Saturday, 9 June 2012

இலங்கைக்கு படைப் பயிற்ச்சி அளிப்பதன் மர்மம்.அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் லியொன் பனெட்டா மற்றும் இந்தியா, இந்தோனேசியா, அவுஸ்ரேலியா, கம்போடியா, ஜப்பான், மியான்மர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, திமோர், சீனா, மொங்கோலியா, கொரியா, ஜேர்மனி, பிரித்தானியா, மலேசியா, கனடா, நியூசிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொண்ட சிங்கப்பூரில் நடந்த சங்கிரிலா கலந்துரையாடல் எனப்படும் 11ஆவது ஆசிய பாதுகாப்பு மாநாடு இந்த மாத ஆரம்பத்தில் நடந்தது. அங்கு திரைக்குப் பின்னால் அமெரிக்க படை உயர் அதிகாரி மார்ட்டின் டிம்(ப்)சேயும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவும் இலங்கை படையினருக்கு பயிற்ச்சி வழங்கும் தங்களது விருப்பத்தை இலங்கைப் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜ்பக்சவிடம் தெரிவித்தனர்.


இலங்கையின் சில்லறைக் கைக்கூலியாக இந்தியா

இனக்கொலை புரிந்த இலங்கைப் படையினருக்கு அமெரிக்காவும் இந்தியாவும் படைப்பயிற்ச்சி வழங்குவதா என்ற ஆத்திரம் பல தமிழ் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது. இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும் ஆட்சியாளர்களும் இந்தியாவின் பிராந்திய நலன்களைக் கோட்டை விட்டுவிட்டு தங்கள் சாதிய நலன்களையும் இந்தியப் பெரு முதலாளிகளின் குறுங்கால நலன்களையும் கருத்தில் கொண்டு கடந்த சில ஆண்டுகளாகச் செயற்பட்டு வருகின்றனர். இது சீனா இலங்கையில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்கப் ஏதுவாக அமைந்துள்ளது. இதனால் இலங்கையின் சில்லறைக் கைக்கூலி  போல் செயற்படும் இந்தியாவை அமெரிக்கா இலங்கைக்கு எதிராகச் செயற்படப் பெரும் முயற்ச்சி செய்து வருகிறது. இதில் அமெரிக்கா பெற்ற முதற் சிறு வெற்றி இந்தியாவை இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைக்கழகத் தீர்மானத்திற்கு வாக்களிக்கச் செய்தமை. அதற்காக அமெரிக்கா இந்தியாவின் நிர்பந்தந்தால் தீர்மானத்தில் இலங்கைக்கு சாதகமாகப் பல மாற்றங்களைச் செய்தது.


இலங்கையில் சீனாவின் முதலீடு பெரிது
இலங்கையில் தனது ஆதிக்கத்தை சீனா ஒரு நீண்டகாலமாகத் திட்டமிட்டு அதிகரித்து வருகிறது. இலங்கைக்கு உதவி செய்யும் நாடுகளில் சீனா முதலிடம் வகிக்கிறது. இலங்கைக்கு எந்தவொரு அவசர நிலையிலும் இராணுவ உதவிகளை வழங்க தயாராக உள்ளதாக சீனா ஜூன் 7-ம் திகதி உறுதியளித்தது. இலங்கைப் படைத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய  சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லீயைச் சந்தித்துப் பேசியபோதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டது.பெய்ஜிங்கில் உள்ள மக்கள் விடுதலைப் படையின் தலைமையகத்தில் ஜூன் 6-ம் திகதி இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. சீன படைத்துறையின் அழைப்பின் பேரில் இலங்கைப்படைத் தளபதி ஆறு நாள் பயணத்தை மேற்கொண்டிருந்தார். பேரழிவு அல்லது ஏனைய எந்த அவசரநிலையிலும் சீன இராணுவத்தின் உதவியை இலங்கை கோரலாம் என்றும் எந்தநேரத்திலும் இலங்கைக்கு உதவ தமது இராணுவம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது கோத்தபாய ராஜ்பக்சவிடம் இந்தியாவும் அமெரிக்காவும் வைத்த முன் மொழிவிற்கான பதிலடியாகும். அத்துடன் இலங்கையில் இயற்கை அனர்த்தம் அல்லது அரசியல் கிளர்ச்சி என்பன நடக்கும் போது இலங்கை அதற்கான உடன் உதவிகளை இந்தியாவிடம் இருந்தே இதுவரை பெற்று வந்தது. இலங்கையின் இந்த இந்தியாவில் தங்கியிருக்கும் நிலையை இல்லாமல் செய்யும் நோக்கத்துடனேயே சீனா இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளது.உறுதி செய்யப்பட்ட வல்லரசுப் போட்டி
இலங்கைக்கு படைப் பயிற்சி வழங்க அமெரிக்காவும் இந்தியாவும் தயாராவதும் இலங்கைக்கு எந்நேரமும் படை உதவி செய்ய சீனா தாயாரென உறுதியளித்ததும் இலங்கையில் வல்லரசுப் போட்டி முனைப்படைந்துள்ளமையை உறுதி செய்கின்றன. இது இனி வரும் காலங்களில் இலங்கையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.


ராஜபக்சேக்களை பதவியில் இருந்து அகற்றுதல்

இலங்கை தொடர்பாக அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் முக்கியமானது மஹிந்த ராஜ்பக்சவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே. இப்போது உள்ள சூழ் நிலையில் இது இலகுவானது அல்ல. ராஜபக்சேக்களை ஒரு தேர்தல் மூலம் பதவியில் இருந்து விலக்குவது இப்போது சாதியமற்றது. ராஜபக்சேக்களை ஒரு மக்கள் எழுச்சியின் மூலம் பதவியில் இருந்து அகற்றுவத்தும் இப்போது சாத்தியமில்லை. ராஜபக்சேக்களுக்கு எதிரானவர்களிடையே ஒற்றுமை இல்லை. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் பதவிப் போட்டி நிலவுகிறது. ஒரு படைத்துறை(இராணுவ)ப் புரட்சி மூலம் ராஜபக்சேக்களைப் பதவியில் இருந்து விலக்குவதும் இப்போது சாத்தியமில்லை. சரத் பொன்சேக்காவிற்கு ஆதரவான உயர்நிலை மற்றும் இடைநிலைப் படை அதிகாரிகள் ஏற்கனவே படையில் இருந்து விலக்கப்பட்டுவிட்டனர். மற்றவர்கள் தீவிர கண்காணிப்பில் இருக்கின்றானர். சரத் பொன்சேக்கா சிறையில் இருந்து விடுதலையானதும் பட்டாசு கொழுத்திய படை முகாம்களுக்கு இரகசியக் காவல்துறையினர் சென்று தீவிர விசாரணை நடாத்தினர். விலைவாசி உயர்வினால் ராஜபக்சேக்களின் செல்வாக்கு குறைந்து செல்வதால் தமக்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கு முற்றாகக் குறையும் முன்னர் அதிபர் தேர்தலை நடாத்தி தனது பதவிக்காலத்தை அதிகரிக்கும் எண்ணமும் ராஜபக்சேக்களிடம் உண்டு. 2013இல் இலங்கைக் குடியரசு அதிபர் தேர்தலை ராஜபக்சேக்கள் நடாத்தலாம். ராஜபக்சேக்களைப் பதவியில் இருந்து விலக்க மக்கள் கிளர்ச்சியும் அதற்கு ஆதரவாக படையினர் மத்தியில் ஒரு கிளர்ச்சியும் ஏற்படுத்தியே ராஜபக்சேக்களைப் பதவியில் இருந்து விலக்க முடியும். மனித உரிமை மீறலுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கவும் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் ஏற்படுத்தவும் ராஜபக்சேக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையிலும் அதன் உப அமைப்புக்களிலும் அழுத்தம் கொடுத்தால் அதில் இருந்து தப்ப ராஜ்பக்சேக்கள் எடுக்கும் தமிழர்களுக்கு சாதகமான நடவடிக்கைகள் அவர்களையும் அவர்களுக்கு தோள் கொடுத்துக் கொண்டிருக்கும் சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தைத் தம் கொள்கைகளாகக் கொண்ட விமல் வீரவன்ச குழுவினரையும் ஜாதிக ஹெல உருமயக் கட்சியினரையும் பிரித்து வைக்கும் என்பது அமெரிக்காவின் நம்பிக்கை. அதுமட்டுமல்ல இவ்விரு குழுக்களும் தமது அரசியில் நிலைப்பாட்டை உறுதிப்படுத்த ராஜபக்சவிற்கு எதிராகவும் திரும்பலாம். அமெரிக்காவும் இந்தியாவும் இலங்கைப் படையினருக்கு பயிற்ச்சி அளிப்பது என்ற போர்வையில் ஒரு தொகை படையினரை தமது நாட்டுக்கு அழைத்து அவர்களை மூளைச் சலவை செய்து ராஜபக்சவிற்கு எதிரான கிளர்ச்சியில் அவர்களது படையினரிடை sleeper cell ஆக இவர்கள் செயற்படுவார்கள். sleeper cell என்பது ஒரு குழுவினரிடை அவர்களுக்கு எதிரான குழுவினரின் ஆட்கள் உள் நுழைந்து அவர்களிடை ஒருவர் போல் தக்க தருணம் வரை காத்திருந்து தருணம் வந்ததும் தமது குழுவினருடன் இணைந்து செயற்படுவார்கள் அல்லது தாக்குதல் நடாத்துவர். மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியில் இப்படிப் பட்ட sleeper cell நிறையப் பேர் பாவிக்கப்பட்டனர்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...