Tuesday, 3 April 2012

சீனாவிற்கு அமெரிக்கா போடும் முத்து மாலை

சீனா இந்தியாவைச் சுற்றி ஒரு முத்துமாலையைப் போட்டுள்ளது சகலரும் அறிந்தது. மியன்மாரில்(பர்மா) சிட்வே என்னும் இடத்திலும் பங்களாதேசத்தில் சிட்டகொங்கிலும் பாக்கிஸ்த்தானில் குவாடாரிலும் இலங்கையில் அம்பாந்தோட்டையிலும் ஏற்கனவே சீனா துறை முகங்களை அமைத்துவிட்டது. இத் துறை முகங்கள் வர்த்தக் நோக்கங்களுக்கானவை என்று சொல்லப்பட்ட போதிலும் இவை என்னேரமும் கடற்படைத் தளமாக மாற்றப் படக் கூடியவை. இவற்றுடன் நிற்கவில்லை சிசில்ஸில்(Seychelles) மேலும் துறைமுகங்களைச் சீனா அமைக்க விருக்கிறது. மேலும் மாலை தீவில் இருந்த இந்தியா சார்பு ஆட்சியாளரை சீன சார்பினர் விரட்டி விட்டனர். இனி மாலை தீவிலும் சீனா தளம் அமைக்கலாம்.

சிசில்ஸில்(Seychelles) சீன நீர்மூழ்கிக் கப்பல்கள்

பிராந்திய வல்லரசு எனப்படும் இந்தியா இவற்றை வெறும் பார்வையாளராக இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறதது. இன்னும் சொல்லப் போனால் இலங்கையிலும் மியன்மாரிலும்  சீனாவுடன் இந்தியா இணைந்து செயற்பட்டது. இலங்கையில் தமிழர்கள் ஆளக்கூடாது என்ற உறுதியுடன் செயற்படும் புது டில்லிப் பார்ப்பனர்கள் இந்தியாவின் பிராந்திய நலனை தமது சாதிய நலன்களுக்காகப் பலியிட்டனர். ஆனால் மியன்மாரில் ஏன் இப்படி ஒரு விட்டுக் கொடுப்பை இந்தியா செய்தது என்பது கேள்விக் குறியே. புது டில்லிக் கொள்கை வகுப்பாளர்கள் சீனாவிடம் இருந்து தட்சணை பெறுகிறார்களா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.


இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு அது தனது பிராந்திய நலன்களைப் பார்த்துக் கொள்ளும் என்று இருந்தால் சரிவராது என்று உணர்ந்த அமெரிக்கா  2010இல் இருந்து நேரடியாக ஆசியப் பிராந்தியத்தில் களமிறங்கியது. ஹிலரி கிளிண்டன் அமெரிக்க அரசச் செயலராகப் பதவி ஏற்ற பின்னர் அதிக பயணங்களை அவர் சீனாவைச் சுற்றியுள்ள நாடுகளுக்கு மேற் கொண்டார். அமெரிக்காவின் எதிர்காலப் படை வலிமைஆசிய பசுபிக் நாடுகளை மையம் கொண்டதாக அமையும். இத்தனை பொருளாதாரச் சிக்கல்களுக்கு மத்தியிலும் அமெரிக்காவின் பாதுகாப்புச் செலவீனம் மொத்த ஆசிய நாடுகளின் பாதுகாப்புச் செலவீனங்களிலும் இருபது மடங்கு அதிகமானது..
ஹிலரி கிளிண்டனின் பயணங்கள்

 களம் - 1 ஒஸ்ரேலியா
இந்தியாவிற்கு சீனா போட்ட முத்து மாலைத் திட்டம் என்னும் சுருக்குக் கயிற்றிற்கு பதில் நடவடிக்கையின் முதல் கட்டமாக ஒஸ்ரேலியாவில் அமெரிக்கா தனது படைத் தளங்களை அமைக்கவிருக்கிறது. அமெரிக்கா தனது எதிர்காலப் போர்களங்களில் ஆளில்லாப் போர் விமானங்களை பாவிக்க இருக்கிறது. அதன்படி ஒஸ்ரேலியாவில் Global Hawk surveillance drones என்னும் ஆளில்லா விமானங்கள் பல நிலை கொள்ளவிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஒஸ்ரேலியத் தீவுகளான கொக்கோஸ் மற்றுக் கீலிங்கில் Cocos and Keeling Islands அமையவிருக்கின்றன. இவை தென் சீனக் கடலை கண்காணிக்கும் நோக்கம் கொண்டவை. சீனா தென் சீனக் கடல் முழுவது தன்னுடையது என்கின்றது. வியட்னாம், பிலிப்பைன்ஸ் தாய்லாந்து போன்ற நாடுகள் அதை எதிர்க்கின்றன. அத்துடன் பல நவீன போர் விமானங்களும் ஒஸ்ரேலியாவில் நிலை கொள்ளவிருக்கின்றன. இவை ஆளணித் தேவையை குறைக்கு நோக்கம் கொண்டவையாக இருந்த போதும் 2500 அமெரிக்கக் கடற்படையினரும் ஒஸ்ரேலியாவில் நிலை கொள்ளவிருக்கின்றனர். இத்துடன் நிற்கவில்லை அமெரிக்கா மேற்குப் பசிபிக்கில் மூன்று இடங்களில் தனது Marine Air-Ground Task Force (MAGTF) படையினரை நிலை கொள்ளவைக்கவிருக்கிறது.


களம் - 2 மியன்மார்(பர்மா)
1962இல் இருந்து இதுவரை காலமும் சீனாவின் பிடியில் சர்வாதிகார் ஆட்சியில் இருந்த மியன்மார் இப்போது மக்களட்சியை நோக்கி நகரவிருக்கிறது. அமெரிக்க ஆதரவாளரான ஆங் சான் சூ கீ இனது மக்களாட்சிக்கான தேசிய முன்னணிக் கட்சி இடைத் தேர்தலில் போட்டியிட்டு பெரு வெற்றியீட்டியுள்ளது. இது சிறு நகர்வாக இருந்த போதும் அமெரிக்கா திட்டமிட்டு அரங்கேற்றும் நாடகத்தின் ஒரு பகுதி இது. 2010 நவம்பரில் இருந்து அமெரிக்கா மியன்மாரில் காய்களை வேகமாக நகர்த்தி வருகிறது. மியன்மாரில் சீனாவின் ஆதிக்கம் குறைக்கப்பட்டு அமெரிக்க ஆதிக்கம் வலுவடையும் என்று எதிர்பார்க்கலாம். ஜப்பானும் பல ஐரோப்பிய நாடுகளும் பல நிதி உதவிகளையும் கடன்களையும் மியன்மார் அரசுக்கு வழங்கத் தொடங்கிவிட்டன. இதுவரைகாலமும் மியன்மாரின் பொருளாதார வளரிச்சியில் சீனா அதிக அக்கறை காட்டாமல் இருந்தது பல மியன்மாரியரை ஆத்திரத்திற்கும் உள்ளாக்கியிருந்தது. மியன்மார் ஒரு சீன அமெரிக்க ஆதிக்கப் போட்டிக் களமாக இப்போது உருவாகியுள்ளது.


களம் - 3 இலங்கை
இலங்கையில் போர் முடிவடைந்த பின்னர் அமெரிக்கா அங்கு காலூன்றப் பல வழிகளில் முயன்றது. அமெரிக்கா பல தூண்டில்களை இலங்கைக்குப் போட்டது. இது தொடர்பான பதிவை வாசிக்க இங்கு சொடுக்கவும்:
இலங்கைக்கு அமெரிக்க போடும் தூண்டில்கள்
இலங்கையுடனான அரசியல், படைத்துறை மற்றும் வர்த்தக ரீதியிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதன் ஊடாகவே இலங்கையில் சீனாவின் தலையீட்டைக் குறைக்க அமெரிக்கா திட்டமிருந்தது.புவியியல் ரீதியாக இலங்கையில் அமைவிடம் மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், இலங்கை மீதான கவனத்தை அமெரிக்கா இழக்கவில்லை. ஆனால் இலங்கை அமெரிக்காவைத் தவிர்த்தது. இதனால் அமெரிக்கா இலங்கைப் போர்க்குற்றத்தைக் கையில் எடுத்தது. விளைவு ஜெனீவாத் தீர்மானம். இலங்கையில் சீன ஆதிக்கத்தை அகற்றி இலங்கையை தன் வழிக்கு கொண்டுவர  அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தின் கடுமையான வாசகங்களை இந்தியா கடும் எதிர்ப்புக் காட்டி மாற்றியது. இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் இந்தியாவின் பிராந்திய நலனிலும் பார்க்க சிங்களவர்களுடனான உறவிற்கே அதிக மதிப்புக் கொடுக்கின்றனர். தமிழர்கள் அதிகாரம் பெறாமல் இருப்பதை உறுதி செய்வதே அவர்களின் ஒரே நோக்கம். ஆனால் அமெரிக்கா இன்னும் சில ஆண்டுகளில் மஹிந்த ராஜபக்சவைப் பதவிய்ல் இருந்து விரட்டி விடும். இதன் விபரங்களைக் காண இங்கு சொடுக்கவும்: மஹிந்தவின் எதிர் காலம்.
மஹிந்த ராஜபக்சவிற்குப் பின்னர் இலங்கையில் அமெரிக்கப் படைத்தளம் அமையலாம்.
களம் - 4 பாக்கிஸ்த்தான்
அமெரிக்காவிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையிலான உறவு பின் லாடன் கொலையையும் பாக்கிஸ்த்தான் பிரதேசங்களில் அமெரிக்க ஆளில்லா விமானங்களின் பல தாக்குதல்களையும் தொடர்ந்து சிக்கலடையத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து அமெரிக்க மூதவையில் தனிநாடு கோரிப் போராடும் பாலுச்சிஸ்தான மாகாணத்தின் சுயநிர்ணய உரிமை பற்றி உரையாடப்பட்டது. பாக்கிஸ்த்தான் அமெரிக்காவின் எதிரியாக மாறினால் பாலுச்சிஸ்தானை அமெரிக்கா போர்க்களமாக்கும். பாக்கிஸ்த்தானில் ஒரு சீனாவுடனான ஒரு படைத்துறைச் சமநிலையை அமெரிக்கா ஏற்படுத்தும்.

களம் - 5 தென் கொரிய ஜெஜு தீவு
தென் கொரியாவின் ஜெஜு தீவில் இருக்கும் அமெரிக்கப் படைத் தளம் சீனாவீற்கு மிக அண்மையாகவும் பல சீன நகரங்களைத் தாக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. இவை சீனாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. தென் கொரியாவும் தனது பாதுகாப்புச் செலவீனங்களை 24%த்தால் அதிகரித்துள்ளது. தென்கொரியப் படைகளும் சீனாவிற்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து செயற்படும்.

களம் - 6 ஜப்பான்
உலகின் அதி நவீன நீர்மூழ்கிக் கப்பற் படையை ஜப்பான் உருவாக்கியுள்ளது. ஜப்பானின் கடற்படைப் பலத்தை ஒரு ஊடகம் இப்படி விபரித்தது:
Japan’s Maritime Self-Defense Force (MSDF) deploys perhaps the most modern and capable diesel-electric submarine force in the world. The MSDF has 44,000 military personnel, 18 submarines, 9 frigates boats, and the second largest number of Aegis-equipped destroyers in the world, after the United States. சீனாவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது ஜப்பானின் வர்த்தகத்திற்கு முக்கியமான ஒன்று. இந்து சமூத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்தால் ஜப்பானின் வர்த்தகம் பெரிதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்.

இவ்வளவு காலமும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து உலகக் காவற்துறையாகத் தன்னைத் தானே நியமித்துக் கொண்ட அமெரிக்கா இனி ஆசிய நாடுகளுடன் இணைந்து அந்த "சேவையைத்" தொடரவிருக்கிறது.

1 comment:

ஆனந்த் said...

நல்ல அலசல்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...