Sunday, 25 December 2011

தமிழர்களுக்கு சிங்களப் பேரினவாதப் பேராயரின் நத்தார்ப் பரிசு

இலங்கையின் இரண்டாவது கதிர்னால் பேராயர் பேரருட்திரு மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் டிசம்பர் மாதம் 3-ம் திகதி ஆரம்பத்தில் இலங்கை அரசு அருட்சகோதரி ஒருவர் கைது செய்யப்பட்டதை ஆட்சேபிக்கும் முகமாக இலங்கை அரசின் எந்த ஒரு வைபவத்திலும் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருந்தார். பின்னர் அந்த அருட் சகோதரி விடுதலை செய்யப் பட்டதைத் தொடர்ந்து அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் தின நிகழ்வில் கலந்துகொண்டார். ஒரு அருட்சகோதரி விடுதலை செய்யப்பட்டவுடன் அரசின் பாவங்கள் யாவும் கழுவப்பட்டுவிட்டதா? ஆயிரக் கணக்கானொர் ஆண்டுக் கணக்காக விசாரணை எதுமின்றி இலங்கை அரசால் சிறைகளில் தடுத்து வைத்திருப்பது பாவச் செயல் இல்லை என்று ஆண்டகை படித்த எந்த மதப் புத்தகத்திலாவது எழுதப்பட்டுள்ளதா?

ஆண்டுகொண்டிருப்போரின் கைபிடித்த ஆண்டகை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் தின நிகழ்வில் கலந்துகொண்ட பேராயர் பேரருட்திரு மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அங்கு சும்மா இருக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளரது இலங்கை தொடர்பிலான அறிக்கையை விட, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, பொதுமக்கள் பிரச்சினை குறித்து சீராக ஆராய்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆண்டகையின் கூற்று பல பன்னாட்டு மனித நேய அமைப்புக்களினதும் மனித உரிமை அமைப்புக்களினதும் கூற்றுக்கு முரண்பட்டதாக இருக்கிறது. சிங்களப் பேரினவாதிகளுக்கு என்று மத விதிகளும் சட்டங்களும் வேறுபட்டதாக எழுதப் பட்டுள்ளதா? உலகிலேயே எந்த எதிரியாலும் மதிக்கப்படும் இடம் தான் வணக்கத்தலம் ஆனால் தனது ஆலயத்தின் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த வேளையில் தயவு தாட்சாண்யம் இன்றி சிங்களமும் அதன் எடுபிடிகளாக உள்ள தமிழ் துணை ஆயுதக் குழுக்களும் இணைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம். அவரின் கொலை நடந்து ஆறு ஆண்டுகள் கடந்து விட்டன. ஆண்டகை கைப்பிடித்து வாழ்தும் அரசு இதுவரை எந்த நடவடிக்கையாவது எடுத்ததா? அப்படிப்பட்ட சிங்களப் பேரினவாத் அரசு இறுதிப் போரின் போது கொல்லப்பட்டவர்களுக்கோ அல்லது நடந்த மனித உரிமை மீறல்களுக்கோ நீதி வழங்குமா?
இன அழிப்பில் இலங்கைக்கு உதவிய இந்தியாவில் இருந்து வரும் ஒரு பத்திரிகையான Economic Times இப்படிக் கூறுகிறது:
  • On the war crimes front, the LLRC's report, made public recently, is a disappointment. It has attracted criticism from UN-affiliated and other international rights groups, citing doubts about the LLRC's mandate and impartiality. The report virtually exonerates the Lankan army from the charge of deliberately targeting civilians, including using heavy artillery in the No Fire Zone

பேராயர் பேரருட்திரு மெல்கம் ரஞ்சித் ஆண்டகை  அவர்களே நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னர் சாட்சியமளித்மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யேசேப்பு ஆண்டகை அவர்கள்:
  • இந்த நாட்டின் தமிழ் மக்கள் பட்ட துன்பங்கள் அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு எதிராக செய்யப்பட்ட காரியங்கள் ஆகியவற்றை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். சிறப்பாக மக்கள் காணாமல் போன விடயம், சட்டத்திற்கு மாறாக மக்கள் கொல்லப்பட்ட விடயங்கள் ,சட்டத்திற்கு முன்னாள் மக்கள் குற்றவாழிகள் என அறியப்பட்டவர்கள்,வேறு விதமாக பிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட விடயங்கள், தமிழ் மக்களை கொண்டு போய் சித்திர வதை செய்தவை,மக்கள் வாழும் இடங்களில் குண்டுகள் வீசப்பட்டமை, கட்டிடங்கள், மருத்துவமனை போன்றவற்றை அழித்தொழித்த உண்மைகளை அவர்கள் கொண்டு சொல்ல வேண்டும்.
 என்றெல்லாம் சொன்னார் அவரது வேண்டுதல்களை யார் நிறைவேற்றினார்?

மருத்துவ மனைகள் மீது வீசப்பட்ட குண்டுகளை நியாயப்படுத்தும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஆண்டகையே நீங்கள் நியாயப் படுத்துகிறீர்களா?

போர்க்குற்றமும் மானிடத்திற்கு எதிரான குற்றமும் புரிந்த அரசிற்கு வக்காலத்து வாங்குவதுதான் திருச்சபை தமிழர்களுக்கு வழங்கும் நத்தார் பரிசா? ஆண்டகையே உங்கள் திருச்சபை கத்தோலிக்கத் திருச்சபையா அல்லது சிங்களத் திருச்சபையா? பரமண்டலத்தில் வாழும் எங்கள் பிதாவே இவர்களை மன்னிப்பீர்களாக. ஆமேன்.

 நத்தார் நற்சிந்தனை( பெரிதாக நல்லதென்று சொல்ல முடிதாது)
வாழிடம் நீங்கி
வேறிடம் போய்
உறைவிடம் இன்றி
தொழுவம் தஞ்சமாய்
புனிதத் தாய் பெற்ற
இனிய யேசு பாலனே 
பேரவலப்பட்டதால்
நீரும் தமிழர் போலே


மன்னர்க் கெல்லாம்
மன்னன் நானென்றீர்

சித்திரவதைகள் செய்தார் உம்மை
முள்ளால் கிரீடம் சூட்டினர்
சிலுவை சுமக்கவைத்தார்
கொடுமைகள் செய்தார்
ஆணியால் அறைந்து கொன்றார்
எம்மண் எமக்கென்ற தமிழனைப் போல்
உம்மையும் பேரவலத்துக்குள்ளாக்கினர் 
பாவிகளை மன்னிக்க நீர் பிரார்த்தித்தீர்
ஆனால் நாம் எமக்குக் கொடுமைகள்
செய்த பாவிகளை ஒரு நாளும்
மன்னிக்கவே மாட்டோம்


நீர் மீண்டும் எழுந்தது போல்
நாமும் மீண்டெழுவோம்

பதின்மூவரில் ஒருவன்
உம்மைக் காட்டிக் கொடுத்தான்
பதின்மூவருமே
எம்மைக் காட்டிக் கொடுத்தனர்

பாவங்கள் சுமந்து நிற்கிறோம்
நீர் சிலுவை சுமந்தது போல்
உங்கள் பரலோக இராச்சியம்
வேண்டி நிற்கின்றோம்
கொடியோர் ஆட்சியில்
வதைபடும் தமிழர் நாம்
வாரீர் மீண்டும்
எம்மை இரட்சிக்க

புனித தூதரின் நத்தார்
என்றவுடன் என் நெஞ்சில்
எழும் வரிகள் இதுதான்
பிழைகள் இருந்தால்
பரலோகப் பிதாவே
என்னையும் மன்னியுங்கள்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...