின்றனர். சிர்யக் கிளர்ச்சிக் காரர்களுக்கு உதவிய் செய்யும் நாடுகள் அவர்களுக்கு புதிய ரக படைக்கலன்களை வழங்குவதில்லை. சிரியக் கிளர்ச்சியாளர்கள் இன்னும் ஒரு படைத்துறைக்குத் தேவையான போதிய கட்டமைப்புக்களைக் கொண்டிருக்கவில்லை. இப்போதும் காயமடையும் கிளர்ச்சிக்காரர்கள் சிகிச்சைக்காக துருக்கிக்கே செல்ல வேண்டிய நிலை இருக்கிறது, காயமடைந்தவர்களை 50மைல்கள் கடந்து கொண்டு செல்ல பல மணித்தியாலங்கள் எடுக்கின்றனர். இன்னும் சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்படாத சிரியக் கிளர்ச்சியாளர்கள் முழு நாட்டையும் தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நிலை மிக அண்மையில் இல்லை.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...