Thursday, 23 February 2012

ராஜபக்சேக்களைச் சூழும் இருள் மேகங்கள்.

உலகின் மிக மோசமான பயங்கரவாத(?) இயக்கத்தைத் தோற்கடித்தவர்கள் என்ற பெருமையுடன் தலை நிமிர்ந்து நின்ற ராஜபக்ச சகோதரர்கள் இப்போது பன்முகப் பிரச்சனையை எதிர் கொள்கிறார்கள். இலங்கை இனப் பிரச்சனையை அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தல்வரை இழுத்தடிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கு இப்போது இனப்பிரச்சனை பெரும் தலையிடியாக இருக்கிறது.

ராஜபக்ச சகோதரர்கள் எதிர்க் கட்சிகளைச் சிதறடித்தனர். அவர்களில் பலரைத் தம்பக்கம் இழுத்தனர். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பலர் ராஜபக்சவின் சிறிலாங்கா சுதந்திரக் கட்சிக்குத் தாவினர். எஞ்சியவர்களிடை பதவிப் போட்டியை உருவாக்கினார் ராஜபக்ச. இனவாத இடதுசாரிகளான ஜனதா விமுக்தி பெரமுனையையும் பிளவு படுத்தினார் ராஜபக்ச. இந்தியாவைத் தன் சொற்படி ஆடவைத்தார் ராஜபக்ச. தன் பிரதான எதிரியான முன்னாள் படைத் தளபதி சரத் பொன்சேக்காவைச் சிறையில் அடைத்தார். தனக்குப் பெரும் சவாலாக விளங்கிய புலம் பெயர்ந்த தமிழர்களிடை பெரும் பிளவை ஏற்படுத்தினார். புலம் பெயர்ந்த தமிழர்களின் பல ஊடகங்களை தனது எண்ணப்படி ஆட்டிப் படைகிறார் தனது கைக்கூலிகள் மூலம்.

எரியும் எரிபொருள்விலையும் சரியும் பொருளாதாரமும்
சென்ற மாதம் வரை இப்படி இருந்த ராஜபக்சவிற்கு திடீரென்று நிலைமைகள் அவருக்கு எதிராக மாறி வருகின்றன. அரச நிதி நெருக்கடியைச் சமாளிக்க பன்னாட்டு நாணய நிதியத்திடம் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம். ஏற்கனவே தனது பன்னாட்டு நாணயத்திடம் பெறவேண்டிய அதிக பட்சக் கடனை வாங்கிய இலங்கை அரசு மேலும் கடன் வாங்க ஏற்கனவே வாங்கிய கடனுக்கும் சேர்த்து அதிக வட்டி கொடுக்க வேண்டும். அத்துடன் இலங்கை நாணய மதிப்பை இறக்க வேண்டிய கட்டாயம். இலங்கை நாணயத்தின் மதிப்புக் குறைய எரிபொருள்களின் விலை அதிகரித்தது. பட்ட காலிலே படும் என்பதைப் போல் ஈரான் மீதான பொருளாதாரத் தடையை மேற்கு நாடுகள் விதித்தன. இலங்கையில் 93% மசகு எண்ணெய் ஈரானில் இருந்து இறக்கு மதியாகிறது. சப்புகஸ்கந்தவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஈரானின் எண்ணெய்யை மட்டுமே சுத்தீகரிக்கக் கூடியது. மேற்குலகின் ஈரான் மீதான பொருளாதாரத் தடையைப் புறக்கணித்து இலங்கையால் சீனா-ஈரான் அச்சில் இணைய முடியவில்லை. இணைந்தால் ஜெனிவாவில் பெப்ரவரி 27 முதல் மார்ச் 23 வரை நடக்க விருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தின் கூட்டத் தொடரில் அதிக விலை கொடுக்க வேண்டியிருந்திருக்கும். விளைவு இலங்கையில் பெரும் எரி பொருள் விலை அதிகரிப்பு. இந்த எரிபொருள் விலை அதிகரிப்பு இலங்கையில் பல தரப்பட்ட மக்களையும் அதிருப்திக்குள்ளாக்கியது. போக்குவரத்துத் துறையினர், மீனவர்கள், உணவு உற்பத்தியாளர்கள், விவசாயிகள் இப்படிப் பலதரப்பட்டவர்களையும் கொதித்து எழச் செய்தது. பலமின்றி இருந்த எதிர்க் கட்சியினர் இதைப் பயன் படுத்திக் கொண்டு பெரும் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கினர். சிலாபத்தில் மீனவர்கள் செய்த ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டது. ஒருவர் கொல்லப்பட்டார். உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடாத்திய படைத்துறையினர் சட்டத்தை மீறினர் என்றும் சுடுவதற்கான உத்தரவு கோத்தபாய ராஜபக்சவிடமிருந்து வந்தது என்றும் ஊடகமொன்றிற்குத் தெரிவித்தார். அதை அரசு மறுத்தது. உடனே எதிர்க்கட்சியினர் கோத்தபாய உத்தரவு கொடுக்காவிடில் கொடுத்தது யார் என்று கேள்வி எழுப்பினர். இந்தக் கேள்வியைத் தான் தமிழர்கள் மூன்று ஆண்டுகளாகக் கேட்டு வருகின்றனர்.

ஜெனீவாவிற்குக் கள்ளக் கடிதம் - பிள்ளையார் பிடிக்க்கக் குரங்கானது
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தின் கூட்டத் தொடரில் தமக்கு எதிராக வரப்போகும் நிர்ப்பந்தங்களை உணர்ந்த ராஜபக்சேக்கள் மனித உரிமைக் கழகத்திற்கு ஒரு இரகசியக் கடிதத்தை அனுப்பினர். அதில் இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்த தாம் செய்ய இருக்கும் திட்டங்கள் அடங்கிய இருந்தன. இலங்கைப் பாராளமன்றத்திற்குத் தெரியாமல் அக்கடிதம் எழுதியமை சட்ட விரோதம் என்று எதிர்க்கட்சிகள் ஆட்சேபிக்கின்றன.

கட்சிக்குள்ளும் பிரச்சனை
ராஜபக்சேக்களின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இம்மாதம் 21ம் திகதி செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. அதில் ராஜபக்சவின் பிரதேசமான அம்பாந்தோட்டத்தைச் சேர்ந்த மஹிந்த அமரவீர என்னும் உறுப்பினர் "அரசு இப்படி ஒருவரைப்பற்றியும் கவலைப்படாமல் தான் தோன்றித்தனமாக நடந்து கொண்டால் நாம் எப்படி எமது கிராமங்களுக்குப் போவது?" என்று போட்டார் ஒரு போடு. ஆள் அத்துடன் நிற்கவில்லை "எங்களாலேயே விலைவாசி உயர்வைச் சமாளிக்க முடியவில்லை. மக்கள் என்ன செய்வார்கள்? இப்படி இருக்கையில் மக்களைச் சுடுவது எப்படிச் சரியாகும்" அடுத்த போட்டைப் போட்டார். சரி அவர்தான் ஒரு சாதாரண உறுப்பினர் என்றால் அடுத்து எழுந்தார் ஒரு பிரதி மந்திரி "மீனவர்கள் கோரிக்கை நியாயமானது. அவர்கள் மேல் துப்பாக்கிப் பிரயோகம் செய்தவ்து நியாயமற்றது" என்றார். இக்கூட்டத்திற்குத் தலைமைதாங்கிய பசில் ராஜபக்ச அதிகம் வாய் திறக்கவில்லையாம். இறுதியில் கொதித்த பாராளமன்ற உறுப்பினர்களுக்கு மக்களின் குறைகளைக் கேட்டு அறியக்கூடிய வகையில் ஒரு விண்ணப்பப்பத்திரம் கொடுக்கப்படும் என்றும் அவற்றை அவர்கள் தங்கள் கிராம மக்களிடம் கொடுத்து அவர்களின் குறைகளைப் பதிவு செய்யச் சொல்லவும் என்று சமாதானம் கூறப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையில் பிரச்சனை
போர்க் குற்றவாளியாகக் கருதப்படும் சவேந்திர சில்வாவை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படைகளுக்கான பிரதான ஆலோசகராக நியமித்தமை பலத்த எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக ஐநா சபையின் மனித உரிமைக்கழத்தின் ஆணையாள்ர் நவநீதம் பிள்ளை அதிருப்தி தெரிவித்தார். பல மனித உரிமை அமைப்புக்களும் எதிர்த்துக் குரல் கொடுத்தன. இந்தியா கள்ளத் தனமாக மௌனமாக இருந்தது. பங்களாதேசம் பகிரங்கமாக கருத்துத் தெரிவித்தது. வழமையாக நவநீதம் பிள்ளையை கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கும் இலங்கை இம்முறை சற்று நாகரீகமாக கண்டித்தது. பிந்திக் கிடைத்த செய்திகளின்படி ஐநாவின் அமைதிகாக்கும் படைகள் விடயத்தில் ஐநா தலைமைச் செயலருக்கு ஆலோசனை வழங்கும் குழுவின் கூட்டத்திற்குச் சென்ற சவேந்திர சில்வாவை மற்ற உறுப்பினர்கள் புறக்கணித்தும் அவருக்கு எந்த ஒரு ஆவணங்களையும் வழங்க மறுத்தும் உதாசீனப்படுத்தினர். இது ஒரு விதமான பதவி நீக்கமே. அவர் கூட்டத்தில் பங்குபற்றுவது உகந்தது அல்ல என கூட்டத்திற்கு தலைமை வகித்த கனடியப் பிரதிநிதி தெரிவித்தார்.

சனல்-4 வெடிகுண்டு
இலங்கை ஆட்சியாளர்களின் போர்க்குற்றங்களை தொடர்ச்சியாகக் காணொளிப் பதிவுகளால் அம்பலப்படுத்தி வரும் சனல்-4 தொலைக் காட்சி இன்னும் சில நாட்களில் இலங்கையில் புரியப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக தனது அடுத்த காணொளிப்பதிவை வெளிவிடவிடுக்கிறது.


அமெரிக்காவின் கையில் போர்க்குற்ற ஆதாரங்கள்
சரணடைய வந்த விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவினரை கொல்வதற்கான உத்தரவை கோத்தபாய ராஜபக்சவே விடுத்தார் என்பதற்கான ஆதாரங்களும் மேலும் பல ஆதாரங்களும் ஐக்கிய அமெரிக்காவின் கையில் இருப்பதாக நம்பப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே இங்கு இரு பதிவுகள் இடப்பட்டுள்ளன அவற்றைக் காணக் கீழே சொடுக்கவும்(click):
1. எல்லாவற்றையும் மேலிருந்து ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
2. இலங்கையில் அமெரிக்காவின் அவிற்பாகம்

சரத் பொன்சேக்காவை விடுவித்தே ஆக வேண்டும்
ராஜபகசேக்கள் சரத் பொன்சேக்கா இனி சாகும் வரை சிறையில்தான் இருக்க வேண்டும் என்று கணக்குப் போட்டிருந்தனர். ஆனால் அவரை ராஜபகசவிற்கு எதிராக இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் களமிறக்கிய அமெரிக்கா அவரைக் கட்டாயம் விடுவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4-ம் திகதி அவர் விடுவிக்கப்படாமையால் அமெரிக்க உயர் அதிகாரிகள் மரியா ஒட்டேரோவும் ரொபேர்ட் ஓ பிளேக்கும் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர். இனி சிங்களப் புத்தாண்டிற்கு முன்னர் சரத் பொன்சேக்கா விடுவிக்கப்படுவார் என்ற செய்தி விரைவில் வெளிவர வேண்டும். அது வராவிடில் ராஜபக்சேக்கள் பெரும் பிரச்சனையில் மாட்டுவர். சரத் பொன்சேக்கா வெளியில் வந்தாலும் பெரும் பிரச்சனைகள் ராஜபக்சேக்களுக்கு இருக்கின்றன.


துள்ளிக் குதிக்கும் தமிழ் ஊடகங்கள்
பெப்ரவை 27 முதல் மார்ச் 23 வரை நடக்க விருக்கும் ஐநா மனித உரிமைக்கழகக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான எவற்றையும் நிகழ்ச்சி நிரலில் இதுவரை உள்ளடக்கப்படவில்லை. இப்படி இருக்க அங்கு இலங்கை தண்டிக்கப்படப் போகிறது என்று பல தமிழ் ஊடகங்கள் எழுதி வருகின்றன. அதிக பட்சம் இலங்கை தொடர்பாக எதாவது கலந்துரையாடல்கள் நடக்கலாம். இலங்கைக்கு அதன் நல்லிணக்க ஆணைக் குழுவில் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகளை நிறை வேற்ற கால அவகாசத்துடன் ஒரு வேண்டு கோள் விடுக்கப்படலாம்.

பிரச்சனையின் ஆரம்பமே
இப்போது ராஜபக்சேக்களிற்கு ஒரு முடிவு கட்டப்படும் என்று சொல்ல முடியாது. அவர்களின் பிரச்சனைக்கு உரிய காலம் ஆரம்பித்து விட்டது. இப்போது எதிரிகள் சூழ்கிறார்கள். பின்னர் கேடு சூழும். இலங்கை தனது குடியரசு தின விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்க கோத்தபாய ராஜபக்ச  இந்தியாவில் ஒரு சாமியாரிடம் அருள்வேண்டிப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். ஆம் கழுதை கெட்டால் குட்டிச் சுவர். கேடு சூழும் போது சாமியார்களைத் தேடி ஓடுவார்கள். ராஜபக்சேக்கள் காலம் இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளே.

4 comments:

Anonymous said...

யார் அப்படி சொல்வது உலகின் மிக‌ மோசமான பயங்கரவாதத்தை தோற்கடித்தவர் என்று. உண்மை என்ன புலிகள் உலகில் மிக்பெரிய வளர்சிகண்ட விடுதலை இராணுவம். அமெரிக்கா போன்ற மேற்குலகு சொல்லும் பிரிவினைவாதம் முறியடிக்கப்பட்டது என்று. சிங்கள மக்கள் சொல்லுவார்கள் தமிழர்களை போரில் வென்றவர், 30 வருட போருக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் என்று. இந்தியா இலங்கை போன்ற கூட்டாளி நாடுகள்தான் பயங்கரவாதம் என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள். உண்மையில் இந்தியா, இலங்கையின் இராணுவம்தான் பயங்கரவாதத்தை கையில் எடுத்தது இது அனைவருக்கும் தெரியும். தெரிந்தும் மௌனம்.

Anonymous said...

புலிகளை பயங்கரவாத இயக்கம் எனறு சொன்னவனே ஒரு பயங்கரவாத இன அழிப்பு கொலைவெறியன். ஈழத்தமிழர்கள் சிறிதாவது அச்சமின்றி நிம்மதியாய் வாழ்ந்த காலம் புலிகளின் நிழலில் இருந்த காலமே. ஒரு தமிழராய் இருந்து கொண்டும் இப்படி எழுதியது சங்கடமளிக்கின்றது. புரியாது எதையும் எழுதாதீர்கள். மோசமான ஒரு அரசு நாடு என்றால் அது சிங்கள அரசும் சிங்கள நாடும் தான் என்பதனை புரிந்து கொள்ளுங்கள். வினை விதைத்தவன் வினை அறுக்கும் காலம் கனிந்து விட்டது. இந்த கொலைவெறியரை ஒவ்வொரு மான முள்ள உலகத்தமிழனும் சிறைக்கம்பிகளின் பின்னால் பார்ப்பதையே இலட்சியமாய் கொண்டுள்ளான்.

Vel Tharma said...

நீங்கள் நான் எழுதியதை சரியாக வாசிக்கவில்லை அங்கு (?) இடப்பட்டிருப்பதைக் கவனிக்கவில்லையா? அப்படி ராஜபக்ச நினைத்துப் பெருமைப்படுகிறார் என்பது தான் எனது கருத்து...

பிரமேந்திரா said...

இது இப்படித்தான் போகும் என்று அறிந்தவரே நுன்னறிவு மிக்கவர் அதை 2008 ஆண்டு மாவீரர் தினத்தில் சொல்லிவிட்டாரே...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...