Tuesday, 14 August 2012

டெசோ: தீர்மானங்கள் பாவங்களைக் கழுவுமா?

மத்தியில் இத்தாலியாளும் மாநிலத்தில் கன்னடத்தியும் பல முட்டுக் கட்டைகள் போட்ட போதும் கல்லக்குடி கொண்ட முத்தமிழ்காவலர் , தெலுங்கு தேசத்தில் இருந்து வந்த செம்மல், கலைஞர் கருணாநிதி, அவரைப் பொறுத்தவரை, வெற்றீகரமான ஒரு டெசோ மாநாட்டை நடாத்திவிட்டார்.

 கலா நிதி விக்கிரமபாகு கருணாரட்ன
டெசோ மாநாட்டில் முக்கியமான அம்சம் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆதரவாளரும் சிறந்த சிங்கள இடதுசாரி அரசியல்வாதியும் சிங்களப் பேரினவாதிகளால் பிரபாகரனின் சித்தப்பா என விமர்சிக்கப்படுபவருமான நவசமாஜக் கட்சித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணரடன கலந்து கொண்டதே.  டெசோ மாநாட்டில் அவரது உரையை இடையில் நிறுத்திவிட்டார்கள். அவர் அங்கு கூறிய முக்கிய கருத்துக்கள்:
  • ஐக்கிய நாடுகள் சபையால் இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. அதனால் எந்தப் பலனும் ஏற்படாது. வெறும் விளம்பரம் மட்டுமே கிடைக்கும்
  • உலகெங்கும் உள்ள தமிழர்களைக் குறிப்பாக தமிழகத்தில் உள்ளவர்களைத் திரட்டி எழுச்சி ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.
  • இலங்கைப் பிரச்சினையில் மத்திய காங்கிரஸ் அரசின் நிலைப்பாடு தவறானதாகும். அதனால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேற வேண்டும்.
  • இலங்கை அரசியல் அமைப்பிற்கான 13 வது திருத்தச் சட்டத்தில் நம்பிக்கை இல்லை.
  • இறுதிப் போர் என்ற போர்வையில் ஒரு இனக்கொலை நடந்தது அதில் இந்திய அரசும் சம்பந்தப்பட்டிருந்தது.
 இவரின் பேச்சு இடை நிறுத்தப்பட்டது ஏன்? இலங்கை இனக்கொலையில் இந்தியாவின் திருகுதாளங்களை இவர் அம்பலப் படுத்தப் போகிறார் என்பதாலா? இலங்கை இனக்கொலையில் இந்தியாவிற்குப் பங்கிருக்கின்றது என்கிறார் கலாநிதி கருணாரட்ன. இந்தியாவின் உதவியுடனேயே போரில் வென்றோம் என அடிக்கடி கூறிகின்றனர் ராஜபக்சே சகோதரர்கள். இலங்கையில் நடந்த போரில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழகத்தில் கொண்டுவரப்பட்டபோது அதை மாற்றி இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாகக் மாற்றியது இந்தியா. இந்தியா ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைத்த அநியாயங்கள் யாவற்றிற்கும் இந்தியா ஆளும் கூட்டணியில் ஒரு கட்சி என்பதால் கருணாநிதிக்கும் பங்குண்டு. இவை நடக்கும் போது அவர் தனது கட்சியினரைன் மந்திரிப் பதவிகளைத் தூக்கி எறிந்து விட்டு மக்களுடன் இணைந்து போராடியிருந்திருக்க வேண்டும் அது செய்யவில்லை.

டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

- இலங்கை போர்க் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
- தமிழர் பகுதிகளில் இருந்து இலங்கை ராணுவத்தை வெளியேற்ற வேண்டும்
- இலங்கையில் நடைபெறும் அநீதிகளை இந்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? ஈழத் தமிழர் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே தீர்மானித்துக் கொள்ள வகை செய்யும் தீர்மானத்தை ஐ.நா. மன்றத்தில் இந்தியா கொண்டுவர வேண்டும்
- இலங்கையில் தமிழ் மொழி அடையாளங்கள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும்
- இன்றைய இலங்கையில் ராணுவத்தின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. ராணுவ முகாமாக காட்சியளிக்கிறது இன்றைய தமிழீழம் தமிழர் பகுதிகளில் வலிந்து குடியமர்த்தப்பட்டுள்ள சிங்களர்களை உடனே வெளியேற்ற வேண்டும்
- தமிழர் பகுதியில் இயல்பு நிலை திரும்ப இலங்கை அரசை ஐ.நா. அவை வலியுறுத்த வேண்டும்
- அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்று சிறைகளில் வாடும் தமிழர்களை விடுதலை செய்வதில் ஐ.நா. அகதிகள் சபை தலையிட வேண்டும்
- இந்தியாவில் உள்ள அனைத்து இலங்கை அகதிகளுக்கும் இந்திய குடியுரிமை அல்லது அவர்கள் இந்தியாவில் நிரந்தரமாக வாழ வழிவகை செய்ய வேண்டும்
- அகதிகள் தொடர்பான ஐ.நா. வின் ஒப்பந்தத்தை இந்தியாவும் பின்பற்ற வேண்டும்
- ஐ.நா. மூலம் தமிழ் மக்களிடத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் .ஈழத் தமிழர் பிரச்சனை தெற்காசிய பிரச்சனையாக அறிவிக்கப்பட வேண்டும்
- தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட வேண்டும்
- தமிழக மீனவர் படுகொலைக்கு முடிவுகட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும்
- தமிழகத்தின் மண்டபம் அல்லது தனுஷ்கோடியில் இந்திய கடற்படை முகாம் அமைக்க வேண்டும்
- தமிழர் பகுதிகளில் மறுவாழ்வு பணிகளை கண்காணிக்க பன்னாட்டுக் குழு ஆமைக்க வெண்டும்.
- இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இலங்கை படையினருக்கு பயிற்சி கொடுக்கக் கூடாது
- டெசோ மாநாட்டில் பங்கேற்போரை கண்காணிப்போம் என்ற இலங்கை அரசின் மிரட்டலுக்கு கண்டனம்
- டெசோ மாநாட்டுக்கு தடை விதித்து இடையூறு செய்த அதிமுக அரசுக்கு கண்டனம்.

இந்திய வெளியுறவுக் கொள்கையை மாற்ற முடியுமா?
இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாயின் இந்திய அரசின் வெற்யுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்படவேண்டும். இந்திய வெறியுறவுத் துறை தனது கொள்கை இந்திய தேசிய நலனை அடிப்படையானதாகவே இருக்கும். இந்தியாவின் ஒரு பிராந்தியத்தின் மக்களின் உணர்ச்சிகளை கருத்தில் கொண்டதாக இருக்க மாட்டாது என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுக்கச் செய்வதில் அங்குள்ள பார்ப்பன சக்திகள் வெற்றி கண்டுள்ளன. இந்த பார்ப்பன சக்திகளை முறியடித்து இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையை மாற்ற கருணாநிதியாலும் முடியாது ஏன் ஒட்டு மொத்தத் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளாலும் முடியாது. இலங்கையில் ஒரு தனிநாடு தமிழர்களுக்கு என்று அமைவதோ அல்லது ஒரு சுயாட்சியுடன் கூடிய அதிகார அலகு அமைவதோ இந்தியப் பாதுகாப்பிற்கு எந்த இடையூற்றையும் கொடுக்காது. பங்களாதேசப் போரின்போது இலங்கை பாக்கிஸ்தானுக்க்கு உதவுவது தொடர்ப்பாக இந்தியப் பாராளமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது இந்தியாவால் இலங்கையை ஒன்பது நிமிடங்களில் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றார் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஜெகஜீவன் ராம். மேலும் வளர்ச்சி அடைந்த இந்தியாவால் ஒரு தமிழ் ஈழ தேசம் தனக்கு பாதகமாகப் போகவிடாமல் தடுக்க முடியும். இருந்தும் தமிழர்களுக்கான தனிநாடு இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற பொய்ப்பிரச்சாரத்தை இந்தியா முழுவதும் பரப்பியுள்ளனர் பார்ப்பன சக்திகள். இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றச் செய்வதாயின் இலங்கைத் தமிழர்களுக்கு உதவாவிடில் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு இந்தியாவில் வாழும் தமிழர்களால் ஆபத்து ஏற்படும் என்பதை தமிழ்நாட்டில் வாழும் எல்லாத் தமிழர்களும் இந்திய மத்திய அரசிற்கு உணர்த்த வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நிலையை உருவாக்காமல் மாநாடு கூடுவதும் தீர்மானங்கள் போடுவதும் எந்தப் பயனையும் ஈழத் தமிழர்களுக்குத் தரப்போவதில்லை. மாநாடுகளும் தீர்மானங்களும் கழகக் கண்மணிகளை ஏமாற்ற மட்டுமே பயன்படும்.

தீராத பாவம் சுமக்கின்றோம்
இப்போது உலகம் எங்கும் வாழும் தமிழர்கள் ஒவ்வொருவரும்  தாம் வாழ்ந்த காலத்தில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்காத குற்றம் புரிந்துள்ளனர். மன்னன் டங்கனைக் கொன்ற மக்பெத்தின் கைகளில் உள்ள இரத்தத்தைக் கழுவும் படி மக்பெத்தின் மனைவி கூறிய போது பெருங்கடல் நீராலும் என் கையில் உள்ள கறையைப் போக்க முடியாது என்றான் மக்பெத். அது போல நாம் எத்தனை மாநாடு கூடினாலும் எத்தனை தீர்மானங்கள் போட்டாலும் நாம் ஈழத்தில் மூன்று இலட்சம மக்கள் கொல்லப்பட்ட போது கையாலாகதவர்களாக குற்றத்திற்கு மன்னிப்பு இல்லை.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...