Friday, 20 January 2012

இலங்கையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுவைத்த எச்சில்


"நீ தண்ணி அடிப்பியா?"
"இல்லை"
"நீ தம் அடிப்பியா?"
"இல்லை"
"நீ பெண்கள்.......?"
"இல்லவே இல்லை"
"நீ திருடுவியா?"
"சீ....சீ....."
"அப்போ உன்னிடம் உள்ள கெட்ட பழக்கம் என்ன?"
"பொய் சொல்லுவது"
இந்தக் கடைசிப்பதில் எப்படி மற்ற எல்லாப் பதில்களையும் நிர்மூலமாக்கியதோ அதைப் போலத்தான் இலங்கைப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் இலங்கை இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா கொழும்பில் பத்திரிகையாளர் மாநாட்டில் கூறிய கருத்தும் இருந்தது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச தன்னிடம் இலங்கை அரசியலமைப்பில் ஏற்கனவே செய்யப்பட்டுள்ள 13வது திருத்தத்தில் உள்ள அதிகாரப் பரவலாக்கத்திற்கும் அதிகமான அதிகாரப் பரவலாக்கம்(இதை 13+ என்று அழைப்பர்) செய்யப்படும் என்று தெரிவித்ததாகக் கூறினார். ஆனால் அதற்கான ஒரு கால அட்டவணை உண்டா என்று கேட்ட போது  இல்லை என்பதே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் பதிலாக இருந்தது. இது பிள்ளையாரின் திருமணம் போல்தால். நாளை நடக்கும். இலங்கை அதிபரின் கூற்றுக்க்கு ஒரு கால அட்டவணை கிடயாது என்று கூறுவது அது ஒரு போதும் நடக்காது என்பதே. இலங்கை அரசமைப்பின் 13வது திருத்தம் 1987இல் அப்போதைய இலங்கை அதிபர் ஜே ஆர் ஜயவர்த்தனவும் ராஜீவ் காந்தியும் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற் கொள்ளப்பட்டது. ஒப்பந்தமிடும் போது தமிழர்களுக்கு இந்தியா கொடுத்த வாக்குறுதிகள் :
  • தமிழர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்தியா ஏற்கும்.
  • தமிழர்களின் பிரச்சனைக்கு இந்தியா தீர்வு காணும்.
  • தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக இலங்க அரசியல் அமைப்பில் மாற்றம் செய்யப்ப்டும்.
  • இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப் பட்டு தமிழர்களின் தாயகமாக ஏற்றுக் கொள்ளப் படும்.
இந்த வாக்குறுதி அளித்து  24 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த செப்டம்பரில் அது வெள்ளி விழாவைக் கொண்டாடும். இந்தியா கொடுத்த எந்த வாக்குறிதிகளும் நிறை வேற்றப்படவில்லை. தமிழர்கள் இன்று இருக்கும் நிலையையும் 1987இல் ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்தத்திற்கு முன் இருந்த நிலையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இலங்கையின் எப்பாகத்திலும் சிங்களப்படை நடமாட அஞ்சி இருந்தது அன்று. இலங்கையின் எப்பகுதியிலும் தமிழ்ப்போராளிக் குழுக்கள் தாக்குதல் நடத்தி பாரிய அழிவுகளை விளைவிக்கலாம் என்று இலங்கை அரசு அன்று அஞ்சி இருந்தது. தமிழர்கள் கைகளில் ஆயுதம் இருந்தது அன்று. இன்று தமிழனுக்கு என்று ஒரு எதிர்காலம் இருக்கிறதா என்ற கேள்விக்குறி மட்டும்தான் தமிழனின் சொத்து. இந்த நிலைக்கு தமிழர்களை இட்டுச் சென்றது இந்தியாதான்.


தமிழர்கள் முதுகில் சவாரி செய்த இந்தியா
1980களில் இலங்கையில் ஆட்சிக்கு வந்த ஜே ஆர் ஜெயவர்த்தனே தலைமையில் வந்த ஐக்கிய தேசியக் கட்சி அமெரிக்க சார்பாக மாறத் தொடங்கியது. இலங்கையின் பூகோள நிலை அமெரிக்கக் கடறபடையின் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு இடையிலான அதி தாழ்வலை(ultra low wave) தொலைத் தொடர்புக்கு மிக உகந்ததாக அமைந்துள்ளதால் சிலாபத்தில் அமெரிக்க வானொலி நிலையம் என்ற போர்வையில் அமெரிக்க கடற்படையின் தேவைகளை நிறைவேற்ற அமெரிக்காவிற்கு இலங்கை தயாரானது. அத்துடன் சிங்கப்பூர் நிறுவனம் என்ற போர்வையில் அமெரிக்கா திருகோணமலையில் தனது கடற்படைக்கு ஒரு எரிபொருள் மீள்நிரப்பு நிலையத்தையும் அமைக்க முற்பட்டது. இதை அறிந்த இந்திரா காந்தி தமிழர்களைப் பகடைக் காயாகப் பயன்படுத்தினார். தமிழர்கள் மத்தியில் பல ஆயுதக் குழுக்களை இந்தியா உருவாககியது. விளைவு அமெரிக்க திட்டத்திற்கு ராஜீவ் - ஜே ஆர் ஒப்பந்தத்தின் மூலம் ஆப்பு வைக்கப் பட்டது. இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் ஒரு ஆயுத மோதலை உருவாக்கியே இந்தியா இதனைச் சாதித்துக் கொண்டு இறுதியில் தமிழர்களை ஏதிலிகளாக்கிவிட்டது.

என்ன இந்த 13+?
இப்போது இருக்கும் இலங்கை அரசியல் அமைப்புக்குக்கீழ் 13வது அரசமைப்பு திருத்தத்திற்கு மேலாக எதையும் செய்ய முடியாது. 13வது திருத்தம் தம்மீது இந்தியா வற்புறுத்தித் திணித்தது என்பதே பெரும்பானமையான சிங்களவர்கள் கருத்து. ஆனால் 13வது திருத்தம் செய்யப்படும் போதே அதை நிறைவேற்றத் தேவையில்லை என்று இந்திய அதிகாரிகளால் இலங்கைக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் ஒரு கருத்து கொழும்பில் நிலவுகிறது. அதனால்தான் இந்த 24 ஆண்டுகளில் இந்தியா அதை நிறைவேற்றும் படி இலங்கையை நிர்ப்பந்திக்கவில்லையாம். ஆனால் ஜே ஆர் ராஜீவ் ஒப்பந்தத்திற்கு இணங்க விடுதலைப் புலிகள் முழுமையாக ஆயுத ஒப்படைப்புச் செய்யவில்லை என ஜேஆர் சொன்னதும் ராஜீவ் தனது படையைத் தமிழர்கள் மேல் ஏவி ஒரு இலட்சம் தமிழர்களை வீடற்றவர்கள் ஆக்கினார், எண்ணாயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவித தமிழர்களைக் கொன்றார், மூவாயிரத்திற்கு மேற்பட்ட பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கினார். 13+ என்பது ஒரு மூதவையை இலங்கையில் ஏற்படுத்துவதாம். அதில் தமிழ்ப் பிரதிநிதிகளை இணைத்து அதன் மூலம மாகாண சபைக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான பிணக்குகளைத் தீர்க்க முடியும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் மூதவையில் சிங்களவர்கள்தான் பெரும்பான்மையாக இருப்பார்கள். அது தமிழர்களுக்கு நீதி வழங்கும் என்று எதிர்பார்க்க முடியாது. 13வது திருத்தம் ஒரு அதிகாரப் பரவலாக்கம் அல்ல ஒரு நிர்வாகப் பரவலாக்கம் மட்டுமே. 13 பாவாடை சட்டை என்றால் 13+ ஒரு தாவணி மட்டுமே. 13 தமிழர்களுக்கு இரவலாக வழங்கப்பட்ட ஒரு ஆடை மட்டுமே. ஆபரணமல்ல. அந்த ஆடையை எப்ப வேண்டுமானாலும் பறித்துக் கொள்ளலாம்.

பேச்சு வார்த்தை மேசையில் பிச்சைக்காரத் தமிழர்கள்
இலங்கையில் 2009இல் போர் முடிந்தவுடன் இந்திய அரசின் செயற்பாடுகளிலும் கொள்கைகளிலும் செல்வாக்கு வகிக்கக் கூடியப் பார்ப்பன ஆய்வாளர்கள் இலங்கை இனப் பிரச்சனைக்கான தீர்வுபற்றி எழுதும் போது தமிழர்களின் நிலை Beggars have no choice என்றும் தமிழர்களின் நிலை Hobson's choice என்றும் எள்ளி நகையாடினர். ஆனால் பன்னாட்டு மட்டத்தில் இலங்கையில் இழைக்கப்பட்ட போர்க்குற்றம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்தின் அடிப்படையில் இலங்கை இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வை இலங்கை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல பன்னாட்டு மனித உரிமை அமைப்புக்களால் முன்வைக்கப்பட அதை கனடா, பிரித்தானியா, ஒஸ்ரேலியா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளதாலும் இந்த மார்ச் மாதம் நடக்கும் ஐக்கிய நாடுகளின்மனித உரிமைக் கழக மாநாட்டுல் இலங்கையில் இழைக்கப்பட்ட போர்க் குற்றம் தொடர்பாக ஏதாவது தீர்மானம் எடுக்கப்படலாம என்ற அச்சம் நிலவுவதாலும் இலங்கை கடந்த சில மாதங்களாக தமிழ் அரசியல் குழுவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஒரு பிச்சைக்கார நிலையில் இல்லாமலும் தமக்கு Hobson's choice  எனப்படும் கொடுப்பதை ஏற்றுக் கொள்வதைதவிர வேறு தெரிவு இல்லை என்ற நிலையில் இல்லாமலும் தமது கோரிக்கைகளை சற்று அழுத்தமாக முன்வைத்துப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டனர். இலங்கை அரசும் பேச்சு வார்த்தையில் அக்கறையிருப்பதாகவும் காட்டிக் கொண்டது.

 மீண்டும் தமிழர்கள் முதுகில் இந்தியா சவாரியா?
பேச்சு வார்த்தையில் அக்கறை காட்டிய இலங்கை அரசு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா இலங்கைக்கு வந்த பின்னர் இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீண்டும் உதாசீனம் செய்யத் தொடங்கி விட்டது. இதற்கான காரணம் மார்ச் மாதம் நடக்க விருக்கும் ஐந மனித உரிமைக்கழகக் கூட்டத்தில் இந்தியா இலங்கைக்கு அதரவான நிலைப்பாட்டை எடுக்கும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டதாலா என்ற சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. அதற்கு பிரதி உபகாரமாக இலங்கைக் கடற்பரப்பில் சீனா தனது மூழ்கிக் கிடக்கும் கப்பல்களை ஆய்வு செய்ய இலங்கையிடம் விடுத்த கோரிக்கையை இலங்கை நிராகரித்ததா? சீனா பழைய கப்பல்கள் தேடுதல் என்ற போர்வையில் இலங்கையச் சுற்றவர உள்ள கடற்பரப்பில் தனது நீர் மூழ்கிக் கப்பல்களை எப்படி நடமாடவிடலாம் என்று ஆய்வு செய்ய விரும்பியுள்ளது. சீனா தனது கடலாதிக்கத்திற்கு விமானம் தாங்கிக் கப்பல்களிலும் பார்க்க நீர் மூழ்கிக் கப்பலகளில் அதிக கவனம் செலுத்துகிறது.

கிருஷ்ணா சுவைத்த எச்சில்.
கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொண்ட கிருஷ்ணா அங்கு ஒரு கட்டிடத்தைத் திறந்து  வைத்தார். ஏற்கனவே 2004ம் ஆண்டில் பாஜ் எனப்படுகின்ற ஜப்பானிய தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் கட்டப்பட்டு இக்கட்டிடம் ஏற்கனவே வேறு ஒருவரால் திறந்து வைக்கப்பட்டுவிட்டது. இதற்கு மீண்டும் பூசி மெழுகி மீண்டும் கிருஷ்ணாவைக் கொண்டு திறந்து வைக்கப்பட்டது. ஏற்கனவே ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் வேறு ஒருவர் ஏற்கனவே நிகழ்த்திய உரையை தான் மீண்டும் வாசித்து சாதனை படைத்தவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஸ்ணா

2 comments:

Anonymous said...

India amaicchar kudutha veeta eela tamilar vaanga kodathu

Anonymous said...

இந்திய அமைதிப்படை என்ற போர்வையில் வந்த கொலை வெறி நாய்ப்படையினர் ஒரு இலட்சம் தமிழர்களை வீடற்றவர்களாக்கியது இப்போது இந்தியா ஐபதாயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப் போவதாகக் கூறுகிறது....

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...