Wednesday, 22 February 2012

ஈரான் அணு ஆயுத உறபத்தி நிலைகளை இஸ்ரேலால் தாக்க முடியுமா?

ஈரான் அணுகுண்டைத் தயாரித்தால் அதனால் பெரிய ஆபத்தைச் சந்திக்கப் போகின்ற நாடு இஸ்ரேல். இஸ்ரேலாலும் அணுக்குண்டு  தயாரிக்க முடியும் அது அணுக்குண்டு தயாரித்தால் அது மத்திய கிழக்கில் ஒரு ஓர் அணு ஆயுதப் போட்டிக்கும் அணு ஆயுதப் பரவாலாக்கத்திற்கும் வழி வகுக்கும் என்று ஐக்கிய அமெரிக்கா இஸ்ரேலை அணு ஆயுதம் உற்பத்தி செய்யாமல் தடுத்து வைத்திருக்கிறது. இஸ்ரேல் ஏற்கனவே அணு ஆயுதங்களை உற்பத்தி செய்துவிட்டது ஆனால் அவற்றைப் பரிசோதித்துப் பார்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஈரானால் இன்னும் ஒரு ஆண்டுக்குள் அணுக்குண்டைத் தயாரிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான் தனது அணு ஆராய்ச்சி சமாதானத்தை நோக்கமாகக் கொண்டது என்று அடித்துச் சொல்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு அணு சக்தி முகவரகத்தில் இருந்து ஈரான் அணு ஆயுத உற்பத்தி செய்யலாம் என்ற செய்தி வந்தவுடனேயே இஸ்ரேலில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுவிட்டன. இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு அணு ஆயுத வல்லமை கொண்ட ஈரான் மத்திய கிழக்கு உட்பட முழு உலகுக்குமே  பெரும் அச்சுறுத்தல் என்றும் இஸ்ரேலுக்கு நேரடி ஆபத்து என்றும் கூறினார்.


ஈரானின் உள்ளகப் பிரச்சனைகள்
ஈரானியப் பொருளாதாரம் பலவீனமடைந்த நிலையில் இருக்கிறது. ஈரானியப் படைத்துறையில் அமைப்பு ரீதியான பிரச்சனைகள் பல இருக்கின்றன. ஈரானிய அரசில் பிளவுகள் இருக்கின்றன. ஈரான் ஆதரவு தீவிரவாத இயக்கங்களான ஹமாசும் ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலிற்கு எதிராக அடக்கியே இப்போது வாசிக்கின்றன. இஸ்ரேலிற்கு எதிரான ஒரு தாக்குதலைச் செய்ய அவை இப்போது விரும்பவில்லை. ஓமான் வளைகுடாவையும் பாராசீக வளைகுடாவையும் இணைக்கும் 35மைல்கள் அகலமுள்ள ஹோமஸ் நீரிணையை தான் மூடி விடுவேன் என்று ஈரான் மீண்டும் எச்சரித்துள்ளது. கடல் மூலமான உலக எரிபொருள் வழங்கலில் 40% ஈரானிற்கு அண்மையில் உள்ள் ஹொமஸ் நீரிணையூடாக நடக்கிறது. உலக் மொத்த எண்ணை வழங்கலில் இது 20% ஆகும். நாளொன்றிற்கு 15 எண்ணை தாங்கிக் கப்பல்கள் இதனூடாக பயணம் செய்கின்றன. சவுதி அரேபியா, ஈராக்,குவைத், பாரெய்ன், கட்டார், துபாய், போன்ற நாடுகளில் இருந்தூ ஏற்றுமதியாகும் எரிபொருள் ஹோமஸ் நீரிணையூடாகவே நடக்கின்றது. இதை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து உலகை ஆட்டிப்படைக்கலாம் என்பது ஈரானின் கனவு. ஹோமஸ் நீரிணையில் ஒரு போர் மூளுமானால் உலகெங்கும் எரிபொருள் விலை 200 அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கலாம். இப்போது இருக்கும் பொருளாதார சூழலில் இதனை எந்த ஒரு நாடும் விரும்பாது. இது ஈரானுக்கு ஆதரவாக ஒரு நாடுகளும் செயற்படாமல் போகச் செய்யலாம். ஈரானைத் தனிமைப்படுத்தலாம். ஈரானின் அணு ஆயுத உற்பத்தியைத் தடுக்க பல சதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று ஈரானிய அணுவிஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். ஒருவர் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளார். ஈரானிய ஏவுகணைத் தாயாரிப்புத் தொழிற்சாலையில் பாரிய வெடிவிபத்து ஏற்பட்டது. இவ்விபத்து அங்குள்ள கணனித் தொகுதிகளை ஊடுருவி மேற்கொள்ளப்பட்டிடுக்கலாம் என நம்பப்படுகிறது.

வேட்டியை மடிச்சுக் கட்டிய ஈரான்
பொருளாதாரத் தடையால் மேற்குலக நாடுகள் ஈரானை மிரட்டிக் கொண்டிருக்க ஈரான் தனது கடற்படையின் 18வது பிரிவை சிரியாவிற்கு அனுப்பி தனது சண்டித்தனத்தைக் காண்பித்துள்ளது. ஈரானின் போர்க்கப்பல்கள் சிரியாவில் ஒத்திகையும் சிரியப்படையினருக்குப் பயிற்ச்சியையும் மேற்கொள்ளவிருக்கின்றன. அத்துடன் ஈரான் சிரியாவில் கைவைத்தால் நடக்கிறது வேறு என்பது போல் மிரட்டலையும் ஐக்கிய அமெரிக்காவிற்கு விடுத்துள்ளது. ஈரான் தான் எவ்விதத்திலும் மசியப்போவதில்லை என்ற செய்தியை மேற்குலகிற்கு தெரிவித்துள்ளமை இஸ்ரேலை ஒரு முன் கூட்டிய தாக்குதலுக்குத் தூண்டுமா?

இஸ்ரேலால் ஈரானில் தாக்குதல் நடத்த முடியுமா?
இஸ்ரேல் ஈரானில் தாக்குதல் நடத்துமா என்ற கேள்வியிலும் பார்க்க முக்கியமானதும் சிக்கலானதுமான கேள்வி இஸ்ரேலால் ஈரானில் தாக்குதல் நடாத்த முடியுமா என்பதுதான். முன்பு 2சிரியாவிலும் ஈராக்கிலும் இஸ்ரேல் இலகுவாக அங்குள்ள அணு ஆராய்ச்சி நிலையங்களில் தாக்குதல்களை நடாத்தியது. ஆனால் இப்போது நிலைமைகள் வேறு. ஈரான் தனது அணு ஆராய்ச்சி நிலையங்களை பல வேறு இடங்களில் அமைத்துள்ளது. அத்துடன் அவை 30 அடி ஆழமான கொன்கிறிட் பாதுகாப்புச் தடுப்புக்களுக்குக் கீழ் உள்ளன. அந்த அளவு ஆழமாக ஊடுருவிச் சேதம் விளைவிக்கக் கூடிய குண்டுகள் இஸ்ரேலிடம் இப்போது இல்லை. அது அவற்றை உருவாக்க வேண்டும் அல்லது அமெரிக்காவிடம் இருந்து பெறவேண்டும். அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் மூலம் ஈரானை வழிக்குக் கொண்டுவர முயல்கிறது. ஆனால் இந்தியாவும் சீனாவும் அமெரிக்காவின் பொருளாதரத் தடைக்கு உதவவில்லை. பன்னாட்டு நிதிக் கொடுப்பனவு முறைமையான SWIFTஇல் இருந்து ஈரானிய வங்கிகளை விலக்கியதால் ஈரானில் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இந்தியாவும் சீனாவும் ஈரானுடன் பண்டமாற்று முறைமை மூலம் வர்த்தகம் செய்யப் போவதாக அறிவித்து விட்டன. பொருளாதாரத் தடையால் ஈரான் அடங்காமல் போக வாய்ப்புண்டு. இது ஒரு இஸ்ரேல் ஐக்கிய அமெரிக்கா இணைந்து ஈரானில் தாக்குதல் நடத்தும் நிலைமையை உருவாக்கலாம். இதில் அமெரிக்கா திரைமறைவிலேயா இஸ்ரேலுடன் இணைந்து செயற்படலாம்.

ஈரானின் மீதான தாக்குதல் எப்படி இருக்கும்
ஈரானின் விமான எதிர்ப்பு முறைமை, தொலை தொடர்பாடல் முறைமை, தியணைப்பு நிலையங்கள் போன்றவற்றை ஆளில்லாப் போர் விமானங்கள் மூலமும் இணைய வெளி ஊடுருவல் மூலமும் செயலிழக்கச் செய்யலாம். இஸ்ரேலின் Eitans, Herons ஆகிய ஆளில்லாப் போர் விமானங்கள் இவற்றிற்குப் பயன்படுத்தப்படலாம். ஈரானின் மின்சார விநியோக முறைமையில் உள்ள பலவீனங்களை அமெரிக்க உளவுத்துறை நன்கறியும். அவற்றை செயலிழக்கச் செய்ய அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவும். 2007இல் இஸ்ரேல் சிரியாவின் ராடார்களிற்கு முதலில் சிரியவிண்வெளியில் எந்த விமானமும் இல்லை என்று உணரவைத்தது பின்னர் நூற்றுக் கணக்கான விமானங்கள் பறப்பது போன்று உணர வைத்தது. சிரியப் படையினர் தலை முடியைப் பிய்த்துக் கொண்டிருக்க இஸ்ரேல் தனது கைவரிசையைக் காட்டி விட்டது. இப்போது இஸ்ரேல் அதிலும் நவீன தொழில் நுட்பத்தைக் கொண்டிருக்கலாம். கடந்த பத்து ஆண்டுகளாக இஸ்ரேல் பல பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ஈரானின் தொழில் நுட்ப வளர்ச்சியைத் சிதறடிக்கக் கூடிய வகையில் தனது படைபலத்தை வளர்த்து வருகிறது. ஆனால் ஈரான் அணு நிலையங்கள் மீதான தாக்குதல் சிரியாவில் செய்ததைப் போல் ஒரு நாளில் முடியாது. இவை சில வாரங்கள் நீடிக்கலாம். அதைத் தொடர்ந்து ஈரான் ஹோமஸ் நீரிணையை மூடினால் மேலும் சில வாரங்கள் போர் நீடிக்கும்.

ஈரான் மீதான தாக்குதலின் பின்விளைவுகள்
பல இசுலாமிய நாடுகளும் வளர்முக நாடுகளும் ஈரானுடன் அணி சேரும்.  தொடர்ந்து பிராந்திய முரண்பாடுகள் பல புதிதாக முளைக்கும். மல்லிகைப் புரட்ச்சியின் பயன் மக்களுக்குக் கிடைக்காமல் போகும். உலகப் பொருளாதர நிலை மேலும் மோசமடையும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...