Thursday, 14 June 2012

சரத் பொன்சேக்கா விகடனுக்குப் பேட்டியளித்தது ஏன்?

இலங்கையில் போர்க்குற்றங்களும் மானிடத்திற்கு எதிரான குற்றங்களும் இழைக்கப்பட்டமைக்கான நம்பகரமான ஆதாரங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழு அறிக்கை தெரிவித்திருந்தது. இந்தப் போர்குற்றங்களிலும் மானிடத்திற்கு எதிரான குற்றங்களிலும் பங்காளியான முன்னாள் இலங்கைப் படைத் தளபதி சரத் பொன்சேக்கா ஆனந்த விகடன் சஞ்சிகைக்கு  ஒரு போட்டியை வழங்கியுள்ளார். பொய் பேசுவதில் உலக்த்தில் முதலிடம் வகிக்கும் படையினர் இலங்கைப் படையினரே என்பதை நாம் நன்கறிவோம்.

விகடனின் நஞ்சுத்தனம்
விகடன் ஈழத் தமிழர்களுக்கு சார்பாக எழுதுவது போல் எழுதி அவர்களுக்கு எதிராக நஞ்சு கக்குவதில் மிகவும் சாதுரியமாகச் செயற்படும். சில ஆண்டுகளுக்கு முன்னர் விகடன் விடுதலைப் புலிகளைப் பற்றியும் ஈழத்தைப் பற்றியும் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தியது. அதன் முடிவுகள் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தின. முடிவுகள் புலிகளுக்கும் ஈழத்திற்கும் பலத்த ஆதரவு இருப்பதை எடுத்துக் காட்டியது. அதன் பிறகு விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை ஒரு நடுநிலையாளனாகவும் ஈழத்திற்கு ஆதரவாளன் போலவும் தன்னைக் காட்டிக் கொள்ளும்படி தொடர்ந்து பல கட்டுரைகளை ஆனந்தவிகடனிலும் ஜுனியர் விகடனிலும் மட்டுமல்ல அவள் விகடனிலும் வெளிவிட்டது. இவற்றில் விடுதலிப் புலிகள் மிகப் பலமுள்ளவர்களாகப் பொய்யாகப் பல தகவல்கள் வெளியிடப் பட்டது. கட்டுரை ஏதோ ஈழ ஆதரவாகத்தான் இருக்கும். வியாபாரம்!!!ஆனால் விகடனின் “அரசவை” பின்னுட்டக் காரர்களான பாலா, தமிழ் யூகே, வெங்கி, ஹரிஹரன், பார்த்த சாரதி ஆகியோர் மூலமாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக பற்பல நஞ்சுகள் கக்கப்படும். பின்னூட்டத்தில் ராஜபக்சே தமிழ் நன்கு படித்தவர் என்று கூடப் பொய் சொல்லப் பட்டது. இவர்கள் புலிகளுக்கு எதிராக எந்த விதமான பொய்க் கருத்துக்கள் கூறப்பட்டாலும் அவை பிரசுரிக்கப் படும். இவர்கள் விகடன் பணிமனைக்குள் இருப்பவர்களால் எழுதப் பட்டிருக்கலாம். நானும் எனது நண்பர்களும் இதற்கு எதிராக தெரிவித்த பல கருத்துக்கள் அங்கு பிரசுரிக்கப் படவில்லை. நாம் விகடனைப் பரிசோதிப்பதற்காக சில பார்ப்பனியர்களை தாக்கி பின்னூட்டம் எழுதுவோம். அவை பிரசுரிக்கப் படுவதில்லை. விகடனின் நிலைப்பாடு நஞ்சுத்தனமான நடுநிலை. விகடன் புலிகள் மிகப்பலமாக இருப்பது போல் செய்திகளை வெளியிட்டமை அவர்களுக்கு தமிழ்நாட்டில் ஆதரவு அதிகரிக்காமல் இருப்பதற்கே. விகடன் இந்திய உளவுத் துறையுடன் இணைந்து செயற்படுகிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

 விகடனுக்கும் இலங்கை அரசிற்கும் தொடர்பு உண்டா?
விகடனின் ஒரு உதவி ஆசிரியர் இலங்கையிடம் இலஞ்சம் வாங்கிச் செயற்பட்டதாக2009 அக்டோபர் மாதம் செய்திகள் வந்தன. 2009இல் "முடிந்தது புலி வேட்டை தொடங்கியது தங்க வேட்டை" என்ற கட்டுரை ஜூனியர் விகடனில் வந்தது. இலங்கையிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ இருந்து வெளிவரும் எந்த ஒரு பத்திரிகையிலும் வெளிவராத தகவல்கள் அந்தக் கட்டுரையில் இருந்தன:
 • கிட்டத்தட்ட 6,000 கிலோவுக்கும் அதிகமான தங்கத்தை சிங்களர் வசிக்கும் பகுதிகள் உட்பட பல இடங்களில் பரவலாக அவர்கள் மறைத்து வைத்ததாக இப்போது சிங்கள ராணுவம் கருதுகிறது.
 • இலங்கை முழுவ திலும் சுமார் 40 இடங்களில் ஆயுதப் புதையலும், 23 இடங் களில் தங்கப் புதையலையும் புலிகள் ஒளித்து வைத்திருப்பதாக போர் முடிந்ததுமே இலங்கை ராணுவ வட்டாரங்களுக்கு ரகசியத் தகவல் வந்து சேர்ந்தது.
 • இரு வாரங்களுக்கு முன்பு முல்லைத்தீவில் ஒரு பெரும் புதையலை கைப்பற்றியிருக் கிறார்கள். அடுத்த கட்டமாக மட்டக்களப்பு வாகரை பகுதி யிலும், இலுப்படிச்சேனை என்ற இடத்திலும் புதையலை எடுத்திருக்கிறார்கள். இதே மாதிரி கிழக்குப் பகுதியில் வெள்ளான்தோட்டத்திலும், கல்லடியிலும் புதையலைக் கைப்பற்றியிருக்கிறார்கள்.
 • கொட்டயனாவில் இருக்கும் பொன்னம்பல வனேஸ்வரம் கோயிலின் பூசாரியான ரவி குருக்களிடமும் அப்படித்தான் விசாரணை கொண்டுபோன மேப்பை விரித்து, அதில் குறிப்பிட்ட ஓர் இடத்தை அடையாளம் கண்டு தோண்டச் சொல்லியிருக்கிறார்கள். ஐந்து அடிகள் தோண்டியவுடன், ஒரு பாதாள அறை இருந்திருக்கிறது. அதை திறந்து பார்த்த ராணுவத்துக்கு பெரிய அதிர்ச்சி. ஒரு பெரிய பட்டாலியன் ராணுவத்துக்குத் தேவை யான அளவுக்கு பெரும் ஆயுதக்குவியலே அங்கே இருந்திருக்கிறது. அதனுடன், 1,000 கிலோ தங்கம் இருந்திருக்கிறது. அதற்கடியில் மிக மிக முக்கியமான ஆவணங்களும், டைரிகளும் கிடைத்திருக்கிறதாம்.
 • ராணுவத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவு டைரியில் குறிப்பிட்டிருந்த ஒரு வீட்டை முற்றுகையிட்டிருக்கிறது. அங்கு ஒளிந்திருந்த புலிகளின் கெரில்லா படைப்பிரிவு தலைவர் ராதாவை கடந்த 25-ம் தேதி கைது செய்திருக்கிறார்கள். மேலும் இருவரையும் கைது செய்திருக்கும் ராணுவம், அவர்களை பற்றிய தகவல்களை வெளியே கசிய விடவில்லை.
 • தாய்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு இரண்டு சரக்கு கப்பல் நிறுவனங்களும், இங்கிலாந்தில் 176 பெட்ரோல் பங்குகளும், கனடாவில் 193 பெட்ரோல் பங்குகளும் புலிகளுக்கு இருப்பதாக இப்போதைக்கு உறுதிப்பட்டிருக்கிறது
இவை எல்லாம் இலங்கையைப் பொறுத்தவரை மிகமிக இரகசியமான தகவல்கள். வேறு எங்கும் கிடைக்காத தகவல்கள். இவை எப்படி விகடனுக்குக் கிடைத்தன? இலங்கை அரசிற்கும் விகடனுக்கும் என்ன தொடர்பு?

இப்போது சரத் பொன்சேக்காவை நல்லவராக்கும் முயற்ச்சியில் விகடன் இறங்கியுள்ளது. அவனின் பொய்ப் பிரச்சாரத்திற்கு விகடன் மேடை அமைத்துக் கொடுத்துள்ளது.

சரத் பொன்சேக்கா ஆனந்த விகடனில் அவிழ்த்து விட்ட பொய்கள்:

 1. என்னைப் பொறுத்த அளவில், இந்தப் போர் பயங்கரவாதத்தில் இருந்து மக்களை விடுவிக்க நாங்கள் நடத்திய போர்.
 2. ''இல்லை. போருக்குப் பின் பல்வேறு தரப்பினரும் என்னைச் சந்தித்தபோது, ஊழலும் அடக்குமுறையும் கொண்ட ராஜபக்ஷே குடும்பத்தின் காட்டாட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற விஷயத்தைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்கள். ஆனாலும், நான் அமைதியாகத்தான் இருந்தேன். ஒரு கட்டத்தில் ராஜபக்ஷேவே என்னை அரசியலை நோக்கித் தள்ளினார்.'
 3. புலிகள் நவீனப் போர் உத்திகள், தொழில்நுட்பங்களில் மிகவும் பின்தங்கி இருந்தார்கள்.
 4. ''இந்தப் போரைத் தொடங்கியபோதே என் வீரர்களுக்கு நான் பிறப்பித்த முக்கியமான உத்தரவு, பொதுமக்கள் உயிர் முக்கியம். கடைசி வரை அந்த உத்தரவை என் வீரர்கள் காப்பாற்றினார்கள்.
 5. ''ஒரே உண்மைதான். பிரபாகரன் இப்போது உயிரோடு இல்லை. போரில் அவர் இறந்துவிட்டர்". 
 6. இது (சரணடைவது) தொடர்பான பேச்சுவார்த்தைகள் எதிலும் ராணுவம் புலிகளுடன் ஈடுபடவில்லை."
விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவினர் சரணடைவது தொடர்பாகப் பேச்சு வார்த்தை நடாத்தியமையை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலரின் ஆலொச்கரும் தமிழர்கள் தங்களுக்கு எதிராகச் செயற்பட்டவராகக் கருதியவருமான விஜய் நம்பியார் ஒப்புக் கொண்டுள்ளார். இதில் ஈடுபட்ட ஒரு பிரித்தானிய பத்திரிகையாளர் மேரி கொல்வினும் சரணடையப் பேச்சு வார்த்தை நடந்ததாகக் கூறி இருந்தார். சரத் பொன்சேக்கா தந்திரமாக வார்த்தைகளைக் கையாண்டார். ராணுவம் புலிகளுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவில்லை என்று சொல்லித் தப்பிக்கப் பார்க்கிறார். பேச்சு வார்த்தை புலிகளின் அரசியல் பிரிவு, விஜய் நம்பியார், ப. சிதம்பரம், இலங்கைப் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரிடை நடைபெற்றது. இதை ஏற்பாடு செய்தவர் மேரி கொல்வின்.

தமிழர்கள் உடலில் எரிபொருள் தாயாரிப்பு
போரின் இறுதியில் குண்டு மழையில் காயப்பட்டுத் துடித்துக் கொண்டிருந்த மக்களை உயிருடன் புதையுங்கள் எங்களுக்கு அவர்கள் உடல்களின் இருந்து வருங்காலத்தில் எரிபொருள் கிடைக்கும் என்று உத்தரவிட்டது யார்?

சரத் பொன்சேக்கா முன்னிலைப் படுத்தப்படுவது ஏன்?
 அமெரிக்கா தனது சீன ஆதிக்கத்தை இலங்கையில் அகறும் செயற்திட்டத்தில் இந்தியாவை வலிந்து இழுத்துச் சேர்த்துக் கொண்டுள்ளது. அமெரிக்க நிகழ்ச்சி நிரலில் சரத் பொன்சேக்காவிற்கு முக்கிய இடமுண்டு. அமெரிக்காவும் இந்தியாவும் ரனில் விக்கிரமசிங்க, இரா சம்பந்தர், சரத் பொன்சேக்கா ஆகியோரைக் கொண்ட கூட்டணியால் ராஜபக்ச குடும்பத்தைப் பதவியில் இருந்து விரட்டி அதன் மூலம் சீன ஆதிக்கத்தை இலங்கையில் இருந்து அகற்ற முயல்கின்றன.  இக்கூட்டணி தேர்தலில் தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்கு சரத் பொன்சேக்கா மேல் தமிழர்களுக்கு இருக்கும் வெறுப்பு அகற்றப் பட வேண்டும். இதற்காக இனிவரும் காலங்களில் அமெரிக்க இந்திய உளவுத் துறைகள் சரத் பொன்சேக்கா தமிழர்களின் எதிரி அல்லர் என்ற மாயையை உருவாக்கும் பல முயற்ச்சிகளில் ஈடுபடும். இதன் முதற்கட்டமாக சரத் பொன்சேக்கா ஆனந்த விகடனுக்குப் பேட்டியளித்துள்ளார். ஆனாலும் சரத் பொன்சேக்கா தனது சிங்கள-பௌத்தத் தீவிரவாதிகளின் வெறுப்பைச் சம்பாதிக்காமல் மிகக் கவனமாகப் பேட்டியளித்துள்ளார். பேட்டியின் இறுதியில்:

கேள்வி: 'ஒருவேளை அதிபர் தேர்தலில் வென்றால், தமிழர்கள் பிரச்னைக்கு என்ன தீர்வை முன்வைப்பீர்கள்?''
பதில்: 'ஓட்டுக்காகப் பொய் பேசும் அரசியல்வாதி இல்லை நான். இந்தப் பிரச்னைக்கான தீர்வு காகிதங்களிலோ, வார்த்தைகளிலோ இல்லை. மனித மனங்களில் இருக்கிறது. அதை நான் சொல்ல விரும்பவில்லை. செய்துகாட்டுவேன்.''

இந்தப் பேட்டி பல நிபுணர்களின் ஆலோசனையுடன் மிகக் கவனமாகத் திட்டமிட்டு வழங்கப்பட்ட ஒன்று என்பது அரசியல் அனுபவமில்லாத சரத் மிகக் கவனமாக வார்த்தைகளைக் கையாண்டதில் இருந்து தெளிவாகிறது, இனி இலங்கை அரசியலில் சரத் முக்கிய பாத்திரமாக்கப்படுவார்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...